செவ்வாய், ஜனவரி 17, 2012

அகிம்சை

வலி கொடுத்தால்
கவி கொடு
பயம் கொடுத்தால்
திருப்பிக் கொடு

எங்கேயும் எப்போதும் - ரசித்த திரைப்படம்

அஞ்சலி, ஜெய், சுனைனா, ஒரு அழகான ஹீரோ (பெயர் தெரியவில்லை) நடித்த ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற படம் மனதைத்தொட்ட படம். அருமையாகச் சொல்லப்பட்ட கதை.

பலரின் கனவுகளை, பிரயாணங்கள் எப்படிக் கொலை செய்கிறதென்பதை பதற்றம் நிறைந்த, அதே வேளையில் அற்புதமான காதலையும் இணைத்துச் சொல்லும் படமாக அமைந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. நன்றி இயக்குநருக்கு. (பெயர் தெரியவில்லை)

படத்தைப்பார்த்துவிட்டு நானும் கண்ணீர் சிந்தினேன். இருப்பினும், மனதிற்குக் குதூகலத்தைக் கொண்டு வந்த காட்சிகளும், வசனங்களும் அதிகமென்று சொல்லலாம்.
இப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த சில காட்சிகள், இங்கே;

* முதலில் இசை அற்புதம். கதைக்கு உயிரோட்டமே அந்த இசை தான். (இசையமைப்பாளர் பெயர் தெரியவில்லை)

* அற்புதமான பாடல்கள் - குறிப்பாக, மாசமா ஆறு மாசமா.. அதிகம் கவ்ர்ந்தப் பாடல் (பாடகர் தெரியவில்லை) ஜெய் யின் நடனம்- ரொம்ப சிம்பல்’லாகத்தான் இருந்தது இருப்பினும் மனதை கொள்ளைக்கொண்டு விட்டது. அந்த தோள் பட்டையைத் தூக்கித்தூக்கி அசைக்கும் போது, அதை எல்லோரும் சொல்லிவைத்தாட்போல் செய்யும் போது - ரசிக்கும் படியே இருந்தது. மிகவும் பிடித்த நடனம் பாடல். ( நடன மாஸ்டர் - தெரியவில்லை)

* சுனைனா நடிப்பு, இல்லை இல்லை பாதிரமாகவே வாழ்ந்துள்ளார். நடிப்பதைப்போலவே தெரியவில்லை. அவ்வளவு எதார்த்தம். எங்களை நாங்களே பார்ப்பதைப்போல் இருந்தது. ஒரு காலத்தில் நாங்களும் இப்படித்தான், தொட்டதிற்கெல்லாம் பயம், சந்தேகம்.. யாரைப்பார்த்தாலும் குறுகுறுப்பு. ஒரு காட்சியில் சுனைனா சொல்வார், ‘ஏங்க உங்க ஊரில், பொம்பலைங்க, சமைக்கவே மாட்டார்களா? இவ்வளவு பேர் கடையில் உட்கார்ந்திருக்காங்க!?” அதற்கு அவர் சொல்வார், எல்லோரும் வேலைக்குச் செல்பவர்கள், அதன் இப்படி என,  “நாங்க ஆம்பலைங்களுக்கே சாப்பாடு கொடுத்து அனுப்புவோம், எங்க ஊரில்” என்று சொல்லி முகஞ்சுளிப்பார். எதார்த்தமாக இருந்தது.. இதை நாங்களும் செய்துள்ளோம்.

* சுனைனாவின் அக்கா (பெயர் தெரியவில்லை) விலாசம் சொல்வாரே.. அம்மாடி அப்படியே இயற்கையாக.. நாங்களும் இப்படியெல்லாம் சொல்லியுள்ளோம். ஒரு கட்டத்தில், சுனைனா அந்த ஹென்சம் ஹீரோ விடம் போனைக்கொடுத்து, அக்கா சொல்லும் இடத்தை மனதில் வாங்கச் சொல்வார். சில வினாடிகள் தான், போனை வைத்துவிடுவார். ஏன் இவ்வள்வு சீக்கிரமாக தொலைபேசியை வைத்து விட்டீர்கள் என்று கேட்டதிற்கு, அதற்கு அவர், உங்க அக்கா உன்னிடம் சொன்னது வழி, என்னிடம் சொன்னது முகவரி.. - வாவ் வாவ் ..ரசித்தேன்.

