புதன், பிப்ரவரி 13, 2013

இலையடி (மாமி கதை)

இது உண்மை -

மாமிக்கு, மோசமான மூச்சுத்திணறல் வந்து இழுத்துக்கோ பரிச்சிக்கோ என்று உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, வேலைக்காரி ஒரு ஐடியா கொடுத்தாள்.. 

மூன்று விதமான பச்சை இலைகளைக் கொண்டு, உடம்பில் அடித்தால் திணறல் நின்றுவிடும், பற்றிக்கொண்டிருக்கும் `சைத்தான்’ ஓடிவிடும் என்று. 

ஏன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவில்லை என்கிறவர்களுக்கு... 

`இனி அடிக்கடி இப்படியாகும், இருதயமும் கிட்னியும் செயலிழக்கும் அறிகுறிகள் தெரிகிறது, பிள்ளைகள் பக்கத்தில் இருந்து அன்பாக அரவணித்துக்கொள்ளுங்கள், கொடுத்த மருந்துகளை தொடர்ந்து கொடுத்துவாருங்கள்...’ என்று ஆலோசனை வழங்கினார் மருத்துவர்.

அதன் படியே நானும் அவளும் மாமியின் அருகில் இருந்து போராடிக்கொண்டிருந்த போது அவள் இவ்வாலோசனையை வழங்கினாள்.

வெளியே சென்று வேப்பிலையை உடைத்தேன்.. மூன்று இலைகள் வேண்டாம், இந்த ஒரு இலை தான் எங்களின் தெய்வம் என்று சொல்லி கொண்டு உடைத்துவந்து..

`அம்மா, ஆத்தா வந்திட்டா.. இனி எல்லாம் சரியாயிடும் என்று சொல்லி, வேப்பிலையை உடல் முழுக்க அடித்தேன்.. அடித்தேன்.. பேய் ஓட்டுவதைப்போல்.....

என்ன ஆச்சிரியம், அப்படியே அமைதியானது மூச்சு.. சத்தமில்லாமல் சாதாரணமாக வந்தது... கைகளைப் பற்றிக்கொண்டு முத்தமிட்டார்.. `அம்மா, ஆத்தா மாரி மகமாயி என்னை காப்பாற்றிவிட்டாய் என்று...’

வேலைக்காரிக்கும் சந்தோசம்.. பாத்தியா நான் சொன்னேன் இல்லெ, அது சைத்தான்..எமன், உயிரை எடுக்கவந்திருக்கு, இலைகளைக்கொண்டு அடித்தால், ஓடிவிடும்..’ என்று பெருமைபொங்க மார்தட்டிக்கொண்டாள்.. 


இக்கதையை - வேடிக்கைபோல் நான் எழுதினாலும் அத்தருணத்தில் நான் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது.! காரணம், மரண பயம் ஒருவரிடம் குடிகொள்ளும்போது, சம்பந்தப்பட்டவரின் முகபாவனைகள் மிகக்கொடூரமாக மாறுகிறது.. நாக்கு வெளியே தள்ளும், கண்விழிகள் பிதுங்கும், குமட்டல் வரும், கை கால்கள் விரைக்கும், வேர்க்கும், நகங்கள் நீலமாகும், முகம் வெளுக்கும், எப்படி செய்தாலும் திருப்தியடையாத நிலையே வரும் அவர்களுக்கு... ஐய்யோ நான் சாகப்போறேனா என்கிற முணகல் வரும்.. பேசவேண்டும் போல் இருக்கும் ஆனால் அவர்களால் பேசமுடியாது... நம்மை தெய்வமாகப் பார்ப்பார்கள். என்னைக்காப்பாற்று என்பதைப்போல் இருக்கும் அவர்களின் பார்வை. நீ மனது வைத்தால் நான் பிழைத்துக்கொள்வேன்... நீயே தெய்வம் என்பதைப்போல் நம் கைகளை இறுக்கிப்பிடித்துக்கொள்வார்கள். பரிதாபமான நிலை இது. தேவையா. !!!

உடல் தேறி, இப்போது கொஞ்சம் சுமார். இருப்பினும் அந்த மூச்சுத்திணறல் மீண்டும் வந்துவிடப்போகிறது என்கிற பயத்தில், எல்லாமும் முடித்து, குளிப்பாட்டி கஞ்சி கொடுத்து அறையில் தூங்க வைத்துள்ளோம்.. அறையில் அவர் தூங்கினாலும் சமையலறை ஜன்னலில் இருந்து நிலைமை எப்படி இருக்கிறது.., மூச்சுவாங்குகிறதா.. உயிர் இருக்கா, நிம்மதியாக தூங்குகிறாரா.. என எட்டி எட்டி நானும் என் வேலைக்காரியும் ஒருவர் மாற்றி ஒருவர் கண்காணித்து வருகிறோம்... 

`ச்ச்சே என்ன பழக்கம் இது? படுத்துத்தூங்குகிற என்னைய எட்டி எட்டிப்பார்க்கறது..! இங்கே என்ன அவுத்துப்போட்டுக்கிட்டு ஆடறாங்களாக்கும்.. கெட்ட பழக்கம் இப்படி எட்டி எட்டிப்பார்க்கறது.. நினைக்கிறீங்களா நான் தூங்கறேன்னு, எல்லாம் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்.. அவ (வேலைக்காரியை) என் கையால் அடி வாங்காமல் போகமாட்டாள்.. அதோட அவ இந்த வீட்ட விட்டு ஓடணும்.. நீயும் போடு ஜால்ரா.’ 

வேலைக்காரி கேட்டாள், அக்கா என்ன கோவமா யாரையோ திட்டுகிறார் பாட்டி.. என்ன கதை?
அப்படியே மொழிப்பெயர்த்தேன் இதை..

இருவரும் சத்தம் போட்டுச்சிரித்தோம். மாமிக்கு எரிச்சல் கூடிவிட்டது...

`இரு எம்மவன் வரட்டும்..’

ஹஹஹஹஹஹஹஹஹஹஹ...