புதன், ஜூலை 20, 2022

எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பழுப்பு நிறப் பக்கங்கள்.

சாரு தமிழில் பரவலாக அறியப்பட்ட நவீன மற்றும் பின் நவீனத்துவ எழுத்தாளர். என்றாலும் மலையாளம் மற்றும் ஆங்கில இலக்கிய வாசகரப் பரப்பிலும் நன்கு அறியப்பட்டவர். அவரின் எழுத்துகள் நான் லீனியர் மற்றும்  ட்ராஸ்கிரசிவ் ( transgressive) எழுத்து என்பதால் தமிழ் வாசக பரப்பில் அதிக எதிர்ப்புகளை சம்பாதித்தவர் சாரு. நவீனத்துவ மற்றும் பின்நவீனத்துவ கோட்பாடுகளை ஆழமாக வலியுறுத்திய சாரு சர்ச்சைக்குரிய எழுத்தாளராக தமிழிலக்கிய உலகில் பார்க்கப்பட்டார். இதனால் பல இன்னல்களையும் இடையூறுகளையும் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார்.

தவிர பொதுவில் தனிநபர் தாக்குதல்களுக்கும் ஆளாகி இருப்பதாகவும் அடிக்கடி தமது வலைதளத்தில் பகிர்வார். எவ்வளவு இன்னல்கள் இடையூறுகள் தனிநபர் தாக்குதல்கள் வந்தபோதும் அவைகளை ஒரு பொருட்டாக நினைக்காமல் யாரிடமும் எந்த சமரச போக்கும் வைத்துக் கொள்ளாமல் தான் படைக்கவிருக்கும் படைப்புகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கடுமையான  வாசிப்பு, தொடர் தேடல், உலக இலக்கிய ஆய்வு எழுத்து என அயராமல் உழைத்து இலக்கியத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வரும் ஒரு முக்கிய படைப்பாளி சாரு.  


தன் படைப்புகள் உலக இலக்கியத் தரம் வாய்ந்தவை  என்று திண்ணமாகச் சொன்ன சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் தற்போது ஆங்கிலப் பத்திரிகைகளில் பிரசுரமாகி பிரபலமாகி வருவருவதையும் பலரும் அறிவர்.  சாரு எழுதிய மிக முக்கிய நாவலான  `ஸீரோ டிகிரி’ உலகளவில் மொழிபெயர்க்கப்பட்டு பரந்த வாசகப்பரப்பைக் கொண்ட மிக பிரபலமான நாவலாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது.  இந்தியாவின் ஐம்பது  முக்கிய புத்தகங்களின் ஒன்றாக திகழும் இந்நாவல் சுவிட்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இவர் தமிழுக்கு கிடைத்த  மிக முக்கிய படைப்பாளி என்றாலும், மலேசிய தமிழிலக்கிய மண்ணில் இவர் இன்னும் பரவலாக அறியப்படும் எழுத்தாளராகத் திகழவில்லை என்பதுதான் வருத்தமளிக்கக்கூடிய ஒன்று. சாருவின் எழுத்து கொடுக்கும் உன்னத இலக்கிய வாசிப்பு அனுபவம் பற்றிய மகத்துவத்தை  வார்த்தைகளால்  சொல்லியோ அல்லது எழுத்துக்களால் எழுதியோ பிறருக்கு விளங்க வைத்துவிட முடியாது. நான் லீனியர் எழுத்தை  அவ்வளவு எளிதாக  உள்வாங்கி நாம் பெற்ற இலக்கிய அனுபவத்தை அப்படியே பிறருக்கும் பகிரலாம் என்று அதன் சாரம் கெடாமல் கதையாகச் சொல்லி எளிதாகக் கடந்துவிட முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதன் வாசிப்பு அனுபவம் என்பது தியான நிலைக்கு ஒப்பானது.  

 

எழுத்தாளர் சாரு கிறங்க வைக்கும் வசீகர எழுத்துக்குச் சொந்தக்காரர். அவரின் கைவண்ணத்தில் தமிழில் பல முக்கிய நாவல்கள், சிறுகதைகள், அரசியல் சினிமா விமர்சனங்கள், விழிப்புணர்வுக் கட்டுரைகள், நேர்காணல்கள் என எண்ணிலடங்கா எழுத்துகள் நூல் வடிவமாக வந்திருப்பினும் அவரின் இணையத்தளத்திலும் பலதரப்பட்ட அனுபவப் பகிர்வுகள், வாசகர் கடிதங்கள், வசை பாடும் விமர்சன எழுத்துகள், மேற்கத்திய இசை அறிமுகம், உலக சினிமா, உலக இலக்கியம், ரஷ்ய எழுத்தாளர்கள், புதிய தொடர், நூல் அறிமுகம் என விடாமல் எழுதி பகிர்ந்த வண்ணம் இருப்பதைக் காணலாம். அவரின் இணையத்தளத்தை (charuonline)  தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களுக்கு அது போதையூட்டும் வஸ்துவாக மாறி அங்கே வாசிப்பு கொண்டாட்டமாக அமைவதையும் உணரலாம்.  


பத்தி எழுத்துகளுக்கு இலக்கிய அடையாளத்தை ஏற்படுத்தியவர் சாரு. அந்த வகையில் அவரின் பத்தி எழுத்தான பழுப்பு நிறப் பக்கங்கள் அவரின் கைவண்ணத்தில் உருவான ஒர் அற்புத இலக்கியப் பிரதி. கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் இலக்கியச் சூழலில் இயங்கிய பேரிலக்கிய ஜாம்பவான்களைக்  கண்டடைந்து அவர்களின் படைப்புகளில் பொதிந்திருக்கும் இலக்கியச் சாராம்சங்களை வலுவான ஆதாரங்களை துணையாகக்  கொண்டு விரிவான விளக்கத்தின் மூலம் மூன்று பகுதிகளாக, எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் படைப்புகள் குறித்தும்  மிக ஆழமாக எழுதியிருக்கிறார்.  இவ்வரிய தொகுப்பானது தமிழுக்குக்  கிடைத்துள்ள பொக்கிஷம். காரணம் இந்த மூன்று தொகுப்புகளையும்  வாசிக்கும் வாசகனுக்கு ஒரே வாசிப்பு அனுபவத்தில்  நூறு நாவல்களையும் ஆயிரம் சிறுகதைகளையும் வாசிப்பது போன்ற அனுபவம்  கிடைக்கப் பெறுகிறது. 


இப்புத்தகத்தை எழுதிய சாருவே இதுபோன்றதொரு நூலை தன் வாழ்நாளில் இதுவரையிலும் எழுதியதில்லை என்றும், எப்படி இப்பேர்பட்ட எழுத்து தனக்கு வசமானது என்றும் சிலாகித்து வியக்கிறார்     


 தமிழ்ப் படைப்புலகின் போக்கை மாற்றி அமைத்த முன்னோடிகள் பற்றிய அறிமுக நூலான பழுப்பு நிறப் பக்கங்கள் ஏற்கனவே இணையப் பதிப்பில் வெளியாகி பரந்த வாசகப் பரப்பைக் கொண்டு மிகுந்த பாராட்டைப் பெற்ற தொடர்.   மூன்று பாகங்களாக வந்திருக்கும் இத்தொகுப்பு ஒரு classic collection.

முதல் பாகம் பதினாறு எழுத்தாளர்கள் கொண்ட தொகுப்பு, இரண்டாம் பாகம் ஐந்து எழுத்தாளர்களைப் பற்றியது. மூன்றாம் பாகம் ஆறு எழுத்தாளர்களைப் பற்றியது. மொத்தம் இருபத்தேழு எழுத்தாளர்களைப் பற்றிய இத் தொகுப்பானது வாசிப்பதற்கு இலகுவாக மிக எளிய நடையில் சாருவிற்கே உரித்தான எள்ளல் பகடி பாணியில் நகைச்சுவையாகவும் அதேவேளையில் மனபாரத்தைக் கொடுக்கும் எழுத்தாளர்களின் துயர்   சொல்லும் கருப்பு பக்கங்களாகவும் இந்நூல் அமைகிறது.     


இந்நூலின் நாயகர்களை வெளிக்கொணர  சாரு போட்ட உழைப்பை அவ்வளவு எளிதாக எண்ணி விடலாகாது.. ஒவ்வொருவராக அறிமுகம் செய்வதற்கு  அவர்களைப் பற்றிய தேடலில் சிறப்பானதை நமக்குக் கொடுக்க அவர் எடுத்துக்கொண்ட வாசிப்பும் அதற்கான நேரமும் நம்மை  பிரமிக்க வைக்கிறது.  


இத்தொகுப்பில் வரும் பலர் ட்ராஸ்கிரசிவ் மற்றும் பின்நவீனத்துவ  எழுத்தாளர்கள். சமூக மூடத்தனங்களையும் போலித்தனங்களையும், குடும்ப வன்முறைகளையும், வாழ்வியல் ஆதாரங்களையும், பெண்ணடிமைத்தனத்தை யும், தாம்பத்திய துரோகங்களையும், அறியாமையின் உச்சத்தையும். தேகம் உடல் சார்ந்த நுண்ணிய உணர்வுகளையும், கீழ்மையான எண்ணங்களையும் கலவையாகச் சேர்த்து படைக்கப்பட்ட படைப்புகளை நிறைய அலசி ஆராய்ந்திருக்கிறார்.  


கலாச்சார பின்னணியை ஆதாரமாக வைத்து அங்கே நிகழ்த்தப்படும் கொடுமைகளைக் கட்டுடைக்கும்  ஆதவனின் கதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்கத்துண்டும்படி அறிமுகம் செய்கிறார் சாரு. உதாரணமாக என் பெயர் ராமசேஷன் நாவல். ராமசேஷன் எல்லா வயதுப் பெண்களுடன் சகஜமாக பாலியல் உறவு வைத்துக் கொண்டு உல்லாசமாக இருக்கும் ஒரு வாலிபன். ஆனால் தன் தங்கைக்கு மட்டும் நல்ல மாப்பிள்ளை  அமைய வேண்டும் என தங்கையின் காதலை பிரிக்க முயல்கிறான். நமது வாழ்வியல்  முறையே நம் உள்ளுணர்வை உலுக்குகிறது என்பதற்கு இந்த நாவல் ஆதாரம்.   ஆதவனின் எழுத்து தனிப்பட்ட சமூக வாழ்வின் போலித்தனங்களில் இருந்து நம்மை விடுவிப்பவை என்கிறார் சாரு. 


கோபி கிருஷணன் பற்றிய தொடர் கொஞ்சம் துயரமாக இருந்தது.  நான் மிகவும் ரசித்து வாசித்தது கோபி கிருஷ்ணன் பற்றிய தொகுப்பைத்தான்.   கோபிகிருஷ்ணன் படைப்புகள்  அவரின் வாழ்வோடு சம்பந்தப் பட்டது என்று தெரிய வரும்போது மனதில் ஈரம் கசிகிறது. இந்தச் சமூகம் எல்லோரும் செய்வதைச் செய்கிறவனை நல்லவன் என்றும், எல்லோரும் செய்கிற செயல்கள்தான் நல்ல செயல்கள் என்றும்.  அப்படிச் செய்யாதவனை எதற்கும் உதவாத பைத்தியக்காரன் என்றும் புறந்தள்ளி புறக்கணிப்பதை ஆதாரமாகச் சொல்லும் நிறைய கதைகளை எழுதியிருப்பவராக கோபியைக் காட்டுகிறார் சாரு. கோபியின் கதைகளில் வரும் மனோதத்துவ மருத்துவ terms களை வாசிக்கின்ற போது, அவர் எவ்வளவு பெரிய ஜீனியஸ் என்பதை நம்மால் உணர்ந்துக்கொள்ள முடிகிறது. அவரின் வாழ்வும் மரணமும் அதிர்ச்சி மிக்கது.  அம்மணமாகத் திரியும் ஊரில் ஆடை அணிந்தவன் அரைக்கிறுக்கன் என்கிற வாசகம் தான் நினைவுக்கு வந்தது கோபியின் அத்தியாயத்தை வாசித்து முடித்த போது..     


 பழுப்பு நிறப் பக்கங்களில் வரும் ஒவ்வொரு இலக்கிய முன்னோடிகளை வாசிக்கின்றபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் மிக்கவர்களாகவும்  தமிழ் இலக்கிய சூழலில் மிக முக்கிய படைப்பாளி களாகவும் பார்க்கும்படி காட்டியிருக்கின்றார் சாரு. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்கிற ரீதியில் படைக்கப்பட்டது தான் ப.நி.ப. அப்படி இருக்கையில்,  கு.ப.ராஜகோபாலன் பற்றி சொல்லுகையில், அவர்தான் தமிழ்ச் சிறுகதையின் பிதாமகன் என்று குறிப்பிடுகிறார்.  ஆண் பெண் உறவின் நுண்ணிய தேக உணர்வுகள் பற்றி சிறுகதைகளில் சொல்லும்போது, வாசகன் தன் நிலைக்கேற்ப  அவைகளை ஆபாசக் கதைகளாக எடுத்துக்கொள்கிறான். அதன் பின் எழுத்தாளர் மிக மோசமாக விமர்சனம் செய்யப்பட்டு துரத்தியடிக்கப்படுகிறார். இந்த புறக்கணிப்பு கு.ப.ரா வை ஒன்றுமே செய்யவில்லை. மிக மெல்லிய குரலில் மென்மையான முறையில் அடுத்த இலக்கியப் பிரதிக்கு தயாராகலாமே, என்பாராம் கு.ப.ரா..  எல்லாக் காலத்திலும் பெண்களின் மறைக்கப்பட்ட உணர்வுகளை கதைகளின் வழி  சொல்ல வந்த நவீன பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் சர்ச்சைக்குரிய எழுத்தாளர்களாக மாற்றி அவர்களை சமூக விரோதிகளாக  அடையாளப்படுத்துகிறது நம் சமூகம்.   


எஸ்.சம்பதின் இடைவெளி என்கிற சிறிய நாவல் மகாபாரதம் போன்ற காவியத்திற்கு ஒப்பான படைப்பு என்கிறார் சாரு. ஒரு படைப்பாளியின் மரண சாசனம் இந்த நாவல்.  இறக்கும் தருவாயில் தனது மரணம் குறித்து தானே எழுதி வைத்திருக்கும் மரண அறிக்கைதான் இந்த இடைவெளி நாவல். நாவல் வெளிவரும் முன்பே நோயின் தாக்கத்தால் மாண்டு போகிறார் சம்பத். 


ந. சிதம்பர சுப்ரமணியம் என்கிற எழுத்தாளர் பற்றிச் சொல்லுகையில்,   பிரபல எழுத்தாளர்கள் என்று நாம் நினைக்கின்ற பல எழுத்தாளர்களுக்குக் கூட ந. சிதம்பர சுப்ரமணியம் யார் என்று தெரியாமல் போய்விட்டது என வருத்தப்பட்டு எழுதுகிறார் சாரு. ந. சிதம்பர சுப்ரமணியத்தின் இதயநாதம் என்கிற நாவலை வாசித்த போது அவருக்கு ஏற்பட்ட இலக்கிய அனுபவத்தை இப்படி நம்மிடம் பகிர்கிறார், ‘கோவில்களில் கற்பூர தீபாராதனை நடக்கும் போதும், காலை நேரத்தில் வசீகரிக்கும் மலர்களைக் காணும்போதும், புண்ணிய நதியில் நீராடும் போதும், பேராலயங்களில் நுழையும் போதும் நமக்கு எத்தகைய புனிதமான உணர்வு ஏற்படுகிறதோ, அப்படிப்பட்ட உணர்வு சிதம்பர சுப்ரமணியனின் கதைகளை படிக்கும்போது ஏற்படுகிறது என்று சிலாகிக்கிறார். 


