வியாழன், ஏப்ரல் 26, 2012

இயந்திர வாழ்வின் ஆரம்பம்

இப்போதெல்லாம் நான் தினமும் காலையிலே, எனக்குத் தெரிந்தவர் ஒருவரின் மகளை ஏற்றிக்கொண்டுதான் வேலைக்கு வந்துக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக.! அவள் பள்ளி விடுமுறையில் பக்கத்துக் கம்பனியில் வேலைக்குச் சேர்ந்துள்ளாள். பதினேழு வயது பெண் தான். பள்ளி மாணவிபோல், அமைதியாகவே இருப்பாள். சிரிப்பதுகூட தவணை முறையில்தான். யோசித்து சிரிப்பாள். அவளை அழைத்துக்கொண்டு வருவதில் எனக்குச் சில சிக்கல்கள் இருப்பினும், அவர்களுக்கு வேறு வழியில்லை. நானும் உதவுகிறேன்.

உங்கள் ஏரியா உள்ளே நுழைய முடியவில்லை, வாகன நெரிசல், வெளியே எப்படியாவது வந்துவிடு, என்றேன். அவளும் இப்போது வெளியே ரோட்டோரமாகத்தான் நிற்கிறாள். மேட்டில் ரோடு என்றால், கீழே சாலையோறமாக அவளின் அம்மாவும், நான் வரும் வரை அங்கேயே காத்திருப்பார். இதுவரையில் அவள் தாமதமா வந்ததேயில்லை. நான் எவ்வளவு விரைவாகச் சென்றாலும், அவள் அங்கே அந்த பேருந்து நிலையத்தில் காத்திருப்பாள். 

வெளியே நிற்கச்சொல்லியும், அவளுக்கு நான் கொடுக்கும் கெடுபிடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. உதவுதல் என்றால் சும்மாவா! என் வசதிக்கேற்ப, இங்கே நிற்கவேண்டாம், காரை இந்த இடத்தில் நிறுத்த முடியாது, அதனால் அங்கே நில், என்றேன். அவளும் மறு நாள் அதே போல். அங்கே நின்றாள். அங்கே நிற்கும்போது, பின்னால் வரும் வாகனங்கள் பொறுமையை இழந்து ஹாரன் செய்யும் போது, எனக்கு தர்மசங்கடமாக இருந்ததால், இங்கே வேண்டாம், கொஞ்சம் தள்ளி அந்தப்பக்கம் நில் என்றேன், அவளும் அதுபோலவே.. இருப்பினும் என்க்கு அங்கு நிறுத்தி அவளை ஏற்றுவதும் கடினமாகவே இருந்தது. காரணம் அந்த சாலை ஒரு ஹைவே. கார்களின் வேகம் பற்றிச்  சொல்லவே வேண்டாம்.! அங்கும் நினைத்த நேரத்தில் இஷ்டம்போல் கார்களை நிறுத்தவே முடியாது . பின்னாலிலிருந்து அடித்துப்போட்டு விட்டுச்செல்லுகிற வாய்ப்பு உண்டு. அது ஆபத்து.

ஒரு பெட்ரோல் ஸ்டேஷன் இருக்கும், அதற்கு முன்னால் ஒரு நீளமான மேம்பாலம் இருக்கும், அங்கே நிறுத்தலாம் ஏற்றலாம். காரணம் அந்தப்பக்கம் ஒரு பள்ளி இருப்பதால், வரும் கார்களின் வாகனம் கொஞ்சம் மெதுவாகவே இருக்கும், அதனால் அங்கு பயமில்லை. அங்கே நிற்கமுடியுமா? என்றேன். அமைதியானாள், காரணம் அவர்களின் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் வரவேண்டும். நடந்து வரவேண்டுமென்றால் நேரமெடுக்கும், கண்டிப்பாக காரிலோ மோட்டாரிலோ தான் கொண்டுவந்து விடவேண்டும். பெற்றவர்கள் தான் செய்யவேண்டும். கடமையல்லவா! என்ன செய்வது, எல்லோருக்கும் தான் பிரச்சனை. ஒன்றும் பேசவில்லை அவரின் அம்மா, சரி செய்கிறேன் என்றார்.

