புதன், பிப்ரவரி 29, 2012

உறவு ஒரு பொருட்டு அல்ல

சுஜா, கணவனை விவாகரத்து செய்து விட்டு, தனிமையில் ஒரு ப்ளாட் வீட்டில் வாடகைக்குத் தங்கிக்கொண்டு, அருகாமையில் இருக்கும் பல தொழிற்சாலைகளில் தேநீர் கலக்கிக்கொடுத்தும் இன்னும் பல எடுபிடி வேலைகளைச் செய்து கொடுத்தும், ஜாலியாக எந்த ஒரு பிக்கல் பிடுங்கள் இல்லாமல் வாழ்ந்து வரும் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்மணி.

அவள், அவளின் கணவனை விவாகரத்து செய்த்தது பெரிய விவகாரமாக வெடித்து விட்டதால், அவளை அவளின் குடும்பத்தில் உள்ளவர்கள் சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டார்கள்.

அதைப்பற்றியெல்லாம் சுஜா கவலைப் படுவதேயில்லை.. பின்னே, தமிழ் பெண்ணாகப் பிறந்து விட்டால் திருமணம் செய்தே ஆக வேண்டுமென்று, நாற்பது வயதில் ஒரு அறுபத்தைந்து வயது வாலிபனுக்கு(!) அதுவும் இரண்டாந்தரமாகக் கட்டி வைத்தால் எப்படிப் பொறுத்துக்கொள்வது.!

‘உங்களுக்குத்தேவை நான் கல்யாணம் செய்வது. என்னை மணக்கோலத்தில்  பார்த்து விட்டீர்களே, ஆள விடுங்க. அந்த ஆளுக்கு ஒண்ணுமே தெரியவில்லை. (சுஜா,  ‘அந்த மாதிரி’ விவகாரத்தில் வேகமானவள்)  இன்னும் கொஞ்ச நாள், நோயில் படுத்துக் கொள்வான், நான் அவனை வச்சுக்கிட்டு என்ன பண்றது.!? பூவும் பொட்டும் இருந்திட்டா மட்டும் போதுமா வாழ்கையில்? என்னை நிம்மதியா விடுங்கள்’ என்று சொல்லி, ஈப்போவில் இருந்து கோலாலம்பூர் பக்கம் வந்து விட்டாள்.

நிம்மதியாக இருக்கிறேன், என்பாள். எனக்கு அப்படித்தோன்றவில்லை. சில வேளைகளில் மிகவும் சோர்வாகவும் இருப்பாள். தனக்கு யாருமே இல்லை என்கிற ஏக்கத்தின் வெளிப்பாடு அவ்வப்போது அவளின் பேச்சில் வெளிப்பட்டவண்ணமாகவே இருக்கும்.

நான் கொஞ்சம் ஆறுதலாகப் பேசுவதால், என்னிடம் அட்டைபோல் ஒட்டிக்கொண்டாள். எல்லாவிவரங்களையும் என்னிடம் பகிர்வாள்.
நான் அவளிடம் நெருங்கக் காரணம் அவளின் வெளிப்படையான பேச்சு. ஏறக்குறைய ஒரே மாதிரி சிந்தனையில் நாங்கள் இருவரும்..!

என்னைப் போலவே நிகழ்காலத்தில் வாழ்பவள். ஒரு சிலர் மாதிரி, இன்றைய ஜோக்கிற்கு, வீட்டிற்குப்போய் ரூம் போட்டு யோசித்து விட்டு, மறு நாள் சிரிப்பவள் அல்ல அவள்.. உடனே கலகலப்பாகிவிடுவதில் எனக்கு நிகர் அவள்தான்.

எது நடந்தாலும், அதை மறுநாள் காலையிலே என்னிடம் பகிர்ந்துவிடும் பழக்கமுள்ளவள் சுஜா. சில விஷயங்கள் அறுவைதான்..  என்ன செய்வது, மனித உறவுகள் வேண்டின், எல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.!

“என்ன சுஜா, நேத்து ஆளையே காணோம், வேலைக்கு வரலியா?”

“வரல விஜி, ஒரு பிரச்சனை..”

“என்ன பிரச்சனை?”

“லீமாவுக்கும், மணிக்கும் கல்யாணம் பண்ணி வச்சேன்..”

“என்னாது.. கல்யாணம் பண்ணி வச்சியா???”

“ஏய், நீ ஏன் வாய் பிளக்கற..நிறுத்தும்மா!..”

“எப்படி இப்படி மோசமான வேலையெல்லாம் நீ செய்யற?”


