வியாழன், ஏப்ரல் 05, 2012

தர்மம் தலை காக்கும்

நம்முடைய உதவி யாருக்காவது தேவைப்படுகிறது என்றால், நம்மிடம் அர்ப்பணிப்பு உணர்வு இருந்தாலேயொழிய இது சாத்தியப்படாது. கேட்பது பணமாகவோ, பொருளாகவோ, பசிக்கும் வேளையில் உணவாகவோ இருந்துவிட்டால், நம்மால் முடிந்ததை, மனமகிழ்ச்சியுடன் செய்யலாம். அதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் கேட்கின்ற உதவி வேறுவிதமாக இருந்து விட்டால், அந்த உதவியை நம்மால் நிச்சயமாக செய்ய முடியும் என்கிற சாத்தியங்களும் இருந்து விட்டால், தப்பிக்கின்ற முயற்சி என்பது, சம்பந்தப்பட்டவரின் மனதை நிச்சயம் இரணமாக்கும்.

``இதைச் செய்வதால் நீ என்ன குறைஞ்சா போவ!?’’ என்கிற கேள்விகளோடு கூப்பாடு போடுகிற சுற்றமும், `` இன்னிக்கு நீ செய்தால், நாளைக்கு அவர்களிடம் எதெனும் உதவி என்று வரும்போது, சுலபமாக கிடைக்கும், வாழ்க்கையே ஒருவருக்கு ஒருவர் உதவுவதில் தானே இருக்கு..’’ என்கிற நினவுறுத்தலுடன் சில சினேகங்கள்... நம்மைச் சுற்றி அறிவுரை மழையைப் பொழிந்துகொண்டு.

சரி, குறைந்தா போவாய் என்கிற வார்த்தையையாவது சகித்துக்கொள்ளலாம், ஆனால், நாம் செய்தால் பிறர் நமக்குத்திரும்பச் செய்வார்கள் என்பதில் உள்ள எதிர்ப்பார்ப்பு எவ்வளவு கேவலமானது.! உதவிகள் என்பது எதிர்ப்பார்த்தா செய்யப்படுவது? எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், மனதிருப்திடன் செய்யப்படுவதுதானே உதவி. எதிர்ப்பார்ப்பு இருந்து விட்டால், நான் எவ்வளவு செய்தேன்! பாரு இன்னிக்கு அவன் நல்லா இருக்கான், ஆனால் என்னைக்கண்டுக்கவே இல்லை, என்கிற ஏக்கம், குரூர சிந்தனைக்கு இட்டுச் செல்லும்தானே.!

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசும்போதெல்லாம், நாம் அவர்களுக்குச் செய்த உதவியை எதாவதொரு வழியில் சொல்லிக்காட்டி, ஞாபகப்படுத்த முயல்வோம்.  அதை அவர்கள் ஞாபகத்தில் வைத்திருக்க தவறிவிட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன், அவ்வளவுதான்.. நமக்கு என்ன மாதிரியான நன்றி கெட்ட செய்கைகளின் பாதகங்கள் நினைவுக்கு வருகிறதோ, அவற்றையெல்லாம் சாடைமாடையாகச் சொல்லி, அவர்களின் மனங்களை ரணமாக்குவோம். எங்கோ ஒரு மூளையில் யாருக்கோ நடந்த அல்லல் அசம்பாவிதங்களை இட்டுக்கட்டி, அதை இவர்களின் இதயத்தில் ஈட்டிபோல் பாய்ச்சிவோம். இதனாலேயே பேசிக்கொள்ளாமல் நிரந்தரமாக பிரிந்தவர்களும் உண்டு. நானும் அனுபவத்தில் பார்த்திருக்கின்றேன்.

உதவி என்று வரும் போது, முழுமனதுடன் செய்யவேண்டும் இல்லையேல் செய்யக்கூடாது, என்பதுவே எனது சித்தாந்தம்.

சரி, பிரச்சனைக்கு வருவோம்.

எனக்கு நன்கு அறிமுகமான அன்பர் ஒருவரின் மகளுக்கு, நான் வேலை செய்யும் கம்பனியின் அருகில் உள்ள கம்பனியில் வேலை கிடைத்துள்ளது. பெரிய விஷயம்தான், காரணம் எந்த ஒரு வேலை அனுபவமும் இல்லாமல், வெறும் பள்ளிச் சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டிருக்கும் அவளுக்கு, நல்ல சம்பளத்தில், இந்த சிறிய வயதில் (18), பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்திருப்பதென்பது சாதாரண விஷயமேயல்ல. அதிர்ஷ்டம்தான். மேலும் அவர்கள் கொஞ்சம் கஷ்டப்படும் குடும்பமும் கூட.

