செவ்வாய், செப்டம்பர் 27, 2016

கள்ளி

நான் உன் வீட்டில்
நெருப்பு இல்லாத அடுப்பில் பால் பொங்குகிறது
அம்மன் போல் ஒரு பெண்
கள்வன் நீ நல்லவன்.

செரிமானம்

 
மூன்று தக்காளி, இரண்டு முள்ளங்கி, மூன்று உருளைக்கிழங்கு, அரை கிலோ ஆட்டிறைச்சி...
`ஏம்மா, எல்லாத்தையும் கொஞ்ச கொஞ்சமாக வாங்குறீங்க.?’ தலைக்குமேல் உயர்ந்த மகன் தன் தாயிடம் கேட்டுக்கொண்டே, தாய் தேர்ந்தெடுத்த காய்கறிகளை கூடையில் போட்டு தூக்கிக்கொண்டான்.
`மாசம் முடியுற வரைக்கும் காசு வேணுமே.. இருக்கிற நூறு ரிங்கிட்’ஐ செலவு செஞ்சுட்டா, அப்புறம் நாளைக்கு என்ன செய்யுறதா.!?’ .
`பேங்க்’ல இல்லியா..?’
`எடுக்கற சம்பளம், திங்கறதிக்கே பத்தல. இப்ப சாமான் விக்கிற வெலைய பாத்த இல்லெ,.. இதுல, பேங்க்’ல வேறு காசு இருக்குமா.!?’ தாய் சொல்லிக்கொண்டே, எதையோ மறந்து விட்டதாக, மீண்டும் காய்கறி அடுக்கியிருக்கின்ற பகுதிக்குள் நுழைகிறாள்.
`எங்கேம்மா..?’
`இரு இரு, இஞ்சி ரெண்டு துண்டு எடுத்திட்டு வரேன். நீ போய் வரிசையில் நில்லு..’
நெரிசலான அந்த பேரங்காடியில் பணம் செலுத்துகிற கவுண்டர் எல்லாம் நீண்ட வரிசையினைப் பிடித்து நின்றது.
மகன் கூடையினை வைத்துக்கொண்டு வரிசையில் நின்றான்.
வரிசையில் அவர்களுக்கு முன் நின்ற மலாய்க்கார பெண்மணியின் ட்ரொலியில் அடுக்கியிருந்த சாமான்களைப் பார்த்தால், அது ட்ரொலிக்கு மேலேயே நின்றது. மேலும் சில சாமான்கள் விலைப்பட்டியல் இடாமல் பிளாஸ்டிக் பைக்குள் மட்டும் போடப்பட்டிருந்தது. விலைப்பட்டியல் இல்லாததால், கவுண்டரில் உள்ள பெண்மணிக்கு ஸ்கேன் செய்வதற்குக் கடினமாக இருந்தது. எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். விலைப்பட்டியல் இல்லாத பொருட்களை மீண்டும் எடுத்துச்சென்று நிறுவையில் வைத்து விலையினை ஒட்டவேண்டும். தவறு அவளுடையதுதான், முதலிலேயே அதைச்செய்துவிட்டு கவுண்டருக்கு வரவேண்டும். இப்போது பாதி ஸ்கேன் செய்யப்படுகிறது மீதியை எடுத்துக்கொண்டுபோய் விலைப்பட்டியல் இட்டு மீண்டும் எடுத்துவரவேண்டும்.
எல்லோருக்கும் அவசரம், வரிசையில் அதிகம் பேர் காத்திருக்கின்றார்கள். தன்னுடையதை முதலில் கணக்குப் பண்ணி அனுப்பிவிட்டால் தேவலாம் என்கிற மாதிரி சலிப்புடன் நின்றார்கள் சிலர். ஒரு சீனர், `Apa pasal lambat ni.? Cepat lah sikit..’ என்று ஒரு கோகோ கோலா’வை கையில் ஏந்திக்கொண்டு முகத்தை உர்ர் என்று வைத்திருந்தார்.
`Tolong tunggu ye, biar yang ini habis dulu. கவுண்டர் பெண்மணி பவ்யமாக பதிலுரைத்தார்.
நாங்களும் விரைவாகச் செல்லவேண்டும், கொஞ்சம் முடித்துக்கொடுத்தால், தேவலாம்.. என்பதைப்போல் மகனுடன் நின்ற அந்தத்தாயும் வேண்டுகோள் விடுத்தாள்.
`ஏம்மா அவசரம். முடியட்டும் போலாம்.’ என்றார் மகன்.
`சமைக்கணும், வந்திருவாங்க..’ என்றாள் தாய்.
அவர்களின் பின்னால் இருந்த நம்மவர் ஒருவர், `ஏன் இந்த வரிசை நகரவேயில்லை.. ? Orang dah ramai, bukak lah counter sebelah. Leceh tunggu lama.. என்றார் சத்தமாக.
தடுமாறினாள் கவுண்டரில் உள்ள பெண். உதவிக்கும் சிலர் வந்தார்கள். அவள் வேலைக்குப்புதியவள் போலும். பதற்றமாகவே இருந்தாள். அனுபவசாலி ஊழியர்கள் அப்பெண்மணிக்கு சில வழிகாட்டிகளை சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த சிலர் இன்னும் கூடுதல் எரிச்சல் அடைந்தார்கள்.
ஒருவகையாக முன்னே இருந்த பெண்மணி நகர்ந்தாள்.
தாய் மகன் முன்னே, நின்ற சீனரும் டாப் டுப் படார் தடார் என்று பொருளை வைத்துவிட்டு பணம் செலுத்திக் கிள்ம்பினான்.
மகன் கூடையில் இருந்த பொருட்களை வைக்க, தாய் தன்னிடமுள்ள நூறு ரிங்கிட்’ஐ அப்பெண்ணிடம் கொடுத்தாள்.
பொருட்களின் விலை, ரிம17..00 தான். மீதம் ரிம83.00 கொடுக்கவேண்டும், ஆனால் அவள் என்ன பதற்றத்தில் இருந்தாளோ தெரியவில்லை, ரிம133.00 ஆக திருப்பித்தந்தாள்.
பணம் அதிகமாக திருப்பித்தருகிறாள், என்பதைத் தாய் உணர்ந்துகொண்ட போதிலும், வாங்கிய பணத்தை விரைவாக தமது பர்ஸுக்குள் திணித்தாள்.
மகன் பார்க்கவில்லை என்று நினைத்தாள் போலும். ஆனால், காருக்குள் ஏறிய மகன் கேட்ட முதல் கேள்வி,
`யம்மா, பணம் கணக்குத்தெரியாமல் அதிகமா கொடுத்திட்டா போலிருக்கு,’ என்றான் .. தாயிற்கு தூக்கிவாரிப்போட்டது.
`ஆ..ஆ..ஒ..ஓ..அப்படியா. கவனிக்கலையே, இரு பார்க்கிறேன்.’ என்று பாவனை செய்துவிட்டு, அட, ஆமா.. கூட கொடுத்திட்டா..’ என்றாள் தடுமாறியபடி.
`சரி, இந்தா பில், விளக்கிச்சொல்லி அவளிடம் பணத்தைத் திருப்பிக்கொடுத்திடு,’ என்று காரில் இருந்தபடியே மகனை அனுப்பிவைத்தாள், மனதிற்குள் `எல்லா கருமம் பிடிச்ச குணமும் என்னோடு ஒழியட்டும்..’ என்றபடி...

