வியாழன், ஏப்ரல் 19, 2012

அலுத்துப்போச்சோ...

நாளை நேர்முகத் தேர்வு. தேர்விற்கு வரவிருக்கும் இருபது பேருக்கு இன்று மதியம்தான் நினைவுறுத்தல் அழைப்பு விடுத்து ஓய்ந்தது. தேர்வு காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை நடைபெறும்.

நிறைய பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள். அதில் கிட்டத்தட்ட ஐம்பது பேர்களைத் தேர்ந்தெடுத்து அழைப்பு விடுக்கச்சொன்னார்கள். அந்த ஐம்பது பேர்களில் பத்து பேர் தொலைப்பேசியை எடுக்கவில்லை. பத்து பேர், சில தவிர்க்க முடியா காரணங்களால் வரமுடியாது என்றார்கள். மறுபடியும் அழைத்து உறுதி படுத்துக்கொள்கிறோம் என்கிற கோரிக்கையோடு.
ஆக முப்பது பேர் வரமுடியும் என்கிற நிலையில் அன்று.!

இன்று, மறுபடியும் நினைவுறுத்தல் அழைப்பு விடுக்கும் போது, அதில் இருபது பேர்தான் தேறினார்கள். ஒருவர் வரத்தெரியாது என்றும், ஒருவர் மன்னிக்கவும் என்றும் ஒருவர் பிடிக்கவில்லை என்றும், சிலர் தொலைப்பேசி அழைப்பை எடுக்காமலும்....

இந்த இறுதிநேர, நேர்முகத்தேர்வின் உறுதிபாடு அவசியம், காரணம் சில முன்னேற்பாடுளை செய்யவேண்டும். அதிகமானோர் என்றால், இரண்டு அறைகள் தயார் செய்யவேண்டும். முறைப்படி நேர ஒதுக்கீடு, ஒரே நேரத்தில் எல்லோரும் வந்து விட்டால் அவர்கள் அமர்வதற்கு இடம், பூர்த்தி செய்யபடுகிற விண்ணப்ப பாரங்கள், அனுப்பியிருக்கின்ற ரிஷுமி’யை  வரிசைப்படி தயார் படுத்துதல், நகல் எடுத்தல் போன்ற வேலைகள் சரியாகச் செய்யப்படுவதற்கே இந்த இறுதி கட்ட தயார் நிலையும் நினவுறுத்தலும்.

மேலும் யாருடைய நேரத்தையும் வீனடிக்கின்ற உரிமை யாருக்கும் இல்லை என்பதால், இதுபோன்ற எச்சரிக்கைகளில் நிர்வாகம் முழுக்கவனம் செலுத்துகிறது.

இன்று காலையில் ஒருவருக்கு அழைதிருந்தேன். படு சுவாரஸ்யமான அழைப்பு இது. சென்ற வாரம் இவருக்கு அழைப்பு விடுத்தபொழுதே, வேண்டா வெறுப்பாகவே வெட்டி வெட்டிப்பேசி அழைப்பை அலட்சியம் செய்தார். கோபம் பொத்துக்கொண்டு வந்தது எனக்கு, `டேய் வர்றீயா, இல்லியா, அத மொதல்ல சொல்லு, கஸ்மாலம்’ என்று திட்டவேண்டும் போல் இருந்தது. இருப்பினும் இமெஜ் காக்க, வாயை மூடிக்கொண்டு..`யெஸ் சர், நோ ச்ர்’என்று முடித்துக்கொண்டேன். கம்பனி இமெஜ் முக்கியம், பிறகு மேலிடத்தில் எதாவது போட்டுக்கொடுத்தால், மேமோ வரும்.. ஏற்கனவே எனக்கு வந்திருக்கு. தனியறையில் வைத்து `ஆத்து ஆத்துன்னு’ ஆதிட்டானுங்க அறிவுரையை. போதுண்டா சாமி. இனி தேவையா என, அன்று முதல் மிக பவ்வியம் தான் எல்லோரிடமும்.

இன்று மீண்டும் அதே நபருக்கு அழைத்து, நாங்கள் அனுப்பிய மெயில் கிடைத்ததா? யெஸ்’ என்றார். இங்கே வருவதற்கு எதேனும் பிரச்சனை உள்ளதா? நோ’ என்றார். ``அப்படியென்றால் அந்த மெயிலில் குறிப்பிட்ட நேரப்படி சரியாக வந்து விடு, நன்றி.. என முடிக்கும் போது..`நில்லு, உன்னிடம் ஒரு கேள்வி’ என்றான். `யெஸ்’ என்றேன்.

