வியாழன், ஆகஸ்ட் 07, 2014

சைகோன் சிட்டி பயணம் - வியட்நாம் பயணக்கட்டுரை


வியட்நாம் சென்று வந்தோம். பக்கத்தில் இருக்கின்ற கோலாலம்பூருக்கு ஷாப்பிங் சென்று வந்தாலே, பயணக் கட்டுரை எழுதுகிற நான், ப்ளைட் ஏறி வெளியூர் பயணம் சென்று வந்தால், சும்மா விடுவேனா. !அதுசரி, ஏன் வியட்நாம் நாட்டிற்கு பயணம் செல்ல ஆர்வம் வந்தது.? யாரும் அதிகம் செல்லாத ஒரு நாடு ஆச்சே அது. அங்கே ஏன் செல்லவேண்டும்.?

வாழும் காலத்தில் நம்முடன் நெருங்கிய,  நாம் கண்ட வரலாற்றுப்பின்னணியைப் பறைசாற்றுகிற நாடு அது என்பதால் அதைப் பற்றித்தெரிந்து கொள்ள ஆர்வம், என்று எல்லாம் சொல்லி புருடா விடமாட்டேன்.

உண்மை என்னவென்றால், என் மகள் மருத்துவப்படிப்பின் இறுதிக்கட்ட தேர்வின் போது மிகுந்த மனவுளைச்சலில் சோர்வுடன் உழன்றுக்கொண்டிருந்தாள். தாம் மிகவும் வருத்தத்துடன் சோர்வாக உள்ளதாகவும், ஒவ்வொரு நொடியும் அதிக படபடப்புடன் பய உணர்வுடன்  நகர்வதாகவும், யாருமற்ற தனிமை தம்மைக் கொல்வதாகவும், ஆறுதல் சொல்ல பக்கத்தில் நாங்கள் யாரும் இல்லாததாகவும் புலம்பிக்கொண்டே இருந்தாள். வட்ஸாப்பில் தகவல் வருகின்ற போதெல்லாம், சிறுகுழந்தைக்கு மிட்டாய் கொடுத்து உற்சாகப் படுத்துவதைப்போல் மனங்கோணாமல் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தோம் நானும் என் கணவரும். அப்போது தற்செயலாக, `நீ சந்தோசமாக தேர்வெல்லாம் எழுதிவிட்டு வா, நாமெல்லாம் ஜாலியான வெளிநாட்டு சுற்றுலா ஒன்றிற்குச் சென்றுவரலாம்.’ என்று `ஓவர்’ உற்சாகமூட்ட வாக்கு கொடுத்துவிட்டார்.

அன்றிலிருந்து, எங்கே போகலாம்.? எங்கே போறோம்.? என்று சதா கேட்கத் துவங்கிவிட்டார்கள் பிள்ளைகள்.

தேர்ந்தெடுத்த நாட்டிற்குச் செல்லலாம் என்றால், நோன்பு விடுமுறையில் இரட்டிப்பு விலையில் கழுத்தில் கத்தி வைக்கின்றார்கள்.  ஏர் ஏசியாவில், சீனா, கம்போடியா, பாங்கொக், கொச்சின், ஸ்ரீலங்கா, ஆஸ்த்ரேலியா, லண்டன் என பல இடங்களுக்கு டிக்கட் போட்டு விலையினைக் கூட்டிப்பார்த்து அதிர்ந்து, ஏறக்குறைய எங்கும் பயணம் செல்லவேண்டாம் என்று முடிவெடுத்திருக்கின்ற வேளையில், எதோ ஒரு பட்டனில் சிகப்புச் சிக்னல் காட்டவே, அங்கே சென்று அமுக்கிப்பார்க்க, அது ஹொ சி மின் பண்டனத்தைக் காண்பித்தது. எல்லா ஊர்களையும்விட வியட்நாம் செல்வது செலவை கொஞ்சம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம்  என்கிற யோசனையில், விட்டால் இதுவும் கிடைக்காது என்பதால், கண்களை மூடிக்கொண்டு டிக்கட்களை வாங்க ஆன் லைனில் பதிந்துவிட்டார் கணவர்.

வாங்கியபின் என்னிடம் ஆலோசனை கேட்க. `ஐய்யே அங்கே வா? வுவக், சாப்பாடு கிடைக்காதே.! பன்றி நாய் எல்லாம் சாப்பிடுவார்களே.. ! நாம் எப்படி அங்கே சாப்பிடுவது.?’ என்று புலம்ப ஆரம்பித்துவிட்டேன். காரம் உப்பு புளி மசாலா என நாக்கைத்தீட்டி வைத்திருக்கின்ற எனக்கு சாப்பாடுதான் முக்கிய பிரச்சனையாக தலைதூக்க ஆரம்பித்தது.

`அதெல்லாம் பிறகு பார்த்துக்கலாம், டிக்கட் போட்டாச்சு, ஆன்லைன்ல ஹோட்டல்கள் பாரு, த்ரீ ஸ்டார் போதும். அதிக விலையில் பார்க்காதே.!’ என்று தொடர் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

என்ன செய்யலாம் என்கிற சிந்தனையில், அலுவலகத்தில் உள்ள சில சீன தோழிகளிடம் வியட்நாம் பயணம் பற்றிப்பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். ஏறக்குறை எல்லா சீன நண்பர்களும் வியட்நாமிற்கு சென்றுவந்தவர்களாகவே இருந்தார்கள். அனைவரும் சொன்ன ஒரே விஷயம், `வியட்நாம் ஒரு உணவுச்சொர்க்க பூமி. அதாவது food paradise. அற்புதமான உணவுகளை அங்கே உண்டு ரசிக்கலாம். அழகான ஊர். நிச்சயம் உனக்குப்பிடிக்கும். நன்றாக மகிழ்வாக சுற்றிவிட்டு வா.’ என்று ஆர்வமூட்டிவிட்டார்கள்.

அதற்குப்பிறகு, இணையத்தில், அந்த நாட்டின் வளர்ச்சி, சிதோஷ்ணநிலை, உணவு, வரலாறு, பயண வழிக்காட்டி விளக்கங்கள் என ஆராய்ந்து வாசிக்கத்துவங்கினேன். ஆர்வத்தைக் கூட்டியது அந்த ஆராய்ச்சி.
பயணம்.

நான்கு இரவு ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டிருந்தோம். இங்கிருந்து தங்கும் விடுதியினை ஆன்லைனில் பதிவு செய்கிறபோது, டூர் செல்கிறீர்களா? அல்லது ஹொ சி மின் டவுனிலேயே ஷாப்பிங் செய்யப்போகிறீர்களா? என்று மின்னஞ்சல் வழி கேட்டுக்கொண்டார்கள். எதுவானாலும் சொல்லுங்கள் நாங்கள் ஹோட்டல் மூலமாகவே எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்கிறோம். உங்களின் திருப்திகர பயணத்திற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கின்றோம் என்று உறுதியளித்தார்கள்.

