புதன், ஜனவரி 09, 2013

வெற்று உரையாடல்

நேற்று கோவிலுக்குப்போணோம்..
`ஆமாம் போணோம்.’

அங்கே நான் கட்டிய மாலை, பார்த்தாயா? எப்படி?
`பார்த்தேன், ரொம்ப அழகா இருக்கு..’

ஐய்யோ, சேலையை மேலேயே கழற்றிப்போட்டுவிட்டேனே.. துவைத்து விட்டாயா?
`ம்ம்ம்.. துவைத்துக் காயப்போட்டு மடித்து வைத்தாச்சு.’

நிறைய பலாக்கொட்டைகள் கொண்டுவந்தேனே..எங்கே வைத்தாய்?
`ஐஸ் பெட்டியில் இருக்கே.’

அறிவிருக்கா உனக்கு? அத போய் யாராவது ஐஸ் பெட்டியில் வைப்பாங்களா. பிரட்டு நெத்திலி போட்டு, சாப்பிடலாம்.
`சரி, அப்படியே செய்கிறேன்.’

நாளைக்கு என்ன நாள்..?
`வியாழக்கிழமை..’

நான் அதைக்கேட்கல, என்ன விஷேசம்?
`ம், என்ன விஷேசம்?’

உனக்குத்தெரியாதா?
`சொல்லுங்களேன்..’

கோவில் திருவிழா. போகணும். நகையெல்லாம் எடுத்துவை.
`சரி எடுத்து வைக்கிறேன்.’

சாமீ ஊர்வலம் வருமே. கச்சான் பொங்கச்சோறு ஆக்கணும், எல்லாம் வாங்கிட்டியா?
`ஆ, எல்லாம் வாங்கிட்டேன்.’

வடை சுடு, தேர் கூட ஆள் வருவாங்க.. கொடுக்கலாம்..
`ம், சுடறேன்.’

எப்படி சுடுவே? சரி உனக்குத்தெரியாது. பருப்பு உளுந்து ஊறபோட்டிருக்கேன் அரைச்சு வை. உப்பு நா போடறேன். சரியா? நீ கூட போட்டுடுவ, பெரியவன் சாப்பிடமாட்டான்.. !
`ஓகே.’

உனக்கு நீண்ட லீவா? ரொம்ப நாள் இங்கேயே இருக்க..!? எப்பப் போவ?
`இந்த வாரம் போயிடுவேன்..’

அவ யாரு.? நம்ம வீட்டுக்குள் மலாய்க்காரி?
`விருந்தாளி.’

மாலாய்க்காரியெல்லாம் கோவிலுக்கு வருவாங்க?
`இல்லை அவ இங்கே இருப்பா..’ (இந்தோனீசியப்பணிப்பெண்)

ஆமாம், இப்போ நான் எங்கே இருக்கேன்???
`நம்ம வீட்டுல..!!’

ஓ விஜியா? ச்சே நான் மறந்தே போயிட்டேன். நாம இங்கே இருக்கோம்ல..ம்ம்ம்ம்...

(எங்குமே செல்லாமல் வீட்டிலேயே இருக்கும், என் மாமியிடம் தினமும் நான் பேசும் வெற்று உரையாடல் இது. ஆரம்பத்தில் கோபம் வெறுப்பு வந்தது..இப்போது எல்லாமும் மறைந்து.. அவரிடம் குழந்தையாக நானும்....!!! )