புதன், டிசம்பர் 04, 2013

பூஜாங் பள்ளத்தாக்கு

இரண்டு நாட்களாக இங்கே ஒரு பிரச்சனை மிக தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

இங்குள்ள இந்துக்களுக்கு இப்படி ஏடாகூடமாக எதாவது என்றாவது ஒருநாள் நடக்குமென்று ஏற்கனவே தெரியும்.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பார்களே.. அதுபோல் பிரச்சனை வரும்வரை காத்துக்கொண்டிருக்கின்றது அரசாங்கம்.

உலகம் இந்நிகழ்வை எப்படிப் பார்க்கின்றதென்று பல ஆய்வாளர்கள் ஆங்கிலத்தில் எழுதி உலகுக்குப் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

பிரச்சனை இதுதான்-

பூஜாங் பள்ளத்தாக்கு என்கிற ஒரு இடம் கெடா மாநிலத்தில் உள்ளது. அங்கே என்ன சிறப்பு.? அது சோழ பல்லவமன்னர்கள் வந்து தங்கி வாழ்ந்த ஆதாரங்களைத் தாங்கி நிற்கும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுப்பின்னணியைச் சொல்லும் அற்புத ஊர்.

UNESCO அறிவித்திருக்கும் உலகப்பாரம்பரியச் சின்னங்களான ஜக்கார்த்தா - போரோபோடர் மற்றும் சயாம் - அங்கோர்வாட் போன்ற இடத்திற்கு சரி நிகராக வைக்கப்படவேண்டிய பூஜாங் பள்ளத்தாக்கு, கட்டுமான நிறுவனத்திற்கு தாரைவார்க்கப்பட்டதால், இன்று அவர்கள் அதை புல்டோசர் ஏற்றி தரைமட்டமாக்கிவிட்டார்கள்.

தரைமட்டமான பிறகு.. ``நீ, நான், உன்னால் பிரச்சனை , நான் அல்ல, எனக்குத்தெரியாது, முந்தய அரசாங்கம், முன்னால் மந்திரி..’’ என ஒருவர் மாற்றி ஒருவர் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.


உலக வரலாற்றுச்சின்னம் நாட்டில் இருப்பதற்கு நாடு பாக்கியம் செய்திருக்கவேண்டும். அதுவும் எம் முன்னோர்களால் இந்தச் சிறப்பு என்கிறபோது - பெருமைதான்.

உலகமே நம்மை நோக்குவதற்கு இந்தச்சின்னம் ஒர் அரிய பொக்கிஷம் அல்லவா.!

மதத்தையும் கலாச்சாரத்தையும் ஒன்றாக வைத்துப்பார்த்து, அவ்விடத்தில் வரலாறு, இந்து பௌத்த மதத்தைப் பறைசாற்றுகிறது என்பதற்காக இக்கோவிலை உலகத்தின் பார்வையில் இருந்து மறைத்து வைத்திருக்கும் இந்நாட்டு அரசியல் நாடகத்தை நினைத்து மனம் வேதனைப் படுகிறது.

இப்போது இந்த Candi Lembah Bujang சில இடங்கள் உடைபட்ட நிலையில் இருக்கின்றதே, இது அவமானம் இல்லையா?

சில தமிழர்கள் அழுகிறார்கள் - இந்த அவல நிலையை நினைத்து.

பத்திரிகைகள் அரசாங்கத்தைச் சாடுகிறது, ஏன் இந்த அவலம்? என்று.

ஆய்வாளர்கள் விரைகிறார்கள் அங்கே.. நிலவரத்தை அறிந்து அதை மீண்டும் எப்படி உருவாக்குவது என்று கலந்தாலோசிப்பதற்காக...

ஆட்சிதான் உங்களின் கைகளில் உள்ளதே. வரலாறு எதைச்சொன்னால் என்ன? ஏன் இந்த மூடுமந்திரம்.!?

வெட்கம்...

மேல் விவரம் அறிய - LEMBAH BUJANG TEMPLE என்று கூகுளில் தேடி வாசிக்கவும்.