அசோகமித்திரனை தன்னுடைய தகப்பன் ஆசான் ஆகியவர்களைவிட மிக உயரத்தில் வைப்பதாகச் சொல்கிறார். அசோகமித்திரனின் எழுத்துகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் அவர் சர்வதேச அளவில் ஐரோப்பிய எழுத்தாளர்களுக்கு நிகராகப் போற்றப்பட்டிருப்பார். உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்களின் பட்டியலில் அசோகமித்திரனுக்கு உயர்ந்த இடம் கொடுக்கலாம் ஆனால் அவர் தமிழ் இலக்கியச் சூழலில் சிக்குண்டு இறுதிவரை ஏழ்மையிலேயே காலம் கழித்ததாக மனவருத்தத்துடன் சொல்கிறார் சாரு.  


இருத்தலின் சாரத்தை வலியுறுத்தும் கதைகளை எழுதியவர் ஆ. மாதவன் என்று சொல்லி அவரின் `எட்டாவது நாள்’ என்கிற நாவலைப் பற்றி எழுதுகிறார் - ``இந்த கணத்தை தீவிரமாக வாழ், அதுவே முழுக்க முழுக்க அறம் சார்ந்தது. இருத்தலியல் தருணத்தில் வாழும் மனிதனுக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் ஏற்படுவதில்லை.’’ என்ற வரிகளை நம்மிடம் பகிரும்போது ஆ.மாதவனின் கதை சொல்லும் பாணி என்பது எப்படிப்பட்ட தத்துவ சாரங்களை உள்ளடக்கியதாக  இருக்கக்கூடும் என்கிற சிந்தனையை நம்மிடம் பரவ விடுகிறார்.  


எம்.வி. வெங்கட்ராம் - தமிழில் ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தின் முன்னோடியாக எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் அவர்களைப் பார்ப்பதாகச் சொல்கிறார் சாரு. ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து என்பது சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட ஒழுக்க விதிகளை உடைத்து அலசி அதை அப்படியே எழுத்தில் கொண்டுவந்து விவாதிப்பது தான். அதற்கு உதாரணமாக அவர் எழுதிய `காதுகள்’ நாவலைப் பற்றி எழுதுகிறார். காதுகளுக்குள் புகும் பலரின் அகோர குரல்கள் அசரீரியாக நின்று தனி ஒரு மனிதனின் மனசாட்சியுடன் எப்படி  கொச்சையாக உரையாடி அவனின் நிம்மதியை சீர்குலைக்கிறது. மனிதனின் கீழான அவல நிலைக்கு முக்கிய பங்கு வகிப்பது காதுகள் உள்வாங்கும் பரவலான உரையாடல்கள் என்பதைச் சொல்லும் நாவலாக இந்நாவல் இருப்பதாகச் கோடிக் காட்டுகிறார்.


பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தெரியாத ஆண், ஆண் மகவு வேண்டி ஐந்து ஆறு மனைவிகளை மணம் முடித்துக்  கொள்கிறான்.  அவர்களுடன் எப்படி தாம்பத்திய வாழ்வில் ஈடுபடுகிறான், அப்படி ஈடுபடுகையில் அந்த வீட்டில் மகள் ஸ்தானத்தில் இருக்கும்  பருவப் பெண் படும் அவஸ்தைகள் குறித்தும்  தஞ்சை பிரகாஷின் கரமுண்டார் வூடு நாவல் சொல்வதாக எழுதுகிறார் சாரு. லெஸ்பியன் உறவு பற்றி தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் தான் என்றும் அறிமுகம் செய்து வைக்கிறார். . ஒரு ஆணின் வீரிய வளர்ச்சிக்கு என்ன மாதிரியான உணவுகள் தேவைப்படுகின்றன என்கிற நீண்ட பட்டியலையும் கொடுத்திருக்கின்றார்.. அக்காலத்தில் அறுபது வயதுவரை பெண்கள் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று வந்துள்ளதையும், ஆண்கள் எழுபத்தைந்து வயது வரை வீரியம் குறையாமல் பல மனைவிகளை மணமுடித்துக் கொண்டதையும் தஞ்சை பிரகாஷின் நாவல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இந்த பூமியில் பிறந்த அத்தனை பெண்களும் நிச்சயம் தஞ்சை பிரகாஷின் நாவல்களை குறிப்பாக கரமுண்டார் வூடு நாவலை கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதற்குக் காரணம் பெண்ணியம் பேசும் அத்தனை எழுத்தாளர்களையும் ஒன்று சேர வீழ்த்தியவர் தஞ்சை பிரகாஷ் என்று புகழ்மாலை சூட்டுகிறார் சாரு. பெண்களின் அடக்கப்பட்ட காமத்தின்  உக்கிர வெளிப்பாட்டை எந்த பெண் எழுத்தாளரும் இவர்போல் எழுதிவிட முடியாது என்கிறார். தன் பூட்டி பாட்டிகளின்  சொந்த அனுபவங்களை உண்மையின் பிரதிநிதியாக நின்று பிரகாஷ் வடித்திருக்கும் இக்கதைகள் அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பணம் என்கிறார் சாரு.


இப்படி இன்னும் நிறைய சுவாரஸ்யங்களைக் கொண்ட நூல்தான் பழுப்பு நிறப் பக்கங்கள். தமிழ் இலக்கியச் சூழலுக்கு சாரு கொடுத்திருக்கின்ற இந்த அரிய புதையல் அனைவரும் வாசித்துப் பயன் பெற வேண்டிய ஒன்று.   

 


பின்நவீனத்துவ கூறுகளில் ஒன்றான புனிதங்களை கட்டுடைத்தல் என்பதில் தீவிர போக்கு உடைய எழுத்தாளர்களை  சர்ச்சைக்குரிய எழுத்தாளர்கள் என்று புறந்தள்ளும் போக்கு மாறவேண்டும்.  பின்நவீனத்துவ எழுத்துகளில் மறைந்திருக்கும் சாராம்சத்தை விளங்கிக்கொள்ள முயல்வதே நாம் நல்ல இலக்கிய பிரதிகளைக் கண்டடைவதற்கு வழி வகுக்கும். கதை என்பது கதை சொல்வதல்ல, சொல்லப்பட்ட கதைக்கும் சொல்லப்படாத கதைக்கும்  இடையே வாசகனான  நாம் சிந்தித்திருக்கும் தருணத்தில் உதிக்கின்ற ஒரு பொறிதான் நமக்குள் ஓராயிரம் அர்த்தங்கள் கற்பித்துக் கடக்கும் இலக்கிய சூட்சுமம். இங்குதான் இலக்கிய வாசிப்பின் மகத்துவம் புரிந்து கொள்ளப்படுகிறது.  இதுதான் இலக்கியம் நிகழ்த்தும் அற்புதம்.  


இதுபோன்ற அற்புத நூல் வாசிப்பை நமக்குக் கொடுத்த சாருவிற்கு நன்றி. 


