திங்கள், ஜனவரி 05, 2015

பிடிக்காதவனையும் பகைத்துக்கொள்வதில்லை.

நீ எழுது, உன் எழுத்துக்கு நான் அடிமை என்று இதுவரையிலும் யாரும் சொன்னதில்லை.
ஊரைத் திருத்தப்போகிறேன். உலகைத்திருப்போகிறேன் என்கிற சபதத்தோடு எழுத முயன்றதில்லை.
நாலு பேரு நல்லா பாராட்டுவாங்க.. என்றும் மூளையைக் கசக்கிப் பிழிந்ததில்லை.
புத்தகம் போட்டு எல்லோரும் வாசிக்கவேண்டும் என்றும் சிந்தித்ததில்லை.
எழுதி எதையும் சாதித்ததில்லை. சாதிக்கவேண்டும் என்கிற எண்ணமும் இல்லை.
எழுத்து தொழிலும் அல்ல.
இருந்த போதிலும் நான் எழுதுகிறேன்.. ஏன்?
பெண்ணான என் உள்ளக் குமுறலைக் கேட்க ஆளில்லை. எழுதி வெளிப்படுத்துகிறேன்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் அண்டை அயலாரோடு எந்த ஒரு பிக்கல் பிடுங்கள். பிரச்சனைகளில்லாமல் இருந்து வந்தவர்கள் நாங்கள். அதற்குக்காரணம் நான் நல்லவள் என்பதைவிட, எனது அண்டை அயலார்கள் மிகவும் நல்லவர்களாகக் கிடைப்பெற்றதுதான் எனது பாக்கியம். 

என்று நான் வீடு மாற்றலாகி இங்கே வந்தேனோ, அன்றிலிருந்து பிடித்தது எனக்குச் சனியன். 

தொட்டதிற்கெல்லாம் குற்றம் சொல்கிற் ஒரு தொல்லைப்பேர்வழி தற்போதைய அயலார்.

வந்த புதிதில், `ஏர்காண்ட்’ இன் தண்ணீர் என் வீட்டில் விழுகிறது, வாசல் அசுத்தமாகிறது. பாசி பிடிக்கிறது.’ என்கிற முனகல் முதல் கோணல். சரி, தவறு நம்முடையதுதான் என்று ஏற்றுக்கொண்டு, கூரைமேல் ஏறி ஏர்காண்ட் ட்டீயூப்’ஐ நகர்த்தி அது என் வீட்டு வாசலில் விழும்படி வைத்தோம்.

அவர்களின் பூமரம் பூத்துக்குலுங்கி எங்களின் வீட்டு வாசலை வந்தடைந்து மணம் பரப்புகிறதென்று, நான் கதற கதற, என் வீட்டுப்பக்கம் பூத்துக்குலுங்கிய கொடிகளை கத்தரித்துவிட்டார்கள். காய்ந்து வாடியது என் பக்கக்கொடிகள். 

மரமாக வளர்ந்து வருகிற வேப்பமரத்தை குறிவைத்து அவர்களின் பேச்சுகள் வட்டமடிக்கத்துவங்கின. 

இரவானால் பேய் வரும். வீட்டிற்கு நல்லதல்ல. மரமாக வளர்ந்தால், காற்றில் முறியும்.வீட்டின் மேல் விழும். மரம் பெரிதாக வளர வளர வேர்கள் கீழே படர்ந்து, கால்வாயைப்பிளக்கும். வாசலின் டயில்ஸ் எல்லாம் விரிசல் விழும்.. இலையுதிர் காலத்தில் இலையாகக் கொட்டும். யார் கூட்டிப்பெருக்குவது.? என ஓயாத எச்சலூட்டும் எச்சரிக்கைகள். 

