திங்கள், மார்ச் 12, 2012

உன் குரல் கேட்டால்

இன்று ஏனோ தெரியவில்லை, காலையிலிருந்து அப்பாவின் ஞாபகம் என்னை வாட்டுகிறது. எப்படியிருப்பார் அப்பா?  கண்களை மூடிக்கொண்டு அவரின் முகத்தை ஞாபகத்திற்குக்கொண்டு வர முயற்சி செய்துகொண்டிருந்தேன்.

என் முகத்தைக் கண்ணாடியில் கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தேன், ‘நீ, உன் அப்பா போலவே சிரிக்கிறாய்’ என்று பாட்டி முன்பு ஒரு முறை சொல்லியிருந்ததை ஞாபகப்படுத்திப்பார்த்தேன். கண்ணாடி முன் நின்று, சிரித்துப்பார்த்தேன்.. ம்ம் இல்லையே!! அப்பா இப்படி இருக்க மாட்டாரே.!

சரி, சில நிகழ்வுகளை அசை போட்டுப்பார்க்கலாமே என, கன்னத்தில் கைவைத்து, தலையைச் சாய்த்து ஆள் காட்டி விரலை, நெற்றிப்பொட்டில் வைத்துக்கொண்டு யோசித்தேன்.

மாநிறம், உயரமல்ல குள்ளமுமல்ல, வரிசையான பற்கள், கூரிய மூக்கு. ஓரளவு முகம் வந்துவிட்டது.  ஜீ.. அப்படித்தான் அழைப்பார் என்னை.. குரல் ஞாபகத்திற்கு வரவில்லையே..

ஒரு முறை, தாத்தா வீட்டிற்குப் போக வேண்டுமென்று ஒரே ஆர்ப்பாட்டம். சித்தப்பா சின்னம்மா மகள் மகன்கள் எல்லோரும் திருவிழாவிற்கு வருவார்கள், அவர்களோடு விளையாட வேண்டும், திருவிழாவில் பொம்மலாட்டம் பார்க்கவேண்டும், பிடிவாதமாக அழுதோம், போயே ஆகவேண்டும் என்று. கூலிக்கார அப்பா, கையில் காசு இல்லை. ஏழை அப்பா அம்மாவைச் சந்திக்க, கையில் பணமில்லாமலா செல்வது? சைக்கிளை எடுத்தார், கடன் கேட்டார் ஒருவரிடம், கிடைத்தது. வாங்கிவந்தார். வாடகைக்காரில் பாட்டி வீட்டிற்குச் சென்றுவந்தோம்.
அப்போ அப்பா எப்படியிருந்தார்? இளமையாக இருந்தார். பலம், உடலிலும் உள்ளத்திலும். காரில் நிறைய பேசினாரே அன்று, செல்லும் வழியெல்லாம், காண்கிற காட்சிகளையெல்லாம் எங்களிடம் விளக்கிக்கொண்டே வந்தாரே. ம்ம்ம்... குரல் எப்படியிருக்கும்?

யோசிக்கிறேன்.. ஒரு நாள், டியூஷன் வகுப்பிற்குச் சென்று, வேகுநேரம் வரை காத்திருந்தோம், நானும் தம்பியும்..! அப்பா வந்து எங்களை அழைத்துச் செல்லவேண்டும், வரவில்லை. முன்பு கைப்பேசி வசதியெல்லாம் இல்லை, வீட்டிலும் தொலைபேசி வசதியும் இல்லை, உடனே தகவல் சொல்ல. இரவு வெகு நேரமாகிவிட்டது, தம்பி பயத்தில் அழ ஆரம்பித்து விட்டான். எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அவனை ஆசுவாசப்படுத்திவிட்டு வழிய வழியப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரே அமைதி எங்கும். எனக்கு எதாவதொன்று என்றால் பரவாயில்லை, தம்பியைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்..

அப்பாவின் லோரி (வாகன ஓட்டுனர்) சர்ர்ர்ர் என்று வந்தது நின்றது. தம்பி அழுவதைப் பார்த்தவுடன், `ஏன்யா அழுவற, அதான் அப்பா வந்துட்டேன்ல.. ’ என்றார். கையில் வைத்திருந்த சாக்லெட்களை, உங்க சின்னம்மா கொடுத்தாங்க என்று சொல்லி இருவரிடமும் கொடுத்தார். நான் அமைதியாக இருந்தேன். தம்பி சாக்லெட்டைச் சாப்பிட்டான்.

