செவ்வாய், ஏப்ரல் 24, 2012

அம்மா திட்டுவார்

சென்ற ஆண்டு, எங்களின் கம்பனியில் நாங்கள் பெண்கள் எல்லோரும் சேர்ந்து, ஒரு நெட்பால் டீம் உருவாக்கியிருந்தோம்.

எங்களுடைய கம்பனி, பல கிளை நிறுவனங்களைக் கொண்டது. எல்லா கிளை நிறுவனங்களிலும் இந்த நெட்பால் டீம், மிக கடுமையான பயிற்சிகளின் மூலம் படு வேகமாக முன்னேறி, பல இடங்களுக்கு போட்டியிடச்சென்று, கிளைகள் சாரா வெளி நிறுவனங்களோடும் போட்டியிட்டு, வென்று, வாகைசூடி, கம்பனியின் பெயரை உச்சத்திற்குக் கொண்டு சென்றுவிட்டார்கள். எங்களது நிறுவனமானது தலைமை நிறுவனம், அதாவது ஆசியன் எச் ஃக்யூ.  ஆனால் பேர் சொல்லிக்கொள்ளும் படி, பெண்களின் பங்களிப்பு இந்த  விளையாட்டுத் துறையில் அவ்வளவாக இல்லை.

இப்போது, விளையாட்டுத்துறையில் இந்த திடீர் ஆர்வம் வந்ததிற்கு முக்கிய காரணம்;  இரண்டு ஆண்டுகளுக்கு முன் எங்களின் நிறுவனத்திற்கு விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வமும், அதே வேளையில், காற்பந்து விளையாட்டில், எண்பதுகளில் தேசிய அளவில் விளையாடி, வென்று வெற்றிக்கொடி நாட்டிய ஒரு காற்பந்து வீரரை (தமிழர்)  உயர் அதிகாரியாக நியமித்திருந்தார்கள். அவர் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து, தூங்கிக்கிடந்த எங்களின் விளையாட்டுத்துறையை தூசு தட்ட ஆரம்பித்து விட்டார்.

பல குழுக்களைத் தயார் செய்தார். பகுதி பகுதியாக ஆட்களைப் பிரித்து, பல விதமான விளையாட்டுகளில் சேர்த்துவிட்டார். FUTSAL, NETBALL, TUG OF WAR, GOLF, TENNIS, VOLLEY BALL, BASKET BALL, BADMINTON, TABLE TENNIS, CAROM AND BOWLING என.

எல்லா விளையாட்டிற்கும் ஆட்கள் கணிசமாக சேர்ந்துவிட்டவேளையில் நெட்பால் விளையாட்டிற்கு மட்டும் வரவேற்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக குறிப்பிட்ட அந்த அதிகாரி, எல்லா பெண் பணியாளர்களையும் ஒன்று திரட்டி, ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து எல்லோரையும் வரும்படி மின்னஞ்சல் வழி அழைப்பு விடுத்திருந்தார். அனைவரும் சென்றோம். பேச்சிற்கே இடமில்லை, எல்லோரும் விளையாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற கட்டாய நிபந்தனை கொண்டுவரப்பட்டது.

குழந்தைகளை பள்ளியில் இருந்து ஏற்ற வேண்டும், கைப்பிள்ளைகள் வைத்திருப்பவர்களைத் தவிர மற்ற எல்லோரும் கண்டிப்பாக பயிற்சிகளில் பங்கு பெற வேண்டும் என்கிற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. சிலர் சிணுங்கினார்கள் என்னைப்போல். விலை அதிகமுள்ள பிரண்டட் விளையாட்டு ஆடை, விளையாட்டுக் காலணி என உடனே அளவு எடுக்கப்பட்டதால், நிராகரிக்க முடியாமல், நிராகரிப்பதைப்போல் ஏற்றுக்கொண்டோம். கிடைக்காது இது போன்ற விலை அதிகமுள்ள ஆடைகள் காலணிகள் என எல்லோரும் நான் நீ என்று முந்தி கொண்டு அளவு கொடுத்து விட்டோம்.  அதுவும் அவர் முன்னிலையிலே. விடுவாரா!? தினமும் எங்களின் டீம் லீடரிடம் கேட்பார், பயிற்சிகள் எங்கே? இப்போ அதன் நிலை என்ன? தேர்ச்சி என்ன? இன்னும் என்னவெல்லாம் வேண்டும்? யார் யார் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை? யாரெல்லாம் சிறப்பாக ஒத்துழைக்கின்றனர்? போன்ற விவரங்களை வாங்கிய வண்ணம் இருப்பார்.

