வெள்ளி, ஜூன் 29, 2012

மன நோய்

முகநூலில் என் கேள்விக்கு எனது அன்பான நண்பர்கள் பகிர்ந்த ஒர் தொகுப்பு இது.  

மனநோய் ஏன் வருகிறது?

நான் நினைக்கிறேன், தன்னைப்பற்றி ஊர் உலகம் என்ன சொல்லும் என்கிற சிந்தனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்குத்தான் மனவியாதி வரும் போலிருக்கிறது. காரணம் அவர்கள்தான் ஊர் உலக அங்கீகாரத்திற்காக நடிப்பவர்கள்.


குட்டிப்பிசாசு - பகிர்வு
இப்படி தலைப்பு போட்டு கொண்டு இருப்பதாலும், அதை படித்து கொண்டே இருப்பதாலும்


மணிவண்ணன் கோவிந்தராஜ் - பகிர்வு
மனசு இருப்பதால்


பின்னம்பாக்கம் நித்யாநந்த குருமூர்த்தி - பகிர்வு
Thevaiye illaama sindhanai panna ellaa viyaadhiyum varum kkaa...Nallaa rest edunga...

குட்டிபிசாசு - பகிர்வு
அக்காவ எல்லாரும் மனநோயாளியாவே ஆக்கிட்டீங்களேய்யா


இளங்கோ சக்திவேல் - பகிர்வு
இந்த கேள்வியை சீரியஸா எடுத்துக்கிறதா, காமெடியா எடுத்துக்கிறதா? 
 மனநோய்க்கான காரணங்கள் சில.
மன அழுத்தம்,
தனிமை (கூட்டத்தில் இருக்கும் போதும் தனித்திருப்பது),
அன்புக்கு ஏங்குதல், ஏமாற்றம் போன்றவை.

சில நேரங்களில் குட்டிப்பிசாசு போல பேசுபவர்களால் எதிராளிக்கும் மனநோய் வரலாம்.
நான் கேள்விப் பட்டதையே எழுதி உள்ளேன். அதிக விவரங்களுக்கு வலையில் தேடலாமே தோழி.

மதுரை கண்ணன் - பகிர்வு
 நல்லதோ , கேட்டதோ அதிகமாய் பலவீனப்படும்போது ...


ஜெய்லானி - பகிர்வு
‎//மனநோய் ஏன் வருகிறது?// டாக்டருக்கு வேலை இல்லாமல் போய்டும் அதனால் வருது :-)


சதிஷ் ராகுல்
உங்களின் status படிப்பதால்


அந்தோணிராஜ் -பகிர்வு 
உடல் ஆரோக்கியம் போல தான மன ஆரோக்கியமும் உடலை சரியாக பார்த்து கொள்ளாவிட்டால் வியதிகள் தானே வரும் அது போல தான் மனமும்.ஆனால் கடவுள் பக்தி கொண்டவர்களுக்கு மன நோய் வரும் சாத்தியம் மிக மிக குறைவு நல்லதோ கெட்டதோ அங்கே சரணடைந்தால் இல்லை மன நோய்.


K.R.விஜயன் - பகிர்வு
தேவையில்லாத சுமைகளை மனதில் பராமரித்துக்கொண்டிருப்பதால்........ take it easy policy இருந்தால் ஒரு நோயும் வராது. சிரிங்க.............சிரிங்க................சிரிச்சிக்கிட்டே இருங்க அடுத்தவங்க ஒரு மாதிரி பார்த்து கையில் கல்லை தூக்க ஆரம்பித்தவுடன் நிறுத்திடுங்க.......


ஸ்மிலி பிரபு திருச்சி - பகிர்வு
பெரும்பாலும் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக இது அமைந்தாலும்., உன்மையில் ஒருவன் தான் விரும்பியதை சிந்திக்க இயலாமல் சில விஷயங்களால் கட்டுப்படுத்தப்படும் பொழுது சுதந்திர தன்மையை இழந்த மனம் முதலில் ஆழ்ந்த வேதனைக்கு உள்ளாகி இருதியில் மன வியாதியாக உருமாறுகிறது..


 மனிதன் எப்பொழுதும் தான் சுதந்திரமாக இல்லாவிட்டாலும் தன் என்னங்களை சுதந்திரமாக அலைய விட நினைப்பான்.. அதாவது கஷ்டமான வாழ்வாக இருந்தாலும் ஒரு நல்ல சந்தோஷமான வாழ்வை கற்பனை செய்து கொண்டு நாமும் சந்தோஷமாய் வாழ்வோம் என்று நம்பிக்கையுடன் வாழ்வான். எப்போது இந்த சுதந்திரம் பறிக்கப்படுகிறதோ அப்போது அவனுக்கு நம்மால் வாழ முடியாது, நம்மால் யாருக்கும் யாதொரு பயனும் இல்லை என்ற அச்சம் தோன்ற ஆரம்பிக்கிறது, இதுவே மன நோயின் முதல் படி !

சங்கரலிங்கம் விநாயகம்
pengalaal perbaalum...


ஸ்டீல்ஸ் குமார்
appaa........ ippavavathu itha ketkanumnu thonuche!!


பின்னம்பாக்கம் நித்யானந்த குருமூர்த்தி - பகிர்வு 
ஒரு மனிதன் ஒரு காரியத்தை பற்றி நினைக்கும்போதே, அது சரியாக வந்தால் நல்லது, இல்லையென்றால் ரொம்ப நல்லது என்ற மனோபாவத்துடனேயே ஆரம்பிக்கவேண்டும்.எந்த ஏமாற்றமும் தன்னை பாதிக்காத வகையிலே தன் மன நிலையை வைத்துருந்தால்,மனம் சம்பத்தப்பட்ட எந்த அழுத்தமும் வராது சிஸ்டர்.


கவலை இல்லாம்ல் இருந்தால் வராது..


ஸ்ரீவிஜி சொன்னது
இதை அப்படியே ப்ளாக்கில் போடுவேன்.... உங்களின் பின்னூட்டங்களோடு.
சதிஷ் ராகுல்
நல்லது... அப்படியே white லயும் போடுங்க சதிஷ்  

அசைவம்


ஏய் எறும்பே..
சக்கரைக்கு ஆசைப்பட்டு
சுடுநீரில் வெந்து சாகிறாயா!?..
வெள்ளிக்கிழமையும் அதுவுமா
என்னை கொலைக்காரியாக்கி
அசைவ காப்பி
அருந்தவைத்து விட்டாயே.!

வியாழன், ஜூன் 28, 2012

பால்ய தோழி

அக்கா
அண்டி
அம்மா
மேடம்
மிஸ்
சகோ
தோழி
ப்ரெண்ட்
எங்கோ
விஜி.. என 
யார் அழைத்தாலும்
``ஏய், ஏம் புள்ள வீணா கண்டதையெல்லாம்
நெனச்சு கொளம்பிக்கறவ..?’’
அப்படின்னு சொல்ற ஒரே ஒரு ஆரம்பப் பள்ளி தோழி இருக்கா உங்களுக்கு இன்னமும்!?
நீங்கள் கொடுத்து வைத்தவர்..

புதன், ஜூன் 27, 2012

காப்பி நேரம்


இன்று காலையில் கணவரிடம்  பேசிக்கொண்டிருந்த போது (காப்பி நேரம்)  முட்டாள்தனமான ஒரு விவரத்தை வீர செய்கை போல் என்னிடம் பகிர்ந்தார்.

நண்பரின் மகன் 13வயது, அவனுடைய நண்பர்களோடு சேர்ந்து சிகரெட் புகைக்கும் போது கையும் களவுமாக பிடித்து விலாசு விலாசென்று விலாசி விட்டாராம் நண்பர்... அந்த பையனை எனக்கு நன்கு தெரியும். நல்ல மரியாதையான பையன். தலைக்கு மேல் வளர்ந்த பையனை இப்படியா அடிப்பது.! (கூர்ர்ர்ர்....)

ஏன் இன்னமும் இப்படி செய்கிறார்கள் நம்மவர்கள்?

நானும் தான் என் மகன் அந்த வயதில் இப்படி ஒரு காரியத்தைச் செய்யும் போது பார்த்துவிட்டேன். கையும் களவுமாகப்பிடித்து விட்டேன்.

என்ன சொன்னேன் தெரியுமா?

ஐயா, எல்லோருக்கும் இதுபோன்ற ஆசை வரும், அம்மா கூட உன் வயதில், பாட்டி வைத்திருந்த சுருட்டை புகைத்து சுவைத்தேன்.. இருமல் வந்தது.. பிறகு அதைத் தொடவே இல்லை.

எல்லாவற்றையும் பழகிப்பார்க்க ஆசை வரும், தப்பில்லை ஆனால் தொடராதே, உடல் நலக்கேடு. என்றேன். அவ்வளவுதான்.

இன்று கூட அவனின் நண்பர்களுக்கு அந்த பழக்கம் இருக்கின்றதாம் ஆனால் அவனுக்கு இல்லை. இப்போ பதினெட்டு வயது இளஞன் அவன்.

பிள்ளைகளைக் கண்டிக்கும் போது, அந்த வயதில் நாம் என்ன செய்தோமென்று கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்.!

இவனுங்க உலகத்தில் உல்ல அனைத்து அயோக்கியத்தனத்தையும் செய்வானுங்க.. பிள்ளைகள் அப்படியே பொம்மை மாதிரி வளரனுமாம்..
என்ன நியாயம்!

அடித்தால் இன்னும் மோசமாகும் நிலைமை. வெளியுலகம் சென்றுவிட்டால், சுய ஒழுக்கம்தான் பாதுகாப்பு. அதற்கு பெற்றோர்களின் பங்கு என்ன? நாம் சரியான வழிகாட்டியாக இருந்துள்ளோமா!?

வாய் விட்டு சிரித்தேன்

இன்று நான் படித்தவுடன் வாய்விட்டுச் சிரித்த ஒரு எழுத்துப் பதிவு.

``ஏன்ய்யா, உங்கள் எழுத்தாளர்களுக்குள் ஏன் இத்தனை அக்கப்போர். ’’

செவ்வாய், ஜூன் 26, 2012

அசைந்தாடிநான் ஒரு செடி வளர்க்கின்றேன்
கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களாக
ஒரு செடியின் சிறிய கிளை அது.
அதன் வளர்ச்சி
ஒரு குழந்தையின் வளர்ச்சி போல்
அசைந்தாடி அசைந்தாடி
கொஞ்சம் கொஞ்சமாக..
என் நிலையை பிரதிபலிக்கும்
மகிழ்ச்சி என்றால்
அது மலரும்
சோகமென்றால்
அது வாடும்
என் கோபம்
என் விரக்தி
என் காதல்
என் ரகசியம்
என் சூழ்ச்சி
என் வஞ்சகம்
எல்லாம் தெரியும் அதற்கு
இன்றும் என்னோடுதான்
இப்போது அதனருகில் நான்
என் நிலையை கவனித்துக்கொண்டு
இன்று என் உயரத்திற்கு வளர்ந்து விட்டது
என்னை விட வளரும்
இன்னும் இன்னும் இன்னும்
அதனால் நிறுத்திவிட்டேன்
அதன் முன் நாடகமாடுவதை..

பஃக் சங் (Bak Chang)

நான் மலேசியர், மூவினங்களோடு வாழ்வதால், எல்லா இனப் பண்டிகைகளும் எங்களுக்குக் கொண்டாட்டமே.

மலாய்க்காரரகளின் (முஸ்லீம்) முக்கிய பெருநாட்கள் இரண்டு. ஒன்று ரமலான் மற்றொன்று ஹஜ்ஜிப் பெருநாள். அந்த நாட்களில் பலவிதமான பலகாரங்கள் தின்பண்டங்கள் தயார் செய்து அண்டை அயலாரோடு பகிர்ந்து உண்பார்கள். பெரும்பாலும் ஒன்று கூடிய வழிபாடுதான் அவர்களின் விஷேச நாட்களில் முக்கிய நிகழ்வு.நம்மவர்களின் விஷேசங்கள் என எடுத்துக்கொண்டால், வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் வடை பாயசத்தோடு விருந்து என்பது அங்கே மறுக்கமுடியாத ஒன்றாகும். ஒரே மாதிரியான ஒரே விதமான பலகாரங்களை பரிமாறி உண்பது வழக்கம். உலகத்தில் எந்த மூலையில் தமிழர்கள் வாழ்ந்தாலும் வடை பாயசத்தோடு இலையில் விருந்துண்பதென்பதுவே விஷேசம்தான். அதுவே முழுமையான விருந்தாக மனதிருப்தியைக் கொடுத்துவிடுகிறது.ஆனால் சீனர்களை எடுத்துக் கொண்டீர்களென்றால், அவர்களுக்கும் நம்மைப்போல் மாதம் ஒரு முறை விஷேச திருநாள்கள் வரும். அந்த விஷேச திருநாளில் கோவில் வழிபாடு என்பது ஒருபுறமிருந்தாலும், அதற்கென்றே பிரத்தியேகமான ஒரு பலகாரம், பிரதான பலகாரமாகத் திகழ்ந்து, அந்த விஷேச நிகழ்வின் போது அந்த பலகாரமே பிரபலமாகப் பேசப்பட்டும். அந்நாளில் அப்பலகாரம் எல்லா இடங்களிலும் விற்பனைக்கு வருவது இயல்பான ஒன்று.  அந்த நாளைத் தவற விட்டால், அப்பலகாரம் மிகுந்த சுவையுடன் சிறப்பானது கிடைக்காது என்பார்கள் சீனர்கள். (கிடைக்கும் ஆனால் சாதாரணமானதுதான் கிடைக்கும்) ஆக, கிடைக்கின்ற நாட்களிலே சாப்பிட்டுக்கொள்ளவும் என, அவ்விஷேச நாட்களின் போது, வருவோர் போவோரெல்லாம் அந்த பிரத்தியேக பலகாரத்தை கையோடு கொண்டுவந்து கொடுத்து நம்மை திக்குமுக்காடச் செய்துவிடுவார்கள்.முடிந்த சனியன்று, பஃக் சங் என்கிற ஒரு பெருநாளைக் கொண்டாடி முடித்திருந்தார்கள் சீன சமூகத்தினர். அதற்கு முன்பே அப்பெருநாளில் சிறப்பாகப் பேசப்படும் `சங்’ என்கிற பலகாரம் பற்றிய தகவல்கள் எல்லா பத்திரிகைகளையும் அலங்கரித்த வண்ணமாக இருந்தது.

