செவ்வாய், அக்டோபர் 02, 2012

பின்நவீனத்துவமும் கற்பனைக்குதிரை ஓட்டிகளும்

எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு இலக்கிய வியாதி அதி வேகமாகப்பரவி வருகிறது. அது என்னவென்றால், ஒரு பிரபலமான எழுத்தாளரின் படைப்பு, அதை வாசிக்கின்ற மற்றொரு எழுத்தாளருக்குப் புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தி, எதோ ஒரு பரவச நிலையைக் கொடுத்து விட்டால், எழுதப்பட்ட அதனின் உள்ளர்த்தத்தைச் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல், இப்படிப் புரியாமல் எழுதுவதுதான் இலக்கியம் போலும் என தவறாகப் புரிந்துக்கொண்டு,  தாமும் அதேபோல் புரியாமல் எதையாவது எழுதி, தனக்கும் பின்நவீனத்துவ பாணி வந்துவிட்டதாக நினைத்துக்கொள்கிற  நிலை இப்போது தொற்றுவியாதியைப் போல் துரத்தி வருகிறது இலக்கிய உலகை.

கதை எழுதுபவர்களை என் பார்வையில், (கவனத்தில் கொள்ளவும் `என் பார்வையில்') இரண்டு விதமாகப்பிரித்துள்ளேன். ஒன்று; முதல்நிலை. அதாவது, நடைமுறை வாழ்வியலை அழகாகவும், அவலம் என்பதை மறைமுகமாகவும், எங்குமே போதனைகளை நுழைக்காமல்,  ஒரு கருப்  பொருளை அடையாளமாகக் காட்டி  அதில் இரண்டு அல்லது அதற்கும் மேலான புரிதல்களை மறைமுகமாகப் புகுத்தி, வாசிப்பவர்களை அவர்களின் போக்கிலேயே யோசிக்கவைத்து, வாசிப்பனுபவத்தில் பரவச நிலையைக்கொடுக்கின்ற அற்புதப் படைப்பாக மலர்ந்து, வாசகர்களுக்குப் புதிய புதிய அனுபவங்களைக் அடையாளங்காட்டி பிரமிக்க வைக்கும் படைப்பாளிகள் இந்த ரகத்தைச்சேர்ந்தவர்கள்.

வாசகர்களை எழுத்தால் கட்டிப்போட்டு வசீகரிக்கும் ஆற்றல் பெற்ற எழுத்தாளர்களுக்கு இந்த பாணி சரளமாக வந்துவிடும். தமிழ்நாட்டு எழுத்துகள் பல இந்த வடிவில் இருப்பது கண்கூடு. சாரு, அசோகமித்திரன்,  நகுலன், விமலாதித்த மாமல்லன், பிரேமிள், சுப்ரபாரதிமணியன், இ.பா, சுஜாதா, சுரெஸ்குமார் இந்திரஜித், ஆதவன், தி.ஜா, பிரபஞ்சன்,  என இன்னும் பலரின்  படைப்புகளைப் படித்து விட்டு அப்படியே பிரமித்துப் போயியுள்ளேன்.  இவர்களின் எழுத்துகளை வாசித்து முடித்த பின்பும் அதனின் எதிரொலி இதயத்தில் எங்கோ ஒரு மூலையில் ரீங்காரமிட்ட வண்ணமாகவே இருக்கும். யோசிக்க யோசிக்க விடுகதைகளின் முடிச்சுகள் அவிழ்க்கப்படுவதைப் போன்ற பரவச நிலையில் இவர்களின் எழுத்து ஓலமிட்டுக்கொண்டே இருக்கும். எப்படி இவர்களுக்கு இப்பேர்ப்பட்ட  அற்புத எழுத்தாற்றல் கைவசம், என, பலமுறை  அதிர்ந்துள்ளேன். இங்கே மலேசியசூழலில், நான் படித்தவரையில், வல்லின இணைய இதழ் ஆசிரியர் மா.நவீன் இதில் கைத்தேர்ந்தவராகத் திகழ்கின்றார்.  இவர்  இலக்கிய உலகில் பேர் சொல்லும் பிள்ளையாக முத்திரை பதிப்பார் என்பதில் ஐயமில்லை.