யார் இண்டர்வியூ செய்வார்கள், நீ யா? என்றான். இல்லை, அந்த டிப்பார்ட்மெண்ட் நிர்வாகிகள் என்றேன். `எம்.டி ஆர் ஜீ.எம்?’ கேட்டான். `இருவரும் அல்ல, மூன்று மனேஜர்கள் இருப்பார்கள்’ என்றேன். `இரண்டாவது இண்டர்வி யூ இருக்குமா?’ என்றான். `உங்களைத் தேர்ந்தெடுத்தால், சம்பளம் அலவன்ஸ் போன்றவற்றைப் பேசுவதற்கு நிச்சயம் வரச் சொல்வார்கள் தானே!’ என்றேன். ஆரம்பித்து விட்டான்.. ``முதலில் மானேஜர்கள் இண்டர்வியூ எடுப்பார்கள், பிறகு இரண்டாவது இண்டர்வியூ இருக்கு வா’ன்னு, ஜீ.எம்’கள் எடுப்பார்கள். அதன் பின்னர் எம்.டி எடுப்பார் வா’ன்னு மூணாவது இண்டர்வியூ வரும்.. பிறகு எம்.டி’ க்கு பிடிக்கவில்லைன்னு சொல்லி ரிஜெக்ட் செய்வீர்கள், இது எனக்குத் தேவையா? முதல் இண்டர்வியூவிலேயே பெரிய சூப்பர் ஸ்டார் கணக்கா கேள்விகள் கேட்கிறார்களே, பிறகு எதற்கு இரண்டாவது மூன்றாவது இண்டர்வியூ? மூன்று பேரும் ஒன்றாக இண்டர்வியூ செய்யமுடியாதா? நாங்கள் என்ன வேலை வெட்டி இல்லாதவர்களா? அழைக்கும்போதெல்லாம் வருவதற்கு. !!? எவ்வளவு தூரம் அலையவேண்டும்!? பெட்ரொல் டோல் என எவ்வளவு செலவு? எங்களின் நேரம் வினடிக்கப்படுகிறது. சக்தி வீனடிக்கப்படுகிறது. இப்போ வேலை செய்யுமிடத்தில் லீவு கேட்பதும் கிடைப்பதும் பெரும் பாடாகிறது. இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தில் அல்லல்பட்டு வந்தால், ரிஜெக்ட் செய்கிறீர்கள் சர்வ சாதாணரமாக..தேவையா இது எங்களுக்கு!?’’ புலம்பினான். நான் என்ன செய்ய முடியும்.? என் கடன், ஆணைப்படி பணி செய்துக் கிடப்பதே. !

ஒரே கேள்விதான் அவனிடம், கொஞ்சம் அதட்டலாக. `` நீ வறியா இல்லையா?, வரவில்லையென்றால் நன்றி. வணக்கம்’’ அவ்வளவுதான்.

``யெஸ் மேடம், ஐ எம் கமிங்க்’’ என்று சொல்லி அழைப்பைத்துண்டித்தான், இறுதியாக...

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்

அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு
அதிர்ஷ்டம்
வரும் போகும்..

அதிர்ஷ்டம் பணமாக வந்தால்
பணமும் வந்தவழியே..

அதிர்ஷ்டம்
பொருளாகக் கிடைப்பதால்

எனக்கு இது கிடைத்தது?
உனக்கு என்ன கிடைத்தது?
இந்த பொருள் என்னிடம் உண்டு!
அந்த பொருளும் என்னிடம் உண்டு!
என்ன செய்வது?
எனக்கும் புரியவில்லை!?
யாரிடமாவது விற்கவேண்டும்
பணமாக்கவேண்டும்..
போன வருடம் கிடைத்ததே அப்படியே இருக்கு
இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய?
அவருக்கு என்ன கிடைத்ததாம்!
இவருக்கு என்ன கிடைத்திருக்குமோ!?
மாற்றிக்கொள்ள கேட்டால் கொடுப்பார்களா?
விலை ஒப்பீடு வந்தால், கூடுதல் பணம் கொடுக்கனுமே
நாமாக இருந்தாலும் சும்மா கொடுப்போமா?
பணம் வாங்காமல் விடமாட்டோமே!
சரி இருக்கட்டும்
உறவுகளில் யாருக்காவது
திருமணம் பிறந்தநாள் என்றால்
பரிசாக கொடுத்து விடலாம்

அதிர்ஷ்டம் கூட
குழப்பம்தான்

அதிர்ஷ்டம் ஒண்ணும்
இல்லாததைக் கொடுத்துவிட வில்லை

அதிர்ஷ்டம் கூட
வியாபார சிந்தனைதான்

அதிர்ஷ்டம் கூட
வெட்டி அரட்டைதான்...

இருப்பினும்
இன்னும் ஓய்ந்தபாடில்லை
அதிர்ஷ்ட சிந்தனை
எனக்கும் தான்..!!