எப்படிச் செய்வது? எப்படி அலங்கரிப்பது? அதன் இலையை எப்படி மடிப்பது? சைவ அசைவ சங் செய்யும் முறைகள்? வயதான மூதாட்டி காலகாலமாக செய்து வரும் சங்’யின் சிறப்பு பற்றிய பேட்டி, இன்றைய தலை முறையினருக்கு சங் செய்யும் எளிய வழிமுறைகள் என, தினமும் இதையொட்டிய தகவல்கள் பத்திரிகையை அலங்கரித்தன. இன்று கூட ஒரு செய்தி; சங் தயாரிக்கும் போட்டியில், மாணவர்கள் பங்கு கொண்டு வெற்றி பெற்ற நிகழ்வை புகைப்படங்களோடு நடு பக்கத்தில் முழுமையாக பிரசுரமாகியிருந்தார்கள்.


 இதுதான் பஃக் சங்

இதை, நேற்றிலிருந்து எனக்குக் கொடுத்த வண்ணமாக இருக்கின்றார்கள் இங்கே உள்ள சில சீனத் தோழிகள். அந்த உணவின் சுவையை சொன்னால் புரியாது, சாப்பிட்டுப்பார்த்தால் தெரியும். அற்புதம். பெரும்பாலும் அவற்றில் பன்றி இறைச்சியை சேர்த்திருப்பார்கள், ஆனால் எனக்கு சைவமாக தயாரித்ததைத் தான் கொண்டுவந்து கொடுப்பார்கள்.  இங்கே எங்களுக்கு (தமிழர்கள்) இதுதான் பெரிய சிக்கல். மலாய்க்காரர்கள் என்றால் மாட்டிறைச்சி இருக்கும், சீனர்கள் என்றால் பன்றி இறைச்சி இருக்கும். இதனாலேயே சில விஷேசங்களுக்கு தமிழர்களை அழைத்தாலும் செல்லமாட்டார்கள். நம்மவர்களின் விருந்து என்றால் இருதரப்பினருக்கும் கொண்டாட்டம்.

இந்த பஃக் சங் பலகாரத்தை காலையிலேயே சுவைத்தவுடன், மதியம் வரை பசி எடுக்கவில்லை. Glutinous  அரிசியைக்கொண்டு தயார் செய்து, மூங்கில் இலையில் மடித்து மணக்க மணக்க அதிகமான தாணியங்களைச் சேர்த்து தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த சங், ஒன்று சாப்பிட்டாலே போதுமானது.அதை எப்படி தயார் செய்வது என சில சீனத்தோழிகளிடம் கேட்டேன்.. “உனக்கு எதுக்கு? நாங்களே கடையில் வாங்கித்தான் சாப்பிடுவோம், தயாரிப்பது பெரிய வேலை, ரொம்ப கஷ்டம். எங்க பாட்டி காலத்தில் செய்வார்கள்.. இப்போ எங்கே..!!!?” என பெருமூச்சு விடுகிறார்கள்.

சீனர்கள் உணவிலேயே நான் மிகவும் விரும்பிச்சாப்பிடுவது இந்த பஃக் சங் தான்.

ரெசிப்பி வேண்டுபவர்கள், இதைச் சொடுக்கவும்

http://www.soshiok.com/article/19483
திங்கள், ஜூன் 25, 2012

இன்றைய உலா

படித்தவை சில

தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை உண்டாக்காது
கடம்பூர் விஜய்

ரொம்ப சலிப்பா, அலுப்பா எந்த வேலையும் செய்யறதுக்கு மனசே வராம இருக்கும் போது ரொம்ப நாளா உங்களை வெறுப்பேத்தறவங்களை, யார்கிட்டயாவது திட்டி புலம்பி பாருங்க அப்படி ஒரு எனர்ஜி வரும், உற்சாகம் பிறக்கும், நான் சொல்லும் போது பைத்தியகாரத்தனமா இருக்கும், ட்ரை பன்னிங்கனா கண்டிப்பா என்னை குருவா ஏத்துகிட்டு ஆசிரமம் ஆரம்பிக்கலாமானு கேட்பிங்க

Read more: http://kathirrath.blogspot.com/2012/06/2.html#ixzz1ymeR3huQ

நீங்கள் காதலிக்கும் பெண் யாரையாவது திருமணம் செய்துக்கொண்டால், உங்களுக்கு தாடி வளராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையேல், உங்களின் காதல் உண்மை என நம்பி அவள் மனமுருகக்கூடும்

#இதெல்லாம் நான் சொல்லவில்லை. படித்ததில் பிடித்தது#


கேட்டவை சில

காலயிலேயே சைக்கிளில் வேலைக்கு வந்த எங்களின் கம்பனி பங்களாதேசி துப்புறவு ஊழியரை, காரில் போலிஸ்காரர்கள் போல் உடை அணிந்து வந்த இருவர், வழிமறித்து அவருடைய கைப்பேசியை பிடுங்கிச்சென்றார்களாம். கலவரமாக உள்ளான் காலையிலிருந்து. வெளிநாட்டுக்காரன் என்ன செய்வான்? இப்படியும் சிலர்!

ஒரே அறையில் தங்கிய இரு ஊழியர்களுக்கு ஒரு சிறிய தகராறு. அதனால் வேறு வீடுபார்க்கச் சொல்லி ஒருவர் விரட்டியதால், அவரின் அனைத்து மின்சாரப் பொருட்களையும், நாசம் செய்து, வயர்களை வெட்டி, முக்கியமான இடத்தில் நீர் ஊற்றி ஷாக் ட்ரீண்ட்மெண்ட் கொடுத்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டு, வீட்டை விட்டே ஓடிவிட்டானம் அவனின் சக ஊழியர், பழுதாகிப்போன மின்சாரப்பொருட்களோடு எங்களின் சர்வீஸ் செண்டர் வாசலில் காலையிலே...

சகுனி படம் சூப்பர்’ன்னு ஒரு ஆள்... நல்ல ரசனை’ங்கோ

நேற்று என் தோழி வந்திருந்தாள் கணவனோடு. அப்படியே அப்போது பார்த்தது போலவே இருவரும். எப்படி? டை தான். நான் அவருக்கும் அவர் எனக்கும் மாறி மாறி டை அடித்துக்கொள்வோம். அவரின் மீசைக்குக் கூட நான் மிக அழகாக டை அடித்து விடுவேன். (நல்ல புருஷன், நல்ல பொண்ணாட்டி போங்க)


உணர்ந்தவை சில

என்னை சிகரெட் வாங்கிவரச் சொல்றான் எங்க பாஸ். (பன்னி.)

இண்டர்வியூவிற்கு அழைப்பு விடுத்தால், ஞாயிறு மட்டுமே ஃப்ரீ அந்த நாளில்தான் வர முடியும் மற்ற நாள் வரமுடியாதாம்.. (தாத்தா கம்பனிதானே, ஞாயிறன்று இண்டர்வியூ வைக்க.!)

நான் அங்கே வந்தால், உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்று கேட்டால் (ஒரு சம்பிரதாயத்திற்கு) `ரோலக்ஸ்’ கைக்கடிகாரம் வேண்டுமாம்.! சரி சாதாரண கைக்கடிகாரம் தானே! என்ன விலை வந்துவிடப்போகிறதென்று விலை விசாரித்தால், ஆக மலிவே மலேசியன் ரிங்கிட் 15,000. (அவ்வ்வ், சாரி, முதல் முறையாக வாக்கு மீறுகிறேன்) ராலக்ஸ் கைக்கடிகாரம் பற்றிகூட தெரியாத ஒரு அப்பாவிப்பெண் நான். என்னிடம் காட்டுகிறார்கள் பாச்சா.! கேடிங்க...

கண்டவை சில

எங்களின் கம்பனி கழிப்பறை தற்போது புதிய பரிணாமம் கொண்டுள்ளது. அதாவது `இரண்டிற்கு’ போய் விட்டு கழுவும் போது, உட்கார்ந்த இடத்திலேயே  அங்கே உள்ள ஒரு ஸ்வீட்சை அமுக்கினால்/திரூகினால் போதும், நீர் சரியாக கழுவ வேண்டிய இடத்தில் பாய்ந்து, சுத்தமாக கழுவி விடும். இது இன்னும் பலருக்கு சரியாக புலப்படாமல், பெண்கள் பலர் பாவாடையெல்லாம் நனைத்துக்கொண்டு வெளியே வருகிறார்கள். இதனால் பழைய பாணியில் உள்ள ஒரே ஒரு கழிவறையில், தமிழ்நாட்டு பொது கழிவறைபோல் எப்போதும் ஃக்யூதான். 


ரசித்தவை சில படிப்பாளிதான் அறிவாளி

``பக்தியில் கவனம் வை’’
அந்த பாப்பாவின் பார்வையைப் பாருங்க! ஹஹஹ

``அம்மா அழாதே, இந்தா பாரு கிலிகிலி, பிடி விளையாடு.’’ஞாயிறு, ஜூன் 24, 2012

ஆறுமணிக்கெல்லாம்

இன்று,

ஆறுமணிக்கு ஒரு நிகழ்விற்குப்போக வேண்டும். தம்பி வாங்கிய புதிய கடைக்கு இன்று ரிப்பன் வெட்டும் நாள்.

சரியாக ஆறுமணிக்கெல்லாம் வந்திடுங்கள், என எல்லோருக்கும் சொல்லியாச்சு.

சரி சும்மாவா போறது? மதிய உணவு முடிந்தவுடன் சில பலகாரங்கள் செய்யலாமே என, பருப்பு வடை மற்றும் பாசிப்பயிர் உருண்டை செய்து எடுத்துச்செல்லலாம் என, அவைகளைச் செய்ய ஆயத்தமானேன்.
கிட்டத்தட்ட ஐந்து மணியாகிவிட்டது எல்லாவற்றையும் செய்து முடித்து சுத்தம் செய்ய.!

விஷேசங்களுக்கு பலகாரங்கள் செய்து எடுத்துச் செல்வதைப் போன்ற ஒரு படபடப்பான வேலை வேறெதும் இல்லை.. அப்பப்பா, சுவையெல்லாம் சரியான இருக்கவேண்டும். நல்லா இருக்குமா இருக்காதா? எல்லோருக்கும் பிடிக்குமா? நேரமெடுத்துச் செய்கிறோமே, சாப்பிடாமல் வீணடித்தால்..! பேன்ற எண்ணங்கள் நம்மை அலைக்கழிக்கும். சில இடங்களில், சிறுபிள்ளைகள் முதற்கொண்டு, `அய்யே அண்டி, நல்லாவேயில்லை..’ என கிண்டல் செய்வார்கள்.

``ஆறுமணிக்கெல்லாம் அங்கே இருக்கணும், இன்னும் நீ என்ன செய்யற அடுப்படியில்?’’ கணவர்தான். ``டீ கலக்கி, எனக்கும் ரெண்டு வடை கொண்டு வா.’’ அவரேதான். அதையும் செய்தாகிவிட்டு, மகனை காலெஜில் கொண்டு விடணுமே, அவர்தான் அழைத்துச்செல்வார். அதோடு இன்னொரு முக்கியமான விஷேசத்தில் அவர் கலந்துகொள்ள வேண்டும். அவருக்கும் சட்டை அயர்ன் செய்யனும்.

நான் கிளம்புவதற்குள், மகனுக்கு, ஒருவார பயன்பாட்டிற்கு தேவையானதையெல்லாம் எடுத்து வைக்கவேண்டும். மிக விரைவாக துணிகளையெல்லாம் அயர்ன் செய்து, அவனுடைய பேக்கில் எடுத்து வைத்து விட்டு, புதிய துணிகளை ஊற வைத்திருந்தேன் அவைகளை கையில்தான் துவைக்க வேண்டும், மிஷினில் போடமுடியாது. அது ஞாபகத்திற்கு வரவே, அதையும் விருவிருவென செய்து, உலர போட்டேன்.

``இரவு உணவு என்ன?’’ என் மகன் தான்.

``மதியம் சமைத்தது இருக்கிறது, அதை சாப்பிட்டுக்கொள் ய்யா.``

``ஹூஹும் முடியாது, கோழி வறுவல் செய்துகொடுக்கிறேன் என்றீர்களே, என்னாச்சு?’’