நூல் கிடைக்கும் இடம் : tamilasia.com


திங்கள், ஜனவரி 14, 2019

நட்பின் அத்தியாயம் - முற்றும்

இதை நான் சொல்லியே ஆக வேண்டும். அப்படிச்சொல்லவில்லை என்றால் நான் நன்றி கெட்டவள் ஆகிவிடுவேன். ஒருவரின் மறைவு
ஈடுகட்டமுடியாத இழப்பு என்பதற்கான அர்த்தத்தை இப்போது உணர்ந்து, அதைக் கொஞ்ச நாளாக அனுபவித்து வருகிறேன். நாம் நேசித்த ஒருவர் மண்ணைவிட்டு மறைந்துவிட்டால், அவரின் நினைவு வருகிறபோதெல்லாம், அவர் நமக்கு சுயநலமில்லாமல் செய்த சில செயல்கள் நம் முன் வந்து வந்து போகும்.
நட்பு என்றால், தினமும் கைக்கோர்த்து நடந்து சென்று உண்பது அரட்டை அடிப்பது ஊர் சுற்றுவது என்பதுதான் என்று பெருவாரியாக நினைக்கின்றபோதிலும், கிட்டத்தட்ட 18ஆண்டுகள் பார்க்காமல் சந்திக்காமல் தொலைத்தொடர்பின் மூலமாகவே நட்பு பாராட்டி உளமாற ரசனைகளைப் பகிர்ந்து, படித்ததை, பார்த்ததை அனுபவித்ததை, கேட்டதை நினைத்த நேரத்தில் நினைத்த மாத்திரத்தில் மனதில் எந்த ஒரு நெருடலும் இல்லாமல் உடனுக்குடன் பகிர்ந்து களிப்புறுகிற நட்பு நம்மில் எத்தனை பேருக்கு வாய்த்திருக்குமென்று எனக்குத்தெரியாது. ஆனால் நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி. எனக்கு அப்படி ஒரு நட்பு இருந்தது ஆனால் இப்போது இல்லை. மரணித்துவிட்டார். சொல்லாமல் சென்றுவிட்டார்.
நோயாளியல்ல அவர். நோய்களுக்கு மருந்துசொல்லும் மருத்துவர். இருந்தபோதிலும் நோய் ஆள்பார்த்து வருவதில்லையே. அவரையும் தாக்கியது மாரடைப்பு. இறப்புச் செய்தியினைக்கேட்டு அவரின் மனைவிக்கு அழைத்தபோது சொன்னார், திடீர் மூச்சுத்திணறல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அசைவற்று, ஒருவாரத்திற்குப்பிறகு திரும்பிவரவேயில்லை, என்று. அன்று அவரின் மனைவிக்கு ஆறுதல் சொன்ன நான் ஆரம்பத்தில் தெளிவாகத்தான் இருந்தேன். கண்களில் ஒரு சொட்டு நீர்கூட வரவில்லை எனக்கு. மரணம் இயற்கை என்று மனதிற்குள் சொல்லிவிட்டு ஒரிரு வார்த்தைகளை முகநூலில் பகிர்ந்துவிட்டு, நான் எனது அன்றாட கடமைகளில் வழக்கமாக ஈடுபடத்துவங்கினேன்.
சில நாட்கள் சென்றது, எனது மகிழ்வு, சோகம், வாசிப்பு, எழுத்து, அறிவுப்பூர்வ கேள்வி, அறிவியல், மருத்துவம், இலக்கியம், நகைச்சுவை, பழைய சினிமா, காதல், வரலாறு, புத்தகம், ஆங்கிலம் என எதையொட்டிய தேடலாக இருந்தாலும் அங்கே டாக்டர் மட்டுமே வந்து நிற்கிறார். என்ன நடக்கிறது எனக்குள், என்கிற குழப்பத்தில் துவண்டுபோனேன். கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் எனது மனப்பூர்வ பகிர்வுகளில் டாக்டர் ஒருவர் மட்டுமே ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததை உணரத்துவங்கினேன். உணர்ந்த மறுநொடி பயங்கரமான தனிமைக்குள் தள்ளப்பட்டேன். யாரிடமும் நான் மனதளவில் இவ்வளவு நெருக்கமாக இருந்தது கிடையாது. பெண் நட்பில்கூட இப்படி ஒரு நல்ல நட்பு எனக்கு இதுவரையிலும் இருந்ததில்லை. நிறைய நட்புகள் நமக்கு இருக்கலாம், இருந்தபோதிலும் யாரிடம் நாம் எல்லாவற்றையும் நம்பிக்கையுடன் பகிர்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதனை கூர்ந்து நோக்கினால் அங்கே ஒருவர் மட்டுமே இருப்பார். அப்படி இருந்த ஒர் நட்புதான் டாக்டர் ஜி.ஜான்சன்.
டாக்டர் அவர்களின் நட்பு 2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் துவங்கியது. அப்போது, அவர் தமிழ்நேசன் பத்திரிகையில் மருத்துவ கேள்வி பதில் அங்கத்தை எழுதிக்கொண்டிருந்தார். அந்த அங்கத்தில் மருத்துவம் சார்ந்த கேள்விகளுக்கு மட்டுமே இடமுண்டு என்கிறபோதிலும், அங்கு அச்சிடப்பட்டுள்ள அவரின் கைபேசிக்கு அழைத்துப்பேசினால், முகஞ்சுளிக்காமல் அனைத்துவிதமான கேள்விகளுக்கும் பதில் சொல்வார். விலாவரியாக மிகுந்த அக்கரையுடன் அன்புமிகுந்த பணிவுடன் இருக்கும் அவரின் பேச்சு. மெத்தப்படித்த ஒரு மருத்துவர் சாதாரண மக்களின் அழைப்பை ஏற்று அக்கரையுடன் பணிவாக பதிலளிக்கின்ற பாணி பிடித்திருந்ததால் அவருடனேயான நட்பை நான் தக்கவைத்துக்கொண்டு தொடர்ந்தேன்.
ஒருமுறை கேள்வி ஒன்றினை வைத்தபொழுது, இக்கேள்விக்கான பதிலை நான் பத்திரிகையில் இன்னும் பல உதாரணங்களோடு விளக்கமளிக்கின்றேன் விஜயா, இவ்வார நேசனை கண்டிப்பாக வாசியுங்கள் என்று கூற, அந்த வாரம் அனைத்து கேள்விகளும் வர, எனது கேள்வி விடுபட்டிருந்தது.
அதற்கான காரணத்தைக்கேட்க மீண்டும் அழைத்தபோது, அடுத்தவாரம் கண்டிப்பாக வரும் என்று சொல்ல, அடுத்தடுத்த வாரமும் வராமல் இருக்க… அதையொட்டிய அழைப்புகள் தொடர, பத்திரிகையின் நிலவரங்களை நகைச்சுவையாக சுட்டிக்காட்ட, நட்பு மலர்ந்தது எங்களுக்குள். இந்த நட்பு கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கடந்துகொண்டிருக்கின்றவேளையில், ஜொகூர்பாருவில் இருந்து இலக்கிய நிகழ்வு ஒன்றிற்கு, 2018 ஜூலை மாதம் என்று நினைக்கிறேன், தலைநகர் வந்திருந்தபோது, அழைப்பு விடுத்தார் சந்திக்க, வேலை நாட்களில் பணியிடத்திலிருந்து தலைநகர் செல்வது சாமானியமான செய்கை அல்ல, அதனால் அந்தச் சந்தர்ப்பமும் நழுவியது. அவரை நான் சந்தித்ததே இல்லை.
சிலரின் நட்பு நம்மை ஒன்றுமே செய்யாது. இருந்தார் மறைந்தார் என்று ஒரு நாள் அல்லது இரண்டு நாள் துக்கம் அனுசரித்துவிட்டு கடந்துவிடலாம். பெரும்பாலும் நட்பு என்கிறபோது, நட்பு என்றல்ல, என் அப்பாவின் மறைவைத்தவிர்த்து மற்ற யாரின் மறைவும் என்னை எதுவுமே செய்தில்லை. ஆனால் டாக்டர் ஜான்சனின் மறைவு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், ஒவ்வொருநாளும் அவரின் நினைவு இல்லாமல் பொழுது விடிவது இல்லை. எனக்கு ஏற்படுகிற அனைத்து அனுபவங்களையும், கேள்விகளையும், சந்தேகங்களையும் பக்குவப்பட்ட, கல்வியறிவில் சிறந்து விளங்கிய, உலக விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்த டாக்டரிடம் மட்டுமே பகிரவேண்டும் என்கிற எண்ணம் விடாமல் என்னைத் துரத்துகிறது. தினமும் பேசுவோம். நான் ஒரு கேள்வியினை வைத்திருக்க, அவர் அதற்கு பதில் கொடுத்து கூடுதல் விவரங்கள் பகிர, அந்த விவரங்களில் இருந்து வேறொரு தகவல்கள் உதிக்க, அப்படி உதிக்கின்ற தகவல்கள் எந்த அளவிற்கு நமது அடுத்தடுத்த தேடல்களைத் தூண்டிவிடும் என்பதை அவரின் நட்பின் வழி உணர்ந்துகொண்டேன்.
அவரைப்பற்றி சொல்லவேண்டுமென்றால்…
தனது மருத்துவப் பணியினை உளமாற நேசிப்பவர். இரவு பகல் பாராமல் உழைத்தார், எவ்வளவு நேரம் உழைத்தாரோ அந்த அளவிற்கு எழுதவும் வாசிக்கவும் செய்தவர். எப்போது பார்த்தாலும் எதையவது வாசித்துக்கொண்டேதான் இருப்பார். பெரிய பெரிய ஆங்கில நாவலாகட்டும் கடுகளவு வந்துள்ள வாசகர் கடிதமாகட்டும் அனைத்தையும் வாசிப்பார். ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிவரும் அனைத்து தமிழ் பத்திரிகைகளையும் வாங்கி வாசித்துவிடுவார். 2000ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தரணிமைந்தன் என்கிற புனைப்பெயரில் பல சிறுகதைகளை விமர்சனம் செய்துவந்தபோது, அவர் வாசித்துவிட்ட சிறுகதைகளை என்னை வாசிக்கச்சொல்லி கருத்து கேட்பார். நான் வாசிக்க தாமதமானாலும் காத்திருந்து கதை எப்படி இருந்தது என்று கேட்பார். நன்றாக இல்லாத, ஒன்றுமே இல்லாத எழுத்துகளை, நான், இது கதையே அல்ல என்று சொல்லும் போது, எப்படிச் சொல்கிறீர்கள்.? ஏன் சொல்கிறீர்கள்.? எந்தப்பகுதி உங்களை அப்படிச்சொல்லவைத்தது.? புதிய எழுத்தாளர் என்பதாலா.? நீண்ட நாள் எழுதிய எழுத்தாளார் என்பதாலா.? என்றெல்லாம் கேட்பார். இருவரிடையே என்னமாதிரியான கருத்துக்கள் பரிமாறப்பட்டாலும், எழுதுகிறபோது யார் மனதேனும் புண்பட்டுவிடுமே என்கிற நோக்கிலேயே விமர்சம் வைப்பார். அந்தப்பகுதியில் வந்த அனைத்து விமர்சனமும் எழுத வரும் புதிய வாசகர்களுக்கு உத்வேகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார். எழுத்தில் கன்னியம் காப்பதுபோலவே பேச்சிலும் யாரைப்பற்றியும் தரக்குறைவாக பேசாத பண்பும் என்னை அவரிடம் நெருங்க வைத்து நம்பகத்தன்மையை வளர்த்து நட்பில் தடுப்புச்சுவர் இல்லாமல் தைரியமாக அனைத்தையும் பகிர வழிவகுத்தது.
கணினி பயன்பாட்டில் பரிச்சயம் இல்லாமல் இருந்தவரை, கணினி யுகத்திற்கு (தமிழில் தட்டச்சு செய்வது, கைபேசியில் குறுந்தகவல் அனுப்புவது, முகநூலில் பதிவுகள் செய்வது புகைப்படம் ஏற்றுவது, வட்சாப் அனுப்புவது) அழைத்து வந்ததே நான் தான் என்று இந்த அடியேன் மார்தட்டிக்கொள்ளலாம். புத்தகப்புழுவாக இருந்த அவரை, கணினியின் பக்கம் தற்போதைய மாற்றங்களை நோக்கி (எனக்குப்புரிந்தவரையில்) நகரவைத்த எனக்கு அடிக்கடி புகழாரம் சூட்டுவார். அதை வஞ்சப்புகழ்ச்சியாக நான் புறக்கணித்தாலும், அவர் அதை மனதார சொல்வதாகச் சொல்வார்.
மெத்தப்படித்த அவர் கணினி பற்றிய போதனையின்போது பாலர்பள்ளி மாணவன் போல் ஆகிவிடுவார். குறிப்பு எடுத்துவைத்துக்கொண்டு நேரம் கிடைக்கின்றபோதெல்லாம் அதை மீண்டும் மீண்டும் செய்துபார்த்து விளக்கம் கேட்டு முழுமையாக புரிந்துகொண்ட பண்பைக் கண்டு வியந்துபோவேன். ஓஷோ சொல்வதைப்போல், மனிதன் எப்போதும் காலி கோப்பையாக இருக்கவேண்டும். அப்போதுதான் கற்றலின்போது காலிகோப்பையை நிரப்பிக்கொள்ளலாம், என்று. அதுபோலவே இறுதிவரை காலி கோப்பையாகவே இருந்தார் டாக்டர். தினமும் எதையாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற தீராத வேட்கை அவரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம். சிலவேளைகளில் நான் பிதற்றுவதை ஏற்கனவே அவர் எங்கேனும் வாசித்திருந்தாலும் சரி, அல்லது
அந்த விவரம் அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் சரி, நம் பேச்சினை இடைமறித்துப் பேசாமல் அமைதியாக முழுமையாக கேட்டுவிட்டு, மிகப் பணிவாக அதைப்பற்றிய மேல் விவரங்களை நம்மிடம் பகிர்கிற பாணியினை நானும் பழகவேண்டும் என்று நினைத்துக்கொண்ட நற்பண்பு அது. ஒன்றுமே தெரியாத அப்பாவிபோல் இருப்பார், அனைத்தும் அவருக்கு தெரிந்திருந்தாலும் கூட.
யாரைப்பற்றியும் அநாவசியமாக புறங்கூறும் மனிதரல்ல. பிடித்தவரை தூக்கிவைத்துக்கொண்டாட மாட்டார் அதேவேளையில் பிடிக்காதவரை வெறுத்துத் தூற்றித்திரியவும் மாட்டார். அவருக்கு மிகவும் பிடித்த விஷயம் புகைப்பிடித்துக்கொண்டே தேநீர் அருந்துவது. காரில் நீண்ட தூர பயணத்தின் போது மிக மிக பழைமையான (ஜிக்கி, AM ராஜா, கண்டசாலா, ராஜேஸ்வரி, தியாகராஜ பாகவதர், பானுமதி) அவர் பதிவு செய்து வைத்திருந்த பாடல்களை கேட்டுக்கொண்டே செல்வது பிடித்தமான ஒன்று. பயணத்தின்போது இடையே எனக்கும் அழைத்து, பாடலின் ஒலியை வேகமாக வைத்து, இந்தப்பாடலை கேட்டுப்பாருங்களேன், அற்புதம் ஆஹா.. என்று நம்மையும் ரசிக்கவைப்பார். எப்போதும் உற்சாகமாகவே இருப்பார். கவலையாக சோர்வாக இருந்ததை ஒருமுறைகூட கண்டதில்லை. அவரின் மூத்த மகன் காரில் அமர்ந்தவாக்கிலேயே மரணமுற்ற இரண்டு நாளுக்குபின் நான் யதார்த்தமாக அழைத்தபோது, முதலில் அந்த கவலையினை வெளிக்காட்டாமல் என்னிடம் எப்போதும்போலவே பேசிவிட்டு, கைப்பேசியினை வைக்கின்றவேளையில் இந்தச் சோகச்செய்தியினைப் பகிர்ந்தார். அதிர்ச்சிக்குள்ளான நான் அவருக்கு ஆறுதல் சொன்னபோது, ``அதைவிடுங்க.. என்ன செய்வது, என் மனைவிதான் பாவம்,’’ என்று பெருமூச்சுடன்.. ச்ச், என்கிற வார்த்தையில் அந்தச் சோகத்தைக் கடந்துசென்றார்.
வாசிப்பு மற்றும் எழுதுவது இறுதி மூச்சுவரை உயிர் துடிப்பாய் இருந்தவை அவரிடம். திண்ணையில் ‘தொடுவானம்’ தொடரை விடாமல் எழுதிக்கொண்டே வந்தார். தொடுவானமும் புத்தக வடிவில் வந்தது. அது அவரின் இரண்டாவது நூல். முதல் நூல் அவர் உயிராய் நேசித்த அவரின் மருத்துவ பணியின் சவாலை ரசித்து ரசித்து எழுதிய நாவல் `உடல் உயிர் ஆத்மா’. இரண்டு நாவல்களும் என்னிடம் உண்டு. உடல் உயிர் ஆத்மா நாவல் என்னைக்கவர்ந்தது காரணம் ஆன்மிகமும் விஞ்ஞானமும் கலவையாக வந்து அவர் சந்தித்த பல பிரபலங்களையும் இனைத்து நாவலாக்கியிருந்தார். தொடுவானம் – சுயசரிதை - வாசிப்பில் எனக்கு சோர்வினைத்தந்தது. அதை அவரிடமும் பகிர்ந்தேன்.
வள்ளுவனின் திருக்குறளை தினமும் ஒரு குறள் எடுத்து, அதே இரண்டு வரிகளில் தமிழில் உள்ளதுபோலவே அதன் அழகைச் சிதைக்காமல் ஆங்கிலப்படுத்திக்கொண்டிருந்தார். எனக்கு ஆங்கில அறிவு தமிழறிவை விட படுமோசம், அதை என்னிடம் காண்பித்து விளங்காத கடினமான சொற்களுக்கு விளக்கம் கொடுப்பார். விளங்கிக்கொள்வதற்கு ஆர்மூட்டுவார். குறளை தமிழில் உள்ளதுபோலவே அதே பாணியில் அதே நடையில் தாம் மட்டுமே ஆங்கிலப்படுத்திக்கொண்டிருப்பதாகச் சொல்லி மகிழ்ந்துகொள்வார்.
உள்ளூர் கவிஞர்களின் தமிழ் கவிதைகளை (அவருக்கு மிகவும் பிடித்தமான) ஆங்கிலப்படுத்தி வாசித்துக்காட்டி பரவசப்படுவார். அர்த்தம் அதே போல் உள்ளதா, என்றும் கேட்பார். கவிதை என்பது உணர்வு, எப்படி மொழிபெயர்த்தாலும் அதன் உள்ளடக்கம் வேறு கோணத்தில்தான் இருக்கும், அதனால் அதை அப்படியே விட்டுவிடுங்கள் என்பேன். அதில் முரண்படுவார். அப்படியென்றால் கவிதைக்கு விளக்கம் கொடுக்கமுடியாதா.? ஏன் கவிஞர்கள் புரியாத மொழிநடையில் எழுதுகிறார்கள்.? புரியாமல் எழுதி யாருக்கு என்ன சொல்லவருகிறார்கள்.? எது இலக்கியம் .? காமம் கலந்து எழுதினால் அது இலக்கியமா.? எது கவிதை.? பாரதியார்/பாரதிதாசன் போல் கவிதை எழுதிவிட்டார்களா அவர்கள்..? புரியாமல் எழுதி என்ன சாதிக்கப்போகின்றார்கள்.? என்று ஆவேசமாக பேசுவார். எனக்கு அது படு நகைச்சுவையாக இருக்கும்.
Leo Tolstoy யின் அன்னகரினா நாவலை மீள்வாசிப்பு செய்துகொண்டிருந்தபோது, அந்நாவல் புதிய வாசிப்பில் தமக்கு இன்னும் பல சுவாரஸ்யங்களைக் கொடுப்பதாகச் சொல்வார். அந்நாவல் கொடுக்கின்ற புதிய அனுபவங்களை என்னிடம் பகிர்ந்தவண்ணமாகவே இருந்தார். தினமும் நாவலின் முக்கிய அத்தியாயங்களை என்னிடம் பகிர்வார். அன்னகரினா நாவலை வாசிக்காமலேயே அந்தக் கதையின் கரு எனக்குப் பரிச்சயமானது.
ஆங்கிலப்பத்திரிகைகளை வாங்கி வாசிக்கும்படி அடிக்கடி வழிகாட்டுவார். ஆங்கில வாசிப்பு அவசியம் என்பார். தமிழ் முக்கியம் என்கிற கருத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருப்பினும், ஆங்கிலமும் அதே அளவிற்கு முக்கியம் என்பதனையும் அடிக்கடி வலியுறுத்துவார். அவர் தினமும் வாசிக்கின்ற NST பத்திரிகையில் அடிக்கடி கட்டுரைகள் எழுதுவார். குறிப்பாக பொங்கல் வந்தால், பொங்கல் தமிழர் திருநாள், தை முதல்நாள் தான் நம்மவர்களின் புத்தாண்டு, என்பனவற்றைக் குறிப்பிட்டு திராவிடர் வரலாற்றுச்சான்றுகளோடு திராவிடர் தலைவர்கள் முன்மொழிந்த தைத்திருநாள் சான்றுகளை சாட்சிகளாக வைத்து தைப்பொங்கல்தான் நமது புத்தாண்டு என்று சொல்லி கட்டுரையினை முடித்திருப்பார். அது வாசகர் கருத்துப்பகுதியில் முக்கிய எழுத்தாக பிரசுரமாகும், நல்ல தலைப்புடன். இதை ஒவ்வொரு வருடமும் விடாமல் எழுதிக்கொண்டே இருப்பார். NST’யும் பிரசுரித்துக்கொண்டே இருக்கும். இந்த வருடத்தில் இருந்து அது வராது.
நான் பெரிய படிப்பு படித்தவன், எனக்கு எல்லாம் தெரியும் என்று ஒருநாளும் காட்டிக்கொண்டு பேசியதே இல்லை. அலோபதி மருந்து மாத்திரைகளைப் பற்றி கறாரான கருத்துகள் வைத்திருந்தாலும், நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம், தொடுசிகிச்சை போன்றவற்றைப்பற்றி கருத்து சொல்ல மாட்டார். இருக்கலாம்…!! என்று மௌனமாக நழுவிவிடுவார். படித்தவர் பண்பு அதுதானே.
நவம்பரில் தீபாவளி வரும், டிசம்பர் 20 ஆம் தேதி அவரின் பிறந்தநாள். டிசம்பர் 25 கிருஸ்த்துமஸ். பிறகு புத்தாண்டு போகி பொங்கல் என ஆண்டு இறுதியிலும் புத்தாண்டு பிறப்பிலும் பலவிதமான வாழ்த்துப்பரிமாற்றங்கள் வழி மீண்டும் உறவை புத்தாண்டு தொடக்கத்தில் புத்திப்பித்து நட்பிற்கு உயிர் கொடுப்போம்.
கடந்த தீபாவளிக்கு அவரின் தீபாவளிவாழ்த்து அழைப்பு வரவில்லை. வட்சாப் கூட அனுப்பிவைக்கவில்லை. தீபாவளி முடிந்த பத்தே நாட்களில் 16/11/2018யில் இறப்புச்செய்தி வந்தது. எல்லோருக்கும் வருவதுதானே என்று நினைத்தாலும் சிலரின் மறைவு ஈடுகட்டமுடியாத இழப்பு. நான் ஒரு நூலகத்தை, பொக்கிஷத்தை, வழிக்காட்டி அகராதியை இழந்து வாடுகிறேன். இனி இவர்போல் நட்பு எனக்கு வாய்க்காது. அதற்கு அவசியமும் இருக்காது. படித்தவற்றை பாராபட்சமில்லாமல் பகிர்கிற தன்மை எல்லோருக்கும் வந்துவிடாது. நமக்கு என்ன தேவையோ, எதையொட்டிய விவரத்தில் சந்தேகமோ, அதை யாரிமாவது கேட்டு, எங்கேயாவது வாசித்து நேரமெடுத்து நம்மிடம் பகிர்வார். அப்பேர்பட்ட பண்பு கொண்ட நல்ல நண்பர் டாக்டர் ஜி.ஜான்சன் எனக்கு 18 ஆண்டு கால நட்பாய் இருந்தது நான் செய்த பாக்கியம்.
இந்த நட்பு ஒரு வரம். அதன் அத்தியாயம் முடிந்துவிட்டது.
வெள்ளைமனம் கொண்ட வளர்ந்த குழந்தை டாக்டர் ஜி.ஜான்சன்…

