செவ்வாய், ஜூலை 10, 2012

உண்மையே உன் விலை?

ஒரு விஷயத்தையொட்டிய எதிர்ப்புக்கடிதம் பத்திரிகையில் வந்திருந்தால், அதைப் படித்து விட்டு, கருத்துகளைத்திரட்டி பதில் மடல் எழுதவேண்டும்; இல்லையேல், பிரச்சனை என்ன என்பதனை சீர்த்தூக்கிப்பார்த்து அதைக் களைவதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும். அதை விடுத்து எழுதியவரின் கைப்பேசி எண்களை எடுத்து, அதை யாரிடமாவது கொடுத்து, இரவு பகல் பாராமல் கண்ட கண்ட குறுந்தகவல்களை எல்லாம் அனுப்பி வெறுப்பேற்றுவது எந்த விதத்தில் நியாயம்?

பாதிக்கப்பட்டவருக்கு கருத்து சொல்வதற்கு சரக்கு ஏதுவும் இல்லாதபட்சத்தில் இப்படிக் குறுக்குவழியில், எழுதியவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீமை விளைவித்து குளிர்காய்ந்து குள்ளநரி வேடம் தரிக்கும் கோழைகளை என்ன செய்வது?

ஒரு சாதரண உலக நியதி வழக்கத்தில் உள்ளதுதான், அதாவது உன்னைப்பற்றி ஒருவர் விமர்சனம் செய்துவிட்டால், அதற்கு நீ அதிக முக்கியத்துவம் கொடுத்து படப்படப்பாகிறாய் என்றால், சொல்லப்பட்ட விஷயம் அப்பட்டமான உண்மை என்றும் அதை நீ முழுமனதுடன் ஏற்றுக்கொண்டாய் என்றுதானே அர்த்தம்.! இது கூட தெரியாமல்,  எல்லா எதிர்ப்புகளுக்கும் கதவடைக்கிறேன் பேர்வழி என, பத்திரிக்கை அலுவலகங்களுக்கு பிச்சை எடுக்கும் பாணியில் தொலைபேசி அழைப்பு விடுத்து அழுது வடிவது மிக மிகக் கேவலமான செய்கை இல்லையா!.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், இது போன்ற மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால் என்ன செய்வார்கள்? அதிகார துஷ்பிரயோகம் தானே..

கடந்த ஞாயிறு அன்று நான் எழுதிய, `வானொலி நாடகங்களும், நடக்கும் கூத்துகளும்’ என்கிற கட்டுரை, எனது புகைப்படத்தோடு என் சொந்த பெயரோடு மிக சிறப்பாக வந்திருந்தது பத்திரிகையில்.  இவ்வேளையில் தினக்குரல் ஞாயிறு பொறுப்பாசிரியர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றி உரித்தாகுக-.

ஒரு வாசகரோ அல்லது எழுத்தாளரோ தைரியமாக தமது கருத்துகளை முன் வைக்க பத்திரிகையும் அதற்குத்தகுந்தாட்போல ஆதரவு வழங்கினால், உழல்கள் அவ்வளவு தைரியமாக செய்யப்படமாட்டாது.  ஊழலை ஒழிக்கமுடியாதுதான் ஆனால் ஓரளவு குறைக்கப்பார்க்கலாம். இப்படி நமது ஆதங்கத்தைச் சொல்ல  நமக்கு இருக்கும் ஒரே ஆதரவு பத்திரிகைத்துறையே. அவர்களும் சில வேளைகளில் நமது படைப்புகளுக்கும் கருத்துகளுக்கு பாரமுகமாகவே இருந்து விடுகின்றார்கள் என்பதுதான் வேதனை.! நமக்கு எதற்கு இந்த வீன் வம்பு என.!

எதிர்வினையில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு உடன்படவில்லை என்றால், கருத்து மோதல்களுக்குத் தயாராக வேண்டுமேயொழிய அற்பத்தனமாக அறைகூவல் அடக்கத்தின் மறுவுருவை பறைச்சாற்றிவிடும். எல்லோருக்கும் இன்னொரு முகம் இருக்குமல்லவா.!

அந்த எதிர்வினைக் கட்டுரை, பத்திரிகையில் வெளிவந்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகின்றன, ஆனாலும் எனக்கு வரும் அநாமதைய அழைப்புகளும் அசிங்கமான குறுந்தகவல்களும் எனக்கு தலைவலியைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

என்ன மாதிரியான வளர்ப்பு முறையில் வளர்க்கப்பட்டிருந்தால், இதுபோன்ற அருவருக்கத்தக்க குறுந்தகவல்களை அனுப்ப எததனிப்பார்கள்.!?

குறுந்தகவல் 1 - நான் உனக்கு சாப்பாடு வாங்கித்தந்தேன், அதற்கு இதுதான் நீ செய்யும் நன்றியா?

குறுந்தகவல் 2 - அறவே நடிக்கத்தெரியாத உனக்கு, நான் பணம் கொடுத்து நடிக்கவைத்தேனே, அறிவிருக்கா?

குறுந்தகவல் 3 - முட்டாள் உனக்கு எழுதவே தெரியாது. நீ எழுதி கிழிக்கிறாயா?

குறுந்தகவல் 4 - வேட்டிக்குள் அடங்கி இருக்கவே மாட்டாயா? (மற்றது வேண்டாம்)

குறுந்தகவல் 5 - அறிவுகெட்ட முண்டம், யார்கிட்ட மோதற!?