``எனக்கு நேரமில்லை, நீ இருப்பதை சாப்பிடு, மூணு பேருக்கு, முப்பத்திரெண்டு தடவை சமைக்கணும்.’’

``செய்துக்கொடுங்கள், இல்லையேல், இன்று நான் பட்டினியாக காலெஜ் செல்கிறேன்.!’’

``இருப்பதைச் சாப்பிடு என்கிறேன், என்ன இப்படி புரிந்துகொள்ளாமல்? பார்க்கிறாய் தானே, அம்மா காலையிலிருந்து எங்கேயாவது உட்கார்ந்தேனா.!?’’

``ஏய்,மணியாச்சு,கிளம்பு நீ, நானும் போக முடியாது, நீயும் லேட்டா போனால், எதாவது நினைச்சுக்குவான் உன் தம்பி.’’ அவர்தான்.

இவனிடம் போராடாமல், நான் அவசர அவசரமாக குளித்து, கண்முன்னே இருந்த ஒரு சுடிதாரை அணிந்துகொண்டு, தலையில் நீர் வடிய, தயார் செய்து வைத்திருந்த பலகாரங்களை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக கிளம்பினேன்.

காரின் அருகில் சென்ற போது, ``என்னுடைய சாக்ஸ் எங்கே?’’ மேலிருந்து ஒரு குரல், சத்தமாக.. மகன்தான். பொறுக்காதுங்க, நான் எங்கேயாவது கிளம்பினால்..!

``கீழே கொடியில் இருக்கு, எடுத்துக்கோ.’’ என்று சொல்லி, காரில் அமர்ந்து, சரியாக ஆறுமணிக்கெல்லாம் கடை வாசலில்.

பூஜை நடத்துனர் இன்னும் வரவில்லை. அம்மா இன்னும் வரவில்லை, சாப்பாடு இன்னும் வரவில்லை, தண்ணீர் வாங்கச்சென்றவன் இன்னும் வரவில்லை.. என எட்டு மணிக்குத்தான் ஆரம்பித்தார்கள் நிகழ்வை.! கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சும்மானாலும் உட்கார்ந்திருந்தோம், சில வெட்டி கதைகளை பேசிக்கொண்டு. வீட்டிலேயே இருந்திருந்தால், இன்னேரம் எவ்வளவோ வேலைகளை செய்திருப்பேன். அப்படியே உடம்பில் கம்பளிப்பூச்சி ஓடுவதைப்போல் இருந்தது எனக்கு. ஞாயிறு என்றால் பகலில் கொஞ்ச நேரம் தூங்குவேன். அதையும் இவ்வாரம் தியாகம் செய்தாகிவிட்டது.!

இந்த மாதிரி ஆட்களோடு, இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு, இன்னும் சொச்ச வாழ்வை எப்படித்தான் ஓட்டுவது.? எனக்கே தெரியவில்லை!!!??

பெண் பிழைப்பு...!

வெள்ளி, ஜூன் 22, 2012

மாடலிங் துறை

எனக்கு எதிலாவது ஆர்வம், தேடல் இருந்தால், உடனே கூகுளுக்குச் சென்று அதையொட்டிய தகவல்களை ஏற்கனவே யாரோ ஒருவர் ஆய்வு செய்து திரட்டி வைத்திருப்பதைப் பார்த்து ஆறுதல் கொள்வதில் அவ்வளவாக இஷ்டமில்லை. எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்களை நேரிடையாகச் சந்தித்து, அதையொட்டி அவர்கள் என்ன சொல்கிறார்கள், என்ன நினைக்கின்றார்கள்  என்பதனைத்  தெரிந்து கொள்வதில்தான் அலாதி பிரியம். அதனால் தான் எங்கு சென்றாலும் யாராவது ஒருவரிடம் நான் எதையாவது பேசிக்கொண்டிருப்பேன். எல்லா இடங்களிலும் எனக்கு நண்பர்கள் மிக சுலபமாக கிடைத்து விடுவார்கள்.

ஆக, என் பதிவுகள் சில வேளைகளில் funny யாக இருக்கும். கண்டு கொள்ளாதீர்கள். தவறாக இருந்தால் திருத்தம் செய்யுங்கள் ஆனாலும் இது நிஜம்.

மாடலிங் துறையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என சில நண்பர்களிடம் விசாரித்தேன். நம்மவர்கள்தான் தெரியாதா!

*உடலைக்காட்டி சம்பாதிப்பது

*முட்டாள்கள் செய்யலாம்

*உடல் அழகை பேணிக்காப்பவர்கள், செய்யலாம்

*நமக்கு சரிப்பட்டு வராது - பாரம்பரியம் கலாச்சாரம்’னு ஒண்ணு இருக்கே.

*எனக்க்கு அந்த ஆசை இருந்தது, எங்கப்பா கொன்னுடுவேன்’னு  சொன்னாரு,  அதான் போகல.

*நல்ல பணம் சம்பாதிக்கலாம்

*நிறைய ரசிகர்களைப் பெறலாம்

*பிரபலமாகலாம்

*`என் மகளுக்கு ஆசை இருக்கு, என் மனைவி விடமாட்டாங்க. பெண்பிள்ளைகளை யாரும் கல்யாணம் கட்ட மாட்டார்கள் என்பாள்.’ இப்படி ஒருவர்.


இதையெல்லாம் தண்டி, ஒரே ஒரு சீனத்தோழி சொன்னாள்.

*``அது என்ன அவ்வளவு சுலபமான வேலையா.! அதனுள் எவ்வளவோ இருக்கின்றது கற்பதற்கு. எல்லோரும் சுலபமாகச் சொல்லலாம், அது, இது, அப்படி, இப்படின்னு ஆனால், அழகாக இருந்தால் மட்டும் நுழைந்து விட முடியுமா அந்தத் துறையில்? அதற்காகப் போடப்படும் உழைப்பு அவ்வளவு எளிதானதா? சின்ன குழந்தையிலிருந்து எவ்வளவு ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்து, தியாகங்கள் செய்யவேண்டும் தெரியுமா!? `` என்றாள்உண்மைதான், அந்த வேலை ஒன்றும் அவ்வளவு சுலபமானதல்ல என்பதனை, இரண்டு நாள்களுக்கு முன் எங்களின் நிறுவனம்  புதிதாக வெளியிட்டுள்ள, Touch Screen Monitor ஒன்றினை விளம்பரம் செய்ய, நேராக அந்த மாடலிங் நிறுவனமே இங்கே வந்திருந்தது, அங்கே விளம்பரப் புகைபடங்களுக்கு மாடல்கள் போஸ் கொடுத்ததைப்பார்த்த பிறகுதான் தெரிந்துகொண்டேன், அந்தத் துறையின் இன்னல்களை.

காலையிலிருந்து மாலை வரை நடைப்பெற்றது விளம்பரப் புகைப்படங்கள் எடுக்கும் வேலைகள். மதிய உணவின் போது, உணவுகள் உள்ளேயே வழங்கப்பட்டதால், அந்த வேலைகளில் என் பங்குமிருப்பதால் எனக்கும் அன்று அங்கேயே உணவு வழங்கப்பட்டது. உணவை சுவைத்துக்கொண்டே அவர்களுடன் சில விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

அதாவது, புகைப்படம் எடுக்கத் தயாராகும் போது, அந்த அழகிகளின் கால்களிலும் க்ரீம் மற்றும் பவுடுண்டேஷன் போடப்பட்டது. தலை முதல் கால்கள் வரை ஒப்பனைகள் போடப்பட்டது. வரும்போது சாதரணமாக வந்தவர்கள், ஒப்பனைகளுக்குப்பிறகு ரதிகளானார்கள். ஒரு அறையையே அவர்களின் ஒப்பனைகளுக்காக ஒதுக்கித்தந்திருந்தார்கள் எங்களின்  நிறுவனத்தார்கள்.

அந்த அறையில், உடைகள் காலணிகள் என அடுக்கி வைத்திருந்தார்கள். அங்கே வந்து தான் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டார்கள். உடைகள் மிகவும் கச்சிதமான உடைகள்தான், ஆனால் காலணிகள் பல வர்ணத்தில் மிக உயரமானதாக இருந்தது.  அநேகமாக மாடலிங் துறைக்கு, ஆடைகளின் அளவிற்குத்  தகுந்தாட்போல் மாடல்கள் இருக்கவேண்டும் போலிருக்கிறது. அதனால்தான் எல்லா ஆடைகளும் எல்லோரும் போடும்படி இருந்தது. காலணிகளும் கூட.

அங்கே வந்தவர்களில், முகங்கள் மட்டும்தான் வேறு, மற்றபடி உடலமைப்பு, உயரமெல்லாம் ஒரே மாதிரி, ஒரே அளவுதான். (எந்த அளவுகோளின்படி தேர்ந்தெடுத்திருப்பார்களோ தெரியவில்லை!)

அதாவது மாடலிங் துறையில் ஈடுபடுபவர்களின் கால்கள் மிக அழகாக இருக்கவேண்டுமாம். உயரமாக இருந்து, அழகாக இருந்து, உடல் மெலிந்து, அழகான உடலமைப்பு இருந்தாலும் கால்கள் அழகாக இல்லையென்றால் மாடலிங் துறையிலிருந்து விலக்கப்படுவார்களாம்.

அலங்கரிக்கப்பட்ட பெண்கள், தயார் நிலையில் அந்த Monitor ரின் அருகில் வந்து நிற்கும்போது, ஒரு முழுமையான அழகு அவர்களிடம் தென்பட்டது.

நான் விசாரித்த போது எனக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களில், எம்மாதிரியான கால்களைக்கொண்டவர்கள் இந்த மாடலிங் துறைக்கு வரத்தகுதியற்றவர்கள் என்பதனைச் சொல்லி, அதையும் நிவர்த்தி செய்யலாம், சிறுவயதிலிருந்து சில உடற் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால், என்பதனையும் சொன்னார்கள். (அதிகம் பேசவில்லை தான், இருப்பினும் அவர்களிடம் பேசியதிலிருந்து நான் உள்வாங்கியவை)

எம்மாதிரியான கால் வடிவங்களைக் கொண்டவர்கள் மாடலிங் துறையில் நுழைவது கஷடம் என்பதைப் பார்ப்போம்.

1. O Shape Legs

2. X Shape Legs

3. The leg with chubby ankles

4. Short legs

5. The leg with thick calves

6. The leg with cellulite

7. The leg with thick thighs
இவைகளை ஆரம்பத்திலேயே கண்டு கொண்டு, அதை நிவர்த்தி செய்ய சில வழிமுறைகளை பயிற்சிகளின் மூலம் விடாமல் கடைப்பிடித்து வந்தால், கால்கள் சரியான நிலைக்கு வரலாம், இந்த மாடலிங் துறையில் மின்னலாம்.

இவ்வளவு அழகாக இருப்பது, சில ஜடப்பொருள்களை விளம்பரம் செய்வதற்காகத்தான் என்பதுவே சுவாரஸ்யம் இங்கே.

very interesting field....

வியாழன், ஜூன் 21, 2012

நிழல்

மீனின் நிழல்
நீந்துகிறது

மானின் நிழல்
துள்ளுகிறது

நீரின் நிழல்
நகர்கின்றது

நெருப்பின் நிழல்
அசைகின்றது

எறும்பின் நிழல்
உழைக்கின்றது

நாயின் நிழலும்
வாலாட்டுகிறது

நம்முடையதுதான்
கவலையில் தேய்கிறது...

புதன், ஜூன் 20, 2012

விளையாடு

ஒரு துணியை எடு
இரண்டாக மடி
மனித உருவம் வரை
அதைக் கத்தரி
இரண்டு துண்டுகள் துணி கிடைக்கும்
சிறிய துவாரம் விட்டு
இரண்டையும் மனித உருவம் போல் தைத்துவிடு
தூவாரத்தினுள் பஞ்சுகளைப் புகுத்து
பிறகு அந்த துவாரத்தையும் தைத்துவிடு
இப்போ உன்னிடம் ஒரு பொம்மை
விளையாடு
என்னை விடு..

செவ்வாய், ஜூன் 19, 2012

மனநிலை குளறுபடி

நம் காதால் கேட்கின்ற, கண்ணால் காண்கின்ற சில விஷயங்களை, நாம் ஆராய்வோம் அல்லது யாரிடமாவது பகிர்வோம். இப்படி ஆராயும் போதும் பகிரும் போதும் அதையொட்டிய தகவல்கள் கூடுதலாகக் கிடைக்கபெறும்போது,  அது நமது விழிப்புணர்விற்கு உரமாக இருக்கலாம். அல்லது இதுபோன்ற தேடல்களால், நம் பகுத்தறிவிற்கும் தீனி கிடைக்கலாம்.

பொதுவாகச் சொன்னால், இந்த வழிமுறை என்பது மற்றவர்களின் குறைகளில் இருந்து நாம் பாடம் கற்பது போன்றதாகும். அதற்காக மற்றவார்களின் குறைகளையும் சதா ஆராய்வது நமக்கு இருக்கின்ற பெரிய குறையாகிவிடும், அதுவும் வில்லங்கம்தான்.

