வெள்ளி, டிசம்பர் 06, 2013

என்னாச்சி.


உலகம் எங்கே செல்கிறது? என்னாச்சு நம்ம குழந்தைகளுக்கு.! எதுவும் சொல்லமுடியவில்லை. பதின்மவயதுப்பிள்ளைகளை (teenage) வைத்திருக்கும் அனைத்து பெற்றோர்களின் புலம்பலும் ஒரே மாதியாகவே இருக்கின்றதே. எதில் குறை? எங்கே இந்த அவலங்கள் ஆரம்பிக்கப்பட்டது.? உழைப்பதற்கு அஞ்சுகிறார்கள். அவமானப்பட்டுவிடுவோமோ என்று பயப்படுகின்றார்கள். பெரியவர்களிடம் மரியாதை இல்லை. யார் என்ன சொன்னாலும் முகத்தில் அறைந்தாட்போல் பதில் சொல்கிறார்கள். அதிகாலை துயில் எழல் இல்லாமல் போய்விட்டது. முடியைப் பரட்டையாக வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள். உடம்போடு இறுக்கமாக ஒட்டிய ஆடைகளைப்போட்டுக்கொள்கிறார்கள். கிழிந்த கால்சட்டை பேஷன் என்கிறார்கள்.. கணினி கைப்பேசி கேம் விளையாட்டில் மணிகணக்காக பொழுதைக் கழிக்கின்றார்கள்.. என்ன நடக்கிறது இந்த உலகத்தில்!? எங்கே போகப்போகிறார்கள் இவர்கள் அனைவரும்? ஓரளவு சொருசு வாழ்வு வாழ்ந்து வந்த நாமே, தர்மசங்கடத்தின் போது ஆடிப்போகின்ற நிலை வருகிறபோது, முற்றிலும் சொருசாக வளரும் இன்றை குழந்தைகளின் நாளைய நிலை..? என்னாகும்?.

என்ன திடீரென்று இப்படி ஒரு அரட்டல் என்று கேட்கின்றீர்களா?
அனுபவத்தில் காண்கிற பதின்மவயதுப்பிள்ளைகளின் நிலையையும், பத்திரிகைகளில் வரும் தினசரி செய்திகளாலும்தாம் இப்படிப் பலவாறாக என்னை யோசிக்கவைக்கிறது. தினமும் பதின்ம வயதுப் பிள்ளைகளைப்பற்றிய அவலச் செய்திகள் எங்கேயாவது ஒரு மூளையில் நிகழ்ந்தவண்ணமாகத்தான் இருக்கின்றது. பத்திரிகைகளைப் புரட்டினால், இன்றாவது இவர்களைப் பற்றிய செய்திகள் கண்ணில் படாமல் இருக்க வேண்டுமென்று ஏங்குகிறது மனம்.

பிரசுரமாகுகின்ற செய்திகள் ஒருபுறமிருந்தாலும் பிரசுரமாகாமல் அப்படியே மூடிமறைக்கப்படுகின்ற செய்திகள் இன்னும் அதிகம்தான். பிள்ளைகள் கொஞ்சம் தலையெடுக்கத்துவங்கிவுடன், பெற்றோர்கள், வயதில் மூத்தவர்கள், அனுபவப்பட்ட பெரியவர்கள், ஆசிரியர்கள் போன்றோர்களின் ஆலோசனைகள் அனைத்தும் அவர்களுக்கு வேப்பங்காயாய் கசக்கத் துவங்கிவிடுகிறது.

என்ன சொன்னாலும் எப்படிச்சொன்னாலும் அவை வில்லங்கத்தில் போய் முடிவதைத்தான் பரவலாகப்பார்க்கலாம் இப்போது. அது செய்தியாகட்டும் அல்லது கேள்விப்படுகிற விவரமாகட்டும்.

சில சம்பவங்கள் பெற்றோர்களைப் பழிவாங்கும் படலமாக மாறி நிகழ்வதைக் காண்கையில் நெஞ்சு பதைபதைக்கிறது.

