ஞாயிறு, மார்ச் 15, 2015

குறையொன்றுமில்லை..

தலைநகரில் நடைபெற்ற சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் `குறையொன்றுமில்லை’ என்கிற நூல் வெளியீட்டு நிகழ்விற்குச் சென்றுவந்தேன்.

சிறப்பாக நடைபெற்ற நிகழ்வு அது. இலக்கிய ஆர்வலர்கள் நிறைந்து வழிந்தார்கள் என்பதைவிட, இணைய இதழாகச் செயல்பட்டுவரும் வல்லினத்தின் இலக்கிய ஈடுபாடுகளின் பால் தீராத காதல் கொண்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்று நிகழ்வு சிறக்க பேருதவியாக இருந்தார்கள்.

டாக்டர் சண்முகசிவ அவர்களின் உரையை நன்கு ரசித்தேன். எல்லாம் கலந்த கலவையாக அது அமைந்திருந்தது. நான் என்னை வைத்து உலகத்தைப் பார்ப்பவன். எதிலும் குறைகள் இருப்பதாக எனக்கு எப்போதுமே தோன்றுவதில்லை. சுவாமி அவர்கள் சமுதாயத்தை வைத்து உலகத்தைப்பார்க்கின்றார். அங்கே நிகழ்கின்ற சீர்கேடுகளை இலக்கிய ஆன்மிக பார்வையுடன் கூர்ந்துநோக்கி, அதை அறச்சீற்றமாக மீள்பதிவேற்றி, பத்தி மற்றும் சிறுகதை வடிவில் நமக்குக்கொடுத்திருக்கின்றார். குறைகள் ஆங்காங்கே இருப்பினும் `குறையொன்றுமில்லை’ என்று கூறி தமது நீண்ட உரையை நிகழ்த்திமுடித்தார்.

பாண்டியனின் உரை ஆன்மிகத்தில் இலக்கியம். நமது எல்லா பக்தி இலக்கிய படைப்புகளின் இலக்கியப்பங்கேற்ப்பைப்பற்றி உரையாற்றினார். எல்லா பக்தி இலக்கியங்களைப் பற்றியும் மேலோட்டமாகத் தொட்டு விட்டுச்சென்றார். ஆன்மிகத்தில் இலக்கியம் என்பது பத்துநிமிட பேச்சில் கொண்டுவருவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இருப்பினும் பிசகாமல்  `லேசான’ படபடப்பில் சிறப்பாகவே தமது பங்களிப்பை வழங்கியிருந்தார் பாண்டியன். எனக்கு அவரின் உரையைவிட  எழுத்தின்மேல் கிறக்கம் அதிகம். நன்றாக எழுதுகிறவர்களுக்கு பேச்சுக்கலை தடுமாறும் என்பார்கள்.  

ஆனால், பூங்குழலிக்கு எல்லாமும் அத்துப்படி. மூன்றாவது பேச்சாளர் பூங்குழலி. சுவாமி அவர்களின் `குறையொன்றுமில்லை’ என்கிற நூலை முழுமையாக வாசித்து அதில் அவரைக் கவர்ந்த விஷயங்களை பார்வையாளர்களோடு பகிந்துகொண்டார். சுருக்கமாகப் பேசிய குழலியின் உரை அற்புதம். நுலைப்பற்றி அவர் சொன்னதைவிட, அழகிய தமிழில் குரலின் ஏற்ற இறக்கங்களோடு சொல்லவந்ததை மிக அழகாகப் பகிர்ந்தவிதம் - எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இறுதியாக சுவாமியின் உரை. புத்தகத்தைத்தொட்டு அவர் ஒன்றும் சொல்லவில்லை. வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கிய ஆன்மிக சொற்பொழிவாகவே அது இருந்தது. குறிப்பாக மிக நெருக்கமான ஒருவர் மரணத்தைத் தழுவுகின்றபோது அங்கே மஹா கருணையாளனாக பேரன்பு நிறைந்தவனாக நாம் போற்றி வந்திருக்கின்ற இறைவன், நிஜமாலுமே கருணையாளனா? பேரன்பு நிறைந்தவனா.?   இக்கேள்விகளுக்கு நாம் விடைதேட எத்தனிக்கின்றபோதுதான், இலக்கியம் கைகொடுக்கிறது. இலக்கியமும் ஆன்மிகமும் வெவ்வேறு அல்ல, ஆழமாகச்செல்லுகையில் இரண்டும் ஒரே நேர்கோட்டில்தான் போதித்து நிற்கும். அற்புதமாகப்பேசினார் ஐய்யா அவர்கள்.

