ஞாயிறு, டிசம்பர் 22, 2013

மு.அன்புச்செல்வனுக்கு கண்ணீர் அஞ்சலி

எழுத்தாளர் மு.அன்புச்செல்வன் எனக்கு ஏறக்குறைய இருபது ஆண்டு கால நண்பர்.

எழுத்துத்துறையில் அதிகமாக ஊக்கமூட்டியவர்.  பாராட்டிக்கொண்டே இருப்பார். `ஆஹா என்ன அற்புதமா எழுதறீங்க. பெரிய எழுத்தாளர் பாணிங்க இது. கலக்கறீங்க. உங்களின் படிவம் வந்தால் அதைத்தான் முதலில் வாசிப்பேன், தொடர்ந்து எழுதுங்க.. என்பார். (டூப்பு)

அன்று நான் எழுதிய பதிவுகளை இன்று வாசிக்க நேருகிறபோது, `ச்சே என்ன இப்படி இருந்திருக்கு நமது சிந்தனை.! இதுவா எழுத்து.? அப்படிப்பாராட்டினாரே ஆசிரியர் அன்புச்செல்வன்..’ என்றெல்லாம் யோசித்து உடனே அவரை அழைத்து `என்ன சார், இதுவா எழுத்து, அன்று ஒரேடியா ஐஸ் வைச்சீங்களே..?’ என்று கேட்கின்றபோது.. `ஹிஹிஹி’ என்று சிரிப்பார்.

எழுத்தில் ஆர்வம் இருக்கின்ற எந்த வாசகரையும் ஆசிரியர்கள் அவமதிக்கலாகாது. எழுத்து ஆர்வம் எல்லோருக்கும் வந்துவிடாது. எனக்குத்தெரிந்தது எழுத்து மட்டும்தான். இந்த எழுத்தும் வாசிப்பும் எனக்கு இல்லையென்றால் நான் என்றோ பைத்தியக்காரன் ஆகியிருப்பேன். எழுத்து என்னைக் குதூகலமாக வாழவைத்துக்கொண்டிருக்கிறது. அந்தப் பழக்கம் பயிற்சி எல்லோருக்கும் வரவேண்டும் என்பதால்தான், எழுத நினைக்கின்ற அத்தனை வாசக எழுத்தாளர்களையும் நான் உற்சாகமூட்டிக்கொண்டே இருக்கின்றேன்.’ என்பார்.

எழுதுகிறவர்களின் எழுத்துப்பிழைகளையும் கருத்துப்பிழைகளையும் அழகாகத் திருத்தி பிரசுரிப்பார். சில படைப்புகளை அப்படியே மாற்றிவிடுவார். ஒரு காலகட்டம் வரை அவரின் திருத்தம் எனக்குத் திருப்தியளித்தது. அதன்பிறகு, நமது கருத்துகளின் அநாவசியமாக கைவைக்கின்றார், நம் படைப்பில் நாம் இல்லை அவர்தான் இருக்கின்றார், என்கிற நெருடல் என்னைக் குடையவே படைப்புகளை அவருக்குக்கொடுப்பதைக் குறைத்துக்கொண்டேன். (சரியாக எழுதவராது என்பது வேறு விஷயம்..!)

சில பத்திரிகைகள் அவரை  மாறி மாறி பந்தாடியபோது, அவர் வேலை இல்லாமல் இருந்தார். அந்த மனவுளைச்சல் அவரை நோயாளியாய் ஆக்கியது. அப்போது அவருக்குக் கடுமையான மூச்சுத்திணறல் வியாதி வந்து அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். TB யாக இருக்குமோ என்று கூட சோதனை செய்துகொண்டார்.

எப்போதும் சரளமாக தங்குதடையில்லாமல் உரையாடும் அவர் கொஞ்ச காலமாக பேசுவதற்குக்கூட முடியாமல் சதா இரும்பியவண்ணமாக இருந்தார். `போதுங்க செத்துவிடுவேன் போலிருக்கு.’ என்று சொல்லி, சிலவேளைகளில் அழைப்பை அவரே துண்டித்துவிடுவார். சரி, ஏன் தொந்தரவு செய்வானேன், என்று நினைத்து அழைக்காமல் விட்டு விட்டால், குறுந்தகவல் அனுப்பி கிண்டல் செய்வார்.. `விஜயா என்கிற தலைசிறந்த பெண் எழுத்தாளரைக் காணவில்லை, தேடிக்கொடுப்பவர்களுக்கு  தக்க சன்மானம் வழங்கப்படும்.’ என்று எழுதி அனுப்பிவைப்பார்.