தெரிந்த ஒருவரின் மகள் திடிரென்று தற்கொலை செய்துகொண்டாள். பதினேழு வயது பருவப்பெண். அழகி என்றால் அப்பேர்பட்ட அழகி. படிப்பில் கெட்டிக்காரி. மருத்துவம் பயிலவேண்டும் என்கிற லட்சியம் உள்ளவள். தொடர் தேர்விலும் நல்லப் புள்ளிகள். மருத்துவப்படிப்பிற்கு எல்லாதகுதிகளும் அமையப்பெற்ற ஒர் அதிர்ஷ்ட தேவதையாகவே காட்சியளித்தாள் அப்பெண். பரீட்சை எழுதி, தேர்வுக்காகக் காத்திருக்கின்ற  சமையத்தில் இப்படி ஒரு செய்தி வந்து நட்பு வட்டத்திற்குள் உள்ள பலரை நிலைகுலையச்செய்தது. என்ன பிரச்சனை? ஏன் இப்படி ஆனது என்று விசாரிக்கின்றபோது, அப்பெண் தன் தாயைப் பழிவாங்குவதற்கென்றே இப்படிச் செய்துள்ளாள் என்று தெரியவந்தபோது, தாயிற்காக அழுதவதா அல்லது பழிவாங்க நினைத்து இப்படி ஒரு பெரிய காயத்தை பெற்றோர்களுக்குக் கொடுத்து விட்டுச்சென்ற மகளைத்திட்டுவதா, என்று தெரியாமல் உறவுகள் நட்புகள் என மனதைக் கல்லாக்கிக்கொண்டு இறப்புவீட்டில் நின்றிருந்த காட்சி இன்னமும் நெஞசைப் பிளக்கிறது.

தேர்வு முடிந்த நாட்களில், அந்தச் சந்தோசத்தைக்கொண்டாடுவதற்காக ஒரு நாளை தேர்வுசெய்து, நண்பர்கள் தோழிகள் என ஒன்றாகச் சேர்ந்துகொண்டாடி, இரவுமுழுக்க ஊர்சுற்றிவிட்டு நள்ளிரவுதாண்டி வீடு திரும்பிய மகளைத் திட்டிய தாய், அவளின் எதிர்ப்பேச்சுகளில் எரிச்சல் கொண்டு ஒரு அறை விட்டுள்ளார். `என்னை அறைந்துவிட்டாய், என்னை நம்பவில்லையா? உன்னைப் பழிவாங்குகிறேன் பார்..’ என்று கூறி, அறையின் கதவை தாழிட்டு, மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டாள் அப்பெண். என்ன கொடுமை இது.! நினைக்கின்றபோதே நெஞ்சு பதறுகிறது. இதைத் தட்டச்சு செய்கின்ற போதே, விரல்கள் நடுங்குகின்றன. இப்படியா ஒரு தாயை பழிவாங்குவது.!? மூன்று பிள்ளைகளில் ஒரே ஒரு செல்ல மகளை இழந்த துயரத்தை யார் என்ன ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி போக்கமுடியும்.? இந்த இழப்பை ஈடு செய்யமுடியுமா? அந்தத் தாயால் அழக்கூட முடியவில்லை. பைத்தியம்போல் அமர்ந்திருந்தார். இறந்து ஆண்டுகள் சில ஆனாலும், அவரால் இன்னமும் நிம்மதியாய் ஒருவேளை சோறு சாப்பிடமுடியாத மனநோயாளியாய் உலவுகிறார்.