``நிகழ்விற்கு வந்துவிடுங்கள். வருகிறேன் என்று சொல்லிவிட்டீர்கள். உங்களின் வரவை உறுதிபடுத்துங்கள். (வரலன்னாத்தான் இருக்கு..!! என்கிறதொனியில், ஒவ்வொரு முறையும் மேசெஜ் வாசிக்கின்ற போது, அரிவாளை கையில் ஏந்திக்கொண்டு மீசையை முறுக்கிக்கொண்டு.. எனக்கு எச்சரிக்கை அழைப்பு விடுப்பதைப்போல் இருந்தது. நவீனின் நினைவுறுத்தல். - மனபிராந்தி..) என்று வல்லின இணைய இதழ் ஆசிரியர் நவீனின் நினைவுறுத்தல். நிகழ்விற்கு முழு பொறுப்பாளரான அவர், எதிலும் பங்குகொள்ளாமல் அமைதியாகவே இருந்தார். சிம்பளாக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். வாழ்த்துகள் நவீன். (மீ கோரிங்க் நல்லா இருந்துச்சி.. ஆனாக்கா உப்பு கூட.)

நிகழ்ச்சியினை அற்புதமாகத்தொகுத்து வழங்கிய என் தம்பியைப்பற்றிச் (தயாஜி) சொல்லியே ஆகவேண்டும். அடேயப்பா, என்ன ஒரு வளர்ச்சி இந்த ஒராண்டில். முன்பெல்லாம் பேச்சில் மொண்ணைத்தனம் அதிகமாக இருக்கும். வளவளா பேச்சில் நகைச்சுவை செய்கிறேன் பேர்வழி என போர்’அடிப்பார் தம்பி. (மன்னியுங்கள் தம்பி). ஆனால் தற்போதைய அறிவிப்பில் எவ்வளவு பெரிய மாற்றம்.! எனக்கே வியப்பாக இருக்கின்றது தம்பி. தெளிவான உரை. நிறைய அறிவுப்பூர்வ எடுத்துக்காட்டுகள். அழகான தமிழ்.  நிதானமான பேச்சு. அழகிய உடல்மொழி. சிறந்த மேடைப்பேச்சாளராக வருவதற்கான அனைத்துத் திறமைகளும் அமையப்பெற்ற ஓர் சிறந்த அறிவிப்பாளராக மிளிர்கின்றீர்கள். எனது மனப்பூர்வ வாழ்த்துகள் தம்பி. நல்லா வருவீங்கப்பா..

தங்கை மணிமொழி, யோகி, விஜி, கவிதா என அனைவரையும் சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன்.

ரயில் விட்டு இறங்கியவுடன், எழுத்தாளர் பாண்டியனை அங்கேயே சந்தித்தேன். டாஃக்சி எடுத்து நிகழ்ச்சி நடக்கின்ற விடுதிக்கு வரவேண்டும். எல்லோரும் ஒரே டாஃக்சியில் ஏறி வந்தோம். டாஃக்சிக்கு பாண்டியன் தான் பணம் செலுத்தினார். மிக்க நன்றி.
அடுத்தமுறை ஏதேனும் நிகழ்வு நடந்தால் - எத்தனை மணிக்கு வருவீர்கள் என்று முன்கூட்டியே சொல்லிவிடுங்கள். ரயில் ஸ்டேஷனின் சந்திக்கலாம். ஹிஹி...

நன்றி நவீன்