இரண்டாவது நிலை என்பது,  நேரிடையாக விஷயத்திற்கு வந்து, அழகான புரிதல்களைக்கொடுத்து விட்டு, அற்புதமான நடையில், இடையிடையே போதனைகளையும் நுழைத்து, இறுதியில் ஒரு சின்ன  திருப்பத்தைத்தந்து,  அழகான சுபம் அல்லது மனதை வருடும்  சோகம் அல்லது ஒரு கேள்விக்குறியோடு கதைகளை முடிக்கும் எழுத்தாளர்கள். இதுபோல் எழுதுபவர்கள் இங்கே மலேசிய இலக்கியச்சூழலில் அதிகம்தான். ஏன், நான் கூட இதே பாணியில்தான் எழுதுவேன். இதில் கைத்தேர்ந்த எழுத்தாளர்கள் எண்ணில் அடங்கா. இவர்கள் வழக்கம்போல், பல அரிய விவரங்களை; படித்தது, கேட்டது, பார்த்தது, அனுபவித்தது என,  சாதாரண நடையிலேயே மிக எளிமையாக பலருக்குப் புரியும்படி, அழகான தமிழில் எழுதிக்குவித்து, நிறைய படைப்புகளைக் கொடுத்து,  எழுத்தாளர் என்கிற முத்திரையைத் தக்கவைத்துக்கொண்டு, தொடர்ந்து பெயர் போட்டு வருகின்றனர்.  இதில்  தப்பேதும் இல்லை. இந்த பாணிதான் இன்னமும் பலரை எழுத்தாளர் என அடையாளங்காட்டி வருகிறது. எழுத்துக் கலையை வளர்த்துக்கொள்ள  இது ஒரு நல்ல அணுகுமுறை.

இதையும் தாண்டி இன்னொரு கூட்டம் ஒன்று இருக்கிறது. இப்படி இரண்டு நிலையிலும் இல்லாமல், தம்மை ஒரு சிறந்த படைப்பாளியாக பறைசாற்ற வேண்டும் என்பதற்காக, இரண்டாவது நிலையை விட ஒரு படி மேலே நின்று, முதல் நிலைக்கும் போக முடியாமல், இரண்டாவது நிலைக்கும் வர மனமில்லாமலும், பின்நவீனத்துவ புயலாய் மாறி, நேற்றைய மழையில் பூத்த காளான்களாய் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பது இவர்களுக்கே புரியுமா என்பதுதான் இங்கே புரியாத புதிர். தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டிக்கொள்ளும் என்பதைப்போல், அங்கேயும் இங்கேயும் தாவி, சிறுபிள்ளைத்தனமாகக் கிறுக்கி, படைப்புகளைத் தாறுமாறாகக் குழப்பி, அகராதியைக் கொண்டு யாருமே இதுவரையில் பயன்படுத்திராத சில தமிழ் சொற்களையோ அல்லது சமஸ்கிருத வாசகங்களையோ  நுழைத்து, படைப்பை வெற்றிகரமாக முடித்திருப்பார்கள்.

இவர்கள், இவர்களின் கதைகளைத் தேர்தெடுக்கின்ற பத்திரிகை ஆசிரியர்களையும் அந்த படைப்புகளை வாசிக்கின்ற வாசகர்களையும் வார்த்தை ஜாலங்களைக்கொண்டும், அழகிய தமிழ்ச்சொற்களாலும், புதுமையான வர்ணனைகளாலும், ஒண்ணுமே இல்லாத மர்ம முடிச்சுகளாலும் தலைசுற்றலை ஏற்படுத்தி, படைப்பை நிலை நிறுத்தப் போராடியிருக்கின்ற யுக்தியை வெகு சுலபமாகக் கண்டு கொள்ளலாம். இதுவும் ஒருவகை சித்துவேலையே. கண்கட்டி வித்தைக்காரனின் ஜாலம் போல், அங்கே வித்தைகள் மட்டுமே இருக்கும், பார்வையாளர்களின் கண்களை அகல விரியவைக்கும் வித்தைகளை, நுண்ணிய பார்வை கொண்டு கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி, ஆரய்ந்துப் பார்த்தோமென்றால், அங்கே ஒன்றுமேயிருப்பதில்லை. அதுபோல்தான் இவர்களின் கதைகளும், படிக்கும்போது எதோ ஒன்று இருப்பதைப் போன்ற தோற்றத்தைக்  கொடுக்குமேயொழிய அவைகள் காலங்கடந்து நிற்குமா என்பது கேள்விக்குறியே.

