வெள்ளி, செப்டம்பர் 28, 2012

கொஞ்சம் சோகம் இன்று...

சீனா குவங்சிங்கில்,  இறந்துப்போன தமது மகனை ஆறுவருடமாக குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்துள்ள ஒரு தம்பதியினரின் செய்கை அம்பலத்திற்கு வந்துள்ளது.

வீட்டிற்கு வருகிற உறவுகள், எத்தனையோ முறை இந்த செய்கையைக் கண்டித்து, நோயின் காரணமாக இறந்துப்போன இக்குழந்தையை எரியூட்டச்சொல்லியும், அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் பிரேதத்தை பத்திரப்படுத்தி, ஏக்கமாக இருக்கின்ற சமயத்தில், பெட்டியைத் திறந்து  தமது மகனைப் பார்த்து கொஞ்சி திருப்திப் பட்டுக்கொண்டார்களாம்.

கிட்டத்தட்ட ஆறுவருடங்கள் இப்படிச் செய்து வந்ததிற்குக் காரணமும் இருந்திருக்கிறது. முதன் முதலில் பிறந்த இவர்களின் மூதத மகளையும் பதினைந்து வருடங்களுக்கு முன்பே நோய் பறித்துக்கொண்டது. இரண்டாவதாகப் பிறந்த இந்த மகனையும் இதே நிலையில் பறிகொடுக்க நேர்ந்ததை, இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

`என் மகன் குளிர்சாதனப்பெட்டியில் பார்ப்பதற்கு இன்னும் அழகாக உயிரோடு இருப்பதைப்போலவே இருக்கின்றான். அவனின் முகத்தைப் பார்த்தாலே போதும், கவலைகளெல்லாம் பறந்துப்போகிறது. அவன் எங்களுடனே இருப்பதைப்போன்ற ஓர் உணர்வைக்கொடுக்கிறது இந்நிலை. அதனால்தான் அவனை எரிப்பதற்கோ அல்லது புதைப்பதற்கோ எங்களுக்கு மனமில்லை..’ என்று சொல்லி  தாம் செய்து வந்த இச்செய்கைற்கு நியாயம் கற்பித்து வந்துள்ளனர் அத்தம்பதியினர்.

இச்செய்தியைப் படித்தவுடன் எனக்கு இன்னொரு சம்பவம் நினைவிற்கு வந்தது. கொஞ்சம் சோகம்தான். என்ன செய்வது வாழ்வில் இரவு பகல், மேடு பள்ளம், இன்பம் துன்பம் என எல்லாவற்றையும் இரண்டாகத்தானே வகுத்துள்ளார்கள்.

மிக அண்மையில் ஒரு பெண்மணியை உணவுக்கடையில் சந்தித்தேன். பழைய நட்பு. நட்பு என்பதை விட, முன்பு நான் சிறுவணிக முதலாளி. ஒரு கடை வைத்து வியாபரம் செய்துவந்தேன். விடுமுறை நாட்களில் கடையைத் திறப்பேன். `பியூட்டி ஷாப்’ அது, பலவிதமான அலங்காரப்பொருட்களை வாங்கி விற்பனைக்கு வைத்து வியாபாரம் செய்துவருவேன்.

அங்கு பொருட்கள் வாங்க வருபவர்களை விட, என்னோடு மணிக் கணக்காக  கதையளக்க சிலர் வருவார்கள்.  `கஸ்டமர்’ இல்லையென்றால் எனக்கும் பொழுது போகும் இவர்களால். அப்போது ஏற்பட்ட பல நட்புகளில் இவரும் ஒருவர். பெயர் மல்லிகா.

அவரும் ஒரு சிறுதொழில் வியாபாரிதான். அவரின் பொருட்கள், ஒரு பிரபலமான `டைரக்ட் சேலிங்’. அப்பொருட்களைக் கொண்டு வந்து என் கடையில் கொடுத்து விற்பனை செய்யச்சொல்லி தொல்லை கொடுத்த வண்ணமாக இருப்பார். ஒரு நாள், ``சரி விற்றுக்கொடுக்கிறேன், ஆனால் பணம் உடனே கொடுக்க முடியாது, வியாபாரம் ஓடினால் தான் தருவேன், இல்லையென்றால் பொருளை எடுத்துக்கொண்டு இடத்தைக் காலி செய்..” என்று எச்சரித்தேன்.

