புதன், மார்ச் 06, 2013

சேகரித்த வார்த்தைகள்

காலையில் எழுந்தவுடன் முதல் நாள் ஏற்பட்ட சில அழுத்தங்கள் மனதைக்குடையவே, இன்று இவளை, இவனை, அவனை, அவளை நன்றாக நாக்கைப் பிடுக்கிக்கொள்வதைப்போல் கேட்கவேண்டுமென்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன். எண்ணிய வார்த்தைகளையும் கோர்வையாக்கிக்கொண்டேன். சேகரித்த வார்த்தைகளை, மனதில் அசைபோடுகிறபோது அவை மோசமான கெட்டவார்த்தைகளோடுதான் உழன்றது. அலுவலகம், அன்னிய நபர்கள், குடும்ப உறுப்பினர்கள் என  சம்பந்தப்பட்டிருந்ததால், வார்த்தைகள் கொடுமையாக இல்லாமல் கடுமையானதாக கோர்த்துக்கொண்டேன்.

காலையில் எழுந்து, மாடியில் இருந்து கீழே இறங்கி வரும்போதே, பணிப்பெண் இன்னமும் மூக்கைச் சிந்திக்கொண்டிருந்தாள். நேற்றிலிருந்து, உருப்படியாக எந்த வேலையையும் செய்யாமல், அழுதமேனிதான். மாமி உணவுவேண்டாம் என்றாராம், அதனால், உணவு கொடுக்கவில்லையாம்...! காயப்போடப்பட்டிருந்த அரிசி வடம் மாலையும் இரவும் சந்திக்கின்ற வேளையில் நான் வேலைமுடிந்து வீட்டிற்கு வந்தபிறகும் வாசலில் காய்ந்துகொண்டிருந்தது..! மிஷினில் போடப்பட்டிருந்த துணிமணிகள் உலரவைக்கப்படவில்லை...! கடுமையான வெயிலில் வாடிப்போயிருந்த என் செல்லங்களுக்கும் நீர் பாயிச்சவில்லை..! குப்பைகள் வீசப்படாமல் இருந்த்து...!! ஓயாமல் போனிலேயே தொங்கிக்கொண்டிருந்தாள். தொலைப்பேசி மணி ஒலித்தவண்ணமாக..!!

யார்? என்ன பிரச்சனை? என்று விசாரிப்பது அநாகரீகமாகப் பட்டதால், அதை ஒரு பொருட்டாகக் கருதாமல், நான் வழக்கம்போல் என் வேலைகளை ஆரம்பித்தேன். வேலை முடிந்துவந்து வீட்டுவேலைகளைச் செய்வதைப் பார்த்த அவள், ஓடேடி வந்து, அதையும் இதையும் எடுத்தாள். ஒரு புன்னகையை மட்டும் வீசிவிட்டு வேலைகளைத் தொடர்ந்தேன். அவளே ஆரம்பித்தாள். என் தங்கையும் இங்கே மலேசியாவிற்கு வேலைக்கு வந்துள்ளாள். (இதைப்பற்றி ஏற்கனவே என்னிடம் பகிந்துள்ளாள்), ஒரே மாதத்தில் பல இடங்களில் இரண்டு நாள், மூன்று நாள் என வேலை செய்துவிட்டு எஜெண்டுகளிடம் ஓடிப்போய்விடுவாள். வேலை கஷ்டம், பிடிக்கவில்லை, தொலைப்பேசியைப் பிடுங்கிக்கொள்கிறார்கள், விடாமல் வேலைவாங்குகிறார்கள்.. என்கிற சாக்குப்போக்குகளைச் சொல்லி.. எப்பொழுதும் எஜெண்டுகளிடம் ஓடிவிடும் அவள், இந்த முறை தனியாளாக எங்கேயோ ஓடிவிட்டாளாம். ஒரு பருவப்பெண் யாருமே அறிமுகமில்லாத ஊரில், எங்கே போய் என்ன செய்வாளோ..! யாராவது எதாவது செய்துவிடுவார்களோ..! என்கிற அச்சம் அக்காகாரியான இவளுக்கு இருப்பது நியாம்தான். இருப்பினும் அதற்கு நாம் என்ன செய்யமுடியும்..! வேலை என்று வந்துவிட்டால், சில தியாகங்கள் செய்து, வேலையை நன்கு கற்றுக்கொள்ளும்வரை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். இப்படி அவள் படும் அவஸ்தைகளை ஒரு கதையாகச் சொல்லிக்கொண்டு, நம் வீட்டு வேலைகளைச் செய்யாமல் சோர்ந்து சோம்பிக்கிடந்தால்.. கோபம் வராதா என்ன..!!