என்னைப்பொருத்தவரை எனக்கு எதேனும் வித்தியாசமான தகவல், இதுவரையில் நான் கேட்காத விவரங்களைக் கேட்க நேர்ந்தால், அதையொட்டிய ஆய்வில் இறங்கிவிடுவேன். அல்லது, அவர்களின் விவரங்களை வெளியிடாமல் (பெயர், ஊர், முகவரி ) பேஸ்புக், ப்ளாக், பத்திரிகை என எழுதி பொதுவில் வைப்பேன். எங்கேயாவது யாரவது ஒருவர் அதைப் படித்து விட்டு, தொலைபேசி வழியாகவோ, அல்லது எழுதியோ விளக்கங்கள் கொடுத்துவிடுவார்கள். எப்படியாகினும் தகவல் கிடைத்துவிடும். (சில கடுமையான விமர்சனங்களின் வழியும் இது நிகழும், நான் வாய் கூசாமல், பிறர் கதைகளைப் பேசுகிறேனென்றும் வசைபாடியுள்ளார்கள்.. யார் கதை? நான் யாரைப்பற்றிச் சொல்கிறேனென்று கண்டுபிடிக்க முடியுமா உங்களால்!?, நானே சொன்னால்தான் உண்டு- சொல்வேனா!!? )

இரண்டு நாள்களுக்கு முன், என் தோழி என்னைத்தேடி வந்திருந்தாள். அவள் எல்லா விவரங்களையும் என்னோடு பகிர்பவள். வீட்டில் நடக்கும் விஷயங்களிலிருந்து, மாமியார் கணவர் பிரச்சனைகளிலிருந்து, குழந்தைகள் கல்வி விவரங்கள், அலுவலக பிரச்சனை வரை தொடரும் எங்களின் உரை தினமும்.

அவளின் பிரச்சனைகள் பல, பல வேளைகளின் தேவையே இல்லாத அலட்டலாகவே இருக்கும். என்னைப்பொருத்தவரை, பட்டென்று எல்லோரையும் மிக விரைவாக பகைத்துக் கொள்ளும் சுபாவமுள்ள நான், இவளின் விஷயத்தில் மட்டும் பரிதாபமே மிஞ்சுகிறது. திட்டுவதற்குக்கூட மனம் வரவில்லை.

கிட்டத்தட்ட இருபது வருட கால தோழி அவள். இந்த இருபது வருடங்களிலும், நாள் தவறாமல் எனக்கு  தொலைபேசி அழைப்பு செய்துவிடுவாள். எல்லாவற்றையும் பகிர்வாள். இவளிடமிருந்து தப்பிக்கவே முடியாது என்கிற நிலை சிலவேளைகளில். என்னால் முடிந்த வரையில் அவளின் பிரச்சனைகளுக்குச் செவி சாய்ப்பேன். எம்மாதியான தீர்வுகளை வழங்கினாலும், அவளின் விஷயத்தில் மட்டும் அதே பிரச்சனை மீண்டும் மீண்டும் துளிர்விடும். எதோ ஒரு மனச்சிக்கல் இவளிடம் என்பதை மட்டும் புரிந்துகொண்ட நான், அவளின் நிலையைப் புரிந்து அனுசரித்து அதன் போல் நடந்துகொள்வேன், மனம்நோகாமல்.

மன்னிக்கவும், அவள் அறியாமையின் விளிம்பில் எதிர்நோக்கிய பல பிரசனைகளை நான் பட்டியலிடுகிறேன். இது காட்டிக்கொடுப்பதோ அல்லது கீழறுப்போ அல்ல. ஒரு பகிர்வு தான்.


 • கணவனோடு பிரச்சனை ஏற்பட்டபோது, நள்ளிரவில் என் வீடுதேடி என்னிடம் அடைக்கலம் கேட்டது.


 • முன்பு வேலை செய்த இடத்தில், கூடுதலாக வருமானம் வேண்டியபோது, `பிடிக்கவில்லை என்றால் வேலையில் இருந்து நின்றுகொள்.’ என்று முதலாளி சொன்ன மறுநொடி, வேலையை ராஜினாமா செய்து, அதிக மனவுளைச்சலில் உழன்ற நிகழ்வு. 


 • ஷாப்பிங் சென்றால், தேவையா, தேவையில்லையா என்பதனை ஆராயாமல் கவர்கின்ற பொருட்கள் அனைத்தையும் வாங்கிவிட்டு, மறுநாள் அதை யாரிடமாவது விற்பதற்கு ஆள் தேடுவது.
 • குழந்தைகள் கல்வியில் தேர்ச்சி பெறவில்லையென்றால், மறுநாளே பல புத்தகங்களை வாங்கிக்கொடுப்பது, பலரிடம் ஆலோசனைகள் கேட்பது, டியூசன் ஆசிரியர்களைத் தேடுவது, பொறுப்புள்ள தாயாக உடனே மாறுவது.
 • யாராவது அவளை, பருமனாக இருக்கின்றாய் என்று சொல்லிவிட்டால், உடனே அன்று தொடங்கி மாலை வக்கிங், காலை ஜோக்கிங் என கிளம்பிவிடுவது.


 • உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு, சோறு சாப்பிடக்கூடாது, பொரித்த உணவுவகைகளைச் சாப்பிடக்கூடாது, இனிப்பு கூடாது, காரம் கூடாது, உப்பு கூடாது என்று யாராவது ஆலோசனைகள் வழங்கிவிட்டால், உடனே அவை எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு, வெறும் ஓட்ஸ் மட்டும் சாப்பிடத்துவங்கிவிடுவாள்.


 • எழுபத்தைத்து வயது மாமி, வீட்டு வேலையில் ஒத்தாசை  செய்யாமல்,  சீரியல் பார்க்கின்றார் என்பதற்காக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை,  பிள்ளைகளின் படிப்பைக் காரணம்  காட்டி  துண்டித்து விட்டிருக்கின்றாள்.


 • மெயிலில் சுவாரஸ்ய தகவல்கள் எதேனும் அனுப்பினால், எங்கேயாவது ஒரு மூலையில் இருந்து யாராவது பார்த்து விட்டால், வேலைக்கு ஆபத்து என நடுங்கத்துவங்குவாள்.


 • தன்னை ஒருவன் கண்காணித்துக்கொண்டே இருக்கிறான், அது காதலா?! என்கிற உறுத்தலோடு, படப்படப்படப்பாகி, அவனை அணுகி ஏமார்ந்து பின் அவனைத்தூற்றுவது. (இதுபோன்ற ஏமாளிகளை ஏமாற்றுகிறார்களே அவர்களை என்னவென்று சொல்வது.!?)


 • கணவனைக் காதலித்து, கடுமையான போராட்டத்திற்குப்பின் அவனைக் கரம்பிடித்து, தம்மை விட வயதில் குறைவான அவனை தம்மோடே தக்கவைத்துக் கொள்வதற்காகவேண்டி, அவனின் அனைத்து வேண்டுகோள்களையும் நிறைவேற்றுவது. (oral sex and also anal sex sometimes). அப்போதுதான் அவன் தன்னை விட்டு எவ்வகையிலும் பிரிய மாட்டான் என்கிற நம்பிக்கையில் . ! இந்த வழிமுறைகள்தான் கணவனை நம் கைக்குள் போடும் யுக்தி என்று நமக்கும் போதிப்பது..


 • சுயலாபம் கருதி, ஒரு செய்கையை நியாயப்படுத்துவது.


 • ஒருவரின் முன்னே சிரித்து மழுப்பி பின் அவரை பின்னால் தூற்றுவது.


 • ஒரு விஷயத்தை ஒருவரிடமே விசாரித்து தீர்வு காணாமல், பலரிடம் விசாரித்து, இவர்கள் இதற்குத் தீர்வு இப்படிச்சொன்னார்களே, அவர்கள் அதற்குத்தீர்வு அப்படிச் சொன்னாகளே... என குழம்பி இறுதியில் தம்மையே நொந்துகொண்டு புலம்புவது.


 • தமது வேலையைத் தற்காக்க முதலாளியிடம் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக யாரை வேண்டுமானாலும் அவரிடம் காட்டிக்கொடுப்பது, மாட்டிவிடுவது.


 • நல்ல பெயர் வாங்கப்போராடுவது. யாரிடமும் கோபத்தைக்காட்டாமல் இருப்பது. சிரித்து மழுப்புவது.


 • செய்கிற எல்லாவற்றையும் சரியா தவறா என விசாரித்து விசாரித்து செயல்படுத்துவது. தவறு செய்ய பயப்படுவது.


 • தமக்கு என்னதான் வேண்டுமென்கிற தெளிவே இல்லாமல் எப்போதும் ஒருமாதிரியான போதை மனநிலையிலேயே இருப்பது.


 • புற அழகைக் கொண்டாடுவது, வெளித்தோற்றத்தை எள்ளி நகையாடுவது. அக அழகு என்பது எதுவென்ற தெளிவே இல்லாமல் இருப்பது.. (கடவுளே)


 • பிச்சைக்காரனுக்கு சோறு போட்டாலும் அதை டமார் அடிப்பது.


 • கஷ்டப்பட்டு தேடி வாங்கிய ஆடை அணிகலன்களை யாராவது ந்ன்றாக இல்லை என்று சொன்னால் உடனே அதை நிராகரிப்பது.


இப்படி இன்னும் அவளின் சில மனோபாவங்களை அடிக்கிக்கொண்டே போகலாம். இவ்வளவிற்கும் மேல் எனக்கு அவளிடம் பிடித்த ஒரே ஒரு விஷயம், அவளின் ஆங்கில ஞானம். மிக சரளமாக விளையாடும் ஆங்கிலம். நுணிநாக்கில் ஆங்கிலம் பேசுவாள். ஆங்கிலத்தில் எனக்குத் தெரியாத சில விஷயங்களை அவளிடம் கேட்டால் உடனே அதை விளக்கிச் சொல்லிவிடுவாள். என்னிடம் இல்லாத ஒன்று அவளிடம் இருப்பது அது ஒன்றுதான். அவர்களின் தாய் மொழியே ஆங்கிலம்தான்.. போர்த்துகிஸ் பரம்பரையில் வந்தவர்கள். இடையில்  தமிழர்கள் சிலர் நுழைந்து விட்டதால் மிக அழகான தமிழர்களாகிப்போனவர்கள். அப்பாவிப்பெண் அவள்.

சென்ற வாரம், பணிபுரியும்  இடத்தில் அவள் மயங்கி விழுந்துள்ளாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, பரிசோத்தித்து உள்ளனர். அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவளுக்கு எந்த நோயும் இல்லை. அவளின் வியாதி Panic Attack என்றும் அவள் நல்ல மனநல மருத்துவரைக் கண்டு கவுன்சிலிங் செய்துகொள்வதுதான் சிறப்பு என்று சொல்லி வீட்டிற்கு அனுப்பியுள்ளார்கள்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவள், மறுநாள் என்னை அழைத்து `நான் பைத்தியமா?’ என்கிற கேள்விகளோடு என்னை துளைக்க ஆரம்பித்துள்ளாள்.

நான் இப்போதுதான் எனது தேடலைத் துவக்கியுள்ளேன். Panic Attack என்கிற வியாதியின் கூருகளையும் அவைகளைக் களையும் வழிமுறைகளையும் என்கிற தலைப்பில் கூகுளில் சென்று ஆராயத்துவங்கியுள்ளேன்.

தெரிந்தால் பகிருங்கள்.. நம்மைச்சுற்றி இருக்கும் சில நண்பர்களுக்கு உதவலாம்.

திங்கள், ஜூன் 18, 2012

ஓசை


உன் 
ஊடலின்
விசும்பலும்
ஓசையாக
சத்தமில்லா என் உலகத்தில்சத்தமில்லா
என் உலகத்தில்
உன் ஊடலின்
விசும்பலும் 
ஓசையாக


ஓசையுள்ள
என் உலகத்தில்
சத்தமில்லா உன் ஊடல்
விசும்பலாக

வெள்ளி, ஜூன் 15, 2012

குறைதான்

விட்டுப்போனாலும்
விலகிச்சென்றாலும்
விட்ட குறை தொட்ட குறை
விடுமா என்னை!?

விம்மி அழுதாலும்
விசும்பலோடு நின்றாலும்
விதியே வலிமையல்லவா
விடுமா என்னை!?

விருப்பமில்லை
வழக்கு இல்லை
விலகவில்லை
வலியே நீ மட்டும் ஏன்? போ..

வியாழன், ஜூன் 14, 2012

பிரபலமாகிப்போன சொல் வழக்கங்கள்

இந்துக்கள் மத்தியில் மூடப்பழக்க வழக்க முறைகளைக் கடைப்பிடிப்பதென்பது, உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் தவிக்க இயலாத ஒன்றுதான்.  பழமையில் பாரம்பரியத்தில் உள்ள எதைக் கட்டிக் காக்கின்றார்களோ இல்லையோ முக்கியமாக மூட நம்பிக்கை மூட பழக்கவழக்கங்களை விடாமல் தொன்று தொட்டு வழிவழியாக கட்டிக்காத்து தமது சந்ததிகளுக்கு விட்டுச் செல்கின்றனர். பல விஷயங்கள் பொக்கிஷமாக இருந்தாலும் சில விஷயங்கள் இன்னமும் தலைவலிதான்.