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2018

நிலநடுக்கம் Lombok'கில்

நாம் எவ்வளவு மனபலம் உள்ளவர்களாக இருந்திருந்தாலும், எதிர்ப்பாராமல் ஏற்படுகிற சில சம்பவங்களில் அல்லது சில சூழ்நிலைகளில் சிக்குகிறபோது நாம் நம்மை உற்று ஆராய்ந்தால் நம் பலகீனம் நம்மைப் பார்த்து எள்ளி நகையாடும். இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வை நான் இங்கே உங்களிடம் பகிர்கிறேன்.
மிக அண்மையில் நானும் எனது ஐந்து தோழிகளும் இந்தோனீசியாவில் உள்ள லொம்போக் (Lombok) என்கிற அழகிய தீவிற்கு சுற்றுலா சென்று வந்தோம். நிஜமாலுமே அழகிய தீவுதான் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மலையில் ஏறி நுரைகக்கிய அழகிய கடல் சூழலைக் காண்கிற கண்கொள்ளாக் காட்சியினை நிச்சயமாக அனைவரும் கண்டுகளிக்கவேண்டிய ஒன்று.
நாங்கள் 26/7/2018ஆம் தேதி காலையில் புறப்பட்டோம். மூன்று மணிநேரத்தில் இந்தோனீசியா லொம்பொக் விமானநிலையை அடைந்தோம். அப்பொழுதே தொடங்கிற்று எங்களின் பயணம்.
இங்கிருந்தே ஆன்லைனில் மற்றொரு தோழியின் மூலமாக ஒரு வாகன ஓட்டுனரை தொலைபேசியில் தொடர்புகொண்டு சுற்றுலா பேரம் பேசிக்கொண்டு எங்களின் பயண ஏற்படுகளை செய்துகொண்டமையால், நாங்கள் விமானம் விட்டு இறங்குகிறபோதே அவன் அங்கே எங்களுக்காக காத்திருந்தான்.
டூர் பெக்கெஜ் என்று எந்த நிபந்தனையும் இல்லை. பிரபல சுற்றுலா தளங்களை ஆன்லைனின் மூலமாக குறித்துவைத்துக்கொண்டு அதை அவனிடம் காண்பிக்கின்றபொழுது, பயணத்தை எங்கிருந்து தொடங்கினால், செல்லுகிற வழியில் இருக்கிற சில இடங்களை ஒன்றின் பின் ஒன்றாக பார்த்துமுடித்து விட்டு மாலைவேளையில் தங்கும்விடுதிற்குச் சென்று விடலாம் என்கிற பட்டியலை அவன் எங்களிடம் கொடுத்தான். அப்படியே எங்களின் பயணம் தொடங்கிற்று.
முதல் பயணமாக சாசாக் என்கிற கிராமத்திற்குச் சென்று அங்கே அவர்களின் வாழ்க்கைச்சூழலை கண்டுகளித்தோம். தமிழர்களைப்போலவே வீட்டின் உள்ளே நுழைகிறபோது தலைகுணிந்து நுழையவேண்டும். கதவைத்திறந்து சட்டென்று உள்ளே நுழையக்கூடாது. ஒரு வாசகத்தைச் சொல்லி (அவன் சொல்லிக்கொடுத்தான், நான் மறந்துவிட்டேன்.) அவர்களை அழைக்கவேண்டும், அவர்கள் திறந்தால் மட்டுமே நுழையவேண்டும் இல்லையேல் அப்படியே ’கொஸ்தான்’ தான்.
கீராமிய வீட்டு வாசலில் சாணியை மொழுகிவைத்திருக்கிறார்கள். சாணிதான் எரிபொருள். அங்கே சாசாக் மக்கள்தான் 90%. அவர்கள் அவர்களின் மொழியைக் காக்கவில்லை ஆனாலும் கலாச்சாரத்தைக் காக்கின்றார்கள். அவர்களின் தாய் மொழியை ஆங்கில எழுத்துகளைக்கொண்டு ரொமனைஸ் செய்து வைத்துக்கொண்டுதான் வாசிக்கின்றார்கள். அந்தமொழிக்கு பள்ளி இல்லை. பழங்காலத்து மக்கள் சிலருக்கு வாசிக்கத்தெரிகிறது இக்காலத்து மக்கள் அந்தமொழியினைப்பேசுகிறார்கள் ஆனால் எழுத படிக்கத்தெரியவில்லை. இருப்பினும் எனது பெயரை (விஜயா) அந்த சாசாக் மொழியில் எழுதச்சொல்லி எழுதி வாங்கிக்கொண்டேன். அசப்பில் தமிழ் போலவே இருக்கிறது சாசாக் மொழி எழுத்துச் சுழிவுகள்.
மறுநாள் 27/7/2018, இரவில் சந்திரகிரணம் தொடங்கவிருப்பதால், அங்குள்ள இந்துக்கோவில் ஒன்றில் சிறப்புப்பூஜை இருப்பதாகக்கேள்விப்பட்டு அங்கு சென்றோம். பூஜையில் கலந்துகொண்டு சூரியன் கடலில் மூழ்கி மறைகின்ற கண்கொள்ளாக் காட்சியினைக் கண்டு ரசிப்பதற்கும் அக்கோவில் சிறந்த இடமாக இருந்தது. கோவிலுக்குள் நுழைகிறபோது, எங்களோடு வந்திருந்த பக்தியிலும் ஆன்மிகத்திலும் ஓரளவு அறிவுகொண்ட தோழி அதில் நுழைய மறுத்துவிட்டாள். என்ன காரணம் என்பதைப் பற்றி நாங்கள் ஆராயவில்லை. அது அவளின் விருப்பம். நெற்றியில் அரிசிபொட்டு வங்கிக்கொண்டு இரவானதால் ஹோட்டலுக்குச் சென்று உணவருந்திவிட்டு தங்கும்விடுதிற்குச் சென்றுவிட்டோம்.
அங்கே பாட்டு கூத்து கச்சேரி மது மாமிசம் என மிக உல்லாசமாக இருந்தோம்.
28/7/2018 சந்திரகிரணம். காலை உணவிற்குப்பிறகு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து அரைமணிநேர பயணத்தில் மற்றொரு தீவிற்குச் (Gili Trawangan) செல்லவேண்டும். அங்கு செல்வதற்கு எந்த ஏற்பாடுகளையும் எங்களோடு வந்திருந்த வாகனஓட்டி செய்யவில்லை காரணம் நாங்களே சொந்தமாக பெர்ரி டிக்கட்’களை வாங்கிக்கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்திருந்தபடியால், அவன் வாகனத்தை படகு துறைமுகம் வரை செலுத்திவிட்டு எங்களையும் இறக்கிவிட்டான். கிரணம் பிடிக்க உள்ளது அதனால் அந்த தீவிற்கு மட்டும் சென்றுவிட்டு ஓய்வு எடுங்கள் வேறு எந்த தீவிற்கும் செல்லவேண்டாம் என்று எச்சரித்து அனுப்பினான். Gili trawangan சென்றால் Gili air மற்றும் Gili Meno கண்டிப்பாகச் செல்வார்கள். காரணம் Lombok தீவின் மொத்த அழகும் அந்த இரண்டு தீவுகளில்தான் அதிகமாக உள்ளதாக வெப்சைட்டில் வாசித்திருந்தோம்.
கடலுக்குள் சென்று மீன்களின் விளையாட்டுகளைக் கண்டுகளிப்பதோடல்லாமல் கண்ணாடிபோன்ற கடல் நீரின் வழியாக உள்ளே அடி ஆழத்தில் இருக்கின்ற கடலின் அழகையும் ரசிப்பதற்கு அந்த தீவுகள் மிகவும் பிரசித்தி.
அவனின் பேச்சுக்கு செவிசாய்ப்பதைப்போல் தலையை ஆட்டிவிட்டு, ஸ்பீட்போர்ட் trawangan தீவை அடைந்தவுடன், மதிய நேரமானதால், நேராக மற்ற இரண்டு தீவுகளையும் சென்று காண்பதற்கு பெர்ரி டிக்களை அந்த துறைமுகத்து முகப்பிலேயே வங்கிக்கொண்டோம். ஹோட்டலில் செக்இன் செய்து விட்டு, பெர்ரி நிறுத்துமிடத்திற்கு வந்தோம்.
கிட்டத்தட்ட முப்பதிரண்டு பயணிகளை ஏற்றிக்கொண்ட பெர்ரி மெதுவாக அடுத்தடுத்த தீவுகளை நேக்கிப்ப்பயணித்தது. அந்த பெர்ரியில் அனைவரும் ஐரோப்பியர்கள் நாங்கள் மட்டுமே மலேசிய இந்தியர்கள். பெர்ரி நாற்பத்தைந்து நிமிடங்கள் கடல் நீரைக்க்கிழித்து நகர்ந்துகொண்டிருந்தது. அதிகவேகமில்லாமலும், மிகமெதுவாகச் செல்லாமலும் நடுநிலையாக நகர்ந்தது. எங்களின் பார்வையில் கடல் கொந்தளித்துக்கொண்டிருப்பதைப் போல் தோற்றமளித்தது. அடுப்பில் வைக்கப்பட்ட நீர் எப்படி கொத்திக்குமோ அப்படி.!
நடுகடலில் நாங்கள்; அப்போது எங்களின் பெர்ரியின் மீது மிகவேகமாக ஒரு அலை வந்து மோதியது. பெர்ரி அதிவேகமாக வலது இடது புறமாக ஆடி குழுங்கிவிட்டு மீண்டும் நகர்ந்தது. நாங்கள் பதறிப்போனோம். உள்ளே இருந்த அனைவரும் அலறினார்கள். நாங்கள் கூடுதலாக அம்மா அப்பா என்று கத்தினோம். அதன் பிறகு பெர்ரி பல இடங்களில் கவிழ்கிற நிலையிலேயே நகர்ந்து கொண்டிருந்தது. எங்களுக்கு நடுக்கம். ஐரோப்பியர்களைப் பார்த்தோம். நிதானமாகவே இருந்தார்கள். பெர்ரியை செலுத்துகிறவர்கள் அங்கும் இங்கும் நகர்ந்து சில முன் ஏற்பாடுகளை செய்துகொண்டிருப்பதை மற்றவர்கள் கவனிக்கவில்லை ஆனால் நான் அவர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தேன். எதோ ஒரு அவசர நடவடிக்கைக்கு அவர்கள் தயாராகிக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. இருந்தபோதிலும் அதை அவரகள் பயணிகளுக்குத் தெரிவுபடுத்தாமலேயே செய்துகொண்டிருந்தார்கள்.
பெர்ரி ஓர் இடத்தில் நின்றது அனைவரும் நீச்சல் குளத்தில் குதிப்பதைப்போல் படாரென்று கடலில் குதித்தார்கள். நாங்கள் ஆறுபேர்மட்டும் பரிதாபமாக பெர்ரியிலேயே அமர்ந்திருந்தோம்.
வயிற்றில் ஒருவித இரசாயண கலவை சுரந்துகொண்டிருந்தது. பயம் கவ்வியது. சற்றுமுன் படகு ஏன் இப்படி ஆடியது.! அலை எப்போதும் இப்படித்தான் வருமா.? நமக்குவேறு நீச்ச்சல் தெரியாதே.! நாம் ஏன் இங்குவந்தோம்.! இப்படி படகிலேயே உற்கார்ந்திருப்பதற்காகவா.! கரைக்கு படகு செல்லுமா செல்லாதா.? மீண்டும் அந்தப்பக்கம் செல்லவேண்டுமே, மறுபடியும் அலை வேகமாக வருமா.! மலேசியா சேர்வோமா.! கிரணம் அன்று கடல் மற்றும் மலை பகுதிகளுக்குச் செல்லக்கூடாது என்பது நமக்குத் தெரிந்ததுதானே. பின் ஏன் வந்தோம்.! முன்னமே வாகன ஓட்டி எச்சரித்தானே, கேட்டோமா.! உன்னால்தான்… உன்னால்தான்… உன்னால்தான்…. என மாறி மாறி ஒருமேல் ஒருவர் பழிபோட்டுக்கொண்டும் திட்டிக்கொண்டும் கலவரமாக இருந்தோம்.
ஒரே இடத்தில் அரை மணி நேரமாக அலையில் மோதியபடி படகு ஆடிக்கொண்டிருப்பதால் எங்களுக்கு தலை சுற்றல் ஏற்பட்டது, குறிப்பாக எனக்கு வாந்திமயக்கமாக இருந்தது . கரைக்குச்செல்லாமல் இப்படியே நான்கு இடங்களில் பெர்ரியை நிறுத்தி நீரினில் மூழ்கி snookerling செய்து மகிழ்ந்தார்கள் ஆங்கிலேயர்கள். நீச்சல் தெரியாதவர்கள் இறங்கவேண்டாம் காரணம் கடல் இங்கு மிக ஆழமானது என்று எச்சரித்தபடியால், இந்திய பெண்கள் நாங்கள் பரிதாபமாக விழிகள் பிதுங்க படகிலேயே அமர்ந்திருந்தோம் நீச்சல் ஆடையுடன்.
மாலை நேரத்தில் சுமார் மூன்று மணிக்கு மீண்டும் இந்தப்பக்கம் திரும்புவதற்கு பெர்ரி தயாரானது. அம்மா, தாயே காளியாத்தா, மாரியாத்தா, மேரிமாதா, ஏசப்பா சிவபெருமானே முருகா அல்லா என்று பல ஆண்பெண் தெய்வங்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டோம்.
மாலைவேளையில் கடலின் நீர்மட்ட நிலை மிக அதிகமாக இருப்பதை அனைவரும் உணர்ந்துகொண்டோம். கொந்தளிப்பு இன்னும் கூடுதலாகவும் படகின் அசைவு அபாயகர நிலையிலும் இருந்தது. பலமுறை அபாயகரமாக அசைந்து அசைந்து திசை திரும்பிய பெர்ரியை கட்டுக்குள் கொண்டுவர படகு செலுத்துநர்கள் போராடினார்கள். இம்முறை ஆங்கிலேய பெண்மணிகள் சிலரும் எங்களோடு சேர்ந்து அலறினார்கள்.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று மாலை நான்கு மணிக்கு பெர்ரி துறைமுகம் வந்து சேர்ந்தது, படகு செலுத்துநர்கள் எங்களை மிகவிரைவாக படகைவிட்டு வெளியேறும்படி அவசரப்படுத்தினார்கள். வரிசையாக நால்வர் கரைவரை நின்றுகொண்டு, ஒருவர் பின் ஒருவராக பயணிகளின் கைகளைப் பிடித்து இழுத்து வேகவேகமாக கரைக்குக் கொண்டுவிட்டார்கள். அத்தோடு படகு சவாரிகள் அங்கு மூடப்பட்டு விட்டதாக கரையில் குதிரைசவாரியின் போது குதிரை ஓட்டுனர் தெரிவுபடுத்தினார். 28/7/2018 இரவு அங்கேயே தங்கினோம்.
கிரணத்தின் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க உணவு நீர் படுக்கை என எல்லா இடங்களிலேயும் இங்கிருந்து கொண்டுசென்ற தர்ப்பைப்புல்லை போட்டுக்கொண்டோம். தர்ப்பை கிரண பாதிப்புகளுக்கு நிவாரணம் என தோழி ஒருவள் முன்னெச்சரிகையாக கொண்டுவந்திருந்தாள்
29/7/2018 காலை உணவை முடித்துக்கொண்டு உடனே gili trawangan’ஐ விட்டு வெளியேறினோம். கரைக்குச் சென்றவுடன் எங்களின் வாகன ஓட்டுனரிடம் மூன்று தீவுகளுக்குச் செல்லுகையில் ஏற்பட்ட கசப்பான கடல் அனுபவங்களைப் பகிர்ந்தோம். அமைதியாகக் கேட்டுவிட்டு, நல்லவேளை ஒன்றும் நடக்கவில்லை காரணம் நீங்கள் டூர்பேக்கெஜ் எங்களின் கம்பனியில் எடுக்கவில்லை, ஏதேனும் ஆகியிருந்தால் நாங்கள் பொறுப்பை ஏற்கமுடியாது, உங்களுக்கு இங்கே இன்சுரன்ஸ் கூட இல்லை. கவனம் என்றார்.(அவருக்கு அவர் பிரச்சனை.) அதான் ஒன்னும் ஆகவில்லையே, என்று தெனாவெட்டாக வாகனத்தில் ஏறினோம். நேராக நீர்வீழ்ச்சிக்குச் சென்றோம்.
Rinjani மலையின் அடிவாரத்தில் senaru waterfall உள்ளது. நீர்வீழ்ச்சி இருப்பது மலையின் அடிவாரம் என்கிறார்கள் இருப்பினும் வாகனம் மலையில் மேல் வெகுதூரம் அசைந்து அசைந்து ஏறியது. லொம்போக் இன்னும் வளர்ச்சி காணாத சிறிய தீவாக இருப்பதால், சாலைகளின் நிலை, வாகனம் குதிரை வண்டிபோல் குதித்து குதித்துச் சென்றது. ஒரே பாதையில்தான் செல்வதும் திரும்புவதும். முன்னே எதேனும் வாகனம் வரநேர்ந்தால், எதிரே வரும் வாகனம் நின்று வழிவிட்டுத்தான் செல்லவேண்டும்.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் எடுத்தது நீர்வீழ்ச்சி நுழைவாயிலை அடைய. வாகனம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து நின்றுகொண்டு கீழே பார்க்கின்றபோதுதான் தெரிந்தது நாம் வந்திருக்கிற இடம் எவ்வளவு உயரத்தில் இருக்கின்றது என்பதை. அங்கு நாம் பார்க்கின்ற காட்சியானது கண்களுக்கு விருந்து. வரிசையாக சிறிய சிறிய கோடுகளாக நட்டுவைக்கப்பட்டிருக்கின்ற பயிர் மற்றும் காய்கறி நெல் நிலங்கள் கொள்ளை அழகு. குளுகுளு காற்றை சுவாசித்துக்கொண்டு மிக தூய்மையாக தோற்றமளித்த அந்த சூழல் மனதிற்கு இதமளித்தது. நீர்வீழ்ச்சியின் சத்தம் காதுகளில் கேட்டுக்கொண்டிருப்பினும் உள்ளே காட்டுவழி பாதையில் நீர்வீழ்ச்சியை அடைய கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டும். அதன் அழகை மனதில் அசைபோட்டுக்கொண்டே, அங்குள்ள பழங்குடி இளைஞன் ஒருவனிடம் பணம் செலுத்தி எங்களை காட்டுவழி வழிநடத்த அழைத்துக்கொண்டு கிளம்பினோம். (வாகன ஓட்டுனர் வரமுடியாது என்று சொல்லிவிட்டார்.)