என்னால் முகத்திலடித்தாட்போல் ஒன்றும் சொல்லமுடியவில்லை. காலையில் எழுந்தவுடன் முகத்தப்பார்க்கவேண்டுமே.! சிலவேளைகளில் எரிச்சலின் உச்சத்தில் எதையாவது உளறி வைத்தாலும், பெரும்பாலான நேரங்களின், பயிரைக்கொஞ்சும் நான், சக உயிருக்கு மதிப்பளிக்கத் தவறுகிறேனே, சதா எதையாவது கேட்டுக்கொண்டு  என்னோடு பேசுபவர்கள் அவர்கள்.. அவர்களின் எண்ணம் அவர்களோடு. அவர்களுக்கு என்ன பிரச்சனையோ, என பரிதாபம் மேலிட, என்னை நான் கட்டுப்படுத்திக்கொண்டு மௌனமாகவே இருந்தேன்.

இருப்பினும் தொல்லைகள் தொடர்கின்றன.

வீட்டில் குடியேறுவதற்கு முன், வீட்டைச் சீரமைத்தோம். பின் பக்கம் சுவர் எழுப்பி, சமையல் அறையினை இழுத்துக்கட்டினோம். இழுத்துக்கட்டுகிறபோது, வீடுகள் வரிசையாக இருப்பதால் இரண்டு பக்கமும் சுவர் எழுப்பித்தான் சமையலறையை கட்டிமுடிக்கவேண்டும். சீரமைப்பு செய்பவர் எங்களுக்கு சில அலோசனைகளை வழங்கினார். அக்கம் பக்கத்தில் கேட்டுக்கொள்ளுங்கள், நாம்முடைய சுவரை அவர்களும் உபயோகமாக இருக்கும், பணம் ஏதும் கொடுத்து சுவர் கட்டுவதில் அவர்கள் எதேனும் பங்கு கொள்கிறார்களா? என்று எதற்கும் கேட்டுக்கொள்ளுங்களேன், என்றார்.
என் கணவரோ, வேண்டாம். நமக்குத்தேவைப்படுகிறது. நாம் கட்டுகிறோம். அவர்கள் சீரமைப்பு செய்கிறபோது பிறகு பார்த்துக்கொள்ளலாம், என்று, பங்கு பற்றி அக்கம் பக்கத்தில் கேட்டுக்கொள்ளாமல் வேலைகளை முடித்தோம்.

அதேபோல் தான் முன் பக்கமும். இடது வலது பக்கம் நாங்கள் சுவர் எழுப்பினால், அவர்கள் ஒரு பக்கம் மட்டும் சுவர் எழுப்பினால் போதுமானது. அவர்களின் வாசற்பக்கம் முழுமையடைந்துவிடும். இதனால் நாங்கள் செய்கிற செலவில் பாதிதான் அவர்களுக்குச் செலவாகும். சீரமைப்புப் பணியின் பாரம் குறையும். கோலாலப்பூரில் சீரமைப்புப் பணி, சிலவேளைகளில் வீடுகளின் விலையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவர் எழுப்பினால் மட்டும் போதுமா.? இந்தப்பக்கம் என்ன செய்கிறோமோ அதேபோல் அந்தப்பக்கமும் செய்யவேண்டும். சுவரை வழவழவென சிமெண்ட் போட்டு மொழுகுவது. சாயம் பூசுவது என எல்லா வேலைகளையும் எங்களின் செலவிலேயே செய்தோம். அக்கம் பக்கத்தை எதிர்ப்பார்க்காமலேயே. இதற்காகச் சிலர் பத்திரமெல்லாம் தயார் செய்து வக்கீல் வைத்து கையொப்பம் வாங்கி பணம் வசூல் செய்வதும் உண்டு,

