செவ்வாய், ஜூன் 19, 2012

மனநிலை குளறுபடி

நம் காதால் கேட்கின்ற, கண்ணால் காண்கின்ற சில விஷயங்களை, நாம் ஆராய்வோம் அல்லது யாரிடமாவது பகிர்வோம். இப்படி ஆராயும் போதும் பகிரும் போதும் அதையொட்டிய தகவல்கள் கூடுதலாகக் கிடைக்கபெறும்போது,  அது நமது விழிப்புணர்விற்கு உரமாக இருக்கலாம். அல்லது இதுபோன்ற தேடல்களால், நம் பகுத்தறிவிற்கும் தீனி கிடைக்கலாம்.

பொதுவாகச் சொன்னால், இந்த வழிமுறை என்பது மற்றவர்களின் குறைகளில் இருந்து நாம் பாடம் கற்பது போன்றதாகும். அதற்காக மற்றவார்களின் குறைகளையும் சதா ஆராய்வது நமக்கு இருக்கின்ற பெரிய குறையாகிவிடும், அதுவும் வில்லங்கம்தான்.

என்னைப்பொருத்தவரை எனக்கு எதேனும் வித்தியாசமான தகவல், இதுவரையில் நான் கேட்காத விவரங்களைக் கேட்க நேர்ந்தால், அதையொட்டிய ஆய்வில் இறங்கிவிடுவேன். அல்லது, அவர்களின் விவரங்களை வெளியிடாமல் (பெயர், ஊர், முகவரி ) பேஸ்புக், ப்ளாக், பத்திரிகை என எழுதி பொதுவில் வைப்பேன். எங்கேயாவது யாரவது ஒருவர் அதைப் படித்து விட்டு, தொலைபேசி வழியாகவோ, அல்லது எழுதியோ விளக்கங்கள் கொடுத்துவிடுவார்கள். எப்படியாகினும் தகவல் கிடைத்துவிடும். (சில கடுமையான விமர்சனங்களின் வழியும் இது நிகழும், நான் வாய் கூசாமல், பிறர் கதைகளைப் பேசுகிறேனென்றும் வசைபாடியுள்ளார்கள்.. யார் கதை? நான் யாரைப்பற்றிச் சொல்கிறேனென்று கண்டுபிடிக்க முடியுமா உங்களால்!?, நானே சொன்னால்தான் உண்டு- சொல்வேனா!!? )

இரண்டு நாள்களுக்கு முன், என் தோழி என்னைத்தேடி வந்திருந்தாள். அவள் எல்லா விவரங்களையும் என்னோடு பகிர்பவள். வீட்டில் நடக்கும் விஷயங்களிலிருந்து, மாமியார் கணவர் பிரச்சனைகளிலிருந்து, குழந்தைகள் கல்வி விவரங்கள், அலுவலக பிரச்சனை வரை தொடரும் எங்களின் உரை தினமும்.

அவளின் பிரச்சனைகள் பல, பல வேளைகளின் தேவையே இல்லாத அலட்டலாகவே இருக்கும். என்னைப்பொருத்தவரை, பட்டென்று எல்லோரையும் மிக விரைவாக பகைத்துக் கொள்ளும் சுபாவமுள்ள நான், இவளின் விஷயத்தில் மட்டும் பரிதாபமே மிஞ்சுகிறது. திட்டுவதற்குக்கூட மனம் வரவில்லை.

கிட்டத்தட்ட இருபது வருட கால தோழி அவள். இந்த இருபது வருடங்களிலும், நாள் தவறாமல் எனக்கு  தொலைபேசி அழைப்பு செய்துவிடுவாள். எல்லாவற்றையும் பகிர்வாள். இவளிடமிருந்து தப்பிக்கவே முடியாது என்கிற நிலை சிலவேளைகளில். என்னால் முடிந்த வரையில் அவளின் பிரச்சனைகளுக்குச் செவி சாய்ப்பேன். எம்மாதியான தீர்வுகளை வழங்கினாலும், அவளின் விஷயத்தில் மட்டும் அதே பிரச்சனை மீண்டும் மீண்டும் துளிர்விடும். எதோ ஒரு மனச்சிக்கல் இவளிடம் என்பதை மட்டும் புரிந்துகொண்ட நான், அவளின் நிலையைப் புரிந்து அனுசரித்து அதன் போல் நடந்துகொள்வேன், மனம்நோகாமல்.

