வெள்ளி, ஏப்ரல் 13, 2012

இறக்கி வைத்தேன்

நேரம் ஆக ஆக ஒரு வித பதற்றத்துடன் என் பொழுது நகர்ந்துகொண்டிருந்தது.  பொழுதுவிடிந்தால் நான் வசிக்கும் இடத்திலிருந்து நானூறு கிலோமீட்டர் அப்பாலில் உள்ள ஒரு இடத்திற்கு பயணம் செல்லவேண்டும். அதை நினைக்கும்போதே உடலும் மனமும் மிகவும் சோர்வாகவே இருந்தது.

நான் பணிபுரியும் கம்பனியின் நூறு ஆண்டு சாதனைக் கொண்டாட்ட விழா அங்கே வெகு விமர்சையாக நடைபெறவிருப்பதால் ஒவ்வொரு பணியாளர்களும் விசுவாச உணர்வோடு அதில் பங்குகொள்ளவேண்டும் என்கிற கட்டாயத்தின் பேரில் எல்லோரும் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.

முடிந்தவரையில் இதுபோன்ற நிகழ்வுகளை கொஞ்ச காலமாக தவிர்த்து வருகிறேன்.தவிர்ப்பதற்குக் காரணம், பெரும்பாலான வேளைகளில் வாகனமும் சாலையும், போக்குவரத்து நெரிசலுமாக அலைந்து அலைந்து பிரயாணமென்றால் பீதியைக்கிளப்புகிறது.

சொற்ப நேர பிரயாணமென்றால் பரவாயில்லை, இது குறைந்தது ஐந்து அல்லது ஆறு மணிநேரப் பிரயாணமாகும். அதுவும் சரியான சாலையமைப்பு இல்லாத காட்டுப்பாதையில் குறைந்தது ஒரு மணிநேரம் பிரயாணமாம். பஸ் பரதநாட்டியம் ஆடும் அந்த சாலையில் என ஆடிக்காட்டினான் என் சக ஊழியன்.

காலை ஒன்பது மணிக்கு பஸ் புறப்படும் என்று ஒலிப்பெருக்கியில் நான் தான் அறிவிப்பு செய்தேன். ஒன்பது என்றால் பத்து ஆகும் என்பது ஒருபக்கமிருந்தாலும், பஸ் புறப்பட்டுப் போய் சேர, மதியம் இரண்டாகும் என்கிறார்கள். சேர்ந்தவுடன் அங்கே எங்களுக்கென்றே தயாரித்து வைத்திருக்கின்ற மதிய உணவை எடுக்கவேண்டும். (உணவு என்ன லட்சணமாக இருக்குமோ என்பதை நினைத்தால், இப்போதே வயிற்றைப் பிரட்டுகிறது.)

அதன்பிறகு ஒரு சொற்பொழிவில் கலந்துகொள்ளவேண்டுமாம். அநாதைக்குழந்தைகளின் அவல நிலை, அவர்களைப் பராமறிக்கும் இல்லம் பற்றிய தகவல்கள், குழந்தை வளர்ப்பு, ஏன் குழந்தைகள் அநாதைகளாக் கப்படுகிறார்கள் போன்ற சிந்தனைத்தொகுப்பு.. தேநீர் விருந்தோடு. (எனக்கு இப்பவே கண்ணைக்கட்டுகிறது). கம்பனி பொதுச்சேவையில் ஈடுபட்டுள்ளது என்பதை இது போன்ற நிகழ்வுகளில் பறைச்சாற்றிக்கொள்கிறது. இந்த நிகழ்வின் படங்கள் பத்திரிகைகளிலும் பரவலாக வரும், பணமும் கொடுப்பார்கள், நல்ல சேவைதான்.