மழையோ வெய்யிலோ.. அவர்கள் அங்கே இருப்பார்கள் இல்லையேல் நான் கிளம்பி விடுவேன். இப்படியே போராடி போராடி ஒரு மாதகாலமும் ஓடிவிட்டது.

இந்த ஒரு மாத காலத்தில், அவள் பண்ணிய ஒரே ஒரு கூத்து என்னெவென்றால்.. !! அன்று ஒரு நாள், வேலை முடிந்து, நான் வெளியே காத்திருந்தேன். முன்பெல்லாம் வேலை முடிந்தவுடன்,  தோழியைப் பார்க்கச்செல்வேன், மார்க்கெட் செல்வேன், நானும் தோழியும், அன்னா கடை ரொட்டி சானாய்’யும் ப்ரூ காப்பியும் குடிக்கச்செல்வோம், அந்த ஏரியா பக்கம், வியாழன் அன்று போடப்படும் இரவு சந்தைக்கு, இங்கே வேலை செய்யும்  தோழிகளோடு உலா செல்வேன். அங்கே விற்கப்படும் அப்பம்பாலிக் ரொம்ப ஸ்பெஷல். எங்குமே அந்த சுவை  கிடைக்காது. மேலும் அங்கே செய்கிற அப்பம்பாலிக் வெறும் கச்சான் மட்டும் போடப்பட்டு செய்யப்படுகிற அப்பம்பாலிக்காக  இருக்காது, அவை பலவித சுவைகளில் கிடைக்கும். வேறு எங்குமே அம்மாதிரியான அப்பம் பாலிக் நான் பார்த்ததில்லை. வாழப்பழ அப்பம்பாலிக், டுரியான் அப்பம்பாலிக், பலா அப்பம்பாலிக், சோள அப்பம்பாலிக், சாக்லெட் அப்பம் பலிக், ரொட்டிதூள் அப்பம்பாலிக் ச்சீஸ் அப்பம்பாலிக் என வித விதமாகக் கிடைக்கும். அதை வாங்குவதற்கென்றே செல்வோம்.

இந்த பெண்னை, நான் ஏற்றிச்செல்கிற கடமை வந்ததிலிருந்து, இந்த வேலையெல்லாம் இல்லாமல், வேலை முடிந்தவுடன் வீட்டிற்குக் கிளம்பி விடுவேன்.  (சோகமாக). அவளையும் அழைத்துக்கொண்டு சுற்றச்  செல்லலாம் தான், பாவம் அவளின் அம்மா, ரோட்டோறமாக எவ்வளவு நேரம்தான் காத்திருப்பார்.!? இப்போது வேண்டாம், கொஞ்ச நாள் ஆகட்டும் என, எனது சுற்றும் வேலைகளையெல்லாம் ஒத்திப்போட்டேன்.

வேலை முடிந்து விட்டது, நான் வெளியே காத்திருக்கிறேன். மணி  ஐந்தரை  ஆகி, ஆறாகிவிட்டது, போன் செய்கிறேன் வாயிஸ் மெசிஜ் போகிறது. அவங்க அம்மாவிற்கு அழைத்துச்சொன்னேன், அவரும் இதே பதில் தான், அழைப்பு போகவில்லை என. சரி கிளம்பிம்புவோம் என கிளம்பினேன் மனசு வரவில்லை. காத்திருந்தேன்.

மெதுவாக வந்தாள், எனக்கோ.. பயங்கர கோபம். ``ஏன் இவ்வளவு நேரம், எனக்கு என்ன, வேறு வேலை வெட்டி இல்லியா!? போன் அடிச்சாலும் கிடக்கல, என்ன விவரம்னு சொல்லிட்டா நானும் கொஞ்ச நேரம் ஆபிஸிலே உட்கார்ந்திருப்பேன்ல.. கொஞ்சம் கூட பொறுப்பேயில்லாமல், நான் என்ன நீங்க வைச்ச டிரைவரா, இஷ்டத்திற்கு ஆட்டிக்கிட்டு வறீங்க ஆ!?’’  கொஞ்சம் கடுமையாகவே திட்டி விட்டேன்.