டூர் செல்லலாம்.; ஐந்து நாட்களும் ஷாப்பிங் செல்ல நாம் ஒண்ணும் பெரிய கோடிஸ்வரர்கள் அல்ல.’ என்று முடிவானபிறகு, டூர் செல்வதற்கான செலவுகளை அட்டவணையிட்டு மீண்டும் மின்னஞ்சல் அனுப்பிவைக்க அந்த பட்ஜெட் பாக்கெட் மணிக்கு தகுந்தபடி அமையவே, அதைத்தேர்வு செய்துகொண்டு பயணத்திற்கு தயார் ஆனோம்.

மலேசிய நேரப்படி இங்கே காலை மணி ஏழு என்றால், அங்கே காலை மணி ஆறு. ஒரு மணி நேரத்திற்கு பின்னே சென்றிருந்தது பொழுது. இருந்தபோதிலும் காலை ஆறுமணிக்கெல்லாம் இங்குள்ள நேரப்படி காலை எட்டு போல் விடிந்திருந்தது. ஆறு மணிக்கே சூரியன் உதிக்கத்துவங்கிவிட்டான். பிரயாணத்திற்கும் காலை ஆறு மணிக்கெல்லாம் தயார் நிலையில் இருந்துவிடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊர் சுற்றிவிட்டு, விடுமுறை பொழுதைத் தூங்கிக்கழிக்கலாம் என்கிற கனவு பாழாகிப்போனது என்றுதான் சொல்லவேண்டும்.

சுற்றுலா ஏற்பாட்டின் படி ஒவ்வொரு இடத்திற்கும் நான்கு அல்லது ஐந்து மணிநேரம் பேருந்தில் பிரயாணம் செய்தாகவேண்டிய கட்டாய நிலை. வெகுதூரம் செல்கிறார்கள் இடங்களைச் சுற்றிக் காண்பிக்க.

உலகச் சுற்றுலாப்பயணிகளை, பல ஹோட்டல்களில் இருந்து டாக்ஸி மூலமாக அழைத்துவந்து ஓர் இடத்தில் ஒன்று திரட்டி, பருகக் குளிர் பாணங்கள் கொடுத்து காத்திருக்கவைத்து, பின்பு எல்லோரையும் ஒரே பஸ்ஸில் ஏற்றிச் சுற்றுலா செல்ல ஆயத்தமாகிறார்கள்.

நன்கு ஆங்கிலம் பேசத்தெரிந்த பயண வழிகாட்டியும் நம்மோடு பயணிக்கின்றார். அவர் பஸ்ஸில் ஏறியவுடன் பஸ் கலைக்கட்ட ஆரம்பித்துவிடுகிறது.


வரலாறு, மக்கள் வாழ்க்கை முறை, ஏழ்மை, உணவிற்குப்பஞ்சம், வெள்ளம், தற்போது நாம் செல்ல விருக்கின்ற சுற்றுலாத்தளம் என எல்லாவற்றையும் குறித்து விலாவரியாக விளக்கம் கொடுத்துக்கொண்டே வருகிறார். பஸ்ஸில் நாங்கள் மட்டுமே மலேசிய இந்தியரகள் மற்ற அனைவரும் ஐரோப்பியர்கள். கிட்டத்தட்ட நாற்பது பயணிகளை ஏற்றிச்செல்கிற பஸ் அது.

பயண வழிகாட்டி தூய ஆங்கிலத்தில் ஐரோப்பியர்களின் பாணியில் உரையாடிக்கொண்டே வருவதால், அந்தப் பாணி புரிவதற்கு எனக்குக் கொஞ்சம் நேரமெடுத்தது. இடையிடையே உரையினை நிறுத்தி கேள்விகள் வேறு கேட்கிறார். நாங்கள் யோசிப்பதற்குள் அறிவுப்பூர்வ விளக்கங்களை ஐரோப்பியர்கள் கலகலவென பகிர்ந்துகொண்டே வந்தார்கள். நகைச்சுவையும் செய்தார்கள். உற்சாகப் பயணமாக அமைந்தது.

வரலாறு

வியட்நாமிய வரலாறு என்பது நமக்கு மிகவும் நெருங்கிய வரலாறு. வாழும் வரலாறு என்றும் சொல்வார்கள்.  70களில் ஓய்ந்த இந்த வியட்நாமியப்போர் எங்களின் காலகட்டமான 80கள் வரை அதன் தாக்கம், அது குறித்த பேச்சு என தொடந்துகொண்டிருந்தது.

முன்பெல்லாம் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நிகழ்ந்துகொண்டே இருந்தால், என்ன இது ஓயாத வியாட்நாம் போராக இருக்கே.! என்று உவமை கூறுவார்கள். சிவாஜி கணேசன் நடித்த வியட்நாம் வீடு என்கிற திரைப்படமும் இந்த சண்டையினை உதாரணமாகச் சொல்லித்தான்  தலைப்பிட்டு திரைக்காவியமாக வடித்திருந்தார்கள்.

யாரேனும் பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தால், இதென்ன வியட்நாம் அகதிகள் மாதிரி இருக்கே.! என்பார்கள். எங்கேயாவது விழுந்தோ அல்லது விபத்துக்குள்ளாகியோ ரத்தக்களறியோடு காயம்பட்டு வந்திருந்த ஒருவரை, வியட்நாம் போரில் அகப்பட்ட அடிமை மாதிரி இருந்தது பார்ப்பதற்கு.! என்று எண்பதுகளிலும் பேச்சு வழக்கு இருந்ததை என்னால் நினைத்துப்பார்க்க முடிகிறது. அப்படி அந்தப்போரோடு உலக மக்கள் பின்னிப்பிணைந்திருந்தார்கள் அன்று..

அந்த வரலாறு நிகழ்ந்த இடங்களை நேரில் சென்று காண்கையில் மனம் கனக்கிறது. யூ.எஸ் இராணுவம் புரிந்த அராஜகங்களையும் மக்கள் பட்ட அவஸ்தைகளையும் ச்சூசி தன்னல் சென்றபோது விளக்கமளிக்கப்பட்டது.

வியட்நாம் மக்களும் அதன் இராணுவமும் பூமிக்கடியில் கிட்டத்தட்ட பல கிலோமீட்டர்களுக்கு சுரங்கப்பாதையினைத் தோண்டி, அதனுள் பதுங்கி அங்கேயே உணவு உறக்கம் என்று வாழ்ந்த வரலாறு குலைநடுங்க வைத்த அனுபவம்.

