வெள்ளி, மே 24, 2013

சக்திவாய்ந்த ஊடகம்


மலேசியாவில் எல்லா ஊடங்களும் அரசாங்கத்தின் கீழ் கைக்கூலிகளாக செயல்படுகின்றன. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி உற்பட.

எல்லாமும் அரசாங்கத்தின் பொய்ப்பிரச்சாரங்களின் ஆயுதமாகவே திகழ்கின்றன. ஊடகத்தினை செவிமெடுத்தாலே நாமே வாய்மூடி, `அடப்பாவி, இப்படியா பொய் சொல்வே.’ என்று முனகவேண்டிய நிலை வந்தது/வருகிறது.

எதிர்க்கட்சிக்கு எதிராக செய்தி வாசித்த ஊடனகப்பணியாளர்களையும் தொலைப்பேசியில் அழைத்து தாறுமாறாகத்திட்டினார்களாம் பொதுமக்கள்.. நண்பர் பகிர்ந்தார்.

தொடர்ந்து பிரசாரங்கள்..அதைச்செய்தார்கள் இதைச்செய்தார்கள் என... வளர்ந்த நாடு, மக்கள் வளர்ச்சி.. அது இது என்று, இன்னமும் தொடர்கிறது புள்ளிவிவரங்கள்...

நேற்று கூட எதிர்க்கட்சியின் இரு பத்திரிகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலிஸ் எல்லாப்பத்திரிகைகளையும் அபகரித்துக்கொண்டார்கள். மக்களுக்கு எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள் போய்ச்சேரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றது நம் அரசாங்கம். பொது ஊடங்கள் எல்லாவற்றிற்கும் கதவடைப்பு.

இருப்பினும் மக்கள் ஒரே கொள்கையோடு போராடுகின்றார்கள்..எதிர்க்கட்சி கூட்டணிகள் பேசும் கூட்டத்திற்கு மக்கள் புயலாய் வெள்ளமாய் திரள்கிறார்கள்..  சளைக்காமல். மாற்று, மாற்று.. வெளியேறு வெளியேறு.. ஏமாற்றாதே ஏமாற்றாதே... UBAH UBAH.. REFORMASI .. REFORMASI என்கிற கோஷங்களை எழுப்பியவண்ணம்.

இதற்கு முக்கிய காரணமாக இருந்து தமது சேவையினை தொடர்ந்து வழங்கிக்கொண்டிருப்பதில், முகநூல் முதல்நிலையிலே உள்ளது. முகநூலின் சேவை அளப்பரியது. ஒவ்வொரு தனிநபருக்கும் செய்தி சொல்லிக்கொண்டிருக்கின்றது.

எல்லா கதவடைப்புகளுக்கும் திறவுகோள் இந்த முகநூல். அரசாங்கத்தால் இனி எதையும் மூடி மறைத்து செயல்பட இயலாது என்பதனை பறைச்சாற்றிய ஊடகம் இந்த முகநூல்.

அரசியல் சுலபமேயல்ல என்பதனை சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு அற்புத ஆயுதம் இந்த முகநூல்.

கழுத்துப்பட்`டை’ கட்டிக்கொண்டு பார்லிமெண்ட் சென்று பந்தாவாக உலாவந்த காலத்தை மலையேறவைத்துள்ளது சமூகவலைத்தளம்.

தலைவர்கள் தெருவில்..வேர்த்து விருவிருக்க.!

இனி எதுவும் சுலபமல்ல....

இச்சக்தி வாய்ந்த ஊடகத்தில் நமக்கும் பங்குண்டு என்பதில் மகிழ்ச்சியே. முகநூலில் ஒன்றுமில்லை என்று யாராவது சொன்னால்... அவனுக்கு மூளையில்லை என்று அர்த்தம். அரசாங்கத்தையே சாய்க்கின்ற சக்திவாய்ந்த ஊடகம் இது. மறுமலர்ச்சிக்கு வித்து.

உலக அரசியலும் மக்களின் மூலமாக வரும்போது, அதுவும் பரிச்சயமாகிறது. மக்கள்தான் மக்கட்தொண்டரகள். ஜனநாயக ஆட்சியில் மக்கள்தான் தலைவர்கள்.