அழுத்திய மற்றொரு நிகழ்வு. வேலைக்காரிக்கு சம்பளம் கொடுக்கவேண்டும். இன்று என்ன தேதி? ஆறு. சம்பளம் நமக்குக்கிடைக்கும் நாள், முதல்தேதி. என் வீட்டு வேலைக்காரிக்கு சம்பளம் இருபத்திரண்டாம் தேதியே போட்டுவிடவேண்டும். அவள் அந்தத் தேதியில்தான் போடச்சொல்வாள். அவளின் அப்பா, அந்த நாளில் வெளியே டவுனுக்கு ஒருவேலையாகச் செல்வானாம், அதே நேரத்தில் இந்தப் பணத்தையும் பேங்கில் இருந்து எடுத்துக்கொள்வானாம்..

இந்த வேலைக்காரி ஒரு ஒப்பந்த அடிப்படையில் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டாள். எப்படியென்றால், மாமியை வீட்டில் வைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள், வேலைக்காரிக்குக் கொடுக்கப்படுகின்ற சம்பளம் இதர செலவுகள் அனைத்தும் மகன்கள் மூவரும் பங்கிட்டுத்தான் கொடுக்கவேண்டும். இதுதான் ஒப்பந்தம்.

ஒரு பங்கு எங்களுடையது. மற்றப்பங்குகளானது மற்ற இருவருடையது. மற்ற இருவரில் ஒருவரிடம் கேட்கவே வேண்டாம், சரியான நேரத்தில் வங்கியில் நுழைந்துவிடும் பணம். மற்ற ஒருவரிடம், மாதாமாதம் பேங்க் அக்கவுண்ட் நம்பரை எஸ்.எம்,எஸ் அனுப்பவேண்டும், போடுங்கள்/போட்டுவிட்டீர்களா? என கேட்கவேண்டும்.. என் கணவர் சொல்கிறார், விடு வேண்டாம், நாமே பார்த்துக்கொள்வோம்.. உனக்கு வெட்கமாக இல்லையா? ஓயாமல் அவர்களை நினைவுறுத்திக்கொண்டிருக்கிறாய், என்று. என்னால் முடியாது, அவர்களைச் சும்மா விடமுடியாது. எந்த ஒரு பொறுப்புகளையும் ஏற்காமல், பணத்தையும் சரியான நேரத்தில் வழங்காமல் இருக்கும் அவர்களை எப்படி விடுவது சும்மா.! மரியாதை கெட்ட ஜென்மங்கள். இன்று அழைத்து, மனதில் உள்ளவைகளை ஓட்டியே தீர்வேன்.. என்று உறுதியெடுத்துக்கொண்டிருந்தேன். மனதில் இவர்களைத் தாறுமாறாகத்திட்டுவதற்கும் சொற்கள் அடுக்கிக்கொண்டிருந்தேன்.

வேலையிடத்தில் ஒரு பிரச்சனை. இங்கே பணிபுரியும் ஒருவளுக்கும் எனக்கும் ஓயாமல் சண்டை. இந்தச் சண்டையில், அவளும் நானும் சேர்ந்து செய்கிற நேர்முக தேர்வு வேலைகளுக்கு முறையான ஒத்துழைப்பு நல்கமாட்டேன் என்கிறாள். அவள் கொடுக்கும் தகவல்களின் மூலமாகத்தான், எந்தெந்த டிப்பார்மெண்ட் மனேஜர்களுக்கு மெயில் அனுப்புவது, மீட்டிங் அறையை புக் செய்வது, எத்தனை மனேஜர்கள் கலந்துகொள்வார்கள், பாரங்களை நகல் எடுக்கவேண்டுமா.., எத்தனை மணிக்கு நேர்முகத் தேர்வு ஆரம்பம் போன்ற பொறுப்புகளில் நான் கவனம் செலுத்தமுடியும். இந்த சிக்கல்கள் வேறு என்னைக் குடைந்துகொண்டிருந்தது.  விவரம் கேட்டால், தொலைப்பேசியை துண்டிக்கின்றாள். எங்களின் அதிகாரிக்கு தகவல் சொன்னால், ஏற்கனவே எனக்கு நிறைய பிரச்சனைகள், தயவு செய்து என்னைத் தொல்லை செய்யாதே, நீங்கள் இருவரும் முதிர்நிலை ஊழியர்கள், படித்தவர்கள், அனுபவசாலிகள் உட்கார்ந்துப் பேசி முடிவெடுங்கள், என்கிறார். இனி பேச்சுக்கு இடமில்லை. அவளை உண்டு இல்லையென்று செய்கிறேன் பார் என கங்கணம் கட்டிக்கொண்டு, அதற்கும் தோதான வார்த்தைகளைக் கோர்த்துக்கொண்டிருந்தேன்.. இதற்கும் முடிவு கட்டவேண்டும். இதெல்லாம் மனதை பாரமாக்குகின்ற குப்பைகள்.

இப்படியே எண்ண அலைகள் மனதில் மோதிக்கொண்டிருந்தது.

வேலைக்கு வந்தாச்சு, மதிய உணவு வேளையும் வந்தாச்சு. வேலை கொஞ்சம் அதிகமிருந்ததால் திட்டமிட்ட எண்ணங்களைச் செயல்படுத்த இயலாமல் அவை உள்ளேயே தணலாக இருந்தது. அதை எரியூட்ட வந்தது ஒரு ஊதுகுழல்.

