திங்கள், மார்ச் 11, 2013

காணாமல்..

நான்
காணாமல்
போகப் போகிறேன்

உள்ளே இருக்கும்
வலி
என்னைக் களவு கொள்ளலாம்

போராட்டங்கள்
என்னைக் காவுகொள்ளலாம்

ஒரு துளி விஷம்
என் மேனி
நீலமாகலாம்..

போகிற வழியில்
தினக்காட்சி சாலையில்
நானும் சிக்கலாம்

முள் குத்தலாம்
மூச்சுத்திணறல் வரலாம்

காலையில் எழாமலேயே
போகலாம்..

தனிமை வேண்டி
நானே என்னை
மறைத்துக்கொள்ளலாம்

சில மிருகங்கள்
என்னைக் குதறலாம்

நீயும் காரணமாகலாம்

காரணமில்லாமலே
நான்
காணாமலும் போகலாம்

காட்சிகள் புதிது

யாரிடமாவது
மனம் விட்டுப்பேச வேண்டும்
யாரிடம் என்றுதான்
இதுவரையிலும் தெரியவில்லை.!

%%%%%

அதிகாலை நடைப்பயிற்சி
ஆயுள் கொஞ்சம்
தள்ளிப்போகிறது..!

%%%%%%

பூட்டி வைக்கப்பட்டுள்ள வீட்டிற்குள்
பாதுகாப்பாகவே இருக்கின்றன
மிருகங்கள்

%%%%%%

அதிகமான வலியின் போது
வேகமாகவே வெளியேறுகிறது
மலம்..

%%%%%

பாதைகள் மாறிவிடும்போது
காட்சிகள் அங்கே
புதிதுதான்..