அந்தச் சுரங்கத்தினுக்குள் கொஞ்சம் சதைப்பிடிப்புடன் உள்ளே நுழைவது முடியாத காரியம். அப்படி நுழைய நினைத்த ஒரு ஐரோப்பியனுக்கு மூச்சுத்திணறலே வந்துவிட்டது. அப்படியென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் வியட்நாமியர்களின் உடல் எவ்வளவு மெளிந்து காணப்பட்டிருக்கும் என்று. சுரங்கத்தின் உள்ளே வேகமாக நுழைந்து, பிட்டத்தாலும், முட்டிபோட்டுக்கொண்டு நகர்ந்தும் பல மைல்களுக்கு அப்பால் எவ்வளவு விரைவாக ஆற்றங்கரைக்குச் செல்லமுடியுமோ அவ்வளவு வேகமாகச் சென்று மெக்கோங் ஆற்றில் குதித்து அங்கிருந்து தப்பித்திருக்கின்றனர்.அதுமட்டுமல்ல, அமெக்க இராணுவத்தை வெறிகொண்டு தாக்கியிருக்கின்றனர். இதற்கான யுக்திகள் காண்போரின் கைக்கால்களை நடுங்கச்செய்தன. பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களை, அமெரிக்கா வியட்நாம் போரில் பறிகொடுத்திருப்பதாக வரலாறு காட்டுகிறது. ஒரு வித விஷ மரத்தைக்கண்டுகொண்டு அதனின் இலைகள் மற்றும் தண்டுகளை அரைத்து, வீசப்பட்ட குண்டுகளைப் பொருக்கி, வெட்டி கூர்மையாக்கி சொந்த தயாரிப்பில் உருவான ஆயுதங்களில் அந்தக் கலவையைப் பூசி மறைவான இடங்களில் அவைகளைப் பதுக்கி, தாக்கியிருக்கின்றனர். மாட்டிக்கொள்கிற அமெரிக்க இராணுவ வீரர்கள் தப்பிக்க இயலாதபடி மிக நுணுக்கமாகக் கட்டப்பட்ட/வெட்டப்பட்ட குழிகள் பார்வையாளர்களின் கண்களை ஆச்சிரியத்தில் அலக விரிய வைத்த்து. எவ்வளவு கோபம் இருந்தால் அவர்கள் இதுமாதிரி வெறித்தனமாகச் சிந்தித்து இருப்பார்கள். அனைத்து ஆவணங்களையும் அப்படியே உள்ளது உள்ளபடி பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். எதிர்கால சந்ததியினருக்குப் பாடம் போதிக்க..இருந்தபோதிலும் அந்தக்குழியில் இருந்து வெளியே சுவாசிக்க வியாட்நாமியர்கள் பூமியை நோக்கிப்போடப்பட்ட துளையின் வழியாக, அமெரிக்க இராணுவம் மோப்ப நாய்களைக்கொண்டு கண்டுபிடித்து, அதற்குள் ரசாயண விஷவாயுவை பாய்ச்சி பலாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துள்ளார். அந்த விஷவாயு காற்றில் கலந்து மிச்சசொச்ச மக்களின் நாசி வழி புகுந்து பலரை ஊனமாக்கியதோடல்லாமல் பல ஆண்டுகளுக்கு ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதற்கும் அது வழிவகுத்துவிட்டதாக ஆதாரங்கள் காட்டுகிறன.

இப்படி மாறி மாறி தாக்கிக்கொண்டே இருந்ததால், நாட்டில் பசி பஞ்சம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. மக்கள் உயிருக்கு அஞ்சி நாலா பக்கமும் சிதறி ஓடி ஆற்றின் வழி நீந்தியே தப்பித்து மெக்கோங் ஆற்றங்கரையோரம் நெடுதூரம் தங்களது வாழ்வாதாரத்திற்கு அஸ்திவாரம் இட்டுக்கொண்டார்கள். சுற்றிலும் நீர். அந்தப்பக்கம் காடு. நகரங்களின் போர். நாடே சீர்குலைந்த நிலையில்.. உணவிற்குப் பஞ்சம். பசிக் கொடுமை என இந்தச் சிக்கல்கள் பல ஆண்டுகள் தொடந்துள்ளது. அன்று ஆரம்பித்ததுதான், உயிர்வாழ பலவிதமான உயிரினங்களைக் கொன்று உணவாக்கிருக்கின்றார்கள். பாம்பு, நாய், பூனை, சிலந்தி, தவளை, எலி, குரங்கு, புழுக்கள், பூச்சிவகைகள் என. இன்னமும் அவைகளை உண்கிறார்கள் சில இடங்களில். !

வாழ்க்கைச்சூழல்

அங்குள்ள மக்களின் வாழ்க்கைச்சூழல் மகிழ்ச்சியாகவே கழிகிறது. மக்கள் கடுமையான உழைப்பாளிகளாக இருக்கின்றார்கள். சோம்பித்திரிகிற மக்களைக்காணவே முடியவில்லை. (சத்தியமான வாக்கு இது..)

பரபரப்பாகவே காணப்படுகிறார்கள். நாட்டை மேம்படுத்த தாமும் வளமுடன் வாழ அவர்களின் பங்களிப்பை  எறும்புபோன்ற சுறுசுறுப்பில் காணமுடிகிறது. ஒவ்வொருவரும் எதாவதொரு வியாபாரத்தில் தம்மை  ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.  தங்களின் தோப்பில் விளைகிற பழங்கள். தாங்கள் வளர்க்கின்ற கால்நடைகள். தாங்கள் நட்டுவைத்த காய்கறிகள். தாமே தயாரிக்கின்ற கைவினைப்பொருட்கள், பலகாரங்கள். திண்பண்டங்கள் என வழிநெடூக வியாபாரிகள் எதையாவது விற்றுக்கொண்டு தங்களின் உழைப்பைப் பறைசாற்றிக்கொண்டே இருக்கின்றார்கள்.வாகனங்கள்

தொண்ணூறுகளின் இறுதிவரை சைக்கிள் மற்றும் ரிக்‌ஷாதான் முதன்மை வாகனமாகப் பார்க்கமுடியுமாம். ஆனால் இப்போது எங்கே பார்த்தாலும் மோட்டார் வாகனம்தான் பிரபலம். தேன்கூட்டைச் சீண்டிவிட்டால், எப்படி தேனீக்கள் குபுகுபுவென வருமோ அதேபோல் மோட்டார் வானகமோட்டிகளின் படையெடுப்பு வேர்த்துவிறுவிறுக்கச்செய்கிறது.  பாதசாரிகள் சாலையைக் கடக்கமுடியாத அளவிற்கு மோட்டார் ஓட்டிகளின் இராஜ்ஜியம் நிலைகுலையச்செய்கிறது. எங்குபார்த்தாலும்  மோட்டர்கள்தான்.

கார்கள் குறைவு. கேட்டதற்கு, கார்களின் விலை மலேசியாவைவிட மூன்று மடங்கு அதிகமாம். கார் வாங்குவதற்கு அரசாங்கம் கூடுதல் கெடுபிடிகளை வைத்திருப்பதால் மக்கள் கார்கள் வாங்க அஞ்சுகின்றார்களாம். மேலும் சாலைகள் இன்னும் விரிவு படுத்தப்படாமல் இருப்பதால் கார்கள் வாங்குவதற்கு மறைமுக தடைகள் அங்கே அதிகம் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.