அந்த மகிழ்ச்சிகரமான செய்தியை முதன் முதலில் என்னோடுதான் பகிர்ந்து கொண்டார்கள். இந்தப் பகிர்தலுக்குப் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்றும் இருக்கவே செய்தது.

வேலை செய்யும் இடத்திற்கும் வீட்டிற்கும் பேருந்துப் போக்குவரத்து வசதியில் கொஞ்சம் சிக்கல் இருக்கின்றது. வேலை முடிந்து வீட்டிற்குச் செல்வதற்கும், வீட்டில் இருந்து வேலைக்கு வருவதற்கும் குறைந்தது இரண்டு பஸ்களை எடுக்கவேண்டியுள்ளது. இரண்டு பஸ்கள் எடுத்து, போக்குவரத்து சிக்கலில் மாட்டிக்கொண்டு, வேலைக்குச் சரியான நேரத்தில் வந்து சேர்வதற்கு, காலை ஆறு மணிக்கெல்லாம் வீட்டை விட்டுக்கிளம்பியாக வேண்டும். சொந்த வாகன வசதி இல்லாதவர்களுக்கு இந்த அலைச்சல் நரக வேதனைதான்.

ஆக, நிலைமை இப்படியிருக்கையில், என்னிடம் அவர்களின் எதிர்ப்பார்ப்பு என்னவாக இருக்குமென்பதையும் நான் ஓரளவு யூகித்துவிட்டேன். யூகித்தது வைத்ததைப்போலவே, அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பும் வந்தது.

மேலும் அந்த இடத்திலிருந்து, இங்கே வேலைக்கு வருவது நான் மட்டும்தான். நான் செல்லும் வழியில்தான் அவர்களின் வீடும் . பிறகு என்ன? கைப்புண்ணுக்கு கண்ணாடியா! அவர்களின் எதிர்ப்பார்ப்பு புரிந்த ஒன்றுதானே!.

``கார் ஓட்டிப்பழகி, லைசன்ஸ் எடுத்து, கார் வாங்கும் வரை, நீங்கள் கொஞ்சம் ஏற்றிக்கொண்டு செல்லமுடியுமா, என் மகளை.!?” தாயின் வேண்டுகோள் என்னிடம். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முடியாது, என்று சொல்லவும் முடியாது.
சரிங்க, நான் யோசித்துச் சொல்கிறேன், என்று சொல்லி தற்காலிகமாக விடுதலை வாங்கினாலும். தொடர் அழைப்பு, வேறு வழியில்லை அவர்களுக்கும்.. நிராகரிக்கமுடியாமல் நானும், சரி என்றேன்.

வேலை எட்டரைமணிக்கு, நான் தினமும் கிளம்பும் நேரமோ எட்டு மணிக்கு. இவளை ஏற்றிக்கொண்டு செல்லவேண்டும் என்பதால் இன்று ஏழு நாற்பத்தைந்திற்கே கிளம்பினேன். ஐந்து மையில்களுக்கு அப்பால் சென்ற பிறகு, பிரதான சாலையில் இருந்து, வேறொரு சிறிய சாலைக்குள் நுழைந்து, அவரிகளின் வீட்டிற்குச் சென்று, அவளை ஏற்றிக்கொண்டு, அடுத்த சுற்றில் வளைந்து, மீண்டும் அதே மெயிண்ட் சாலைக்கு வந்து பிறகு அலுவலகம் நோக்கிச்செல்லவேண்டும். காலை நேரம் கேட்கவாவேண்டும் சாலை நெரிசலை!?

நேற்று பேசிவைத்துக் கொண்டதைப்போல், அவர்களின் வீட்டு வரிசையில் முன்னே இருக்கும் ஒரு பஸ் ஸ்டாப்பில் அவள் நிற்கவேண்டும்;

நானும், விரைவாக சாலை நெரிசல்களையெல்லாம்  தாண்டிக்கொண்டு, ஆயிரத்தெட்டு சமிக்ஞை விளக்குகளையும் கடந்து,  அவசர அவசரமாக சென்றால், அவள் அங்கே காத்திருக்கவில்லை.! நேரமாவதால் படு டென்ஷன் ஆகிப்போனேன்.