காதல் காமமென்று ஒரு சில கழிசடைகள் சீரழிந்தாலும்.. முகநூல் போற்றுதலுக்குரியதே.

புதன், மே 22, 2013

விளக்கம்..

நேற்று மாலை வேலை முடிந்து வீடு செல்லுகையில், என்னுடைய கார் கோரமான சத்தத்தை எழுப்பியது. கரமுரா என்கிற சத்தம். சத்தம் வந்த சில நொடிகளில் காரின் சீதோஷ்ண கருவியின் (temperature meter)  முள் அதிக சூடாகக்காட்டியது. சிகப்புப்புள்ளி அபாய அறிவிப்பு என்றால் அந்த முள் சிகப்பு புள்ளியை தொட்டுக்கொண்டிருந்தது.

என்னால் காரை தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கை கால்கள் நடுங்கின. சென்ற வாரம் கூட பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருந்தது, சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பற்றியது,  காரோட்டி மயிரிழையில் உயிர் தப்பினார் என்று. இந்தச்செய்தி வேறு திடீரென்று என் ஞாபகத்திற்கு வரவே, காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு கணவருக்கு அழைப்பு விடுத்தேன். நிறைய அழைப்புகள் நிராகரிக்கப்பட்ட பின்பு, ஒரு குறுந்தகவல் வந்தது.. அதிகாரிகளுடன் உள்ளேன். பிரச்சனை என்ன என்பதை குறுந்தகவல் மூலமாகவே சொல், என்று.

பிரச்சனையைச் சொன்னவுடன், மறு குறுந்தகவல் வந்தது, `என்னால் உதவமுடியாது, அப்படியே மெதுவாக ஓட்டிச்சென்று வீடு போய்ச்சேர், இரவு பார்த்துக்கலாம்..’ என்று.

தொடர்ந்து காரைச்செலுத்த என் மனம் சம்மதிக்கவில்லை. புலி அடிப்பதைவிட கிலி அடிப்பதுதான் பெரிய சிக்கல் இங்கே. கண்ணுக்கெட்டிய தூரம் கண்களாலே வட்டமிட்டேன். தூரத்தில் ஒரு கார் பட்டரை தெரிந்தது. அது கார் வர்க்‌ஷாப் தானா என்பது தெளிவாகத்தெரியவில்லை. இருப்பினும் விளம்பரப்பலகையில் நாலா பக்கமும் டையர்கள் வரைந்திருந்தார்கள்.

அது நிச்சயம் கார் பழுதுபார்க்கும் பட்டரையாகத்தான் இருக்கவேண்டுமென்று நினைத்து, காரை அங்கே செலுத்தினேன். கரமுரா என்கிற கடுமையான சத்தத்துடன் காரை அந்த வர்க்‌ஷாப் வாசலில் நிறுத்தினேன். நான் `அலாரம்’ போட்டுக்கொண்டு வந்ததை செவிமெடுத்த அந்தப் பட்டரை ஊழியர் ஒருவர், நான் அழைக்காமலேயே வெளியே வந்தார்.

இஞ்ஜினை திற, என்கிறார். அதைத்திறக்கக்கூட தெரியாமல் திணறினேன். கடந்த இருபது ஆண்டுகளாக கார் ஓட்டுகிறேன், ஆனால் இஞ்ஜினை உள்ளிருந்து எப்படித்திறப்பது என்பது கூட தெரியாத நிலையில் நான். அந்த அளவிற்கு இந்திய ஆணாதிக்க சமூகம் பெண்களை  கோழையாக்கி வைத்திருக்கின்றது.

தவித்தேன், தடுமாறினேன்.. என்னை காரில் இருந்து இறங்கச்சொல்லி, அவரே செய்தார் அவ்வேலையை. திறந்தவுடன் காரில் இருந்து புகை கிளம்ப ஆரம்பித்தது. அரண்டுபோனேன்.

உள்ளே உள்ள சில குழாய்களைக் காண்பித்து, இதில் ஓட்டை, அதில் ஓட்டை.. இது அடைத்துக்கொண்டிருக்கிறது, அதில் உடைந்துவிட்டது. காத்தாடி சிக்குகிறது, கூலிங் கம்மி என என்னன்னமோ சொன்னார். ஒன்றும் புரியவில்லை. ஆனால் தொடர்ந்து காரை செலுத்தமுடியாது, இங்கேயே வைத்துவிட்டுப்போ, நாளைதான் தயாராகும், என்றார்.