லீமா, சுஜாவின் வீட்டில் ஒரு அறையில் வாடகைக்குத் தங்கியிருக்கும் இந்தோனிசியப்பெண். இங்கே வீட்டு வாடகை அதிகமென்பதால், ஒரு ப்ளாட் வீட்டில் மூன்று அறைகள், அந்த மூன்று அறைகளிலும் யாரையாவது குடிவைத்தால், ஒரே ஆள் வாடகைச் செலவை ஏற்க வேண்டிய சங்கடமிருக்காது என்பதால், அவள் வேலை செய்யும் தொழிற்சாலைகளில் துப்புறவு பணிகள், கண்டீன் ஊழியர்கள் என சில வெளிநாட்டு வாசிகளுக்கு அறையை வாடகைக்கு விட்டிருந்தாள். (பெண்கள்தான்).

மணி சுஜாவின் நண்பர். ஒரு தையல்காரர். எல்லாவற்றிக்கும் சுஜாவிற்கு உதவியாய் இருப்பவர். அவளின் அனைத்துத் தேவைகளுக்கும் உடனடி சேவை மணிதான். செலவு சாமான்கள், உணவு வாங்கிக்கொடுப்பது,  இருவரும் சினிமா படம் பார்க்கச்செல்வது, மணியின் தையல் தொழில் பெருக்கத்திற்கு உதவியாய் ஆட்கள் பார்த்துக்கொடுப்பது என இருவரும் ஒருவருக்கொருவர் உதவியாய், நல்ல நணபர்கள்.  அடிக்கடி மணியைப்பற்றியே பேசுவாள். மணி நல்லவன், மென்மையானவன், உதவி என்றால் ஓடோடி வருபவன், கோபமே படமாட்டான், எப்போதும் சாந்தமாக புன்னகையோடு இருப்பான்...அப்படி இப்படி என ஓயாமல் அவன் புராணமே...

மணி வேறு ஒரு வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தாலும், அடிக்கடி சுஜா வீட்டிற்குச் செல்பவன். அப்படிச் செல்லுகையில், ஒரு நாள், பக்கத்து வீட்டுப்பெண்மணி (மலாய்) JAIS -யிற்கு -  (முஸ்லீம்கள் கள்ளவுறவுகள் வைத்திருந்தால் புகார் கொடுக்கும் இடம்) அழைத்து, சுஜா வீட்டில் விபச்சாரம் நடப்பதாகச் சொல்லி, புகார் கொடுத்து விட்டாள். வந்த அதிகாரிகள், அங்கே மணியையும் லீமாவையும் கையும் களவுமாகப் பிடித்து விட்டு, சுஜாவின் வீட்டை சீல் வைத்துவிட்டார்கள்.

நல்லவேளை இருவரும் வெளிநாட்டவர்கள், இல்லையேல் சுஜா பயங்கர வில்லங்கத்தில் மாட்டியிருப்பாள். அதிகாரிகளுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து, அந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டது. கதை வீட்டின் சொந்தக்காரருக்கும் போய், வேறு வீடு பார்த்துக்கொள்ளும்படி நெறுக்குதலும் கொடுக்கப்பட்டது. பேச்சுத்திறன் உள்ளவள் என்பதால் எல்லாவற்றையும் சுமூகமாகச் சமாளித்தாள் சுஜா.

இருப்பினும் அந்த சமயத்தில் இவள் பட்ட மனவுளைச்சளுக்கு அளவே இல்லை. அவ்வளவு சோர்ந்து, அழுது வாடியிருந்தாள். அதை இன்னமும் நினைத்து மனவேதனை கொள்வாள். அச்சம்பவத்தை நினைத்த மாத்திரத்திலே சோர்ந்து போவாள். வாழ்வில் அவள் பட்ட துன்பங்களில் இது மிக கொடுமையானது என வருந்துவாள்.

அதில் இன்னொரு கொடுமை என்னவென்றால்.., இந்த மணி சுஜாவைக் காதலிப்பதாகக் கூறி உருகி உருகி காதலித்து, உடலுறவு வரை சென்றுள்ளார்கள். இருவரும் பலமுறை கலவியில் களிப்புற்றதாக என்னிடம் பகிர்ந்துள்ளாள். பத்துவயது வித்தியாசத்தில், இளயவனான மணியின் ‘அந்த’ சேவை அவளை வெகுவாகவே கவர்ந்திருந்தது. இதைப்பற்றி மணிக்கணக்காக உளறியிருக்கின்றாள் என்னிடம். அவள் தனிமையில் உழல்வதால்  உண்மையிலே மணியைக் காதலித்திருந்தாள் என்பதனை அவள் உருகும் உருகலில் அறிந்துகொண்டேன். அவனைப்பற்றிப் பேசும் போதெல்லாம் முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளிவட்டம் பிரகாசிக்கும்.

