வியாழன், நவம்பர் 22, 2012

சாருவை சந்தித்தேன்....


நவம்பர் 20ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில், தம்பி தயாஜி மற்றும் நவீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் அற்புத இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்கிற வாய்ப்பு கிட்டியது.  அங்கே தமிழ் நாட்டு பிரபல எழுத்தாளர் சாரு அவர்களைச் சந்தித்தேன். நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

எழுதவேண்டுமென்று நினைத்திருந்தால் குறிப்பு எடுத்து வைத்துக்கொண்டு, சாரு மேற்கோள் காட்டிய எழுத்தாளர்கள் இலக்கியப்பகிர்வுகள் என அக்கு அக்காக எழுதிப் பகிரலாம்!. நான் நிகழ்காலத்தில் வாழ நினைப்பதால், அவரின் பேச்சுகளில் முழுமையாக ஒன்றிவிட எண்ணி, குறிப்புகளில் அக்கறை செலுத்தவில்லை. குறிப்புகள் என்னை தடுமாற்றத்தில் ஆழ்த்தும். குறிப்பு எடுப்பதால் பேச்சுகளில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுமென்பதால் பெரும்பாலும் நான் குறிப்பு எடுப்பதை தவிர்த்து விடுவேன். நான், என் கன்னத்தில் கை வைத்துக் கேட்டுவிட்டு எழுதியதை, மாங்கு மாங்கு என்று குறிப்பு எடுத்து எழுதுபவர்கள் கூட பகிரமாட்டார்கள்.  என்ன, அவர்களிடம், சொற்பொழிவாளரின் பேச்சுகளின் போது பகிரப்பட்ட பெயர், ஊர், கதைகளின் தலைப்பு, இடப்பெற்ற சூழல் என அப்படியே ஈ அடிச்சான் காப்பி போல் வரும். என்னுடைய பகிர்வில் நான் உள்வாங்கிக்கொண்டது மட்டுமே வெளிப்படும்.

இருப்பினும், என் தம்பிகளான நவீன் மற்றும் தயாஜி இருவரும் சாரு அவர்களின் பேச்சுகளை ஒலிப்பதிவு செய்து கொண்டார்கள் என்பதை நானறிவேன். அவர்களிடமிருந்து விலாவரியான தகவல்கள் வரலாம்.! ஆக, என்னுடைய இப்பகிர்வு மிக மேலோட்டமாகவே இருக்கும். அங்கே நிகழ்ந்த சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். நான் கலந்துக்கொண்ட இலக்கிய நிகழ்வுகளில் சாருவை நேரில் சந்தித்ததை மிக அற்புதத் தருணமாகவே கருதுகிறேன்.

பெரிய ஆள் சாரு. நிறைய விஷயங்கள் அவரிடம் கொட்டிக்கிடக்கின்றன. நடமாடும் நூல்நிலையமாகவே திகழ்கின்றார். வாழ்க்கையையே வாசிப்பிற்கும் எழுத்திற்கும் அர்ப்பணித்தவர்.  இலக்கியத்தின் மேல் அலாதி பிரியம் கொண்டவர். பேச்சில் வசீகரிக்கின்றார். அறவே இலக்கியப்பரிச்சயம் இல்லாதவர்களையும் இலக்கியத்தின் பால் இழுக்கக்கூடிய ஆற்றல் அவரின் பேச்சிற்கு உண்டு. ஒரு தந்தை தம் குழந்தைகளோடு உரையாடுவதைப்போல் மிக எளிமையாக கலந்துரையாடினார் எங்களோடு.

அதிக அலட்டல் இல்லாமல் மிக மிக எளிமையாக கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடைப்பெற்ற நிகழ்வு அது.  இலக்கிய ஆர்வலர்கள் ஏறக்குறைய ஐம்பது அல்லது அறுபது பேர் வருகை புரிந்திருப்பார்கள் என்பது என் கணிப்பு. அதிக விளம்பரம் இல்லாத, எளிய இலக்கிய நிகழ்விற்கு இந்த வருகையாளர் கூட்டம் பெரிய சாதனைதான். அதுவும் தயாஜியின் `புத்தகச்சிறகுகள் வாசிப்பாளர்கள் குழு’ என்கிற வட்டத்தின் கீழ் நடத்திய முதல் நிகழ்வு இது.  முதல் முயற்சியே இவ்வளவு சிறப்பாக நடைபெற்றதே பெரிய வெற்றிதான்.

