வியாழன், ஆகஸ்ட் 09, 2012

தொடரும் அர்த்தமற்ற மௌனங்கள்

இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன.

இது, நட்பில் நாம் உழன்ற நாட்கள்/வாரங்கள்/மாதங்களின் கணக்கெடுப்பு. இனி நமது பிரிவினைச்சொல்லும் வருடங்களை நான் கணக்கெடுக்கும் நாளாக, இன்றோ அல்லது நாளையோ ஆரம்பமாகலாம். நீ என்னுள்ளே நுழைந்த நாள், எனக்கு ஞாபகத்திலேயே இல்லை. ஆனாலும், பிரிவைச் சொல்லுகிற நாள், நான் மறக்க முடியாத நாளாக அமைந்துவிடுமோ என்றெண்ணி, நீ வராத ஒவ்வொரு நாட்களையும் நான் கவனத்தில் கொண்டு, பொழுதினை நகர்த்திக் கொண்டிருக்கின்றேன்.

நீ, ஆண் நட்பு என்பதால், உனது வருகை எனக்குள் பல அர்த்தங்களைக் கற்பிக்கத் துடித்தன, இருப்பினும், நட்பின் நல்ல உதாரணமாய், தென்றலையே வீசி, காற்றில் தவழும் மகரந்த நறுமணங்களை நுகரவைத்துக் கொண்டிருக்கின்றாய், இன்னமும்.

எனது அனைத்து தீய எண்ணங்களுக்கும், எதிர்மறை சிந்தனைகளுக்கும் தீ மூட்டியது நீதான்; என்றால், நான் மிகைப்படுத்துகின்றேன் என்பாய். உண்மை அதுதான்.

பெண் என்பதால், ஆண் நட்பில் ஏற்படும் சிக்கல்களயும், படபடப்பினையும் என்னிடமிருந்து அகற்றியவனும் நீயே.

நம் நட்பு ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை, நீ என்னை, எந்த விதத்திலும் புண் படுத்தியதே இல்லை. தவறிக்கூட உன்னிடமிருந்து எந்த ஒரு சுடு சொற்களையும் நான் பெற்றதில்லை. உனது எந்த வாசகமும் என்னைக் காயப்படுத்தியதே இல்லை. நான் சிலவேளைகளில் அன்பின் காரணமாக எதையாவது உளறிக்கொட்டினாலும், உன் கனிவான அன்பு, அந்த பொய் கோபத்தையும் இல்லாமல் செய்துவிடும்.

எவ்வளவோ பிரச்சனைகளை நாம் அலசியிருப்போம், பேசியிருப்போம். உன்னிடமிருந்து  தீர்வுகள் உடனே வராது, இருப்பினும் உன் அருகாமை அவற்றையெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்துவிடுவதுதான், இன்னமும் எனக்கு ஆச்சிரியம். 

எத்தனையோ பகிர்வுகளை எனக்குக்கொடுத்திருப்பாய். நல்ல வழிக்காட்டியாகவும் கைபிடித்து நகர்த்துயுள்ளாய். இருளில் நடந்த நொடிகளில் எனக்கு விளக்காய் வந்தவன் நீதானே.

இந்த இரண்டு வருடங்களில் எனது புன்னகையின் பின்னால் நிச்சயம் நீ தான் இருப்பாய். என் அழுகையின் பின்னாலும் நீதான் இருப்பாய், கண்ணீர் துடைத்தவண்ணமாக.

நீ யார் என்பது கூட, எனக்கு இதுவரையிலும் தெரியாது. யாரோ ஒருவருடைய முகம் போட்ட புகைப்படத்தைக் காட்டி, அது நீதான் என்றாய், அதற்கான சான்றுகள் பலமாக பரவலாக இருப்பினும், அது நீதானா என இன்னமும் எனக்குள் குழப்பங்கள் நீள்கிறது.

