வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

பதிவர் சந்திப்புக்குச் செல்லலாமே..

(ஆகஸ்ட் மாதம் 26-ம் நாள் ஞாயிற்றுக் கிழமை) சென்னையில் மிகப் பெரிய பதிவர் சந்திப்பு நடைப்பெறவிருக்கின்றது. வழக்கமாக ஆங்காங்கு ஒரு சில பதிவர்கள் சந்தித்து உரையாடி வந்தனர். ஆனால் இம்முறை தான் கொஞ்சம் பெரிய அளவில் ஒரு சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

உலகம் முழுவதும் வலைப்பதிவில் எழுதுவோரின் எண்ணிக்கை பெருகிவிட்டது. பொது ஊடகங்கள் பலவும் இன்று வலைப்பதிவுகளுக்கும் முக்கியம் தர ஆரம்பித்துவிட்டன. மேற்குலகில் அனைத்து பொது ஊடகங்களும் ஒரு வலைப்பதிவை வைத்திருக்கின்றன, பல தனி வலைப்பதிவர்களின் எழுத்துக்களையும் பொது ஊடகங்கள் அரவணைத்துக் கொள்கின்றன. ஒவ்வொரு தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சிகளிலும் ஒரு வலைப்பதிவராவது வந்து பேசுகின்றார். பல வலைப்பதிவு சந்திப்புக்கள் நடந்தேறி வருகின்றன. 

தமிழர்கள் இந்த விடயத்தில் கொஞ்சம் பின் தங்கியே இருக்கின்றோம். பல முறை முயன்றும் இம்முறை தான் அதுவும் இளையவர்களைக் காட்டிலும் மூத்தவர்கள் இதற்குப் பெரும் துணையாக இருந்து செயல்பட்டு வருகின்றார்கள். புலவர் இராமாநுசம் ஐயாவை பாராட்டியே ஆக வேண்டும். அவர்களோடு இணைந்து பணியாற்றி வரும் இதர பதிவர்களையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். 

இந்தப் பதிவர் சந்திப்பானது சென்னைப் பதிவர் சந்திப்பாகத் தான் அறிவிக்கப்பட்டது என நினைக்கின்றேன். உலகிலேயே தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசம் சென்னை பிரதேசம் ஆகும். சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு தான் இன்று தமிழர்களின் தலைமையிடமாக விளங்குகின்றது. சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். இங்கு நடைப்பெறும் பதிவர் சந்திப்பு என்பது, வெறும் சந்திப்பு என்பதையும் தாண்டிய ஒரு நிலையே ஆகும். இப் பகுதியில் தான் அதிகமான பதிவர்கள் இருக்கின்றார்கள். சுமார் 500-க்கும் மேற்பட்ட பதிவர்கள் சென்னை பிரதேசத்தில் இருக்கக் கூடும். 

ஆகவே இது சென்னை பதிவர் சந்திப்பு என்பதையும் தாண்டி தமிழகம், கருநாடகம், ஆந்திரப் பிரதேசம் உட்பட அண்டை மாநிலங்கள் முதல் வெளிநாடுகளில் இருந்தும் பல தமிழ் பதிவர்கள் இச் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைச் சென்னை பதிவர் சந்திப்பு என்பதையும் தாண்டிக் கொண்டு சென்றுவிட்டார்கள் என்பதை நாம் மறுக்கவே முடியாது. 

ஒரு சிலரின் பொருளாதாரப் பங்களிப்பு, உழைப்பு என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு இச்சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்கள் என்பதையும் நாம் மறக்க வேண்டாம். ஒரு சில நிறுவனங்களைத் தவிர வேறு எந்தவொரு ஊடகங்களும் இந்தத் தமிழ் பதிவர் சந்திப்புக்கு முக்கியம் தரவில்லை என்றே தோன்றுகின்றது. 