சட்டமும் திட்டமும்

அலுவலகத்தில்..

மின்சார பயன்பாட்டைக் குறைக்க
மின் கட்டனத்தைச் சேமிக்க
ஆரோக்கியத்தைக் கூட்ட...
மின்தூக்கி இனி வேண்டாம்
படியேறுருங்கள், படியேறுங்கள்

ஒருவருக்கு முட்டிவலி, முடியாது
ஒருவருக்கு ஆரோக்கிய குறைபாடு, முடியாது
ஒருவருக்கு ஆஸ்துமா, முடியாது
ஒருவருக்கு கால்வலி, முடியாது
ஒருவர் அடுத்த ஆண்டு ரிடையர், வயோதிகம், முடியாது
ஒருவர் செம’குண்டு, முடியாது
ஒருவர் இப்போதுதான் குழந்தை பெற்றார், முடியாது
ஒருவர் அறுவைசிகிச்சை முடித்தவர், முடியாது...
ஒருவருக்கு சுயநலம்
ஒருவருக்கு சோம்பல்
ஒருவருக்கு Don't care

திட்டம் தீட்டியவனும்
சட்டம் போட்டவனும்
மூச்சுவாங்க..
தினமும். !!!

மனம் கொடுக்கும் சிக்கல்


உண்ணா நோன்பு ஆயுளைக்கூட்டும், என்கிற வாசகம் தத்துவமாக வந்து, குட் மார்னிங் என்று சிமிட்டியது வட்சாப்பில். (எதாவது தத்துவம் அனுப்பி, good morning, good evening, good afternoon & good night என்று சொல்கிறவர்களின் வட்சாப்களை நான் சட்டை செய்வதே இல்லை. இன்று எதோ பயனுள்ளது சொல்லப்பட்டதுபோல் தென்பட்டது அதனால்தான் வாசித்தேன்.) அதை வாசித்துமுடிக்கின்ற போதுதான் நினைவுக்கு வந்தது நான் இன்னமும் பசியாறாமல் இருக்கின்றேன் என்று. உடனே வயிற்றில் கரமுர சத்தம் வரத்துவங்கியது. பசி ஆரம்பித்தது, வாங்கி வத்திருக்கின்ற பிஸ்கெட்ஸ்’கள் வா வா என்றன. உடனே காப்பி கலக்கி பசியாறினேன்.
எதுவாக இருந்தாலும் அதைப்பற்றிய நினைவுகளின்போதுதான் ஞாபகங்கள் இடைமறித்து அதையொட்டிய சிந்தனைகளை நமக்குத் தூண்டிவிடும். இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம்..