முதலில், எங்களின் பயிற்சி ஒரு பள்ளியில் தொடங்கிற்று. பயிற்சிபெற்ற ஒரு ஆசிரியை எங்களுக்கு அவ்விளையாட்டு பற்றிய பயிற்சிகளை வழங்கினார். பந்தை எப்படிஅடுத்தவரிடம் கொடுப்பது, பந்து வீசும் போது கைகள் கால்கள் எந்த நிலையில் இருக்கவேண்டும், பந்து கையில் கிடைத்தவுடன் கால்களின் தடங்களில் கவனம் செலுத்துவது, நகராமல் இருப்பது, எங்கே நகர்வது, எங்கே நிற்பது, வருகிற பந்தை எப்படி வாங்குவது, எதிராளியின் கையில் பந்து கிடைத்து விட்டால் அதைப்பிடுங்காமல் எப்படி தன் கையிற்கு அந்த பந்தை வரவழைப்பது போன்றவற்றை மிக கவனமாக பயிற்சியின் வழி சொல்லிக் கொடுத்தார்.

எங்களில் பலர் அவ்விளையாட்டை முறையாகக் கற்காதவர்களாதலால்.. பயிற்சி சில மாதங்கள் தொடர்ந்தது. பயிற்சிகள் முடிந்து திடலுக்கு விளையாட அழைத்துச்செல்லுகையில் ஏறக்குறைய விளையாட கற்றுக்கொண்டோம். இருப்பினும் பலவிதமான குளறுபடிகள்தான்.

திடலில் நடந்த கூத்துகள் கொஞ்ச நஞ்சமல்ல. விளையாடும் பெண்மணிகள் நாங்கள் எல்லோரும் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். சிலரின் உடம்பு ஒத்துழைக்கவில்லை, சிலரின் வயது ஒத்துழைக்கவில்லை.  திடலிலே கால் சுளுக்கு ஏற்பட்டு நீலகிரி தையலமெல்லாம் கொண்டுவந்து ஒருவர் மாற்றி ஒருவர் கால்களைப்பிடித்து உறுவிக்கொண்டிருந்தோம். அதன்படி, தொடர்ந்து விளையாட முடியாமல் உட்கார்ந்து கொண்டவர்களும் உண்டு.

 ஆரம்பத்தில் எங்களுக்குள் பகுதியாக குழு பிரித்து, நாங்களே, இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் எங்க ஆட்களுடனேயே மோதி விளையாடினோம், வெற்றிக் களிப்பில் மாறி மாறி ஒரே ஆர்ப்பாட்டம். விளையாடிய அலுப்பே தெரியாமல் வீடு திரும்புவோம். மிகவும் ஜாலியாக இருந்தது. நாங்கள் நன்றாக நெட்பால் விளையாடுகின்றோம் என்று பேஸ்புக்கில் பதிவேற்றம்.. நண்பர்களுக்கும் பந்தாவாக எஸ்.எம்.எஸ் பகிர்வு வேறு. ஒரே ஆர்வக்கோளாறுதான் போங்க..

எங்களால் ஓரளவு விளையாட முடியுமென்கிற நம்பிக்கை துளிர்விட்டவுடன், எங்களை, பக்கத்து கம்பனியின் டீம்’மோடு மோதவிட்டார்கள். அப்போதுதான் தெரிந்தது அந்த விளையாட்டின் சிக்கல். நாக்கு வெளியே தள்ளி, மரங்களைச் சாய்க்கும் அளவிற்கு மூச்சு தஸ் புஸ்ஸ்ஸ் என்று ஒரு பக்கம்.. திடலில் அங்கப்பிரதிஷ்டை செய்து, சேற்றில் மூழ்கி, கை கால்களிலெல்லாம் தேய்ந்து. முட்டியெல்லாம் வீங்கி... படு மோசமாகிவிட்டது நிலைமை.