செல்வதற்கும் வருவதற்கு இரண்டு சாலைகள். பேருக்குத்தான் நடுவில் வெள்ளைக்கோடுகளை இட்டிருக்கின்றார்கள், இருந்தபோதிலும் சாலை குறுகலாகவே இருக்கின்றது. பஸ்ஸில் பிரயாணம் செய்கிற நாங்கள் மோட்டார் ஓட்டிகள் நுழைவதைப் பார்க்கையில் உச்சந்தலையே கூசுகிறது. அதிகமான மோட்டார் வாகனங்கள். நெடுஞ்சாலைகளில் கார் பஸ்களுக்கு நடுவில் மோட்டார் வாகனங்களைக் காணமுடியாத நாடான நம் நாட்டில் இருந்துவிட்டு அங்கே சென்றபோது `ஐய்யோ.. பார்த்து.. ஆ.. மோட்டரு..’ என்கிற முனகலை தற்காப்புக்கவசமாக கிசுகிசுத்துக்கொண்டோம்.


வணிகம்

நகரங்களில் நடைபழகச் சென்றபோது வியாபாரம் செய்கிற இடங்களில் உணவுப்பொருட்களை மிகவும் தூய்மையாக வைத்திருக்கின்றார்கள். இரவுச்சந்தைகளில் விற்கப்படும் உணவுகள் வாயில் எச்சிலை வரவழைக்கின்றன. வர்ண வர்ண அரிசியில் அவிக்கப்பட்ட சோறுவகைகளின்  (புழூர்) நறுமணம் மூக்கைத்துளைத்தது. கைகளில் பிளாஸ்டிக் உரைகளை அணிந்துகொண்டு உணவுகளைப் பரிமாறுகிறார்கள். சுடச்சுட செய்து விற்பனை செய்கிறார்கள்.  என்ன வேண்டும்.? இந்தா பிடி. காசு கொடு. மொழி தெரியவில்லை என்றால் எழுதி காண்பிக்கின்றார்கள்.  பேரம்பேசினால். பொருட்களை எடுத்து வைத்து விட்டு அவர்களின் வேலைகளில் மும்முறமாக ஈடுபடத்துவங்கிவிடுகிறார்கள். நாம் மீண்டும் அவர்களிடம் பேச எத்தனித்தால், நமக்கு நா வறண்டு விடுகிறது காரணம் அவர்களுக்கு ஆங்கில அறவே விளங்கமாட்டேங்கிறது. பெரிய சிக்கல் இதுதான். மொழிப்பிரச்சனை.


ஒரு வார்த்தைகூட ஆங்கிலம் தெரியாமல் பயணிகள் சகஜமாக வந்துபோகிற இடங்களில் வியாபாரம் செய்கிறார்கள்.

மொத்த வியாபரக் கடைகளில் கரைகண்ட வியாபாரிகள், பயணிகளைக் கண்டால் சூழ்ந்துகொண்டு, கைகளைப்பிடித்துக்கொண்டு அவர்கள் விற்பனை செய்கிற பொருட்களை வாங்கச்சொல்லி வற்புறுத்துகிறார்கள். அதிக லாபத்திற்கு அவர்களின் பொருட்களை நமது தலையில் கட்டப்பார்க்கின்றார்கள். . ஆனால் சிறுதொழில் அங்காடிகள், யாரையும் சட்டை செய்வதில்லை. வாங்கு, இல்லையேல் இடத்தைக்காலி செய், என்பதைப்போல் இருந்தது அவர்களின் முக பாவனைகள்.

dong

வியட்நாம் dong ஐ ஆயிரம் தடவைகள் என் பிள்ளைகளும் கணவரும் எனக்கு விளக்கம் கொடுத்து புரியவைக்க முயன்றிருப்பார்கள். என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. கோடிகோடியாய் கொடுத்து பொருட்களை வாங்க மனம் பதறுகிறது.

உடைகள் தைக்க அழகான துணி ஒன்றினைத்தேர்ந்து எடுத்தேன்.  விலை 1, 400,000 dong. ஐய்யோ கடவுளே. என்ன கணக்கு இது? என்று கணவரைத்தேடினால் . ஆள் நைசாக நழுவி விட்டார். பக்கத்தில் இருந்த மகளை அழைத்து கணக்குக்கேட்டால், பதிநாலுல பாதி, ஏழு. ஏழில் ஒன்று கூட்டினால் எட்டு. எட்டை இரண்டால் பெருக்கினால் பதினாறு. பதினாறுல பத்தைக்கூட்டுங்க.. இருபத்தி ஆறு. இருபத்தாறுபத்து? என்றாள்,  எனக்கு தலை சுற்றலே வந்துவிட்டது. பிறகு வியாபாரியே மலாய் மொழியில் பேச ஆரம்பித்தாள். ஆறுதலாக இருந்தது. கணக்குப் போட்டுப்பார்த்து, விலையை பாதிக்குப்பாதி குறைந்து பேரம் பேசி வாங்கினோம். விலையை அப்படித்தான் குறைத்து வாங்கவேண்டுமென்று எங்களின் பயணவழிகாட்டில் பஸ்ஸை விட்டு இறங்குகிறபோதே அறிவித்துவிட்டார்.

மெக்கொங் ஆறு

மெக்கோங் ஆற்றில் பேர்ரி சவாரி. ஆற்றைச்சுற்றிப்பார்த்தல். ஏன் ஆறு அங்கே அவ்வளவு பிரபலம். ஒரு காலத்தில் வணிகம் செய்ய உலக வணிகர்கள் ஆற்றைத்தான் முதன்மை போக்குவரத்து சாதணமாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.

ஆற்றின் மூலம் பொருட்களையும் நாட்டின் வளங்களையும் சைகோன் சிட்டி (ஹோ சி மின்’இன் பழைய பெயர்.) நகரத்திலிருந்து தத்தம் ஊர்களுக்கு கொள்ளையடித்துச்சென்றுள்ளார்கள்.கப்பல் போக்குவரத்திற்கும் வனிகத்திற்கும் மிக வசதியாக நாட்டின் மையப்பகுதியில்  அமைந்துவிட்டதால் ஒரு காலத்தில் சைகோன் நகரம் பரபரப்பு மிகுந்த நகரமாக காட்சியளித்துள்ளது.

இயற்கை எழில்

வியட்நாம் நீர் வளம் கொழிக்கும் ஓர் அற்புத நாடு. ஒரு நாட்டிற்கு மிக முக்கியமான செல்வம் நீர். அதற்கு அங்கே பஞ்சமில்லை. எங்கு பார்த்தாலும் ஆறுகள் ஆறுகள் ஆறுகள். வழியெல்லாம் பாலங்கள். பாலங்கள் கட்டியே நாடு ஏழையாகிவிடும் போலிருக்கு.! காணும் இடமெல்லாம் பாலங்கள். ஆற்றைக்கடக்க முன்பு படகுசவாரிதான் முதன்மை போக்குவரத்து. இன்றும் சில இடங்களில் படகுதான் போக்குவரத்து வாகனம்.