அதிகமான வர்ணனைகளையும் வார்த்தை ஜாலங்களையும் புகுத்தி, இழுவையாய் இழுத்து, மர்மத்தை நுழைத்து, அங்கேயும் இங்கேயும் தாவி, இறுதியில் இறந்து போன தாத்தாவின் பிணத்தை வாசகர்களின் பார்வைக்குக்கொண்டு வருகிறார்கள். இந்த இறப்பைச் சொல்வதற்கு எதற்கு வாசகர்களின் பொறுமையை சோதிக்கவேண்டும்.!? தாத்தா இறந்து விட்டார் என்பதில் என்ன நீதி இருக்கப்போகிறது? ஓ...தாத்தா எப்படி வாழ்ந்தார் என்பதைச் சொல்லுகின்றார்கள் போலிருக்கு! அவரவர்  தாத்தாக்கள்  வாழ்ந்த நிலையை பலர் பலவிதமான பாணியில் ஏற்கனவே சொன்ன விதமாகத்தானே இருக்கின்றார்கள், இன்னும் என்ன புதிய பாணியில்..?? கேட்டால், அதற்கும் இவர்களிடம் தட்டையாக மொக்கையாக  ஒரு விளக்கமும் இருக்கும், உப்புசப்பில்லாமல்.

இவர்களின் கெட்டிக்காரத்தனம் என்ன தெரியுங்களா, சராசரி வாசகர்கள், இவர்களின் எழுத்துகளில் எதுவுமே இல்லை என்று புறக்கணிக்க முடியாமல் திணறடிக்கச் செய்துவிடுவதுதான். எப்படிப் புறக்கணிப்பது? நல்ல தமிழ் இருக்கின்றது. அற்புத வர்ணனைகள் இருக்கின்றது, சூரிய ஒளி, ஜன்னல் வழியாக படுக்கையறைக்குள் நுழைந்து எப்படி வியாப்பித்திருக்கின்றது என்கிற வர்ணனை எவ்வளவு நீளமான விளக்க வரிகளில். எதுக்கு? இப்படியும், வாசிப்பவர்களை தலைசுற்றல் ஏற்படுத்துகிற ஆற்றல் வேறு, இன்னும் என்ன வேண்டும்?  வேறு வழியே இல்லாமல் இவைகள்தான் நல்ல கதைகள், நல்ல எழுத்துகள் என்கிற ஒரு மாயத்தோற்றதை உருவாக்கி விடுகிற புத்திசாலித்தனம் இவர்களின் சாமர்த்தியக் கலை.

இப்படிப்பட்டவர்களுக்கு வாசிப்பின் மகத்துவம் தெரிந்திருக்கவேண்டிய அவசியமே  இல்லை. அவர்கள் எழுதுவதையே அவர்கள் வாசித்துக்கொள்வார்கள். அட எதையும் வாசிக்காமல் கூட இருக்கலாம். தமிழில் பிழையில்லாமல் எழுதக் கற்றுக்கொண்டு,  இவர்கள் காண்கின்ற கற்பனைக் கனவுகளை மொழிபெயர்த்துக்கொண்டு, அதற்கும் புரியாத நிலையில் ஒரு தலைப்பை வைத்து விட்டு, அப்படியே கற்பனைக் குதிரையை  தட்டிவிட்டு, அது எங்கெல்லாம் ஓடுகிறதோ, அங்கெல்லாம் தமது எழுதுகோலை மேயவிடுவார்கள். நன்கு கூர்ந்து கவனித்தால், அதில் ஒன்றுமே இருப்பதில்லை வர்ணனைகளைத்தவிர.  ஆனால் இவர்கள்தான் சிறந்த படைப்பாளிகள் என்கிற முத்திரையை வெகு விரைவில்  மிகச்சுலபமாகத்  தட்டிச்சென்றுவிடுவார்கள். முதல் நிலை பரிசுகளைப் பல முறை வென்றவர்களான இவர்களின் படைப்புகள் இலக்கியப் போட்டிகள் நடைபெறுகிற போதுதான் அதிகமாகத் தலைக்காட்டும். இந்த முறையில்  வெல்பவர்கள்  மக்கள் மத்தியில் சிறந்த படைப்பாளர்களாகப் பார்க்கபடுவதால்,  நிஜங்களைச் சொல்லும் அற்புத எழுத்துகள் தொடர்ந்து தோற்றுப் போகின்றன.

