வியாழன், ஏப்ரல் 11, 2013

இங்கிதம்..

நம்மவர்களின் மனோபாவங்கள் நம்மை எவ்வளவு மனவுளைச்சலுக்கு ஆளாக்கும் என்பதனைச்சொல்லும் ஒரு சிறுகதை இது.

கேளுங்க கதையை.;

என்னுடைய கடை வீடு ஒன்றினை விற்பனை செய்வதற்கு நான் ஆள் பார்த்துக்கொண்டிருந்தேன். போகிற போக்கில் பலரிடம் சொல்லிவைத்தாகிவிட்டது. அதற்கான நேரம் வராததால், சரியான விலையில் கொடுத்தும், வாங்குபவர்கள் அமையவில்லை.

அந்த வீட்டின் தற்போதைய விலை அதிக அளவில் ஏற்றம் கண்டுள்ளது. இருப்பினும் வாங்குபவர்கள் நம்மவர்களாக இருந்தால் வாங்கியவிலையை விட கொஞ்சம் கூடுதல் லாபத்தில் விற்கலாமே என்கிற சிந்தனையில் இருந்தேன்.

வீட்டின் விலை, ஐம்பத்தைந்தாயிரம் நான் வாங்கும்போது. பதிநான்கு வருடங்களுக்குமுன். இப்போது அவ்விலை நான்கு மடங்காக உயர்வு கண்டுவிட்டது. எனக்கு நான்கு மடங்கெல்லாம் வேண்டாம். இரண்டு மடங்கில், அதாவது நூறாயிரம் விற்றால் போதுமானது. அவ்விலைக்கும் ஆட்கள் வந்தார்கள், பார்த்தார்கள், சென்றார்கள் பதில் இல்லை.

இப்படி காலதாமதாமாவதற்கு காரணமும் உள்ளது. அதாவது அந்த வட்டாரம் அதிக அளவில் அயல்நாட்டவர்கள் வசிக்கும் கோட்டையாக மாறிப்போனதால், உள்ளூர்வாசிகள் அங்கு தங்குவதற்குத் தயங்குகின்றார்கள். வன்புணர்வு, வழிப்பறிக்கொள்ளை, கொலை, திருட்டு, கடத்தல், விபச்சாரம் போன்றவற்றில் ஈடுபட்டு அந்த இடத்தின் பெயர் அடிக்கடி பத்திரிகைகளில் அடிபடுவதால் நிலைமை மோசமாகிவிட்டது. அங்கே விடுகளை வாங்குவதற்கு மக்கள் தயங்குகின்றார்கள். வாடகைக்கு வேண்டுமானால் விடலாம், அதுவும் அயல்நாட்டவர்களின் மத்தியில் கிராக்கிதான்.

வாடகைக்குக் கொடுத்திருந்தேன்.

இரண்டு நாள்களுக்கு முன் சரோஜா என்கிற ஒரு பெண் என்னைத் தொடர்பு கொண்டு வீட்டின் விலை பற்றி விசாரித்தார்.

“ விஜி தானே, அப்பா நல்ல வேளை நம்பர் இருந்தது. அந்தக் கடை வீடு வித்துட்டீங்களா’ங்க?”

“இன்னும் விற்கவில்லை, சேவாக்கு போய்கிட்டு இருக்கு. ஏங்க வேணுமா?”

“ சேவாக்கு கிடைக்குமா?”

“சேவாக்கு ஆள் இருக்காங்களே, வேணும்னா, வாங்கிக்கோங்க...”

“வாங்கிடுவேன் ஆனா இப்போ பணம் இல்லைங்க. அதான் சேவாக்கு..!!?”

“ சேவாக்கு ஆள் இருக்காங்களேன்.. என்ன செய்ய.?”

“வெளியூர் காரன்தானே, போன்னா போகப்போறான்.”

“அதெல்லாம் முடியாது..வேணும்னா டிப்போர்ஷிட் கொடுத்து புக் பண்ணுங்க, அதற்கப்புறம் சேவா ஆட்களை வெளியேற்றுவதைப்பற்றி பேசலாம். அதே விலைதான். விலையை ஏற்றவில்லை.”

“நான் ஜூலை மாதம்தான் பணம் கொடுக்கமுடியும். என் மகள் பிரைடல் படித்து சர்ட்டிபிகேட் எல்லாம் எடுத்திட்டா, அந்த ஏரியாவில் ஒரு பிரைடல் ப்யூட்டி பாலர் தொறக்கலாம்ன்னு நினைச்சிருக்கோம். கடைவீடு, ஆள் நடமாட்டம் இருக்கும், மேலே வீட்டிலேயே தங்கிக்கொண்டு, இந்த பிரைடல் ப்யூட்டி பாலரும் நடத்தலாம்ன்னு நினைக்கிறோம்..”

“தாராளமா செய்யலாம், வீட்டை வாங்கிக்கொண்டு செய்யுங்கள். வாடகையைப் பற்றிபேசவேண்டாம், வீட்டில் ஆள் இருக்கு..”