நாடு வளரவளர மக்கள் வாழ்வாதாரங்களைத்தேடி நாடு நகரம் உலகம் என  நாலாப்பக்கமும் சென்றுவிட்ட காலகட்டத்தில் இருக்கின்ற பட்சத்தில் படகுகளைச் செலுத்துவது குறைந்த வருமானம் தரும் தொழிலாகப் பார்க்கப்படுவதால், மேலும் அது பழய காலத்துப் பாணியாக கருதப்படுவதால், படகுகளைச் செலுத்துவதற்கு ஆட்கள் குறைந்து காணப்படுகிறார்கள். மேலும் தற்போது மோட்டார் வாகனங்கள் மக்களின் தேர்வாக இருந்தபடியால், இக்கரையில் இருந்து அக்கரைக்குச்செல்ல பல இடங்களில் பாலங்கள் வேறு கட்டப்பட்டுவிட்டன. நவீன வேலைப்பாட்டுடன் கூடிய பெரிய பெரிய பாலங்கள் தொடங்கி, தென்னை மரங்களால் ஆன மிகச் சிறிய பாலங்கள் வரை.. எங்குபார்த்தாலும் பாலங்கள். ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்குச் செல்லவேண்டுமென்றால் ஆற்றைக்கடக்கவேண்டும். பாலம் இல்லாத இடங்களில் ஏழ்மை நிலையில் உள்ள படகோட்டிகள் தங்களின் குலத்தொழிலான படகோட்டித்தொழிலை இன்னமும் செய்துகொண்டிருப்பதைக் காணலாம். பஸ் நிறுத்தும் இடங்களைப்போல் படகு நிறுத்திவைக்கப்பட்டு பிரயாணிகளுக்காக அது மிதந்துகொண்டிருப்பதையும் ஆங்காங்கே காணலாம்.


நீர் வளம் மிகுந்த நாடு என்றால் சொல்லவே வேண்டாம்... கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேல் என்று பயிர்கள். நெல்வயல்கள். மரங்கள். பழங்கள். செடிகொடிகள் என கணகளுக்கு விருந்தளிக்கின்ற காட்சிகள் மனதை அள்ளிச்செல்கின்றன. இந்தச்சூழல் தூய்மையான காற்றைக்கொடுப்பதால் மனம் லேசாகிப்போகிறது. கடுமையான வெப்பத்தில் சிக்குண்ட நாடான மலேசியாவில் இருந்து சென்றதால், அங்குள்ள சிதோஷ்ண நிலை மனதை ரம்மியமாக்கிக்கொண்டே இருந்தது. மாலைப்பொழுதானால் கருமேகங்கள் சூழ்ந்து லேசான தூரலை நம்மீது தெளிக்கின்ற போது ஏற்படும் பரவச உணர்வு சொர்க்கம். 

காலைப்பொழுதுகளில் சாலையெல்லாம் பனியினால்  நனைந்திருப்பது, மர இலைகளில் இருந்து பனி சொட்டுவதும், பூக்களின் மேல், புல் நுணியின் மேல் பனி போன்ற காட்சிகள் தற்போதைய சூழலில் அபூர்வம்.  இதை அங்கு காண்கையில் அது நம்மை எங்கேயே இட்டுச்செல்கிறது. இயற்கையை நேசிக்கின்ற  என்னைப்போன்ற ஜீவராசிகளுக்கு இக்காட்சிகள் வரப்பிரசாதம்.

ஒரு காலத்தில் எங்களின் நாடும் இதே சூழலில்தான் இருந்தது. இன்று ஏன்அப்படி இல்லை.?

சுவைதரும் பழங்கள்

பழங்களுக்குள் கற்கண்டைக் காய்ச்சி ஊற்றியிருப்பதைப்போல் பழங்களின் சுவை தித்திப்பு.

அங்குள்ள உணவு மனநிறைவைத்தராததால் உணவுவேளைகளின் போது பலவிதமான பழங்கள் எங்களின் பசியினைப்போக்கியது. பழங்களை நிறைய வாங்கி வழிநெடூக சாப்பிட்டுக்கொண்டே சென்றோம். அற்புதமான ஆசியன் பழங்கள் அவையனைத்தும்.

கையிற்கெட்டிய தூரம் பழமரங்களில் இருந்து பழங்களைத் தாமாகவே பறித்து உண்ணலாம். அவ்வளவு பழங்கள் வழியெங்கும். யாரும் எதுவும் கேட்கவில்லை. சுற்றுலா பயணிகளான நாங்கள் வேண்டிய மட்டும் longgan மற்றும் கொய்யாப்பழங்களைப் பறித்து உண்டோம். எட்டாத மரங்களில் ஏறி பழங்களைப் பறித்து எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டார்கள். ரசித்து மகிழ்ந்தோம்.

காண்கிற இடமெல்லாம் நன்கு செழிப்பாக வளர்ந்து நிற்கின்ற பழமரங்கள். ஆற்றோரங்களில் sea coconut க்குப் பஞ்சமேயில்லை. sea coconut மலேசியாவில் பிரபலம். நோன்புக் காலங்களில் நோன்புச்சந்தைகளில் பானங்களாகச் செய்து வியாபாரம் செய்வார்கள். வியாபாரம் தூள்பறக்கும்.டிரஃக்கன் ஃப்ரூட் மிகப்பிரலம். சாலையில் செல்லுகையில் லாரி லாரியாக அப்பழங்களை ஏற்றிச்செல்வதைப் பார்க்கலாம். அங்கு செல்ல நினைப்பவர்கள் அங்குள்ள பழங்களைச் சுவைக்காமல் வராதீர்கள். கூடுதல் சுவையுடன் கிடைக்கின்ற அற்புத பழவகைகளை தவறவிடாதீர்கள்.


கைவினைப்பொருட்கள்

முட்டை ஓட்டினை வைத்துக்கொண்டு அற்புதமான கலைப்படைப்புகளை செய்து வியாபாரம் செய்கிறார்கள். போரில் பாதிக்கப்பட்டு உடல் ஊனமுற்றவர்களை ஊக்கப்படுத்துவதற்காக இத் தொழில்பட்டறை ஆரம்பிக்கப்பட்டதாக சுற்றுலா வழிகாட்டி அறிமுகப்படுத்தினார். இன்று அது மிகப்பெரிய தொழிலாக பரிணமித்திருப்பதைப் பல இடங்களில் பார்க்க ஆச்சிரியமாகவே இருந்தது. உடற்பேறு குறைந்தவர்கள்தான்  அக்கலையினில் கைத்தேர்ந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். இன்னமும் அங்கே உடல் ஊனமுற்றவரகள் பணிபுரிவதைப் பார்க்கலாம். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே கருப்பு அட்டையினில் வெள்ளையாக வரையப்பட்ட அற்புத ஓவியத்தில் தூளாக்கி வைத்திருக்கின்ற முட்டை ஓடுகளைத் தூவி அதை அழகுபடுத்தி பிரமாண்ட கலைப்படைப்பாக மாற்றுகிறார்கள். கண்கவர் படைப்புகள் அனைத்தும். இருப்பினும் வாங்குவதற்குத்தான் இயலவில்லை. காரணம் அதிகமான விலை.  பூ வைக்கின்ற சிறிய கூஜா கிட்டத்தட்ட இருநூறு ரிங்கிட்.