எங்களின் பதின்ம வயதில் நாங்கள் படாத அவமானமா.? வெளியே நிற்க வைத்து விளக்குமாறு செருப்பு போன்றவற்றாலே அடிப்பார் அம்மா. காதல் விவகாரம் வீட்டில் தெரியவந்தபோது, சம்மதம் கிடைக்கவில்லை. எங்கே வீட்டை விட்டு ஓடிவிடுவேனோ என்று அவராகவே ஒரு யூகத்தை ஏற்படுத்திக்கொண்டு, என் காலில் சுடுநீரை ஊற்றி ரணமாக்கினார். தேங்காய்த்திருகியை என் மேல் வீசி, கல்யாணம் ஆகும்வரை அந்த ஒரு கால் வீங்கியே இருந்த்து. இப்படியெல்லாம் செய்கிற போது..`சாவு, சாவு.. செத்துத்தொலை, பூமிக்கு பாரம்..’ என்றெல்லாம் வசைமொழிகள் வேறுவரும். இப்படித் துன்பம் அனுபவிக்கின்ற நிலையிலும் கூட, எதோ ஒன்று வாழ்ந்தே ஆகவேண்டும் என்கிற உந்துதலைக் கொடுத்ததேயொழிய தற்கொலை செய்துகொண்டு பழிவாங்கவேண்டும் என்கிற எண்ணம் எந்த காலத்திலும் வந்ததே இல்லை.  அந்தச் சவால் ஏன் இன்றைய பெரும்பாலான பிள்ளைகளிடம் இருப்பதில்லை.! இத்தனைக்கும் அன்றைய நிலை சொகுசற்ற வாழ்வு. இருபதுவயதை நெருங்கியபோதுதான் வீட்டில் கொஞ்சம் வசதி எட்டிப்பார்க்கத் துவங்கியது. மின் விசிறி, தொலைக்காட்சிப்பெட்டி, தொலைப்பேசி, கிரைண்டர் என, அதுவரை அனைத்திற்கு அல்லல்தான். இருப்பினும் வாழ்வேண்டும் என்கிற சிந்தனை விடாமல் துரத்தியதே. இன்று எல்லாமும் கிடைத்தும், அதை ஏற்படுத்திக்கொடுத்த பெற்றோர்களை அல்லவா பழிவாங்குகின்றார்கள்.!? 

பதினைந்து வயதே ஆன பெண் ஒருவள், முகநூல் நண்பனைத்தேடி அவளின் வீடு சென்றுள்ளாள். அங்கே கூட்டமாக இருந்த பதின்ம வயது ஆண் பிள்ளைகள் அவளை மாறி மாறி அனுபவித்துள்ளார்கள்.. பெண்ணின் பெற்றோர்கள் போலிஸில் புகார் கொடுக்க, அனைவரையும் போலிஸ் பிடித்துச்சென்றுள்ளது. அவர்களின் எதிர்காலமே பாழ்.கற்பழிப்பு வழக்கில் சிறையில் உள்ளார்கள்.! என்னாச்சு நம்ம பிள்ளைகளுக்கு.? எது இவர்களை இப்படியெல்லாம் செய்யவைக்கிறது.? முன்பைவிட இன்றுதான் தவறு செய்பவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் கிடைக்கப்பெறும் என்று குற்றவியல் பிரிவு அதிகாரிகள் தமது விளங்களைப் பக்கம் பக்கமாக எழுதி பொதுவில் வைக்கின்றார்களே, படித்த பிள்ளைகள்தானே.! அதன் பின்விளைவுகள் பற்றித் தெரியாமல் போய்விடுமா என்ன.!?

படித்து முடித்துவிட்ட ஒரு பையனை அவனின் அப்பா திட்டியுள்ளார். `உன் வயதில் நான் மூட்டைத்தூக்கினேன், நெற்றியில் விளக்கைக் கட்டிக்கொண்டு பால்மரம் சீவினேன். தினக்கூலிக்கு வேலைக்குச்சென்றேன். நீ என்னடான்னா, படித்த படிப்புக்குத்தான் வேலை வேண்டுமென்று சும்மானாலும் சுத்தற. கஷ்டப்பட்டு படிக்கவைத்தேன். கிடைத்தவேலையைச் செய்வதைவிட்டு இப்படியா தண்டமாய் இருப்பாய்.! ஒரு காலகட்டம் வரைதான் நாங்க சோறு போடுவோம் அதற்கப்புறம் உங்களின் செலவுகளை நீங்களே பார்த்துக்கொள்வதற்காவது வேலைக்குச் செல்லவேண்டாமா?’ என்று கொஞ்சம் கடுமையாகத்திட்டியுள்ளார். மறுநாள் பையன் கோபப்பட்டுக்கொண்டு வீட்டை விட்டே வெளியேறிவிட்டான் சிங்கப்பூருக்கு. அப்பாவைத் தண்டிக்கின்றானாம்.!