வாகனத்தை அவளின் வீட்டிற்கே செலுத்தினேன். வீட்டின் முன் நிறுத்தி, பயங்கரமாக ஹாரன் செய்தேன் (என்னுடைய டென்ஷனின் வெளிப்பாடாக), ஒருவரும் வெளியே எட்டிப்பார்க்கவில்லை. உள்ளே சென்று கதவை படபட என தட்டினேன். யாரும் குரல்கொடுக்கவில்லை. கொஞ்ச நேரங்கழித்து, ஒரு பெண் கண்களைக் கசக்கிக்கொண்டு வெளியே எட்டிப்பார்த்தாள். பின்பு தலையை உள்ளே இழுத்துக்கொண்டாள். என் பொறுமையை அது சோதித்தது.

காரிலிருந்து இறங்கி மீண்டும் கதவைத்தட்டினேன், அவளேதான், ஜன்னலை மட்டும் திறந்து, என்ன? என்பதைப்போல் புருவங்களை உயர்த்தினாள். `எங்கே உன் தங்கை?’ கண்களை இரண்டுமுறை கசக்கி, சுயநினைவை வரவழைத்துக்கொண்டு, கொஞ்ச நேரம் என்னையே உற்று நோக்கிய பிறகு, பதில் சொன்னாள். `ஆங்..புதிய வேலைக்குப் போகிறாள் தங்கை, அம்மாவைவேறு ஆளையே காணோம், நான் நினைக்கிறேன் அம்மாவும் பஸ் ஸ்டாபிற்குக் கூடவே சென்றிருக்கணும் தங்கையை விட்டுவர ஆ ஆ ஆ.. (கொட்டாவி விட்டுக்கொண்டே).

காரில் ஏறி காரின் கதவை படார் என்று சாத்தினேன். கைப்பேசியை எடுத்தேன், ஒன்பது மிஸ்ட் கால். பதிலுக்கு நானும் அழைத்தேன், வாயிஸ் மெசெஜ் சென்றது. அநேகமாக இருவரும் சேர்ந்தாட்போல் அழைப்பதால், இந்த கோளாறு வரலாம் என்பதை யூகித்த நான் அழைப்பதை நிறுத்திவிட்டு, காரிலேயே அமர்ந்திருந்தேன். மணி காலை 8.20. அழைப்பு வந்தது.

எங்கே இருகீங்க?’ அவளின் அம்மா. `உங்க வீட்டின் முன்னாடி’ நான். `அய்யோ, நாங்க இங்கே நிற்கிறோம்’ அவளின் அம்மா. `நான், உங்களை எங்கே நிற்கச்சொன்னேன்?’ நான். `நாங்க அங்கேதான் நின்றோம், உங்களைக் காணோம், அதான் அந்த பஸ் ஸ்டாப்பில் இருந்து, இந்த பஸ் ஸ்டாப்பிற்கு வந்தோம்’... அவளின் அம்மா. `எந்த பஸ் ஸ்டாப்?’ நான். ‘மூணாவது சந்தில் நுழைத்து, நேராக வந்தால், அங்கே இன்னொரு பஸ் ஸ்டாப் இருக்கும், அங்கேதான்’.. சரி வரேன், என்று கிளம்பினேன். மணி 8.25.

இருவரும் அங்கே காத்திருந்தார்கள். என்னைப் பார்த்தவுடன் தாய் அசடு வழிந்தாள். மகள் தலையைக் குனிந்துக்கொண்டாள்.

வாகன நெரிசலில் மாட்டி, அலுவலகம் வந்து சேர மணி 8.45. இன்று தாமதம் தான்.  தாமதமென்றால், தாமதக் காரணம் சொல்லும் ஒரு பாரத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். அலுவலகத்தின் சட்டம்.

வேலை முடிந்தவுடன் மீண்டும் அவளை ஏற்றிக்கொண்டு, அவளின் வீட்டில் விட்டுத்தான் செல்லவேண்டும். அவர்கள் வீட்டிற்குச் செல்லும், அந்தச் சாலையின் நெரிசலை எப்படி சமாளிப்பதென்று காலையிலிருந்தே யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

இப்படி மன அழுத்தம் கொடுக்கின்ற விஷயங்களில், நம்மால் முயன்றும் மறுப்பு தெரிவிக்க இயலாமல் போகிற போது, உதவிகள் வெறும் சடங்காக நடைபெற்று, அது யாருக்கும் பயனளிக்காமல்தான் போகின்றன. முடியாது என்று முகத்தில் அறைந்தாட்போல் சொல்லிவிடலாம், இருப்பினும் எதோ ஒன்று தடுக்கிறதே..! 

