செவ்வாய், செப்டம்பர் 27, 2016

கள்ளி

நான் உன் வீட்டில்
நெருப்பு இல்லாத அடுப்பில் பால் பொங்குகிறது
அம்மன் போல் ஒரு பெண்
கள்வன் நீ நல்லவன்.

செரிமானம்

 
மூன்று தக்காளி, இரண்டு முள்ளங்கி, மூன்று உருளைக்கிழங்கு, அரை கிலோ ஆட்டிறைச்சி...
`ஏம்மா, எல்லாத்தையும் கொஞ்ச கொஞ்சமாக வாங்குறீங்க.?’ தலைக்குமேல் உயர்ந்த மகன் தன் தாயிடம் கேட்டுக்கொண்டே, தாய் தேர்ந்தெடுத்த காய்கறிகளை கூடையில் போட்டு தூக்கிக்கொண்டான்.
`மாசம் முடியுற வரைக்கும் காசு வேணுமே.. இருக்கிற நூறு ரிங்கிட்’ஐ செலவு செஞ்சுட்டா, அப்புறம் நாளைக்கு என்ன செய்யுறதா.!?’ .
`பேங்க்’ல இல்லியா..?’
`எடுக்கற சம்பளம், திங்கறதிக்கே பத்தல. இப்ப சாமான் விக்கிற வெலைய பாத்த இல்லெ,.. இதுல, பேங்க்’ல வேறு காசு இருக்குமா.!?’ தாய் சொல்லிக்கொண்டே, எதையோ மறந்து விட்டதாக, மீண்டும் காய்கறி அடுக்கியிருக்கின்ற பகுதிக்குள் நுழைகிறாள்.
`எங்கேம்மா..?’
`இரு இரு, இஞ்சி ரெண்டு துண்டு எடுத்திட்டு வரேன். நீ போய் வரிசையில் நில்லு..’
நெரிசலான அந்த பேரங்காடியில் பணம் செலுத்துகிற கவுண்டர் எல்லாம் நீண்ட வரிசையினைப் பிடித்து நின்றது.
மகன் கூடையினை வைத்துக்கொண்டு வரிசையில் நின்றான்.
வரிசையில் அவர்களுக்கு முன் நின்ற மலாய்க்கார பெண்மணியின் ட்ரொலியில் அடுக்கியிருந்த சாமான்களைப் பார்த்தால், அது ட்ரொலிக்கு மேலேயே நின்றது. மேலும் சில சாமான்கள் விலைப்பட்டியல் இடாமல் பிளாஸ்டிக் பைக்குள் மட்டும் போடப்பட்டிருந்தது. விலைப்பட்டியல் இல்லாததால், கவுண்டரில் உள்ள பெண்மணிக்கு ஸ்கேன் செய்வதற்குக் கடினமாக இருந்தது. எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். விலைப்பட்டியல் இல்லாத பொருட்களை மீண்டும் எடுத்துச்சென்று நிறுவையில் வைத்து விலையினை ஒட்டவேண்டும். தவறு அவளுடையதுதான், முதலிலேயே அதைச்செய்துவிட்டு கவுண்டருக்கு வரவேண்டும். இப்போது பாதி ஸ்கேன் செய்யப்படுகிறது மீதியை எடுத்துக்கொண்டுபோய் விலைப்பட்டியல் இட்டு மீண்டும் எடுத்துவரவேண்டும்.
எல்லோருக்கும் அவசரம், வரிசையில் அதிகம் பேர் காத்திருக்கின்றார்கள். தன்னுடையதை முதலில் கணக்குப் பண்ணி அனுப்பிவிட்டால் தேவலாம் என்கிற மாதிரி சலிப்புடன் நின்றார்கள் சிலர். ஒரு சீனர், `Apa pasal lambat ni.? Cepat lah sikit..’ என்று ஒரு கோகோ கோலா’வை கையில் ஏந்திக்கொண்டு முகத்தை உர்ர் என்று வைத்திருந்தார்.