ஆனால், அன்று ஜாயிஸ் அதிகாரிகளிடம் அகப்படும்போது, லீமாவும் மணியும் அல்லவா கலவியில்....!?  இவர்களின் இந்த லீலை, அப்போதுதான் சுஜாவிற்கே தெரியவந்தது. இது அவளை பெரிய அளவில் பாதித்திருந்த போதிலும்,  இந்த ஏமாற்றத்திலிருந்து தன்னை மிக விரைவாகவே சுதாகரித்துக்கொண்டாள். (பரிதாபமாகவே இருந்தது)

தனிமையில் உழலும் பெண்களை எப்படியெல்லாம் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் இந்த ஆண்கள் என்பதை நினைக்கின்ற போது எனக்கும் வேதனையே.!

ஆனால் இப்போது, அந்த இருவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டேன் என்கிறாளே, இது என்ன கதையோ..!!!

“ என்ன செய்யறது விஜி, அன்றாடம் இருவரும் செய்கிற லீலைகள் என்னால் பொறுக்க முடியவில்லை..தினமும் வருகிறான், என்னைப் பார்க்கும் சாக்கில், அவளின் ரூமுக்குள் நுழைந்துகொள்கிறான், அவளும் இவனுக்கு விழுந்து விழுந்து பணிவிடைகள் எல்லாம் செய்கிறாள்,.!” குரலில் ஒரு கரகரப்பு.

“சரி, அதுக்கு நீ ஏன் கவலைப்படற.. ? விடு.. இந்த விஷயத்தில் எவனும் யோக்கியன் இல்லை. அதுசரி, ஒரு இந்தோனிசியப் பெண்மணியை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் அங்கே.?”

“அங்கே எதுக்கு கூட்டிக்கிட்டுப் போகப்போறான்! இருக்கும் வரை, இவள் இங்கே பொண்டாட்டி, அங்கே போனா, சாதி சனத்தோட கட்டிக்கிட்ட சொந்த பொண்டாட்டி.., இவளுக்கும் பிரச்சனை இல்லை, இவளும் கல்யாணமானவள் தானே..!!!

அடக் கடவுளே.. இதெல்லாம் ஒரு பொழப்பா..!

மணி திருமணமானவன். தமிழ் நாட்டிலிருந்து, கடந்த ஏழு வருடமாக இங்கு தங்கி வேலை செய்து வருபவன். இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தை.



பரஸ்பரம்

வாலாட்டவேண்டும் என்பதற்காக
நாயிற்கு போடப்படும்
எலும்புத்துண்டு போல்
எனக்கு நீ கொடுத்துவிட்டுப் போகும்
சில ‘வணக்கங்கள்’

விபத்து

சாலையில்
சிட்டுக்குருவிக்கும் விபத்து
மனிதன் வாகனத்தில்
பறந்தவண்ணமாக

வாகனம்

யாரும் இறங்கவில்லை 
எவரும் ஏறவில்லை
பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன
‘பஸ் ஸ்டாப்’ தான் தனிமையில்

உன்னையே

குளியலறையில் ஒரு வண்ணத்துப்பூச்சி
நீண்ட நேரம் என்னையே பார்த்துக்கொண்டு
முன்பு சொல்வார் அம்மா
இறந்துப்போன யாரோ ஒருவர்
நம்மை நினைக்கும் போது
இப்படிச் சில வடிவங்களில் வருவார்களாம்
நான் உயிரோடு இருக்கும்
உன்னை நினைக்கிறேன்...வேறென்ன!

செவ்வாய், பிப்ரவரி 28, 2012

தொடர்கதை

மழை பெய்வது
ஒரு வர்னனை

காற்று அடிக்கிறது
என்பதற்குச் சில
எடுத்துக்காட்டுகள்

சுட்டெரிக்கும்
சூரியனுக்கு
ஒரு வசை

கடல் அலைகளுக்கு
ஒரு விளம்பரம்

பிச்சைக்காரியின்
ஓட்டைச் சட்டைக்கு
ஒரு அறிமுகம்

பனியில் நனைந்த
மலருக்கு
ஒரு விளக்க உரை

புடவை கட்டிய
பெண்ணுக்கு
ஒரு வர்னனை

மழலையின்
அழுகைக்கும் சிரிப்புக்கும்
ஒரு அங்கீகார வாசகம்

குரைக்கும் நாயின்
குரலுக்கு
கணைக்கும் குதிரையின்
குளம்படிக்கும்
ரு உவமை

பறக்கும்
குருவிகளுக்கு
ஒரு வியக்கியானம்

தும்முவது
துப்புவது
கொட்டாவி
கெட்டாவி
எச்சில்..என எல்லாமே

இதில் எதுவுமே
இல்லாததால்
எனது கதைகள்
எப்போதுமே
குட்டிக் கதைகள் தான்..!!



