புதன், நவம்பர் 28, 2012

மௌனம் போதிக்கப்படுகிறது

கற்க கற்க
மௌனம்
போதிக்கப்படுகிறது

%%%%%

வாங்கிய மூச்சு

கனவில் ஓட்டப்பந்தயம்
நான் முன்னே
நானே முன்னே
முதல் நிலையில் நானே
கனவில் மட்டுமே
இது சாத்தியம் மூச்சுவாங்காமல்..

%%%%%%

ஒப்பனை

வெள்ளையடித்து
வர்ண சாயம் பூசி
திஷ்டி பொட்டோடு
கிளம்பியாச்சு
பணிக்கு...

%%%%%%

ஞாயிறு

அமைதியான சூழல்
கடிகார முள் டிக் டிக் டிக்
தலையணையை தேடும் தலைகள்
அதற்குள் விடிந்துவிட்டதோ என
போர்வைக்குள்.. 
மீண்டும் புகுந்துக்கொள்கிறது
இந்த உடல்..

%%%%%%

வெட்டியாய்..

எதற்காக இந்த பரபரப்பு?
தெரியாமலேயே பல நாள்கள்
என்னை விட்டு ஓடி
மறைந்து கொண்டிருக்கிறது.

%%%%%%

கீச்சுக்குரல்

மாட்டிக்கொண்ட எலியும்
மரத்தில் உள்ள குருவியும்
ஒரே மாதிரி கீச்சிடும்

%%%%%%%%

கண்சிமிட்டல்

கண் சிமிட்டும்
கேமராக்களின் முன்
கலகலப்பாக இருக்கின்றோம்
காலம் கடந்த பொழுதுகள்
நம்மைப் பார்த்து
கண்ணடிப்பதற்காக..

சிறு வணிகம்....

சில்லறை வணிகர்கள் பற்றிய பதிவுகளை தற்போதைய நாட்டு நிலவரமாக ஆங்காங்கே (பேஸ்புக் மற்றும் ப்ளாக்) படிக்கநேர்ந்தது. அங்குள்ள (இந்தியா) நிலவரம் தான் இது. இதற்கு நான் சொல்கிற கருத்து பெரிய மாற்றத்தைக்கொண்டு வந்து விடாது என்பது தெரியும், இருப்பினும் ஒரு பகிர்தல்தான்.

அதாவது சில்லறை வணிகர்களை துடைத்தொழிக்கும் முயற்சியாக, பிரபல பேரங்காடிகளை நிறுவி, பலகோடி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்போவதாக பரவலாகச் சொல்லப்பட்டு வருவதை, பலர் பலவாறான   சாதகபாதகங்களை  எடுத்தியம்பி தெளிவான ஆய்வுகளை மிகத்துல்லியமா பார்வைக்குக் கொண்டு வந்து,  அந்த முயற்சிக்கு எதிர்ப்புக்குரல் தெரிவித்து வருகின்றனர்.  அதிகமான ஏழைகள் வசிக்கின்ற இந்தியா போன்ற நாடுகளில், சிறுவணிகத்தின் மூலம் தம்மை குட்டித் தொழிலதிபர்களாக உருவாக்கிக்கொள்கிற இந்த அணுகுமுறை வரவேற்கக்கூடியதே.

இருப்பினும் அரசாங்கம் அமல் படுத்த விருக்கின்ற இம்முயற்சியை எதிக்கவேண்டுமென்று ஒரேடியாக புறக்கணிக்காமல், சில பாதகங்களையும் நினைவில் கொண்டு கருத்துக்களை சீர்தூக்கிப்பார்ப்பது நல்லதென்று படுகிறது.

அடியேனும் இந்த சிறு வணிகத்துறையில் சம்பந்தப்பட்டு பாதிக்கப்பட்டு நொந்துபோய், வியாபரத்துறையே வேண்டாமென்று வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவள். அந்த அளவிற்கு கீழறுப்புகள், பிக்கல் பிடுங்கல்கள் மலிந்த  துறை இது. சுதந்திர போக்குடன் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு, கட்டுப்பாடற்ற நிலையில், நாம் வியாபாரம் செய்யும் பொருட்களையே மற்றவர்களும் செய்து. நாம் விற்கும் விலையை விட குறைத்து விற்று, கஸ்டமர்களை அவர்களின் பக்கம் இழுத்து, தொடர்ந்து அவர்களும் வியாபாரம் செய்யாமல், நம்மையும் நிம்மதியாய் விடாமல் அலைக்கழிக்கும் நிலை இந்த சிறு வணிகத்துறையில் அதிகமாக உள்ளதென்பதை எத்தைனை பேர் அறிவர்?

மேலும், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆங்காங்கே அதிகரிக்கின்ற சில்லறை வணிக ஆசாமிகளால்தான் நாடும் நகரமும் தூய்மைக்கேட்டால் சீர்குலைகிறது என்பதனையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தெருவோரம் தின்பண்டங்களை வியாபாரம் செய்கிறவர்கள் செய்கிற அட்டூழியங்களால் நிறைகின்ற குப்பைகள் தூய்மைக்கேட்டினை விளைவித்து, சுற்றுவட்டார மக்களை, எலி, ஈக்கள், கொசு போன்றவற்றால் நோயுறச் செய்து விடுகிறது என்பதனையும் கவனத்தில் கொள்தல் அவசியம். யார் எவரால் இந்த தூய்மைக்கேடு நிகழ்கிறதென்று, சம்பந்தப்பட்டவரை அழைத்து விசாரனைக்கு உட்படுத்தவும் முடியாமல், தள்ளுவண்டியில் நாடு நகரம் என இடங்களை மாற்றிக்கொண்டு, செல்கிற இடங்களையெல்லாம் குப்பைமேடுகளாக ஆக்கிவிடுகின்றனர் இந்த சில்லறை சிறு வணிகத்தினர்.

தூய்மைக்கேட்டிற்கு பொறுப்பு ஏற்கிற நிலை உருவாகின்ற போது, தனிமனித சில்லறை வியாபரம் சுமூகமாக நடைபெறலாம்.

எங்கள் ஊரின் (மலேசியா) நிலையும் இதுதான், ஆரம்பத்தில் சில்லறை வியாபாரிகளின் ராஜியத்தால் சாலை நெரிசல், தூய்மைக்கேடு, பெரிய முதலீட்டைக்கெடுக்கும் நிலை, செல்கிற இடங்களில் எல்லாம் வாக்குவாதம், ஒருவர் மற்றவர் வியாபாரத்தை கெடுக்கும் நிலை என ஒரே அராஜகம். இப்போது பெரிய பெரிய நகர்களில் இவர்களின் நடமாட்டத்திற்கு தடை வித்தித்து, சிறிய சிறிய கடை வசதிகளைச் செய்துகொடுத்து, அரசாங்கத்தின் மூலம் வியாபாரத்தையும் பதிவு செய்துகொண்டு (பிஸ்னஸ் ரெஜிஸ்டர்), நிகழ்கின்ற அத்துனை பின்விளைவுகளுக்கு அவர்களையே பொறுப்பு ஏற்கும்படி செய்துவிட்டார்கள். இதனால், பலவிதமான சிக்கல்கள் இடைஞ்சல்களில் உழன்று, மனவுளைச்சலுக்கு ஆளாகி வியாபர துறையே வேண்டாமென்று ஓடிவிட்டவர்கள் பலர். காரணம் பொறுப்புகளை ஏற்பதற்கு யாரும் இங்கே தயாராய் இல்லை என்பதுதான் நிதர்சனம்.