ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்

சகோதரி பிரியதர்ஷினி இராஜலிங்கம் அவர்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி. இருப்பினும் உங்களுக்கும் இவ்வேளையில்
ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். நன்றியும் கூட, இதையொட்டி என் சிந்தனையை மீண்டும் தூண்டியமைக்கு.

புனைவுகளில் ஆய்வு என்பது, ஏற்கனவே யாரோ ஒருவர் எழுதிய ஆய்வுக்களஞ்சியத்தைக்  கையில் வைத்துக்கொண்டு, அங்கேயும் இங்கேயும் கோடிட்டு, அக்கருத்தினை கோர்வையாக்கிக்கொண்டு, அதனை தமது படைப்புகளில் மிக லாவகமாகப் புகுத்திக்கொள்வதில் இல்லை ஆய்வு! அதற்குப்பெயர் படித்ததைப் பகிர்வது அல்லது தொகுப்பு. படைப்பின் இறுதியிலும் அப்படித்தான் போடுக்கொள்ளவும் வேண்டும், அதுவே முறை. காரணம், சம்பந்தப்பட்ட இவ்வாய்வுக் களஞ்சியதை, பலர் ஏற்கனவே படித்த்திருக்க நேர்ந்திருந்தால், புதிதாகப் பிறந்திருக்கும் இப்படைப்பாகப்பட்டதன் நிலை, ஆலையில் இட்ட கரும்புச் சக்கையின் நிலைதான். ஆக, ஆய்வு என்று, நான் அன்று குறிப்பிட்டது இப்படியல்ல; அது தேடலில் பிறப்பது. தேடுதல் எப்படியிருக்கவேண்டுமென்றால், கண்டதைப் படிக்கும் போது, அதிலிருக்கும் விஷயங்கள் நமக்குள் சில பொறிகளைத் தட்டிச்செல்லும், அப்போது நம் மனது விளைநிலமாகும், அதை எழுத எத்தனிக்கும்போது அது அற்புதப் படைப்பாக மாறுதல் பெற்று, நமது அசல் கருத்தாக நிலைநின்று, பின்பு அதுவே சொந்த ஆய்வாகவும் பரிணமிக்கின்றது. இதற்கு பன்மொழி வாசிப்புத்திறன் அவசியம், இது எளிதில் யாருக்கும் வந்துவிடாது. அதனால்தான், எழுத்தாளர் என்கிற அந்தஸ்த்து அவ்வளவு சுலபமல்ல என்கிற என் கருத்தில் நான் மிகவும் பிடிவாதமாக இருக்கின்றேன்.  

சரி, விடுங்கள் சகோதரி, எழுத்தாளர்களுக்கே இதெல்லாம் புரியாத போது, சாதரண வாசக்க்குழுவில் இருக்கும் நமக்கு தெரியாதிருப்பது ஒன்றும் பெரிய குறையல்லவே.

இன்னொரு விளக்கம் - படைப்புகள் இங்கே, இந்த இதழில் வந்துள்ளது, அங்கே, அந்த இதழில் வந்துள்ளது என்பதெல்லாம் சாதனையாக்க் கொள்ள முடியாது சகோதரி. தமிழில் எழுதுபவர்கள் உலகளவில் கணிசமாகக் குறைந்துக்கொண்டே வரும் இக்காலக்கட்ட்த்தில், சரியான முறையில் தமிழில் எழுதத் தெரிந்தாலே போதுமானது, வாய்ப்புகள் கதவைத்தட்டும். அது தமிழ்நாடாக இருந்தாலும் சரி, ஐய்ரோப்பிய நாடாக இருந்தாலும் சரி, தமிழ் ஆளுமை உள்ளவர்கள் எல்லா ஏடுகளிலும் பேர்போடுகிறார்கள். இங்குள்ள பல எழுத்தாளர்கள் உலகமுழுக்க உள்ள இணைய ஏடுகளை ஆக்கிரமித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பரந்த வாசிப்புப் பழக்கமுள்ளவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. உலகம் சுறுங்கிவிட்டது. வாய்ப்புகள் காலடியில்.     