மூட நம்பிக்கை என்பதனை ஆய்வுகள் செய்துக்கொண்டே போனால், அதன் முடிவில் அற்புதமான விஞ்ஞான விளக்கங்கள் கிடைக்கப்பெறலாம். உதாரணத்திற்கு; அசர, ஆலமரத்தைச் சுற்றினால் குழந்தை பாக்கியம், வேப்பமரத்தில் பேய், இரவில் உணவுகளை எடுத்துச்செல்லும் போது கரித்துண்டு வைப்பது, இரவில் நகங்களை வெட்டுவது, வீடு பெருக்குவது, தை மாதத்தில் விஷேசங்கள், ஆடியில் தள்ளிவைப்பது, சித்திரையில் குழந்தை வேண்டாம், இடது கையால் எதையும் கொடுக்காதே பெறாதே.. என இப்படி இன்னும் அடிக்கிக்கொண்டே போகலாம். இவைகளை ஆராய்ந்தால், கண்கள் அகல விரிகின்ற அளவிற்கு அற்புதமான அறிவியல் விளக்கங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். நமது முன்னோர்கள்  மூடர்கள் அல்ல என்பதனை இதன் மூலமாகவும் அறிந்துக்கொள்ளலாம்.

இதையும் தாண்டி சில மூட வழக்கங்கள், பேச்சு வழக்கில் வழிவழியாக வந்து ஒட்டிக்கொண்டு, பாட்டன் முப்பாட்டன் காலந்தொட்டு இன்று இந்த நவநாகரீக காலத்திலும் தொடர்ந்து கடை பிடித்து, பிரபலமாகி நமக்கு நகைப்பை ஏற்படுத்திய வண்ணம்!.

இதற்கும் அர்த்தங்கள் உண்டு, உண்மை உண்டு என்று விளக்கங்கள் கொடுக்க நேரலாம், அப்படியே கொடுக்க நேர்ந்தாலும் அவை நகைப்புக்குரியதாகவே இருக்குமென்பது என் கணிப்பு.

அவற்றில் சிலவற்றை இங்கே நான் பட்டியலிட்டுள்ளேன். இது குறித்து என் தோழிகள் சிலரிடம் விசாரித்தேன். பலர், இரவில் நகம் வெட்டுவது, வெள்ளிக்கிழமை பணம் கொடுப்பது, சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, புது வீட்டில் பூசணி, எழுமிச்சை கட்டுவது, இறப்பு நடந்துவிட்டால் கோவிலுக்குச் செல்லாமல் இருப்பது, வேப்பமரத்தை சுற்றுவது, அரச மரத்தைச்சுற்றுவது போன்றவற்றைத்தான் உதாரணம் சொன்னார்களேயொழிய, நான் கேட்கவிருப்பதை யாருமே புரிந்துக்கொள்ளவில்லை. ஆக, நானே யோசித்து யோசித்து சிலவற்றை இங்கே.!


* கொள்ளு சாப்பிட்டால், குதிரை போல் வேகமாக ஓடலாம்.

* உடும்பு இறைச்சி, இடுப்பு வலிக்கு நல்லது.

* நண்டு சூப் குடித்தால், சளி பிடிக்காது

* பப்பாளி சாப்பிட்டால் கர்ப்பம் கலையும்

* அன்னாசிப்பழம் கர்ப்பவதிகள் சாப்பிடக்கூடாது

* பால் சுறா மீன் சாப்பிட்டால், தாய்மார்களுக்கு பால் சுறக்கும்.

* மாதவிடாய் சமையத்தில், பெண்கள் நாயிற்கு சோறு போட்டால் வயிறு அதிகமாக வலிக்கும்.

* புதிதாகக வயதுவந்த பெண்பிள்ளைகள் ஆண்களைப் பார்த்தால், முகப்பருக்கள் வரும்.

* கண்கள் துடித்தால், வீட்டிற்கு விருந்தாளிகள் வருவார்கள்

* மூக்கு அரித்தால், யாரோ நம்மை கோள் பேசுகிறார்கள்.

* புரை ஏறினால், யாரோ நம்மை நினைக்கின்றார்கள்.

* காக்கா வலிப்பு வந்தால் சாவி கொத்தைக் கொடுப்பது.

* தும்மல் வந்தால் ஆயுசு நூறு

* புதிய செருப்பை நமது பற்களால் முதலிலே கடித்து விட்டால், அது நம்மைக் கடிக்காது

* மருதாணி சிவந்தால், புருஷனுக்கு அன்பு அதிகம்

* சிகப்பு ஆடை அணிந்தால் மாடு முட்டும்

* வெற்றிலை போட்டு சிவந்தால் கோழி முட்டும்

* அரிசி சாப்பிட்டால் திருமண நாளில் மழை பெய்யும்

* பாம்பு படம் எடுக்கும்

* தலைப்பிரசவத்தில் பிறந்த பிள்ளையைத் தான் இடி மின்னல் தாக்கும்

* தவறு செய்துவிட்டால், துண்டு போட்டுத்தாண்டனும்

* போகும் போது, எங்கே போறீங்க? ன்னு கேட்கக்கூடாது

* சிட்டுக்குருவி லேகியம் சாப்பிட்டால் இளமைத்துள்ளலோடு வலம் வரலாம் (ப்பச்ச்... குருவி செத்துப்போகும்)

* கண்ணாடி உடைத்தால், சகுனம் சரியில்லை

* மலத்தில் காறி உமிழ்ந்தால் தொண்டை கட்டிக்கொள்ளும்

* மிளகை நெருப்பில் போட்டால், முகப்பருக்கள் உதிரும்

 * நாய் பூனை மலங்களை வாரி விசி சுத்தம் செவ்வோர் வைக்கும் குழம்பு மணக்கும்

* காய்ந்த மிளகாயில் திஷ்டி கழிப்பது

இன்னும் இருக்கலாம், கடல்தாண்டி வந்த எங்களுக்கே இவ்வளவு தெரிந்திருக்கும்போது,  அங்கேயே உள்ள (தமிழ் நாடு) உங்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கனும்.!!! தெரிந்தால் சொல்லுங்கள்/பகிருங்கள்.புதன், ஜூன் 13, 2012

சில சேரிங்

நகவெட்டியை யாராவது இரவல் கேட்டால், உங்களுக்குக் கோபம் வருமா?
எனக்குக் கோபம் வரும்.

ஞாயிறு இரவன்று, என் மகனை, அவன் பயிலும் காலெஜில் விட்டு வரக் கிளம்பும் வழியில், ஒரு ரெஸ்டரண்டிற்குச் சாப்பிட அழைத்துச்சென்றேன்.

என் மகனுக்கு ஒரு பழக்கம் உண்டு, கரண்டியில் சாப்பிடமாட்டான். என்ன அற்புதமான வெஸ்டன் ஃபூட் உணவகத்திற்கு அழைத்துச் சென்றாலும், தமிழர்கள் பாணியில் கைகளைக் கொண்டு பிய்த்து எடுத்து உண்பதுதான் அவனின் வழக்கம். சரி அது அவன் பாணி. கொஞ்சம் நாகரீகமாகச் சாப்பிட மட்டும் கற்றுக்கொடுப்பேன் காரணம் பல இனங்கள் ஒன்றாக அமர்ந்து உண்ணும் இடங்களில், கைகளைக்கொண்டு பிய்த்து இழுத்துச் சாப்பிடுவதென்பது, கொஞ்சம் அநாகரீகமாகவே பார்க்கப்படுவதால், அதை மட்டும் கவனத்தில் வைத்துக்கொள்ள ஆலோசனைகள் வழங்குவேன்.

எப்போதும் கைகளைப் பயன்படுத்திச் சாப்பிடுகிறவர்கள் தங்களின் கைகளைச் சுத்தமாகவும் நகங்கள் வெட்டப்பட்டுத் தூய்மையாக இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டுமா இல்லையா.!?  இதனாலேயே, ஆளுக்கு ஒரு நகவெட்டியை ஹென்பேக் அல்லது கார் சாவிக்கொத்தில் எப்போதுமே மாட்டி வைத்திருப்பேன், அதோடு வீட்டிலும் ஸ்பெராக ஒரு நகவெட்டி எப்போதுமே இருக்கும்.  என்னைப்பொருத்தமட்டில் அது ஒரு அத்தியாவசிய ஆயுதம்.

அவன் சாப்பிடும் போது, அவனின் கைகளைப் பார்த்தால், நகங்கள் கொஞ்சம் நீளமாக வளர்ந்து அதன் உள்ளே அழுக்கு போல் கருப்பாகவும் தென்பட்டது.

`என்னது இது? நகம் வெட்டவில்லையா?’

`ஒ ஓ..மறந்துட்டேன்.’

`என்னது மறந்துட்டியா? பார்க்க அப்படி தெரியவில்லையே! நீண்ட நாட்கள் வெட்டாமல், அப்படியே விட்டது மாதிரி இருக்கே.!’

`ஆமாம், நக வெட்டி காணாமல் போய்விட்டது.’

`காணாமல் போனால் என்னிடம் சொல்லவேண்டியதுதானே. இப்படி அழுக்கேறிய நீண்ட நகங்களோடு சாப்பிடுவாயா?’

`ம்ம்ம்...’

`வேண்டாம்,  கைகளை பயன்படுத்தாதே, கரண்டியில் சாப்பிடு.!’

`அம்மா மானத்தை வாங்காதீர்கள், என்னால் கரண்டியைக்கொண்டு சாப்பிட முடியாது என்று உங்களுக்குத்தெரியும்தானே..’

`அய்யோடா, நகங்களை அழுக்காக வைத்துக்கொண்டு சோறு திங்கும் இவருக்கு மானமிருக்காமே.!!! அம்மாவுடைய நகவெட்டியைத்தறேன், எடுத்துச் சென்று நாளை மதியம் சாப்பிடுவதற்குள், ஒழுங்காக வெட்டிவிடு நகங்களை. ஒகே.’’

`வேண்டாம், நான் கூட்டாளியோட நகவெட்டியைக் கொண்டு வெட்டிக்கொள்கிறேன்.’’ .

`கூட்டாளியோட.. நகவெட்டியையா?? ’

`ஏன்மா கொலவெறி? வாங்கினா என்ன?’

`உள்ளாடைகளை இரவல் கேட்பதைப்போல், இந்த நகவெட்டியை இரவல் கேட்கும் செய்கை. உனக்கு வெட்கமா இல்லையா?. இதையெல்லாம் இரவல் வாங்குவது அநாகரீகம்.’

`நாங்க எங்க நண்பர்களுக்குள்ளே இதெல்லாம் சகஜம்’ம்மா...’ என்றான்

எனக்கென்னவோ, நகவெட்டியை இரவல் வாங்கி, நகங்களை வெட்டுவது அருவருப்பான செய்கையாகவே படுகிறது. நமது அசுத்தங்களை வெட்டிய ஒரு பொருள் எப்படி அடுத்தவர்களுக்கு இரவல் கொடுப்பது. அடுத்தவர்களின் அசுத்தங்களை வெட்டிய ஒரு பொருளை எப்படி நாம் பயன்படுத்துவது.!?

எப்போதோ எங்கேயோ படித்த ஞாபகம். நகவெட்டியை பகிர்ந்து பயன்படுத்துவதால், இதன் வழி கூட  தொற்றுவியாதிகள்  தொற்றிக்கொள்கிற சாத்தியம் இருக்கின்றதாம். குறிப்பாக ஏயிட்ஸ். இதில் விழிப்புணர்வு அவசியமாகப் படுகிறதுதானே.!

இதுக்குத்தான் அந்தக்காலத்திலேயே  பெண்களை கல்விகற்க அனுப்பவில்லை போலும். எதையாவது படித்துத் தெரிந்து கொண்டால், அது மைண்ட்’யில் ஓடிக்கொண்டே இருக்கும். பெண்களுக்கு எச்சரிக்கை சமிக்ஞை கொடுத்தவண்ணமாக இருக்கும். இல்லையேல் இன்னமும், கணவன் பயன் படுத்தும் துண்டுகளையே இவர்களும் பயன் படுத்துவார்கள். கணவன் துலக்கும் பல் துலக்கியையே இவர்களும் பயன் படுத்துவார்கள். கணவன் சாப்பிட்டு வைத்த எச்சில் தட்டிலேயே இவர்களும் சாப்பிடுவார்கள். கணவன் கைகழுவச் செல்லுகையில், தமது புடவையில் துடைத்துக்கொள்ளுமாறு முந்தியை நீட்டுவார்கள். ஒரே சோப்பில் (நுரைக்கக்கி) குடும்பமே குளிப்பது.. என இன்னமும்  தொடர்ந்திருக்கும்,  நமது பாரம்பரியம்.

என்ன நாஞ்சொல்வது?

(“நீ வேண்ணா பாரு, கெழவியா ஆகி, எந்த முதியோர் இல்லத்தில், நாய் சாப்பிடும் தட்டில் உனக்கு சோறு கொடுக்கப் போகிறார்களோ  தெரியாது.’’)

இது போன்ற சாபங்கள் நான் பலமுறை வாங்கியிருப்பினும், தயவு செய்து அதுபோன்ற சாபங்களை வாசிப்போர் முனகாமல் இருப்பது நல்லது.! :P 

செவ்வாய், ஜூன் 12, 2012

அசம்பாவித வியூகங்கள்

நமக்கு நிகழ்கின்ற அல்லது நிகழ்ந்து விட்ட சில அசம்பாவித விடயங்களை அசை போட்டுப்பார்த்தோமேயானால், சில நிகழ்வுகளின் போது மயிரிழையில் உயிர் பிழைத்திருப்போம். அல்லது சில சம்பவங்கள், நிகழாமல் நமக்கு மிக நெருக்கமாக வந்து உராய்ந்து விட்டுச் சென்றிருக்கும்.

