சனி, ஜூலை 28, 2012

மூர்ச்சையானேன்


முன்பு நான் எழுதிய கதைகள்,கட்டுரைகள், கவிதைகள் என எல்லாவற்றையும் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்கிற நோக்கோடு, டைப் செய்கிற போது சில தவறுகள், கருத்துப்பிழைகள், எழுத்துப்பிழைகள் என கண்களுக்குத் தெரிந்தவண்ணமாகவே இருக்கிறது.

அதை திருத்திப்போடலாமா அல்லது பத்திரிகையில் வந்ததுபோலவே அப்படியே பதிவேற்றி விடலாமா, என்கிற யோசனையில் எல்லாமும் அப்படியே பையில் பத்திரமாக இருக்கின்றன. சோர்வாகவும் இருக்கின்றது, மீண்டும் வாசித்து தட்டச்சு செய்வதற்கு..! திரும்பியே பார்க்கவேண்டாம் என்று கூடத்தோன்றுகிறது. என்ன செய்ய, அன்றைய சிந்தனையோட்டம் அப்படி..! இப்போது சிந்தனையில் மாற்றம் உள்ளது போன்ற பிரமை. இன்னும் மாறலாம்..

எங்கள் ஊரின் நிலவரப்படி, பத்திரிகைகளில் பிரசுரமாவதை பெரும்பாலும் யாருமே அவ்வளவாக அக்கறை எடுத்து, ஈடுபாடு காட்டி வாசிப்பதில்லை. பல வருடங்களாக எழுதிவருகின்றோம் (மொக்கைகள்தான்),  அதில் அதிகமாக எழுதித்தள்ளிய, அதிகமான படைப்புகள் வெளியான ஒரு பத்திரிகையில், அங்கே வேறொரு பொறுப்பில் இருக்கும், பெரிய பதவி ஆசிரியருக்குக்கூட,  நாம் யார் என்றே தெரியவில்லை. அட, எழுத்தாளராக அடையாளங்காண வேண்டாம்’ங்க, ஒரு தீவிர வாசகியா!? ..ம்ம்ம்

முன்றாம் பிறை கமல் மாதிரி குட்டிக்கர்ணம் போட்டு சொல்லவேண்டியதாக உள்ளது, நான் தான்.. தெரியுதா? ஆடரா ராமா ஆடு என!.

எனக்குத்தெரிந்த ஒரு பிரபல எழுத்தாளர் - நிஜமாலும் எழுத்தாளர், பலவருடங்களாக எழுதுகிறார். அவரின் புகைப்படத்தோடு பல
சிறுகதைகள் படைப்புகள் பத்திரிகையில் வருகிறது, வந்தவண்ணமாகவும் இருக்கின்றது. ஆனாலும்  அவரின் பக்கத்து வீட்டுக்காரருக்கு, அவர் ஒரு எழுத்தாளர், பத்திரிகைகளில் எழுதுவார், என்கிற விஷயம் இன்னமும் தெரியாதாம்..! இத்தனைக்கும் அந்த அண்டைவீட்டுக்காரர்  தமிழ் பத்திரிகைகள்தான் வாங்குவாராம். ! அவரின் சோகக் கதை அப்படி.

அண்மையில் ஒரு பத்திரிகை ஆசிரியரை தொலைப்பேசியில் அழைத்து உரையாடினேன். உடையாடல் சென்றது இப்படி...  

“சார், நான் தான் விஜி, நிறைய எழுதுவேன், எனது பதிவுகளை உங்களுக்கு மெயிலில் அனுப்பலாமென்றிருக்கின்றேன். உங்களின் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?”

“ எனது மின்னஞ்சல் முகவரி உனக்கு எதற்கு? மின்னஞ்சல் பதிவுகளையெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.! அது சரிப்பட்டு வராது’ம்மா. உங்களின் பதிவுகள் எங்களுக்கு எப்போதும் ரகசியமாகக் கிடைக்கவேண்டும். மிக மிக முக்கியமானவை அவை!. மின்னஞ்சலில் அனுப்பினால், பலர் பார்க்கக்கூடும், வாசிக்கக்கூடும். அது நல்லதல்லவே.! என்ன நாஞ்சொல்வது.? வரும் கடிதங்களையெல்லாம் நாங்கள் பிரித்துக்கூட பார்க்காமல், அப்படியே சம்பந்தப்பட்டவர்களின் மேஜையில் வைத்து விடுவோம். அதுதானே நியாயம்’ம்மா? நீ என்ன செய்.! எழுதியோ, டைப் செய்தோ, ஒரு என்வலஃப் வாங்கி, அதை அதனுள் போட்டு, பசை கொண்டு ஒட்டி, தபால்தலை வாங்கி, ஒட்டி, தபால் நிலையத்திற்குச்சென்று ரிஜிஸ்டர் செய்து விடு, அப்போது அவர்கள் உன்னிடம் ஒரு ஸ்லீப் கொடுப்பார்கள் அதை பத்திரமாக வைத்துக்கொள் - அத்தாட்சி அதுதான். புரியுதா?” என்றார்.

நான் மூர்ச்சையானேன்.