மணி, மாலை ஆறுமுப்பது. எப்படி வீட்டிற்குச்செல்வது.? டாக்சி பிடித்துத்தான் போகவேண்டும் வேறுவழியில்லை என்றார்.

வரும் வழியில் காய்கறி சந்தையில் காய்கறிகள் வாங்கினேன். எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு பஸ் நிறுத்தும் இடத்திற்குச்சென்றேன். அங்குதான் பஸ் டாக்சி போன்ற வாகனங்கள் நிற்கும். மற்ற இடங்களில் பேராபத்து. வாகனங்களை யாரும் நிறுத்தமாட்டார்கள். விபத்து ஏற்படும் இல்லையேல் வாகன நெரிசல் ஏற்படும். 

அங்கே யாருமே நிற்கவில்லை. மாலையும் இரவும் சந்திக்கின்ற வேளையில் நான் மட்டுமே தனிமையில்.

அந்த பஸ்டாப் புதுமையாக இருந்தது. அதாவது, வலது இடது புறமும் சாலை, பஸ்டாப் நடுவில். டாக்சி இந்தப்புறமும் வரலாம் அந்தப்புறமும் வரலாம்.

இந்தப்புறம் பார்க்கும்போது அந்தப்புறம் டாக்சி வருகிறது. அந்தப்புறம் பார்க்கும்போது இந்தப்பக்கம் டாக்சி வருகிறது. இங்கும் அங்கும் சுற்றிச்சுற்றி ஓய்துபோனேன். டாக்சி நின்றபாடில்லை. அப்படியே நின்றாலும் நாங்கள் வசிக்கும் இடத்திற்குச்செல்ல முடியாது, அங்கே இன்று கடுமையான சாலை நெரிசல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லி தட்டிக்கழித்து விட்டு நகர்ந்தார்கள்.

அதுவரையில் எந்த பஸ்ஸும் வரவில்லை. செய்வதறியாது அமைதியாக அமர்ந்திருந்தேன். சக ஊழியர் ஒருவருக்கு அழைத்தேன்.

“ஹாலோ  சீலன், நான் தான்..!”

“ஹா..என்ன விஜி இந்த நேரத்தில் அழைக்கிறீங்க?”

“கார் பழுதாகிவிட்டது, டாக்சிக்கு காத்திருக்கின்றேன்..”

“என்ன பிரச்சனை?”

“நிறைய பிரச்சனை. டெம்பரச்சர் சூடேறி, மீட்டர் ஹிட் ஆகிடுச்சு..”

“ ஓ.. ரேடியட்ட்டர் போச்சு போலிருக்கு..”

“கார் எங்கே?”

“ வர்க்‌ஷாப்பில் போட்டுவிட்டேன்..”

“ வர்க்‌ஷாப் எங்கே?”

“ செக்‌ஷன் இருப்பத்தாறு..”

“ செக்‌ஷன் இருப்பத்தாறுக்கு ஏன் போனீங்க..?”

“ வர்க்‌ஷாப் அங்கேதானே இருக்கு அதான்..!”

“ இல்ல.. வேலை முடிஞ்சி செக்‌ஷன் இருபத்தேழு வழியாதானே போவிங்க.. எதுக்கு அந்தப்பக்கம் போனீங்கன்னு கேட்டேன்..!”

“ இங்கே இருக்கிற காய்க்கறி மார்க்கெட்’டுக்கு வந்தேன். வாங்கிட்டுத்திரும்பும்போது பழுதாயிடுச்சி..”

“காய்க்கறி வாங்க அவ்வளவு தூரம் போவீங்களா.. ஹம்ம்..”

கடுப்பானேன் நான்.. என் பிரச்சனையைப் புரிந்துகொள்ளாமல் மொக்கை போட்டார் சீலன். “சீலன், இப்போ பிரச்சனை அது அல்ல. எனக்கு டிராஸ்போர்ட் வேணும்.. உதவமுடியுமா?”

“எங்கே நிற்கறீங்க?”

“ செக்‌ஷன் இருபத்தேழு, வாழை இலை உணவகத்தின் அருகில்..”

