வியாழன், செப்டம்பர் 25, 2014

இதழோரம்

தம்பியும் நானும் ஒரே இடத்தில் தான் இருக்கின்றோம். என் தம்பியின் மகனுக்கு ஐந்து வயது. சில வேளைகளில் என் வீட்டுக்கு வருவான். `அத்தே, என்ன செய்யுறீங்க.? அண்ணன் இல்லே. மாமா இன்னும் வரல.?’ என்கிற கேள்விகளோடு சமையல் அறையில் என்னிடம் பேச்சு கொடுப்பான்.

``நீ ஏன்யா, ஒண்டியா இருக்கே.? அண்ணன்கள் எல்லாம் எங்கே.? அம்மா எங்கே? அப்பா எங்கே.? ’’

``அப்பா இருக்கார். டீவி பார்க்கிறார். நான் இங்கே வந்தேன். ஹ்ம்ம்...’’ என்று முனகிக்கொண்டே, குளிர்ச்சாதணப்பெட்டியின் அருகில் செல்வான். நான் கண்டும் காணாததுபோல் இருப்பேன்.

என் வீட்டு குளிர்ச்சாதணப் பெட்டியில் எப்போதுமே தின்பண்டங்கள் குவிந்துகிடக்கும். சாக்லட், கேக், அல்வா, ஐஸ்கிரீம், மிட்டாய் என. என் வீட்டில் சாப்பிட ஆள் இருக்காது. எங்கிருந்தோ வருவதை அங்கே கடாசி வைத்திருப்பேன்.. யாராவது குழந்தைகள் வந்தால் கொடுப்பேன். பெரும்பாலும் அக்கா தம்பி பசங்க வந்தால் ஒரே மூச்சில் தின்று தீர்ப்பார்கள். குழந்தைகளுக்குக் கிடைக்காது.

குளிர்ச்சாதணப்பெட்டியைத் திறந்தான். நான் தெரியாததுபோல் இருந்தேன். மூடினான்.மீண்டும் திறந்தான்.

என்னய்யா?

``அத்தே,  அது என்னாது?’’ சாக்லட் பாக்கெட்’ஐ கையில் எடுத்துக் கொண்டு கேட்டான். நான் என் சமையல் வேலையில் மூழ்கினேன். அவனைக் கண்டு கொள்ளாதது போல் பாவனை செய்தேன். அதை என்னிடம் கொண்டு வந்து காட்டி..

``அத்தே, இது என்னாது?”

``தெரியலையே’ய்யா.!’’ பதில் சொன்னேன்.

``சாக்லெட் ஆ? ’’ மீண்டும் கேட்டான்.

``ஹ்ம்ம்.. ’’ என்றேன்.

``இப்படி கல்லு மாதிரி இருக்கு.! சாப்பிடலாமா.?’’ கேட்டான். அவன் கொஞ்ச நேரம் என்னிடம் பேசவேண்டும் என்பதற்காக, நான் வேலையில் மூழ்கியிருப்பதைப்போல் நடித்தேன். அவனின் செய்கையினைக்கூர்ந்து கவனித்த வண்ணம்.

``தெரியலையே சாப்பிடலாமான்னு.. சாக்லட்தானே அது.?’’ மிளகாய் நறுக்கிக்கொண்டே கேட்டேன்.

``அப்படித்தான் இருக்கு..!’’ சொல்லிக்கொண்டே பாக்கெட்’ஐ பிரித்தான்.
முகர்ந்து பார்த்தான். வாயில் வைத்துக்கடித்தான். கடிக்கமுடியவில்லை. பிரிட்ஜ் குள்ளேயே இருந்ததால், கட்டியாக இறுகி இருந்தது.

அசட்டுச் சிரிப்பு சிரித்தான். ``அத்தே பல் வலிக்கும்போலிருக்கு. கராஸா இருக்கு..’’ என்றான்.

வாங்கி உடைத்துக்கொடுத்தேன். அமைதியாகச் சாப்பிட்டான்.

ஒரு கையில் ஒரு பொம்மை.  வாயில் சாக்லெட்.சாமார்த்தியமாக என்னிடம் பேசி வாங்கிவிட்ட திமிர் தொனியில், கால்களை நீட்டி, அதை ஆட்டிக்கொண்டே, கடக் முடக் என்று சுவைத்துச் சாப்பிட்டான் அந்த சாக்லெட்’ஐ.

இதழோரம் எச்சிலும் சாக்லெட்டும் சேர்ந்தாட்போல் வடிந்தது...
இரசித்தேன் கள்ளங்கபடமில்லா குழந்தைத்தன்மையை,.....
கொஞ்ச நேரம் குழந்தையாக மாறி..