தமிழ் பொது ஊடகங்களில் பதிவர்கள் என்றால் சும்மா வேலை வெட்டியில்லாமல் இணையத்தில் கிறுக்குபவர்கள், அரட்டை அடிப்பவர்கள் என்ற ஒரு விம்பம் இருக்கின்றது. ஆனால் அது எந்தளவு உண்மை என்பதைக் காலம் தெளிவுப் படுத்தும். பதிவர்களின் எழுத்துக்கள் பல பொது ஊடகங்களில் குறிப்பாக ஆனந்த விகடன் போன்றவைகளில் வரத் தொடங்கி இருப்பது நல்லதொரு முன்னேற்றம். ஏனெனில் பதிவர்களின் பல எழுத்துக்கள் பொது ஊடகங்களை விடச் சிறப்பாக இருப்பதே அதற்கான காரணம். 

ஆனால் பதிவுலகம் என்பது பட்டைத் தீட்டப்படாதவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பதிவுலகத்தில் குறிப்பாகத் தமிழ் பதிவுலகில் குப்பைகள் நிறையவே இருக்கின்றன. அந்தக் குப்பைகள் குழுவாகச் சேர்ந்து கொண்டு மொத்தமாகக் குப்பைக் கொட்டி வருகின்றன என்பதையும் நாம் அறிவோம். 

அப்படிக் குப்பைக் கொட்டுவோர் பலருக்கு இந்தப் பதிவர் சந்திப்பு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பதை நம்மால் நன்கு உணர முடிகின்றது. பதிவுலகில் தாம் கொட்டும் குப்பைகளுக்குத் தான் நறுமணம் இருப்பதாக வாசகர்களின் கண்களைக் கட்டும் வித்தைகள் நடந்தேறி வருகின்றன. ஏனைய மொழிப் பதிவர்களை விடவும் தமிழில் இது அதிகமோ என்று தோன்றச் செய்கின்றது.

குறிப்பாகத் தமிழ் மணம் திரட்டியில் குழுக்கள் அமைத்துப் பதிவுகளுக்கு வாக்கு குத்துவது, பொது ஊடகச் செய்திகளைக் கருத்துப் பெட்டியில் நிரப்பிப் பதிவுகளை முன்னுக்குக் கொண்டு வருவது, எதிர் கருத்துக்கள் உடைய பதிவுகளைப் பின்னுக்குத் தள்ளுவது, பொய்களை மெய்கள் போலக் காட்டுவது என ஒரு பின்னணி அரசியல் நடந்த வண்ணமே இருக்கின்றது. அதில் ஒரு அங்கமாகவே ஒரு சில குழுக்களின் ஏற்றலால் பதிவர் சந்திப்பு என்றாலே குடித்துவிட்டுக் கும்மாளம் அடிப்பவர்கள், டாஸ்மாக் வியாபாரத்தைக் குத்தைகைக்கு எடுப்பவர்கள் என்ற ரீதியில் ஒரு பிரச்சார உத்தியை எடுத்துள்ளார்கள். 

பதிவர் சந்திப்பு என்பது வெறும் குடிக்கும் பழக்கம் உள்ள ஆண்கள் மட்டும் நடத்தும் ஒரு வைபவம் அல்ல என்பதை நாம் உணர வேண்டும். சந்திப்புக்குப் பின் அவர் டாஸ்மாக் போவதும், கோவிலுக்குப் போவதும் அவரவரின் தனிப்பட்ட சுதந்திரம். ஆனால் பதிவர் சந்திப்பில் பெண்கள், குடிப்பழக்கமற்றவர்கள் என அனைத்துப் பிரிவினரும் வருவார்கள். கிட்டத் தட்ட ஒரு திருமண வீடு போன்ற கலகலப்பு இருக்கும். அப்படியான சூழலில் நட்ட நடு மேடையில் Cheers  சொல்லிக் கொள்ளும் அளவுக்குத் தரம் கெட்டவர்கள் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