உதவிகள் செய்யமுடியும் என்கிறபோது, அவைகள் நம் சுயநலம் பொருட்டு நிராகரிக்க முயலும்போது, நமது வாழ்வு ஒரு சோர்வு நிலையில் பயனற்றுத்தான் போகின்றது.

நம்முடைய உதவி யாருக்காவது தேவை என்றால், சகித்துக்கொண்டுதான் செய்யவேண்டுமா!? முடியாது என்று சொல்கிற அளவிற்கு நாம் கருணை இல்லாதவர்கள்.!?

தியாகமனப்பான்மை என்கிற போர்வையில், தர்மம் தலை காக்கும் என்கிற நம்பிக்கையில், வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கின்றது.  அல்லல்பட்டுக்கொண்டு..!

ஒரு விவாதத்தையொட்டி, வல்லின ஆசிரியர், தம்பி நவீன் எனக்குக்கொடுத்த பதிலடி

தமிழகத்து நாட்டாமைகள் – ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிக்கு பதில்

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி, ‘தமிழகத்து நாட்டாமைகளுக்கு இனி இங்கு ஆலமரம் இல்லை’ எனும் எனது கட்டுரைக்கு எதிர்வினை எழுதியிருந்தார். அவருக்கு என் பதில்.
வணக்கம் ஸ்ரீவிஜி . தங்கள் கருத்துக்கு நன்றி. முதலில் உங்கள் வாசிப்பு இவ்வளவு மேலோட்டமானதாக இருப்பதைக் கண்டு வருந்துகிறேன். இதை உங்கள் அரசியல் பார்வையோடும் ஒப்பிடலாம்தான். என்ன செய்வது பல காலம் எழுதும் எழுத்தாளர்களுக்கே அது வாய்க்காத போது உங்களுக்கு இல்லாதது ஆச்சரியமில்லை. உங்களுக்குத் தெளிவு படுத்த வேண்டியது என் கடமை.