பழகுவதற்க்கு இனிமையானவர். பேசுகிறபோதெல்லாம்.. அடிக்கடி எழுதுங்கள்.. என்று, எழுத்தில் ஆர்வமூட்டிக்கொண்டே இருப்பார். எதையாவது எழுதுங்கள். எழுத்தை மட்டும் விட்டுவிடாதீர்கள் என்பார். படைப்புகளைக் கேட்டு வாங்குவார். என்னமோ நாம் பெரிய எழுத்தாளர் போல..!

அவரிடம் நான் இறுதியாகப் பேசிய (குறுந்தகவல் வழி) வார்த்தை - சென்ற ஞாயிறு மலரில் (15/12/2013) வெளியான `வேலி மனிதர்கள்’ என்கிற சிறுகதையைப் பற்றியதுதான். ஒரு அற்புதமான சிறுகதை அது. நல்ல தேர்வு. கதை தேர்வில் உங்களை மிஞ்சுவதற்கு ஆள் இல்லை. என்கிற குறுஞ்செய்திதான் அது.

எப்போதும் குறுந்தகவல் அனுப்பினால், `இப்போதுதான் என் ஞாபகம் வந்ததா? இந்த விஜயா அடிக்கடி காணாமல் போய்விடுகிறார்..’ என்று கிண்டல் செய்கிற அன்புச்செல்வன், இந்த முறை என்னுடைய குறுந்தகவலுக்கு `tq' என்று மட்டும் பதில் அனுப்பியிருந்தார்.

அப்போது அவர் (19/12/2013) மருத்துவமனையில் இருந்துள்ளார் என்று, இன்று அவரின் மரணத்தின் போது (21/12/2013)  எனக்குத்தெரியவந்தது. முன்பெல்லாம் அடிக்கடி பேசுகிற நான், அன்றைய நாளில் ஒரு அழைப்பு கொடுத்துப்பார்த்திருக்கலாமே, என்று இறப்புச்செய்தி வந்தவுடன் மனங்கலங்கி வருந்தினேன்.

நிலையில்லா வாழ்வு, நம்மை மிகவிரைவாக நகர்த்திச்செல்கிறது. நேற்றுப்பார்த்தவர் இன்று இல்லை. நினைத்துப்பார்க்காததெல்லாம் நடக்கிறது. மேலும் அவருக்கு எழுபத்தொன்று வயது என்று இன்றைய பத்திரிகைகள் (22/12/2013) சொல்லித்தான் எனக்குத் தெரிய வந்தது. குரலும் எழுத்தும்தான் அறிமுகம் அவருக்கு. இனிமயாகப் பேசுவதால் நாற்பது நாற்பத்தைந்து இருக்குமென்று நினைத்திருந்தேன். வயதைப்பற்றியெல்லாம் இருவரும் விசாரித்ததில்லை. அவரும் சொன்னதில்லை.

அவரின் மற்றொரு சிறப்பு, என்னுடைய எழுத்து இங்கே வந்துள்ளது.. அங்கே வந்துள்ளது. எனக்கு இந்த பட்டம் எல்லாம் கிடைத்துள்ளது, நான் இவ்வளவு எழுதியுள்ளேன், என் எழுத்தை வாசித்துப்பாருங்கள். நான் எழுதியதை வாசித்தீர்களா? என்று, இதுவரையிலும் கேட்டதில்லை. அவருடனேயான நட்பில் எனக்கு இதுதான் மிகப்பெரிய ஆச்சிரியம். எதை எழுதினாலும், என் படைப்பை வாசித்தீர்களா.? என்று கேட்டதே இல்லை. நாமே சொன்னாலும்.. ஹ்ம்ம் அது.. ஓ.. ஹ்ம்ம் என்று மழுப்பிவிடுவார்.