செக் இன், ஹோட்டல் ரூம்மிற்கு. பெரிய கூட்டமாக இருப்பதால் அறையின் சாவி கிடைப்பதற்கு எப்படியும் மணி ஐந்து ஆகும். பிறகு அவரவர் அறைகளுக்குச்சென்று, குளித்து அலங்காரமெல்லாம் செய்துகொண்டு மாலை ஆறு மணிக்கெல்லாம் ballroom  ற்கு வந்துவிடவேண்டும். தாமதமானால், லக்கி ட்ரோ டிக்கட் கிழித்து போடப்படும் பெட்டியை மூடிவிடுவார்கள், இதனாலேயே சகஊழியர்கள் அடிபுடி என்று ஓடுவார்கள்.

விருந்து இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்து விடுவார்கள். உணவு, சீன ரக உணவு. வேலை அனுபவத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக இந்த ரக உணவைத்தின்னுத்தின்னு சலிப்பு வந்து விட்டது. அதுவும் ஒரு மேஜையில் பத்து பேர் அமரவேண்டும். அந்த பத்து பேரில் ஐவர் நன்கு சாப்பிடுகிறவர்கள் நம்மோடு அமர்ந்துவிட்டால், அவ்வளவுதான், மற்றவருக்கு உணவு கிடைக்காது. அதுவும் என்னைப்போன்றவர்கள், உணவு மிச்சம் இருந்தாலேயொழிய உணவில் கை வைப்பதில்லை. கரண்டியையும் முள்ளையும் டக்கு டொக்கு என்கிற சத்தத்துடன் உணவை உண்பார்கள்.. ஒரே டென்ஷனா இருக்கும்.

இடையிடையே அதிஷ்டக்குலுக்கலும் நடைபெறும். எல்லோருக்கும் விழும், நமக்கு மட்டும் விழாது. ஒரே ஒரு ஆண்டு, ஒரு ரேடியோ கிடைத்தது. அதோடு ஒன்றுமில்லை. வாய் பிளந்து கையில் வைத்திருக்கும் அழைப்பு அட்டையை உர்ரென்று பார்த்துக்கொண்டு, பரபரப்பாக நம் எண்கள் வருமா வருமா என காத்திருந்து பழகிப்போச்சு என்றே சொல்லலாம். பொறுமையைச் சோதிக்கும் அதிஷ்ட எண்கள் சொல்லும் பாணி வேறு படபடப்பை ஏற்படுத்தும்.

ஒருவகையாக டின்னரும் முடியும். பிறகு பார்ட்டி டைம்.. டிஸ்கோ ஆடுவார்கள், ஸ்லோ டான்ஸ் ஆடுவார்கள், நமக்கு அதில் ஆர்வமில்லைதான் இருந்தபோதிலும், நம்மோடு தங்கியிருக்கும் ரூம்மெட் கள் ஆடுவார்களே..!! அவர்களுக்காக சும்மானாலும் உட்கார்ந்துக்கொண்டு, நிகழ்வு களைகட்ட கைகளைத்தட்டிக்கொண்டு இருக்கவேண்டும்.

நீண்ட நேர பஸ் பிரயாணம், சாப்பிட்டும் சாப்பிடாத நிலை, இரவு பன்னிரெண்டு மணி வரை தூங்காமல், கராமுரா என இரைச்சலான மேல்நாட்டு இசையில், கண்களைப்பறிக்கும் வர்ண விளக்குகள், மினுக் மினுக்கென்று மின்னும் லேசர் ஒளிகள் என படும் அவஸ்தைகள் ஒருவருடம் தாங்கும்.

அதன் பிறகு அறைக்கு வந்து, யாரோ படுத்துப்புறண்ட படுக்கையில் தலை வைக்கக்கூட ஒவ்வாமல் கொண்டு வந்த துண்டை போர்த்திக்கொண்டு படுத்துத் தூங்கவேண்டும்.

காலை ஏழு மணிக்கு பசியாறை. கொஞ்சம் தாமதமானால், வாட்டிய ரொட்டிதான் கிடைக்கும். (அனுபவம்) அதற்கும் தாடாபுடா என ஓடவேண்டும். சாப்பிடுவார்கள் சாப்பிடுவார்கள் உணவையே இதுவரையில் பார்த்திராதது போல் சாப்பிடுவார்கள். புஃவ்வே தான், இருப்பினும் மிக விரைவாக உணவுகள் அனைத்தும் தீர்ந்துபோகும். ஒரு பெரிய பட்டாளமே திரண்டிருந்தால் எப்படி சமாளிப்பார்கள்!? கஷ்டம்தான்.