உதாரணத்திற்கு -  சாலைவிபத்துகள் (கார் ஓட்டுவதால், இந்த அனுபவம் எனக்கு அடிக்கடி நேரும்), - நாம் செல்லவிருந்த விமானம் நடுவானில் வெடித்து நொறுங்குவது - நாம் நின்ற இடத்திலிருந்து ஒரு அடி நகரும் போது, அங்கே ஏதாவது ஒரு கனமான பொருள், நாம் நின்ற இடத்திற்கு நேராக கீழே விழுவது -  என இப்படி இன்னும் சில உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இதுபோல் பலருக்கும் நிகழ்ந்திருக்கலாம். அதிர்ச்சியில், வார்த்தைளால் வெளிப்படுத்த முடியாமல், வாயடைத்து நின்றிருப்போம். நாம் மயிரிழையில் உயிர் தப்பிய அச்சம்பவங்களின் சாத்திய அசாத்திய கூருகளை நம்மைச்சுற்றி இருப்பவர்களிடத்தில் கூறுபோட்டு வியந்துகொண்டிருப்போம்.

`அப்படி நிகழ்ந்திருந்தால்!!? நல்ல வேளை!! கொஞ்சம் தவறியிருந்தால்!! அப்போதுதான் அங்கிருந்து வந்தேன்..!! இந்நேரம்..!!’ என நாமாகவே சில சாத்தியங்களை யூகித்துக்கொண்டு, தப்பித்துப் பிழைத்ததை எண்ணி  மனம் நெகிழ்ந்து கொள்வோம்.  அத்தருணத்தில், நாம் வணங்கி வருகின்ற நமது காவல் தெய்வங்களுக்குக் கூடுதல் மரியாதை செலுத்தி, சில  விஷேச பூஜைகளைச் செய்து, நமது நன்றி விசுவாசத்தைப் பறை சாற்றிக்கொள்வோம்.

சிலவேளைகளில், நாம் முற்பிறவியில் எதோ ஒரு புண்ணியம் செய்திருக்கவேண்டும், அதனால்தான் இன்று இந்த அசம்பாவித சம்பவம் என்னை ஒன்றும் செய்யவில்லை, என்றும், இல்லையேல், பெற்றவர்கள் செய்த புண்ணியம் நம்மைக் காப்பாற்றியது என்றும், இல்லையேல், நம் பெயர் கொண்ட யாரோ ஒருவரை, எங்கோ ஒரு மூலையில், எதோ ஒரு நல்ல காரியத்திற்காக, யாரோ ஒருவர் மனதார வாழ்த்திக் கொண்டிருக்கக்கூடும் என்றும் நினத்து, வியந்து கொண்டு  மன ஆறுதல் அடைந்து, மனதிற்குள் முனகிக்கொண்டு, மார்பின் மீது கைவைத்து பெருமூச்சு விட்டுக்கொள்வோம். 
இதுபோன்ற நிகழ்வுகள் என் தோழிக்கு நிகழ்ந்ததைப்பற்றிப் பேசுகையில்,  நிகழ்வுகள் சுவாரஸ்யமாகச் செல்லவே, எனக்கும் நிகழ்ந்துவிட்ட சில சம்பவங்களை நினைவுகூரலாமே என, நானும் சில விஷயங்களைச் சொல்லி பதிவிடுகிறேன். -

1. குட்டையில்..

என் தம்பிகள், அவர்களின் நண்பர்கள் என, அவரவர் வீட்டைச் சுற்றும் சில சொரி நாய்களைக் குளிப்பாட்டுவதற்காக வீட்டின் அருகாமையில் இருக்கின்ற குட்டைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். பள்ளிவிடுமுறை என்றால் பொழுதைக் கழிப்பதற்கு இப்படி எதாவதொரு வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவது இவர்களின் பொழுதுபோக்கு.

பெற்றோர்கள் அனைவரும் இவன்களையெல்லாம் கடுமையாகக் கண்டித்து, அடித்து அடக்கிவைக்கப்பார்த்தும் இவன்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. இளங்கன்று பயமறியாது என்பதைப்போல விடுமுறையென்றால் எதாவதொரு காரணத்தைக் காட்டி எங்கேயாவது விளையாடச்சென்று விடுவார்கள்.

அப்படி அவர்கள் அடிக்கடி விளையாடச்செல்லுமிடமான அந்தக் குட்டை மிகவும் ஆபத்தான இடம். மேலே நீர் தெளிவாக இருப்பதைப்போன்று இருந்தாலும், அதனின் அடி பாகம் சேறும் சகதியும் நிறைந்தது. நமது கால்களை நாம் உள்ளே வைத்தால், அது அதனின் வேலையைக் காட்டத்துவங்கிவிடும். படு வேகமாக நம்மை விழுங்கிக்கொ(ல்லு)ள்ளும்.

இதனின் அபாயத்தை பலமுறை எடுத்துச் சொல்லியும் இந்தப் பொடிப்பையன்களில் மத்தியில் எடுபடாமலேயே போனது. எப்படியாவது பெற்றோர்களுக்கு `டிமிக்கி’ கொடுத்து விட்டுச் சென்றுவிடுவார்கள்.

ஒருமுறை, அக்குட்டையில் மூழ்கி, இவர்களின் நண்பர்களில் மூவர் பலி. இதே நாய் குளிப்பாட்டும் வேளையின் போதுதான் இச்சம்பவம் நிகழ்ந்ததுள்ளது. மூழ்கியவர்கள் யார் யார் என்றால், என் தம்பிகளின் பெயர் இல்லை. பலியான இவர்களுடன் தம்பிகளும் சென்றுள்ளனர் நாய் குளிப்பாட்டுவதற்கு.

ஆனால் தம்பிகளைக்  காணவில்லை. வீட்டில் அப்பா எரிமலையாய் வெடித்துக்கொண்டிருந்தார்.. அம்மாவிற்கு அடிவிழாத குறையில் ஏச்சும் பேச்சும் சரமாரியாக விழுந்துகொண்டிருந்தது.

எங்களின் வீடு மட்டுமல்ல அந்த `ஏரியா’வே மரண ஓலத்தில் மூழ்கியிருந்தது.  ஒரே பரபரப்புச்சூழல். ஆட்கள் இங்கேயும் அங்கேயும் விரைந்து ஓடிக்கொண்டிருந்தனர், அலாரங்கள் ஒலிக்கும் போலிஸ் வாகனங்கள், அம்புலன்ஸ் என அமளியாய் அவ்விடம். மக்களின் கதறல் ஒருபுறம். மறக்கமுடியாத ஒரு சூழல் அது.

அப்பா இவன்களைத் தேடத்துவங்கி , கண்டுபிடித்து, அங்கேயே உள்ள செராக் கட்டையால் செம்மையாக விளாசியுள்ளார். வலிபொறுக்காமல் வீடோடி வந்த இவன்களை அம்மாவும் கோபத்தில் விளாசு விளாசு என விளாசினார்.. கோபம் விரக்தி படபடப்பு, மகிழ்ச்சி என எல்லாம் கலந்துவந்த அவர்களின் உணர்வுகள் தம்பிகளை அடிப்பதில் வெளிப்பட்டது.
இரவுவேளையின் போது எல்லாம் ஓரளவு ஓய்ந்த பின்னர், தம்பிகளிடம் நடந்தனவற்றைப் பற்றி விசாரித்தோம். எங்கே போனீர்கள்? எப்படி உன் நண்பர்கள் மட்டும் குட்டையில் சிக்கிக்கொண்டார்கள்?  என கேட்டோம்.

எல்லோரும் ஒன்றாகத்தான் நாய்களைக் குளிப்பாட்ட அழைத்துச் சென்றார்களாம். போகும் வழியில், சீனன் ஒருவன் வைத்திருக்கும் பன்றிக்கொட்டகையில் புதிதாக நிறைய பன்றிகள் வந்து இறங்கவும் அவைகளைக் காண அங்கேயே அமர்ந்துகொண்டார்களாம். பற்றிகளை, ரப்பர் குழாயை, நீர்க்குழாயில் பொருத்தி, நீரைப் பாய்ச்சியவண்ணம் அவைகளைக் குளிப்பாட்டுவதைப் பார்ப்பதற்கு பரவசமாய் இருந்ததாம். அதனால் அங்கேயே இருந்துகொண்டார்களாம். பொறுமை இழந்த நாய் அவ்விடத்தை விட்டு ஓடிவிடவும், அன்று குட்டைக்குச்செல்லாமல் தப்பித்துள்ளனர்.

ஒருஓரத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த அம்மா, பெருமூச்சுடன்....
`இறைவன், வராக அவதாரம் எடுத்து பசங்களைக் காப்பாற்றியுள்ளார்.’ என்று, கைகளைக்குவித்து இறைவனை வணங்கினார்.


2. கேஸ்.

ஒருமுறை, இரவில் வைத்த முட்டைக்குழம்பை காலையில் சூடுகாட்டுவதற்காக கேஸ் அடுப்பை மூட்டி, குழம்புப் பானையை அதன் மேல் வைத்துவிட்டு, மறந்தாட்போல் வேலைக்கு வந்துவிட்டேன். அப்போதெல்லாம் காலைவேளையிலே  குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவேண்டிய பரபரப்பில் சில விஷயங்கள் மறந்தே போகும்.

இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டதை, கொஞ்சங்கூட நினைவில் வைத்துக்கொள்ளாமல், வேலைக்குச் சென்றுவிட்டேன்.

வேலை முடிந்து வீடு திரும்புகையில், பக்கத்து வீட்டு மலாய்க்கார அண்ணன், உங்களின் வீட்டில் ஏதோ தீஞ்ச வாடை வந்தது, ஏன் காலையிலே எதாவது தீயவைத்து விட்டாயா? என்று கேட்டார். அப்போதுதான் அச்சம்பவம் என் நினைவிற்கு வர, அரக்கப்பறக்க அடுப்பங்கரைக்கு ஓடிச்சென்று பார்த்தால், பானையில் உள்ள குழம்புமுட்டைகள் அனைத்தும் வெடித்துச்சிதறி, குழம்பு கருகி.. பானையே கரிக்கட்டையாகி விட்டிருந்தது...

ஏன் தீப்பிடிக்கவில்லை? என்றால், கேஸ் முடியும் தருவாயில் இருந்ததால், பாதியிலே தீ அணைந்து, தீப்பிடிக்காமல் சூழலைக்காப்பாற்றியது.

என் நல்ல நேரந்தான் போங்க. இல்லையேல், முன்பு நாங்கள் இருந்த வீடு தீயில் கருகிச் சாம்பலாகியிருக்கும். எங்களின் வீடு மட்டுமல்ல, அந்த வரிசை வீடுகளே தீயிற்கு இரையாகியிருக்கும். அக்கம் பக்கத்து மலாய்க்காரர்கள் என்னை சபித்துச் சாம்பலாக்கியிருப்பார்கள். நினைத்துப்பார்க்கும் போது, எதோ ஒரு சக்திதான், அன்று என்னைக் காப்பாற்றியிருக்கக்கூடும்.!


3. கரையான்

முன்பு, நாங்கள் வசித்த வீட்டில், தாங்க முடியாத அளவிற்கு கரையான் தொல்லை. வீட்டின் முன், மரமாக வளந்திருந்த முருங்கை வேப்ப மரங்களையே அடியோடு சாய்க்கின்ற அளவிற்குக் கரையானின் ராஜ்ஜியம்.

அதன் தலையீடு வீட்டின் உள்ளேயும் மிகக்கொடுமையாகவே காணப்பட்டது. மேலே, பலகை தூண்களையெல்லாம் ஏறக்குறைய விழுங்கியவண்ணம். மழைக்காலமென்றால் ஈசலின் கொடுமை அளவுக்கு அதிகமாக இருந்த போது, ஒரு கட்டுமானப் பணியாளரை அழைத்து, மேலே ஏறி கண்காணிக்கச் சொன்னபோதுதான், அவன் சில சட்டங்களை மாற்றியாகவேண்டுமென்று சொல்லிவிட்டுச் சென்றான். நாம்தான் தமிழர்களாச்சே, அசம்பாவிதங்கள் நடக்கும் வரை அஜாக்கிரதையாகத்தானே இருப்போம்.

எங்களின் அத்தை வாரம் ஒரு முறை வீட்டிற்கு வருவார். என் மகன், சிறு குழந்தையாக இருந்த போது, அவனை கவனித்துக்கொள்கின்ற பொறுப்பை கொஞ்ச காலம் ஏற்றுக்கொண்டதால், என் மகன் அவரை விடமாட்டான். வார வாரம் அழைப்பான், வரச்சொல்லி. அவர் வந்தால், உள்ளே இருக்கின்ற மெத்தையை மெனக்கட்டு வெளியே இழுத்து வந்து, ஹாலில் போட்டுக்கொண்டு, டீவி பார்த்துக்கொண்டே, பேசிக்கொண்டே படுத்துத்தூங்குவார்கள் இருவரும். இது வாரந்தவராமல் நடைபெறும்.

சம்பவம் நிகழ்ந்த  அந்த வாரம், இருவருக்குள் எதோ பூசல் ஏற்பட்டு, ஊடல் வந்து, மெத்தையை நீ இழுத்துக்கொண்டு வா, என போட்டாபோட்டியோடு போராட்டம். இதனால் அத்தை பொய்க்கோபங் கொண்டு அறைக்குள் படுத்துக்கொள்ள, அவனும் வழக்கம்போல் என்னருகில் படுத்துக்கொண்டான். 