இப்போ யாராவது மாங்காயை நம்முன் கடித்து சாப்பிட்டால், நமக்கு நாவில் எச்சியில் சுரந்து தொண்டைக்குள் இறங்கும். அந்த இரசாயண மாற்றம் ஏற்படுத்துகிற தொடர்பு பார்த்தீர்களா. நமக்கு அப்போது அந்த மாங்காயைச் சாப்பிடவேண்டும் என்கிற எண்ணம் துளிகூட வராது ஆனால் எச்சியில் மட்டும் பாட்டுக்கு சுரந்துகொண்டே இருக்கும்.
சாப்பாட்டுவேளையில், நாம் மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றபோது, ஒருவர் அவசரமாக நம்மிடம் பேச்சுக்கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அந்நேரம் பார்த்து நாம் வாயில் உணவினை வைத்து மென்றுக்கொண்டே அவரிடம் பேசுகிறோம், அப்போது அவரைக் கூர்ந்து கவனித்தோம் என்றால், அவரை அறியாமலேலே அவருக்கு எச்சில் ஊறும் அதை அவர் சாமர்த்தியமாக மறைக்கப் பார்ப்பார், ஆனாலும் அதை நாம் மிக சுலபமாக கண்டுபிடித்து விடலாம். `சாப்பிடுங்க.’ என்போம். அவர் `சாப்பிட்டுத்தான் வரேன்’ என்பார். அதுவே சாப்பிடாமல் வந்தவர் என்றால், வாயில் உமிழ்நீர் சுரந்து உதட்டின் வழியாக கீழே வழிகிற நிலைமைகூட வரும். இத்தனைக்கும் நாம் அப்பளம் வைத்து ஒன்னுமேயில்லாத பழைய சாம்பார்தான் சாப்பிட்டுக்கொண்டிருப்போம். அந்த ஆழ்மன இரசாயண மாற்றத்தைக் கவனியுங்கள்.

ஊருக்குச்சென்றிருந்தபோது, கடைதெருவிற்கு சாமான்கள் வாங்கச்சென்றேன். அங்கே எனக்கு முன் நின்றிருந்த பெண் குழந்தையின் தலையில், ஈரும் பேணும் அப்படியே புழுத்துக்கிடந்தது. `அதை ஏன் நீ பார்த்த.?’ என்று கேட்பவர்களுக்கு, நம்மைவிட குள்ளமாக யாராவது நம்முன் முதுகைக் காட்டிக்கொண்டு நின்றால், நாம் அவர்களின் தலையைத்தானே பார்ப்போம்.! அக்குழந்தையின் தலையில் பேண்கள் மொய்க்கிறன. இரட்டை இரட்டையாக தாம்பத்திய உறவில் ஈடுபட்டுக்கொண்டு குடும்பம் நடத்துகிறது அங்கே. ஒவ்வொரு முடியிலும் முத்துமுத்தாக பேண்களின் முட்டைகள், இன்னமும் குஞ்சுகள் பொரிக்காமல். குழந்தையின் விரல்கள் சதா தலையினைச் சொரிந்தவண்ணமாகவே இருந்தது. சொரிகிறபோது பொந்தில் இருந்து வெளியேறுகிற எறும்புகள் போல் பேண்களின் வரிசை. அதைக்கண்ணுற்ற நான், என்ன வாங்கவந்தேன் என்பதை மறந்து பேண்சீப்பு இருக்கா.? என்று வாய்தவறி கேட்டும்விட்டேன். மனம் பாய்ந்த இடத்தில் வாய்வார்த்தைகள் தானாக வந்துவிழுகிறது. அதுமட்டுமல்ல, அன்று முழுதும், என் கை என்னையறியாமலேயே தலையை சொரிந்துகொண்டே இருந்தது. இதுவும் ஆழ்மன இரசாயண தொடர்பு பிரச்சனையே.