“எந்த உணவகம்? நாம் அடிக்கடி சாப்பிடச்செல்வோமே அங்கேயா?”

“ம்ம்ம்...”

“அடேயப்பா.. வர்க்‌ஷாப்பில் இருந்து அங்கே போய் நிக்கறீங்க.. அவ்வளவுதூரம் ஏன் நடந்துபோனீங்க..?”

“ அங்கே மட்டுதான் பஸ்டாப் இருக்கு..!”

“ டக்சி வரலையா?”

“டக்சி வந்தா, நான் ஏன் உங்களைக்கூப்பிடப்போறேன்..!” குரலில் எரிச்சல் கலந்து வந்ததைப்புரிந்து கொண்ட சீலன், கேள்விக்கணைகளுக்கு  முற்றுப்புள்ளி வைத்தார்..

“ ஓ.. நான் வீட்டுக்குப்போயிட்டேனே... வரமுடியாதே..!”

“ நன்றி..” என்று சொல்லி, மூதேவி அதை முதலிலேயே சொல்லித்தொலைக்கவேண்டியதுதானே. கைப்பேசி கட்டனத்தையாவது மிச்சம் பண்ணியிருக்கலாம், என, முனகிக்கொண்டே தொலைபேசியைத் துண்டித்தேன்.

மீண்டும் வழியை வழியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இடையில் கணவர் அழைத்தார். மணி ஏழு முப்பது. “வீட்டுக்கு போயிட்டியா?”

“இன்னும் டாக்சி கிடைக்கவில்லை.. வேயிட் பண்ணிக்கிட்டிருக்கேன்.”

“அம்மா (என் மாமி) சாப்பிடாம இருப்பாங்களே.., நீ இன்னும் இங்கேதான் இருக்கியா? ” இந்தக்கேள்வி என் உச்சுமண்டைக்கு சுர்ர் என்று ஏறியது.. வாயில் வந்த கெட்ட வார்த்தையை, அப்படியே விழுங்கிவிட்டு.. தொடர்பைத்துண்டித்தேன்.

மீண்டும் கைப்பேசி சிணுங்கியது.

“ராஜா பேசறேன்..” சகஉழியர்தான், லாரி ஓட்டுனர்.

“சொல்லுங்க ராஜா..”

“ காடி கெட்டுப்போச்சாம்.. சீலன் சொன்னார்.”

“ ஆமாம் ராஜா.. எங்கே இருக்கீங்க?”

“ அலம் மேகா’வில்தான் இருக்கின்றேன்.. சாமான்களை ஏற்றிக்கொண்டிருக்கிறேன். இன்னும் பதினைந்து நிமிடம் ஆகும் வர.. ஒகே வா?”

“ம்ம்..ஒகே..!”

“என்ன பிரச்சனை?”

“ டெம்பரச்சர் மீட்டர் சூடேறிப்போச்சு..”

“ ஹ்ம்ம்..அப்புறம்..!!?” தொடர்ந்தார் ராஜா.. அதற்குள் ஒரு கார் என் முன்னே வந்து நிற்கவும், நான் பிறகு அழைக்கிறேன் என்று சொல்லி அவரின் அழைப்பிற்கு முற்றுப்புள்ளிவைத்தேன்.

டக்சிதான் நின்றது. பூச்சோங் போகவேண்டுமா? உங்க கணவர்தான் டக்சி அனுப்பினார், என்று சொல்லி கணவரின் பெயரைச்சொன்னார். ஏறி அமர்ந்தவுடன், ராஜாவுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி, டாக்சி கிடைத்துவிட்டது, லாரி வேண்டாம் என்று குறுந்தகவல் அனுப்பினேன்.

வீடுவந்துசேர இரவு எட்டு நாற்பதாச்சு..

நுழைந்தவுடன் மாமி கேட்டார்.. “ஏன் இப்பலெல்லாம் ரொம்ப லேட் லேட்’ஆ வர..?”

செவ்வாய், மே 07, 2013

ஒர் பயண அனுபவம்...

சென்ற வாரம் தமிழ் நாடு சென்று வந்தேன், பல முறை சென்று வந்திருப்பினும் இந்த முறை கொஞ்சம் நொந்துதான் போய்வந்தேன்.