மன்னிக்கவும், அவள் அறியாமையின் விளிம்பில் எதிர்நோக்கிய பல பிரசனைகளை நான் பட்டியலிடுகிறேன். இது காட்டிக்கொடுப்பதோ அல்லது கீழறுப்போ அல்ல. ஒரு பகிர்வு தான்.


 • கணவனோடு பிரச்சனை ஏற்பட்டபோது, நள்ளிரவில் என் வீடுதேடி என்னிடம் அடைக்கலம் கேட்டது.


 • முன்பு வேலை செய்த இடத்தில், கூடுதலாக வருமானம் வேண்டியபோது, `பிடிக்கவில்லை என்றால் வேலையில் இருந்து நின்றுகொள்.’ என்று முதலாளி சொன்ன மறுநொடி, வேலையை ராஜினாமா செய்து, அதிக மனவுளைச்சலில் உழன்ற நிகழ்வு. 


 • ஷாப்பிங் சென்றால், தேவையா, தேவையில்லையா என்பதனை ஆராயாமல் கவர்கின்ற பொருட்கள் அனைத்தையும் வாங்கிவிட்டு, மறுநாள் அதை யாரிடமாவது விற்பதற்கு ஆள் தேடுவது.
 • குழந்தைகள் கல்வியில் தேர்ச்சி பெறவில்லையென்றால், மறுநாளே பல புத்தகங்களை வாங்கிக்கொடுப்பது, பலரிடம் ஆலோசனைகள் கேட்பது, டியூசன் ஆசிரியர்களைத் தேடுவது, பொறுப்புள்ள தாயாக உடனே மாறுவது.
 • யாராவது அவளை, பருமனாக இருக்கின்றாய் என்று சொல்லிவிட்டால், உடனே அன்று தொடங்கி மாலை வக்கிங், காலை ஜோக்கிங் என கிளம்பிவிடுவது.


 • உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு, சோறு சாப்பிடக்கூடாது, பொரித்த உணவுவகைகளைச் சாப்பிடக்கூடாது, இனிப்பு கூடாது, காரம் கூடாது, உப்பு கூடாது என்று யாராவது ஆலோசனைகள் வழங்கிவிட்டால், உடனே அவை எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு, வெறும் ஓட்ஸ் மட்டும் சாப்பிடத்துவங்கிவிடுவாள்.


 • எழுபத்தைத்து வயது மாமி, வீட்டு வேலையில் ஒத்தாசை  செய்யாமல்,  சீரியல் பார்க்கின்றார் என்பதற்காக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை,  பிள்ளைகளின் படிப்பைக் காரணம்  காட்டி  துண்டித்து விட்டிருக்கின்றாள்.


 • மெயிலில் சுவாரஸ்ய தகவல்கள் எதேனும் அனுப்பினால், எங்கேயாவது ஒரு மூலையில் இருந்து யாராவது பார்த்து விட்டால், வேலைக்கு ஆபத்து என நடுங்கத்துவங்குவாள்.


 • தன்னை ஒருவன் கண்காணித்துக்கொண்டே இருக்கிறான், அது காதலா?! என்கிற உறுத்தலோடு, படப்படப்படப்பாகி, அவனை அணுகி ஏமார்ந்து பின் அவனைத்தூற்றுவது. (இதுபோன்ற ஏமாளிகளை ஏமாற்றுகிறார்களே அவர்களை என்னவென்று சொல்வது.!?)


 • கணவனைக் காதலித்து, கடுமையான போராட்டத்திற்குப்பின் அவனைக் கரம்பிடித்து, தம்மை விட வயதில் குறைவான அவனை தம்மோடே தக்கவைத்துக் கொள்வதற்காகவேண்டி, அவனின் அனைத்து வேண்டுகோள்களையும் நிறைவேற்றுவது. (oral sex and also anal sex sometimes). அப்போதுதான் அவன் தன்னை விட்டு எவ்வகையிலும் பிரிய மாட்டான் என்கிற நம்பிக்கையில் . ! இந்த வழிமுறைகள்தான் கணவனை நம் கைக்குள் போடும் யுக்தி என்று நமக்கும் போதிப்பது..


 • சுயலாபம் கருதி, ஒரு செய்கையை நியாயப்படுத்துவது.


