வெள்ளி, மார்ச் 29, 2013

கண்ணீர் விட்டேன்.

சென்ற செவ்வாய்க்கிழமை சித்தப்பா இறந்துவிட்டார். ஆழ்ந்த அனுதாபங்கள் என்று யாரும் சொல்லவேண்டாம். அனுதாபம்தான் இருப்பினும் கொடுத்துவைத்தவர், வாழ்வை அனுபவித்து, குழந்தைகளையெல்லாம் திருமணம் செய்துவைத்து விட்டு, அப்பா இல்லாத எங்களுக்கும், எல்லா நல்லது கெட்டதிலும் தூணாக துணையாக நின்று, குடும்பங்களின் ஒற்றுமையில் முழுபங்கேற்று, பொறுப்புள்ள ஒரு சித்தப்பாவாகவே (அப்பா - அப்படித்தான் அழைப்போம்)  திகழ்ந்தவர் அப்பா.

சந்தோசமாக வாழ்ந்து, நடமாடிக்கொண்டிருக்கும்போதே நோய் கொண்டுவிட்டது. தம் வலிக்கு தாமே கார் ஓட்டிச் சென்று மருத்துவமனையை அடைந்து, மருத்துவமனை வாசலிலேயே மயக்கமுற்று மரணமடைந்துள்ளார். 

நோயிற்கு நன்றி.! ஏன் நோயிற்கு நன்றி..!? 

சிலர்  படுத்தப்படுக்கையாகி நரகவேதனையில், மலம் மூத்திரம் போவதுகூட தெரியாமல், ருசி பசி அறியாமல், இரவு எது? பகல் எது என்பது கூட தெரியாமல், பலருக்குப் பாரமாகி இழுத்துக்கோ பறிச்சிக்கோ என்றிருப்பார்கள். வாழ்வதற்காக கோவில் சென்ற காலங்கடந்து, சாவிற்காக வேண்டிக்கொள்கிற  இக்கட்டான நிலைக்குக்கொண்டு வந்து விடுவார்கள்.

என் தோழி ஒருவளிடம், என் மாமி படும் நரகவேதனைகளைப் பற்றிப் பகிந்துகொள்வேன். (மாமிக்கு எண்பத்தைந்து வயது, என்னோடுதான் இருக்கின்றார் - வேலைக்காரி வைத்து பார்த்துக்கொள்கிறோம்.)  அவள் கொடுத்த ஒரு ஆலோசனையை நினைத்து, இரண்டு நாட்கள் சிரித்தேன்.

கடையில் விற்பனை செய்யும் கோத்தா பால் (milk in box), அதனின் ப்ரண்ட் பெயரோடு சொன்னாள். அப்பாலை வாங்கி மாரியம்மன் கோவிலில் கொடுத்து, சம்பந்தப்பட்ட முதியவரின் பெயரைச்சொல்லி ஆத்தாவிற்கு அபிஷேகம் செய்தால், வயதானவர்களுக்கு விரைவிலேயே விடுதலை வந்துவிடுமாம். அவர்களின் பாட்டிக்கு அப்படித்தான் செய்தார்களாம். மறுநாளே இறப்பு வந்துவிட்டதாம். (நகைச்சுவைதானே..!)

சித்தப்பாவின் மரணம் துயரம்தான். என் அம்மாவிற்கு பதினாறு வயது இருக்கும்போது, ஆலமரம் போன்ற பெரிய குடும்பத்தில் முதல் மருமகளாக வாழ்க்கைப்பட்டார்.  தாயிற்குப்பின் என் அம்மாதான் குடும்ப விளக்கு அங்கே. சித்தப்பா அத்தைகளோடு குழந்தைகளான நாங்களும் வளர்ந்தோம் அவ்வீட்டில். கூட்டுக்குடும்பமாக பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளோம்.

என் அப்பா சொல்வார், விவரம் தெரியும் வரை, அப்பாவை அண்ணன் என்றும், அம்மாவை அண்ணி என்றும், சித்தப்பா அத்தைமார்களை பெயர் சொல்லியும் அழைத்துவந்துள்ளோம் என்று.

இதனால் அப்பா குடும்பம் என்றால் மிக நெருக்கம். அவர்களுக்கு எதாவதென்றால் மனம் பதறும். தானாகவே நிகழும் நிகழ்வாக மனதிற்குள்ளேயே மாறியிருக்கும் நிலை அது. எவ்வளவு பிரச்சனை வந்தாலும், குடும்ப சிக்கல்கள் வந்தாலும், பின்னால் `நீ ச்சீ.. நான் ச்சீ..’ என்று துப்பிக்கொண்டாலும், எதாவதொன்று என்றால் கண்களில் நீர் பொலபொல வென வந்துவிடும்.