சரிசெய்யப்படாத ஒத்தையடி பாதை. வலது புறம் பாறைகளோடு வளர்ந்த மரங்கள் செடிகொடிகள். இடதுபுறம் படுபயங்கர பாதாளம். தவறுதலாக காலை எங்கேனும் வைக்கநேர்ந்தால் மரணம்தான். உடனே காப்பாற்ற வருவதற்கு யாருமே இல்லாத இருளும் அமைதியும் கூடிய இடம் அது. குரங்குகள் வேறு அங்கும் இங்கும் தாவி நம் கைகளில் உள்ள பைகளைப் பிடுங்குவதற்கு அலைமோதுகிறது. அவைகளுக்கு பயந்து அசையமுடியாத நிலையில் உடலை விரைத்துக்கொண்டு நீர்வீழ்ச்சி நோக்கி நடைபயணம் செய்தோம்.
நீர்வீழ்ச்சியின் அழகையும் அங்கு உடலில் ஏற்பட்ட புத்துணர்ச்சியையும் தெளிவான தூய்மையான குளிர் நீரின் சுவையையும் உணர்ந்தாலேயொழிய வர்ணனை எழுத்துக்களால் எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
உள்ளே சென்றவுடன் வெளியே வருவதற்கு மனமில்லை. குளித்தோம் நீரில் படுத்தோம், பாறைகளில் அமர்ந்து தியானம் செய்தோம். மூழ்கினோம் விளையாடினோம். பசி எடுக்க ஆரம்பித்தவுடன், வெளியே வந்து உணவருந்திவிட்டு மீண்டும் உள்ளே சென்று குளியலைத் தொடரலாம் என்கிற திட்டம் வேறு போட்டிருந்தோம். அது பாழாய்போனது காரணம் நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு மேலே ஏறுகையில் எங்களின் தோழி ஒருவள் பாறையில் தடுக்கிவிழுத்து முட்டியில் அடிபட்டுவிட்டது. கொஞ்சநேரம், நடக்க சிரமப்பட்டாள். அத்தோடு அத்திட்டத்தை கைவிட்டு, காட்டில் இருந்து வெளியே வந்து, உணவருந்தி ஓய்வெடுத்து மாலை நான்கு மணிவாக்கில் Rinjani மலைக்கு பிரியாவிடை கொடுத்தோம். ஆபத்துகளோடு கூடிய அழகிய இடம் அது.
இரவானது ஹோட்டல் வந்து சேர. அன்றைய ஹோட்டல் கொஞ்சம் வித்தியாசமான ஹோட்டல். தோழியின் முதலாளி மூலமாக அந்த ஹோட்டல் எங்களுக்கு அறிமுகம் ஆனது. பாழடைந்த பேய் பங்களா போல் இருந்தது. Senggigi beach’யின் அழகை அந்த பங்களாவில் இருந்து முழுமையாக தெளிவாக ரசிக்கும் மிக உயரமான மலையில் கட்டப்பட்டிருந்த அந்த பங்களாவை இரண்டு நாள் எடுத்துக்கொண்டோம். அங்கு வேறு வீடுகள் இல்லை. இந்த ஒரே ஒரு பங்களாதான் ஆக உச்சியில். மூன்று அறைகள் நீச்சல் குளம், ஓய்வு நாற்காலிகள், ஜஃக்குஸ்ஸி, காற்றுவாங்க இடம் என எல்லா வசதிகளையும் கொண்ட ஒரு ஆங்கிலேயரின் அழகிய அற்புத வீடு அது. அன்பே வா படத்தில் எம்.ஜி.ஆர் இல்லாத சமயத்தில் நாகேஷ் வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பாரே அதுபோல் என்று நினைக்கிறேன். காரணம் வாகனம் எங்களை இறங்கிவிட்டுச்செல்லுகையில் உள்ளிருந்து ஒரு வயோதிகர் வந்து, பங்களா வீட்டின் வாடகை கட்டணத்தை வாங்கிக்கொண்டார். பிறகு புல் வெட்டுதல், பெருக்குதல், பொருட்களை அடுக்குதல் என அவர் வேலைகளை அவர் பார்த்துக்கொண்டார். வீட்டின் காவல்காரரும் அவர்தான். காற்று சற்று பலமாக வீசினால் கீழே விழுந்துவிடுவது போல் மெலிந்து லேசாக உடல் கூன் வளைந்து இருந்தது அவருக்கு. யாரிடமும் பேசவில்லை. நாங்களே எங்களின் பெட்டிகளை சாமான்களை எடுத்து அறையில் வைத்துக்கொண்டோம்.
இரவு உணவிற்கு வரும் வழியிலேயே பழங்கள், அங்குள்ள கப்மெஃகீ என வாங்கிவந்துவிட்டோம். அந்த மக்களின் உணவுப்பழக்கம் எங்களுக்கு அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. மீன் கோழிகளை எந்த ஒரு மசாலா பொடியையும் சேர்க்காமல் அப்படியே வாட்டி, சுட்டு, அவித்து வைத்துக்கொண்டு இடித்தமிளகாய் சாந்துடன் ஊறுகாய்போல் தொட்டுத்தொட்டு சாப்பிடுகிறார்கள். எங்கள் குழுவில் பலருக்கு அந்த உணவின் கவிச்சி வாடையினை ஜீரணிக்கமுடியவில்லை. அதனால் அன்றிரவு மெஃகீ வாங்கிவந்து சாப்பிட்டோம்.
இரவு அதிக நேரம் அரட்டை அடித்தோம். பாடல்களைப்போட்டு டான்ஸ் ஆடினோம். karaoke பாட்டு பாடினோம். சிரிப்புக்குப் பஞ்சமில்லை. மிகமகிழ்வாக கழிந்தது.
அதிகாலை ஐந்து அல்லது ஆறு மணி இருக்கும், நானும் எனது தோழியும் உறங்கிக்கொண்டிருக்கின்ற வேளையில், நாங்கள் படுத்திருக்கின்ற கட்டிலை இருவர் சேர்ந்து தூக்கி வலது இடது புறமாக ஊஞ்சல் போன்று வேகமாக அசைக்கின்ற உணர்வு வந்தது. நான் விடுக்கென்று எழுந்துவிட்டேன். தோழியின் பாதி உடல் கட்டிலிலும் பாதி உடல் தரையிலும் கிடந்தது. கிட்டத்தட்ட கீழே விழுந்த நிலையில் அவள் கிடந்தாள். அவளை படாரென்று ஒரு அடி கொடுத்து, கழிப்பறை சென்று வந்தால், இப்படித்தான் எருமை மாடு போல் கட்டிலில் விழுவாய்.! நாயே, பேயே என்று திட்டிவிட்டு, தூக்கம் கலைந்துவிட்ட கடுப்பில் மீண்டும் கட்டிலில் சாய்ந்தேன். ’ம்ம்..நான் என்ன செஞ்சேன், என்னிய ஏன் இப்படி ஏசறீங்க, நான் டாய்லெட்டுக்கே போகல, எப்படி இப்படி கீழே பாதி மேலே பாதி கிடக்குறேன்னு எனக்கே தெரியல,’ என்று முணகிய படி அவளும் மேலே ஏறி சரியாக படுத்துக்கொண்டாள்.
பொழுது நன்கு புலர்ந்தது, சூரியனை தரிசிக்க நீச்சல் குளத்தின் அருகில் அமர்ந்துகொண்டு கடல் அலையின் அழகினை ரசித்துக்கொண்டிருக்கையில், லேசாக மயக்கம் வருவதைப்போன்ற ஒரு அசைவினை உணர்ந்தேன். இருப்பினும் சுதாகரித்துக்கொண்டு, சூடான காப்பியினை ரசித்துக்கொண்டே கடலின் அழகில் மூழ்கினேன்.
தோழிகள் ஒருவர் பின் ஒருவராக எழுத்து காலைக்கடன்களை முடித்துவிட்டு அறையிலிருந்து வெளியே வருகையில், அனைவரின் பேச்சிலும் அதிகாலையில் கட்டில் ஆடியது குறித்ததாகவே இருந்தது. எல்லோருக்கும் என்ன நடக்கிறது என்ன நடந்தது என்பதனை சரியாக யூகிக்கமுடியவில்லை. வாசலை பெருக்கிக்கொண்டிருந்த முதியவரை அணுகி, நடந்ததைக் கூறினோம், அவர், ஆமாம், நேற்று நிலநடக்கம் வந்தது, அது இன்னமும் தொடர்கிறது என்று சொல்லி எந்த ஒரு சலனமும் இல்லாமல் இடத்தைக் காலி செய்தார்.
ஆ.. நில நடுக்கமா.! ஐய்யோ நில நடுக்கமா.! என்னது நில நடுக்கமா.! என எல்லோரும் ஒன்றுசேர எங்களின் பீதிகளை வெளிப்படுத்தினோம்.
எங்களுக்காக வைக்கப்பட்டிருந்த காலை உணவைக்கூட சுவைக்கமுடியாத குழப்பத்தில் இருந்தோம்.
எங்களின் வாகனம் வந்தது, அன்றைய நாள் 29/7/2018 இறுதிநாள் எங்களின் பிரயாணம், மறுநாள் 30/7/2018 மலேசியா கிளம்ப ஆயத்தமாகிவிடுவோம். அதனால் மேலும் சில இடங்களைச் சுற்றிபார்த்துவிட்டு அங்கு விற்கப்படும் சில பொருட்களை ஞாபகச்சின்னமாக வாங்கிக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் பயணம் தொடர்ந்தது.
வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன் முதல் வேளையாக, நிலநடுக்கமா இங்கே.! என்று கேட்டோம். ஆமாம், முதல்முறையாக மிகமோசமான நிலநடுக்கம் வந்ததுள்ளது. நீங்கள் இரண்டு நாட்களுக்கு முன் trawangan தீவிற்குச் சென்றீர்களே, அங்கே mini tsunami ஏற்பட்டது, இந்த ஊர்காரர் ஒருவர் மரணம். பிறகு, நீர்வீழ்ச்சிக்குச் சென்று திரும்பிய அதே நேரத்தில் அங்கு நிலநடுக்கம் வந்து, நீங்கள் நடந்து சென்ற பாதை இடிந்து விழுந்துள்ளது, எத்தனைபேர் மாட்டிக்கொண்டார்கள், யார் மரணம் என்கிற விவரமெல்லாம் சரியாகக் கிடைக்கவில்லை. செய்தித்தாள் பார்த்தால்தான் தெரியும், என்று சொல்லி மழுப்பிவிட்டார்.
பிறகு நாங்கள் செல்கிற இடமெல்லாம் ஆள்நடமாட்டம் அதிகமில்லாமல் பயணிகள் இல்லாமல் அமைதியாகவே இருந்தது. கடலுக்குப் பூட்டுபோட்டு வைத்துவிட்டார்கள். கப்பல்கள், படகுகள், பெர்ரி என துறைமுகத்தில் அதிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கடலில் யாரும் பயணிக்கவில்லை. மீன்பிடி வேலைகள் நடைபெறவில்லை. அலைகள், பாறைகளையும் கரையையும் பேரிரைச்சலாக மோதிக்கொண்டிருந்தது.
நாங்கள் மேலும் சில இடங்களை, பழங்குடிவாசிகளின் வாழ்க்கைமுறை, அவர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி, அவர்களின் பள்ளிக்கூடம், ஷாப்பிங், கடற்க்கரைக்காற்று மீண்டும் கோவில் என சுற்றிவிட்டு, மாலை வீடு திரும்புகையில், நெட் கிடைத்தது. கிடைத்த மறுநொடி எங்களின் கைப்பேசியில் வட்சாப் மற்றும் குறுஞ்செய்திகள் குவியத்துவங்கிற்று. அம்மா எங்கே,? எங்கே இருக்கின்றாய்.? உங்களுக்கு ஒன்னும் ஆகலையே, இங்கே செய்திகள் தெறிக்கின்றன, என்ன ஆச்சு.? நீங்கள் சென்ற இடத்தில்தான் நில நடுக்கமும் மினிசுனாமியும் வந்ததாக சொல்லப்படுகிறதே, நிலைமை எப்படி இருக்கு அங்கே.? எங்கேயும் போகவேண்டாம், உடனே ஊர் திரும்புங்கள்.! முடிந்தால் இன்றே கிளம்புங்கள். கிட்டத்தட்ட 500 வெளியூர்பயணிகள் Rinjani மலையில் மாட்டிக்கொண்டதாக தகவல் வருகிறது. உண்மையா.? இப்போ நீங்களெல்லாம் எங்கே இருக்கின்றீர்கள்.? இதுவரை 66முறை நேற்றும் இன்றும் நிலநடுங்கள் ஏற்பட்டிருந்தனவாம்.! கவனம் கவனம். வீடு திரும்புங்கள், போன்ற செய்திகள் கேள்விகள் அடங்கிய குறுந்தகவல்கள் நூற்றுக்கும் மேலாக வந்து குவிந்திருந்தன. எங்களுக்கு அப்போதுதான் அதன் பேராபத்தை சரியாக உணரமுடிந்தது. இவ்வளவு நடந்துள்ளது, ஆனால் இங்கே உள்ள நமக்கு எதுவும் தெரியாமலேயே நாம் சுற்றுலா என்கிற பெயரில் சுற்றிக்கொண்டிருக்கின்றோமே, என்று பதற ஆரம்பித்தோம்.
பெரிய ஹோட்டலில் தங்கியிருந்தால் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்திருக்கும், நாம் யாரிடமாவது பேசி தகவல் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இதுவோ ஒரு பங்களா, அங்குள்ள முதியவர் யாரிடமும் பேச்சுகொடுப்பவராகத் தெரியவில்லை. எங்களின் வாகனமோட்டியோ, உண்மை நிலவரத்தை மறைந்தே கூறிவருகிறான்.
வெப்சைட் சென்று என்ன நடக்கிறது என்று அனைவரும் ஒன்றுசேர செய்திகளை வாசித்தோம், நிலவரங்களை பதிவுசெய்திருந்த youtube காட்சிகளைப் பார்த்து திடுக்கிட்டோம், காரணம் நேற்று நாங்கள் சென்ற நீர்வீழ்ச்சிப் பாதைகள் இடிந்து விழுந்திருந்தது, அங்கே ஹெலிக்கப்டர் மூலம் மக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் உதவி செய்துகொண்டிருப்பதைக் கண்டோம்.. மலேசியர் ஒருவர் பலி என்கிற செய்தியையும் வாசித்தோம். எல்லோர் முகத்திலும் கலவரம் தெரிந்தது. அதே வேளையில் எதோ ஒரு சக்தி நம்மை எல்லா ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்றிக்கொண்டே வந்திருக்கிறது என்கிற ஆறுதலும் இதமளித்தது.
இரவு உணவிற்கு முன் அனைவரும் வட்டமாக அமர்ந்து, பிரார்த்தனை செய்தோம். அமைதியாக இருந்தோம். இன்னும் ஒரு பொழுது, ஊருக்கு ஓடிவிடலாம் என்கிற சிந்தனை வார்த்தை வடிவமாக எல்லோர் வாயிலிருந்தும் வந்துகொண்டே இருந்தது
இரவு தூக்கம் வரவில்லை. கட்டிலில் கண்விழித்துக்கிடந்தோம். என் அருகில் படுத்திருந்த தோழி அதிகம் புலம்பியவளாக இருப்பினும் விரைவாகவே கண்யர்ந்தாள்.
நானும் எப்படித்தூங்கினேன் என்று தெரியவில்லை.
தீடீரென்று ஒரு அலறல் சத்தம், அருகில் தூங்கிக்கொண்டிருந்த தோழி, சாமி வந்ததைப்போல் ஸ்ஸ்ஸ்ஸ் ஷூஷூஷூ….. ஆ..ஆ..ஆ..ஆஆஆஆஆ ஐயோ… ஐயோ… என்று அலறினாள். தடாரென்று எழுந்து, ஏய் என்னாச்சு.? என்று கேட்டேன். சத்தம் அடங்கவில்லை. அவளின் பெயரைச்சொல்லி அழைத்தேன். அமைதியாக இருந்தாள். பக்கத்து அறையில் இருந்த தோழிகளும் ஓடிவந்து, என்ன சத்தம்., யாரு சத்தம் போட்டா.? என்று கேட்டுக்கொண்டே கதவைத்தட்டினார்கள். மணி அதிகாலை 2.00. சத்தம் போட்ட தோழி தனது போர்வையை இழுத்து நெடுமுக்காடு போட்டுக்கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தாள்.
மீண்டும் பிரார்த்தனை செய்தோம். ஜபம் செய்தாள் மற்றொரு தோழி. கொஞ்ச நேரம் என் அறையில் இருந்தார்கள். பிறகு அவர்களின் அறைக்குச் சென்றுவிட்டர்கள்.
நான் தைரியசாலிதான் இருப்பினும் அன்று மிகவும் பலகீனமானவளாக மாறிப்போயிருந்தேன். நெஞ்சு கனத்தது. இருதயத்தின் படபடப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது. என்னால் அந்த அறையில் தொடர்ந்து தலை சாய்க்கமுடியவில்லை. எந்த லாஜிக்’கும் எனக்கு வேலைசெய்யவில்லை. எந்த விஞ்ஞானமும் மெய்ஞானமும் கைகொடுக்கவில்லை.
அவளைப்பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். மீண்டும் அலற ஆரம்பித்தாள், இந்தமுறை பேசினாள், என் கழுத்தை யாரோ பிடித்து நெருக்குகிறார்கள். ஆ... ஐய்யோ, வலி வலி விடுங்கள் விடுங்கள்… என்று, அதற்கு மேல் நான் நிற்கவில்லை, அங்கிருந்து ஓட்டம் பிடித்து பக்கத்து அறையின் தோழிகளோடு படுத்துக்கொண்டேன்.
விடிந்ததும் முதல்நாள் நடந்த எதுவும் அவளுக்குத் தெரியவே இல்லை நினைவிலும் இல்லை. நாங்களும் அதிகமாக அதைப்பற்றி பேசிக்கொள்ளவும் இல்லை.
பாதுகாப்பாக ஊர் திரும்பினோம்.
இப்போது, ’ரிஸ்க் எடுப்பது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவதைப்போல்’ என்று சொல்லிக்கொண்டு திரிகிறோம் திகிலாக...