ஒரு சில பதிவர்கள் இந்தச் சந்திப்புக் குறித்து வாய்த் திறவாமல் இருப்பதையும் நாம் கவனிக்க முடிகின்றது. வெகுகாலமாகப் பல்வேறு பதிவர்கள் பலமுறை பதிவு ஊடாகவும் இன்னும் பல ஊடகங்கள் ஊடாகவும் பதிவர் சந்திப்புக் குறித்துப் பேசியும், எழுதியும் வருகின்றனர். ஆனாலும் பலர் அப்படி ஒரு விடயமே இல்லாதது போல நடந்து கொள்கின்றனர். வருகின்றேன் ! வரவில்லை என்று கூடச் சொல்வதில்லை. இவர்கள் என்ன கூட்டம் நடத்துவது அதில் நாம் என்ன போவது என்ற பழமை சிந்தனையோடும் வெட்டிக் கௌரவம் கொண்டவர்களும், இந்தப் பதிவர் சந்திப்பால் நமக்கு என்ன லாபம் பணம் வருமா ? ஜோதிட புக் விற்குமா ? மதம் மாற்றம் செய்ய முடியுமா ? ஆசிரமத்துக்கு வாங்கோ, பரிகாரம் செய்யுங்கோ என விளம்பரம் தான் வைக்க முடியுமா ? என்ற எண்ணத்தில் பலர் இந்தச் சந்திப்பைக் கண்டுக்கவே இல்லை என்பது தான் உண்மை. 

இந்தப் பதிவர் சந்திப்பானது தமிழில் எழுதும் அனைவரையும் அழைக்கும் ஒரு சங்கமம் ஆகும். இவற்றில் மதம், சாதி, கருத்து, கொள்கை என்பதை எல்லாம் தாண்டி தமிழால் இணைவோம் என்பதை மட்டுமே நினைவில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டவை ஆகும். இருப்பினும் விசமம் உடையவர்களின் விசனங்கள் உள்ளூருவதை எம்மால் நாடி பிடித்துப் பார்க்க முடிகின்றது. 

எனக்கு என்ன வருத்தம் என்றால் பலர் தமிழ் பதிவர் சந்திப்புக்கான ஒரு சுட்டியைக் கூடத் தம் தளத்தில் இடமால் இருந்தமை தான். தாம் வராவிட்டாலும், அந்தச் சுட்டிகளைப் பார்க்கும் வாசகர்களாகவது வருவார்கள் என்ற ஒரு சிறிய பெருந்தன்மைக் கூட இல்லாமல் போய்விட்டது. 

தமிழ்மணம் திரட்டிக் கூட அதனைச் செய்யவில்லையே. அமெரிக்காவில் நடந்த ஃபெட்னாவுக்கு விளம்பரம் வைத்தவர்களுக்கு இதற்கு மனம் இல்லாமல் போய்விட்டது. இந்தச் சந்திப்புக்கு அமலா பால் வரவில்லை, டிக்கேட் போட்டு விற்கவில்லை, கும்மியடிக்கவில்லை. ஆனால் உலகில் பெரும்பங்கான தமிழ் பதிவர்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் பெரும் பதிவர் சங்கமத்துக்கு ஒரு சிறு ஆதரவுக் குரலையாவது தமிழ்மணம் உட்படச் சில திரட்டிகள் செய்திருக்கலாம். ஒரு சில திரட்டிகளைத் தவிரப் பெரும்பாலான திரட்டிகள் ஒருவித சுயநலப் போக்குடன் செயல்படுகின்றனவோ எனத் தோன்றச் செய்கின்றன. தமிழ்மணத்தால் பதிவர்களுக்குப் பயன் என்றாலும், பதிவர்கள் இல்லை என்றால் தமிழ்மணம் உட்படத் திரட்டிகளுக்கும் ஒரு பயனும் இல்லை என்பதை நான் இங்கு வலியுறுத்துகின்றேன். 