“சரிங்க, அப்படியென்றால் வீட்டை ஒரு முறை பார்க்கலாமா?” என்று இரண்டு நாளாக என்னைத்துரத்தியவண்ணமாகவே உள்ளார் சரோஜா.

நேற்று அழைத்துச்சென்று காண்பிக்கலாமென்று முடிவு செய்திருந்தேன்.  கடுமையான மழை. மழையென்றால் மழை அப்பேர்ப்பட்ட பேய்மழை. என்னால் இன்று வர இயலாது, என்பதனை சொல்வதற்கு, நான் அழைத்தேன் அவர் எடுக்கவில்லை. அவர் அழைத்தார் நான் எடுக்கவில்லை. மீண்டும் நான் அழைத்தேன் அவர் எடுக்கவில்லை. பிறகு அவர் அழைத்தார் நான் எடுக்கவில்லை. பிறகு இருவரும் மாறி மாறி அழைத்தோம் அழைப்பு செல்லவில்லை. கடுமையான மழையின் காரணமாக நெட்வர்க் பிரச்சனை வந்துவிட்டது.அதுமட்டுமல்ல அவர் எனக்கு மிஸ்ட்கால்தான் கொடுக்கின்றார். நான் அழைத்தால் சாவகாசமாகப் பேசுகின்றார். அதிலும் மிச்சம் பிடிக்கின்றார்கள்..என்ன செய்ய.!  

வீட்டிற்கு வந்து தொலைப்பேசியைப் பார்த்தால், பதினைந்து மிஸ்ட் கால்கள். எடுக்காத அழைப்புகள். அழைத்தேன். “நான் அவ்வீட்டின் கடைத்தெரு வாசலில் தான் நின்றுகொண்டிருக்கின்றேன். நீங்கள் எங்கே? ” என்றார் சரோஜா.

மழையின் கடுமையால் வீட்டிற்கு வந்துவிட்டேன் எனவும், நாளை வேண்டுமானால் பார்க்கலாம் என்றேன். இல்லை நான் இங்கே நிற்கின்றேன், நீங்கள் முடிந்தால் இப்பொது வரப்பாருங்கள். என்றார் அம்மணி. மழை மழை கடுமையான மழை நான் இப்போது எங்கும் வரமுடியாது என்று கூறிவும், சரி அப்படியென்றால் நாளை கண்டிப்பாக வரவேண்டும் என்றார்.

இன்று காலையிலிருந்து அழைப்புகள் ஓயவில்லை. ‘யங்க கண்டிப்பா வந்திடுங்க.. கண்டிப்பா வந்திடுங்க.. என நினைவுறுத்தியவண்ணமாக இருந்தார்.  மாலை நேரங்களில் மழை வருவதால், உணவு நேரத்தில் சந்திக்கலாம் என்கிற எனது முடிவைச் சொன்னேன். மதிய உணவு நேரத்தில் வரவேண்டுமென்றால் என்னை அழைத்துவர யாரும் இல்லையே, நீஙகள் வந்து அழைத்துச்செல்கிறீர்களா? என்று கேட்டார்.  மதிய உணவுநேரத்தில் அரக்கப்பறக்க ஒடிவரும் என்னை, அங்கே வா, இங்கே வா என அலைக்கழிக்கவேண்டாம். முடிந்தால் சனி ஞாயிறுகளில் பார்க்கலாம். என்றேன். முடியாதுங்க, எனக்கு அவசரமாக வேண்டும். சரி நானே வந்துவிடுகிறேன். அந்த ஸ்பேர் பார்ட் கடையில் காத்திருப்பேன், அங்கே சந்திக்கலாம் என்றார்.

மதிய உணவு நேரம் வருவதற்குள் காருக்கு விரைந்தேன். பாதிவழி சென்றவுடன் தான் கைப்பேசியை எடுத்துவர மறந்திருந்தேன். அடக்கடவுளே.. எப்படி?

காரை வீட்டின்முன் நிறுத்திவிட்டு. (கார்களின் வரிசை, நெரிசல் அதிகம்..) சரோஜாவைத்தேடினேன். மூச்சுவாங்க ஓடிவந்தார். உங்களின் காரைப்பார்த்ததிலிருந்து கார் பின்னாலேயே ஓடிவருகிறேன். நீங்கள்தான் என்னைப்பார்க்கவேயில்லை. என்றார்.

ஸ்பேர் பார்ட் கடையில் நிற்பதாகச்சொன்னீர்களே, அங்கே நிற்கவேண்டியதுதானே.! ஏன் இப்படி மூச்சுவாங்க ஓடிவாருவானேன்!!.. கேட்டேன். ஒரு அசட்டுச்சிரிப்பு அவரிடம்..

இருவரும் வீடு பார்க்கக்கிளம்பினோம். வீடு சாத்தியிருக்கிறதே, எப்படிப் பார்ப்பது. ?