* சுனைனாவிற்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற விருக்கும். அவருக்கு ஒரு நாள் மட்டும் பழகிய அந்த ஹீரோ மீதே ஞாபகமா இருப்பார். தனக்கு அவர் தான் பிடிக்கும் என்றபோது, அவளின் அக்கா சொல்வார். “ஒரு நாள் பழக்கத்தில் எப்படி அவனைப்பிடிக்கிறது என்கிறாய்?” அதற்கு சுனைனா சொல்லிய பதில்.. படம் பாருங்க - அற்புதமான பதில் அது. சபாஷ் வசனகர்த்தா (பெயர் தெரியவில்லை)

*சுனைனா - அவர் அம்மாவின் முன் ஒரு கவிதையை வாசிப்பார். ’நம்பினேன்..நம்பவில்லை. நம்பவில்லை நம்பினேன் ஏன் நம்பினேன் ஏன் நம்பவில்லை.... ’ இப்படி வரும்- அவரின் அம்மா ஒரு மாதிரியாகப் பார்ப்பார். பிறகு வேப்பிலை அடிக்கப்படும் சுனைனாவிற்கு. காதல் வந்தால் எவ்வளவு சுலபமாக, அற்புதமான கவிதைகள் வருகிறது பாருங்க.! ரசித்தேன்

* அஞ்சலி - படம் முழுக்க இவரைத்தான் ரசித்தேன். ஒரு தமிழ் பெண் இப்படித்தான் இருப்பார். நாங்களும் ஒரு காலத்தில். படபட பேச்சு.. பயமில்லாமல் இருப்பது. காதல் - அவர் சொல்லும் விதம் ரொம்ப பிடிச்சிருக்குங்க. என்ன அழகாக.... ஜெய்’யை அழைத்துக்கொண்டு செல்வார் மருத்துவமனைக்கு எச்.ஹை.வி டெஸ்ட் எடுக்க.. படு சுவாரிஸ்யம் அடுத்தடுத்த கட்டங்கள்.

* அம்மா, அவர் உன்னைப்பார்க்கல, என்னைப்பார்க்கிறார், ஆமாம் நான் அவரைக் காதலிக்கிறேன் - அஞ்சலி. ஆத்தாடி.. துடப்பக்கட்டை அடிக்கு பயமேயில்லாமல்.

* உடல் உறுப்பு தானமும் காதலோடு மிக அழகாச் சொல்வார் அஞ்சலி. அதன் அவசியம், ஏன் எதற்கு பண்ணவேண்டும் போன்ற விவரங்கள் - அத்துமீறி அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதைப்போல் இருந்தாலும், இவனுங்கள இப்படித்தான் மிரட்டி தானம் செய்ய வைக்க முடியும் இல்லையேல் எங்கே?? ஆண்கள், ரத்த தானம் நாள் முழுக்கக் கொடுப்பார்கள் ஆனால் உடல் உறுப்புதானம் செய்ய பெண்களுக்குத்தான் தைரியம் அதிகம். காதலோடு உருப்படியான ஒரு தகவலையும் சேர்த்துக் கொடுத்திருக்கின்றார்கள்.

* அஞ்சலியா இப்படி.. ! மாஹாநதி கமல் போல் ஒரு கட்டத்தில் அழுவார் பாருங்க.. என்னமாய் இந்த பொண்ணு.! அற்புதமான நடிப்புங்க... கதிரேசா.. போயிட்டியா டா? மனதில் சுமந்த அந்தக் காதல் வெளிப்படும் பாருங்க.. , அவன் அருகில் இருக்கும் வரை ஓயாமல் ஓட்டிக்கொண்டே இருப்பார், பஸில் கூட பேசமாட்டார். அடிப்பார், காதைப் பிடித்து திருகுவார்.. எப்போதும் உர்ர்ர்ரென்று.. ஆனால், அந்த இறுதிக் கட்டத்தில், தமிழ் பெண்ணின் காதல் வெளிப்படுகிறது பாருங்களேன்.. நானே அழுது விட்டேன். மனதில் அப்படியே நிற்கிறது அந்தக் காட்சி.

* அஞ்சலி - தனது அப்பாவைப் பார்க்க அனுப்புவது. ஆறு வருடமாக தன்பின்னால் சுற்றும் ஒருவனைப் பார்க்க அனுப்புவது, ஷாப்பிங் மால் சென்று உடைகள் வாங்கும் போது. ஜெய்’யிடம் யோசிச்சுச் சொல் அவசரமில்லை என்கிற போது, என் மேல் உனக்குக் கோபமே வராதா என்கிற போது.. காத்துக் காத்து நின்று கதவு திறக்கப்படாதபோது, வெறுப்புடன் சென்று ஜெய்யைப் பிடித்து அரை கொடுப்பது.. காப்பிக் கடையில் மடமடவென காப்பி குடிப்பது. நீ நர்ஸ்ஸ்சா!!? என்று சலிப்புடன் ஜெய் அஞ்சலியைப்பார்த்து கேட்பது.. இந்த மூஞ்சிக்கு டாக்டர் கேட்குதாக்கும்!? என அவள் பதில் சொல்வது. ஏங்க ஏங்க ஏங்க.. என, ஜெய் கொஞ்சி பின்னாடியே வருவது.. வடிவேலு, விவேக் இல்லாமலேயே படு பயங்கர நகைச்சுவைக் காட்சிகள் இவை அனைத்தும்.