புதன், அக்டோபர் 04, 2017

கவனம் கவனம்

முகநூலில் ஒன்பது வருடம் கடந்துவிட்ட எனக்கு நேற்று ஏற்பட்ட சங்கடம் இது…
என் உறவுக்கார தங்கை ஒருவள் முகநூலில் என் நட்பு வட்டத்தில் இருக்கின்றாள். சமீபத்தில் நானும் அவளும் நண்பர்களானோம்.
ஆனால், நேற்று இரவு தீடீரென்று அவளிடமிருந்து மீண்டும் ஒரு நட்பு விண்ணப்பம் வந்திருந்தது. `இவள்தான் நம் நட்பு வட்டத்தில் இருக்கின்றாளே.! ஏன் மீண்டும் அனுப்புகிறாள், என்று யோசித்துக்கொண்டே, அவளின் நட்பு விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டேன். அப்போது நான் இரவு உணவிற்காக வெளியே சென்றிருந்தேன். என் கைப்பேசியின் பேட்டரி வேறு முடியும் தருவாயில் அதன் விளக்கை மங்கச்செய்துகொண்டிருந்தது.
விண்ணப்பம் ஏற்றுக்கொண்ட மறு நொடி, மெசன்ஞர்’இல் வந்து அக்கா ஒரு உதவி, என்றாள். அவள் இதுவரையில் என்னிடம் எந்த ஒரு உதவியும் கேட்டதில்லை. இளவயதில் கணவனை இழந்தவள். அழகானவள். இருந்தபோதிலும் யாருடைய உதவியும் இல்லாமல் தன் சொந்தக்காலில் கம்பீரமாக வாழ்ந்துவருபவள் அவள். அவளிடமிருந்து இப்படி உதவி என்று கேட்டு ஒரு கோரிக்கை வருகின்றபோது அதை என்னால் மறுக்க முடியவில்லை. சரி சொல்லு என்ன உதவி, என்றேன்.
என் கைப்பேசியில் உள்ள எண்கள் எல்லாமும் அழிந்துவிட்டன, என்னிடம் உங்களுடைய கைப்பேசி எண்ணைக்கொடுங்கள் என்றாள். நானும் கொடுத்தேன். இந்த உரையாடலின் போது, பேட்டரி இன்னமும் கரைந்துகொண்டிருந்தது.
என் எண்ணைக்கொடுத்த மறுகணம், அக்கா இப்போது உங்களின் கைப்பேசியில் நான்கு எண்கள் கொண்ட ஒரு `கோட்’ வரும் அதை என்னிடம் பகிருங்கள் என்றாள். அதைச்சொல்கிற போது அவள் அவசரத்தில் உள்ளதுபோல், விரைவாக விரைவாக என்று என்னிடம் மன்றாடினாள். நானும் கொடுத்தேன். எனது பேட்டரி மங்கிக்கொண்டே இருந்தது. மறுமொழி சொல்கிறபோது, எனது பேட்டரி எச்சரிக்கையினை அவளிடம் மெசஞ்சர் வழி சொன்னேன். அதைக்கேட்ட அவள், அக்கா ப்ளீஸ், கொஞ்ச நேரம், எனக்காக, ப்ளீஸ் என்று போராடுவதைப்போல் இருந்தது. முதலில் வந்த நான்கு எண்களைக்கொடுத்தவுடன், மீண்டும் ஒரு நான்கு எண்கள் வந்துள்ளது, அதையும் சொல்லுங்கள் என்றாள், அதையும் கொடுத்தேன். என்னமோ பிரச்சனை போலிருக்கிறது அக்கா, நான் உங்களிடம் பிறகு சொல்கிறேன், இன்னொரு நான்கு எண்கள் வந்துள்ளது அதையும் கொடுங்கள் என்றாள். கொடுத்தேன். இப்படியே நான்கு ஐந்து முறை இருக்கும். கொடுத்துக்கொண்டிருந்தேன். சட்டென்று மனதிற்குள் ஒரு பொறி தட்டியது. மர்ம ஆசாமியிடம் சிக்கியதை உணர்ந்தேன். தம்பியை அழைத்து, அந்த உறவுக்கார தங்கையின் தொலைபேசி எண்களை வாங்கி அவளுக்கு அழைப்பு கொடுத்தேன். (அவளின் புதிய எண்கள் என்னிடம் இல்லை)
ஹாலோ யார் இது.? மறுமுனையில் அவள்தான். நான் தான் விஜயாக்கா, என்றேன். ஏன் திடீர் அழைப்பு.? இப்போதுதான் என் நினைப்பு வந்ததா.? என்றாள். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. முகநூல் மெசஞ்சர் விஷயத்தை அவளிடம் விளக்கினேன். அரண்டுபோனாள். ஏன்க்கா இப்படி இருக்கீங்க.! என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கக்கூடாதா.? என்று உரிமையுடன் திட்டினாள். பேசிக்கொண்டிருக்கின்றபோது பேட்டரி மடிந்துவிட்டது. கைப்பேசி அணைந்துவிட்டது. மண்டையில் நண்டு ஓட, உணவுக்கடையில் உணவைக்கூட சுவைத்து உண்ண முடியாமல், எதோ ஒருவித பயம் மனதைக் கவ்விக்கொண்ட சூழலில், சாப்பிட்டும் சாப்பிடாமலும் வீடு வந்து சேர்ந்தேன்.
வந்தவுடன் முதல் வேலையாக கைப்பேசிக்கு உயிர்கொடுக்க சார்ஜரில் போட்டேன். சிலநிமிடம் கழித்து கைப்பேசி கண்விழித்தது. என்ன தான் நடந்தது என்று எல்லா குறுந்தகவல்களையும் படபடப்புடன் வாசித்தேன். அதில், use PIN code ____ to complete your payment. This key is valid for 30minutes. என்று வந்திருந்தது. DIGI ringtone புதுப்பிக்கின்ற குறுந்தகவல்கள் வருகின்ற எண்ணில் இந்த குறுந்தகவல்களும் வந்திருந்தன.
என்ன payment confirmation ஆக இருக்கும் என்கிற குழப்பத்தில், DIGI செண்டருக்கு அழைத்தேன். தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு அவசர வேலைக்காக அழைத்தால், ஒன்ன அமுத்து, இதுக்காக.. ரெண்ட அமுத்து, அதுக்காக…. மூன அமுத்து, இதுக்காக….. நால அமுத்து அதுக்காக …’ன்னு பொறுமைக்கு சோதனை வரும். பலமுறை முயன்று, ஒருவர் அழைப்பை எடுத்தார். விவரத்தைச்சொன்னேன். அவர்.. ஐய்யோ, உங்களை யார் உங்களின் தனிப்பட்ட விவரங்களைக் கொடுக்கச்சொன்னது, உங்களின் இந்த மாத பில்’இல் இருந்து ரிங்கிட் மலேசியா முன்னூறு சற்றுமுன் தான் அந்த எண்ணிற்கு மற்றப்பட்டுவிட்டது. அதை நாங்கள் திருப்பிக்கொண்டு வர, நீங்கள் கிட்டத்தட்ட ஒருமாதகாலம் காத்திருக்கவேண்டும். இருந்தபோதிலும் பயம் வேண்டாம், அதை நாங்கள் மீட்டுக்கொள்வோம். இப்படிப் பலமோசடிகள் ஆன்லைனில் நடந்துகொண்டு வருகிறது. நீங்கள்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கவலைவேண்டாம்.! வேறு எதாவது கேட்கவேண்டுமா.? என்று அழைப்பைத்துண்டிக்க நினைத்தார். அவரிடம் சிலகேள்விகள் கேட்டேன். எப்படி எங்களின் DIGI பில் பணத்தை பிறர் எடுத்துக்கொள்ள DIGI அனுமதிக்க முடியும்.! அதற்கு நீங்கள் செய்யவிருக்கின்ற பாதுகாப்பு அம்சங்கள் யாவை.? ஏன் இப்படி நடக்கிறது.? DIGI எடுக்கவிருக்கின்ற எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன.?
அவர் சொன்ன பதில், ஆன்லைனில் இப்படி பலவித மோசடிகள் நிகழ்கின்றன, நீங்கள்தான் உங்களின் விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். இனிமேல் யார் எதைக்கேட்டாலும் பகிராதீர்கள். எங்களின் நிறுவனம் இந்தச்சிக்கல்களை கூடிய விரைவில் சரி செய்யும். பொறுமை காக்க, என்று சொல்லி அழைப்பைத்துண்டித்தார்.
எச்சரிக்கை..எச்சரிக்கை. இப்படி என் பெயரில் யாரேனும் உங்களின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்க நேர்ந்தால், தயவு செய்து பகிராதீர்கள். Fraudகள் நிரைந்த உலகமைய்யா இது.
எல்லாம் முடிந்தபிறகு தங்கைக்கு அழைத்து விவரங்களைக் கேட்டேன். அவளின் முகநூலில் எந்தச்சிக்கலும் இல்லை. யாரும் `ஹெக்’ செய்யவில்லை. ஆனால் யாரோ ஒருவர், அவரின் புகைப்படங்களை எடுத்து/திருடி, பெயரில் சில மாற்றங்கள் (சட்டென்று கண்டு கொள்ளமுடியாத அளவிற்கு) செய்து, உதாரணத்திற்கு; அப்பா பெயர் Murthy என்றால் அதை Mutty என்று மாற்றி, அதை வைத்து ஒரு பேக் ஐடி செய்து, எல்லா உறவுகளுக்கும் நட்பு விண்ணப்பம் கொடுத்து, அவர்களிடம் அவரவர் தனிப்பட்ட விவரங்களை சேகரித்துவருவதாக சில உறவுக்கார நபர்கள் பகிர்ந்தார்கள். இந்த வகை திருட்டு, வட்சாப்பிலும் பரவலாக வந்துகொண்டிருக்கிறதாம். கவனம்.!!