குறுந்தகவல் 6 - ஏற்கனவே நிறைய மூக்கு உடை பட்டாய், போதாதா? இன்னும் உடைபடுவாய், நான் கைத்தட்டிச் சிரிப்பேன்..ஹஹஹ

குறுந்தகவல் 7 - யாரோ ஒரு பிரபலமான நாடக நடிகர் உன் நடிப்பைப் பார்த்துக் காறித் துப்பினாராம்.! அதோடு உனக்கு வாய்ப்பே இல்லாமல் போய் விட்டதாம், அதனால் தான் நீ இப்படியெல்லாம் எழுதி உன் வயிறெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறாயாம்.! ஹஹஹ

குறுந்தகவல் 8- உன் படத்தைப்போட்டு பல்லைக்காட்டிக்கொண்டு போஸ் கொடுக்கற கட்டுரையில், பெரிய அழகின்னு நினைப்பு.

குறுந்தகவல் 9 - நேற்று நாங்கள், தலைநகர் பிரிக்ஃபீல்டில் ஒரு ரெஸ்டரண்டில் சாப்பிடச்சென்றோம், அப்போது எல்லோரும் உன் லட்சணத்தைப் பற்றித்தான் பேசினார்கள். நாடறிந்த ஒன்று உன் நாற்றமெடுத்த கதை.

ஒரு இருபது அழைப்புகள் - 181 குறுந்தகவல்கள். எந்த அழைப்பையும் எடுக்காமல் எந்த குறுந்தகவலுக்கும் பதில் போடாமல் - கால் ஆட்டிக்கொண்டு ப்ளாக் எழுதறேன்..

எவ்வளவு மோசமாக இருக்கின்றது பார்த்தீர்களா நமது இலக்கிய உலகம்? பத்திரிகையில் இவற்றையெல்லாம் சொன்னால், இப்போது ஒன்றும் வேண்டாம், அவர்கள் என்னமோ சொல்ல வருகிறார்கள், அவற்றை இந்த வாரம் போட்டு விட்டு, அடுத்த வாரம் நீங்கள் உங்களின் கருத்தை தெரிவிக்கலாம் அம்மா.. என்றார் தலைமையாசிரியர்.

அதுசரி, அதுவரைக்கும் இந்த உட்சபட்ச ஆக்ரோஷ நிலை நம்முடனேயே இருக்கவேண்டுமே எழுதுவதற்கு! மௌனம் காப்பதால், பல விஷயங்கள் அப்படியே ஆறிப்போகும். ஆறிப்போனால், சொல்ல வந்ததை சொல்ல இலயாமலும் போகும். நாளை நான் இல்லாமலும் போகலாம், நாளைய நிலைமையும் மாறிப்போகலாம்.! ஆனால் அநீதி ஜெயிக்கக்கூடாது. அராஜகம் செய்து அடுத்தவரை வீழ்த்தி வாழ நினைப்பவர்களை வாழ விடவே கூடாது. அவர்களுக்கு எல்லா இன்னல்களையும் கொடுத்து விரட்டியடிக்கவேண்டும்.

இதில் ஒரு கூத்து என்ன தெரியுங்களா? சாட்சியை வைத்துக்கொண்டு குற்றச்செயலில் ஈடுபடுவது. அதாவது, இப்படி குறுந்தகவல்களை அனுப்பினால், அங்கே சம்பந்தப்பட்டவரின் நம்பர் வரும் தானே.!?
`சைபர் கிரைம்’ அதிகரித்து வருவதால், அரசாங்கமே எல்லோருடைய கைப்பேசி எண்களையும் அதனதன் நிறுவனங்களின் பதிவு செய்து கொள்ளவேண்டுமென்கிற கட்டாய நிபந்தனையை அமலுக்குக்கொண்டு வந்தது. அதனால் எல்லோருடைய தொலைப்பேசி எண்களும் பதிவாகியே வைக்கப்பட்டிருக்கும். ஒரு எண்ணிலிருந்து, இதுபோன்ற அசிங்கமான குறுந்தகவல்கள் வந்தால், தகுந்த இடத்தில் புகார் கொடுத்தோமென்றால், ஒரு மணி நேரத்திற்குள் கண்டுபிடித்துக் கொடுத்துவிடுவார்கள்.  காவல்துறையில் அவர்களின் மேல் நடவடிக்கை எடுக்கலாம் என்கிற பச்சை சமிக்ஞை கொடுத்து விட்டால் போதும், வீடு புகுந்து இழுத்துவருவார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் ஏற்கனவே எம்மாதிரியான குற்றச்செயல்களில் இந்த தொலைப்பேசி எண்களைக்கொண்டு ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதனையும்  வெட்டவெளிச்சமாக தெரிவித்தும் விடுவார்கள். இது போன்ற நவீன தொழில் நுற்ப சூழலில் நாம் இருக்கின்றோமென்கிற புரிதல் கூட இல்லாத அப்பாவிக் குற்றவாளியாக இருக்கின்றார்கள் என்பதுதான் மற்றொரு வேதனைக்குரிய விஷயம்.  என்ன செய்வது, மலேசிய சூழலில் நாம் தான் இப்படி, மற்ற இனத்தவர்கள் எங்கேயோ போய்விட்டார்கள்.

உண்மையே உன் விலை என்ன?