‘கலைஞர்கள் உருவாகிறார்கள் உயிரைக்கொடுத்து… ஆனால் ரசிகனை உருவாக்க முடியுமா? ஆஸ்ட்ரோ இல்லாத காலத்திலே, உள்ளூர் கலை வளர்ந்ததா? எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, நம்பியார் போல் பேசிதானே மேடையில் கலகலப்பூட்டினார்கள்.! எஸ்டேட்களில் தமிழ் திரைப்படங்கள் தானே காட்டப்பட்டது!’
ஆமாம் நீங்கள் சொல்வது மெய்தான். ஆனால், அப்போது உள்ளூர் தயாரிப்புகளைப் போட களம் இல்லாமல் இருந்தது. அசலான மலேசிய வாழ்வைச் சொல்லும் படைப்புகள் வராமல் இருந்தன. இப்போதும் ஒன்றும் பெரிதாக வந்துவிடவில்லைதான். ஆனால் அதற்கான முயற்சிகள் நடக்கின்றன. பல்லாண்டு காலமாக திரைத்துரையில் புழங்குபவர்களே தமிழகத்தில் சொதப்பும் போது களம் இல்லாத நமது கலைஞர்களின் பலவீனம் ஆச்சரியமில்லை. இதை மாற்றியமைக்க தொடர்ச்சியான முயற்சிகள் வேண்டும். ஒரு கலைத்துறை எடுத்த எடுப்பிலேயே A விலிருந்து Nக்கு போவதில்லை. அது தொடர் நகர்ச்சி. ஒன்றின் தோள் மேல் மற்றொன்று ஏறியே அது வளரும். அந்தப் பரிணாமத்தில் விமர்சனங்கள், விவாதங்கள், எல்லாமுமே அதை வளர்ப்பதற்கான உரம்தான். இந்நிலையில் மலேசிய ஆக்கங்களை ஒளிபரப்புவதற்கான உருவாக்கப்பட்ட வானவில்லில் ஏன் தமிழக ஆக்கங்கள். மேலே நீங்கள் சொன்ன அம்சங்கள் மாறினால்தான் என்ன? இங்கு மற்றுமொரு விடயத்தை ஒட்டியும் விவாதிக்கலாம். ரசிகனை உருவாக்க முடியாது என்கிறீர்கள். முடியும் என்கிறேன் நான். வைரமுத்து, மேத்தாவை படித்த எத்தனையோ இளைஞர்களை நவீன கவிதை பக்கம் திருப்பியதுண்டு. சாண்டில்யனை மட்டுமே வாசித்தவர்கள் சாருவை வாசிப்பதுண்டு. எல்லாம் பயிற்சி. இசை கேட்பது. சினிமா பார்ப்பது. அவ்வாறு தீவிர தன்மையில் சென்ற பின்னர் அவன் மீண்டும் வணிக கலையை விரும்ப மாட்டான்.
‘தனிநபர் ரசனை என்பது, அரசியல் போலவா? இங்கே ஓட்டு போடு, அங்கே ஓட்டு போடு என்று விலாவரியாக விளக்கம் கொடுத்த பிறகு, சொல்கிறபடி புரிந்துக்கொண்டு ஓட்டு போட்டு விட்டு வருவதற்கு!?’
நீங்கள் பேசுவது கலை. நான் பேசுவது அரசியல். இதில் மலேசியத் தமிழர் பொருளாதார நிலை உள்ளது. இதன் மூலம் மலேசிய சினிமா துறை இன்னொரு தாவலை நிகழ்த்த முடியும். ஈரனிய சினிமா போலவும் லத்தின் அமெரிக்க சினிமா போலவும் நமது வாழ்வை இன்னும் ஆழமாக உலகமெங்கிலும் கொண்டு செல்ல முடியும். இதை ஒரு முழுநேர தொழிலாக வருங்கால சந்ததியினர் அமைத்துக்கொள்ள முடியும். இந்த அரசியல் மூலம் கலை வெளிப்பாடு சாத்தியம். இன்றைய போராட்டம் இன்றைக்கானதல்ல. வருங்கால சந்ததியனரின் வாய்ப்புகள் புதுப்பிக்கப்படும்.
‘கலைஞர்களின் ஆதங்கம் புரிகிறது, அதற்காக ரசனை உணர்வை, ஒரு ரசிகன் விட்டுக்கொடுக்க முடியுமா? மற்றவர்களைப்பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் என்னைப்பொருத்தவரை, தமிழ் நாட்டு இலக்கியங்களும் தமிழ் நாட்டு திரைப்படங்களுமே அதிகம் கவர்கிறது.’