சில நொடிகளில் குழந்தையாகவும், சில வேளைகளில் துள்ளுகின்ற இளைஞனாகவும், சில பொழுதுகளில் உயர்ந்த, ஞானமுள்ள அறிவுஜீவியாகவும், பல வேளைகளில் மௌன குருவாகவும்  நீ என்னுள் இன்னமும் ஜீவித்துக்கொண்டுதான் இருக்கின்றாய்.

உன்னைக் காதலனாகப் பார்ப்பதா? நண்பனாகப் பார்ப்பதா? குருவாகப்பார்ப்பதா?, எனக்குள் நீளும் குழப்பங்களுக்கு நீயே வந்தாலும் பதில் சொலமுடியாது. ஏனென்றால் உன்னை, உன்னைவிட, நன்கு புரிந்துவைத்திருப்பவள் நான்.  

கிளர்ச்சியைத் தூண்டக்கூடிய விவரங்களும் நமக்குள் பகிரப்பட்டது; அதுவும் ஒவ்வாமையின் கூறுகளாக சிதறி சில நொடிகளில் மறைந்துப்போயின. `ஆண் நான் இப்படித்தான் என்று நீ அடம்பிடித்தாலும், பெண்ணான எனது ஒவ்வொரு உணர்விற்கும், நீ கொடுத்து வந்த சுதந்திரமும்  மரியாதையுமேதான்; இன்று நான், உன்னை உச்சத்தில் வைத்து பூஜிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

புகைப்படத்தில் உள்ள உன் முகத்தைக்கண்டு, என்னால் யூகிக்கவே முடியவேயில்லை.! இத்தனை நாள் என்னோடு பேசியது நீதானா?, யாரோ ஒருவரின் பெயரில், யாரோ ஒருவர் வந்திருக்கலாம்; என்கிற, எனது சந்தேகத்திற்கு உரமிடுவதைப்போல் உள்ளது உனது இந்த, தொடரும் அர்த்தமற்ற மௌனம்.

என்னுடன் நீ நெருங்க நினைத்த போதெல்லாம், நான் சற்று விலகிச்சென்றது, மரியாதைக்காகவே என்றாலும், உன் வருகையையும் அருகாமையையும் ஆரம்பத்தில் நான் அவ்வளவாக விரும்பவில்லை என்பதுதான் நிஜம். உனக்கு என்னிடம் ஏன் இந்த தேவையில்லாத உறவு, என்று கூட பலவேளைகளில் சலித்துக்கொண்ட, அலட்சிய நிகழ்வுகளையும் அசைபோடாமல் இல்லை இந்த மனது.

பூகம்பமோ புயலோ எதாவதொன்றைக் கொடுத்து விட்டுத்தான் செல்லப்போகிறாய், என்கிற எனது மோசமான எச்சரிக்கை மனதும் சமிக்ஞை கொடுத்தவண்ணமாகவேதான் இருந்தது. அந்த உணர்வோடு அப்படியே நான் விலகிச்சென்றிருந்தால், என்னைச் சுற்றி, சுற்றங்கள் இருந்தும், இந்த தனிமைச் சூழலில் சிக்கித்தவிக்கின்ற அவல நிலை வந்திருக்காதே.!

சரி பரவாயில்லை. வரும் போது, உன்னை முழுமனதோடு வரவேற்காத நான், நீ போகும் போது மட்டும் புலம்புவது அழகல்லவே.!

வாசகர்களின் கவனதிற்கு – நாங்கள் இதுவரையில் தொலைப்பேசியில் கூட பேசியதில்லை, இருவரின் கைப்பேசி எண்களும், இருவரிடமும் இருக்கும் பட்சத்தில்...! கண்டிப்பாக பார்த்ததும் இல்லை- வெறும் மெயில் தொடர்புதான் இந்த நட்பு. முகநூல் சகவாசம். 

ஆனாலும் அவனை நான் மனதார நேசிக்கின்றேன். அவன் என்னை விட்டுச்சென்றாலும், என்னிடம், அவன் விட்டுச்சென்ற பண்புகளை நான் விடேன்.