வெள்ளி, அக்டோபர் 12, 2012

ரகசிய மைக் (குட்டிக்கதை)

“விக்கி, என்ன திடீரென்று போலிஸ்காரர்கள் வந்திருந்தார்கள்?” முன் வாசலின் வழியே நுழைந்த விக்கியை வழிமறைந்து விவரம் கேட்டாள் சுதா.

“ என்னது போலிஸ் வந்ததா? ஏன்? நீதான் உள்ளே இருக்க, என்னைக்கேட்டால், எனக்கு எப்படித்தெரியும்!” விவரம் தெரியாத விக்கி, மேலும் விஷயத்தை அறிய ஆவலாய், நடையைத் தளர்ந்தி அங்கேயே நின்றான்.

“நான் கேள்விப்பட்டேன், ஸ்டோரில் சில திருட்டு வேலைகள் நடக்குதாம்.  திருட்டுத்தனமாக சில பொருட்கள் லாரிகளில் ஏற்றுகிறார்களாம். நூறு ஏற்றும் இடத்தில் நூற்றியொன்றாக ஏற்றப்படுகிறதாம்.” சுதா விளக்கினாள். விலையுர்ந்த மின்சாரப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அது. ஒரு பொருளே ஆயிரக்கணக்கான விலையில் விற்கப்படுபவை..

முகம் வெளிற.. “அட அப்படியா? எப்படி சொல்றே,” கேள்விக்குறியோடு மேலும் விவரமறிய காத்திருந்தான் விக்கி.

“நான் கேள்விப்பட்டேன்?”

“கதை விடாதே, போலிஸ் வந்தால் வேறு எதாவது ரீசனா இருக்கலாம்... நீ இருக்கியே, நல்லா கிளப்பி விடு..!”

“அய்யோ, நிஜமாலும் விக்கி. போலிஸுடன் சேகரும் வந்திருந்தார்..”

“சேகருமா..?” அதிர்ந்தான் விக்கி. சேகர் அங்கே நிருவியுள்ள செஃக்யூரிட்டி நிறுவனத்தின் முதலாளி.

“ஆமாம், இல்லேன்னா எனக்கு எப்படி விஷயம் தெரியப்போவுது.!” பீடிகையோடு தொடர்ந்தாள் சுதா.

“சேகர் சொன்னாரா?”

“ஆமாம்!?”

“ என்னன்னு?”

“முதலில் போலிஸில் இருந்து இருவர் வந்திருந்தார்கள். அதில் ஒருவர் பூனைப்படை போல், பெரிய பிஸ்டோலை கையிலேயே ஏந்திக்கொண்டிருந்தார். மற்றொரு போலிஸ்காரர் முழுக்கைச்சட்டை போட்டிருந்தார். இரண்டு கைகளிலும் நிறைய ஸ்டார்கள் குத்தப்பட்டு இருந்துச்சு. முகம் அப்படியே தங்கப்பதக்கம் சிவாஜி கணக்கா, உர்ர் என்றிருந்தது.!”

“ஓ..நீட்டுக்கை சட்டை போட்ட போலிஸ் ஆபிஸ்ரா? அப்போ, பெரிய ஆள்தான் வந்திருக்கணும்..”

“அவர்கள் வந்தவுடன், நம்ம எம்.டி இறங்கிவந்தார், பிறகு உங்க போஸ், எங்க போஸ் இருவரும், போலிஸ்காரர்கள் என எல்லோரும் மீட்டிங் ரூம்மிற்குள் போனார்கள். அதன் பிறகுதான் சேகர் வந்தார்.., தனியாளாக அதுவும் நம்மவராக இருப்பதால், அவரிடம் என்ன சங்கதி என கேட்டேன், முதலில் சொல்லவில்லை, `இது கம்பனியின் ரகசியம், யாரிடமும் சொல்லக்கூடாது என்றார்கள், நீங்கள் கேட்பதால் சொல்கிறேன்’ என்று உங்களின் டிப்பார்ட்மெண்டில் நடக்கின்ற திருட்டு வேலைகளைச் சொன்னார்.”

“யார் செய்யறா திருட்டு வேலைகளை? ஒருவேளை புதுசா வந்த காண்ட்ரெக்ட் காரனுங்க சிலர் செய்யறானுங்களோ..!? எப்படி கண்டுபிடிப்பானுங்க? சாட்சி வேணுமில்ல.!?” எதையோ நியாயப்படுத்துவதைப்போல் இருந்த விக்கியின் பேச்சை இடைமறித்தாள் சுதா.

“ஏய், என்ன ராசா, என்னமோ நீ திருட்டுவேலைகளைச் செய்வதைப்போல் இருக்கே உன் பொறுப்பற்ற பேச்சு. நீ இன்வல்ஃவ் பண்ணலன்னா விடு.. செய்தி கேட்டதிலிருந்து அரண்டுப்போயிருக்கே, என்ன சங்கதி.?”

“அப்படியெல்லாம் இல்லெ சுதா. நான் தானே அங்கே சூப்பர்வைசர். எதாவது பிரச்சனன்னா என்னைத்தானே கொடைவார்கள்.”

“யார் செய்யறான்னு பாரு, அவர்களைக் காட்டிக்கொடு..!”

“அவ்வளவு ஈசியா? மாட்டிக்கிற மாதிரியா செய்வானுங்க..!?”