தோழி, உங்களை யார் விட்டுக்கொடுக்கச் சொன்னது? நீங்கள் உங்கள் ரசனையை முழுமைப்படுத்த வேறு சேனல்களே இல்லையா? அல்லது, மலேசிய கலைஞர்களுக்காக ஒரு சேனல் தருவதால் உங்கள் ரசனைக்கு குறைச்சல் ஏற்படுகிறதா? இதில் முக்கியமான விசயம், உங்களை தமிழ் நாட்டு இலக்கியமும் திரைப்படமும் கவர்கிறது என்கிறீர்கள். அது உங்கள் கருத்துதான். உங்கள் ரசனைதான். இங்கு நான் சில கேள்விகள் கேட்கலாம். முதலில் தமிழக படைப்புகள்தான் கவர்கிறது என்றால் மலேசியப் படைப்புகளில் எத்தனை படித்தீர்கள்? எத்தனை நாவல்கள் படித்தீர்கள்? எத்தனை சிறுகதைகளைப் படித்தீர்கள்? அது குறித்து இதுவரை ஏதேனும் விமர்சனம் செய்துள்ளீர்களா? தமிழகப்படைப்பென்றால் உங்களை எந்தப் படைப்பு/ யார் படைப்பு கவர்கிறது? ஏன்? கேட்டால் ரசனை என்பீர்கள். அப்படி சொல்லி தப்பித்துக்கொள்ளலாம். நான் இதுவரை சில நாவல்களை ஒட்டி விமர்சனம் செய்துள்ளேன். மலேசிய நாவல்கள் அடங்கும். அது குறித்து மாற்று விமர்சனம் செய்கிறீர்களா? அவை தரமற்றவை எனச் சொல்ல உங்களிடம் எவ்வகையான உழைப்பு உண்டு? மலேசியாவில் மாற்று முயற்சிகள் செய்யும் கலைஞர்களின் ஆக்கங்களைப் பார்த்துள்ளீர்களா? அதன் சாதக பாதகங்களைப் பேச தயாரா? ‘மோசம்’, ‘நல்லா இல்ல’ எனும் ஒற்றை வரியைத் தவிர உங்களால் வேறெதுவும் விரிவாக பேச முடியுமா? முடியும் என்றால் நான் தயார். இன்றிலிருந்து மலேசிய இலக்கியம் குறித்து விவாதம் செய்வோம். என்னால் சர்வ நிச்சயமாக உலகத் தமிழ் இலக்கியப் பரப்பில் வைக்கத் தகுந்த மலேசிய சிறுகதைகளைக் காட்ட முடியும். உங்களால் அதை இல்லை என மறுத்து ஏன் அது மோசமான கதை என எழுத முடியுமா? குறைந்த பட்சம் 5 நல்ல நாவல்களை என்னால் சுட்ட முடியும். அதை மறுத்து பேச தயாரா? தமிழக இலக்கியங்கள் உங்களைக் கவர்கிறதென்றால் எனக்கு அதில் ஆட்சேபனை இல்லை. எந்த படைப்பு. ஏன்? சும்மா போற போக்கில் மலேசியாவை மட்டம் என்றும் தமிழகம் சூப்பர் என்றும் சொல்லி புத்திஜீவிகள் போல காட்டிக்கொள்பவர்கள் வரிசையில் நீங்களும் இணைய நினைக்காதீர்கள் தோழி.
‘தயவுசெய்து, கலை சம்பந்தப்பட்ட விஷயங்களை நாடு, இனம் என்கிற பிரிவுக்குள் கொண்டுவரவேண்டாமே.! வல்லினம் நடத்திய, கலை இலக்கிய விழாவிலும், தமிழர்கள் ஒரு குடையின் கீழ் இணைவதே சிறப்பு, அவர்களை மலேசிய தமிழர்கள், இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டுத்தமிழர்கள், சிங்கை தமிழர்கள் என ஏன் பிரிக்கின்றீர்கள் என்றுதானே பேசப்பட்டது!? அந்த நிகழ்விற்கு, ஆதவன் தீட்சண்யா வரவில்லையென்றால், ஏன், நானே கூட வந்திருக்க மாட்டேனே.’
கலை என்ற விசயத்தில் நாடு, இனம் என்றுதான் பிரிக்க வேண்டியுள்ளது. காரணம் கலை வாழ்வைப் பேசுகிறது. எல்லா வாழ்வும் ஒன்றல்ல. தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மை தமிழர்களின் மனம் மலேசியாவில் உள்ள சிறுபான்மை தமிழ் மனதோடு ஒத்துப்போவதில்லை. இலக்கிய செயல்பாட்டில் ஆளுமைகளுடான உரையாடல் அவசியம். அவ்வாறு இருக்கையில் தமிழகத்திலிருந்து எழுத்தாளர்கள் வருவது சாத்தியமான விடயம்தான். நானும் மலேசிய இலக்கியம் குறித்து பேச லண்டன், சிங்கை சென்றுள்ளேன். அங்குச் சென்று பேசியது நமது நாட்டு படைப்பை ஒட்டிதான். தமிழகப் பயணங்களில், இலங்கை பயணங்களில் மலேசிய படைப்புகள் குறித்து பேசுகிறேன். அதே போல இங்கு வருபவர்கள் மலேசிய ஆக்கங்களை அறிந்து செல்கின்றனர். இது ஒரு வகை கருத்து பரிமாற்ற நிகழ்வு. இலங்கை தமிழன் மனம், மலேசிய