கண்கள் சிவந்து கண்வலி வந்த ஒருவரிடம் நாம் கொஞ்சநேரம் பேசினால், நமது கண்களின் நீர் லேசாக சுரக்கும். கண்கள் கூசுவதுபோல் இருக்கும். உடனே கண்களைப்பார்த்து பேசமுடியாமல் அங்கும் இங்கும் பார்ப்போம்.
நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு வெடிகுண்டைத்தூக்கிப்போட்டார். அதாவது, நானும் அவரும் அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். லேசான நெஞ்சுவலி, அதனால் கைகள் நடுமுதுகு, தோள்பட்டை, பின்னங்கழுத்து என குத்தலான வலி. வலி கொஞ்சம் கொஞ்சமாக கூடி அதிகரிக்க ஆரம்பித்தது. எழுபது வயதைத்தொடுகிற அம்மாவிற்கு மாரடைப்பு பிரச்சனை எதெனும் இருந்தால் என்ன செய்வது என்று எல்லோரும் ஒட்டுமொத்தமாகச் சொன்னார்கள். ஆனால், மாரடைப்பு என்கிற அறிகுறி இப்படி இருக்காது, நான் மாமியின் மூலம் பார்த்துள்ளேன், மூச்சுத்திணறலோடு உடல் வேர்வையினைக் கக்கும், ஆக, இது நிச்சயம் மாரடைப்பாக இருக்காது என்கிற எனது யூகத்தை அவரிடன் பகிர்ந்தேன்.
அதற்கு நண்பர் சொன்னார், பெண்களின் நோய் தன்மை என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒருவருக்கு ஒருவித வெளிப்பாட்டுடன், வலியின் தன்மை கூடலாம் அல்லது குறையலாம். என் அம்மா, ஒரு பக்கம் கைவலிக்கிறது என்றார். தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு உட்காந்திருந்தார். வலி குறைவுதான் என்றார், ஆனால் டெஸ்ட் எடுத்து பார்த்தபோதுதான் தெரிந்தது, மூணு ப்ளாக் இதயத்தின் குழாயில். உடனே angiogram செய்தோம். இப்போது நன்றாக உள்ளார், என்றார் நண்பர்.

ஓ, இருக்கலாம், இருந்தபோதிலும் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று எல்லா பரிசோதனைகளையும் எடுத்தாகிவிட்டது, பிரச்சனை ஒன்றுமில்லை. இதயத்திலும் எந்த பிரச்சனையும் இல்லை. காய்ச்சல் அடிப்பதால் உடலில் வலி இருக்கும் அந்த வலிதான் சிலவேளைகளில் நமக்கு சிக்கல்போல் தோன்றும், என்று சொல்லி, இருந்தபோதிலும் cardiologist க்கு appointment கொடுத்துள்ளார்கள். என்றேன்.
கண்டிப்பாக பரிசோதனைக்குக் அழைத்துச்செல்லுங்கள், என்று சொல்லி ஒரு விஷயத்தைப் பகிர்ந்தார். அதுதான் வெடிகுண்டு.
நெஞ்சுவலியினைப் பற்றிப்பேசினால், நமது இதயத்தின் துடிப்பு அதிகரித்து நமக்கும் நெஞ்சுவலி லேசாக வருகிறமாதிரி இருக்கும் என்றார்.
ஆமாம் என்னால் அது உணரமுடிந்தது.! நெஞ்சுப்பகுதியை தடவி விட்டுக்கொண்டு கொஞ்சம் நீர் பருகினேன்.

கொட்டாவி விடுகிறவரைப்பார்த்தால், கொட்டாவி உடனே வரும். தும்மலும் தொற்றும். அதுபோல, நெஞ்சுவலி பற்றிப்பேசினாலே அது நமக்கும் வருவதைப்போல் இருக்கும்.

அதுமட்டுமல்ல, எந்த வியாதியாக இருந்தாலும், அதன் தன்மையைப்பற்றி நினைத்துக்கொண்டே இருந்தால் அது நம்மைத் தாக்கும்.

சனி, செப்டம்பர் 03, 2016

தாய்லாந்து பயண அனுபவம்.

 அலைகளே ஏன் கொந்தளிக்கின்றீர்கள், நீங்களும் தாய்லாந்துக்காரர்களா.?'

இப்படி ஒரு கவிதையை நான் வேடிக்கையாகச் சொன்னபோது, தோழிகள் கலகலவென சிரித்தனர். அப்படியென்றால் அதன் உள்ளர்த்தம் எவ்வளவு பெரிய பாதிப்பை அவர்களுக்கும் உண்டு பண்ணியிருக்கவேண்டும் என்பதை நாம் இங்கே உணரவேண்டும்.

நாங்கள் முன்று நாள்கள் தாய்லாந்து கிராபியைச் சுற்றிவந்தோம். ஜாலியான ட்ரீப். நடப்பது, நீந்துவது, நீச்சல் பழகுவது, மார்கெட் சென்று அங்குள்ள உணவுகளைப் பொறுக்கித்தின்பது, நடு ரோட்டில் நடந்துகொண்டே வாங்கிய பலகாரங்களைச் சுவைப்பது, ஐஸ்க்கிரிம் வாங்கி எல்லோரும் நக்கிக்கொள்வது, பப்புக்கு சென்று பாட்டு டான்ஸ்சு டிஸ்கோ....,இரவு அறைக்கு வந்து விடிய விடிய கதை பேசுவது என முன்று நாள் பொழுது அமர்க்களமாக கழிந்தது.

கிராபி பற்றிச்சொல்லவேண்டுமென்றால், அழகிய தீவு. வார்த்தைகளால் சொல்லமுடியாது. அவ்வளவு அழகு. கடல் நீரில் எவ்வளவு வர்ணங்கள் உள்ளன என்பதனை அங்கே காணலாம். கரு நீலம், நீலம், கரும்பச்சை,பச்சை, வெள்ளை, வெள்ளை நீலம் பச்சை கலந்து உள்ள நீர் என அங்குள்ள கடல் கொள்ளையழகு. வர்ண மீன்கள் துள்ளிவிளையாடும் அழகை ரசிக்க இரண்டு கண்கள் போதாது.