“அதான் சில ரகசிய சி.ஐ.டி டெக்னிக்’குகளை பொருத்தப்போகிறார்களாமே..ஸ்ஸ்..” என்னமோ உளறியதை நினைத்து, உதட்டைக் கடித்துக்கொண்டாள் சுதா.

“என்ன டெக்னிக்?.. என்னமோ உனக்குத் தெரியுது, ஆனா சொல்லமாட்டேங்கிற இல்லே.., சரி விடு, விருப்பமில்லையென்றால்  பரவாயில்லை, தெரிந்ததைச் சொன்னால், உன்னைப் பற்றிய ஒரு விவரமும் என்னிடம் இருக்கு, அப்பதான் அதைச் சொல்லுவேன்..!” புதிர் போட்டான் விக்கி.

“ஐயோடா..என்னைப் பத்தி என்ன இருக்கு? நான் பாட்டுக்கு வேலைக்கு வரேன் போறேன்.. நான் என்ன திருடியா?..”

“நீ மொதல்ல அந்த சி.ஐ.டி டெக்னிக் என்னன்னு சொல்லு, பிறகு உன் கதையைச்சொல்கிறேன்..” போட்டுவாங்கினான் விக்கி.

“அது வந்து..அது வந்து.. யார் கிட்டேயும் சொல்லக்கூடாது..”

“ ச்சே..சே சொல்ல மாட்டேன், சொல்லு..”

“ ம்ம்ம்ம், சாமன்கள் ஏற்றுகிற லாரியில், யாருக்கும் தெரியாமல் ரகசிய கேமரா ஒண்ணு பூட்டியிருக்காங்களாம்.. லாரியில் ஏற்றுகிற சாமான்களை லிஸ்ட்ல உள்ள கம்பனிகளுக்கு இறக்கிய பிறகு, மீதமுள்ள பொருட்களை எங்கே கொண்டு போய் இறக்குகிறார்கள் என்பதை படம் பிடித்துக் காட்டும் கேமரா அது. லாரி எங்கெல்லாம் போகுதோ, அதை இங்கிருந்தே சி.சி.டீவியின் மூலம் பார்க்கலாம். திருட்டு வேலைகளைக் ஈசியா கண்டுபிடிச்சிடலாம். லாரியில் அந்த கேமரா எங்கு பூட்டியிருக்கு என்பதைக் கூட யாரும் கண்டுபிடிக்கமுடியாது, அதை அங்கே பொருத்திய டெக்னிஷன்களைத் தவிர.! இந்த விவரம் யாருக்கும் தெரியாது. அட்மின்’ல உள்ளவர்களுக்கும் சேகருக்கும்தான் தெரியும்.. சேகர் என்னிடம், நான் கேட்டுக்கொண்டதால் பகிர்ந்துக்கொண்டார். இப்போ இந்த விவரம் உனக்கும் தெரிந்து விட்டது. நம்மவர்கள் புள்ளகுட்டிக்காரர்கள், குடும்பமெல்லாம் இருக்கு, கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கணும்னு  உன் கிட்டே சொல்றேன். கவனம், இது யாருக்கும் தெரிய வேண்டாம்...” அலுவலக ரகசியங்களை உளறிக்கொண்டிருந்தாள் சுதா. இந்த விவரம் அட்மின் நிர்வாகிகளுக்குத் தெரிந்தால், இவளின் வேலைக்கே ஆபத்து.

“ம்ம்.. இப்படியெல்லாம் நடக்குதா.. பையனுங்கள எச்சரிக்கையாக இருக்கச் சொல்லனும். எதிலாவது மாட்டிக்கப்போறாங்க..பாவம். சரி தகவலுக்கு ரொம்ப நன்றி..” கிளம்பினான் விக்கி..

“என்ன நன்றியா, அது கிடக்கட்டும், நீ என்னமோ என்னைப் பற்றிய ஒரு விஷயத்தை சொல்வதாகச் சொன்னியே, என்ன அது?, அத சொல்லாம போனே, தொலைச்சுபுடுவேன்..”

“ஓ..அதுவா, நீ போறவரவங்ககிட்ட எல்லாம், ஆபிஸ் விஷயத்தை லீக் செய்யறீயாமே..அதனால, உன் இடத்தில் ஒரு ரகசிய மைக் பூட்டியிருக்காங்களாம்... அந்த லிங்க் எம்.டி ரூம் வரை போகுதாம்.. அவர் அதை ஆன் செய்தால், நீ என்னவெல்லாம் பேசறீயோ, அது அப்படியே அங்கேயும் கேட்குமாம்.. எதுக்கும் நீயும் கொஞ்சம் ஜாக்ரதையா இரு. பாவம் புள்ளகுட்டிக்காரி. வேலையிலிருந்து தூக்கிடப்போறாங்க.. ஹிஹி..” சிரித்துக்கொண்டே இடத்தைக்காலி செய்தான் விக்கி.

RED GIANT STAR


RECENT RELEASED IMAGE OF A SPIRAL SHELL OF COSMIC DUST AND GAS SURROUNDING A RED GIANT STAR

டெலெஸ்கோப் மூலமாக வின்வெளி உலாவில் நிகழ்ந்த ஓர் நட்சத்திர வெடிப்பை சித்தரிக்கும் அரிய படம். அறிவியல் வரலாற்றுப்படம். பார்ப்பதற்கு தீபாவளி பட்டாசு போல் மிகவும் அழகாக இருந்ததால் உங்களிடமும் பகிர்கிறேன்.

கூடுதல் தகவலுக்கு