அவருடன் நட்பு பாரட்டுதலில், எனக்கு அவர் அனுப்பிய பரிசு, அவரின் மூன்று புத்தகங்கள். 1.விழித்திருக்கும் ஈயக்குட்டைகள்.(சிறுகதைகள்) 2. மு.அன்புச்செல்வனின் அரை நூற்றாண்டுச் சிறுகதைகள்.  3. திரைப்படங்களின் தாக்கங்கள். (கட்டுரைகள்)

இவைகளில் இரண்டு புத்தகங்களை முழுமையாக வாசித்துமுடித்துவிட்டு, சிறுகதைகளைப்பற்றிய எனது கருத்தினை அவரிடம் கூறுகையில். `பெரிய எழுத்தாளர் நீங்கள். என் புத்தகத்தை நீங்கள் தொட்டு வாசித்ததே நான் என் பிறப்புப் பலனை  அடைந்துவிட்டேன். கருத்துவேறு கூறுகின்றீர்களே, பயமாக இருக்கின்றது என்று கலாய்ப்பார். செம ரகளையாக இருக்கும்.

அன்றைய எனது எழுத்துகளை, நான் இப்போது வாசிக்கின்றபோது, அன்றைய என்னை இன்றைய நான் வெறுக்கிறேன். இன்னும் அழகாகச் சொல்லியிருக்கலாம். இன்னும் சிறப்பாகச் சொல்லியிருக்கலாம். இன்னும் வலிமையான வளமையான கருத்துக்களை நுழைத்திருக்கலாம் என்கிற ஆதங்கம் எனக்கு எப்போதும் வரும். அதனால் எனது எழுத்துகளை பாராட்டுகிறவர்களை விட, திட்டுகிறவர்கள் கிடைக்க மாட்டார்களா என்று ஏங்குகிறேன், என்பார்.

நான் நடந்து வந்த எழுத்துலக பாதை சுவாரஸ்யமானது. ஆனால் எழுத்தில் நான் இன்னும் கத்துக்குட்டியே, என்பார். இதை நான் தன்னடக்கம் என்று சொல்லமாட்டேன். அதுதான் உண்மையும் கூட.

அவரிடம் நான் முரண்படுகிற கருத்து, இன்னமும் எழுத்து என்றால், மு.வ, ந.பார்த்தசாரதி, அகிலன், சாண்டில்யன், கல்கி, சாவி, சிவசங்கரி, ரமணிசந்திரன், அனுராதா ரமணன் போன்றோர்களின் எழுத்து பாணியைத்தான் எழுத்து என்பார். அவர்களைத்தவிர வேறு யாரையும் நான் வாசிக்கவேண்டும் என்கிற கட்டாயம் எனக்கில்லை. இன்றைய நவீன எழுத்து நவீனத்துவம் என்பதெல்லாம் சும்மா எழுத்தை வைத்து விளையாடும் சித்து விளையாட்டேயன்றி வேறில்லை. பொழப்பில்லாதவனுங்க. எழுத்துலகத்தை நாசம் செய்யறானுங்க. இதையெல்லாம் நவீன் மற்றும் பாலமுருகனிடமோ சொல்லிவிடாதீர்கள். எழுதியே சாகடிச்சிபுடுவானுங்க. யம்மயம்மா இலக்கிய உலகைப் படுத்தறானுங்கய்யா... ரத்தக்கொதிப்பே வருது. நான் கொஞ்ச காலம் வாழணும். என்பார் நகைச்சுவையாக.

படைப்புகள் என்று எடுத்துக்கொண்டால், வசீகரமிக்க எழுத்தாற்றல் கொண்டவர். பஞ்ச பாண்டவர்களின் கதைகளையும் இராமாயணத்தையும் நன்கு உள்வாங்கிக் கரைத்துக்குடித்துவிட்டு அதிலிருந்து சில பகுதிகளை கதைகளில் சேர்ந்து, சொந்த கற்பனைகளையும் கலந்து கதை வடித்துக் கொடுப்பதில் கில்லாடி எழுத்தாளர்.  மிக மிக அழகாக சிறுகதைகளை எழுதுவார். சோர்வில்லாத வாசிப்பினை கொடுக்கின்ற ஆற்றல் அவரின் எழுத்திற்கு உண்டு. எல்லாக்கதைகளும் பழய பாணிக்கதைகள்தான். ஆழ்ந்த வாசிப்பில்லாமல் மேலோட்டமாக கண்களை மேயவிட்டாலே புரிந்துகொள்ளலாம். இருப்பினும் அழகிய கதைகள்தான் அனைத்தும்.