போகட்டும் கழுதை. குளத்திடம் கோபித்துக்கொண்டு கால் கழுவாமல் போறது யாருக்கு நட்டம். குண்டி காய்ந்தால் தானாய் வருவான் என்று அலட்சியம் செய்துவிட்டார் அப்பா. என்னதான் அலட்சியம் செய்தாலும், இப்படியா கோபத்தில் வீட்டைவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறுவது.? நண்பர்களுத்தெரிகிறது, எங்கே சென்றான் என்று, ஆனால் பெற்றவர்களிடம் சொல்லவில்லை.
முன்பெல்லாம் பசங்களை பெற்றோர்கள் தெருவில் ஆட்களைப் பார்க்கவைத்து அடித்து அவமானப்படுத்துவார்கள். இப்போது அப்படியெல்லாம் யாரும் செய்வதில்லை. ஆசிரியர்கள் கூட தண்டிப்பதை நிறுத்திவிட்டார்கள். வாயால் திட்டுவதற்குக்கூட பயப்படுகிறார்கள். அந்த அளவிற்குச் செல்கிறது நிலை. ஏன் இப்படி?

முகநூலில் புகைப்படங்களைப்போடுகிறார்கள். கல்லூரியில் பயில்கிற பசங்களை கட்டியணைத்துக்கொண்டும் கைகளைக்கோர்த்துக்கொண்டும், கன்னத்தோடு கன்னம் ஒட்டிக்கொண்டும்.. இப்படியா பெண்பிள்ளைகள் பொதுவில் அசிங்கப்படுவது. மேல் நாட்டுக்கலாச்சாரம் என்றாலும் அவர்கள் கூட இவ்வளவு மோசமாக் நடந்துகொள்ளமாட்டார்கள் போலிருக்கிறதே. நம்ம பிள்ளைகள் செய்கிற கூத்துகள் இருக்கே.!

இப்படித்தான் தெரிந்த ஒருவரின் டீன் எஜ் பெண் முகநூலில் செய்த அக்கப்போர்களை சகிக்க இயலாமல், என் தோழியான (தூரத்துச்சொந்தமும் கூட) அவளின் அம்மாவிடம் கேட்டுவிட்டேன். `என்னதான் படித்திருந்தாலும் பையனைப் பிடித்திருந்தாலும், இப்படியா பொதுவில் இடுப்பில் அமர்ந்துகொண்டு போஸ் கொடுத்து எடுத்த புகைப்ப்டங்களை முகநூலில் பதிவேற்றுவார்கள்.!? பார்க்கிறவர்கள் ஒரு மாதிரியாகப்பேச மாட்டார்களா.! இந்த உறவு கல்யாணம் கச்சேரிவரை சென்றால் பரவாயில்லை. நாளையே அவர்களுக்குள் பிரிவு என்று வந்துவிட்டால், அவளையோ அல்லது அவனையோ வேறு யாராவது கல்யாணம் செய்துகொள்கிற நிலை வந்தால், இதுபோன்ற புகைப்படங்கள் இடைஞ்சல் இல்லையா..!?என்று வாய் இருக்கமாட்டாமல் கேட்டுவிட்டேன். என்ன செய்வது நமது கலாச்சாரம் அப்படி. நாகரீகம் வளர்ந்துவிட்டது என்றாலும், ADULTERY’ யை வெள்ளைக்காரனும் சகித்துக்கொள்வது கிடையாது. கொலை தற்கொலைகள் பெரும்பாலும் தகாத உறவு முறைகளினால்தானே ஏற்படுகிறது.

நான் சொன்னதை அவரின் அம்மா அப்படியே பிள்ளைகளிடம் சொல்லி கண்டித்துள்ளார். முகநூல் விஷயம் வீட்டு வாசல்வரை வந்துவிட்டதென, என்னை முகநூலில் இருந்து ப்ளாக் செய்துவிட்டு, தாயிடம் நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடி கதையையே திருப்பிவிட்டார்கள் கண்மணிகள். அப்பெண்ணின் அம்மா என்னை அழைத்து.. `இல்லெ, அண்ணனாம்.. நல்ல பையனாம்.. உதவி செய்வானாம்.. தெரியாத்தைச் சொல்லிக்கொடுப்பானாம்... அவர்களின் வீட்டுக்கெல்லாம் போவார்களாம்...என இழுத்து இழுத்து கதை சொல்லி, பாதுகாப்புக்கருதி விவரத்தைச் சொன்ன நான், பகையாளியான துர்ப்பாக்க்கியம்தான் நிகழ்ந்தது.

