திங்கள், ஏப்ரல் 15, 2013

பி.பி.ஸ்ரீநிவாஸின் மரணம்

பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸின் பரம ரசிகை நான். பைத்தியக்கார ரசிகை என்றுகூட சொல்லலாம். எங்கு அவரின் பாடல்கள் ஒலித்தாலும், என்ன முக்கியமான வேலைகளைச் செய்துகொண்டிருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு, அவரின் பாடல்களில் லயித்துவிடுவேன்..
அப்பேர்பட்ட வசீகர குரலுக்குச் சொந்தக்காரர் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள்.

எங்களின் வானொலி நிலையங்களில்  அன்னாரின் பாடல்களை அதிகமாக ஒலிபரப்பமாட்டார்கள். பணியில் இருக்கும் அறிவிப்பாளர்களுக்கு எந்த பாடகரைப் பிடிக்கிறதோ அவரின் பாடல்களை அதிகமாக ஒலிபரப்புவார்கள். ரசிகர்களின் விருப்பங்களுக்கு என்றுமே செவிசாய்க்காத ஒலிபரப்பு நிலையங்கள் எங்களுக்குக்கிடைத்திருப்பது பெரும் துரதிஷ்டமே.

பகலில் இளைஞர்களை கவர்கிறோமென்று ஒரே கூச்சல் பாடல்களும் அதிநவீன பாடல்களும் ஒலிபரப்பாகும். இரவில் பழைய பாடல்களை ஒலிபரப்புகிறேன் பேர்வழி என, எப்போதுமே ஒரே மாதிரியான பாடல்களை ஒலிபரப்பி வெறுப்பேற்றுவார்கள்., மேலும் அப்பாடல்கள் வானொலியில் ஒலியேறுவதற்கு முன், தமது குரல்வளத்தைப் பறைசாற்ற அப்பாடலை இவர்கள் ஒருமுறை பாடிக்காட்டியோ அல்லது அந்த பாடல் வரிகளுக்கு/கவிதைகளுக்கு மொன்னையாக ஓர் விளக்கதையோ கொடுத்துக்கொண்டு நேரத்தை வீணடிக்கும்போது பாடல்களைத் தொடர்ந்து கேட்கின்ற ஆர்வமே போய்விடுகிறது.

இந்த அலம்பல்களுக்கெல்லாம் வடிகாலாக அமைந்தது `குருவின் இன்பமிங்கே’ என்கிற இசைப்பொக்கிஷ `வெப்சைட்’. முகநூலின் என் இனிய நண்பரின் அறிமுகத்தில் கிடைத்தது இந்த வெப்சைட். எப்பொழுது அந்த வெப்சைட் என் கண்ணில் பட்டதோ, அன்றிலிருந்து வானொலிக்கும் அங்கே பணிபுரியும் அறிவிப்பாளர்களுக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, வானொலிக்கு பதில் குருவின் இன்பமிங்கே’வைத் தட்டிவிட்டுவிடுவேன். எந்த ஒரு அறுவையான அறிவிப்பும் இல்லாமல், எல்லாவற்றையும் தமிழ் படுத்துகிறேன் என்கிற படுத்துதல் இல்லாமலும், எரிச்சலூட்டுகிற பாடல்களும் இல்லாமல், விளம்பரங்களும் இல்லாமல் அற்புதமான பாடல்களைக்கேட்டுக்கொண்டே நமது பணிகளைச் செவ்வனே செய்யலாம்.

அங்கே தினமும் விஜயம் செய்துவிடுவேன். பகலில் அலுவலகத்திலும் இரவு நேரங்களில் வீட்டிலும், விடாமல் என்னுடன் இருப்பது இந்த அற்புத இசைத்தொகுப்புதான்.

அவ்வேளைகளில் நான் அதிகம் கேட்பது பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடல்களைத்தான்.

பக்திப்பாடல்களையும் இவரின் குரலில் ஒலிக்கின்ற பாடல்கள்தான் அதிகாலை நேரங்களில் என் வீட்டில் பக்திப்பரவமூட்டும்.
 

சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி
பொழுது விடிந்துவிடும்..விடிந்தால்..
ஒடிவதுபோல் இடையிருக்கும்..இருக்கட்டுமே..
தோள் கண்டேன் தோளே கண்டேன்..
நல்லவன் எனக்கு நானே நல்லவன்...
முன்னழகைக் கண்டுகொண்டால், பெண்களுக்கே ஆசை வரும்..
துள்ளித்திரிந்த பெண் ஒன்று துயில் கொண்டதேன் இன்று..
சந்திப்போமா இன்று சந்திப்போமா..
பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா..
போகப்போகத் தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்..
ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவிற்குப் பெயர் என்ன..
அந்தரங்கம் நானறிவேன்..
அனுபவம் புதுமை, அவனிடம் கண்டேன்..
அழகிய மிதுலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்..
சின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ..
கன்னிவேண்டுமா கவிதை வேண்டுமா காதல் கதைகள் சொல்லட்டுமா..
மாலையும் இரவு சந்திக்கும் இடத்தில்...

i am going crazy on all this songs ...

பி.பி ஸ்ரீநிவாஸ் அவருக்கு மரணமில்லை. தேனிலும் இனிய பாடல்களை என்றும் நெஞ்சம் மறப்பதில்லை. அனைத்தும் இறவாப்புகழ் சொல்லும் பாடல்கள். அவரின்
தாலாட்டும் குரலில் மயங்காதோர் உண்டோ..

இங்கே சென்று அந்த இசைமேதையின் பாடல்களைக்கேட்கலாம்..

http://www.inbaminge.com/t/hits/Voice%20of%20P%20B%20Srinivas/