வா மரணமே என்கிற அவரின் சிறுகதையில் எமனோடு பேசுவதைப்போல் ஒரு உரை வரும். அதில் `நீ சொல்லும் மரணத்தை நான் எப்போதே சந்தித்துவிட்டேன். இப்போது வெறும் கட்டையாக இருப்பத்தைத்தான் உணர்கிறேன். எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த கலைஞர் என்றைக்கோ வசனம் பேசியிருக்கின்றார். கனவுகளற்ற தூக்கம் போன்றது மரணம் என்றால் அதற்காக நான் ஏன் பயப்படவேண்டும். மரணம் என்பது விழிப்பில்லாத ஒரு நெடிய தூக்கம். மீண்டும் கண்விழித்துப்பார்க்கமுடியாத ஒரு மயக்க நிலை...’

ஆம், மயக்க் நிலையில்தான் உள்ளார் மு.அன்புச்செல்வன். மரணம் தழுவிக்கொண்டது என்கிறோம்.

அவர் அடிக்கடி எனக்கு நினைவுறுத்தும் வாசகம்...

`எழுத்தாளர்கள் விமர்சனங்களுக்கு மனச்சஞ்சலம் கொள்தல் கூடாது. அது நல்லனவையாக இருக்கட்டும் அல்லது தூற்றுதலாகவோ இருக்கட்டும்.. எழுதிக்கொண்டே இருங்கள்.. நல்ல கருத்துக்களைக் கொடுக்கமுடியாதவன், பன்னி என்பான் நாய் என்பான்... அவனை சமூதாயம் அடயாளங்கண்டுகொள்ளும்.. பதில் கொடுத்து நம் முகத்தில் நாமே காறி உமிழ்தல் மட்டும் கூடாது.’ 

பக்குவப்பட்ட பத்திரிகை ஆசிரியர் எழுத்தாளர் என்பதற்கு வேறு சான்றுகள் வேண்டுமா என்ன.! இது ஒன்றே போதும். 


அவரின் மற்ற நூல்கள் -

ஒரு புதிய இலக்கை நோக்கி (செந்தூல் வரலாறு)
தவத்தின் வலிமை (சிறுகதைகள்)
தீபங்கள் (சிறுகதைகள்)
பிச்சைப் பாத்திரங்கள் (சிறுகதைகள்)
விலாங்குகள் (நாவல்)

எழுத்தாளருக்கு மரணமில்லை. அவர் என்றென்றும் அவரின் எழுத்தில் ஜீவித்திருப்பார். இருப்பினும் கடிதங்கள் மற்றும் படைப்புகளை அவருக்கு அனுப்புகின்றபோது இறுதியில் நான் அவருக்குச்சொல்லும் வாசகம். ..
``நன்றி சார்...’’

ஆனால் இன்று....  GOOD BYE சார். WILL MISS YOU FOREVER.கண்களையாவது திறந்துவை..

ரிஷிமூலம் கதைக்கு - கதையை விட ஜெயகாந்தன் எழுதிய முன்னுரை இருக்கே.., ஒவ்வொரு வரியும் தத்துவம். எல்லாவற்றையும் எழுதவேண்டும்போல் தேன்றினாலும் சில இங்கே உங்களின் பார்வைக்கு.. :-

1965தில் கடுமையான விமர்சனத்திற்குள்ளான ரிஷிமூலத்திற்கு ஜெயகாந்தன் எழுதிய விளக்கம் இது. படித்துப்பாருங்கள். அற்புதம். நம்முடைய தற்போதைய நிலவரத்திற்கு பதில் சொல்வதைப்போல் உள்ளது.

1. இந்தக் கதையை எழுதியதின் மூலம் ஒரு நல்ல கதை எழுதி இருக்கின்றேன் என்பதைத்தவிர நான் இந்தச் சமுதாயத்தை உயர்த்திவிட்டதாகவோ கெடுத்து விட்டதாகவோ நம்பவில்லை. அப்படிப்பட்ட நோக்கம் எதுவும் கதை எழுதுகிறவன் என்ற முறையில் எனக்குக்கிடையாது. இந்தச் சமூதாயத்தை உயர்த்துகிற பணியில் எல்லா மனிதர்களுக்கு என்ன பங்கு உண்டோ அந்தப்பங்கு எனக்கும் உண்டு.