அடுத்து சகோதரி பாக்கியம் அவர்களுக்கு;
சகோதரி, நீங்கள் ஒரு பிரபல எழுத்தாளர். உங்களின் பார்வை இப்படி அறைகுறையாகவும் குறுகிய வட்டத்தில் இருப்பதை நினைத்து நான் வேதனைப் படுகின்றேன். உங்களின் விவேகமற்ற, ஆவேசமான கருத்துகள் என்னை நிஜமாலுமே வியப்பில் ஆழ்த்தியது. நீங்கள் எழுதிய அந்த கண்டனக்கடித்தை வரிக்கு வரி கோடிக்காட்டி பதில் சொல்ல முடியும் என்னால். இருப்பினும், சில விவரங்களை மட்டும் சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

பத்திரிகையில் வந்த எனது நேர்காணலை, பல பெண் எழுத்தாளர்களின் நிர்பந்த்த்தால் படிக்கநேர்ந்த்தாகச் சொல்லியுள்ளீர்களே, அப்படியென்றால், பெண் படைப்பாளிகளின் பிரதிநிதியாகத்திகழும் உங்களுக்கு இயற்கையிலேயே வாசிப்பில் ஆர்வமேயில்லை.! வாசிக்கச்சொன்னால்தான் வாசிப்பீர்கள்! இல்லையென்றால் மற்றவர்களின் எழுத்து உங்களுக்கு ஒரு பொருட்டேயல்ல. அப்படித்தானே.!? இவர்கள் யார், ஒரு சாதாரண வாசகிகள், அப்படி என்ன எழுதிவிடப்போகிறார்கள், என்கிற அலட்சியப்போக்குதான், உங்களின் பரந்த வாசிப்பிற்குத் தடை போடுகிறதென்று நினைக்கின்றேன். இது உங்களின் பிரச்சனை மட்டுமல்ல, யாரெல்லாம் தம்மை ஒரு பிரபல இலக்கியவாதி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்களோ, அவர்களில் பெரும்பாலானோருக்கு இந்த வியாதி உண்டு. அவர்களுக்கு, அவர்களின் எழுத்தைத்தவிர மற்றவை எல்லாம் துச்சமே.!

சரி விஷயத்திற்கு வருகிறேன். நான் குறிப்பிட்ட ஒரு கருத்தினை `ஆண்களை எதிர்ப்பதுதான் பெண்ணியம் என்பதும் படு நகைச்சுவை. விவாகரத்து செய்துவிட்ட எல்லா பெண்களும் ஒன்று திரண்டு, இரவு பகல் பாராமல் பெண்ணியம் பேசுவதால், பெண்களின் வளர்ச்சி உச்சத்தை அடைந்துமென்று நினைப்பதும் அதைவிட நகைச்சுவை.. '  மீண்டும் எனக்கே எழுதிக்காட்டி, அக்கருத்தால் எனக்கு நகைச்சுவை என்று நான் சொன்னதைக்கூட சரியாகப்புரிந்துக்கொள்ளாமல், அவைகளை நான் ஆமோதிப்பதாக நினைத்துக்கொண்டு, அதை நீங்கள் வெட்டிப்பேசுவதைப்போல் வெட்டியாக உங்களின் கருத்தினை வைத்திருக்கின்றீர்களே.

நான் சொல்லவந்தது - பல பெண்கள், இக்கருத்தைத்தான் `பெண்ணியம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள், அதனால்தான் பல குடும்பங்களில் தந்தையை மதிக்காமல், அண்ணன் தம்பிகளை மதிக்காமல், கணவன் மார்களை மதிக்காமல் குடும்பம் குடும்பமாகவே இல்லாமல் சிதறிச் சின்னாப்பின்னமாகிக் கிடக்கிறது. அது தவறு. பெண்ணியம் என்பது இதற்கெல்லாம் அப்பாற்பட்ட்து. பெண் பெண்ணாகவே இருப்பதுதான் பெண்ணியம். போராட்ட குணமெல்லாம் பெண்ணியம் ஆகாது என்பதுதான் இக்காலச் சிந்தனைக்கு பொருந்தும்.

நீங்கள் குறிப்பிட்ட பெண்ணியம் என்கிற கருத்து, பெண்கள் அடிமைப்பட்டு வீட்டில் அடைக்கப்பட்ட காலகட்ட்த்தின் போது சொல்லப்பட்டது. பாரதியாரும், பாரதிதாசனும், பெரியாரும், ஓஷோவும் சொன்னவைகள்தான் அவை. இப்போ காலம் மாறிப்போச்சு, பெண்களின் வளர்ச்சியாகப்பட்டது இல்லறம் செழிக்க வழிவகுத்தல் என்பதுவே அவசியமாகிறது. இன்றைய பெண்ணியம் - பெண் என்பவள், குடும்பச் சூழலை, கணவனின் உதவியோடு, சகிப்புத்தன்மையுடன், அவனுக்குத் தோள்கொடுத்து குடும்பத்தை அழகிய ந்நதவனமாக மாற்றக்கூடிய ஆற்றலில்தான் அடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, பத்து திருமணங்களில் ஏழு திருமணங்கள் தோல்வியில் முடியுறுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. நிலைமை இப்படியே போனால் குடும்பங்கள் இருக்காது, குடும்பம் இல்லையென்றால் கலாச்சாரம் பாழ். கலாச்சாரம் பாழ் என்றால் நாட்டின் நிலவரம் நிலைக்குத்தும். ஆக பெண்கள் குடும்ப நலனுக்குக்காகப் பாடுபடுவதுவே இன்றைய பெண்ணியம்.