சக ஊழியர் ஒருவள் அழைத்தாள். `அக்கா கண்டீனுக்குச் சாப்பிட வறீங்களா? எனக்குத்துணையில்லை இன்று, தனியாளாக கண்டீன் போகக் கடுப்பாக இருக்கிறது.’ என்றாள். சரி வா, என்று இருவரும் சாப்பிடச்சென்றோம். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அங்கே புதிதாக வேலைக்கு வந்திருந்த சகபணியாளர் ஒருவர், நானும் சாப்பாடு எடுத்துக்கொண்டு, இங்கே வந்து உட்காரப்போறேன், காத்திருங்கள், என்று சொல்லி வரிசையில் உணவு எடுக்க நின்றுக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன், `இதோ வருதுபாருங்க.. மேனாமினுக்கி, பேஸ்புக்’கில் எல்லாமே ஆம்பள கூட்டலிகள். நாம போய் பேசினா கூட பேசமாட்டா. எப்பப்பார்த்தாலும் அழகழகா படம் பிடிச்சி போட்டுக்குவா.. நான் குளிக்கப்போறேன், நான் சாப்பிடப்போறேன், என் காதலன் வெலண்டையின் பரிசு ரோஜா கொடுத்தான், என ஓயாமல் எதையாவது போடுவாள். கமெண்டும் லைக்கும் வலுவா மாஸுக் பண்ணும். வேலைவெட்டியே இருக்காது போலிருக்கு.. இதே வேலையா இருப்பா பேஸ்புக்’கில். இப்பகூட பாருங்க, பக்கத்தில் வந்து உட்காருவா, எனக்கு மயக்கமே வரும்.. விதவிதமான பெர்ஃப்யூம் எல்லாம் போடுக்குவா. அய்யோ அப்பா. கிட்ட நிற்கவே முடியாது.’ 

வந்தது பாருங்க எனக்கு எரிச்சல், தணல் பற்றிக்கொண்டது.... 

`நீ இருக்கிற குண்டிற்கு உனக்கு பாய்ப்ரெண்ட் இல்லை, அவள் அழகி அவளுக்கு பாய்ப்ரெண்ட் இருக்கு. ரோஸ் கொடுக்கறானோ அதை அவள் பேஸ்புக்கில் போடறாளோ அது அவளின் விருப்பம். இதைப்பற்றி நீ ஏன் பின்னால் பேசுகிறாய்.? உங்க டிப்பார்மெண்டில்தானே வேலை செய்கிறாள், நேராகவே சொல்லவேண்டியதுதானே..! அவள் மேனாமினுக்கி என்கிறாயே, உன்னால் முடியுமா? முகத்தைக்கூட சரியாகக் கழுவாமல் தூங்குமூஞ்சியைத் தூக்கிக்கொண்டு வேலைக்கு வருகிறாயே, மேக் ஆஃப் போடுவதென்றால் உனக்கு அவ்வளவு இளக்காரமா? அவள் வேலைக்கு வரும் நிலையைப்பார்த்தால், ஒவ்வொருநாளும் அவளின் தூய்மை, அழகு, உடை உடுத்துதல், சிகை பராமறிப்பு போன்றவற்றிக்கு அவள் எடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்தது ஒன்று அல்லது இரண்டுமணிநேரமாவது ஆகலாம். காலையில் இப்படிவேலைக்கு வர அவள் அதிகாலை எத்தனை மணிக்கு எழவேண்டும் தெரியுமா..! அது ஒரு கலை.. தமக்கான வாழ்வை ரசித்து வாழ்கிறாள். அது ஒண்ணும் தப்பு இல்லையே.!

பேஸ்புக்’கில் அப்படி ஆகனும்னா நீயும் நிறைய பிரெண்ட்ஸ் வைச்சுக்கோ. அவளுக்கு வேலை இல்லையென்றால், அவள் என்ன செய்கிறாள் என்று சதா நோட்டம் பார்க்கிறாயே, உனக்கு வேறுவேலை இல்லையென்றுதானே அர்த்தம்.! வேலை இருந்து அதை நீ நல்வழியில் அமல்படுத்துகிறாய் என்றால், நீ ஏன் இந்த வேவு தொழில் செய்யப்போகிறாய்.!!  அழகா உடுத்துவது தப்பு இல்லை, பேஸ்புக்’கில் சாப்பிடுகிறேன், குளிக்கிறேன், பாய்ப்ப்ரெண்ட் இதை வாங்கித்தந்தான், அதை வாங்கித்தந்தான் என்று போடுவதும் தப்பில்லை.. இப்படி ஒழுக்கமில்லாமல் யாரையாவது குறைசொல்லித்திரிவதுதான் கேடுகெட்ட செயல். திருந்துங்கடி.. இனி என்னை சாப்பிட அழைக்காதே.. என்று சொல்லி விருட்டென்று இடத்தைக் காலி செய்தேன்.

சேகரித்து வைத்த வார்த்தைகள் எல்லாமும் – காணாமல் போனது.