வலது பக்கம் உள்ள மலாய் அன்பர். `மிக்க நன்றி. தற்போது என்னிடம் பணம் இல்லை. நான் நன்றாக வயரிங் வேலைகள் செய்வேன். எதாவது உதவிகள் வேண்டுமென்றால் என்னை அழையுங்கள், நான் வந்து பணம் வாங்கமலேயே செய்துதருகிறேன்.’ என்று சொல்லி சில எலஃக்ட்ரனிக் வேலைகளை இலவசமாகச் செய்து தந்து தமது நன்றியினை வெளிப்படுத்திக்கொண்டார். மேலும் நாங்கள் எழுப்பியிருந்த சுவர்பக்கம் சாயம் பூசவேண்டாம். எங்கள் வீட்டில் நாங்கள் பூசியிருக்கின்ற சாயத்தைப்போலவே நான் பூசிக்கொள்கிறேன். என்று சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டார். அத்தோடு அவர்களால் எந்தத் தொல்லையும் எங்களுக்கு இல்லை. இதுவரையிலும்.. இனியும் வராது காரணம் நிஜமாலும் புரிந்துணர்வு உள்ள நல்ல மனிதர்கள் அவர்கள்.

இந்தப்பக்கம் உள்ள நம்ம ஆள், ஓயாமல் எங்களுக்கு ஆலோசனை அறிவுரைகளை வழங்கியவண்ணமாகவே இருக்கின்றார். முன் தினம் எங்களை அழைத்து, `நான் வீட்டிற்கு சாயம் பூசப்போகிறேன். உங்களின் சுவர் மழை நீர் பட்டு அசுத்தமாக மாறிக்கொண்டு வருகிறது, சாயம் பூச, உங்களின் பங்கிற்கு நீங்கள் ஒரு டின் சாயம் வாங்கிக்கொடுங்கள், எங்கள் வீட்டிற்கு சாயம் பூசும்போது நீங்கள் எழுப்பிய இந்தச் சுவருக்கும் சேர்த்தே சாயம் அடிக்கச்சொல்கிறேன், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

என்னங்க இது அநியாயமா இருக்கு.! உன் வீட்டுப்பக்கம் சுவர் அழகாக இருக்கவேண்டுமென்று நீ நினைத்தால், சாயம் வாங்கிப்பூசு. எங்களிடம் முறையிட என்ன வேண்டியிருக்கிறது.! நாங்கள் எழுப்பிய சுவர்தான் என்றாலும், அது  உனது சுமையைக் குறைத்து உனக்கும் பாதுகாப்பாக இருக்கின்றதுதானே. !? அறி(ய)வில்லையா?

கூடுதலாக மேலும் ஆலோசனைகளை வாரி வாரி வழங்கியிருக்கின்றார்.. மழை நீர் கூரையின் மேலிருந்து சுவரில் பட்டுத்தெறிக்காமல் நேராக கால்வாயினுற்குள் செல்வதைப்போல் ப்ளாஸ்டிக் குழாய்கள் பொருத்திவிடுங்களேன். சாயம் அடித்தாலும் நீண்ட நாள் மழை நீரால் அழிந்துபோகாமல் அப்படியே இருக்குமே.! எப்படி.??

என்னிடம் மட்டும் இதையெல்லாம் சொல்லியிருந்தால், நான் எப்போதே சில விஷயங்களைச் சொல்லிக்காட்டி சண்டை  போட்டிருப்பேன். என் கணவரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார். அவர் பல விஷயங்களைப் பலகோணத்தில் ஆராய்ந்து யோசித்துக்கொண்டிருப்பவர். என் வாயை அடைத்துவிடுபவர்.

``போடா.. நீ என சொல்வது. நாங்கள் என்ன கேட்பது.!’’ என்பதைப்போல் எதையும் பொருட்படுத்தாமல் மௌனமாகவே இருப்பதாக முடிவு செய்துவிட்டோம்.

மீண்டும் அழைப்பான்.. தலையை ஆட்டிவிட்டு. அமைதியாக இருந்துவிடவேண்டியதுதான். எனது வீழ்ச்சியில் அவன் மகிழ்வான் என்பதால் பகைத்துக்கொள்ள மனமில்லை.