இயற்கையின் கொடுமையில் நீர் வளம் வறண்ட நிலையில், அதிக உஷ்ணத்தில் வெந்துபோய் வந்தேன்.

உஷ்ணத்தில் கொடுமையில் நடக்கவே முடியாத நிலையில் கால்களில் செருப்பு அணியாமல் நீண்ட தூரம் கோவில்களுக்கு நடக்கையில் கால்களில் நடுக்கம் ஏற்பட்டு மயக்கமே வந்துவிட்டது.

முதல்முறையாக திருப்பதி ஏழுமலையானை சந்திக்கச் சென்று வந்தேன். அடேயப்பா எவ்வளவு கடுமையான காவல் கெடுபிடிகள்.!   விமானநிலையத்தில் கூட அவ்வளவு கெடுபிடிகள் இல்லை.. தலையில் பூ கூட வைக்கக்கூடாதாம்.! எல்லாவற்றையும் பிய்த்து எறிந்த பின்னே உள்ளே அனுப்புகின்றார்கள். பண வசூல், வெளிநாட்டவர்களுக்கு ஒரு ரேட், உள்ளூர்வாசிகளுக்கு ஒரு ரேட்.

இலவச தரிசனத்திற்கு காத்திருக்கும் கூட்டத்தைக் கண்டவுடன் எனக்கு கிறுகிறுப்பே வந்துவிட்டது. ஒரு முக்கிய பிரமுகர் வருகையின் போது, நுழைவாசல் மூடப்பட்டது. பக்தர்கள் அனைவரும் அப்படியே கோழிகூண்டில் அடைக்கப்பட்டதுபோல் பூட்டப்பட்டனர். நல்லவேளை எங்களின் தரிசனம் முடிந்தபிறகே பிரமுகர் வருகை இருந்ததால், நாங்கள் நான்கு மணிநேரத்தில் முடித்துக்கொண்டு வெளியே வந்துவிட்டோம். இலவச தரிசனத்தில்  குழந்தைகள் ஒருபுறம் கூச்சலிட்டவண்ணமாக.. வேண்டாம் போகிறோம் என்றாலும் வெளியே செல்லமுடியாத நிலையில் மக்கள் உள்ளே அவ்வளவு நெரிசலாக, அடைக்கப்பட்ட நிலையில்.. !

பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் சுலபமாக உள்ளே நுழைந்தும் பல கெடுபிடிகளின் மத்தியில் ஒர் இடத்தில் அடைத்துவைக்கப்பட்டு, ஒரு பாரத்தைப் பூர்த்திசெய்து கொடுத்தபின்பே அடுத்தக்கட்டத்திற்கு நகரவேண்டும். பூர்த்தி செய்கிற பாரம்வேறு தீர்ந்துபோகவே அங்கேயும் சில சலசலப்புகள். அதையும் சமாளித்தாகவேண்டிய கட்டாயம். முகத்தைக்கடுமையாக வைத்துக்கொண்டே நமக்கு உத்தரவு போடுகிறார்கள். விட்டால் அடித்தே விடுவார்கள் போலிருக்கு. தள்ளுகிறபோது யார் எவர் பெண்கள் குழந்தைகள் என்கிற பாகுபாடு எல்லாம் கிடையாது. எல்லோரையும் ஒரே தள்ளுதான்.

கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு நாங்கள் நுழையும் வாசலில் இலவச தரிசனம், குழந்தைகள் படும் அவஸ்தையைச் சொல்லவும் வேண்டுமா.! கத்திக்கதற உள்ளே அழைத்துச்செல்கிறார்கள். ஒரு குழந்தை கதறிய கதறு எனக்கே பரிதாபமாக இருந்தது. இறந்துவிடுவாளோ குழந்தை என்றுகூட தோன்றியது. இறைவனைக்காண எவ்வளவு மனவுளைச்சல் அங்கே.!

குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு இலவசம் என்றவுடன், பலர், குழந்தைகளை தூக்கிக்கொண்டு வரிசையில் முட்டிமோதி நிற்கின்றார்கள். நிஜமாலுமே குழந்தையா என்பதனைப் பரிசோதிக்க, குழந்தைகளின் பற்களை ஆராய்கிறார்கள். பற்கள் இருந்தால், குழந்தை அல்ல, உடனே அவர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். காலில் விழாத குறையாக கெஞ்சிகூத்தாடிக் கொண்டிருக்கின்றார்கள் பக்தர்கள். வேண்டாம் போய்விடலாம் என்பதற்குக்கூட முடியாமல் எல்லோரும் முண்டியத்து நுழைவதற்கே முயல்கின்றார்கள். மனித சுனாமியில் நாமும் அடித்துச்செல்லப்படுகிறோம்.

அந்த ஏழுமலையானைத்தரிசிக்க பல மைல்கள் நடந்தே செல்கிறார்கள். தகிக்கும் தார்சாலைகளில் கால்களில் செருப்புகூட அணியாமல், கையில் கிடைக்கின்ற உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டு வரும் காட்சி.. யப்பா இந்திய பக்தர்களே, உங்களின் பக்திக்கு தலைவணங்குகின்றோம்.

இது முதல் இரண்டுநாள் அனுபவம். பயணம் நான்கு நாள்கள். திருப்பதியிலேயே  இரண்டு நாள்கள் தீர்ந்துபோனது. சென்னையிலிருந்து அரைநாள் செல்வதற்கு அரைநாள் திரும்புவதற்கு. ஒரு நாள் முழுக்க எழுமலையானை தரிசிக்க. இரண்டு நாள்கள் போச்சா.!

சென்னை வந்தோம். இரண்டு நாட்கள் எங்கும் செல்லாமல் சென்னையிலேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஷாப்பிங், பழைய வெள்ளிக்கொலுசுகள் மாற்றுவது (மலேசியாவில் அது முடியாது, காரணம் வெள்ளிக்கு மவுசு குறைவு), போன்ற சில்லரைவேலைகளை முடித்த பிறகு அருகில் உள்ள சில உல்லாசத் தளங்களுக்குச் சென்று  ஓய்வு(!) எடுக்கலாம் என்கிற எண்ணத்தில் இருந்தோம். ஆனால் எல்லாம் பாழ்.

ஏன் பாழ்? FOOD POISONING ஆகி அப்படியே படுத்தபடுக்கையாகிவிட்ட நிலை. எல்லாம் நன்றாகவே சென்றுகொண்டிருக்கையில் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றினில் சாப்பிடச்சென்றோம். காலை உணவு. ஹோட்டல் இரண்டுமாடிகள் கொண்ட கட்டடம், மேல்மாடி மதிய உணவிற்கு மட்டுமே திறக்கவிருப்பதால், கிழே முழுக்க மக்கள் நிறைந்திருந்தார்கள், நிறைந்து விட்டார்கள் என்பதைவிட உட்காருவதற்கு எங்களுக்கு இடம் கிடைக்காததால், படிக்கட்டுகளின் அருகில் உள்ள ஒருமேஜையில் அமர்ந்து உணவை ஆடர் செய்தோம். உணவு வந்தது, அப்பொழுது பார்த்து மேல்மாடியில் இருந்து ஒருவர் துடைப்பத்தைக்கொண்டு மேலிருந்த தூசு குப்பைகளை கீழே தள்ளிக்கொண்டிருந்தார். குப்பைகள் கீழே படியில் விழுந்தாலும், தூசுகள் பறந்து எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தன. காப்பியை ஒரு கைகொண்டு மூடினாலும், உணவை அப்படிச்செய்யமுடியவில்லை. எவ்வளவோ சொன்னேன், சாப்பிடுகிறோம் கூட்டாதீர்கள், என்று, யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. கணவர் ஒரு பக்கம் `சும்மா இரு, சும்மா இரு..’ என்று உத்தரவு போட்டுக்கொண்டிருந்தார்.

சாப்பிட்டும் சாப்பிடாமலும் ஹோட்டல் அறைக்கு வந்தோம், மனபிராந்தியோ என்னவோ தெரியவில்லை,  விடாமல் வயிற்றுப்போக்கு ஆரம்பமாகிவிட்டது. எனக்கு மட்டுமல்ல என் கணவருக்கும். இதனால், அதனால்தான் வயிற்றுப்போக்கு வந்தது என்று சொல்வதைவிட, ஒட்டுமொத்தமாக தூய்மைக்கேடு நிறைந்த ஒரு நகரத்தின் சூழல் எங்களை ஆட்கொண்டுவிட்டது என்றே சொல்லலாம்.