அன்று முதல், பயிற்சி என்றால், ஒரு கலவரத்துடன் காணப்பட்டார்கள் வீராங்கணைகள். ஒவ்வொரு குழுவுடன் மோதும் போது (வெவ்வேறு கம்பனிகளுடன்) படுதோல்வியைத்தான் தழுவி மண்ணைக்கவ்வுவோம். அவர்களின் வேகத்திற்கு அரைகிழவிகளான எங்களால் ஈடு கொடுக்க முடியாமல் திணறி தடுமாறினோம். என்ன செய்வது, உடை காலணிகள் எல்லாம் அவரவர் அளவிற்கு ஏற்றாட்போல் ஆடர் கொடுத்தாகிவிட்டது.. கம்பனியின் ஸ்போர்ட்ஸ் வேறு கூடிய விரைவில் நடக்கவிருந்தது... பின் வாங்க முடியாமல் தத்தளித்தோம்.

பயிற்சி போதவில்லை என மீண்டும் பந்து பிடிக்கும், பந்து வீசும், பந்தை அடிக்கும் பயிற்சியும், திடலைச்சுற்றி ஓடுவது, கால்கள் நாட்டியம் ஆடுவதைப்போல் ஒன்று,இரண்டு, மூன்று என முன்னே இருந்து பின்னேயும், பின்னேயிருந்து முன்னேயும் நகரும் பயிற்சிகள் என வேலையிலிருந்து விடுப்பு எடுத்து பயிற்சிகள் பரபரப்பாக நடத்தப்பட்டது.
இருப்பினும் எல்லாம் கானல் நீராய்.. ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் ஸ்போர்ட்ஸில் படு தோல்வியைத் தழுவியே முடிவுற்றது சென்ற ஆண்டின் நெட்பால் குழு..

திடலில் நடந்த கூத்துகளையும் சொல்லத்தான் வேண்டும். ஒரு முறை எங்களின் ஸ்போர்ட்ஸ் கிளஃப் சேர்மென், நாங்கள் விளையாடுவதைப் பார்க்க திடலுக்கு வந்திருந்தார். அமைதியாக நாங்கள் விளையாடுவதைக் கண்ணுற்றார். நானும் அங்கேயும் இங்கேயும் மூச்சு வாங்க, ஓடினேன் ஓடினேன் திடலின் எல்லைக்கே ஓடினேன், பந்து மட்டும் கையில் கிடைத்த பாடில்லை. எங்கள் குழுவில் உள்ள ஒருவளுக்கு முட்டி வலி,  இங்கிருந்து அந்த பக்கமும், அங்கிருந்து இந்த பக்கமும் நடையாய் நடந்தே விளையாடி முடித்தாள்.  பந்து கிட்ட வரும் போது ஒரு குதி குதிப்பாள் அவ்வளவுதான், சும்மாலும் காற்றில் ஒரு அடி வைப்பதைப்போல் மேலே கையை உயர்த்தி ஒரு அடி அடிப்பாள், அதைப் பார்க்க எனக்கு வேறு பயங்கரக் காமடியாக இருக்கும்.. அப்படியே உட்கார்ந்து `காக்க்காக்க்கா’ என சிரித்து விடுவேன். ஒரு முறை எங்களின் கோர்ச் என்னைத் திட்டினாள், நீ என்னமோ சரியாய் விளையாடுவதைப்போல் அடுத்தவரைப் பார்த்து சிரிக்கின்றாயா? என.. நான் சிரித்த சிரிப்பில் அவளுக்கே தாங்க முடியாமல், அவளும் விழுந்து விழுந்து சிரித்து விட்டாள்.