`Tolong tunggu ye, biar yang ini habis dulu. கவுண்டர் பெண்மணி பவ்யமாக பதிலுரைத்தார்.
நாங்களும் விரைவாகச் செல்லவேண்டும், கொஞ்சம் முடித்துக்கொடுத்தால், தேவலாம்.. என்பதைப்போல் மகனுடன் நின்ற அந்தத்தாயும் வேண்டுகோள் விடுத்தாள்.
`ஏம்மா அவசரம். முடியட்டும் போலாம்.’ என்றார் மகன்.
`சமைக்கணும், வந்திருவாங்க..’ என்றாள் தாய்.
அவர்களின் பின்னால் இருந்த நம்மவர் ஒருவர், `ஏன் இந்த வரிசை நகரவேயில்லை.. ? Orang dah ramai, bukak lah counter sebelah. Leceh tunggu lama.. என்றார் சத்தமாக.
தடுமாறினாள் கவுண்டரில் உள்ள பெண். உதவிக்கும் சிலர் வந்தார்கள். அவள் வேலைக்குப்புதியவள் போலும். பதற்றமாகவே இருந்தாள். அனுபவசாலி ஊழியர்கள் அப்பெண்மணிக்கு சில வழிகாட்டிகளை சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த சிலர் இன்னும் கூடுதல் எரிச்சல் அடைந்தார்கள்.
ஒருவகையாக முன்னே இருந்த பெண்மணி நகர்ந்தாள்.
தாய் மகன் முன்னே, நின்ற சீனரும் டாப் டுப் படார் தடார் என்று பொருளை வைத்துவிட்டு பணம் செலுத்திக் கிள்ம்பினான்.
மகன் கூடையில் இருந்த பொருட்களை வைக்க, தாய் தன்னிடமுள்ள நூறு ரிங்கிட்’ஐ அப்பெண்ணிடம் கொடுத்தாள்.
பொருட்களின் விலை, ரிம17..00 தான். மீதம் ரிம83.00 கொடுக்கவேண்டும், ஆனால் அவள் என்ன பதற்றத்தில் இருந்தாளோ தெரியவில்லை, ரிம133.00 ஆக திருப்பித்தந்தாள்.
பணம் அதிகமாக திருப்பித்தருகிறாள், என்பதைத் தாய் உணர்ந்துகொண்ட போதிலும், வாங்கிய பணத்தை விரைவாக தமது பர்ஸுக்குள் திணித்தாள்.
மகன் பார்க்கவில்லை என்று நினைத்தாள் போலும். ஆனால், காருக்குள் ஏறிய மகன் கேட்ட முதல் கேள்வி,
`யம்மா, பணம் கணக்குத்தெரியாமல் அதிகமா கொடுத்திட்டா போலிருக்கு,’ என்றான் .. தாயிற்கு தூக்கிவாரிப்போட்டது.
`ஆ..ஆ..ஒ..ஓ..அப்படியா. கவனிக்கலையே, இரு பார்க்கிறேன்.’ என்று பாவனை செய்துவிட்டு, அட, ஆமா.. கூட கொடுத்திட்டா..’ என்றாள் தடுமாறியபடி.
`சரி, இந்தா பில், விளக்கிச்சொல்லி அவளிடம் பணத்தைத் திருப்பிக்கொடுத்திடு,’ என்று காரில் இருந்தபடியே மகனை அனுப்பிவைத்தாள், மனதிற்குள் `எல்லா கருமம் பிடிச்ச குணமும் என்னோடு ஒழியட்டும்..’ என்றபடி...