மிகுந்த களைப்புடன்  சோர்வாக தென்பட்டாள்,  அமைதியாக பதில் வந்தது, `` சாரி அண்டி, திடீரென்று ஒரு வேலை, ஜாப் ஷிட் தயார் செய்யச் சொல்லி கடைசி நேரத்தில் பாஸ் கொண்டுவந்து கொடுத்தார். அவ்வேலையில் எனக்கு எப்போதும் துணையாக இருக்கும் சீனியர் வீட்டிற்குக் கிளம்பிட்டாங்க, அதனால நான் ஒண்டியா அந்த ஜாப் ஷிட் செய்யனும், முதல் முறையா தனியா அதை செய்வதால் கொஞ்சம் தடுமாற்றமா இருந்தது,  பிழை வேறு வந்துவிட்டது, பாஸ்  பக்கத்திலே இருந்தார், திட்டினார், ஒரு மாதமா செய்யற, இன்னும் நீ பிழை செய்வாயா’ன்னு. பதற்றத்தில் லேட் ஆயிடுச்சு. ஹேன்போன் பேட்டரி வீக், பாஸ் வேறு கோபமா இருந்ததால, ஆபிஸ் போன் பயன் படுத்த பயமா இருந்தது.. அதான்..”  என்றாள் தாழ்ந்த குரலில்.

யாரோ என் கன்னத்தில் பளாரென்று அரைந்தாட்போல இருந்தது. வெட்கம் என்னைப் பிடுங்கித்தின்றது. ச்ச்சே பாவம்...,  புதிதாக வேலைக்குச் சேர்ந்துக் கொள்பவர்கள்,  இது போன்ற சங்கடமெல்லாம் சந்தித்துத்தானே ஆகனும். அதுவும் இவள் வேலை அனுபவமே இல்லாத பள்ளி மாணவி, வெளி உலகமே தெரியாமல் வளர்ந்த பிள்ளை. இவளின் தாயும் ஒரு கிணற்றுத்தவளை, தந்தையும் படிப்பறிவு இல்லாதவர். நிலைமை புரியாமல் நான் தான் கொஞ்சம் சத்தம் போட்டுவிட்டேனோ!?  மனசு கிடந்து அடித்துக் கொண்டது. இருப்பினும் ஈகோவை விட்டுக்கொடுக்காமல்.. ``ம்ம்,சரி சரி பரவாயில்லை, இனி எதாவதென்றால் சொல்லிவிடு, நான் என் ஆபிஸிலே, கணினியில் எதையாவது நோண்டிக்கொண்டு நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பேனே.. இப்படி சும்மா காரில் உட்கார்ந்திருப்பதை விட..’’ என்று பதிலுக்குச் சொல்லிவிட்டு, மன்னிப்பு கூட கேட்காமல், காரை செலுத்தினேன். ஆனாலும் மனதிற்குள் லேசான வலி.

இருவரும் அமைதியாக சென்றோம். கொஞ்சம் தாமதமாகச் சென்றால் சாலை நெரிசலில் மாட்டிக்கொள்வது என்பது இங்கே வழக்கமானதுதான். அன்றும் சாலை நெரிசல்.  மழைவேறு, எப்படி இவளை மழையில் ரோட்டோறம் இறக்கிவிடுவது!? திட்டிவிட்டதால் குற்றவுணர்வில் வேறு குறுகுறுத்துக் கொண்டிருந்தேன்.

`சரி இன்னிக்கு அண்டி, வீட்டிலே கொண்டு இறக்கிவிடுகிறேன், அம்மாவை வரவேண்டாமென்று சொல்..’’ என்றேன். பதிலே இல்லை..  ஓ, போனில் சார்ஜ் இல்லையென்றாளே, சரி என, எனது போனை எடுத்து அவள் பக்கம், அவளைப் பார்க்காமலே கொடுத்து,  ``இந்தா அம்மாவிடம் சொல்’’, என்றேன். அதை அவள் வாங்கவில்லை.. என்ன என்று பார்த்தால், அசதியில் அயர்ந்து தூக்கிக்கொண்டிருந்தாள், வெளியே மழைவேறு..!