பதிவுலகில் உலாவி வரும் மதவாத கும்பல்கள், இடதுசாரி குழுக்கள் போன்றவை தமது பங்களிப்பை பதிவர் சந்திப்புக்குத் தராமல் இருந்தாலும் கூடப் பரவா இல்லை. ஆனால் ஒரு சில மதவாத கும்பல்கள் இச் சந்திப்பை திசைத் திருப்பவும், குழப்பவும் திட்டமிடுவது வேதனை தருகின்றது. இதனால் என்ன லாபம் அவர்களுக்கு என எனக்குத் தெரியவில்லை.

தமிழ்மணம் உட்படத் திரட்டிகள் பதிவர்களுக்கு ஊக்கம் தர முனைய வேண்டுகின்றேன். பதிவர்களாகிய நாம் நம்மில் இருக்கும் கறுப்பு ஆடுகளைக் கொஞ்சம் இனங்கண்டு வைத்துக் கொள்வதும் நமக்கு நல்லது. பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் எனத் தோழர்களுக்கு வேண்டிக் கொள்கின்றேன். முடிந்தவரை தமிழ் பதிவர்களாகிய நாம் காழ்ப்புணர்ச்சிகளைக் கைவிட்டு விட்டு பதிவர் சந்திப்புக்களை வருங்காலத்தில் பதிவர் மாநாடுகளாக மாற்ற முனைவோம். 

தொழில்நுட்பத்தில் பதிவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றன. பொது ஊடகங்களை எப்படி ஆக்கிரமிப்பது என்பதையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. வளவள என அனைத்திலும் வாய் வைப்பதை விடப் பதிவர்கள் தமக்கான விருப்பம் சார்ந்த துறைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுவதன் மூலம் அத்துறையில் நிபுணத்துவம் பெறும் வாய்ப்பும் உள்ளது. அத்தோடு பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், யூட்யுப் போன்றவைகளையும் நன்கு பயன்படுத்துவது மூலம் தமிழ் பதிவுலகம் அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல முடியும். இப்படிப் பாசிட்டிவான விடயங்களை நோக்கி நகர நாம் அடிக்கடி சந்திப்புக்கள் நடத்தவும், பொது ஊடகங்களின் கவனங்களை ஈர்க்கவும், வலைப்பதிவு தெரியாத தோழர்களை எழுத வைப்பதும், அறியாத மக்களுக்கு வலைப்பதிவு வாசிப்பை ஏற்படுத்துவதும் மிக மிக அவசியம். கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் வலைப்பதிவின் நன்மைகளைக் கொண்டு சேர்க்கவும் வேண்டும். 

வெளிநாடுகளில் இருப்பவர்கள் வருவது எளிதான ஒன்றில்லை என்ற போதும், சென்னைக்கு அருகே இருப்பவர்கள் எந்தக் காரணம் என்றாலும் அதனைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு இந்த சந்திப்பில் கலந்துக் கொள்ள வேண்டும். பதிவர் சந்திப்புக்கு வரும் தமிழ் பதிவர்களை வேண்டிக் கொள்வது என்னவெனில் சந்திப்புக்கு வரும் போது புதிய தோழர்களையும் அழைத்து வரலாம், அப்படி வருவதால் பதிவுலகம் குறித்த தகவல்கள் மக்களிடம் மேலும் பரவ வாய்ப்புள்ளது. பல புதிய பதிவர்களை உருவாக்கும் முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள முனையலாம். தமிழ் பதிவர் சந்திப்பை புறக்கணிப்போம் என்ற மின்னஞ்சல்கள் சில ஏற்கனவே சிலருக்குச் சென்றுவிட்டன, இதனால் பதிவர் சந்திப்புக்கு நட்டமில்லை, சந்திப்புக்குப் போகாமல் இருப்போருக்குத் தான் நட்டம் என்பதையும் நான் இங்குக் கூறிக் கொள்ள விழைகின்றேன். 
 
தொகுப்பு...
 
நன்றி, இக்பால் செல்வம்.