சட்டமும் திட்டமும்

அலுவலகத்தில்..

மின்சார பயன்பாட்டைக் குறைக்க
மின் கட்டனத்தைச் சேமிக்க
ஆரோக்கியத்தைக் கூட்ட...
மின்தூக்கி இனி வேண்டாம்
படியேறுருங்கள், படியேறுங்கள்

ஒருவருக்கு முட்டிவலி, முடியாது
ஒருவருக்கு ஆரோக்கிய குறைபாடு, முடியாது
ஒருவருக்கு ஆஸ்துமா, முடியாது
ஒருவருக்கு கால்வலி, முடியாது
ஒருவர் அடுத்த ஆண்டு ரிடையர், வயோதிகம், முடியாது
ஒருவர் செம’குண்டு, முடியாது
ஒருவர் இப்போதுதான் குழந்தை பெற்றார், முடியாது
ஒருவர் அறுவைசிகிச்சை முடித்தவர், முடியாது...
ஒருவருக்கு சுயநலம்
ஒருவருக்கு சோம்பல்
ஒருவருக்கு Don't care

திட்டம் தீட்டியவனும்
சட்டம் போட்டவனும்
மூச்சுவாங்க..
தினமும். !!!

மனம் கொடுக்கும் சிக்கல்


உண்ணா நோன்பு ஆயுளைக்கூட்டும், என்கிற வாசகம் தத்துவமாக வந்து, குட் மார்னிங் என்று சிமிட்டியது வட்சாப்பில். (எதாவது தத்துவம் அனுப்பி, good morning, good evening, good afternoon & good night என்று சொல்கிறவர்களின் வட்சாப்களை நான் சட்டை செய்வதே இல்லை. இன்று எதோ பயனுள்ளது சொல்லப்பட்டதுபோல் தென்பட்டது அதனால்தான் வாசித்தேன்.) அதை வாசித்துமுடிக்கின்ற போதுதான் நினைவுக்கு வந்தது நான் இன்னமும் பசியாறாமல் இருக்கின்றேன் என்று. உடனே வயிற்றில் கரமுர சத்தம் வரத்துவங்கியது. பசி ஆரம்பித்தது, வாங்கி வத்திருக்கின்ற பிஸ்கெட்ஸ்’கள் வா வா என்றன. உடனே காப்பி கலக்கி பசியாறினேன்.
எதுவாக இருந்தாலும் அதைப்பற்றிய நினைவுகளின்போதுதான் ஞாபகங்கள் இடைமறித்து அதையொட்டிய சிந்தனைகளை நமக்குத் தூண்டிவிடும். இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம்..

இப்போ யாராவது மாங்காயை நம்முன் கடித்து சாப்பிட்டால், நமக்கு நாவில் எச்சியில் சுரந்து தொண்டைக்குள் இறங்கும். அந்த இரசாயண மாற்றம் ஏற்படுத்துகிற தொடர்பு பார்த்தீர்களா. நமக்கு அப்போது அந்த மாங்காயைச் சாப்பிடவேண்டும் என்கிற எண்ணம் துளிகூட வராது ஆனால் எச்சியில் மட்டும் பாட்டுக்கு சுரந்துகொண்டே இருக்கும்.
சாப்பாட்டுவேளையில், நாம் மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றபோது, ஒருவர் அவசரமாக நம்மிடம் பேச்சுக்கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அந்நேரம் பார்த்து நாம் வாயில் உணவினை வைத்து மென்றுக்கொண்டே அவரிடம் பேசுகிறோம், அப்போது அவரைக் கூர்ந்து கவனித்தோம் என்றால், அவரை அறியாமலேலே அவருக்கு எச்சில் ஊறும் அதை அவர் சாமர்த்தியமாக மறைக்கப் பார்ப்பார், ஆனாலும் அதை நாம் மிக சுலபமாக கண்டுபிடித்து விடலாம். `சாப்பிடுங்க.’ என்போம். அவர் `சாப்பிட்டுத்தான் வரேன்’ என்பார். அதுவே சாப்பிடாமல் வந்தவர் என்றால், வாயில் உமிழ்நீர் சுரந்து உதட்டின் வழியாக கீழே வழிகிற நிலைமைகூட வரும். இத்தனைக்கும் நாம் அப்பளம் வைத்து ஒன்னுமேயில்லாத பழைய சாம்பார்தான் சாப்பிட்டுக்கொண்டிருப்போம். அந்த ஆழ்மன இரசாயண மாற்றத்தைக் கவனியுங்கள்.

ஊருக்குச்சென்றிருந்தபோது, கடைதெருவிற்கு சாமான்கள் வாங்கச்சென்றேன். அங்கே எனக்கு முன் நின்றிருந்த பெண் குழந்தையின் தலையில், ஈரும் பேணும் அப்படியே புழுத்துக்கிடந்தது. `அதை ஏன் நீ பார்த்த.?’ என்று கேட்பவர்களுக்கு, நம்மைவிட குள்ளமாக யாராவது நம்முன் முதுகைக் காட்டிக்கொண்டு நின்றால், நாம் அவர்களின் தலையைத்தானே பார்ப்போம்.! அக்குழந்தையின் தலையில் பேண்கள் மொய்க்கிறன. இரட்டை இரட்டையாக தாம்பத்திய உறவில் ஈடுபட்டுக்கொண்டு குடும்பம் நடத்துகிறது அங்கே. ஒவ்வொரு முடியிலும் முத்துமுத்தாக பேண்களின் முட்டைகள், இன்னமும் குஞ்சுகள் பொரிக்காமல். குழந்தையின் விரல்கள் சதா தலையினைச் சொரிந்தவண்ணமாகவே இருந்தது. சொரிகிறபோது பொந்தில் இருந்து வெளியேறுகிற எறும்புகள் போல் பேண்களின் வரிசை. அதைக்கண்ணுற்ற நான், என்ன வாங்கவந்தேன் என்பதை மறந்து பேண்சீப்பு இருக்கா.? என்று வாய்தவறி கேட்டும்விட்டேன். மனம் பாய்ந்த இடத்தில் வாய்வார்த்தைகள் தானாக வந்துவிழுகிறது. அதுமட்டுமல்ல, அன்று முழுதும், என் கை என்னையறியாமலேயே தலையை சொரிந்துகொண்டே இருந்தது. இதுவும் ஆழ்மன இரசாயண தொடர்பு பிரச்சனையே.

