செவ்வாய், அக்டோபர் 23, 2012

நவராத்திரி அறியாமல் கொண்டாடப்படும் திருநாளா?

இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் பெரும்பான்மை மக்களால் கொண்டாடப்படும் முக்கியத் திருநாள்களில் ஒன்று நவராத்திரி ஆகும். 

நவராத்திரி : வடமொழியில் நவராத்திரி என்றால் - ஒன்பது இரவுகள் என்று பொருள்படும். பெயரே சொல்லிவிடும் இது தென்னாட்டு திருவிழா இல்லை என்று. பெரும்பாலும் இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளில் வாழ்வோரும் வேறுவேறு விதமாகவே நவராத்திரியைக் கொண்டாடுகின்றார்கள். அவர்கள் சொல்லும் காரணக் கதைகளும் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றது. 

ப்ரௌஸ்தபாத மாதம், அதாவது இந்திய நாட்காட்டியின் படி ஆறாவது மாதம் பிரதம் திதி முதல் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் நோன்பு நோற்று கொண்டாடுவதே இந்த நவராத்திரி ஆகும். நம் எத்தனை இந்துக்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியாது இது ஒன்று மட்டும் நவராத்திரி அல்ல, ஆண்டுக்கு ஐந்து முறை நவராத்திரிக் கொண்டாடப்படுகின்றது. அவற்றில் மிக முக்கியமானவை குளிர்க்காலம், வசந்தக் காலம் / வெயில் காலம் ஆகியவற்றின் தொடக்கத்தில் கொண்டாடப்படும் இந்த இரு நவராத்திரிகளே ஆகும். 

பின்னணி புனைவுகள் : இந்தக் குளிர்க்காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியே மிக முக்கியமாகக் கருதப்படுகின்றது. இவற்றைப் பிண்ணி பல புனைவுக் கதைகள் இருக்கின்றன, அதாவது ராமன் - ராவணன் யுத்தம் நடந்த காலமாகவும், கிருஷ்ணன் - நரகாசூரனை வதம் செய்ததாகவும், துர்க்கா - மகிஷாசூரனை வதம் செய்ததாகவும் பல புனைவுக் கதைகள் நிலவுகின்றன. உண்மையில் இக்கதைகள் உண்மை இல்லை என்பதை ஒரு ஒற்றுமை பாங்கில்லாமல் கதைகள் உலாவுவதில் இருந்தே அறிந்துக் கொள்ளலாம். அல்லது இதனை ஆரியர் - திராவிடர் மீது தொடுத்த போர்களின் வெற்றியின் பின்னணியில் எழுந்தவையாகக் கூட இருக்கலாம். ஏனெனில் இலங்கையை ஆண்ட ராவணன், அசாமை ஆண்ட நரகாசூரன், கருநாடகத்தை ஆண்ட மகிஷாசூரன் போன்ற திராவிட முதற்குடி மன்னர்கள் அழிவில் இருந்து வந்தவையாகக் கூட இருக்கலாம். ஆனால் இக்கதைகள் ஒன்றுமே நான்கு வேதங்களில் இல்லை என்பதால், இவை யாவும் பிற்கால இடைச் செருகல் என்பதில் ஐயமே இல்லை. 

