புதன், பிப்ரவரி 12, 2014

கவிதை, கேள்வி. விளக்கம்..

புரிகின்ற கவிதைகளை எல்லாம் நல்ல கவிதைகள் என்று யாரும் கொண்டாடுவதில்லை. அதேவேளையில் புரியாத கவிதைகள் அனைத்தும் நல்ல கவிதைகள் அல்ல என்கிற அறியாமை வட்டத்திற்குள் புகுந்துகொள்வதும் சரியில்லை.

எழுத்துவடிவில் சொல்லப்பட்ட புரியாத சில விஷயங்களில் எனது புரிதல் குறித்து, `என்னமோ சொல்லவருகிறார்களே, நமக்குத்தான் புரியவில்லை போலும்..’ என்று பலமுறை அதை மீள்வாசிப்பு செய்து, புரிய முயன்று தோற்று,எனது புரிதல் அறிவை நானே நொந்துகொண்ட அனுபவமும் உண்டு. கவனிக்க *மழுங்கிய நிலையிலான எனது புரிதல் அறிவு..*

கவிதை குறித்து எந்த முன்முடிவும் எடுக்காமல், நமது புரிதல் அறிவை நாமே ஆராய்ச்சி செய்வதில் தீவிரம் காட்டினால், எனக்குப் புரியாதது மற்றவர்களுக்கும் புரியாது, அல்லது, நான் புரிந்துகொண்டதுதான் மற்றவர்களுக்கும் புரியும் என்கிற நிருபர் கண்ணோட்டப் புரிதல் விலகும்.

செய்தி சேகரித்து, அதை அப்படியே எழுதி மக்களுக்கு விளங்க வைப்பதும், ஆழ்ந்த வாசிப்பில், சிக்கலான வாழ்க்கைச்சூழலில் சிக்குண்ட மனம் உதிக்கின்ற கவிதை அல்லது இலக்கியப் படைப்பு என்பதும் முற்றிலும் வேறானது. கடினமான படைப்பிலக்கிய வாசிப்பு என்று தனியொரு வாசகன் முயலாதவரை,அதுமாதிரியான முயற்சிகள் மேலும் தொடராதவரை, நவீன எழுத்து கவிதை குறித்த நாலாந்தர விமர்சனங்கள் நம் இலக்கியச்சூழலில் `எழுத்தாளர்கள்’ என்கிற முகமூடிகளால் நிகழ்த்தப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். இதுபோன்ற கெடுபிடிகள் இலக்கிய உலகிற்கு அவசியம் என்றே தோன்றுகிறது. காரணம், இதுபோன்ற சிக்கல்கள் உருவாகின்றபோதுதானே, இவ்வளவு அழகான தெளிவான கலைப்படைப்புகள் உங்களின் (நவீன் மற்றும் வல்லின குழு) மூலமாக உயிர்ப்பெற்று ஜனிக்கிறது.

இக்கட்டுரையின் மூல சாரத்தை வெட்டியோ அல்லது இதில் குறைபாடுகள் உள்ளது என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டோ தர்க்கம் செய்ய யாராவது முன்வருவார்களா? வரத்தான் முடியுமா? (முடியும், வெட்டியாக மொண்ணையான கருத்துகளை முகநூலில் பதிவேற்றி, அதை விவாதிக்க `ஆமாம் சாமி’ போடுகிற கூட்டத்தைத் திரட்டி, தனிநபர் தாக்குதல் நடத்துவார்கள்.) `கடவுளின் மலம்’ என்கிற கவிதை நாறவில்லை. ஆனால், அக்கவிதை குறித்த விமர்சன எழுத்துக்களின் கீழ் நிகழ்த்தப்பட்ட தனிநபர் தாக்குதலில், உலகிற்கே படம்பிடித்துக்காட்டினார்கள்.. அவரவர் அறியாமையின் உச்சநிலையின் அடையாளங்களை..) என்னக் கொடுமை.!

நவீன கவிதை ஒன்றினை வாசிக்கின்றீர்கள். புரியவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன செய்வீர்கள்.? நான் இப்படிச் செய்து புரிந்துகொள்ள முயல்வேன்.

நம்மைச்சுற்றி நடந்த, நடக்கின்ற, மனதை உலுக்கிய அல்லது பாதித்த அரசியல் நிகழ்வையோ, அல்லது சமுதாய சீர்க்கேட்டு நிகழ்வையோ அல்லது எதாவதொரு அவலத்தையோ மனக்கண்முன் நிறுத்திக்கொண்டு.. கவிதையில் வருகிற வரிகளை அதே அர்த்தத்தில் தட்டையாக வாசித்து புரிந்துகொள்ளாமல், நடந்த அவலங்களோடு கொஞ்சம் மெனக்கெட்டு ஒப்பிட்டுப் பார்த்து உள்வாங்கி, பிறகு இரண்டையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தி வாசித்து,கவிதையின் உள்ளர்த்தக் கருத்துகளை விளங்கிக்கொள்ள முயல்வேன்.

புரிந்தபின் அதனின் மூலக்காரணம் வேறாகவும் இருக்கலாம் அல்லது நடந்த குறிப்பிட்ட நிகழ்வாகவும் இருக்கலாம். இருப்பினும் புரிதல் என்பது அங்கே ஒரே மாதிரியாகத்தான் நிகழும். இது வயப்பட, நாம், நம்மைச்சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளை சுரணை உணர்வுடன் விழிப்புநிலையில் அணுக பழகிக்கொள்ளவேண்டும். இவ்வுணர்வு வருவதற்கு,பரவலான வாசிப்பு அனுபவமும் அவசியம் தேவைப்படுகிறது. இது என்னைப்போன்ற பாமரனுக்கும் சாத்தியம். ஆனால் நடப்பது என்னவென்றால்; இங்கே, நமது வாசிப்பின் விழிப்பு மற்றும் சுரணை உணர்வு என்பது, உள்ளூர் பத்திரிகை வாசிகள் ஜீரணிக்கமுடியாமல் வாந்தி எடுக்கின்ற உணர்ச்சிப்பூர்வ செய்திகளாலே தூண்டப்பட்டுகிறது. அதன்பின் நடப்பது என்ன? `நான் ச்சீ, நீ ச்சீ’ என நம்மை நாமே தூற்றிக்கொண்டு சண்டை போட்டுக்கொள்வதுதான். நண்டுகதை என்பார்களே அதுபோல்.

# பி.கு- மறைமுகமாக அவலத்தைச்சொல்லுகின்ற கவிதைகளில் - எனது வாசிப்பு பெரும்பாலும்.. #