வியாழன், ஆகஸ்ட் 17, 2017

ஒரு புரிதலுக்காக

நம் எல்லோருக்கும் பள்ளிப்பருவத்தில், வருங்கால ஆசை, யாராக என்னவாக ஆக வேண்டும் என்கிற கனவு ஒன்று இருந்திருக்கும். மண்டையில் படிப்பே ஏறாத எனக்கு, மற்றவருக்குப் போதிக்கின்ற ஆசிரியை தொழிலில் அவ்வளவு ஈடுபாடு. அது எனது லட்சியமாகவும் இருந்தது. மலாய் மொழியில் கிரெடிட் பெற்றிருந்தாலேயொழிய அந்தத் தொழிலுக்குச் செல்வது முடியாத காரியமாகவே இருந்தது. இருப்பினும் முயன்று முயன்று தோற்றுப்போனவள் நான். அதேவேளையில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் மிகுந்த ஆர்வமுள்ள நான், அந்தப்பாடங்களை மாலை நேர வகுப்பின் மூலம் டியூஷன் சொல்லிக்கொடுத்து எனது ஆசிரியை தொழில் ஆர்வத்தைத் தீர்த்துக்கொண்டேன். நல்ல வழிகாட்டல், தொடர்ந்து படிக்க வசதிகுறைவு போன்ற காரணங்கள் இருந்தபோதிலும், பரீட்சை புத்தகம் போன்றவற்றின்பால் வெறுப்பு ஏற்பட்டதன் விளைவாகவும், ஒரு கம்பனியில் ரிமா390.00 சம்பளத்தில் வேலைக்குச்சேர்ந்தேன், (அப்போது 1980களில்- இது நல்ல சம்பளம்) ஆசிரியருக்கும் ஆரம்பச் சம்பளம் கூட அதேதான்  என்கிற மன ஆறுதலுடன் நான் எனது ஆசிரியை ஆகும் கனவை நிறுத்திக்கொண்டு, அட்மின் வேலையிலேயே எனது அனுபவத்தை வளர்த்துக்கொண்டு அந்தத் துறையிலேயே தொடர்ந்து படித்து எனது அலுவலக கணினி அறிவுகளை மேம்படுத்திக்கொண்டேன்.  

இருந்தபோதினிலும், என் குழந்தைகள் மூலமாக, எனது கனவிற்கு தீனிபோட ஆரம்பித்தேன். என் மகள் ஆரம்பத் தமிழ் பள்ளியில் பயின்றபோது, ஆசிரியை ஆகும் கனவை வைத்திருந்தாள். ஆசிரியர் போல் பாவனை செய்து, கையில் பிரம்பை ஏந்திக்கொண்டு தனக்குக்கீழ் உள்ள பலகீனமான தனது தம்பியை அடிப்பது, மிரட்டுவது, தண்டனை கொடுப்பது என ராஜ்ஜியம் செய்துகொண்டிருப்பாள். படி, இது என்ன.?, அது என்ன.? என்பாள். பிறகு நான்காம் வகுப்பில் அடியெடுத்து வைக்கின்றபோது ஆரிசியை கனவில் இருந்து விஞ்ஞானி ஆகவேண்டும் என்கிற கனவிற்குள் நுழைந்திருந்தாள்.  அப்துல் கலாம் மற்றும் கல்பனா போன்றவர்களின் தாக்கத்தால் இந்த முடிவு. பிறகு இடைநிலை பள்ளிக்குச்சென்றவுடன், பல கனவுகளைச் சுமந்த பலவிதமான மாணவர்களின் சகவாசம் கிடைத்தபொழுது, படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறபொழுது, கனவுளே இல்லாமல், இந்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு தேறினாலே போதும் என்கிற மனநிலையில் பயணித்துக்கொண்டிருந்ததை என்னால் உணரமுடிந்தது. இருப்பினும் லட்சியம் இல்லாமல் வாழ்வில்லை, விஞ்ஞானி என்கிற லட்சியத்திலேயே இரு, என்று நான் எச்சரிக்கை விடுத்தபோது, `உங்க தாத்தாதானே, வா கொடுக்கறேன் என்பதற்கு,’ என்று போதனாமுறையின் பால் உள்ள அழுத்தத்தினால் விரக்தியாக உதிர்த்த வார்த்தைகளில் மிரண்டு போயிருந்தேன். கனவுகள் இல்லாமல் லட்சியமில்லை. லட்சியமில்லாத கல்வி எதற்கு, என்கிற எச்சரிக்கையினை அடிக்கடி கூறிய வண்ணமாகவே இருப்பேன்.

அதன்பிறகு நாலாபக்கமும் தோல்வி, விரக்தி, விழுந்து எழுந்து, அழுது புரண்டு, இரவுபகல் பாராமல் படித்து இப்போது மருத்துவர். அதுவும் சிறைச்சலையில். தூக்கு போடவிருக்கின்ற கைதியை நன்கு பரிசோதித்துவிட்டு, இவருக்கு உடல்நிலை சரியாக உள்ளது, தூக்கு போடலாம், என்று சொல்கிற வேலை. சில அனுபவங்கள் பதைபதைக்கவைக்கும். சில அனுபவங்கள் கண்ணீரை வரவழைக்கும். இன்னமும் படித்தவண்ணமாக அவளின் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது.

என் மகன், படிக்கமாட்டான். படிப்பு என்றாலே வேப்பங்காயைய் கடித்ததுபோல் கசக்கும் அவனுக்கு. வீட்டுப்பாடம் இருக்கிறாதா.? என்று கேட்டாலே, நான் செய்துவிட்டேன் என்று பொய்களைச் சொல்லி கார்ட்டூன் பார்ப்பான். கார்ட்டூன் படங்கள் என்றால் அவ்வளவு பிரியம். பார்ப்பதோடல்லாமல் அங்கே அவனை பரவசமூட்டுகிற பாத்திரங்களை வீட்டுச்சுவரில் வரைபடமாக வரைந்து வரைந்து பார்த்து மகிழ்ந்துகொள்வான். அடேயப்பா எவ்வளவு பாத்திரப்படைப்புகளை அவன் வரைந்துள்ளான். கைதேர்ந்த ஓவியர்போல் மிக அழகாக வரைவான். அந்த ஆர்வத்தைக் குழிதோண்டிப்புதைத்தது தாயான நான் தான். சுவர் அசிங்கமாகிறது, உறவுகள் வந்தால் முகஞ்சுழிப்பார்கள், விலையுள்ள சாயம் வீணாய்ப்போகிறது என்று பாடாய் படுத்தி துன்புறுத்தி படிப்பில் கவனத்தைத் திருப்பப்போராடினேன். நான் மட்டுமல்ல கணவரும்தான். என்னுடைய கனவு ஆசியர்தான். கணவருடைய கனவு என்பது பல் மருத்துவர். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருந்தும், ஆரசாங்கத்தையே நம்பியிருந்ததால், இரண்டுமுறை சிபாரிசுமூலம் இண்டர்வியூ சென்று தோற்றுப்போய் சோர்வாகி அந்தக்கனவை நினைவாக்கும் முயற்சியினைக் கைவிட்டார். பணம் இருந்திருந்தால், தனியார் கல்லூரிக்குச்சென்று கல்வி தொடர்ந்திருக்கலாம். அதற்கும் வழியில்லை. காலமும் கடந்துவிட்டது.

நம் குழந்தைகளை நாம் அப்படி விடமுடியாதல்லவா.! எப்பேர்பட்டாவது அவர்களுக்கு ஒரு கனவை உருவாக்கவேண்டும் அதை நிறைவேற்ற பாடுபடவேண்டும் என்பதில் மிகுந்த கவனமாக இருந்தோம், நாங்கள். எங்களுக்குக் கிடைக்காததையெல்லாம் அவர்களுக்குக்கொடுக்கவேண்டும் என்கிற வெறியுடன் பணம் சேர்க்க ஆரம்பித்தோம்.

இருந்தபோதிலும், மகனுக்கு ஆரம்பப்பள்ளியில் (தமிழ்) படிப்பில் இருந்த ஆர்வம் இடைநிலை பள்ளியில் கணிசமாகக் குறைந்து போனது. முக்கியப்பாடமான மலாய் மொழியில் தேர்ச்சி பெற படாதபாடு பட்டான். வாசிப்புப் பழக்கம் இருந்தாலேயொழிய மொழிப்பாடத்திலும் வரலாறு போன்ற பாடங்களிலும் தேர்வது சிரமம்தான் என்கிறபோது வாசிப்பில் கவனத்தைத் திசை திருப்ப முயற்சி எடுத்தோம். இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்தது. வாசிக்கச்சொல்லி போராடினார் கணவர். புத்தகக் கடைகளுக்கு அழைத்துச்சென்றால், கார்ட்டூன்ஸ் புத்தகங்களை வாங்கி வாசிக்க ஆர்வப்படுவான். எதையாவது வாசிக்கட்டும், வாசிப்பு பழக்கமிருந்தாலே போதும் என்று போராடுவதை நிறுத்தினோம்.

அதேவேளையில், கல்வியில் கவனமில்லாமல் இருக்கின்றானே என்கிற வருத்தம் வாட்டி எடுத்தது. மூன்றாம் படிவ தேர்வில் பின்தங்கி இருந்தான். இருந்தபோதிலும் எஸ்.பி.எம்’இல் அறிவியல்துறை மாணவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆறுதலைக்கொடுத்தது. அந்தத் தேர்வின் முடிவை அவமானமாகக் கருதி உறவுகளிடம் எதையும் பகிராமல், அவனை, மனதளவில் நோகடித்து துன்புறுத்தினேன். படிப்பு ஏறவில்லை, புண்ணியமில்லை, எதற்கும் லாயக்கு இல்லை, சாவு, செத்துத்தொலை என்றெல்லாம் திட்டியிருக்கின்றேன்.

எஸ்.பி.எம் பரீட்சை வந்தது. எஸ்.பி.எம் என்பது மாணவப்பருவ வாழ்வை புறட்டிப்போடுகிற முக்கிய காலகட்டம் என்பதால், படி.. படி.. படி.. தம்பி.. என்று கோரஸ் ஆக பாட்டுப்பாடினோம். இரவு பகல் பாராமல் டியூஷன் வகுப்பிற்கு அனுப்பிவைத்து படி..படி.. படி என்று அவனுக்கு அழுத்தம் கொடுத்து நாங்களும் மனதளவில் நிம்மதியில்லாமல் இருந்தோம்.

தேர்வும் வந்தது, நினைத்ததைவிட நல்ல நிலையிலேயே தேர்வாகி இருந்தான். கணிதம் அறிவியலில் சிறப்புத்தேர்வு பெற்றிருந்தான். முக்கிய நான்கு பாடங்களில் A+ B+ என்று தேர்வாகி மனதில் பாலைவார்த்தான். உறவுகளோடு மகிழ்வாக பகிர்ந்தோம்.

அவனுக்கு நான் ஒரு லட்சியக் கனவை வளர்த்துவிட்டிருந்தேன். அதாவது விமானி ஆவது. (Pilot). ஆரம்பப்பள்ளி முதலாம் ஆண்டு படிக்கின்றபோது, நீ வருங்காலத்தில் என்னவாகப்போகிறாய்.? என்று கேட்டதிற்கு. `எனக்கு எங்க சார, ரொம்ப பிடிக்கும், நான் டீச்சர் ஆகப்போகிறேன்.’, என்றான். பெரும்பாலான குழந்தைகளுக்கு முதல் ஹீரோ அவர்களைக் கவர்ந்த ஆசிரியர்தான். அதுவே அவர்களின் கனவாகியும் போகிறது. பிறகு கால ஓட்டத்தில் அது மாறிவிடுகிறது.

அண்மையில் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி விரிவுரையாளரோட பேசிக்கொண்டிருந்தேன். அங்கு நடந்த ஒரு உரையாடலை இங்கே பகிர்கிறேன்.
அவர் சொன்னார், ஆண்கள், ஆசிரியர் வேலைக்கு வருவது அதிகமாகக் குறைந்து வருகிறது. அதனால் தேவைக்கேற்ப பள்ளித்தகுதியோடு எந்த ஆண் மாணவன் ஆசிரியர் பயிற்ச்சிக்கு மனு செய்திருந்தால், எந்த ஒரு தடையும் இல்லாமல் அவனை அப்பயிற்ச்சிக்கு உடனே எடுத்துக்கொள்வோம், என்கிறார். இருப்பினும், அந்த பயிற்ச்சிக்கு வந்திருந்த ஆண் மாணவர்கள் பெண்பிள்ளைகளோடு ஒப்பிடுகையில் கால் வாசி கூட இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய், அம்மா அடித்து விரட்டியதுபோல் சோகமாய் உற்கார்ந்திருந்தார்கள் அவர்கள். உற்சாகமாய் பெண்பிள்ளைகள். இதிலிருந்து ஆண்களுக்கு ஆசிரியர் ஆவதற்கு ஆர்வமில்லை என்று புரிந்துகொள்ளலாம்.

ஆக, நான், என் மகனுக்கென்று தேர்ந்து எடுத்த கனவு, பைலட். அறிவியல் துறை மாணவனான என் மகனுக்கு, பைலட் கல்லூரியில் நுழைவதற்கு எந்த தடையும் இக்காது என்று நம்பி சில முயற்சியிகளில் இறங்கினேன். மலேசியன் எர்லைன்ஸ் (MAS) கல்லூரியில் விசாரித்தபோது, 10ஏக்களுக்கு மேல் உள்ள மாணவர்கள் மட்டுமே அவர்கள் கொடுக்கவிருக்கின்ற தேர்வில் அமர வாய்ப்பு உள்ளதாக அனுபவப்பட்டவர்கள் சொல்லக்கேட்டு, மகனிடமும் கூறினேன். அதற்கு அவன், அப்படியென்றால் அங்கே நுழைவது அவ்வளவு சுலபமல்ல போலிருக்கிறது, நான் விமானம் பழுதுபார்க்கின்ற என்ஜினரிங் துறையில் படித்து, சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு பிறகு பைலட் வேலைக்கு முயல்கிறேன், என்று ஒரு முடிவுக்கு வந்தான்.

அந்தத் துறையில் படிக்க அரசாங்கத்தில் மனு போட்டான். கிடைத்தது மெக்கனிக்கல் என்ஜினரிங். அது வேண்டாம் என்று முடிவெடுத்து, தனியார் கல்லூரியில் ஏர்கிராஃப்ட் என்ஜினரிங் பயிற்சியில் சேர்ந்தான். படித்தான். டிப்ளோமா முடித்தவுடன். அந்தத்துறையில் மேலும் தொடர்ந்து படிக்கவேண்டுமென்றால், வேலை அனுபவம் மட்டுமே உதவக்கூடும் என்பதுதான் விதி. வேலைக்கு மனு செய்தான். ஏர் எசியாவில் ஆறு மாதம், மாஸ்’யில் ஆறு மாதம், SAE’யில் ஒரு வருடம் என அனுபவங்களைத் தேடிக்கொண்டான். இடையிடையே பைலட் வேலைக்கு வாய்ப்பு கிடைக்குமா என்றும் காத்திருந்தான்.