வீடு வந்து சேர்ந்ததும், பானை சட்டி விறகு கட்டை எல்லாம் பறக்க ஆரம்பித்தன, `மணி என்னா இப்போ? எவ வீட்டுக்குப்போயிட்டு வர?வயதுக்கு வந்த பொம்பளைப்பிள்ளையை எவனாவது தூக்கிட்டுப்போய், கெடுத்துக்கொலை செய்த்தாத்தான், நீ எல்லாம் அடங்குவ, அவனே, இவனே அந்த மவனே இந்த மனவேன்னு ஒரே ஆர்ப்பாட்டம். அப்பாவும் பதிலுக்கு சண்டை போட்டார், கத்தினார் வேகமாக, என் நிலைமை புரியாமல், என்னடீ என்னடீ என்று குரலை உயர்த்தி சண்டையெல்லாம் போட்டார், என்னன்னவோ பேசினார்.. நினைவுக்கூர்கிறேன், குரல் நினைவில் இல்லை.

அப்போது அப்பா எப்படியிருந்தார்.? எல்லாவற்றையும் சிரித்த முகத்தோடு, அவமானங்களை எல்லாம் சகித்துக்கொண்டு அதே புன்னகையுடன்...  எங்களிடம் மட்டும் அன்பும் அக்கறையும் கொஞ்சம் கூட குறையாமல்.. ஐம்பது வயதிலேயே, முதுமை எட்டிப்பார்க் கத்துவங்கியது.  அதிகமாகக் குடிப்பதால், இந்தக் கோலம் வெகுவிரைவாக வந்துவிட்டது,  என, அம்மா இடித்துக்கூறி வசை பாடுவார்.

எங்களுடைய கிழிந்த துணிகளை அப்பாதான் ஒட்டு போட்டுத்தருவார். பழுதான கைக் கடிகாரத்தை, படிக்காத அப்பா ஒரு டெக்னிஷன் போல் பழுது பார்ப்பார். புதிதாக வாங்கியப்பொருளை உடனே போட்டுப் பார்க்கச்சொல்லி அழகு பார்ப்பார். மூக்குத்தி அணிந்த புதிதில், பார்த்துப்பார்த்து ரசிப்பார், எங்க அம்மா மாதிரி இருக்கு எம்மவ என்பார்.
எப்படியோசித்தாலும் குரல் ஞாபகத்திற்கே வரவில்லை. அப்பாவின் குரல் எப்படியிருக்கும்..!!??

இருபது வருடங்களுக்குப் பிறகும் நினைவை விட்டு அகலாமல் இருக்கும் அப்பாவின் அன்பு, சாதாரணமானதல்ல. எங்களைச் சுதந்திரமாக சிந்திக்க விட்டவர். எங்களின் மேல் அதீத நம்பிக்கை வைத்திருப்பார். அடித்துச்சொல்வார் என் பிள்ளைகள் தவறே செய்ய மாட்டார்கள் என்று. எங்களுக்கும் திருட்டுத்தனம்  செய்வதற்கு மனசே வராது. அப்பாவின் முகத்தை நினத்த மாத்திரத்திலேயே, சில அசிங்கமான  சிந்தனைகள் ஓடி மறைந்துவிடும்.

மஹாத்மா காந்தியையும், பாரதியையும் அறிமுகப்படுத்தியவர்.  எதிர்ப்பார்ப்பு என்கிற எந்த சுமையையும் எங்களின் மீது ஏற்றிவைத்ததில்லை, குற்றவுணர்வுக்கும் உற்படுத்தியதில்லை. யாரிடமும் எங்களை ஒப்பிட்டு குறை கூறியதில்லை (அம்மா செய்வார் இந்த வேலையை நன்கு) கண்டிப்பு உண்டு ஆனால் அடித்ததில்லை. எப்படியிருந்தாலும், நீ என் பிள்ளை என்கிற அவரின் அன்பு என்றுமே நிறைகுடம்தான்.

அவரின் குரல் கேட்கவேண்டும் போல் இருக்கிறது. ஒரு நடிகராக இருந்திருந்தால், ஒரு பாடகராக இருந்திருந்தால்... குரலை மீண்டும் கேட்டுப்பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்குமே.! இப்படி ஏங்குவேன் என்று தெரிந்திருந்தால், எதாவதொரு சந்தர்ப்பத்தில் குரலை பதிவு செய்தாவது வைத்திருக்கலாமே.!

உன்னிடம் பேசவேண்டும் போல் இருக்கு. உன் குரல் கேட்டால் என் ஏக்கத்திற்கு தீர்வு பிறக்கலாம்.
.