இக்காரணத்தால் எங்கும் செல்லாமல் ஒரு நாள் முழுக்க அறையினிலேயே முடங்கிக்கிடந்ததால், சற்று ஓய்வாக இருக்குமென்று நினைத்து, அருகில் உள்ள எதாவதொரு பியூட்டி  பார்லருக்குச் சென்று கொஞ்சம் ஃப்ரஷ்சாகி வரலாமே என்றெண்ணி அங்குள்ள என் உடன்பிறவா சகோதரி ஒருவரின் மூலமாக ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பாலில் உள்ள ஒரு அழகு நிலையத்திற்கு பேஷியல் சென்றேன்.

நிலையம் அழகாகவே இருந்தது. அலங்கரிக்கப்பட்ட விளம்பரப்பலகை, நுழைந்தவுடன் மனதைத்தொடும் நறுமணம், சீருடை அணிந்த பணியாட்கள், பரபரப்பான சூழல் என பார்ப்பதற்கு தெம்பாகவே இருந்தது. கடுமையான வெயிலில் வந்ததன் காரணத்தால், அங்கே நுழைந்தவுடன் அறையின் குளுமை மனதிற்கு இதமாகவே இருந்தது.

என்ன விலை? நாற்பத்தைந்து நிமிடத்திற்கு தொள்ளாயிரத்தைம்பது ரூபாய். மலிவு அல்லவே, எங்களின் ஊரைவிட விலை அதிகம்தான். இங்கே இரண்டு மணிநேரத்திற்கு அறுபத்தைந்து ரிங்கிட் மட்டுமே.

இரண்டு நிமிடங்கள் காத்திருங்கள் என்று சொல்லி உள்ளே சென்ற பெண், அரை மணிநேரமாக வெளியே வரவில்லை. நேரமாகும் என்று தெரிந்திருந்தால் இந்த காரியத்திற்கு ஒத்திருக்கமாட்டேன். மேலும் சென்னையில் இந்த சர்வீஸ் எப்படியிருக்கும் என்பதனை அனுபவிக்கவே இந்த விபரீத முயற்சி. அதைவிட, அந்த பார்லரில் பல பிரபல நடிகைகளும் பேஷியல் செய்வார்கள் என்று குறிப்பிட்டு சில நடிகைகளின் பெயர்களையும்  சொன்னதால், இங்கே ஏதோ ஒரு விஷேசம்  இருக்குமென்றெண்ணி காலதாமதத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல் காத்திருந்தேன். இடையில் கொஞ்சம் எரிச்சலுடன் குரல்கொடுத்து நினைவுறுத்தினேன்..

உள்ளே அழைத்துச்சென்றவுடன்தான் எனக்காக அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. தூய்மை துளியளவு கூட இல்லை. தலைமாட்டில் ஒரு சிறிய துண்டு, அதை பலர் உபயோகப்படுத்தியதுபோல் அசுத்தமாகவே இருந்தது. அதன்பிறகு எனது ஆடைகளை களையச்சொல்லி அவர்கள் கொடுத்த மேலாடை ஒன்றினை அணியச்சொன்னார்கள். அந்தக் கத்தரிப்பு ஆடையிலும் அங்கேயும் இங்கேயும் க்ரீம்’களின் பிசுபிசுப்பு.. அணியவே அருவருப்பாக இருந்தது. அதையும் பலர் பயன்படுத்தியதுதான். மாற்றாமல் மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்துகிறார்கள். க்ரீம்’கள் அடுக்கிவைத்திருக்கும் ட்ரொலி மோசமாகவே இருந்தது. வெளியே மட்டும் மேக் ஆப் செய்திருந்தார்கள் உள்ளே அசுத்தமாகவே இருந்த்து.  நான் இதுவரையிலும் இதுபோன்ற ப்யூட்டி ஃபார்லரைக் கண்டதில்லை. எனக்கு இது பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியது.