சரி முதல் வரியில் சொன்ன விஷயத்திற்கு வருவோம்.

யாரும் யாருடனும் நின்று அமைதியாகப்பேசமாட்டேன் என்கிறார்கள். எல்லோரும் பரபரப்பாக எதையாவது செய்துகொண்டேதான் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு முறை சொன்னால் சொன்னதுதான். மீண்டும் அதையொட்டி கேள்விகள் எதெனும் கேட்டால், தொலைந்தோம். பதிலுக்கு ஒரு அலட்சியப்பார்வைதான் வரும். அது நம்மை என்னமோ செய்யும்.

உதாரணம் சொல்லுகிறேன், டூர் பேகெஜ் ஏற்பாடு செய்தோம் . நாங்களே முதல்நாள் சென்று பலவிவரங்களைக் கேட்டு அறிந்து கொண்டு சொந்தமாக புக் செய்துகொண்டோம்.எஜென்டுகளின் மூலம் எடுக்கவில்லை. விலை அதிகம் என்பதால் ..

மொழிப்பிரச்சனை வேறு அவர்களுக்கு. ஆங்கிலம் தெரியவில்லை. பெகெஜ் விற்பனை செய்கிறவர்களுக்கு கொஞ்சம் மலாய் தெரிந்திருந்தது. அது எங்களுக்கு உதவியது. அப்படி இப்படி என்று பெகெஜ்' புரிந்துகொண்டு மறுநாள் மற்றும் மூன்றாம் நாள் என இரண்டு நாள்கள் பயணத்திற்கு பணம் செலுத்திவிட்டு இரவு சந்தைக்குச்சென்றோம் சாப்பிட. வாகன ஓட்டுனரிடம் நாங்கள் பட அவஸ்தை இருக்கே ..சந்தை எத்தனை மணிக்கு மூடும் ?, அமைதியாக இருந்தார். மீண்டும் எத்தனை மணிக்கு நாங்கள் வரவேண்டும்? அமைதியாக இருந்தார். கடிகாரத்தைக் காட்டி எத்தனை மணிக்கு நாங்கள் வரலாம் .? அமைதியாக இருந்தார். வேனை நிறுத்திய பின் .. தென் தேர்ர்டி என்று ஒரு சத்தம் போடடார் பாருங்க.. அப்படியே ஷாக் ஆயிட்டோம்.

முதல்நாள் காலைமுதல் மாலைவரை தீவுகளை ஸ்பீட் போட் ஏறிச்சென்று சுற்றிப்பார்ப்பது, இரண்டாவது நாள் காலை முதல் மாலைவரை நிலத்தில் இருக்கின்ற இடங்களைச் சுற்றிப்பார்ப்பது. இதுதான் எங்களின் பேகெஜ்.

எந்த பேகெஜ் எப்போது என்பதைப்பற்றிய குழப்பம் எங்களுக்கு இருந்ததால், நீச்சல் ஆடையுடன் இன்று செல்லலாமா அல்லது நாளை செல்லலாமா? என்கிற முக்கிய வினா எங்களுக்குள் எழுந்தது.

எங்களுக்கு பெகெஜ் ஏற்பாடு செய்த தாய்லாந்துக்காரனிடம் கேட்கச்சென்றோம். ஒரு பெண் அங்கே அமர்ந்திருந்தாள். எங்கே அவன்.? அவளுக்குப் புரிந்தது. நைட் ஷிஃப்ட் என்றாள் ஒரே வார்த்தையில் . நாங்கள் இப்போ எங்கே செல்லவேண்டும்.? ரசீதைக் காட்டினோம். கைகளை ஒரு சந்தில் நீட்டி, அந்த பிங்க் போர்ட் தொங்குகிறதே அங்கே நில்லுங்கள், என்றாள். இன்று தீவு டூரா,லன்ட் டூரா? கேட்டோம். முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு, ஆள்காட்டி விரலை மட்டும் முதலில் காண்பித்த இடத்தை நோக்கிக் காண்பித்தாள்.

அங்கே சென்றோம். ஒரு பெண்மணி முகத்தில் ஒரு பயங்கர வெட்டு காயம் காய்ந்து ஆறிபோன தழும்புடன் பாதி மூக்கு காணாமல் போன நிலையுலும் கருத்தமேனியுடன் நின்றிருந்தாள். கோரமுகம் அவளுக்கு . அவளிடம் கேட்டோம். ஆங்கிலம் பேசினாள். அங்கே உட்காருங்கள், என்று ஓர் இடத்தைக் காண்பித்தாள்.

நாம் தான் எப்போதும் கேள்விக்கணைகளோடு உலா வருபவர்கள் ஆயிற்றே, கேள்விகள் கேட்க்காமல் இருக்கமுடியாதே, கேட்டோம்,

இன்று எங்கே செல்கிறோம்.? ''

பேகெஜ் ஏற்பாடு செய்தவர்கள் சொல்லவில்லையா.?'' கேட்டாள், கோபமாக.