மேலும் இறந்துபோன இந்தச் சித்தப்பா என்பவர், எல்லா உறவுகளுக்குள்ளும் கொஞ்சம் நெருக்கமாய் இருப்பவர். திருமணமா? அவர்தான் வேட்டி ஜிப்பாவோடு, முதல் ஆள். மரணமா.? அவர்தான் காரியம் நடத்துவதற்கு, அதை எடு, இதை எடு, அடுத்தக்கட்ட வேலைகள் என்ன.! என்பதற்கு வழிகாட்டியாக இருப்பவர். (எழுதும்போதே நினைவுகள் கண்களைக் குளமாக்குகின்றன.)

காமாலை நோய். வயிறு பெரிதாகிக்கொண்டே வந்தது. உடல் மெளிந்துகொண்டே போனது. பற்கள் மஞ்சள், கண்கள் மஞ்சளைப்பூசிக்கொண்டது போறதொரு மஞ்சள். அப்படிப்பட்ட மஞ்சள். அந்த நோவுகளையெல்லாம் பொருட்படுத்தாமல், விருந்து விஷேசங்களுக்கு மக்கர் செய்து தாமதமாக வந்தாலும், ஆஜராகிவிடுவார் அப்பா.

எல்லா உறவுகளின் விஷேசங்களிலும் இருப்பார். மனதில் வைத்து பழிவாங்குதல் போன்ற அற்ப எண்ணங்கள் இல்லாதவர். மொத்தத்தில் மிக நல்ல மனிதர். இறப்பிற்கு வந்தவர்கள் கொடுத்த நற்சான்றிதழ் இது.

மருத்துவமனையும் மருந்தும் கையுமாக அலைந்துகொண்டிருந்தார். தொலைப்பேசியில் பேசிக்கொள்வோம். “உனக்காம்மா அழைத்தேன், தவறுதலாக அழைத்துவிட்டேன் போலிருக்கு. சரி அதுகிடக்கட்டும் கழுதை, அப்பாவ வந்து பார்க்கலையா? பணம் கிணம் இருந்தா கொடு. மருமகனுக்கு தெரியவேண்டாம்.. என்பார். மெனக்கட்டு பணம் எல்லாம் அனுப்பியதில்லை. பார்க்கும்போது அஞ்சோ பத்தோ கையில் கொடுப்போம். அவ்வளவுதான். இறந்துவிட்டார் என்பதற்காக அள்ளியள்ளி கொடுத்தோம் என்றெல்லாம் கதை விடுவது தேவையற்றது.

மருத்துவமனையில் மயக்கம் போட்டு விழுந்து விட்டார் என்கிற செய்தி வந்தவுடன், அப்பாவின் கைப்பேசிக்கு அழைத்தேன். அம்மாதான் எடுத்தார். அழுதுக்கொண்டே பேசினார்.  `உ..ங்...க....ப்ப்பா.. உங்...கப்பா... ந...ம்...ம..ல விட்டுட்டுட்டூ.. போயிடுவார்...ர்ர்..ர்ர்..ன்னு ப..ப..ய..ம்ம்மா இருக்கும்ம்ம்மா..’ என்றார். ஆறுதல் சொன்னேன். எனக்கு அழுகையே வரவில்லை. `இரவு ஆஸ்பித்திரிக்கு வரேன்ம்மா.’ என்று சொல்லி அழைப்பைத்துண்டித்தேன்.

பிறகு இரண்டு மணிநேரங்கழித்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதன் பிறகு தொடர் அழைப்பு.. உறவுகளுக்கு மத்தியில் தீப்போல் பரவியது செய்தி.
அன்றிரவே உறவுகளின் படையெடுப்பு. அந்த சிறிய விடே நிறைந்துவிட்டது.

அப்பாவின் வீடு ப்ளாட் வீடு. வீடு ஐந்தாவது மாடியில் உள்ளது. படியேறித்தான் போகவேண்டும். லிஃப்ட் இல்லை. செய்தி கேட்ட மறு நொடியில் பலர் அங்கே குவிந்துவிட்டனர். எனக்கு முன், என் தம்பி தங்கைகள் எல்லோரும் மிக விரைவாக சென்றுவிட்டார்கள். காரில் செல்லும்போதே, கண்ணீரோடுதான் சென்றேன். நம்மைப் பார்த்தவுடன் என்ன ரகளையாகுமோ என்கிற சிந்தனையில்..

நம்மவர்கள் உறவுகளோடு பின்னிப்பிணைபவர்கள். இதுபோன்ற துக்க நிக்ழ்வில், மிக நெருக்கமானவர்களோடு, நடந்தவற்றைச் சொல்லி அழுது மற்றவர்களையும் அழவைத்து விடுவார்கள்.

