புதன், ஜனவரி 25, 2012

கல்யாணம் பண்ணிக்கலாமா?

கல்யாணம் பண்ணிக்கலாமா?? 

: உன்னை ரொம்ப பிடிக்கும். 
:அப்படியா, எனக்கும் தான். 

:உன்னோடு யார் பேசினாலும், எனக்கு பொறாமை வரும். 
:ஓ என் மேல், எவ்வளவு பிரியம் உனக்கு! 

:அன்பே நீ என் உயிர்....! 
:ஐயோடா... நான் கொடுத்து வைத்தவள். 

:உன்னைக் கட்டிப்பிடித்து முத்தமிடட்டா? 
:என்ன.. புதிதாய் கேட்கிறாய்? இப்போது கூட இடுப்பைத்தானே கட்டிக்கொண்டிருக்கின்றாய்...! 

:உம்மா.. ஐ லவ் யூ.. 
:இந்த, ஐ லவ் யூ தான் எனக்குப்பிடிக்கல!! 

:ஏன், நான் ஐ லவ் யூ சொல்லக்கூடாத!? 
:சரி எதையாவது சொல்லித்தொலை... 

:சரி, சரி கோபம் வேண்டாமடி.. இன்று புதிதாய் ஒன்று சொல்லட்டுமா? 
:புதிதாகவா? என்ன பீடிகை!!! 

:நாம ரெண்டு பேரும் கல்யாணம் செய்துகொள்ளலாமா? 
:அடிப்பாவி.. பாதகி, கல்யாணம் கட்டிகிட்டு என்ன செய்வதாம்???? 
...........நீயும் பெண்தானே!!!!!!!!!!!!!

உறக்கம்

எவ்வளவு தாமதமாக 
வந்தாலும், 
உன் வரவு வசந்தமே.

நல்ல நண்பர்

எல்லாவற்றிற்கும் 
நீயே நாயகன்.. 
ஆனாலும்,
அடிக்கடி வந்து போகும் 
ஒரு பார்வையாளன்


எல்லாவற்றிற்கும் 
நீயே நாயகன்.. 
ஆனாலும்,
அடிக்கடி வந்து போகும் 
ஒரு ரசிகன்


எல்லாவற்றிற்கும் 
நீயே நாயகன்.. 
ஆனாலும்,
அடிக்கடி வந்து போகும் 
ஒரு வில்லன்


எல்லாவற்றிற்கும் 
நீயே நாயகன்.. 
ஆனாலும்,
அடிக்கடி வந்து போகும் 
ஒரு அசுரன்


எல்லாவற்றிற்கும் 
நீயே நாயகன்.. 
ஆனாலும்,
அடிக்கடி வந்து போகும் 
ஒரு கலைஞன்

மறந்து விடவும்


என் முகம் நினைவில் இருக்கா?
மறந்து விடவும்.

நான் யார் என்று தெரிந்திருந்தால்
தயவு செய்து மறந்து விடவும்.

இன்னார் மனைவி, மகள், தாய், மருமகள் என
எப்போதாவது நான் சொல்லியிருப்பேன்..
ப்ளீஸ் மறந்து விடவும்..

என்ன சொன்னேன், எப்படிச் சொன்னேன்..பேசினேனா?
என் குரல் கேட்டதுண்டா? ஞாபகம் இருக்கா?
மறந்து விடவும்.

என் உயரம், எ(இ)டை, நிறம், பதவி,பட்டம், ஆடம்பரம்
ஆணா பெண்ணா?? எதாவது உங்களுக்குத்தெரிந்திருந்தால்...
மறந்து விடவும்..

ஏதேனும் உளறல்கள், திட்டுதல்கள், கோபம், பந்தா பகட்டு..நிச்சயம் இருந்திருக்கும்..
மறந்து விடவும்.

இனி எழுத்தால்,சொற்களால் என்னை
அடையாளப் படுத்திக் கொள்ளப் போகிறேன்
யார் என்று காட்டிக்கொள்ளாமல்...

மறுபிறவியில்  

சுமைகள்

எங்களின் கம்பனியில் கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்துகிறார்கள். பங்கு பெறும் அனைவருக்கும் பரிசு உண்டு. நற்சான்றிதழ்களும் கொடுக்கப்படும். முதல் மூன்று பரிசுகள் அற்புதமானவை. 

மூன்று தலைப்புகள், 

1. கம்பனியில் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனைகள் அதிகரிக்க, தனி நபர் ஊழியரான உனது பங்கு என்ன?

2. வருங்காலங்களில் கம்பனியை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர நீ எடுக்கவிருக்கும் முயற்சிகள் யாவை?

3. சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகுள்ளாகமல் பாதுகாக்க, நீ ஒரு புதிய பொருளைக் கண்டுபிடிக்கவேண்டும். அது என்ன பொருள்? எப்படி கண்டுபிடித்தாய்? ஏன்? என்பனவற்றை தெளிவான விளக்கத்துடன் விவரிக்கவேண்டும்.

விதிமுறைகள்:

ஒருவர் எத்தனை கட்டுரைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
கட்டுரை எத்தனை பக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம்.
சுறுக்கமாக தெளிவாக இருப்பதை மட்டுமே ஏற்றுக்கொள்வோம்.
காப்பி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
ஏற்கனவே மார்கெட்டில் உள்ள, மற்ற கம்பனி பொருட்களைக் கண்டுபிடிப்பில் சேர்த்துக்கொள்ளப் படாது.
கட்டுரை ஆங்கிலம், மலாய்,மெண்டரின் மற்றும் ஜப்பான் மொழியில் இருப்பது அவசியம். (சிக்கலே இதுதான்)
நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.

இதில் காமடி என்னவென்றால், இதன் நோட்டிஸை பொதுவில் பார்வைக்கு ஒட்டிய மறுவினாடி எனக்கு சில அழைப்புகள் வந்தன. ’எழுது எழுது 64இஞ்ச் டீவி உனக்குத்தான்’. கொடுமை.! வெளியூர் டிகிரி வைத்திருப்பவனே திணறுகிறான். நானா...? சான்றிதழ் வேண்டுமானால் கிடைக்கலாம்.!! :)

ஒருவரைப்பற்றி சரியாகத் தெரியாத போதுதான், நம்பிக்கை என்கிற யூகத்தில் சுமைகள் பொதிகளாக ஏற்றிவைக்கப் படுகின்றன.

நிராகரிக்கத் தெரியாதவன் கழுதையாகிறான்.

வீரம்

அமைதியான நேரத்தில் 
கூக்கரின் திடீர் சத்தத்தில் 
திடுக்கென்று பயந்து 
உடல் ஆட்டங்கண்டு 
சுற்றும் முற்றும் பார்த்து 
ஒரு உலுக்கலோடு சுதாகரிக்கும் 
சராசரிப் பெண்ணான 
என்னைப் பார்த்து 
அதிதைரியசாலி 
என்கிறார்கள்..
சில பயந்தாகொல்லிகள்.