சொன்னார்கள் ஆனால் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்வதற்குக் கேட்கிறோம்,'' என்றோம்.

ஒன்பது முப்பதுக்குச்சொல்கிறேன், அங்கே உட்காருங்கள்.'' என்று மீண்டும் விரட்டினாள் எங்களை .

மணி எட்டுமுப்பது அப்போது. வெறுமனே ஒரு மணிநேரம் காக்கவைக்கின்றார்களே, என்று மனதிற்குள் திட்டிக்கொண்டு, வெயில் சுளீரென்று முகத்தில் பட, அவளின் முகத்தைப்பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தோம்.

சரியாக ஒன்பது மணிக்கு கையில் ஒரு காகிதத்தை ஏந்தியவண்ணம் அந்தக்கடையில் இருந்து வெளியே வந்தாள். அதற்குள் பலர் அங்கே குழுமியிருந்தனர்.

ஹோட்டல் பெயரைச்சொல்லி அறை எண்களைச் சொல்லி அழைத்தாள் அனைவரையும். அழைப்பவர்கள் மட்டும் வந்து இந்தக் காகிதத்தில் கையெழுத்து போடுமாறு கேட்டுக்கொண்டாள். நல்லவேளை நாங்கள் அதில் இருந்தோம். ஒரு குழுவின் ஹோட்டல் பெயரும் இல்லை அறை எண்களும் இல்லை. சீன நாட்டவர்கள். அவர்கள் அவளை நாடி, எங்களை ஏன் அழைக்கவில்லை என்று கேட்க. நான் அழைத்தவர்கள் மட்டும் என்னோடு வந்தால் போதும், அழைக்கப்படாதவர்களைப் பற்றி எனக்குத்தெரியாது, என்று முகத்தில் அறைந்தாட்போல் சொல்லிவிட்டு காரியத்தில் கண்ணும் கருத்துமாக இறங்கிவிட்டாள் அந்தக் கோரமூக்கி.

எல்லோரும் அங்கே நிற்கின்ற வேனில் ஏறுங்கள், என்றாள். நாங்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறப்பார்த்தோம். அறை எண் ஹோட்டல் பெயரைச் சொல்லி சத்தமாக எங்களை இப்படி வருமாறு கூச்சல் போட்டாள். நான் உங்களைப் போகச்சொன்னேனா.! சொன்னேனா? என்று அதட்டினாள்.

என்ன இவ, நல்லா சொல்லவேண்டியதுதானே. இப்படிக் கத்தறா. இதுவே வேற இடமா இருந்தா, அவள உண்டு இல்லென்னு பண்ணிடலாம், என்று, என் தோழி முணுமுணுத்தாள்.

தெரியாத ஊர், விளங்காத பாஷை, பழக்கமில்லாத மக்கள், அமைதியாக இருந்தோம். முதலில் சென்ற குழுவிற்கு அழகான வேன் வந்தது. எங்களுக்கு நாய் பிடிக்கும் லாரி போல் ஒரு வண்டி வந்தது, அதில் ஏறு என்றார்கள். ஏறி படகு துறைக்கு வந்தோம்.

நல்லவேளை நீச்சல் அடைகளை உள்ளே அணிந்திருந்தோம். வெள்ளைக்கார பெண்மணிகள் அனைவரும் நீச்சல் அடையிலேயே வந்திருந்தார்கள். அவர்களைக்கண்டவுடன் , நாங்கள் எங்களின் மேலாடைகளைக் கழற்றிவிட்டு நீச்சல் அடையிலேயே பவனிவந்தோம்.

ஸ்பீர்ட் போர்ட் வந்தது. எண் 99, மஞ்சள் வர்ணத்தில். அது அங்கே எங்களுக்காக காத்திருந்தது. ஒரு விரைவு படகில் 22பேர் ஏறலாம்.

மீண்டும் கணக்கெடுத்தாள். அறை எண்களைச்சொல்லி ஹோட்டல் பெயரைச்சொல்லச் சொல்ல அனைவரும் கையைத்தூக்கவேண்டும். நாங்கள் தமிழர்களாக இருப்பதால், உங்கள் மொழியில் `சவடிக்கா' எப்படிச்சொல்லவேண்டும்.? என்று கேட்டாள், வணக்கம் என்றோம். மலாய் மொழியில்? கேட்டாள், சொன்னோம் செலமட் பாகி. பிறகு ஸ்வீஸ் காரர்களிடம் கேட்டாள், சீனாக்காரர்கள், சிங்கப்பூர், போர்த்துகல் என பல பிரிவினர்கள் அங்கே இருந்தார்கள். எல்லோரிடமும் கேட்டுவிட்டு அதே போல் சொல்லிக்காட்டினாள். எல்லோரும் உற்சாகமானார்கள்.