ஐரோப்பியத் தொடர்பு : ஆனால் என்னைக் கேட்டால் நவராத்திரி பண்டிகை என்பது தாய்வழி சமூகம் சார்ந்த மக்களால் குறிப்பாக மத்திய ஆசியாவில் வாழ்ந்த ஆதி - ஆரியக் குடிகளிடம் இருந்து தோன்றி இருக்க வேண்டும். ஏனெனில் இரண்டு முக்கிய நவராத்திரிப் பண்டிகையும் பெண் தெய்வ வழிப்பாட்டோடு தொடர்புடையாதாக இருப்பதோடு மட்டுமில்லாமல், இலையுதிக் கால முடிவிலும், வசந்தக் காலத் தொடக்கத்திலும் கொண்டாடப்படுகின்றது. அதாவது மத்திய ஆசியா உட்பட ஐரோப்பா பகுதிகளில் இந்த நாளில் தான் குளிர் காலம் மிகச் சரியாகத் தொடங்குகின்றது. அத்தோடு குளிர் கால ஆயத்தங்களைச் செய்யவும், கோடைக் காலத்தில் கிடைத்த விளைச்சல்களைப் பத்திரப்படுத்தவும், விளைச்சல்களுக்கு நன்றி சொல்லவும் இயற்கை அன்னையை அவர்கள் வணங்கி இருக்கக் கூடும் என்றே எனக்குத் தோன்றுகின்றது. 

தென்னாட்டில் நவராத்திரிக் கொண்டாடங்கள் இருந்தமைக்கான சான்றுகள் சங்க இலக்கியத்தில் இல்லை எனலாம், சங்கம் மருவிய காலப் பகுதியில் எழுந்த இலக்கியத்தில் தான் தென்படத் தொடங்குகின்றது. அத்தோடு இந்து மதம் ஆதிக்கம் செலுத்தாத இலங்கை, மியன்மார் போன்ற பகுதிகளில் இப்பண்டிகை இல்லை எனலாம். ஆகவே நிச்சயம் இது வடக்கில் இருந்து வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. 

அத்தோடு இன்று கற்பனைக் கடவுளாகச் சரஸ்வதி, லக்ஷ்மி, துர்க்கா ஆகியோர் இடம்பெற்றுவிட்ட போதும், முன்புக் காலங்களில் விளைச்சலைக் கொடுத்த இயற்கை அன்னைக்கு நன்றி சொல்லும் தினமாகவே இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றச் செய்கின்றது. அத்தோடு வேட்டைக் கருவிகள், விவசாய உபகரணங்களைச் சீர்ப்படுத்திப் பத்திரப்படுத்தி வைக்கும் தினமாகவே ஆயுதப் பூஜைகள் இடம்பெற்றிருக்க வேண்டும். 

இந்தத் திருநாளானாது இரு காலநிலையைக் கொண்ட வெப்ப மண்டலப் பகுதியைக் காட்டிலும், நான்கு கால நிலையைக் கொண்ட குளிர் பகுதிகள் சார்ந்த வாழ்க்கை முறைக்கே பெரிதும் பொருந்திவருகின்றது. 

இயற்கைத் தாய் : மனித சமூகம் நாகரிகம் அடைந்த காலக் கட்டத்தில், அதாவது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவை பெரும்பாலும் தாய்வழி சமூகமாகவே இருந்தது. மண், பெண் இரண்டும் முக்கியமாகக் கருதப்பட்டன. இரண்டும் விளைச்சலைத் தருவதாக எண்ணினார்கள். மண்ணைப் பெண் உருவில் கண்டார்கள். தாய் மொழி, தாய் நாடு, பூமித் தாய், ஆறுகள், குளங்கள் கூடப் பெண்ணாகக் கருதப்பட்டன. ஆகவே ! விளைச்சலைத் தந்த பூமிக்கும், இயற்கைக்கும் நன்றி சொன்னார்கள், படையல் இட்டார்கள், உண்டு மகிழ்ந்து பகிர்ந்துக் கொண்டார்கள். குளிர் காலம் கொடுமையாக இருக்கும் என்பதால் அதற்குத் தேவையான ஆயத்தங்கள் செய்தார்கள். இதுவே நவராத்திரியின் தொடக்கமாக இருந்திருக்கக் கூடும். பின்னர் மத்திய ஆசிய மக்கள் நகர்ந்து நகர்ந்து தெற்கே வரவும், அவர்களின் வாழ்க்கைச் சார்ந்த குண நலங்களும் இங்கும் வந்துவிட்டன. 