தொடர்ந்து அவரை வாசித்து (இணையப்பக்கம் மற்றும் அவரின் எட்டு புத்தகங்கள்) வருவதால், சாரு அவர்களின் எழுத்தில் இருக்கின்ற வீரம், கோபம், குளறுபடி, வெறுப்பு, நகைச்சுவை, கிண்டல் கேலி, உள்குத்து விவகாரம், மறைமுக தாக்குதல்கள் எல்லாம் பேச்சில் இல்லை. பேச்சு ஆன்மிகவாதியைப்போல் சாந்தமாகவே இருந்தது. கேள்விகள் கேட்கப்படும் போது, முக பாவனைகள் மாறுகின்றனவா.? என்பதனை கூர்ந்து கவனித்தேன். இல்லை, தெளிவாக அமைதியாகவே பதிலளித்தார். கோபத்தை உண்டு பண்ணுகிற கேள்விகள் கூட கேட்கப்பட்டன. நிதானமாகவே பதில்கள் வந்தன. உதாரணத்திற்கு ; `பிரபலங்களை வசை பாடுவதால் நீங்கள் பிரபலமடையலாம் என்கிற எண்ணத்திலேயே உங்களின் செயல்பாடுகள் இருப்பதைப் பற்றிய தோற்றம் உருவாகியிருக்கின்றதே, அதற்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கின்றீர்கள்? நித்யானந்தா நல்லவரா கெட்டவரா? (நாயகன் பாணியில்). எனக்கு வாசிக்க நேரமேயிருப்பதில்லை, அப்படியே வாசிக்க விருப்பம் வந்தால், என்ன மாதிரியான புத்தகங்களை நான் வாசிக்கலாம்.? பெண் இலக்கியவாதிகளின் படைப்புகள் எப்படி இருக்கவேண்டும்? உங்களின் எழுத்துகளில் வரும் நிகழ்வுகளில் நீங்களே சம்பந்தப்பட்டிருக்கின்றீர்களா? உங்களுக்குப்பிடித்த மலேசிய படைப்பாளி யார்? (இந்த கேள்விக்கு எங்களாலேயே பதில் சொல்ல முடியாது). ரஜினியை ஏன் உங்களுக்குப்பிடிக்கவில்லை? பெரும்பாலும் செக்ஸ் அடிப்படையிலான கதைகளை நீங்கள் எழுத என்ன காரணம்? அங்காடித்தெரு மற்றும் வழக்கு எண் திரைப்படங்களை ஏன் மிக மோசமாக விமர்சித்தீர்கள்? போன்ற கேள்விகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இருப்பினும் அவரின் பதில்கள் அனைத்தும் நிறைகுடமாய் நிதானமாகவே வந்தது. எல்லாவற்றிற்கும் உதாரணக்கதைகள் வேறு சொல்லப்பட்டன. அவை அங்கே வருகை புரிந்திருந்த வாசக எழுத்தாளர்களுக்கு நல்ல தீனியாய் அமைந்தது என்றே சொல்லலாம்.    

உலக இலக்கியவாதிகளின் கதைகளைப் பற்றிப்பேசினார். அவர்களைப்பற்றிய அறிமுகத்தை வழங்கினார். தமிழ் இலக்கியம், சீனாவில் பிரபலமாகப்பேசப்பட்ட நாவல் , பிரெஞ்சு கதைகள் ஆங்கில நாவல்கள், ரஷ்ய இலக்கியம், உலக சினிமா, தமிழ் சினிமா என பல சுவாரஸ்யமான விஷயங்களைத்தொட்டு மிகத் தெளிவாக விளக்கமளித்தார்.

எங்களின் நாட்டு நிலவரத்தைப் பற்றிய ஓர் உண்மையை ஒரே நாளில் கண்டு கொண்டு, போட்டு உடைத்தார். அதாவது, எங்களிடம் தாய் மொழியான தமிழ் உள்ளது, தேசிய மொழியான மலாய் உள்ளது, படித்தவர்களாகத்திகழ்கிறோம் ஆனாலும் பெரும்பாலானோருக்கு ஆங்கில அறிவு மிக மிக கம்மியே.. இது ஒரு ஊனம்.  ஆங்கிலம் தெரியாமல் இருப்பது பெரிய இழப்பு. என்றார். நிஜமான குற்றச்சாட்டுதான் இது. இங்கே ஆங்கிலத்தில் சரியான தேர்ச்சியைப் பெறாமல் சுமாராக தேரியிருந்தாலே போதுமானது, தொடர்ந்து வாய்ப்புகள் வரும், பல்கலைக்கழகமும் செல்லலாம் ஆனால் மலாய்மொழியில் தேர்ச்சிப்பெறவில்லை என்றால், நம்முடைய சான்றிதழ் குப்பைக்குப்போகும். அதற்காகவே மலாய்மொழியில் தீவிர கவனம் செலுத்திப்பயின்று ஆங்கிலத்தைப் புறக்கணித்து விட்டோம் என்பதனை ஏற்றுக்கொள்ளலாம். இந்த குறை எங்களுக்கும் தெரிவதால், இப்போதுதான் ஆங்கிலத்தைக் கற்று வருகிறோம், சொந்த முயற்சியில். நாங்கள் பள்ளியில் படிக்கின்ற காலகட்டத்தில் நிலைமை படு மோசமாக இருந்தது. ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பரவாயில்லை என்கிற அலட்சியப்போக்கு அதிகமாகவே காணப்பட்டது. தற்போதைய நிலைமை மாறியிருக்கலாம். ! இருப்பினும் ஆங்கிலம் தெரியாத எங்களின் இளமைக்காலம் பாழ்தானே. !? நிஜமாலுமே பெரிய இழப்புதான். இது விழிப்புணர்வைக் கொடுக்கக்கூடிய பார்வையே. நன்றி சாரு.