இதில் நாங்கள்தான் `அண்டிகள்'. மற்ற அனைவரும் துள்ளலோடு விரைவுப் படகில் ஏறினார்கள்.

செல்வதற்கு முன் சில நிபந்தனைகளை எல்லோரிடமும் வைத்தாள் அந்த கோரமுக தாய்லாந்து பெண்மணி.

படகு மிகவேகமாகச்செல்லும். கடல் மிக மிக ஆழமானது. நாங்கள் சொல்கிற இடத்தில்தான் நீங்கள் அமரவேண்டும். நண்பர்கள் போய்/கேர்ல் பிரண்ட் பக்கத்தில்தான் அமரவேண்டும் என்று அடம்பிடிக்கக்கூடாது,

படகில் நடமாடக்கூடாது. குதிக்கக்கூடாது. பாதுகாப்பு ஆடையினைக் கண்டிப்பாக அணிந்துகொள்ளவேண்டும். படகு நிறுத்தப்படுகிற இடத்தில் நாங்கள் சொல்கிற நேரத்திற்குள் வந்துவிடவேண்டும், இல்லையேல், நீங்கள் தீவுலேயே விடுபட்டுவிடுவீர்கள். மீண்டும் அடுத்த போர்ட் வரும்வரை காத்திருக்கவேண்டும். அதில் 22பேர் இருந்தால், அடுத்த போர்ட் வரும்வரை காத்திருக்கவேண்டும். ஆக, எல்லாம் சரியாக நிகழவேண்டும் என்றால் தயவுசெய்து ஒத்துழைப்பு கொடுங்கள்.

நீச்சல் அடிக்க நினைப்பவர்கள் அங்கே கட்டப்பட்டிருக்கின்ற கையிற்றைச்சுற்றியே நீச்சல் அடிக்கவேண்டும். அதைதாண்டி சென்று ஆபத்துகள் எதேனும் ஏற்பட்டால் அதற்கு நாங்கள்பொறுப்பல்ல. சென்ற வாரம் ஒரு சீனப்பெண்மணி சொல்பேச்சு கேட்காமல் வட்டத்தைத்தாண்டி நீச்சல் அடிக்கச்சென்றபோது நீர் அவளை இழுத்துச்சென்றது, நாங்கள் அனைவரும் இறங்கி அவளைக் காப்பாற்ற முயன்றோம், இழுத்துவருகிறபோது உயிர் இருந்தது, கரை சேருகிறபோது இறந்துவிட்டார். பெரிய பிரச்சனையாகிப்போனது, அதன் பிறகு நாங்கள் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. ஆக, நாங்கள் சொல்வது அனைத்தும் உங்களின் பாதுக்காப்பிற்காகவே.. என்று முடித்தார்.

எங்கள் நால்வரின் முகத்தில் ஆடவில்லை. என்ன இவ்வளவு ஆபத்தான பயணத்தில் நாமே புகுந்துகொண்டோமே, என்று நடுக்கமாக இருந்தது.

அனைவரும் படகில் ஏறினோம். நாங்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் ஏறினோம். காரணம் கால் வைத்து ஏறுகிற கம்பிப்படிகள் ஒரு இடத்தில் நிற்காமல் ஆடிக்கொண்டே இருந்தது. உதவிக்கு உள்ளவர்கள் எங்களைக்கைப்பிடித்து ஏற்றிவிட்டார்கள்.

படகு கிளம்பியது, இதுவரையில் நான் அனுபவித்திராத பயணம் அது. போகிற வேகத்தில் படகு சாய்வதைப்போல் இருந்தது. தோழி உட்காருகிற இடத்தில் இருந்து பொத்தென்று கீழே விழுந்தாள். ஒருவள் பைகளை கைகளில் ஏந்தி வாந்தி எடுத்தமேனியாக இருந்தாள். எனக்கு கிறுகிறு என்று வந்தது.

கீழே விழுந்த தோழியை நாங்கள் தூக்க எழுந்தபோது, யாரும் நகராதீர்கள், அலை மோசமாக இருக்கின்றது, கொஞ்சம் பொறுங்கள் நாங்கள் வருகிறோம், என்று சொல்லி, குண்டான பெண்மணியை எழச்சொல்லி இந்தப்பக்கம் வரவழைத்துவிட்டு,இருவர் ஒன்றுசேர வந்து, என் தோழியை தூக்கி உட்காரவைத்தார்கள்.

படகு பயணத்தின் போது அதே கோரமுகம் கொண்ட தாய்லாய்ந்து பெண்மணி பாட்டுப்பாடி டிஸ்கோ ஆடினாள். அருமையாக கைத்தேர்ந்த நடக்காரி போல் ஆடினாள். வியந்துபோனோம். ரசித்தோம். நன்கு பாடினாள். ஆங்கிலம், மலாய்ப் பாடல், தாய்லாந்து பாடல் என்று அருமையான குரல்வளம் கொண்ட அவள் பாடிக்கொண்டே ஆடினாள். படகில் வேகமான இசை ஒலித்துக்கொண்டே இருந்தது. எல்லோரும் கைகளைத்தட்டி உற்சாகமூட்டினோம்.