காலை மணி மூன்று இருக்கும், நடு ஹாலில் படாரென்று படுபயங்கரமான ஒரு சத்தம். எல்லோர் தூக்கமும் கலைந்து விட்டது. என்ன சத்தமென்று வெளியே வந்து பார்த்தால், அவர்கள் எப்போதும் படுக்கும் அந்த இடத்திற்கு நேராக மேலே சுழலும் சீலிங்க் ஃபேன் கீழே விழுந்துக்கிடந்தது. ஃபேன் மாட்டியிருந்த தூணை கரையான் முழுமையாக தின்றுத்தீர்த்து விட்டதால், அந்த ஃபேன்’ஐ தாங்கிப் பிடிக்கின்ற சட்டம் உடைந்து விட்டது, பாரம் தாளாமல். மின்விசிறி விழுந்த இடத்தில், மார்பல் கல்லே விரிசல் கண்டிருந்ததென்றால், மனிதர்கள் நிலை என்னவாகியிருக்கும்.!? என்னுள் இருந்த தெய்வபக்தி சுடர்விட ஆரம்பித்தது.


4. மண்சரிவு

என் கணவர், ஆரம்பத்தில் கோலாலம்பூர் வந்து  வேலை செய்தபோது, ஒரு வீட்டின் அறையொன்றில் வாடைகைக்குத் தங்கிக்கொண்டார். தெரிந்த ஒருவரின் வீடுதான். ஆற்றோர வீடு அது. மாதம் ஒரு முறை ஊருக்குச்சென்று அம்மாவைச் சந்தித்து, சம்பாதிக்கின்ற பணத்தையும் அம்மாவிடம் கொடுத்து விட்டு வருவது அவரின் வழக்கம். அப்போதுதான் எங்கள் இருவருக்கும் லவ். இரு குடும்பங்களுக்கும் லடாய். (தமிழர்களாச்சே விடுவார்களா!?)

மாதம் ஒரு முறை அவர் ஊருக்குக் கிளம்புகையில், எனக்கு தனிமை மிகவும் கொடுமையாக இருக்கும். போக வேண்டாமென்று தடுப்பேன். அதை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டார். அம்மாவைப் பார்க்க ஓடிவிடுவார்.

ஒரு முறை அவர் அப்படிச்செல்லுகையில், இங்கே கடுமையான மழை, வெள்ளம். பக்கத்தில் உள்ள ஆறு, அணைதிரண்டு மண்சரிவை ஏற்படுத்தி, அங்குள்ள வீடுகளையெல்லாம் மண்ணில் புதைத்துக்கொண்டது. இரவு வேளை, தூங்கிக்கொண்டிருந்த மக்கள் தவியாய்த்தவித்தனர். எல்லோர் வீடுகளையும் விட என் கணவர்(காதலன்) தங்கியிருந்த குடும்பத்தின் வீடு அதிக சேதத்துக்குள்ளாகியிருந்தது. அதிலும் அவர் தங்கியிருந்த அறை முழுவதுமாக மண்ணில் புதையுண்டது. எதுவுமே கையில் கிடைக்காதவண்ணம் எல்லாமும் மண்ணின் சிக்கிக்கொண்டது. அன்று மட்டும் அவர் என் பேச்சைக் கேட்டு, வீட்டிலேயே  தங்கியிருந்திருந்தால்..!!!??  அம்மாவின் பிரார்த்தனைதான் அன்று அவரைக் காப்பாற்றியிருக்கக் கூடும்.


அண்மையில், ஒரு யாக பூஜையில் கலந்துகொள்ளுகிற வாய்ப்புக்கிடைத்தது. சேவை மனப்பான்மை கொண்ட ஒரு நல்ல மனிதர், தாம் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை, இது போன்ற அறப்பணிகளில் செலவழித்து மக்கள் நலம் பேண, வருடத்திற்கு ஒரு முறை இந்த யாக பூஜை செய்வது வழக்கம். பத்து நாள்கள் அந்த `தாமானே’ கலைக்கட்டுகிற அளவிற்கு, கோவில் நிகழ்வு கோலாகலமாக  நடைப்பெற்றது.

இளஞர்கள் முதியோர்கள், கன்னிப்பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் ஒன்றாக இணைந்து சேவை செய்கிற அந்தக் காட்சிகள், கண்கொள்ளா அழகியக் காட்சிகளே.

கணவர் தினமும் சென்றார். நான் வார இறுதியில் மட்டும் கலந்துகொண்டேன். அந்த பத்து நாட்களின் பூஜையில் எந்த பங்கமும் ஏற்படாமல் பூஜை மிகச் சிறப்பாகவே நடந்து முடிந்தது. பதினோராவது நாள், அதாவது அந்த விஷேச நாட்கள் எல்லாம் முடிந்த மறுநாள், விடியற்காலையில், ஏற்கனவே நோயில் அவதியுற்றிருந்த அந்த சேவை மனப்பான்மைக் கொண்ட மனிதரின் தாய் இறைவனடி சேர்ந்தார். முதல் நாள் கோவிலில் பார்த்தேன் அவரை. ஒரு தடியைப் பிடித்துக்கொண்டு, மெதுவாக நவக்கிரகங்களை வழிபாடு செய்துகொண்டிருந்தார். இது எதிர்ப்பார்த்த மரணமேயானாலும், அந்த பத்து நாட்களில் எதாவதொரு நாளில் இந்த இறப்பு நடந்திருந்தால்..!!? பூஜை வழக்கம்போல் நடந்திருக்கும், ஆனால் தலைவர் வீட்டில் துக்கமென்றால், பலருக்கு அது தர்மசங்கடமே.!


என்னமோ சொல்லனும்’னு தோன்றுகிறது.... ஹ்ம்ம் தெரியவில்லை.

திங்கள், ஜூன் 11, 2012

படித்ததில் பிடித்தது

 மனத்தூய்மை செய்வினை தூய்மை
இரண்டும் இனந்தூய்மை தூவாவரும் (குறள்)

எனும் வள்ளுவர் வாக்கு சொல்வது மனம் ,செயல் இவைதூய்மை பெற தூய்மை பெற்ற நல்லோரோடு சேருங்கள் என்பதாகும். இவர்கள் தான் என்ற அகந்தையை, மன அழுக்கை, மேலோர் கீழோர் என்ற வேறுபாடின்றி கூடி இறைபணி செய்து தூய்மை பெறுகின்றனர்.

http://kadamburtemple.blogspot.jp/2012/06/blog-post_10.html

வெள்ளி, ஜூன் 08, 2012

இன்னும் ஒரு அடிதான்

எங்கோ ஒரு மூலையில்
கொலை
கொஞ்சம் நெருக்கத்தில்
கொள்ளை
உள்ளூரில் இளம் பெண்
கடத்தல்
அருகில் உள்ள பட்டணத்தில்
வீடுடைத்து களவு
பக்கத்துக் கிராமத்தில் கிழவியை
கற்பழிப்பு
இப்போது, 
இவை நம் பக்கத்து வீட்டில்...
நாம்,
பூட்டுகளைப் பெரிதாக்கி
சாவிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம்

வியாழன், ஜூன் 07, 2012

‘கலியுக துர்கா சித்தர்’ முருகன்

முன்பெல்லாம், கணவர் மற்றும் அவரின் நண்பர்கள் சிலர் ஒன்றாகச் சேர்ந்து காடுகள், மலையேற்றம், குகை புகுதல், யாரும் செல்லாத இடங்கள், என ஒன்றாகச் சேர்ந்து சாகசப் பயணங்கள் மேற்கொள்வது வழக்கம். வருடத்திற்கு ஒருமுறையாவது, இதுபோன்ற பயணமொன்றை ஏற்பாடு செய்துவிடுவார்கள்.

அதற்காகவே, பிரத்தியேக காலணிகள், உடைகள், கேமரா, போன்றவைகளை வாங்கி வைத்துக்  கொள்வார்கள்.

ஒரு முறை நண்பர்களின் மனைவிகள் சிலர், அவர்களுடன் பயணிக்கவிருப்பதால், என்னையும் அழைத்தார் என் கணவர். இதுபோன்ற சாகச பயணங்கள் ஆபத்துகள் நிறைந்தவையாக இருப்பதால் எனக்கு நான் இதில் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை. இருப்பினும் சென்றுதான் பார்ப்போமே, என்கிற ஆவலில் ஒரு முறை அவர்களுடன் சென்றுவந்தேன். இந்தப் பயணத்தின் போதுதான், எனக்கு அறிமுகமானார் கலியுக துர்கா சித்தர் முருகன்.இவரைப் பற்றிய விவரங்கள் சில;

இவர், நமது வீடுகளில் புகுகின்ற சில தீய சக்திகளை விரட்டியடிக்கவும், அவைகளின் நடமாட்டங்களைத் துல்லியமாகக் கண்டு அறிவதிலும் வல்லவர். அனல் பறக்கும் தீச்சட்டியை கைகளில் நீண்ட நேரமாக ஏந்தி, பூஜைகளின் வழி தீய தேவதைகளை விரட்டியடிப்பதும், வீடு வளம் பெற, மக்கள் நலபெற பிரார்த்தனை செய்வதும், இவரின் தனிச்சிறப்பு. இவருக்கு கலியுக துர்கா சித்தர் என்கிற பட்டம், தமிழ்நாட்டில், படப்பை என்கிற கிராமத்தில் வசித்த துர்காசித்தர் வழங்கியது. அவரின் உயிர்ப் பிரியும் தருணத்தில், முருகன் என்கிற பெயர் கொண்ட இவர், அவரின் அருகிலேயே இருந்ததால், இவருக்கு தமது நாமத்தை (கலியுக துர்கா சித்தர்) பட்டமாக வழங்கிய பின், சமாதி நிலை அடைந்தாராம்.

(கூடுதல் தகவல் - இந்த இரண்டு சித்தர்களும் துர்க்கையம்மனை நேரில் தரிசித்தவர்களாம். அவரே கொடுத்த தகவல்)

நண்பர்களின் குழுவில் உள்ள ஒருவரின் வீட்டில் தீய சக்திகள் நுழைந்து அராஜகம் புரிந்ததால், அவைகளை விரட்ட துர்கா சித்தரை அழைத்தபோது, அவர் அவர்களுக்கு அறிமுகமாகி, பின் எங்களுக்கும் பழக்கமானார்.

இரண்டாயிரத்து ஆறாம் (2006) ஆண்டு, நாங்கள் சாகசப் பயணம் மேற்கொண்டிருந்த இடம், சுங்கை சிப்புட் சித்தர் குகை. உண்மையிலேயே சாகசங்கள் நிறைந்த பயணம்தான் அது. இப்பொழுது நினைத்தாலே, உரோமங்கள் சிலிர்க்கின்றன. அதைப்பற்றிய கட்டுரை ஒன்றை, அற்புதமான புகைப்படங்களோடு பத்திரிகைக்கு எழுதினேன்.(மக்கள் ஓசை) பலரின் கவனத்தையும் அது ஈர்த்தது.

அந்தப் பயண அனுபவங்களைப் பற்றி சற்று மேலோட்டமாகப் பார்ப்போமே -

வேன் பிடித்து அவ்விடத்திற்குச் சென்றோம். அந்த வேன்’ஐ, குகைக்கு அருகில் இருந்த தோட்டமொன்றில், பசுமாடுகள் மேய்த்துக்கொண்டிருந்த முதியவரிடம் பாதுகாக்குமாறு சொல்லி விட்டு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தோம். நல்ல பசுமையான நடைபாதை முடிந்து, செடிகொடிகள் உள்ள கரடுமுரடான பாதையில் நுழைந்தோம், அதன் பிறகு, சேறுசகதிகள் நிறைந்த பாதை.. முட்கள், விஷச்செடிகள், மேடு பள்ளம் என எங்களின் பயணம் கடினமானது.

எங்களின் முன்னே, தலைமை தாங்கி எங்களுக்கு வழிகாட்டியாய் இருந்தவர், சித்தர் முருகன் தான். ஓர் இடத்தில் பயணத்தை நிறுத்தி, கண்களை மூடி ஏதோ மந்திரங்களை முனக, பிறகு மீண்டும் பயணம் தொடர்ந்தது,

`ஏன் நின்றீர்கள் ஐயா, என்ன மந்திரம் சொன்னீர்கள், என்ன பிரச்சனை?’ (நான் தான், கேட்போம்ல). அதற்கு அவர், `உஸ்’, என்கிற வார்த்தையை மட்டும் சொல்லி, சிறிது தூரம் சென்று ஒரு மரத்தைக் காண்பித்து, `அங்கே பாருங்கள்’ என்றார். கருப்பு வர்ணத்தில் பளபள என மின்னும் பெரிய பாம்பு அங்கே, நாங்கள் தாண்டி வந்த மரத்தில்தான் அது நெளிந்துகொண்டு இருந்தது. அருகில் தான் நாங்களும்  நடந்து வந்துள்ளோம்.

``ஐயோ,ஆ பாம்பு’’ என்றோம். ``எதைப் பார்த்தாலும் அமைதியாக இருக்கவேண்டும், எதுவும் பேசக்கூடாது, கூச்சல் போடக்கூடாது, நான் அடிவைக்கும் இடத்தில், உங்களின் அடியை வையுங்கள், என் அடியை மட்டும் பாருங்கள், எந்த ஆபத்தும் வராது..’’ என்றார்.