காலை உணவு முடிந்தவுடன் திடலுக்குச் செல்லவேண்டும், டெலிமேட்ச்.. அங்கே காலில் பலூன் கட்டி வெடிக்கச் சொல்வார்கள், பந்து எடுத்துக் கொண்டு ஓடி மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டும், சாக்கிற்குள் நுழைந்துக்கொண்டு ஓடவேண்டும், காகிதத்தை மடித்து சிறிது சிறிதாக்கி, அதில் நிற்கவேண்டும், பாட்னரை தூக்கிக்கொண்டு... கலகலப்பு மூட்டுகிறார்களாம்..

மதிய உணவு வேளையும் வரும். மதிய உணவிற்குப் பிறகு படகு சவாரியாம்.! இது எனக்குப் பெரிய தலைவலி. பாதிவழியிலே கடலில் வாந்தி எடுத்துள்ளேன். மதிய உணவு எல்லாம் வந்தி வழியாக மீன்களுக்கு இரையாகக் கொடுப்பேன். கொடுமை படுத்துவார்கள். ஒதுங்கி நின்றால் எங்களின் அதிகாரிகள் வந்து வந்து பேசுவார்கள். அவர்களிடம் பேசுவதைவிட பேசாமல் இந்த கொடுமைகளை அனுபவித்து விடலாம்.!

ஓய்ந்து களைத்து, மீண்டும் ரூம்மிற்குள் பிரவேசம். அக்கம் பக்கம் கடற்கரையோறமாக இருப்பதால், மீனவர்கள் விற்கும் மீன் கருவாடு நெத்திலி (கிடைக்காத பொருள் போல்) வாங்குவதற்கு நடந்தே ஷாப்பிங் செல்லலாம் என்கிற அனுமதி கிடைக்கும். உடனே புறப்படுவாள்கள். நானும் அடிவாங்கிய நாய்போல், தலையத் தொங்கப் போட்டுக்கொண்டு பின்னாடியே சுற்றுவேன். கால்கள் பிண்ணும் இருப்பினும் காட்டிக்கொள்வதில்லை.  அவர்கள் சளைக்காமல் சுற்றுகிறார்கள், எனக்கு மட்டும் ஏன் இந்த கொடுமையோ..!

மீண்டும் இரவு உணவு. உறக்கம். மறுநாள் காலையில் ஒரு ஒன்றுகூடல் நிகழ்வும் உண்டு, நிகழ்வுகள் எப்படியிருந்தது என்கிற உணர்வுப் பரிமாற்றம். ஆஹா ஓஹோ என எல்லோரும் கூற நானும் ஒத்தூதுவேன். அவை முடிந்தபிறகுதான் பஸ் புறப்படும். வீடு வந்து சேர, ஞாயிறு இரவு ஆறு அல்லது ஏழு ஆகும். மறுநாள் வேலை..!!

இதனால், இந்த வருட அன்னுவல் டின்னருக்குச் செல்லவேண்டாமென்று முடிவெடுத்து விட்டேன். அதற்கான காரணம், மாமியார் கீழே விழுந்து மண்டையில் பலத்த அடி. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

இப்போதுதான் எஸ்.எம்.எஸ் அனுப்பினேன் அதன் ஏற்பாட்டுக்குழு தலைவருக்கு. பதிலும் வந்தது ``ok.take care'' என்று.
ஒரு பாரத்தை இறக்கிவைத்ததைப்போன்ற தெளிவு மனதில்.

பி.கு : மாமி உண்மையிலே கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டார். மண்டையில் அடி. ரத்தம் வழிகிறதாம். அழைப்பு வந்தது, மூத்தார் வீட்டில் இருந்து.