பெண்கள் நாட்டை ஆளுகிற இக்காலக்கட்டதில், பெண்ணியத்திற்கு நீங்கள் கொடுத்திருந்த கருத்து ஏற்புடையதன்று. இன்றைய சூழலில், எந்த பெண்ணும் படிப்பு வேண்டி, வேலை வேண்டி, உரிமை வேண்டி போர்கொடியெல்லாம் பிடிப்பதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. உலகமுழுக்க பல சட்டங்கள் பெண்களுக்கென்றே அமல்படுத்தப்பட்டு விட்டன. `கோட்டா சிஸ்டம் வழி எல்லா வாய்ப்புகளும் எல்லோருக்கும் சம்ம். பல பல்கலைக்கழகங்களில் பெரும்பாலும் பெண்களின் ராஜ்ஜியம்தான். இதற்கு அப்பாலும், வெறுமனே பெண்ணியம் பேசி போர்க்கொடி தூக்குவதென்பது பெண்களின் தன்னம்பிகையின்மையையே காட்டும்.. குடும்பத்தை முறையாக வழிவகுக்கத்தெரியாமல், எல்லாவற்றிற்கும் சட்டதிட்டங்கள் இருப்பதைக் கூட சரியாகப்புரிந்து வைத்துக்கொள்ளாமல், பெண்ணியம் என்கிற இந்த ஆயுதத்தைத் தவறாகப் பயன்படுத்துவது சரியல்லவே.  

இனிமேலாவது சுயமாக வாசித்துவிட்டு கருத்துதனை தெரிவியுங்கள். உங்களின் ஜால்ராக்களை வாசிக்கச்சொல்லி கருத்துகளை எழுதினால்
இப்படித்தான் மொட்டைத்தலைக்கும் முழங்காலும் முடிச்சுப்போட்ட விடயங்களை பொதுவில் வைக்கவேண்டிவரும். தலைசிறந்த எழுத்தாளர் முத்திரை உங்களின் கருத்துகளில் அருவியாய் பெருக்கெடுத்து ஓடுகிறது சகோதரி.

எனது நேர்க்காணல் என்பது, நானே வலியச் சென்று கேட்டுப்பெற்றதல்ல. அதுதானாகவே என்னைத் தேடி வந்த ஓர் அரிய வாய்ப்பு. அங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, எனது தனிப்பட்ட கருத்தினைத்தான் பொதுவில் வைத்தேனேயொழிய எந்த `பிரபல முத்திரை குத்தப்பட்ட எழுத்தாளரையும் சாடவில்லை. அது என் நோக்கமும் அல்ல. அதைப்பிடித்துக்கொண்டு ஆவேஷம் பொங்க, வாசகியான என்னை கீழ் நிலைக்கு இட்டுச்சென்றிருப்பது உங்களின் பக்குவமின்மையையே காட்டுகிறது. இலக்கியவாதிகளுக்கு ஆதங்கம் இருக்கலாம். ஆனால், ஒருபோதும் வயிற்றெரிச்சலும் காழ்ப்புணர்ச்சியும் கூடவே கூடாது.

உங்களுக்கு நன்றாக வருவது சிறுகதை மற்றும் தொடர்கதை, அதிலேயே கவனம் செலுத்துங்கள். விமர்சனம் பதிலடி போன்றவற்றிற்கு சுயசிந்தனை அவசியம். அது உணர்ச்சிவசப்படாமல் கையாளப்படவேண்டிய ஒரு களம். சமூதாய அக்கறை உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். வேடம் தரிப்பவர்கள் நுழைந்தால் முகத்திரை கிழிக்கப்படுவது திண்ணம்.

இறுதியாக என் கருத்துகள் அனைத்தும் குப்பை என்று நீங்கள் கூறியும், உங்களின் கருத்திற்கும் அதே தலைப்பை வைத்து, அதையும் பிரசுரித்து, பத்திரிகை தர்ம்ம் காக்கும் பத்திரிகை ஆசிரியர்களின் சேவை வாழ்க வளர்க. நன்றி சார். 


இன்றைய தினக்குரலில் பிரசுரமாகியிருக்கும் எனது ஆதங்க பதிலடி கடிதம். சென்ற வாரமே எதிர்ப்பார்த்தேன். இந்த வாரம்தான் வந்திருக்கு.  
நன்றி தினக்குரல்.