தமிழன் மனம், தமிழகத் தமிழன் மனம் வெவ்வேறாவை. அது அரசியல், வாழ்வு, சமூக சிக்கலால மாறு பட்டுள்ளது. எனவே, ஒரு குடையின் கீழேல்லாம் எதையும் அடைக்க முடியாது. மற்றபடி வல்லினத்தில் எல்லா முயற்சிகளையும் மீறி நீங்கள் எதற்கு வந்தீர்கள் என்பது உங்கள் சிக்கல். உங்கள் தேர்வு. அதற்கான உரிமை உங்களுக்கு உண்டு. உங்கள் ஒருவரை வைத்து அனைவரையும் எப்படி எடை போடுவது? அங்கு இருந்த வடையை சாப்பிடத்தான் வந்தேன் என்று சொல்பவர்களும் உண்டு. அதற்கெல்லாம் நான் ஒன்றும் செய்ய முடியாது.
‘யாரையும் தரம் குறைப்பது நமது நோக்கமல்ல இங்கே ஆனால் கலை என்கிற வட்டதின் கீழ் இயங்கிக் கொண்டிருப்பனவற்றில் (இசை,சினிமா, இலக்கியம், ஓவியம்) ரசிகனை பிரம்பால் அடித்து வழிக்குக் கொண்டுவரமுடியாது என்பதுவே எனது அசைக்க முடியாத நம்பிக்கை. தொடர்ந்து போராடட்டும், கேட்பதெல்லாம் கிடைத்தால் மகிழ்ச்சியே ஆனால் இவர்களின் படைப்பை ரசிக்க ரசிகர்கள் பெருக வேண்டும் என்பதுவே எனது பிராத்தனை.’
யாரும் யாரையும் வழிக்குக் கொண்டு வர வேண்டியதில்லை. சினிமா என்பது ஒரு பொருளாதாரம் சார்ந்த பெரிய கலைத்துறை. அதற்கான வாய்ப்புகள் இருந்தால்தான் கிடைக்கும். என் கட்டுரையில் எங்குமே ரசிகன் மாற வேண்டும் சொல்லவில்லை. அல்லது பிரம்பால் அடிக்கவில்லை. எம் கலைஞர்களுக்கு களம் கொடு என்கிறேன். ராஜாமணி போன்ற தமிழக முதலாளிகள் இருக்கும் வரை மலேசிய கலைஞன் நிலை இதுதான் என்கிறேன்.
‘பாதகம் செய்பவரை கண்டால்
பயம்கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா// இது கூட அங்குள்ளதுதான்.’
இப்போது அதனால் என்ன? ஒரு கட்டுரையை உங்களால் முழுமையாக விளங்கி கொள்ள முடியாமல் என்னத்த தமிழக படைப்புகளில் ரசித்தீர்கள்? நான் தமிழகப் படைப்புகளை ஒதுக்கித் தள்ள சொல்லவில்லை. நான் கொண்டாடும் தமிழகப் படைப்பாளிகள், ஈழப்படைப்பாளிகள், சிங்கைப் படைப்பாளிகள் எத்தனையோ பேர் உண்டு. அ.மார்க்ஸின் ஆளுமை, ஆதவனின் கவிதை வீச்சு, யோ.கர்ணனின் புதிய கதை சொல்லும் முறை, ஷோபாவின் அரசியல் விழிப்புணர்வு, ஜெயமோகனின் இலக்கியக் கூர்மை எல்லாவறையும் மதிக்கிறேன். ஆனால், நான் அங்கேயே நிர்க்க விரும்பவில்லை. இவர்களோடு இணைந்தே மலேசியப் படைப்பாளிகளைப் பார்க்கிறேன். ரெங்கசாமியின் நாவல்,  யுவராஜனின் சிறுகதைகள், பாலமுருகனின் கட்டுரைகள், சண்முகசிவாவின் இலக்கியக் கூர்மை என இரண்டையும் ஒரே தரப்பில் வைக்கிறேன். இவர்கள் அனைவரும் ஒரே தளத்தில் இயங்க வேண்டுமென விரும்புகிறேன். நான் சொல்ல வருவது இதுதான். உங்களுக்கு விளங்காததால் சுருக்கி இப்படி சொல்கிறேன்.
1. மலேசிய ஊடகங்களில் மலேசியத் தமிழனே தலைமை வகிக்க வேண்டும்.
2. இலக்கியம், ஓவியம், இசை பொறுத்த வரை ஓரளவு களங்கள் நமக்கு உண்டு. ஆனால், திரை துறை வளர அதற்கான களங்கள் விரிவாக்கப்பட வேண்டும்.
3. மற்றபடி தமிழக ஆக்கங்கள், இங்கு ஒளியேறுவதில் என்ன சிக்கல். அவர்கள் நம்மைக்காட்டிலும் முந்தியிருக்கிறார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவர்கள் அறிவை பெருவதிலும் பரிமாற்றம் செய்வதிலும் எந்தத் தடையும் இல்லை. ஆனால், நம்மை நாம் வளப்படுத்த நமது ஆக்கங்களை மேம்படுத்த என்ன செய்யப் போகிறோம்?