இதோ காலியாக இருக்கும் இந்த பக்கத்துவீட்டைப்பாருங்கள் அதுபோலவேதான் இருக்கும் நம் வீடும். வீட்டைப் பார்க்கவேண்டுமென்றால், வாடகைக்கு இருப்பவர்கள் வந்தபிறகு பார்க்கலாம், என்றேன். சம்மதித்தார்.

வீட்டைச்சுற்றிக்காட்டிய பிறகு இருவரும் நடந்து வந்துகொண்டிருக்கும்போது, வழியில் ஒரு பழைய தோழியைச் சந்தித்தேன். அவரும் வீட்டைப்பற்றி விசாரித்தார். வீடு என்னாச்சு? வித்துட்டீங்களா? நான் ரொம்ப நாளாக உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் பாசாருக்குக்கூட வருவதில்லையே நீங்கள்.! என்னாச்சு? என்று மிகுந்த அக்கறையோடு விசாரித்தார். நான் வீடு மாறிப்போய் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன என்கிற விவரத்தைச்சொல்லி, எனது தொலைப்பேசி எண்களைக்கொடுத்தேன்.

சரோஜாவிற்குக் கோபம்வந்துவிட்டது. என்னிடம் வீடு விற்பதாகச்சொல்லிவிட்டு, இப்போது அவரிடம் கொஞ்சுகின்றீர்களே. இதுக்கு என்ன அர்த்தம்?  நான்தான் வீட்டை வாங்குகிறேன் என்றேனே, பிறகு ஏன் அவரிடம் நம்பர் கொடுக்கின்றீர்கள்.! நான் இல்லாத சமையத்தில் ரகசியமாக பேரம் பேசவா? என்றார் கொஞ்சம் கூட இங்கிதமில்லாமல். எனக்குத்தூக்கிவாரிப்போட்டது. என் தோழியும் சுதாகரித்துக்கொண்டு, ஓ..இவங்கதான் பையரா.. ஒகே ஒகே. நான் உங்களிடம் நேரமிருக்கும்போது அழைத்துப் பேசுகின்றேன், என்று சொல்லி இடத்தைக்காலி செய்தார்.

சரோஜாவின் பக்கம் திரும்பி, இது உங்களுக்கே ஓவரா இல்லை.!? நீங்கள் வீடு பார்க்க வந்த்தால் நான் யாரிடமும் பேசக்கூடாதா? இவ்வளவு நாள் வாங்காத வீடு, இப்போ விசாரிக்கும்போதே உடனே வாங்கிவிடுவார்களாக்கும்.. கடுப்பு வந்துவிட்டது. சுதாகரித்துக்கொண்டு.. மதியவேளை என்பதால், உணவு உண்ண சீனக்கடைக்கு நாசிஆயாம் சாப்பிட அழைத்துச்சென்றேன்.

சாப்பாடு ஆடர் கொடுத்தாச்சு. சாப்பாடு வருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கும்போது அவருக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது.

இப்போதான் சாப்பிட வந்தேன். ஓ..வீடு இருக்கா? எந்த ஏரியா? கடை போடலாமா? என பேச்சு தொடந்தது.

சாப்பாடு வந்தது. “யங்க..யங்க.. நான் அவரசமா வெளியே போகணும், இந்த சாப்பாட்டை புங்குஸ் (பொட்டலம்) பண்ணச்சொல்லுங்க, என்றார். குளிர்பானத்தை மடக்கு மடக்கு என குடித்துமுடித்தவேளையில் காலில் சுடுதண்ணீ ஊற்றியதுபோல் பரபரப்பானார். அங்கு வந்த சீனத்தியிடம், இவரின் தட்டில் உள்ள உணவை பொட்டலங்கட்டச்சொல்லி, அவரிடம் கொடுக்கச்சொன்னேன். பொட்டலத்தை வாங்கியவர், பணம் செலுத்துவதைப்பற்றியெல்லாம் கொஞ்சம்கூட கவலையில்லாமல், என்னிடம் நன்றிகூட சொல்லாமல், பொட்டலத்தை வாங்கிய மறுவினாடி மறைந்துபோனார்.

சீனர் கடையில், நான் மட்டும் தனிமையில், நேரமின்னையால், அரக்கப்பறக்க உணவை வாயில் போட்டுக்கொண்டு, சாப்பிட்டும் சாப்பிடாமலும் கடையை விட்டு வெளியேறி அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

தாமதம்தான்.. இருப்பினும் பூனைபோல் உள்ளே வந்து அமைதியாக அமர்ந்துகொண்ட்டேன்.

கைப்பேசியை எடுத்துப்பார்த்தேன். சரோஜா இருபத்தைந்து முறை அழைத்திருந்தார். அழைத்துக்கொண்டும் இருந்தார். நான் எடுக்கவில்லை. என்ன அவசரமாக இருந்தாலும், இனி இவர் தேவையில்லை என்கிற முடிவில் நான்.. !!