2. நான் கண்டதை - அதாவது உலகத்தால் எனக்குக் காட்டப் பட்டதை, நான் கேட்டதை - அதாவது வாழ்க்கை எனக்குச்சொன்னதை நான் உலகத்திற்குத் திரும்பவும் காட்டுகிறேன். அதையே திரும்பவும் உங்களிடம் சொல்கிறேன்.
அது அற்பமாக அசிங்கமாக கேவலமாக அல்லது அதுவே உயர்வாக உன்னதமாக எப்படி இருந்தபோதிலும் எனக்கென்ன பழி? அல்லது புகழ்.?

3. நான் எந்தக் கொள்கைக்கும் எந்தக்கூட்டத்திற்கும் எப்போதும் தாலி கட்டிக்கொண்டதில்லை.

4. எத்தனையோ சமூதயப்பிரச்சனைகள் இருக்க, இதை ஏன் நீ எழுதவேண்டும் என்று கேட்கிறார்கள். நான் எழுதியதைப்பற்றி விமர்சனம் செய்ய வந்தவர்கள் நான் எழுதாததைப்பற்றி கேள்விகள் எழுப்புவது என்ன விமர்சன ஞானம் என்று எனக்குப்புரியவில்லை.

5. தங்கள் அரை வேக்காடு படிப்பாற்றலையும், தாங்கள் தழுவி இருக்கும் கொள்கைகளின் மேல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற வெறி மயக்கத்தையும் தமுக்கடித்து ஊரறியச் செய்யவேண்டுமென்று நினைக்கிறவரக்ள் தங்களுக்கு என்று சொந்தமாக ஒரு தமுக்கு இல்லாததால் ஜெயகாந்தன் என்று முரசத்தை ஓங்கி முழங்குகிறார்கள். எனக்கு இதில் மகிழ்ச்சியே. ஆனால் இந்த முரட்டு விமர்சகர்களில் பலர் கொட்டிக் கொட்டி முழக்குவது தங்கள் குருட்டுத் தனத்தைத்தான்.

6. நான் சமூதாயத்தை உயர்த்துவதற்காக இலக்கியம் படைக்கிறேன், சோஷலிஸமே எனது லட்சியம். புரட்சி ஓங்குக. தொழிலாளி வர்க்கம் ஜிந்தாபாத்.! நான் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் மக்களுக்காகவே என்றெல்லாம் எனக்கு நானே கட்டியம் கூறிக்கொண்டு ராஜநடை போட்டு வருவது என்னைப்பொறுத்தவரை ஒரு கோமாளித்தனமே.

7. மனோதத்துவமும் இலக்கியம் அதிகத் தொடர்புடையன. பிராய்டும் கூடத் தன்னுடைய சில ஆராய்ச்சி முடிவுகளுக்கு அனுசரணையான சான்றுகளை இலக்கிய ஆசிரியரின் நூல்களிலிருந்தே எடுத்துக்காட்டுவான்.

8. சமூதாயம் என்னைத்தூக்கி எறிந்துவிடும் என்கிற பயம் எனக்கு இல்லை. என்னை எதிர்த்து வருகிற கூக்குரல்களில் தூக்கி எறியப்படப்போகிற ஒரு சமுதாயத்தின் மூர்க்கமான அலறலையே நான் கேட்கிறேன்.

9. உண்மையாக இலக்கியம் படைக்கிற தகுதி உடைய எவனும் நான் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக எழுதுகிறேன் என்கிற வாக்குமூலத்துடன் எழுத ஆரம்பிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

10. பாலுணர்ச்சிப் பிரச்ச்னைகளை அடிபப்டையாகக் கொண்டு நான் கதை எழுதுகிறேன் என்பது இன்னொரு தாக்குதல். பாலுணர்ச்சி பிரச்சனை என்பது வெறும் படுக்கை அறைப் பிரச்சனை அல்ல. அதுவும் ஒரு சமுதாயப் பிரச்சனைதான்.