*பஸ்சில் அங்கே உட்காருங்க, இங்கே உட்காருங்க என அந்த ஹென்சம் ஹீரோவை எல்லோரும் பின்னால் தள்ளுவது. கடைசி சீட்டிற்குச் சென்றவுடன்.. இனி உங்களை விரட்ட முடியாது என்கிற போதும், முதலில் வயிறு வலி என, பிறகு கால் வலி என புலம்பும் போதும்.., நல்ல காவலனாக கோபத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு, சுனைனா இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்துக்கொடுக்கும் போதும், நமக்கே அந்தப் பாத்திரம் பிடித்துப் போகிறது. இறுதியில் அழுகிறார், அது நல்லாவேயில்லை. அவரின் அந்த பாத்திரத்திற்கு அழ வேண்டிய அவசியமில்லை. பதற்றப்படாமல் அதே கம்பீரத்துடனேயே காட்டியிருக்கலாம். நல்ல பாத்திரம்.

* ஜெய் - ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்து, இறுதியில் எல்லோரையும் அழவைத்து விட்டாரே.! ஆரம்பத்திலிருந்து அவர் மனதிலே நிற்கவில்லை. படம் முடிந்தபோது அவர் மட்டுமே மனம் நிறைந்து நிற்கிறார். என்ன குழந்தைத்தனமான நடிப்பு- இறுதி மூச்சுவரை அஞ்சலிதான் - கடைசியாக அம்புலன்சில் ஏறும் போதும் கூட, ‘நீங்களும் வாங்க’ என்பார். அது தான் அவரின் இறுதி வசனம். நேற்றிலிருந்து இன்னமும் எனக்கு அவர் (ஜெய்)  நினைப்புத்தான். புள்ளைய வீணாக கொன்னுட்டாரே இந்த இயக்குநர். !!

* படத்தில் பீதியை கிளப்பிய ஒரு விஷயம் எதுவென்றால், பஸ் சாலையில் செல்லுகிற காட்சியை காட்டுகிற போது, மனம் திக் திக் என்கிறது.. அவ்வளவு பெரிய வாகனத்தை அசுர வேகத்தில் கொஞ்சம் கூட பொறுப்பேயில்லாமல் காட்டுமிராண்டித்தனமாக ஓட்டுகிற ஓட்டுனர்கள். அங்கு மட்டுமல்ல உலகமுழுக்க இதேநிலைதான். மலேசியாவிலும் அடிக்கடி இதுபோன்ற சாலை விபத்துகள் பல பொறுப்பற்ற பஸ்  ஓட்டுனர்களால் தான் நிகழ்கின்றன. திரைப்படத்தில் பஸ்கள் மோதிக்கொண்ட போது, ஐயோ, பிறந்ததிலிருந்து மகளைக் காணாத அப்பா ஒருவர் உள்ளே இருப்பாரே.. என்ன ஆச்சோ? என நம்மை கொஞ்ச நேரம் உரைய வைத்து விட்டார் டைரக்டர்.

* படத்தில் வரும் எல்லாக் காதலும் இனக் கவர்ச்சியில்தான் ஆரம்பமாகிறது. ஒரு காதல் பஸ்சில், தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டும்... ஒரு காதல், யாரைப் பார்த்துக் கை காட்டுகிறோம் என்பது கூட தெரியாமல் மலர்ந்து ஆரம்பமாகி குதூகலிப்பிலும். ஒரு காதல், ஒரே நாளில் பழகிப் புரிந்து  நெருக்கமானது போன்றும்.. இப்படியாக காதலின்  இயற்கைத்தன்மையை சீர்குழைக்காமல் மிக அழகாகச் சொல்லியுள்ளார் பட இயக்குனர்.

* படம் படு சூப்பர். அவ்வப்போது மலரும் சில நல்ல படங்களுக்கு மத்தியில், ஒரு அற்புதமான திரைப்படத்தைப் பார்த்த திருப்தி.

* நிச்சயம் காலத்தைக் கடந்து வாழும் இந்தப் படம்.


பகிர்தல்

எல்லா வாசிப்பும்
பகிரக்கூடியதல்ல
சிலது, ரகசியமாக
ரசிக்கப்படுகிறது..