ஒரே சொற்பொழிவு மழைதான் போங்க. `தமிழர்கள் வாழ்வு, உருப்படாத நிலை, பணம் வைத்துக்கொண்டு கஞ்சத்தனம் செய்கிறார்கள். வாரி கட்டிக்கொண்டா போகப்போகிறார்கள்.! வியாபாரம் தெரியாதவர்கள். திடீர் பணக்காரர்கள், இவர்களைப் பாருங்கள், அவர்களைப் பாருங்கள். நாசமாய் போன இந்த சமூகத்தைப் பாருங்கள். என்னைப் பார், இன்னும் கொஞ்ச நாளில் நான் மெஸ் கார் வாங்குவேன், என்னைப் பார்த்து நீ ஆச்சிரியப்படுவாய். அப்போது நானே உனக்கு சாமான்களை இலவசமாகத் தந்துத் தொலைக்கிறேன்... ஆ..வூ....’ என, ஒரே பிதற்றல்.

இப்படிக் காரசாரமாகப் பேசினாலும், ஆள் படு உற்சாகமான பேர்வழி. என் கடைக்குள் நுழைந்து விட்டால், இடம் களைக்கட்டும். இதற்காகவே இவர் வருவாரா என காத்திருப்பேன். எல்லா சூழலிலும் நேர்மறையான பேச்சுதான். திட்டினாலும் சுவாரிஸ்யமான நட்பு.

இப்போது கடை இல்லை. உதவிற்கு ஆள் இல்லை மேலும் வியாபாரம் செய்வது அவ்வளவு சுலபமல்ல என்பதை அறிந்துகொண்டேன். கடையை விற்றுவிட்டேன். அதோடு அங்கே ஏற்பட்ட சில நட்புகளும்   தொடர்பில்லாமல்  போனது. ஐந்து ஆறு வருடங்கள் ஆகியிருக்கும்.

அன்று உணவுக்கடையில் அவரைச் சந்தித்தவுடன், முதலில் எங்கேயோ பார்த்ததைப் போலத்தான்  இருந்தது, அவருக்கும் அப்படியே தோன்றியிருக்கக்கூடும், என்னையே உற்று நோக்கினார். ஆனாலும் நானே  முதலில் கண்டுபிடித்து,

`ஹாலோ பிஸ்னஸ் லேடி, மெஸ் கார் வாங்கியாச்சா?’ என்றேன்.

`ஹாய் விஜி, எப்படியிருக்கீங்க? கடை இன்னும் இருக்கா?’  என, மிகவும் அமைதியான தொனியில் கேட்டார்.

`என்ன பழைய உற்சாகமெல்லாம் காணாமல் போச்சு. பிஸ்னஸ் பெரிய அளவில் வந்துவிட்டதோ, எங்களிடம் பேசக்கூட பிடிக்கவில்லை மேடத்திற்கு..’ என கிண்டல் செய்தேன்.  முகம் வாடியது, தலை கீழே கவிழ்ந்தது. கண்கள் பனித்தன. `என்னாச்சு? அட விடுங்க, பிஸ்னஸ் என்ன பிஸ்னஸ்.. அது எல்லோருக்கு சரிப்பட்டு வராது. இப்ப என்ன செய்றீங்க அத சொல்லுங்க! ’ என்றேன்.

வாடிய முகம் வாடியபடியே.. ` பிஸ்னஸ் நல்லா வந்ததுங்க.. வேகமா உயர்ந்து வந்தேன். எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடி எல்லாமே அமோகமாக வந்தவேளையில், கடவுள் என் இருபத்தொன்று வயது மகனை எடுத்துக்கொண்டான். ஒரு கார் விபத்தில் முழுசா எம்மவனைப் பறிகொடுத்து விட்டேன். என்னிக்கு அவனை இழந்தேனோ, அன்றிலிருந்து எனக்கு எதுவுமே வேண்டாம், என் பிள்ளைதான் வேண்டும். அவன் தான் என் உயிர்.. இந்த இரண்டு வருடமா நான் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம். அவன் ஒரு முறைதான் செத்தான், நான் தினம் தினம் சாகிறேன்.’ என்றார்.

என்ன சொல்ல? அந்த நிலையில் நாம் இருந்தால்தான், அதனின் வலிதெரியும், அதுவரையில், ஆறுதல் என்கிற பெயரில் காயங்களைச் சீண்டிப்பார்க்க எனக்கு எப்போதுமே இஷ்டமில்லை. பேச்சை வேறு பக்கம் திருப்பி, அட வாங்க சாப்பிடப்போகலாம் என்று சொல்லி,  அந்த பேச்சையே எடுக்காமல், அற்புதமான உணவுகளை ஆடர் செய்து, சாப்பிட்டு வந்தோம்.

பிஸ்னஸ், செய்யுங்கள். உங்களுக்கு அந்த திறமை இருக்கிறது. அது எல்லோருக்கும் வராது. என்று சொல்லி மட்டும் , விடைபெற்றேன்.