11. பாலுணர்வுப்பிரச்சனை என்பது ஏதோ பணக்கார வர்க்கத்துப்பிரச்னை என்று எண்ணுவது வடிகட்டிய பாமரத்தனம். பாலுறவு பற்றிய ஆரோக்கியமான கண்ணோட்டமில்லாத தனி மனிதன் வளர்ந்த மனிதனாக மாட்டான். அப்படிப்பட்ட சமுதாயம் வளார்ந்த சமுதாயம் ஆகாது.

12. ஒரு மனநோயாளியின் மன உணர்வுகளைத் தன்னிலையில் இருந்து எழுதுவதன் மூலம் விமர்சகர்களையே அதை என் நிலை என்று நான் எண்ண வைத்துவிட்டேன் என்றால் என் எழுத்தின் வலிமைக்காக நான் கர்வம் கொள்கிறேன்.

13. கதையின் நாயகன் ஒரு மன நோயாளி. ஒரு மனநோயாளியின் மனசுக்குள்ளே நிகழ்கின்ற சம்வாதங்கள் , தர்க்கங்கள், சுய மறுப்புகள் சுய தரிசனங்கள் எவ்வளவு அற்புதமாக நிகழ்கின்றன என்பதைக் காணும்போது இவன் இப்படி ஆனதிற்கு நாம் வருத்தம் கொள்ளுதல் வேண்டும். மூடத்தனமான சமூக குடும்பக் கட்டுகளும் தனக்குத்தானே போட்டுக்கொள்கிற கட்டுகளும் சமுதாயப் பிரச்சனை அல்லவா.?

14. இன்று நம் சமுதாயமே ஒரு மடமாகவும் ஒவ்வொரு தனிமனிதனும் பாதிச் சாமியாராகவும் வேஷம் போடுகிற பண்பாடு வளர்ந்து வருவதை நான் காண்கிறேன். எனவே இங்கே  SEX ஒரு பிரச்சனையாகிறது. இப்படிப்பட்ட கட்டுகளினாலும் இந்தச் சமுதாயத்தில் சிறந்த தனி மனிதர்கள் உருவாக முடிவதில்லை. கல்வியும் பொருளாதார அந்தஸ்தும் இருந்தும்கூட மனவளம் படைத்த மனிதர்கள் இங்கே உருவாவதற்குச் சிரமங்கள் உள்ளன.

15. சிறந்த தனி மனிதர்களை உருவாக வாய்ப்பற்ற சமுதாயம் சிறந்த சமுதாயம் ஆகாது. செக்கு மாடுகளை உற்பத்தி செய்யும் சமுதாயம் தேங்கி அழிகிற சமுதாயம்.

16. நான் உன்னில் ஓர் அங்கம்தான் ஆனால் நான் உன்னோடு அழிகிற அங்கம் அல்ல..

17. நீ என்னைத்தூக்கி எறிந்துவிடுவாய் என்ற அச்சுறுத்தலுக்கு நான் பயப்படமாட்டேன். என்னிடம் யாரும் சமுதாயப்பூச்சாண்டி காட்ட வேண்டாம்.

18. இந்தச் சமுதாயத்தை என் எழுத்து கெடுத்துவிடும் என்ற குற்ற உணர்வு எனக்கு இல்லை. புதிதாகக் கெடுப்பதற்கு இங்கு ஒன்றும் இல்லை. எனது எழுத்துகளைப் பாடப்புத்தமாக வைக்கச்சொல்லி நான் மனு போடவில்லை. எனது எழுத்துகளுக்கு அந்தத்தகுதி இல்லை என்று நான் சொல்லவில்லை. உங்கள் பள்ளிக்கு  அந்தப் பக்குவம் இன்னும் வரவில்லை.

19. இங்கே தமிழில் படிப்பதற்கு ஒன்றுமில்லை. சாரமற்ற வம்புகளும் சத்தில்லாத பொழுதுபோக்குக் குப்பைகளும் மலிந்து வருகிறது.  இனி எல்லாவற்றையும் ஆங்கிலத்தில்  தான் கற்கவேண்டும். (அப்போ நீ ஏன் தமிழில் எழுதுகிறாய்? என்று கேட்டால் அதற்கும் அவர் பதில் கொடுக்கிறார்.)

20. அறிவை, மனசைத் திறக்காவிட்டாலும் பரவாயில்லை. கண்களையாவது திறந்துவை.