சேவை என்று எடுத்துக்கொண்டால் அதுவும் பயங்கர கோளாறாகவே இருந்தது. ஆரம்பித்தவுடன் முகத்தில் scrap போடுகிறார்கள். skin milk போட்டுத்தான் முகத்தை சுத்தம்செய்வார்கள் அதன்பிறகே scrap போடுவார்கள். இங்கே எல்லாம் தலைகீழாக நிகழ்ந்தது. அதுமட்டுமல்ல, அந்த scrap தூய்மையாகத்துடைத்து எடுத்தபின்பே மற்ற வேலைகளைச் செய்வார்கள் ஆனால் இங்கே ஒன்றின்மேல் ஒன்றாகப்போட்டு முகத்தைத் தேய்த்துக்கொண்டிருந்தார் அப்பெண்மணி. இதில் இடையிடையே நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்கிற ஐஸ் வேறு, கொஞ்சங்கூட ஜீரணிக்கமுடியாத நிலையில் புழுவாய் நெளிந்துகொண்டிருந்தேன் நான். வெளியே மட்டுமே ஏர்கோண்ட் குளுகுளுவென, உள்ளே செம சூடு. இந்தச் சூட்டில், முகத்திற்கு ஸ்டீம் போடுகிறேன் என கண்களுக்கு நேராக அந்த ஸ்டீம் கருவியை வைத்துவிட்டார் அப்பெண்மணி. அதைக் கொஞ்சம் நகர்த்தமுடியுமா? என்று கேட்டதிற்கு, காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. நானே நகர்ந்து படுத்துக்கொண்டதால் தப்பித்தேன், இல்லையேல் கண்களின் நிலை.!? தேவைதான்.

க்ரீம்கள் பாட்டல் பாட்டலாக ட்ரொலியில் வைத்துக்கொண்டுதான் ஃபேஷியல் செய்வார்கள். அதன் நறுமணமே மனதிற்கு இதமாக இருக்கும். பயன்படுத்துகிற அனைத்துப்பொருட்களும்  ஆளுக்கு ஆள் புதிதாக இருக்கவேண்டும். துணி முதல் துண்டுவரை சுத்தமாக இருக்கவேண்டும். ஆனால் இங்கே.!? ஒரு தட்டில் மூன்றுவிதமான க்ரீம்களை பிதுக்கி வைத்துக்கொண்டு, பிரஷ் பயன்படுத்தாமல் கைகளைக்கொண்டே  வேலைகளைச் செய்கிறார்கள். தொட்டு தொட்டு குழப்பி உழப்பி நம் முகத்தில் அப்புகிறார்கள். அது என்ன க்ரீம்.? என்ன ப்ரண்ட்.?  போன்றவைகளை நமக்குக்காட்டாமலேயே  வைத்துக்கொள்கிறார்கள். அசுத்தமான துண்டுகளைப் பயன்படுத்தி கைகளைத்துடைத்துக்கொள்கிறார்கள். உள்ளே நீர் வசதி கிடையாது. வெளியே சென்று நீர் கொண்டுவந்து பஞ்சுகளால் நனைத்து நம் முகத்தைத் துடைக்கின்றார்கள்.  அந்த நீர் தூய்மையானதுதானா என்பது கூட சந்தேகம்தான்.

பேஷியல் ஒரு ஓய்வு நிலையமாகத் திகழவேண்டும். தியானத்திற்கு சென்று வந்ததைப்போன்ற புத்துணர்வைத்தரவேண்டும். நமக்கு அவர்கள் வழங்குகிற சேவையில் நாம் மன அமைதி கொண்டு, சரும அழகை மேருகேற்றிக்கொள்கிற நிலை வரவேண்டும். அங்கே சென்று மனவுளைச்சலுடன் திரும்பியது மோசமான அனுபவமே.

சத்தம் போட்டுவிட்டு வந்தேன்.

பணம் தாரளமாக வாங்குங்கள், கொடுக்கக் காத்திருக்கின்றோம் ஆனால் நீதி, நேர்மை, கடமை, கண்ணியம், தூய்மை, ஆரோக்கியம் போன்றவற்றில் கொஞ்ச கூடுதல் கவனம் செலுத்துங்கள்.!

சில இடங்களில் சேவைக்கு ஏற்ற தேவை இல்லை. சில இடங்களில் தேவைக்கு ஏற்ற சேவை இல்லை. இதுதான் அங்குள்ள நிலை.

கும்பிடுறேன் சாமி.