அந்நிறுவனம் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டுவருவதால் கூடுதல் விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றார்கள். எங்களின் குழுவில் வந்த எவரும் அங்கே பொருட்களை வாங்கியதை நான் பார்க்கவில்லை.

தென்னை ஓலையில் பலவிதமான கைவினைப்பொருட்களை உடனுக்குடன் தயார் செய்தும் தருகிறார்கள். தொப்பி. கூடை. கைப்பை. முறம் என நிறைய.. . பயண வழிகாட்டிக்கூட அப்பொருட்களைச் செய்வதில் கைத்தேர்ந்தவராகவே திகழ்ந்தார். மட்டையைக் கிழித்து கண்மூடிக் கண் திறப்பதற்குள்  தோடு, கைசெயின், சங்கிலி, நெற்றியில் கட்டுகிற பட்டை, பெல்ட், தட்டான், வெட்டுக்கிளி என தயாரித்துவிட்டார். இன்றைய காலகட்டத்து இளஞர்களுக்கு அது அதிசயம். கண்களை அகல விரித்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் எனக்கோ இது பழைய பாணி காரணம் நாங்கள் முன்பு விளையாடியதே இதுபோன்ற கைவினைப்பொருட்களைத் சொந்தமாகத்தயாரித்துத்தான். தென்னை மட்டையை மூன்று அல்லது இரண்டு பாகமாகப்பிரித்து சடைபோல் பின்னத்தெரிந்தால் போதுமே, எல்லாமும் அதற்குள் அடக்கம்தான்.


மிதக்கும் சந்தை


வியட்நாம் பயணமென்றாலே மிதக்கும் சந்தைதான் பலரின் சிந்தனைக்குள்  மின்னி மறையும். இன்றுகூட வியட்நாம் என்று இணையத்தில் தட்டினால், மிதக்கும் சந்தையினைப் படமாகப்போட்டுத்தான் அறிமுகம் செய்துவைத்திருப்பார்கள். அந்த அளவிற்கு அச் சந்தை அங்கே மிகவும் பிரபலம்.

ஐநூறு ஆயிரம் ஆண்டு காலமாக எங்கெங்கோ இருக்கின்ற விவசாயிகள் தங்களின் விளைப் பொருட்களை வியாபாரம் செய்ய அதைப் படகில் ஏற்றிக்கொண்டு வழிநெடுக வசிக்கின்ற மக்களுக்கு வியாபாரம் செய்துவந்திருக்கின்றார்கள். படகில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு இடத்திற்கு வந்து சூழ்ந்துகொள்கிறார்கள். பஸ்போன்ற பேர்ரி மக்களை ஏற்றிக்கொண்டு வந்து அங்கே நிறுத்துகிறது. அந்த பேர்ரியில் அமர்ந்தபடியே, அங்கே வட்டமடிக்கின்ற சரக்குப் படகுகளை அழைத்து பொருட்களை வாங்கிக்கொள்கிறார்கள். படகு, மோட்டார் போட், பேர்ரி ஜெனரேட்டர் சத்தம், மக்கள் கூவும் சத்தம் என்று பேரிரைச்சலாக இருப்பதால், சரக்கை ஏற்றிக்கொண்டு வரும் வியாபாரிகள், படகின் நடுவில் ஒரு நீண்ட குச்சியினை ஊன்றி, அதில் அவர்கள் என்னென்ன காய்கறி பழங்களை வியாபாரம் செய்கிறார்கள் என்பதை உதாரணமாகக் காட்டி வரிசையாகக் கட்டி வைத்திருப்பார்கள். வாங்குபவர்கள் தங்களின் கைகளைப் பயன்படுத்திக்  எத்தனையாவது எண்ணில் உள்ள பொருளை வாங்க நினைக்கின்றார்கள் என்பதனை விரல்களின் மூலம் காட்டினால், வியாபாரிகள் பேர்ரியின் அருகிலேயே கொண்டுவந்து கொடுத்து பேரம்பேசி விற்பனை செய்கிறார்கள்.

பூக்கள் தொடங்கி இறைச்சி மீன் வகைகள், காய்கறிகள் என தொடர்ந்து உணவு காப்பிப் பலகாரங்கள் என சூடுபறக்க பிஸ்னஸ் பரபரப்பாக நடைபெறுகிறது. படகில் ஆவி பறந்தால் சூப் செய்கிறார்கள் அல்லது காப்பி கலக்குகிறார்கள் என்று அர்த்தம். நாம் அவர்களைக் கொஞ்ச நேரம் உற்று நோக்கினால் துடுப்பைக்கொண்டு படகை நகர்த்தி நம்மிடம் வந்து ஆவி பறக்கின்ற காப்பியை கைகளிலேயே கொடுத்துவிட்டுச்செல்கிறார்கள். வாங்குவதற்கு ஆசையாக இருந்தபோதிலும், பயணவழிகாட்டி, பேர்ரியில் ஏறும்போதே சொல்லிவிட்டார்.. ஆற்றின் நீர் அசுத்தம் நிறைந்தது.  இவர்களால் ஆறு மாசுபட்டுக்கிடக்கிறது. அந்த நீரிலேயே அனைத்து வேலைகளையும் காலைக்கடன்களையும் முடித்துவிட்டு, அதைக்கொண்டே காப்பி தேநீர் பலகாரங்கள் சூப் போன்றவைகளையும் செய்வார்கள். வாங்கிச்ச்சாப்பிட்டுவிட்டு உற்சாகப் பயணத்தை பாழ்படுத்திக்கொள்ளவேண்டாம் என்று எச்சரித்துவிட்டதால், பார்வையாளராக மட்டும் நாங்கள் இருந்தோம்.

காணக்கிடைக்காத அற்புத காட்சி அது. சிலர் காலத்திற்கேற்ப மாறாமல் வழிவழியாக பரம்பரை பரம்பரையாக நிலத்தில் வீடுகளைக் கட்டாமல் படகிலேயே அப்படியே மிதந்தமேனியாக வாழ்ந்துகொண்டு வருகிறார்கள் என்கிற ஆச்சரியமூட்டும் தகவலையும் பகிர்ந்துகொண்டார் பயண வழிகட்டி. கல்யாணம். குழந்தைப்பிறப்பு. குடும்பம் நடத்துதல் என எந்த ஒரு பிக்கல் பிடுங்கள் இல்லாமல் பேராசையற்ற மக்களாக நிம்மதியாக வாழ்ந்துவருகிறார்கள் என்று சொன்னபோது, வீடுபோல் கூடாரம் அமைத்திருந்த ஒரு படகிற்குள் நடப்பவற்றில் என் கவனம் சென்றது.