 • ஒருவரின் முன்னே சிரித்து மழுப்பி பின் அவரை பின்னால் தூற்றுவது.


 • ஒரு விஷயத்தை ஒருவரிடமே விசாரித்து தீர்வு காணாமல், பலரிடம் விசாரித்து, இவர்கள் இதற்குத் தீர்வு இப்படிச்சொன்னார்களே, அவர்கள் அதற்குத்தீர்வு அப்படிச் சொன்னாகளே... என குழம்பி இறுதியில் தம்மையே நொந்துகொண்டு புலம்புவது.


 • தமது வேலையைத் தற்காக்க முதலாளியிடம் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக யாரை வேண்டுமானாலும் அவரிடம் காட்டிக்கொடுப்பது, மாட்டிவிடுவது.


 • நல்ல பெயர் வாங்கப்போராடுவது. யாரிடமும் கோபத்தைக்காட்டாமல் இருப்பது. சிரித்து மழுப்புவது.


 • செய்கிற எல்லாவற்றையும் சரியா தவறா என விசாரித்து விசாரித்து செயல்படுத்துவது. தவறு செய்ய பயப்படுவது.


 • தமக்கு என்னதான் வேண்டுமென்கிற தெளிவே இல்லாமல் எப்போதும் ஒருமாதிரியான போதை மனநிலையிலேயே இருப்பது.


 • புற அழகைக் கொண்டாடுவது, வெளித்தோற்றத்தை எள்ளி நகையாடுவது. அக அழகு என்பது எதுவென்ற தெளிவே இல்லாமல் இருப்பது.. (கடவுளே)


 • பிச்சைக்காரனுக்கு சோறு போட்டாலும் அதை டமார் அடிப்பது.


 • கஷ்டப்பட்டு தேடி வாங்கிய ஆடை அணிகலன்களை யாராவது ந்ன்றாக இல்லை என்று சொன்னால் உடனே அதை நிராகரிப்பது.


இப்படி இன்னும் அவளின் சில மனோபாவங்களை அடிக்கிக்கொண்டே போகலாம். இவ்வளவிற்கும் மேல் எனக்கு அவளிடம் பிடித்த ஒரே ஒரு விஷயம், அவளின் ஆங்கில ஞானம். மிக சரளமாக விளையாடும் ஆங்கிலம். நுணிநாக்கில் ஆங்கிலம் பேசுவாள். ஆங்கிலத்தில் எனக்குத் தெரியாத சில விஷயங்களை அவளிடம் கேட்டால் உடனே அதை விளக்கிச் சொல்லிவிடுவாள். என்னிடம் இல்லாத ஒன்று அவளிடம் இருப்பது அது ஒன்றுதான். அவர்களின் தாய் மொழியே ஆங்கிலம்தான்.. போர்த்துகிஸ் பரம்பரையில் வந்தவர்கள். இடையில்  தமிழர்கள் சிலர் நுழைந்து விட்டதால் மிக அழகான தமிழர்களாகிப்போனவர்கள். அப்பாவிப்பெண் அவள்.

சென்ற வாரம், பணிபுரியும்  இடத்தில் அவள் மயங்கி விழுந்துள்ளாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, பரிசோத்தித்து உள்ளனர். அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவளுக்கு எந்த நோயும் இல்லை. அவளின் வியாதி Panic Attack என்றும் அவள் நல்ல மனநல மருத்துவரைக் கண்டு கவுன்சிலிங் செய்துகொள்வதுதான் சிறப்பு என்று சொல்லி வீட்டிற்கு அனுப்பியுள்ளார்கள்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவள், மறுநாள் என்னை அழைத்து `நான் பைத்தியமா?’ என்கிற கேள்விகளோடு என்னை துளைக்க ஆரம்பித்துள்ளாள்.

நான் இப்போதுதான் எனது தேடலைத் துவக்கியுள்ளேன். Panic Attack என்கிற வியாதியின் கூருகளையும் அவைகளைக் களையும் வழிமுறைகளையும் என்கிற தலைப்பில் கூகுளில் சென்று ஆராயத்துவங்கியுள்ளேன்.

தெரிந்தால் பகிருங்கள்.. நம்மைச்சுற்றி இருக்கும் சில நண்பர்களுக்கு உதவலாம்.