பிறகு என்ன.! இஞ்சி தின்ன குரங்கு மாதிரி எல்லோர் முகமும் - பெண்கள் நாங்கள் நடுங்கித்தான் போனோம். சில இடங்களில் ஆண்களின் உதவி இல்லாமல் எங்களால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் திண்டாடினோம். சேறு சகதிகள் நிறைந்த இடங்களைக் கடக்கின்றபோது, அவரவர் மனைவிமார்களை அவரவர்கள் தூக்கிக் கொண்டார்கள்.

இது அந்தக் குகைக்குப் போகும் வழிதான். குகைக்குள் நுழைவதற்கு செங்குத்தான மலை ஒன்றில் ஏறவேண்டும், அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட மலை மேடு அது. நல்ல சீரமைப்பு செய்து கட்டப்பட்ட படிகளில் ஏறுவதற்குக்கூட சிரமப்படும் நாம் (பெண்கள்தான்), இது போன்ற மலைகளில் எப்படி ஏறியிருப்போமென்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். சுண்ணாம்புப் பாறை, ஆங்காங்கே நீர் வேறு வடிந்துகொண்டிருந்தது, வழிப்பாதைகள் வழுக்கும் நிலையில், பொத் பொத் தென்று விழுந்து, தலை மயிர் வரை சேறு.


குகைக்குள்ளே இருக்கின்ற அந்த சுயம்பு லிங்கத்தைக் காண (அவர் அப்படித்தான் சொன்னார், அதற்கு வேறொரு விஞ்ஞானப் பெயரும் உண்டு) செல்லும் வழி இன்னும் கரடுமுரடானது. கொஞ்சம் இடறினால், பயங்கர பாதாளத்தில் விழவேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படலாம். விழுந்தால், பிணத்தை எடுத்துத் தருவதற்குக் கூட அரசாங்கத்தின் உதவி கிடைக்காது. காரணம், அரசாங்க அனுமதி பெறாமல், தடை செய்யப்பட்ட, ஆபத்துகள் நிறைந்த இடத்திற்குச் சாகசப் பயணம் மேற்கொண்டிருகின்றோம். இந்தத் தகவலை அறிந்தவுடன், பலருக்கு முகத்தில் இருள் படர்ந்தது. எனக்கும்தான்.!

நாங்கள் நடந்து வந்தது, மலையேறியது, போன்றதை விட, உள்ளே நுழைவது இன்னும் கொடுமையான அனுபவமாக இருந்தது. முட்டி போட்டுக்கொண்டும், பிட்டத்தால் நகர்ந்துகொண்டும், கூன் வளைந்து நடந்துகொண்டும்.., சித்தர் முருகன் முன்னே செல்ல நாங்கள் பின்னே மெதுவாகச் சென்று அந்த இலக்கை அடைந்தோம்.

உள்ளே நாங்கள் சந்தித்த அற்புதங்களை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.. எழில் கொஞ்சும் அழகிய நந்தவனம் அது.. நீர் வீழ்ச்சி போன்ற நீரூற்று, வித்தியாசமான செடிகொடிகள், தாவரங்கள். வித்தியாசமான பூச்சி வகைகள், பூ வகைகள், பறவைகள்,வவ்வாள், ஒருவித நறுமணம் வேறு நாசியைத் துளைத்தவண்ணமாக, மெல்லியதாய் ஒரு இசை காதுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. வெளியே இருந்து விழுகிற சூரிய ஒளிக்கீற்றுகள் உள்ளே படர்ந்து, அற்புத சூழலை உருவாக்கிக்கொண்டிருந்தது. பிரளயத்தின் போது, அதாவது எத்தனையோ லட்ச ஆண்டுகளுக்கு முன் கடல் நிலமாகவும், நிலம் கடலாகவும் மாறிய போது ஏற்பட்ட மாற்றங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தியது.

சிறிய சிறிய சுண்ணாம்புக் குன்றுகளுக்கிடையே சிப்பி, நத்தைகள் மணலோடு மணலாக சிதறிய கடற்கற்களுடன் கலந்து, கடற்கரையோற சூழலை ஞாபகத்திற்குக் கொண்டுவந்தது அக்கண்கொள்ளாக்காட்சி. அதாவது, ட்ஸ்கவரி சேனல் பார்க்கும் போது, கடலுக்கடியில் அற்புதங்களைக் கண்டெடுக்க பல மையில்களுக்கப்பால் உள்ளே பயணிக்கின்றபோது, அங்கே சில இயற்கைக் காட்சிகளைக் காண்போமே, அது இப்போது நம் கண்முன், அதுவும் உயரமான ஒரு மலையின் குகைக்குள் காணக்கிடைக்கிறது... எப்பேர்பட்ட அற்புதக் காட்சியாக இது இருக்குமென்று மனக்கண் முன்  நிறுத்திப்பாருங்கள்,  பூரித்துப்போவீர்கள்.உள்ளே தூய்மையான சேறு கிடைத்தது, அதை முகத்தில் அப்பிக்கொண்டால், அழகாக இருக்கலாம் என்றார் சித்தர், ஒரு நொடிக்குள் எல்லா பெண்களின் முகங்களிலும் சேறுகள் அப்பிக்கொள்ளப்பட்டது.

இவைகளையெல்லாம் தாண்டித்தான் அங்குள்ள அந்தச் சுயம்புலிங்கத்தை நெருங்கமுடிந்தது.

என் உயரத்திற்கு வளர்ந்திருந்த லிங்க வடிவிலான ஒரு குன்று அது. மேலிருந்து ஒரு  சொட்டு உருகி, கீழே விழுந்து கல்லாக மாறுவதற்கு கிட்டத்தட்ட நூற்று இருபது வருடங்கள் பிடிக்குமாம். இப்போது, என் உயரத்திற்கு (5.2") அது வளர்ந்துள்ளது என்றால், வருடங்களைக் கணக்கிடவே மூச்சு முட்டுகிறதுதானே.!

அங்கே இன்னொரு அதிசயம் என்னவென்றால், அந்த சுயம்பு லிங்கத்தில், மேலிருந்து சொட்டுகிற நீர், நேராக அதன் மத்தியில் விழுந்து தெறித்து, அபிஷேகம் செய்வதைபோன்றதொரு காட்சி ஆச்சிரியமே. வேறு எங்குமே நீர் சொட்டவில்லை, அந்தக் குன்றின் மேல் மட்டும் சொட்டு சொட்டாக நீர் வடிந்த வண்ணமாகவே இருந்தது. வடிகிற நீர் அதன் அடியினில் தேங்கி, நீல நிற குளமாக மாறியிருந்தது. கோவிலில் ஆகம முறைப்படி செதுக்கிச் செய்த மூலஸ்தானம் போல் இயற்கயிலே அற்புதமாக அமையப்பெற்ற ஓர் இடம் அது. (புகைப்படங்கள் கூடிய விரைவில் வரும், பகிர்கிறேன். தற்போது எல்லோரிடமும், ஃபையில் வடிவில், ஒரு டாக்குமெண்டரியாக மட்டுமே இருக்கின்றது. ஏற்கனவே, ஒரு சீடியில் சேகரித்து வைத்திருந்தோம், அதில் எதோ கோளாறாம்.. ) 


அங்கே சில மந்திரங்கள் சொல்லி பூஜைகள் செய்யப்பட்டப்பின், தியானம் பயின்றோம். ஓம் ஓம் என்கிற போது, எதிரொலிக்கும் அந்த சொல், இசையாக மீண்டும் நமக்குள் ஒலிக்கும் தருணம் அற்புத அனுபவம். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது, அனுபவிக்கவேண்டும்.அக்குகை அங்குள்ளதென்பதைக் கண்டு பிடித்தவரே சித்தர் முருகன்தானாம்.  தமது தியான அனுபவத்தின் வழி இக்குகையைக் கண்டெடுத்தாராம். இன்னும் அதிகமான புதைக்கப்பட்ட பொகிஷங்களை இவர் தமது தியானத்தின் மூலம் கண்டுகொண்டு, பிறகு தியானத்தில் காட்டிய பாதையிலேயே சென்று, சுயம்பு லிங்கமாக வளர்ந்திருக்கின்ற குன்றுகள், தெய்வத்தன்மை பொருந்திய குகைகள். இந்திய பாரம்பரியத்தைப் பறைசாற்றும் புதையுண்டுக்கிடக்கின்ற வசிப்பிடங்கள், கோவில்கள், மண்ணில் மறைந்து கிடக்கின்ற சோழர்காலத்து கோட்டைகள் , சிலைகள் என கண்டறிந்து, கரடு முரடு, கல் முள், மேடு பள்ளம், விஷப் பாம்பு தேள் போன்ற ஆபத்துகளை எல்லாம் கடந்து, கால்களில் செருப்புகள் கூட அணியாமல், தியானத்தின் மூலமாகக் கண்டது உண்மையா இல்லையா.? என்பதனை தாமே தனியாளாகச் சென்று  உறுதிப்படுத்திக்கொண்டு; புரிந்துணர்வு உள்ள அன்பர்களிடம் மட்டும்  அவ்வற்புதங்களைப் பகிர்ந்து, வருவதற்கு தயார் நிலையில் இருப்பவர்களை மட்டும் அழைத்துச் சென்று காண்பித்து வருகிறார்.

கலியுக துர்கா சித்தர் முருகன், இப்படிக் கண்டெடுத்த சில இடங்களுக்கு பெண்கள் அறவே செல்ல முடியாது. ஆபத்துகள் நிறைந்த சாகசப் பயணமாகவே அது இருக்கும்.

பஹாங் மாநிலத்தில் உள்ள ஒரு குகைக்குச் சென்று வந்தார்கள். அதனின் புகைப்படங்களைப் பார்க்கின்ற வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. நீண்ட கயிற்றை, மேலே உள்ள ஒரு பெரிய மரத்தில் இறுக்கமாகக் கட்டி, அதைப் பிடித்துக்கொண்டு, ஒவ்வொருவராக கீழே இறங்க வேண்டும். இறங்கிய பின், ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்துள்ளார்கள்.  பயங்கர காடு. புகைப்படத்தில் பார்ப்பதற்கே திகிலாக இருந்தது. இவைகளோடு இன்னும் பல இடஙகள் அவரின் வழிகாட்டுதலோடு சென்று வந்துகொண்டிருக்கின்றார்கள்.அண்மையில் கலியுக துர்கா சித்தர் முருகன் அவர்களுக்கு, இந்தோனிசியாவில் `வாலி’ பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார்கள். அந்தப் பட்டம் கிடைப்பதற்கு, அவரின் அரிய சாதனை என்னவென்றால் - அங்கே உள்ள ஒரு மலைக்கு தியானம் செய்யச் சென்றுள்ளார் சித்தர். தியானம் செய்துகொண்டிருந்த போது, ஒரு அற்புதம் நிகழ்ந்ததாம்.! உடனே அங்குள்ளவர்களின் துணையோடு, சம்பந்தப்பட்ட அவ்விடத்தை நோக்கிச்சென்று, அங்கே பூமிக்கடியில் புதையுண்டுக்கிடந்த இரண்டு செம்புச்சிலைகளைக் கண்டெடுத்துள்ளார்கள். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மிகவும் பழமை வாய்ந்த சிலைகள் அவை. அவரிய பொக்கிஷங்கள் அங்கே இருப்பதை அவர் கண்டெடுத்ததால் இப்பட்டம் அவருக்கு வழங்கப்பட்டதாம்.

சிலைகளில் ஒன்று விநாயகர், மற்றொன்று விஷ்ணு/சிவன். அதில் விநாயகர் சிலையை இவரிடமே வழங்கி, மற்றொரு சிலையை அவர்களே பொக்கிஷமாக வைத்துக்கொண்டார்களாம்.


இதில் இன்னொரு அதிசயமும் நம் கண்களை அலக விரியவைக்கின்றது. கஸ்டம்ஸ் கெடுபிடிகள் இல்லாமல், கிட்டத்தட்ட பத்து கிலோ எடையுள்ள இச்சிலையை  எப்படி இங்கே கொண்டுவந்திருப்பார்? (கேட்டேன்)

கஸ்டம்ஸ் சோதனையின் போது, அச்சிலை, சி.சி டீவியின் பார்வையில் தென்படாமல் தம்மை மறைத்துக்கொண்டதாம். நிருவையின் போதும், கிலோ கணக்கில் குறைத்தே காட்டியதாம். (அதிசயம்தான், எல்லாம் இறை சித்தம்..)

இச்சிலை தற்போது சித்தர் முருகனின் பாதுகாப்பில்தான் உள்ளது. தரிசனம் கிடைத்தாலே, நினைத்தது நிறைவேறும் என்கிறார் சித்தர். அவரையும் இந்த சிலையையும் நேரில் சென்று காணவிரும்புவோருக்கு -முகவரி இதுதான்.

Sittar Sri Murugan
No.20, Jalan Kedidi 12
Taman Sepang Putera
Sungai Pelek
Sepang.

தொலைப்பேசி எண்.
014-6343808

நமசிவாய. வாழ்க வளமுடன் (அவர் அடிக்கடி உபயோகிக்கும் வார்தை இது)

அருவுருவ...

அருவமாய்
நீ என் முன்னே
வீற்றிருக்கும் போதுதான்
எனக்கு உருவமிருப்பதையே
நான் உணர்ந்துகொள்கிறேன்