சனி, ஏப்ரல் 27, 2013

மேடை கும்பிடு ஏன்?


மேடை ஏறும்போது மேடையைத் தொட்டுவணங்குகிறார்கள். கலைஞர்கள் அப்படிச்செய்யலாம் காரணம் அவர்களுக்கு பிழைப்பைக்கொடுக்க்கும் ஒர் இடம் அது.

ஆனால், பொதுவாகவே நம் மக்கள் மேடை ஏறும்போது மேடையை ஏன் தொட்டு வணங்குகிறார்கள்?

கோவிலுக்குச் செல்லும்போது கோவில் வாசலைத்தொட்டு வணங்கவேண்டும். காரணம் அடியார்களுக்கும் அடியேன்.அடியார்களின் பாதம் பட்ட இடத்தை நானும் தொட்டு வணங்குகின்றேன், எனது ஆணவம் அழிய வேண்டும் என்பது அதன் அர்த்தம்.

கலைஞர்கள் ஆடுகிற மேடையை நாம் ஏன் தொட்டு வணங்க வேண்டும்.

ஒரு நிகழ்விற்குச் சென்றிருக்கையில், அதிர்ஷ்டக்குழுவில் பரிசு விழுகிறது ஒரு பெண்ணிற்கு. அவர் மேடைக்கு அழைக்கப்படுகிறார், பரிசுதனைப் பெறுவதற்கு. மேடை ஏறிய அவர், அந்த மேடையைத்தொட்டு வணங்கிய பிறகுதான் பரிசை வாங்கச்செல்கிறார்.

ஒரு திருமணத்தில் அப்படித்தான். மேடைக்கு வாருங்கள், மணமக்கள் இருக்கும் இடத்திற்கு வந்து நில்லுங்கள், இன்னும் சிறிது நேரத்தில் தாலி கட்டவிருக்கிறது என்றவுடன், எல்லோரும் காலணிகளைக் கலற்றிவைத்துவிட்டு, மணவரை மேடையை பயபக்தியுடன் தொட்டுகும்பிட்ட பிறகுதான் மேடையேறுகிறார்கள்.

அரசியல் மேடைகளும் அப்படியே. தலைவர் மேடையில் எதேனும் வழங்க அழைத்தால், மேடையைத் தொட்டு வணங்கிய பிறகே ஏறுகிறார்கள்.

நான் இதுவரையில் அப்படிச்செய்தது இல்லை. இருப்பினும் யோசிப்பேன், நாம் தெளிவாக இருக்கின்றோமா அல்லது தெளிவற்ற நிலையில் உலவுகிறோமா, என..!

ஏன் ஏறுகிற மேடையினை தொட்டுவணங்கவேண்டும். ? கலைஞர்கள் செய்யலாம்.. அது விசுவாசத்தின் வெளிப்பாடு. நாம் ஏன்?