செல்கிற ஒவ்வொரு இடத்திற்கும் அங்கே நிகழ்ந்த சில சுவாரிஸ்ய நிகழ்வுகளை கதைகள்போல் எங்களிடம் சொல்லி பயணத்தை உற்சாக மூட்டியபடியே இருந்தாள் அந்த கோரமுகம் கொண்ட பெண்மணி. ஜேம்ஸ்போடண்ட் ஐலண்ட், மங்கி ஐலண்ட், பெர்ட் நெஸ்ட், மஞ்சள் குகை என்று அனைத்தையும் படகில் நின்றபடியே ரசித்தோம். சில இடங்களில் நீச்சல் செய்தோம்.

பி பி ஐலண்ட் வந்துசேர்ந்தோம். அங்கேதான் மதிய உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. படகை நிறுத்திவிட்டு, இந்த பி.பி ஐலண்டைப் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா.! கேட்டாள். எல்லோரும் ஆம் என்பதைப்போல் தலையை ஆட்டினார்கள். நாங்கள் டியூப் லைட் கொஞ்சம் தாமதமாகத்தாம் எல்லாமும் புரிந்தது. 24/12/2004 நினைவிருக்கிறதா.? கேட்டாள். எல்லோரும் அமைதியானோம்.

சுனாமி வந்து , கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டமனிதர்களை விழுங்கிய இடம் இது. இந்த பி.பி ஐலண்டில் உள்ள அனைத்தையும் சுனாமி அடித்துச்சென்றது. இதுபுதிய பி.பி ஐலண்ட், கடைகள் அனைத்தும் முற்றிலும் புதியது.

அதோ அங்கே தெரிகிறதே மொட்டையான தென்னை மரம், அதுவரையில் வந்தது சுனாமி, என்றதும் அனைவரும் ஒன்றாக அந்த மரத்தை நோக்கிவிட்டு ச்ச்ச் ச்ச்ச் என்று சோகஒலி எழுப்பினார்கள். எங்களின் வீடு இங்கேதான் இருந்தது. இப்போது இல்லை காரணம் என் அம்மா, அப்பா, அண்ணன் தம்பி தங்கைகள் என அனைவரையும் நான் இங்கே பலிகொடுத்துவிட்டேன். குடும்பத்தின் ஆறுபேரையும் சுனாமி அடித்துச்சென்றுவிட்டது. நான் எப்படித்தப்பித்தேன் என்கிறீர்களா.!?

உயிர் மட்டும்தான் இருந்தது எனக்கு மற்ற எல்லமும் போச்சு. நான் எவ்வளவு அழகி தெரியுமா.! என் முகம் இப்படி மாறியதற்கே, இந்த சுனாமிதான் காரணம் என்று நகைச்சுவையாகச்சொல்லி கண்களை சிமிட்டினாள். அனைவரும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தோம். என் மனதில் சோகம் படர்ந்தது. அவளின் கோரமுகம் என் மனதை விட்டு மறைந்தது. அவள் அழகானாள்.

மீண்டும் படகு ஏறி இக்கரைக்கு வந்தாக வேண்டுமே, மிகுந்த கலவரத்தில் படகு ஏறினோம். காரணம் கடுமையான மழை. நீர்மட்டம் கடலில் அதிமாக இருந்ததைப்போல் இருந்தது.

வரும்போது முட்டிவரை இருந்த நீருக்கே நான் பரதநாட்டியம் ஆடினேன். இப்போது இடுப்புவரை நீர், கால் வைத்து ஏறுகிற இடம்வேறு ஊஞ்சள் போல் வேகமாக ஆடியது. எல்லோரும் ஏறியாகிவிட்டது நாங்கள் தத்தளித்தோம். பரிடா வந்தாள், கைகளைப்பற்றிக்கொள் என்றாள், வேகமாக இழுத்து மேலே சுலபமாக ஏற்றினாள். அப்படி ஏறியபோது அவளை அணைக்கின்ற வாய்ப்பும் கிடைத்தது.

அத்தருணத்தின் போதுதான் தோளில் தொங்கிக்கொண்டிருந்த எனது ஹென்பேக் முழுமையாக நீரில் மூழ்கியது. ஸ்மார்ட் கைப்பேசி பாழாய்ப்போனது. வாங்கி இரண்டே மாதம்தான்... :(

எல்லாமும் முடித்து படகு கரைக்கு வர மாலை மணி நான்கு முப்பதாகி இருந்தது. விரைவாக இருட்டாகிப்போனதுபோல் தென்பட்டது . கடல்தாயே நன்றி, என்று கும்பிடு போட்டுவிட்டு ஹோட்டல் அறைக்குச்சென்றோம்.

அன்று முழுக்க உடல் அடித்துப்போட்டதுபோல் இருந்ததால், இரவு வொட்கா அருந்தினோம். உற்சாகம் பிறந்தது, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்