கண்கள் சிவந்து கண்வலி வந்த ஒருவரிடம் நாம் கொஞ்சநேரம் பேசினால், நமது கண்களின் நீர் லேசாக சுரக்கும். கண்கள் கூசுவதுபோல் இருக்கும். உடனே கண்களைப்பார்த்து பேசமுடியாமல் அங்கும் இங்கும் பார்ப்போம்.
நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு வெடிகுண்டைத்தூக்கிப்போட்டார். அதாவது, நானும் அவரும் அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். லேசான நெஞ்சுவலி, அதனால் கைகள் நடுமுதுகு, தோள்பட்டை, பின்னங்கழுத்து என குத்தலான வலி. வலி கொஞ்சம் கொஞ்சமாக கூடி அதிகரிக்க ஆரம்பித்தது. எழுபது வயதைத்தொடுகிற அம்மாவிற்கு மாரடைப்பு பிரச்சனை எதெனும் இருந்தால் என்ன செய்வது என்று எல்லோரும் ஒட்டுமொத்தமாகச் சொன்னார்கள். ஆனால், மாரடைப்பு என்கிற அறிகுறி இப்படி இருக்காது, நான் மாமியின் மூலம் பார்த்துள்ளேன், மூச்சுத்திணறலோடு உடல் வேர்வையினைக் கக்கும், ஆக, இது நிச்சயம் மாரடைப்பாக இருக்காது என்கிற எனது யூகத்தை அவரிடன் பகிர்ந்தேன்.
அதற்கு நண்பர் சொன்னார், பெண்களின் நோய் தன்மை என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒருவருக்கு ஒருவித வெளிப்பாட்டுடன், வலியின் தன்மை கூடலாம் அல்லது குறையலாம். என் அம்மா, ஒரு பக்கம் கைவலிக்கிறது என்றார். தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு உட்காந்திருந்தார். வலி குறைவுதான் என்றார், ஆனால் டெஸ்ட் எடுத்து பார்த்தபோதுதான் தெரிந்தது, மூணு ப்ளாக் இதயத்தின் குழாயில். உடனே angiogram செய்தோம். இப்போது நன்றாக உள்ளார், என்றார் நண்பர்.

ஓ, இருக்கலாம், இருந்தபோதிலும் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று எல்லா பரிசோதனைகளையும் எடுத்தாகிவிட்டது, பிரச்சனை ஒன்றுமில்லை. இதயத்திலும் எந்த பிரச்சனையும் இல்லை. காய்ச்சல் அடிப்பதால் உடலில் வலி இருக்கும் அந்த வலிதான் சிலவேளைகளில் நமக்கு சிக்கல்போல் தோன்றும், என்று சொல்லி, இருந்தபோதிலும் cardiologist க்கு appointment கொடுத்துள்ளார்கள். என்றேன்.
கண்டிப்பாக பரிசோதனைக்குக் அழைத்துச்செல்லுங்கள், என்று சொல்லி ஒரு விஷயத்தைப் பகிர்ந்தார். அதுதான் வெடிகுண்டு.
நெஞ்சுவலியினைப் பற்றிப்பேசினால், நமது இதயத்தின் துடிப்பு அதிகரித்து நமக்கும் நெஞ்சுவலி லேசாக வருகிறமாதிரி இருக்கும் என்றார்.
ஆமாம் என்னால் அது உணரமுடிந்தது.! நெஞ்சுப்பகுதியை தடவி விட்டுக்கொண்டு கொஞ்சம் நீர் பருகினேன்.

கொட்டாவி விடுகிறவரைப்பார்த்தால், கொட்டாவி உடனே வரும். தும்மலும் தொற்றும். அதுபோல, நெஞ்சுவலி பற்றிப்பேசினாலே அது நமக்கும் வருவதைப்போல் இருக்கும்.

அதுமட்டுமல்ல, எந்த வியாதியாக இருந்தாலும், அதன் தன்மையைப்பற்றி நினைத்துக்கொண்டே இருந்தால் அது நம்மைத் தாக்கும்.