காரைவிட்டு இறங்கியவுடன், அப்பாவின் முகத்தைக் கண்டு கண்ணீர் விட வேகவேகமாக படியேறினேன். நான்காவது மாடியிலேயே கண்ணைக்கட்டியது. மூச்சு வாங்கியது. நிற்க மனமில்லை, தொடர்ந்தேன் வேக வேகமாக.. வீட்டு வாசலையடைந்தேன். என்னைப் பார்த்தவுடன், சின்னம்மா.. 

“வா விஜயா, நீ போன் பேசும் போது அப்பாவின் உயிர்போச்சு, ஆனால் டாக்டர்கள் அந்தச் செய்தியை என்னிடம் சொல்லவில்லை, எனக்குத்தெரிஞ்சு போச்சு.” என கதற ஆரம்பித்தார். நான் என்ன செய்வேன்.! எனக்குத்தான் மூச்சு வாங்குதே. புஸ் புஸ் புஸ்.. என மூச்சு விட்டேன். அழுகையே வரவில்லை. முகத்தை மூடிக்கொண்டு சமையலறை பக்கம் சென்று கொஞ்சம் நீர் பருகிவிட்டு வந்தேன். சுமாராக இருந்தது. அழுகை சுத்தமாக நின்றுபோனது. அமைதியாக வந்து தலைமாட்டில் அமர்ந்துகொண்டேன்.

அதன் பிறகு என் அம்மா வந்தார், என் அம்மாவைப்பார்த்தவுடன் கூட்டத்தில் சலசலப்பு.. `அக்கா வரார், அக்கா வரார்..’ என. அம்மா நுழைந்தவுடனும் அதே போல்தான்.  “அக்கா, பாருங்கக்கா உங்கள் செல்லக்கொழுந்தனை..” என்று கதறினார் சின்னம்மா. அம்மானாலும் அழ முடியவில்லை. விடுகிற மூச்சு, குறட்டையொலி போல் கேட்க ஆரம்பித்தது. திணறினார். கண்களில் நீரே வரவில்லை. அடுத்தடுத்து வருகிற அனைத்து உறவினர்களுக்கும் இதே நிலைதான். படியேறிய களைப்பில், மூச்சுத்திணறல் வந்து, கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என கேட்க ஆரம்பித்து விட்டனர். யாராலும் அழமுடியவில்லை.

முதலில் சந்திக்கின்ற தருணம், அழுகை வரவில்லை என்றால், அதன் பிறகும் வராது. சுதாகரித்துக்கொண்டு, மூச்சுவாங்குதல் நின்றவுடன் சாவகாசமாக அழலாம் என்றால், அதில் ஒரு வித நடிப்பு கலந்து விடும். ஆக, ஏறிய களைப்பில் நீர் பருகிவிட்டு அமைதியாய் அமர்ந்திருந்தனர் எல்லோரும். யாரும் அழவில்லை.

என் மற்றொரு சித்தப்பா மனைவி வந்தார். அவர் நன்றாக அழுகிறவர். அவர் அழுதால் எல்லோரும் அழுதுவிடுவார்கள். எல்லோரையும் அழவைத்துவிடுவார். மேலும், இறந்த இந்த சித்தப்பாவும் அவரும் உற்ற நண்பர்கள். அடித்து அடித்து விளையாடிக்கொள்வார்கள். அந்த சின்னம்மா வந்தால் இன்னும் ரகளையாகுமே என நாங்களும் காத்திருந்தோம். வந்தார். வந்தவர், நேராக சமையற்கட்டு பக்கம் சென்று என்னை அழைத்து, பெருவிரலை வாயின் பக்கம் வைத்து, சமிக்ஞையில் தண்ணீர் கேட்டார். 

தண்ணீர் குடித்து அமர்ந்த அவரிடம். “ம்மா ஒகே வா?” என்றேன்.

“ஒகேதான் புள்ள, என்னன்னமோ கற்பனை செய்து வந்தால், வாங்கின மூச்சில், கண்ணீரே வத்திப்போச்சு. மூச்சு எரைக்கிது, கால் கையெல்லாம் உதறுது.. எதுவுமே யோசிக்கமுடியல..” என்றார். ஆஸ்த்மா வியாதிக்காரர்களுக்கு வரும் மூச்சு போல், புஸ் புஸ் புஸ் என்று மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது அவருக்கு.

அப்போது நான் கண்ணீர் விட்டேன். சோகத்தில் அல்ல, துப்பட்டாவால் வாயை மூடிக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக சிரித்ததால் வந்த கண்ணீர் அது. ஒரே மாதிரியான அனுபவம் 

எழவு வீட்டில் என்ன சிரிப்புன்னு யாரும் கேட்டுவிடக்கூடாது பாருங்க...!!

ஒரு அற்புதத் தத்துவம் மின்னியது- நம் உடம்பு சோர்வாக இருக்கும்போது, நம்மால், பிறருக்காக அழ முடியாது.