செவ்வாய், மே 29, 2012

சலவை

நான் நினைப்பதெல்லாம்
நிகழ்கிறது
எனது சிந்தனையை
சலவை செய்யவேண்டும்

மனச்சிதைவு

காலையிலே ஒரு அழைப்பு. `` அம்மா, நான் வசிக்கும் ஹோஸ்டலில், திருட்டுப்பசங்க நுழைந்து விட்டார்கள்’’ என் மகள்தான்.

எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல.. ஒரே படப்படப்பு. வேலையில் கவனமே செலுத்த முடியாத நிலையில் நான்.

உடனே என் கணவருக்கு தொலைப்பேசி அழைப்பு விடுத்தேன். விஷயத்தைச் சொன்னேன்..

``ஆமாம், எனக்கும் மெசெஜ் வந்தது, சின்ன பிள்ளைகளா அவர்கள், சமாளிப்பார்கள் விடு. அதான்.. ஒண்ணும் ஆகல இல்லே,  இறைவனுக்கு நன்றி சொல்..!’’ என்றார்.

``என்ன கொஞ்சம் கூட அக்கறையில்லாமல்..!? எனக்கு அடி வயிற்றையே கலக்குகிறது..!’’

``சரி சரி, நானும் ஒரு முக்கிய விஷயமா ஓடிக்கிட்டு இருக்கேன், இரவு பேசிக்கலாம்..!’’

 ``என்ன முக்கியம், இதை விட?”
எனக்கு படு பயங்கரக் கோபம் வந்தது. காரணம், அவளுக்கு அழைத்தால், போனை கட் செய்து, மெசெஜ் மட்டும் அனுப்புகிறாள். `im n police staton,cl u ltr' இப்படி அவசர அவசரமாக முடிக்காமல் ஒரு மெசெஜ்..! அவளிடமும் பேச முடியாமல், இவரும் சரியாக பதில் கொடுக்காமல்..எப்படி இருக்கும் என் நிலைமை.!? அழுகையே வந்தது. நெஞ்சு கூட வலி எடுத்தது.

``எங்க மாமா மகன், இருபத்தேழு வயதுதான், மாரடைப்பில் மரணம், நான் இன்னிக்கு வேலைக்குக்கூட போகாமல், அங்கே போயிகிட்டு இருக்கேன். இரவு பேசிக்கலாம், அதான் ஒண்ணும் ஆகலையே, ஏன் வீணாய்..!! போனை வை..!”

எப்படிங்க இந்த ஆண்கள் மட்டும் இப்படி.!? எதையும் அலட்டிக்கொள்ளாமல், எந்த பந்த பாச உணர்வுகளுக்கும் இடந்தராமல், எந்த சிந்தனையும் இல்லாமல், விளைவுகளைப்பற்றி யோசிக்காமல்,  தற்போதைய நிகழ்வுகளில் நுழைந்து விடமுடிகிறது!? நடந்தது நடந்து போச்சு, இப்போ என்ன செய்யலாம் என்கிற சிந்தனை ஏன் பெண்களுக்கு மட்டும் வரவே மாட்டேங்கிறது.! மனது படும் பாடு, இதயமே இரண்டாய்ப் பிளப்பதைப்போன்ற உணர்வில் அல்லல்படும் குணம், பெண்களின் இயல்பா, அல்லது எனக்கு மட்டும் இப்படியா.!?

மகள் அழைத்தாள், இந்த வாரம் பரீட்சை ஓடிக்கொண்டிருப்பதால், நள்ளிரவு இரண்டு மணிவரை படித்துக்கொண்டிருந்தார்களாம். அவள் வாடகை எடுத்துத் தங்கியிருக்கும் வீடு , ஐந்து அறைகள் கொண்ட ஒரு பெரிய இரண்டு மாடி வீடு. ஐந்து அறையிலும் மருத்துவத்துறை மாணவிகள் தங்கி படிக்கின்றார்கள். எல்லோரும் நல்ல குடும்பத்துப் பெண் பிள்ளைகள். அழகான பெண் பிள்ளைகளும் கூட.