இன்னொரு நெருடும் உண்மை என்னவென்றால், கதைகளைத் தேர்ந்தெடுக்க  நியமிக்கப்படும் கதைக்குழு ஆசிரியர்களுக்கோ அல்லது நீதிபதிகளுக்கோ பரந்த வாசிப்பனுபவமும், வாழ்வியல் கூறுகளை கூர்ந்து நோக்கும் நுண்ணறிவு ஆற்றலும் போதிய அளவில் இல்லாமல் இருப்பதால்,  புதிய பாணியில் எழுதப்படும் கதைகளின் போக்கு புரியாமல் போகவே, வெறும் வார்த்தை ஜாலக் கற்பனைக்கதைகளில் மது உணட வண்டாய் கிறங்கிப்போய், அவற்றையே சிறந்த கதைகளாகத் தேர்ந்தெடுத்தும்   விடுகின்றனர்.

இதுபோன்ற கதைகளுக்குத் (பரிசு கிடைப்பதை வைத்து) தொடர்ந்து ஆதரவு இருப்பதைக் காண்கின்ற  அடுத்த தலைமுறையினரும், அதே போல்  `கோக்குமாக்காக’ படைப்புகளை எழுதி விரைவாக எழுத்தாளர் என்கிற முத்திரையைப் பதிக்க, தற்காலிக புகழுக்காக  குளறுபடியான கதைகளை எழுத ஆயத்தமாகிவிடுகின்றனர். இந்நிலையில் எழுதப்படுகின்ற கதைகள்தான்  ஏராளமாக பிரசுரமாகி தற்போதைய ஏடுகளை அலங்கரித்து வருகின்றன. ஃபாஸ்ட் பூட் இஸ் ஆல்வேஸ் வேஸ்ட் ஃபூட்.

இது இலக்கியச் சூழலின் ஆரோக்கியமின்மையைப் பிரதிபலிக்கும்  எரிச்சலூட்டும் ஓர் நிலைப்பாடு. பத்திரிகையில்  பிரசுரமாகுகின்ற கதைகளைத் தேர்ந்தெடுகின்ற கதைக்குழு ஆசிரியர்கள், கதைகளுக்குப் புள்ளிகள் வழங்குகின்ற நீதிபதிகள் போன்றோருக்கு பரந்த வாசிப்பனுபவம் இருப்பதை உறுதி செய்த பிறகே கதைகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தி.ஜா, பிரபஞ்சன், சுந்தரராமசாமி, புதுமைப்பித்தன் போன்றோர்கள்  யார் என்பது கூட தெரியாத நிலையில் இருப்பவர்களை கதைத் தேர்வுக் குழுவில் நியமித்தால், நல்ல கதைகள் அடையாளங் காணப்படாமல் புறந்தள்ளப்படும் என்பது உறுதி.

எழுத்தாளன் என்பவன் முதலில் நல்ல வாசகனாகத் தம்மை நிலை நிறுத்திக்கொள்வதே சிறப்பு. கற்பனையில் குதிரை ஓட்டுகிற சில வார்தை ஜால ஆசாமிகளைப் பிடித்து, வாசிப்பனுபவத்தை பரிசோதித்துப்பாருஙக்ள்.

பூஜியம் பூஜியம் பூஜியம் தான்.