துணிமணிகளை பெண்பிள்ளை  உலரப்போடுகிறாள். தாயோ பாட்டியோ தெரியவில்லை மீன்களை ஆய்ந்துகொண்டிருந்தார். பின் பக்கம் ஒரு பையன் வாளியின் மூலமாக படகின் உள்ளே புகுந்த நீரை வெளியே வாரி வாரி இரைத்துக்கொண்டிருந்தான். இதை ஓவியமாகத்தீட்டினால் அழகான கலைப்படைப்பு ஒன்று உருவாகியிருக்கும். கேமராவோ மகனிடம். கைப்பேசியோ கணவனிடம். அவர்களுக்கு இதெல்லாம் சாதாரண வாழ்க்கைச்சூழல். ஆனால் எனக்கோ அது கலை. ஜென். கண்களால் சிந்தைக்குள் க்ளிக் செய்துகொண்டேன். சுவாரஸ்யமான அனுபவம். காணக்கிடைக்கா காட்சிகள் அவை. எப்படியெல்லாம் மக்கள் வாழ்கிறார்கள் என்பது புது அனுபவமாகவே இருந்தது எனக்கு.

தொண்ணூறுகள் வரை பரபரப்பாக இருந்த இந்த மிதக்கும் சந்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாகக் கூறி குறைபட்டுக்கொண்டார் பயணவழிகாட்டி. நாடு வளர வளர், நாலாபக்கமும் நவீன பாலங்கள் கட்டப்பட்டவுடன், மக்கள் ஆற்றோரங்களுக்கு வருகை புரிவதைக் குறைத்துக்கொண்டு வண்டி வாகனங்களில் கொண்டுவரப்படும் பொருட்களை தங்களின் அன்றாடத்தேவைகளுக்கு வாங்கிக்கொள்கின்றார்களாம்.  அலைச்சல் குறைவு நேராக வீட்டின் வாசலிலேயே விற்பனைக்குக் கொண்டுவந்தும் கொடுக்கின்றார்களாம். இதனால் வருங்காலத்தில் நாட்டின் அடையாளமாகத்திகழும் மிதக்கும் சந்தை இல்லாமலும் போகலாம் என்கிறார் பெருமூச்சுடன்.

உணவு..

இதுதான் பெரும்பிரச்சனை நமக்கு. நமக்கு என்றால் இந்துக்களுக்கு. நாம் பெரும்பாலும் சைவ உணவு உண்பவர்களாக இருப்போம். இல்லையேல் நடப்பது ஊர்வது பெரியது எல்லாம் சாப்பிட மாட்டோம். கோழி இல்லையேல் மீன் தான். ஆனால் அங்கே தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு உணவில் பன்றி இறைச்சியினைச் சேர்த்துக்கொள்கிறார்கள். சைவசாப்பாடு கிடைப்பது குதிரைக்கொம்பு. சைகோன் ஹாலால் உணவகங்களில் கிடைக்கலாம் ஆனால் அதைத்தேடி நாம் போகவேண்டும். குறிப்பிட்ட இடங்களில் மட்டும்தான் கிடைக்கும் மற்றபடி உணவிற்கு நாயாய் அலைய வேண்டி வரும்.


மீன் உணவை உண்ணலாம் என்றால், மீனைப்பிடித்து நேராக கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு எடுத்து பரிமாறிவிடுவார்கள் போலிருக்கு. ஒரு வித கவுச்சி வாடை குமட்டுகிறது. கொஞ்சங்கூட வாசனையே இல்லை சமையல்களில்.

காய்கறிகளை சமைக்காமலேயே வைத்துவிடுகிறார்கள். பொரித்த மீன் அருகில் எழுமிச்சையை துண்டாக வெட்டி வைத்துவிடுகிறார்கள். அரிசி மாவில் செய்யப்பட்ட  அப்பம், காகிதம் போல் மெலிதாக உள்ளது அதையும் கூடவே வைத்துவிடுகிறார்கள். இது எதுக்கு? என்றால், பதில் பேசமலேயே மீனைப் பிய்த்துகாகிதம்போன்ற அப்பத்தில் வைத்து பச்சையாக உள்ள காய்கறி கீரைவகைகளை அதில் வைத்து, இடியப்பம்போன்ற ஈரமான நூடூலையும் அதில் அடுக்கி, அதன் மேல் எழுமிச்சஞ்சாற்றைப் பிழித்து அதைச் சுருட்டி நம்மிடம் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார். அதுதான் சாப்பாடாம். ! அதன் பிறகு சூப். கொஞ்சம் சோறு. வாட்டிய இரால். வாட்டிய பன்றி இறைச்சி.

மேஜை நிறைய உணவு ஆனால் என் மகன் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். கணவர் நல்லாருக்கு நல்லாருக்கு என்று போலியாய் சுவைத்துக்கொடிருந்தார். மகள் கடமைக்கு சூப்’ஐ கொஞ்சம் சுவைத்தாள். செய்துவைத்த சுருள் அப்பத்தை நான் கஷ்டப்பட்டு விழுங்கினேன்.

சாப்பாடு நமக்கு ஒத்துவராது. நாம் அதற்குச் சரிபட்டுவர மாட்டோம்.

காப்பி ஆஹா அற்புதம். ப்ளாக் காப்பி குடி, பிரமாதமென்று என் சீனத்தோழிகள் என்னிடம் கூறி அனுப்பினார்கள். முடிந்தால் காப்பி வாங்கிவா. வியட்நாம் காப்பி ஆஹா ஓஹோ அருமை. என்றார்கள். நிஜமாலுமே காப்பி பிரமாதம். செல்லும் இடமெல்லாம் காப்பியை கலக்கிக்கொடுக்கச்சொல்லி உணவிற்கு பதில் இரவுபகல் பாராமல் காப்பியை அருந்தி அகமகிழ்ந்தேன்.
எப்படியாவது காப்பி வாங்கவேண்டுமென்றும் காத்திருந்தேன்.

பயணவழிக்காட்டியும், இங்கே வந்தவர்களின் கவனத்தை காப்பி அதிகம் கவரும். ஆக, காப்பிப்பருக மறக்கவேண்டாம், என்று சொல்லி எங்களையெல்லாம் ஒரு பிரமாண்ட காப்பிக்கடைக்கும் அழைத்துச்சென்றார்.

அங்கே பயணிகளுக்கு இலவசமாகக் காப்பியும் ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் மட்டுமல்ல நிறைய பயணிகள் அங்கே. நெரிசலில் முட்டிமோதிக்கொண்டிருந்ததால் ஒரு வரவேற்பு அறையில் சிலரை கொஞ்சநேரம் அமரவைத்தார்கள். அந்தக் குழுவில் நானும் இருந்தேன்.

அங்கே தொலைக்காட்சியில் சிறந்த காப்பி எப்படித்தயாரிப்பார்கள் என்பதை அக்குஅக்காகக் காண்பித்தார்கள்.

கூண்டில் அடைக்கப்பட்ட பல மூசாங் பூனைகளிடம் பழுத்த காப்பிப்பழங்களைக் கொட்டுகிறார்கள். அப்பழங்களை அவைகள் தேர்ந்தெடுத்து உண்கின்றன. உண்டபிறகு மலம் கழிக்கின்றன. புழுக்கைகளாக `நாய் பீ’ மாதிரியான வடிவத்தில் அங்கே கிடத்தியிருக்கின்ற தட்டில் விழுகிறது அவைகளின் மலம். மறுநாள் அதைச்சேகரித்து சிறந்த காப்பித்தூளாக மாற்றுகிறார்கள்.