நாட்கள் நகர்ந்தன. விமானப்பழுது பார்க்கின்ற பணியிலேயே தொடர்ந்தான். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அவன் அனுப்பிய வேலை மனுவிற்கு பதில்கொடுத்து பணிக்கு அழைத்திருந்தது. அங்கு சென்று வேலை பார்ப்பது அவனின் அப்போதைய கனவாக இருந்தபோதிலும், அடி ஆழ்மனதில் பைலட் என்கிற கனவு தணலாக இருந்துகொண்டுதான் இருந்திருக்கிறது என்பதை, ஏர் ஏசியாவின் ஃகெடேட் பைலட்’க்கு மாணவர்களை எடுக்கின்ற விண்ணப்பம் வந்தவுடன், அதற்கு தாவியபோது எனக்குத் தெரியவந்தது.

கட்டங்கட்டமாக ஆறு படிநிலையில் தேர்வு நடத்தப்பட்டபோது, பலர், முதல் படிநிலையிலேயே தோல்வியுற்று திரும்பியிருக்கையில், என் மகன் நான்கு படிநிலை தாண்டி தேர்வாகி, கிட்டத்தட்ட அந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கின்ற நிலையில் முழுநம்பிக்கையுடன் இருந்தபோது, அந்தக் கனவு தரைமட்டமாகச் சரிந்தது. நல்ல உயரம், அழகிய முகவெட்டு, ஆரோக்கிய உடல்வாகு, மாநிறம், அழகிய பெரிய கண்கள், கிட்டத்தட்ட ஹீரோ மாதிரியான லூக் (காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு) கொண்ட அவனுக்கு நிச்சயம் இந்த பயிற்ச்சியில் இடமுண்டு என்றிருக்கையில். இப்படி ஒரு இடி.

இறுதி படிநிலை அந்தத்தேர்விற்கு, மருத்துவப்பரிசோதனைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. முதல்நிலை (first class) மருத்துவப்பரிசோதனை செய்யவேண்டும். உடலைப்பெருத்தவரையில், முதல்நிலை மருத்துவப்பரிசோதனையில் தேர்வாகி இருந்தான். ஆனால், கண்பரிசோதனை என்று வருகிறபோது முதல்நிலை கிடைக்கவில்லை. இரண்டாம் நிலைதான் கிடைத்தது. இரண்டாம் நிலை என்பது ஃகெடேட்பைலட்’ பயிற்ச்சியிற்கு சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது என்கிற முடிவு தெளிவாகத் தெரிந்தாகிவிட்டது. அதன் பிறகு என்ன.!!? மனம் உடைந்து குளிர்காய்ச்சலே வந்து விட்டது என் மகனுக்கு. கனவுக்கோட்டை சரிந்தால் எப்படி இருக்கும் மனநிலை என்பதனை, இதயம் சுக்குநூறாக வெடிக்க என் மகனின் சோர்வில் பங்குகொண்டு ஆறுதல் வார்த்தைகளைக் கூறினேன். எல்லோரும் சொல்வதைப்போல்தான். `இது எதோ நல்லதிற்குத்தான். இவ்வளவு தூரம் அனுப்பிவைத்த இறைவன், இந்த ஒரு நிலையினைக் கடக்கச்செய்யாமல் விட்டிருப்பானா.! இந்த வேலை உனக்குத் தேவையில்லை என்பதனை இறைவனே எடுத்த முடிவாக நினைத்துக்கொள். இல்லையேல், இப்படி உன் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பானா.? பணமில்லை, தேர்வில் தோல்வி என்றிருந்திருந்தால், எப்படியாவது அடுத்தமுறை முயன்றிருக்கலாம் அல்லது பார்க்கலாம் என்று நம்மைத் தேற்றிக்கொள்ளலாம். ஆனால்,. இது, இப்போதுதான் தெரியவந்த ஒரு பிரச்சனை. இதற்குத்தீர்வு இல்லை, அதற்கு அவசியமும் இல்லை என்று மருத்துவர்கள் முடிவு செய்தபிறகு, முடிவு நம் கையில் இல்லை. என்ன செய்வது.! அப்படியே நகர்ந்துசெல்லவேண்டியதுதான் என்கிற ஆறுதலை நான் அவனுக்குக் கொடுத்தபோது என மனமும் சுக்குநூறாக சிதறிப்போனதை என்னால் உணர முடிந்தது. ஊன் உறக்கமில்லமல் நாட்கள் நகர்ந்து மூன்று வாரங்களுக்குப்பிறகு சகஜ நிலைக்கு வந்துவிட்டதை கொஞ்சம் உணர முடிகிறது.

இப்போதுதான் நான் இந்தக் கட்டுரையினை எழுதியதற்கான முக்கியக் காரணத்திற்கே வருகிறேன். சரி என் மகனின் பிரச்சனை என்னவென்றால்… அவனுக்கு பிறவியிலேயே மிகமெல்லிய யாரும் கண்டுகொள்ளமுடியாத அளவிற்கு Diplopia என்கிற பிரச்சனை இருந்துள்ளது. அது என்ன Diplopia.? என்கிறீர்களா.? இரண்டு கண்களும் ஒரு பொருளை இரண்டு கோணத்தில் காண்பது. அது மிக மோசமாக இருந்தால், பார்ப்பதற்கு மாறுகண் போல் தெரியும் ஆனால் என் மகனுக்கோ, கண் விழிகளை முழுமையாக மேலே உயர்த்தி (விழிகளை மட்டும்- தலையை ஆட்டக்கூடாது) அப்படியே வலது பக்கம் முழுமையாகக் கொண்டுவந்து (விழிகளை மட்டும்-தலையினை ஆட்டக்கூடாது) ஒரு பொருளைப் பார்க்கவேண்டும். அப்படிப்பார்க்கின்றபோது, அந்தப்பொருள் அவனுக்கு இரண்டாகத்தென்படுகிறது. இப்படி ஒரு பிரச்சனை உள்ளதென்று இப்போதுதான் அவனுக்கே தெரிய வந்துள்ளது. காரணம், நாம் எப்போதுமே விழிகளை ஆக மேலே உயர்த்தி, ஆக வலதுபக்கம் திருப்பி ஒரு பொருளைப் பார்க்கப்போவதில்லை, தலையினைத் திருப்பி தலையினை ஆட்டி அங்கும் இங்கும் பார்த்துவிடுவோம். ஆனால், மருத்துவ முதல்நிலை பரிசோதனை என்று வருகிறபோது, இப்படித்தான் பரிசோதிப்பார்கள் கண் மருத்துவர்கள்.

எனக்கு என்ன மன உளைச்சல் என்றால், சிறுவயதில் ஒருமுறை அவன் என்னிடம் சொல்லியுள்ளான், அதாவது, அம்மா, நான் கண்களை பக்கவாட்டில் நகர்த்தி ஜாடைப்பார்வை பார்க்கின்றபோது, என் கண்கள் மங்களாகத் தெரிகிறது, என்பான். உடனே நான், மூக்குக் கண்ணாடிக்கு அடிபோடுகிறான் போல என்று நினைத்து அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை, குழந்தைகள் குணம்தான் தெரியுமே, நண்பன் யாராவது, கண்கண்ணாடி அணிந்திருந்தால், அதே போல் தாமும் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பொய் சொல்வதற்குத் தயங்க மாட்டார்கள். உடனே தாயான நான், இதென்ன?, அதென்ன?, இந்த நம்பர் என்ன?, அந்த நம்பர் என்ன? என்று கேள்விகளைக் கேட்டு, எல்லாம் சரியாகத்தான் உள்ளது. சும்மா இரு, என்று சொல்லி, அவனின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

பைலட் ஆக முடியவில்லை என்பது இரண்டாவது பிரச்சனை. அது ஒரு பிரச்சனையே இல்லை என்பது வேறு. ஆனால் ஏன் தாயான, கூடுதல் நேரம் என்னோடு இருந்த என் மகனுடைய இந்தப்பிரச்சனையை என்னால் கண்டுகொள்ள முடியாமல் போய்விட்டதே என்பதுதான் என்னுடைய முக்கியப் பிரச்சனை. அன்றே கண்டு பிடித்திருந்தால், ஏழுவயதிற்குள் அறுவைசிகிட்சையின் மூலம் இதை சரி செய்திருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இருந்தபோதிலும் இப்போது இது ஒரு பிரச்ச்னையே இல்லை பைலட் ஆகமுடியாது. அது மட்டும்தாம். மற்றபடி எல்லாம் நார்மல்தான். என்கிறார்கள்.  
என்னுடைய இந்த விழிப்புணர்வு கனவுக்கட்டுரை பிறந்ததிற்கான காரணம் புரிகிறதா.?  
                                                                                

செவ்வாய், செப்டம்பர் 27, 2016

கள்ளி

நான் உன் வீட்டில்
நெருப்பு இல்லாத அடுப்பில் பால் பொங்குகிறது
அம்மன் போல் ஒரு பெண்
கள்வன் நீ நல்லவன்.

செரிமானம்

 
மூன்று தக்காளி, இரண்டு முள்ளங்கி, மூன்று உருளைக்கிழங்கு, அரை கிலோ ஆட்டிறைச்சி...
`ஏம்மா, எல்லாத்தையும் கொஞ்ச கொஞ்சமாக வாங்குறீங்க.?’ தலைக்குமேல் உயர்ந்த மகன் தன் தாயிடம் கேட்டுக்கொண்டே, தாய் தேர்ந்தெடுத்த காய்கறிகளை கூடையில் போட்டு தூக்கிக்கொண்டான்.
`மாசம் முடியுற வரைக்கும் காசு வேணுமே.. இருக்கிற நூறு ரிங்கிட்’ஐ செலவு செஞ்சுட்டா, அப்புறம் நாளைக்கு என்ன செய்யுறதா.!?’ .
`பேங்க்’ல இல்லியா..?’
`எடுக்கற சம்பளம், திங்கறதிக்கே பத்தல. இப்ப சாமான் விக்கிற வெலைய பாத்த இல்லெ,.. இதுல, பேங்க்’ல வேறு காசு இருக்குமா.!?’ தாய் சொல்லிக்கொண்டே, எதையோ மறந்து விட்டதாக, மீண்டும் காய்கறி அடுக்கியிருக்கின்ற பகுதிக்குள் நுழைகிறாள்.
`எங்கேம்மா..?’
`இரு இரு, இஞ்சி ரெண்டு துண்டு எடுத்திட்டு வரேன். நீ போய் வரிசையில் நில்லு..’
நெரிசலான அந்த பேரங்காடியில் பணம் செலுத்துகிற கவுண்டர் எல்லாம் நீண்ட வரிசையினைப் பிடித்து நின்றது.
மகன் கூடையினை வைத்துக்கொண்டு வரிசையில் நின்றான்.
வரிசையில் அவர்களுக்கு முன் நின்ற மலாய்க்கார பெண்மணியின் ட்ரொலியில் அடுக்கியிருந்த சாமான்களைப் பார்த்தால், அது ட்ரொலிக்கு மேலேயே நின்றது. மேலும் சில சாமான்கள் விலைப்பட்டியல் இடாமல் பிளாஸ்டிக் பைக்குள் மட்டும் போடப்பட்டிருந்தது. விலைப்பட்டியல் இல்லாததால், கவுண்டரில் உள்ள பெண்மணிக்கு ஸ்கேன் செய்வதற்குக் கடினமாக இருந்தது. எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். விலைப்பட்டியல் இல்லாத பொருட்களை மீண்டும் எடுத்துச்சென்று நிறுவையில் வைத்து விலையினை ஒட்டவேண்டும். தவறு அவளுடையதுதான், முதலிலேயே அதைச்செய்துவிட்டு கவுண்டருக்கு வரவேண்டும். இப்போது பாதி ஸ்கேன் செய்யப்படுகிறது மீதியை எடுத்துக்கொண்டுபோய் விலைப்பட்டியல் இட்டு மீண்டும் எடுத்துவரவேண்டும்.
எல்லோருக்கும் அவசரம், வரிசையில் அதிகம் பேர் காத்திருக்கின்றார்கள். தன்னுடையதை முதலில் கணக்குப் பண்ணி அனுப்பிவிட்டால் தேவலாம் என்கிற மாதிரி சலிப்புடன் நின்றார்கள் சிலர். ஒரு சீனர், `Apa pasal lambat ni.? Cepat lah sikit..’ என்று ஒரு கோகோ கோலா’வை கையில் ஏந்திக்கொண்டு முகத்தை உர்ர் என்று வைத்திருந்தார்.
`Tolong tunggu ye, biar yang ini habis dulu. கவுண்டர் பெண்மணி பவ்யமாக பதிலுரைத்தார்.
நாங்களும் விரைவாகச் செல்லவேண்டும், கொஞ்சம் முடித்துக்கொடுத்தால், தேவலாம்.. என்பதைப்போல் மகனுடன் நின்ற அந்தத்தாயும் வேண்டுகோள் விடுத்தாள்.
`ஏம்மா அவசரம். முடியட்டும் போலாம்.’ என்றார் மகன்.
`சமைக்கணும், வந்திருவாங்க..’ என்றாள் தாய்.
அவர்களின் பின்னால் இருந்த நம்மவர் ஒருவர், `ஏன் இந்த வரிசை நகரவேயில்லை.. ? Orang dah ramai, bukak lah counter sebelah. Leceh tunggu lama.. என்றார் சத்தமாக.
தடுமாறினாள் கவுண்டரில் உள்ள பெண். உதவிக்கும் சிலர் வந்தார்கள். அவள் வேலைக்குப்புதியவள் போலும். பதற்றமாகவே இருந்தாள். அனுபவசாலி ஊழியர்கள் அப்பெண்மணிக்கு சில வழிகாட்டிகளை சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த சிலர் இன்னும் கூடுதல் எரிச்சல் அடைந்தார்கள்.
ஒருவகையாக முன்னே இருந்த பெண்மணி நகர்ந்தாள்.
தாய் மகன் முன்னே, நின்ற சீனரும் டாப் டுப் படார் தடார் என்று பொருளை வைத்துவிட்டு பணம் செலுத்திக் கிள்ம்பினான்.
மகன் கூடையில் இருந்த பொருட்களை வைக்க, தாய் தன்னிடமுள்ள நூறு ரிங்கிட்’ஐ அப்பெண்ணிடம் கொடுத்தாள்.
பொருட்களின் விலை, ரிம17..00 தான். மீதம் ரிம83.00 கொடுக்கவேண்டும், ஆனால் அவள் என்ன பதற்றத்தில் இருந்தாளோ தெரியவில்லை, ரிம133.00 ஆக திருப்பித்தந்தாள்.
பணம் அதிகமாக திருப்பித்தருகிறாள், என்பதைத் தாய் உணர்ந்துகொண்ட போதிலும், வாங்கிய பணத்தை விரைவாக தமது பர்ஸுக்குள் திணித்தாள்.
மகன் பார்க்கவில்லை என்று நினைத்தாள் போலும். ஆனால், காருக்குள் ஏறிய மகன் கேட்ட முதல் கேள்வி,
`யம்மா, பணம் கணக்குத்தெரியாமல் அதிகமா கொடுத்திட்டா போலிருக்கு,’ என்றான் .. தாயிற்கு தூக்கிவாரிப்போட்டது.
`ஆ..ஆ..ஒ..ஓ..அப்படியா. கவனிக்கலையே, இரு பார்க்கிறேன்.’ என்று பாவனை செய்துவிட்டு, அட, ஆமா.. கூட கொடுத்திட்டா..’ என்றாள் தடுமாறியபடி.
`சரி, இந்தா பில், விளக்கிச்சொல்லி அவளிடம் பணத்தைத் திருப்பிக்கொடுத்திடு,’ என்று காரில் இருந்தபடியே மகனை அனுப்பிவைத்தாள், மனதிற்குள் `எல்லா கருமம் பிடிச்ச குணமும் என்னோடு ஒழியட்டும்..’ என்றபடி...