நானே அவளின் அம்மாவிற்கு அழைத்து, நேரமாச்சு, மழை, நீங்கள் வரவேண்டாம், நானே கொண்டுவந்து வீட்டில் விடுகிறேன் என்று சொல்லி, அவளை வீட்டிலே கொண்டு விட்டு வந்தேன்.

அன்றிலிருந்து, தினமும் சரியான நேரத்தில் வந்துவிடுவாள். இப்போதெல்லாம் அவரின் அம்மா எனக்கும் மதிய உணவு, காலை பசியாற என தினமும் எதாவது. சில நேரம் வேண்டாம் என்றாலும் பெரும்பாலும் வாங்கிக்கொள்வேன். அறுசுவை உணவாக இருக்கும்.

இன்று காலையிலே ஒரு சம்பவம். வழக்கம்போல் அவளை ஏற்றுவதற்கு அந்த மேம்பாலத்தின் அருகே சென்றேன். நான் வருவதைக் கண்டவுடன், வேகமாக எழுந்து காருக்கருகில் வந்தாள். அவள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு மிக அருகில்தான் ஒரு அஃக்‌ஷிடண்ட் நடந்திருந்தது. இரண்டு மோட்டார்கள் மோதிக்கொண்டன. இருவர் சாலையில் கிடந்தனர். கார்கள் அதற்குள் அங்கே வரிசை கட்ட ஆரம்பித்து விட்டன. மோட்டாரில் செல்பவர்கள் கீழே இறங்கி உதவ முன்வந்துக்கொண்டிருந்தனர். ஒரு மோட்டாரில் ஒரு வயதானவர், இன்னொரு மோட்டாரில் ஒரு இளஞர் மற்றும் அவரின் மகள், பாலர் பள்ளிச் சீருடையுடன் நான்கு வயது பெண்குழந்தை. குழந்தை அழுதுக்கொண்டும். அவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டும், கீழே விழுந்த மூதியவரை ஒரு கையில் பிடிக்க முயன்றுக்கொண்டும், அதற்குள் ஆட்கள் வரவே, எல்லோரும் சேர்ந்து இருவருக்கும் உதவிக்கொண்டும் ஒரே பரபரப்பாக இருந்தது அவ்விடம்.

நான் அங்கே செல்வதற்கு சில வினாடிகள் தான் இச்சம்பவம் நடந்திருக்க வேண்டும். யாருக்கும் அடி அவ்வளவாக இல்லை. குழந்தைதான் பயத்தில் தனது அப்பாவை இறுக்கிப்பிடித்து அழுதுக்கொண்டிருந்தது.

காருக்குள் வந்து அமர்ந்த இவளிடம், ``எப்படி நடந்தது இந்த விபத்து?’’ என்றேன். ``எங்கே..எங்கே??” என்று தேடினாள். ``அடக் கடவுளே!, தோ, நீ உட்கார்ந்திருந்த இடத்திற்கு மிக அருகில் தானே நடந்தது இச்சம்பவம்,  நீ பார்க்கவில்லையா?” என்றேன்.

`` இல்லையே,  நீங்கள் வரும் திசை நோக்கியே என் சிந்தனை..” என்றாள். தொடர்ந்து..``ஐயோ பிள்ளை ஏன் அழறது, ரொம்ப அடியா இருக்குமோ?”  என்று கேட்டுக்கொண்டே, திரும்பி அச்சம்பவத்தை ஆச்சிரியத்துடன் பார்த்துக்கொண்டே வந்தாள்.

என்னன்னு சொல்வதுங்க..!!? மனிதன், இயந்திர வாழ்விற்குள் நுழைகின்ற ஆரம்ப காலகட்டம் எதுவென்பதை, ஆராய்ச்சி செய்யாமலேயே புரிந்து போனது எனக்கு.!!!!!