இங்கே சீன உணவகத்தில் ஒரு அற்புதமான உணவைச் சுவைத்ததாகச் சொன்னார். அந்த உணவைப்பற்றி எழுதப்போவதாகவும் சொல்லி பீடிகை போட்டார். என்ன உணவாக இருக்குமென்று நானும் மிக ஆவலாய் காத்திருந்தேன்.!  உரித்து உரிந்து சாப்பிடுவார்கள் என்றவுடன், தவளை மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிச்சொல்கிறாரா, என்று யோசித்தால், `பவ்’ என்றார். என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.. `பவ்’ உரித்து சாப்பிடுவதல்ல, அதை அப்படியே சாப்பிடலாம். உடன் இருப்பவர் யாரோ உரித்துச் சாப்பிட்டு விட்டார்கள் போலும்.. உரித்துச் சாப்பிட அது என்ன வாழைப்பழமா? சரி அந்த உணவைப் பற்றி அவர் எழுதுவார். அங்கேயே படித்துக்கொள்ளுங்கள். நான் அதிகப்பிரசங்கி வேலையைச் செய்யமாட்டேன். சாரு இன்னும் சுவாரஸ்யமாகச் சொல்வார்.  

தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வரப்படும் புத்தகங்கள் இங்கே ஒரு மடங்கு, இரு மடங்கு அல்ல, நான்கு ஐந்து மடங்கு கூடுதல் விலையில் விற்கப்படுகின்றன. இதைப்பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. விகடன் குமுதம் அங்கே என்ன விலை? இங்கே என்ன விலை? அதுபோல்தான், அங்குள்ள ரூபாய் விலையை இங்கே அதே போல் பின்பற்றலாகாது, அதிக விலை கொடுத்து வாங்கித்தான் ஆகவேண்டும். நிலைமை அங்கு வேறு இங்கு வேறு,என்றார். இருந்தபோதிலும் நான் வாங்கவில்லை. வருடத்திற்கு ஒரு முறையாவது தமிழ் நாடு சென்றுவருவதால், அங்கேயே எனக்குத் தேவையான அனைத்துப்புத்தகங்களையும் வாங்கிக்கொள்வேன்.  இருப்பினும், சாருவின் கையொப்பம் வேண்டி, அங்கே விற்கப்பட்ட அவரின் `தேகம்’ நாவலை வாங்கி, அவரிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டேன்.

சந்திப்பில் என்னை பெயர் சொல்லியே அழைத்தார். முதலில் அடையாளங்காணவில்லை, பிறகு அறிமுகமானவுடன், பல நாள் பழகியதுபோல் மிக மரியாதையுடன் நட்பு பாராட்டினார். அருகில் அமரவைத்தார். நிறைய புகைப்படங்களை எடுக்க ஒத்துழைப்பு நல்கினார்.

கணவரையும் உடன் அழைத்துச்சென்றேன். பெரிய எழுத்தாளரெல்லாம் தமது மனைவியிடம் நட்பு பாராட்டுகிறார்கள் என நினைத்து கொஞ்சம் அரண்டுத்தான் போனார். வீட்டிற்கு வந்ததிலிருந்து சாருவின் புராணம் ஓயவில்லை. சாருவை பெரிய இலக்கிய ஜாம்பவான் என்று முழுமனதுடன் ஏற்றுக்கொண்ட போதிலும், தற்போது அவரைப் பற்றிய தேடல்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். சாருவைப் பற்றிய தகவல்களை இணையத்தில் ஆராயத்துவங்கியுள்ளார். இணையத்தில்தான் தெரியாதா? நல்லனவைகளோடு மோசமானவைகள்தான் தங்கம்போல் மின்னும்.. அநேகமாக எதிர்மறை சிந்தனையையே பிடித்துக்கொள்வார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை காரணம் அவருக்கும் வதந்திகள் என்றால் அல்வா சாப்பிடுவதைப்போல்தான். மிகவும் விருப்பமான ஒன்று.

வாசித்து ஒரு எழுத்தாளரைப் புரிந்துகொள்வதை விடுத்து, வதந்திகளைப் பிடித்துக்கொண்டு நல்ல எழுத்தாளரைப் புறக்கணிக்க நினைப்பவர்களை நாம் ஒண்ணும் செய்யமுடியாது. அது கணவனாகட்டும், சகோதரிகளாகட்டும், நண்பர்களாகட்டும்..! எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.