இந்த முறை அப்படிசிரிக்கமுடியாமல், ஸ்போர்ட்ஸ் சேர்மென் அமர்ந்திருந்ததால், சிரிப்பை அடக்கிக்கொண்டு, விளையாடுவதைப்போல் பவனை செய்தேன். பலர் நிஜமாகவே கடுமையாக விளையாடினார்கள். சேர்மென் பலமுறை தலையை வலது இடது புறமாக ஆட்டிக் கொண்டேயிருந்தார்..(லட்டு சிலேபி கொடுக்கும் போது, சக்கரை வியாதிக்காரர்கள், வேண்டாம் வேண்டாம் என்பார்களே, அதுபோல்) அப்போதே அவர் சிலரை நீக்கி விடச் சொல்லி பட்டியல் கொடுத்து விட்டுச்சென்றார். அதில் என் பெயரும் வந்தது என் அதிர்ஷ்டமே!.

இந்த வருடமும் கூடிய விரைவில் ஸ்போர்ட்ஸ் வரப்போகிறது. பல பயிற்சிகள் தொடங்கிவிட்டன. வேலை முடிந்தவுடன், சார்ட்ஸ் டீசர்ட்ஸ் என, உடைகள் மாற்றிக்கொண்டு திடலுக்கு பயிற்சி மேற்கொள்ளச் செல்பவர்களைக் காணலாம். நெட்பால் குழுவும் இம்முறை பயிற்சியில் நன்கு தேறியிருந்தனர். புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ள பல பல்கலைக்கழக மாணவர்கள்  இம்முறை அதிக அளவில் இருப்பதால், எங்களில் பலர் (விலையுயர்ந்த டீ சர்ட், காலணிகளுக்கும் விளையாடும், போங்கு வீராங்கணைகள்) அந்தக்குழுவில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர். முழுக்க முழுக்க இளைஞர்களையே பங்கு பெற வைத்து, சாதித்துக்காட்ட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர்.. சென்ற வருட மூக்கறுப்பை சரிக்கட்ட.!

அதே பழைய சேர்மென் தான் இம்முறையும், அவர் என்னிடம் வந்து, நிறைய  மாணவர்கள், நம்ம பிள்ளைகள் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கின்றார்களே, அவர்களையெல்லாம் விளையாட்டிற்கு அழைக்கவேண்டியதுதானே!? சீனர்கள், மலாய்க்காரர்களைப் பார், எல்லோரும் மிக உற்சாகமாகக் கலந்து கொண்டுள்ளனர். நம் பெண் பிள்ளைகள் சும்மா, இன்னும் கொஞ்ச நாளில், கம்பனியில் யார் மிகப்பெரிய குண்டுப்பெண் என்றால், சிலருக்கு முதல் பரிசு கிடைக்கலாம், என்று சொல்லி கண்களைச் சிமிட்டினார். எனக்கு சுறுக்கென்றது. நான் உங்களைச் சொல்லவில்லை என்றும் முன்னெச்சரிக்கையாக வேறு சொல்லிச்சென்றார்..!

நீங்கள், அவர்கள் எல்லோரையும் சந்தித்து, கண்டிப்பாக எதாவது ஒரு விளையாட்டில் கலந்து கொள்ளச்சொல்லுங்கள், கம்பனியில் இது ஒரு அற்புதமான வாய்ப்பு, நன்கு பயன்படுத்திக்கொள்ளலாமே, என்று ஆலோசனையும் வழங்கினார்.

நானும் ஒவ்வொருவராக அழைத்து, விளையாட்டுகளைப் பற்றிச்சொல்லி, எதில் ஆர்வம் இருக்கிறது.? என்றும் கேட்டேன். ஒருவருக்கும், எதிலுமே ஆர்வம் இருப்பதாகத்தெரியவில்லை. வேலை முடிந்து, வீட்டுக்கு விரைவாகச் செல்ல வேண்டும். `அம்மா திட்டுவார் ’என்கிற பதில் தான் வந்தது.

அம்மா திட்டுவார்.. அம்மா திட்டுவார் என்கிற சாக்குப்போக்குகளைச் சொல்லிச்சொல்லியே - நாங்கள் சும்மா ஆனது போதுமே.. நீங்களாவது ஓடி விளையாடுங்கள் பாப்பா..