இரவு இரண்டு மணிவரை, குரூப் ஸ்டடி செய்து விட்டு தூங்கச் சென்றிருக்கின்றார்கள். காலை மணி ஏழுக்கு எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்புற கேட்’டும், முன்புற க்ரீலும் பூட்டு உடைக்கப்பட்டு யாரோ நுழைந்திருப்பதைப்போன்ற தடையங்கள் தென்பட்டிருக்கின்றது. பதறிய அவர்கள், என்னென்ன பொருட்கள் காணாமல் போயிருக்கின்றதென்கிற பதற்றத்துடன், லேப் டாப், கைப்பேசி, கைக்கடிகாரம், சாமி மேடையில் கழற்றி வைத்த தங்க மோதிரம் போன்றவைகள் இருக்கின்றதா என்கிற சந்தேகத்தில், அவை வைக்கப்பட்ட இடத்தில் சோதனை செய்கையில், அவைகள் அப்படியே வைத்த இடத்தில் பத்திரமாக இருந்தன..!

இவ்வளவுதான் செய்தி...

அதற்குப்பிறகு எனக்குள் வந்த விணாக்களும் சந்தேகங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.!

ஏன் எதையும் எடுக்காமல் வந்து போக வேண்டும்?
பெண்கள் இருக்கும் வீட்டிற்குள் நுழைவதற்கு என்ன காரணம்?
பெண் பிள்ளைகளைத் தொந்தரவு செய்வதற்காகவா?
மதுபானம் குடிப்பவர்களா?
போதைப்பொருள் உட்கொள்பவர்களா?
கற்பழிக்கவந்திருப்பார்களோ!?
எதையும் எடுக்கவில்லையே..!?
அடைக்கலம் நாடி வந்த திருட்டுப்பசங்களா!?
வீடு மாறி எதும்?
கடத்தல் வேலை எதும்..!
எதையாவது பதுக்கி வைத்திருப்பார்களோ..!
கொலைகாரர்களா!?

தூங்கிக்கொண்டிருக்கும் பெண் பிள்ளைகளின் அறைகளின் கதவுகளைத் தட்டியிருந்தால், தோழிகள் யாரோதான் தட்டுகிறார்கள் என்று நினைத்து அவர்கள் கதவுகளைத் திறந்திருப்பார்களே..!, வெளியே அறிமுகமில்லாத எவனோ ஒருவன்  நின்றிருந்தால்!? கரப்பான்பூச்சிகளுக்குக்கூட பயப்படும் பெண் பிள்ளைகளாச்சே! என்ன செய்வார்கள்!? வந்தவர்கள்  அவர்களை எதாவது செய்திருந்தால், என்ன ஆவறது நிலைமை? அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் மலாய்க்காரர்களாச்சே, நம்மவர்கள் என்றால்,  அங்குள்ளவர்களிடம் சொல்லிவைக்கலாமே..! இப்போ யாரிடம் பேசுவது!?
எவ்வளவு தூரத்தில் இருக்கின்றார்கள் தெரியுமா? காரில், வேகமாகச் சென்றாலே குறைந்தது ஐந்து அல்லது ஆறு மணி நேரமாகுமே, எனக்கு இப்போதே அங்கு செல்லவேண்டும் போல் இருந்ததே.!

பக்கத்துத் தாமானில் கொலை குத்து, சண்டைச் சச்சரவு என்றாலே, அவ்வளவு பெரிய பெண், பயத்தில், அம்மா அப்பாவை தள்ளிவிட்டு, நள்ளிரவில் அறைக்குள் நுழைந்து, நடுவில் படுத்துக்கொள்பவளாச்சே, எப்படி இப்படிப்பட்ட தருணத்தில்!?

என்னால் யோசிக்கவே முடியவில்லை..தலை சுற்றுகிறது.
இதையெல்லாம் அவரிடம் சொன்னால், சரி ஏன் நடக்காததையெல்லாம் பைத்தியம் போல்  யோசித்து குழம்பிக்கிட்டுச் சாகற., போகலாம், வார இறுதியில். சும்மா இரு.. வீட்டிற்கு வந்து பேசலாம், என்று, பேசி முடிப்பதற்குள் தொலைப்பேசியைத் துண்டித்து விடுகிறார்.

எனக்கு பசி இல்லை. எதிலும் நாட்டமில்லை, வயிற்றைப்பிரட்டுகிறது, வாந்தி வருகிறது. நெஞ்சு லேசாக வலிக்கிறது.

அல்லல் பிறவி.. வேண்டாம் இனி எனக்கு.!