கற்பனைக் கடவுளர்கள் : மண்ணைப் பெண்ணாக்கி, கடவுளாகக் கருதிய மக்கள். காலம் செல்ல செல்ல மண்ணை மறந்து பெண் கடவுளர்களை மட்டும் வழிப்படத் தொடங்கி விட்டார்கள். இயற்கை அன்னைக்கு நன்றி சொல்வதை மறந்து கற்பனை தேவதைகளுக்கு நன்றி சொல்லி விழா எடுத்தார்கள், வரங்கள் கிடைக்கும் என நம்பினார்கள். பழங்குடி வழிப்பாடுகள் கட்டமைக்கப்பட்டு வைதிக மதமாக உருமாறிய போது பிராமணர்கள் பல புனைவுக் கதைகளை உருவாக்கி பரப்பி விட்டுள்ளார்கள் என்பது தான் உண்மை. 

ஆகவே ! இன்றைய காலக்கட்டத்தில் இந்தப் பண்டிகை அவசியமா என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் இயற்கை அன்னைக்கு நன்றி சொல்லும் விதமாகவும், குளிர் காலத்தை எதிர்க்கொள்ளவும் திருவிழாக் கொண்டாடுவது பிழையல்ல. ஆனால் ! அதன் அடிப்படைக் குணங்களை மறந்து அதீத கற்பனைக் கடவுள்களை வணங்கியும், உணவு உட்படப் பல்வேறு பொருட்களை வீணடித்தும் ஒரு மாபெரும் விழா தேவையா என்பது தான் எனது கேள்வியே. முக்கியமாகப் பெண்ணை ஒரு மண்ணாகக் கூட மதிக்காமல் அவளை அடக்கி, துன்புறுத்தி, காமப் பொருளாகப் பாவித்து, பாலியல் தொழில் தள்ளிவிட்டு, பாலியல் வன்புணர்வுகள் செய்துவிட்டு, அதிகாரங்களைக் கூடப் பகிர முடியாமல் திணறும் நிலையில் - வெறும் கற்பனையில் உருவகித்துக் கொண்ட பெண் தெய்வங்களை மட்டும் வணங்குவதால் என்ன பயன் சொல்லுங்கள். 

இதற்கு கொலு வைப்பதும், கொலுக்கட்டை அவிப்பதும், பார்ப்பனர்களுக்கு காசினை வாரி இழைப்பதும் ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. சொல்லப் போனால் அடிப்படையில் நல்ல நிலையில் தோன்றிய ஒரு திருவிழா மிக மோசமாக வன்புணரப் பட்டு மாற்றப்பட்டு உள்ளது. 

பெண்ணுக்கு சமமான கல்வி இல்லாமல் கலைமகளையும், பெண்ணுக்கு போதிய சொத்து உரிமைகள் இல்லாமல் திருமகளையும், பெண்ணுக்கு அதிகார பலங்கள் இல்லாமல் மலைமகளையும் வணங்குவதைக் கண்டு என்னால் நகைக்கத் தான் முடிகின்றது. இந்திய மக்கள் வெறும் மரபுகளுக்காகவே எதனையும் செய்பவர்கள், ஆழமாகச் சிந்திக்கவோ, எதார்த்த மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளவோ தவறியவர்கள் என்பதன் வெளிப்பாடே இந்த நவராத்திரி. பெண்கள் சமமாக மதிக்கப்படாமல், பெண் உருவாகக் கருதப்பட்ட நிலமும், நீரும், வளங்களும் சுரண்டப்பட்டு அழிக்கப்படுவதைத் தடுக்காமலும் வெறும் சடங்குகளுக்காகக் குளிர்க்காலப் பண்டிக்கையைக் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை.


தொகுப்பு...
நன்றி இக்பால் செல்வம்.


அவரின் வலைத்தளம், பகுத்தறிவுப்பெட்டகம்.