சரி, முடிந்தது முடிந்து விட்டது, பெரியவர்கள் நன்மை கருதி சொல்லியிருக்கின்றார்கள் என்று நினைத்து அதை அத்தோடு விடாமல், பொதுவில் என்னைக் காண்கிற போதெல்லாம், ஒரு வெட்டு, ஒரு திருப்பு, ஒரு குலுக்கு என திருப்பிக்கொண்டு போகிறாள்கள். என்னாச்சு நம்ம பிள்ளைகளுக்கு.?

பெற்றவர்களை மிரட்டி வைக்கின்றார்கள் பிள்ளைகள். எல்லா இனத்திலேயும் இதே நிலைதான். எல்லா அம்மாக்களும் ஒன்று சேர்ந்தால், என் வீட்டின் அவலம் உன் வீட்டின் அவலம்போலவே உள்ளது என்றுதான் பேசிக்கொள்வோம். பிள்ளைகளிடம் பேசமுடியவில்லை. எது சொன்னாலும் கோபம் வருகிறது. வீட்டை விட்டு வெளியேறுவதற்குத் தயாராகிவிடுகிறார்கள். காலம் முன்புபோல் இல்லை. என்னாச்சு? என்றுதான் புலம்புகிறார்கள்.

பரீட்சையில் தேறவில்லை என்று பன்னிரெண்டு வயது மாணவி தற்கொலை செய்துகொள்கிறாள். கொடுமை இல்லையா? பன்னிரெண்டு வயதில் நான் என்ன படித்தேன், எதில் பாஸ் பண்ணினேன், பரீட்சை முக்கியமான ஒன்றாக இருந்ததா, என்றெல்லாம் யோசிக்கின்ற போது, பள்ளிக்கூடம் போனது மட்டுமே பசுமையான நினைவாக இருக்கின்றது. மற்றது எதுவுமே நினைவில் இல்லை. சரி தேறவேயில்லை என்றே வைத்துக்கொள்ளுங்களேன். ஏன் நான் வாழவில்லையா? நிறைய ஏ’க்கள் எடுத்த என் சக தோழிகளைவிட நல்ல நிலையில், தெளிந்த நிலையில் வாழ்கிறேனே. 

இன்றைய இந்த நிலைக்கு என்ன காரணமாக இருக்கும்?

முக்கியமாக நம் சமூகத்தில் நல்ல வழிக்காட்டி இல்லாமையே இதற்கு முதன்மைக்காரணம் என்றும் சொல்கிறார்கள். நல்ல வழிகாட்டி யார்? சமய குரு நல்ல வழிகாட்டியாகத்திகழலாம் என்றால் அவர்களுக்கே நன்நெறிபோதனைகள் தேவைப்படுகிறது இன்றைய காலகட்டத்தில். அப்படியே சமய குரு வழிகாட்டியாக இருக்கின்றார் என்று வைத்துக்கொண்டால், எடுத்ததிற்கெல்லாம் அவரிடமே ஆலோசனைகள் கேட்டு குடும்பம் நட்த்தத்துவங்கிவிடுகிறார்கள் சில பெற்றோர்கள். வீட்டில் என்ன செடி நட்டுவைக்கலாம், என்ன செடி நட்டுவைக்கக்கூடாது என்பனவற்றையெல்லாம் கூட குருவின் ஆலோசனையின் பேரிலேயே நடக்கின்றது சிலரின் இல்லத்தில். சுவரில் விருப்பப்பட்டு வாங்கிய படங்களை மாட்டுவதற்குக்கூட, சாமி வந்து சொல்வார் என்கிறார்கள். என்ன சொல்ல?

நன்நெறி போதனைகளை விட சகல சடங்கு சம்பிரதாயங்களைப்போதித்து மூடப்பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதிலேயே குறியாக இருந்து மனிதர்களைக் கோழைகளாக்கி வாழ்வை நரகமாக்குகின்றார்கள் சில குருமார்கள்.

வைச்சா குடுமி அடிச்சா மொட்டை என்கிற ரீதியில் சிலரின் வாழ்க்கைப் பயணம்.

எதுவும் சரிப்பட்டு வரவில்லை. பிறகு?

என்னாச்சு? என்னாகும்? 

( நவம்பர் வல்லினத்தில் வந்த எனது கட்டுரை. - நன்றி நவீன். )