இதைப்பார்த்தபிறகும் நான் காப்பிக்குடிப்பேனா.?

`யம்மா, மலத்தையும் விட்டுவைக்கலையா இவர்கள்.? என்று மகள் முனகிக்கொண்டே பஸ் ஏறினாள்.

மதமற்றவர்கள்.

“வியட்நாமில் மதம் இல்லை. எங்களுக்கு மதம் எப்போது உதவும் தெரியுங்களா.? அரசாங்க வேலை வாய்ப்பின்போதுதான். அங்கேதான், ` நீ என்ன மதம்?’ என்று பூர்த்தி செய்கிற பாரத்தில் கேட்டிருப்பார்கள். அவ்விடத்தை எதையாவது கொண்டு நிரப்பவேண்டும் என்பதற்காக வழிவழியாக கடைபிடித்துவந்த மதம் என்ற ஒன்றினைப் பயன்படுத்திக்கொள்வோம். மற்றபடி மதம் எங்களுக்கு எதற்கும் உதவுவது கிடையாது. பொதுவாகவே நாங்கள் மதமற்றவர்கள். அதனால்தான் இங்கே கோவில்கள் குறைவு.”

பயணவழிகாட்டி பகிர்ந்துகொண்ட தகவல்..
கசப்பான அனுபவம் -

மொத்த வியாபாரக்கடையில் துணியெடுக்கச்சொல்லி அந்த கடை முதலாளி எங்களை வற்புறுத்திக்கொண்டிருந்தாள்.

கைகளைப் பிடித்து வைத்துக்கொண்டு கெஞ்சி கூத்தாடிக்கொண்டிருந்தாள். ஏழை வறுமை ப்ளீஸ், என்று மன்றாடினாள். தப்பிக்கமுடியாத அளவிற்கு எங்களைப் பிடித்துவைத்துக்கொண்டாள். கேட்டவிலையில் இருந்து பாதிக்கும் மேல் குறைத்துக் கேட்டும் முடியாது என்று சொல்லி, இறுதியாக சரி என்று அதே விலைக்கும் வந்தாள். அதாவது ஆடை தைக்கின்ற  தையற்கூலியுடன். மூன்று மணிநேரத்திற்குள் தைத்துக்கொடுப்பதாகவும் வாக்களித்தாள்.  இரவு பத்துமணிக்குள் ஹோட்டல் அறைக்கே கொண்டுவந்து கொடுக்கின்றோம் என்று வாக்கு கொடுத்தாள். சரியென வியட்நாம் சுடிதார்.. (பார்க்க அப்படித்தான் இருக்கும் அவர்களின் பாரம்பரிய உடை) ஒன்றை மகளின் அளவிற்கு தைக்கக்கொடுத்து, தங்கும் அறையின் எண், தொலைப்பேசி எண் போன்ற விவரங்களைக் கொடுத்து, பணத்தையும் முழுமையாகச் செலுத்திவிட்டு, பத்து கிலோமீட்டருக்கு அப்பாலில் உள்ள ஹோட்டலுக்கு வந்துவிட்டோம்.

இரவு பதினொன்றாகியும் ஆடை வரவில்லை. ரிஷப்பஷனில் கேட்டபோது, ஏமாற்றமாட்டார்கள் வரும். கவலைவேண்டாமென்று ஹோட்டல் ஊழியர்கள் எங்களைச் சமாதானப்படுத்தினார்கள்.

இரவு பன்னிரெண்டு மணி இருக்கும். அழைப்பு வந்தது. ஆடை வந்துவிட்டது என்று சொன்னார்கள். கீழே இறங்கி அறைக்குக் கொண்டுவந்து எடுத்துப்பார்த்தால், ஒரு ஜோடியாக இல்லாமல் அந்தக் கலாச்சார உடையின் சட்டை மட்டுமே இருந்தது அதில்.

நான் அவளின் தொலைபேசி எண்களை வாங்கிவைத்திருந்ததால், அந்த இரவே அவளுக்குத் தொலைபேசி அழைப்பு கொடுத்து கொஞ்சம் கோபமாகவே கேட்டேன்.

காலையில் நன்கு அங்கிலம் மலாய் என்று பேசியவள் இரவில் மொழி தெரியாததுபோல் நாடகமாடினாள். சோர்ந்துபோனேன். ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்கிற உளைச்சலில் இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்தேன்.


உடம்புப்பிடி/மெனிக்ஃயோ./பெடிக்ஃயோ

தயவுசெய்து செல்லாதீர்கள். அதிகவிலை. குறைந்தவிலை என்று சொல்லி உள்ளே அழைத்துச்சென்று டிப்ஸ் என்கிற பெயரில் இன்னும் இவ்வளவு கொடுங்கள், என்று கேட்டு வாங்குவார்கள். எங்கள் விஷயத்தில் எங்களை உடம்புப்பிடி பார்லரில் விட்டுவிட்டு பாருக்குச்சென்றுவிட்டார் கணவர். எல்லாம் முடிந்தபிறகு இன்னும் இவ்வளவு கொடுங்கள் என்று கேட்கத்துவங்கிவிட்டார்கள். அதுவும் எப்படி, கால்பிடித்துவிட ஒரு ஆள். உடம்பு பிடித்துவிட ஒரு ஆள் ஆக மொத்தம் இரண்டுபேருக்கு இவ்வளவு டிப்ஸ் என்று கேட்டு வாங்குகிறார்கள். எங்களிடம் பணமில்லை என்றால் கணவரை வரச்சொல்லுங்கள் என்கிறார்கள். அவர் வந்து ஏற்கனவே ஆறாவது மாடியில் பணம் செலுத்திவிட்டோம் இன்னும் என்ன இங்கே? என்று கேட்டதிற்கு, அங்கே மசஜுக்குப் பணம். அது முதலாளிக்கு. டிப்ஸ் எங்களுக்கு. என்றார்கள். அதுவும் கசப்பான அனுபவமே. நடக்கவேண்டும்..

பயணங்களில் நீண்ட தூரம் நடக்கவேண்டும். நல்ல காலணிகளைப் பயன்படுத்துங்கள். இல்லையேல் பயணம் பாழாகும். சைக்கிள் சவாரியெல்லாம் செய்யச்சொல்வார்கள் கிராமங்களைச் சுற்றிப்பார்க்க. ஆக தோதான ஆடைகளையும் அணிந்து செல்லுங்கள். புடவை, வேட்டி எல்லாம் வேண்டாம்.  

அப்படி இப்படி சில மைனஸ்கள் இருப்பினும், வியட்நாம் பயணம் சிறப்பான பயணமாகவே எங்களுக்கு அமைந்தது. விட்டுவர மனமில்லை அந்த ரம்மியமான சூழலை. மீண்டும் செல்வேன் வாய்ப்புக்கிடைத்தால்...