கடத்தல்

மலம் கூட
உட்கொள்ளப்படுகிறது
போதை மாத்திரையாக
வெளிவரும் போது

ஏற்றுக்கொள்ளல்

என்னை நீ
எனக்காகவே
ஏற்றுக்கொள்ளும்போது
நான்
நானாகவே
பரிணமிக்கிறேன்

ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

அறிவிப்பு பலகை

என் வீட்டிற்குள் வர
அழைப்பு மணியை அழுத்தவும்
நாய்கள் ஜாக்ரதை என்கிற
அறிவிப்புப் பலகை இல்லை

கவசம்

நீ என்னைப் பின் தொடரும் தருணங்களில், 
உன்னால் பொறுக்கப் படும் கற்களை 
நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். 
நமது இடவெளி நீளும் போது, 
நீ எறிகிற கற்களால் 
எனக்குச் சேதம் வராமல் 
என்னை நான் தற்காத்துக் கொள்ள 
கவசம் தேடிக் கொள்கிறேன்.. 
புன்னகையில்...

நித்தமும்

எச்சரிக்கையாக 
இருக்கும் போது தான்
ஒன்னை நினைத்து 
உன்னை எழுதுகிறேன்.
.

வியாழன், பிப்ரவரி 23, 2012

பழகத்தெரியும்

மொக்கை கூட சுவாரஸ்யம்தான்
எழுதத் தெரிந்தவனுக்கு

புல் கூட அழகுதான்
நடத்தெரிந்தவனுக்கு


நான் கூட தேவதைதான்
பார்க்கத்தெரிந்தவனுக்கு

நீ கூட நண்பன்தான்
பழகத்தெரிந்த எனக்கு

தொடரும்

எச்சரிக்கை

இந்த உணர்வுகள்
தொடராது என்பதால்
வார்தைகள்
மிக கவனமாக
கோர்க்கப்படுகின்றன

எச்சரிக்கை மனம்
சதா எச்சரித்துக்கொண்டே..

பதில்கள்
யார் அறிவாளியாக
இருந்தால் என்ன!?
நான் முட்டாளாய்
உங்களை விட
மகிழ்ச்சியாய் இருக்கிறேன்..

கேள்விகள் கேட்கப்படும் போது
வெட்டி அரட்டைகள்
ஆரம்பமாகின்றன பதில்களோடு..

பைத்தியக்கார..
எல்லா பைத்தியக்கார
செய்கைகளின் பின்னால்

புதன், பிப்ரவரி 22, 2012

படித்ததில் பிடித்தது (test tube hamburger)

Petri dish to dinner plate
scientists have used animal cells to create an artificial form of meat. Known as "in vitro meat", it is made from thousands of stem cells which multiply to produce srtips of muscle tissue without ever leaving lab

1. Stem cells: Extracted from healthy animal muscle. stem cells are primitive form of cell with power to grow and divide into almost any other cell.

2. Petri dish: cow muscle cells are grown in dish with sugars,amino acids,lipids,minerals and all other nutrients.

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

இது தான் காதல்

சில உணர்வுகள்
சொற்களில்
ஜாலம் புரிகின்றன

ஆசை, பிரியம், ஆவல், இச்சை,கொச்சை எல்லாம்
முகமுடி அணிந்து கொண்டு
சுற்றி வளைத்து
வாக்கியங்களாய்
கோலமிடுகின்றன

காமம் இல்லை
ஆபாசம் இல்லை
புணர்ச்சிக்கு இடமில்லை
தவிப்போடு
கேள்விக்குறியோடு
முடிவுறுகிறது

இது காதலா?

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

மனம் திருந்திவிட்டேன்

மனம் திறந்தேன்
நீ
என்னுள் நுழைய

மனம்திறந்தேன்
உன்னை
என்னுள் வைக்க

மனம் திறந்தேன்
உன்னை
வெளியே விட

மனம் திறந்தேன்
மற்றவருக்கு
இடம் தர

மனம் திறந்தேன்
நான்
உயரே செல்ல

மனம் திறந்தேன்
என்
இருப்பை நிலைநிறுத்த..

மனம் திறந்தேன்
எல்லாவற்றையும்
வெளியேற்ற..
                                            
மனம் திறந்துதான் கிடக்கிறது
என்னை நானே
உணர்ந்த போது

மனம் திருந்திவிட்டேன்..                                                            

வியாழன், பிப்ரவரி 16, 2012

வால் ஆட்டு

நல்ல புகைப்பட கலைஞர்கள்
கைவசம்!
எல்லாவற்றையும் படமெடுக்கிறார்கள்

கூடை தூக்கிகள்
கூஜா தூக்கிகள் என
போகிற இடங்களில் எல்லாம்
புகைப்படங்கள் குவிகின்றன..

புகைப்படத்தில்
சுற்றி நிற்பவர்கள்
தலைவர் போலவே சிரிக்கின்றார்கள்
வஞ்சகமாக
தலைவரின் தலைதிசை நோக்கியே
சில வா(லி)ல்கள்

ஒரு கூடை திண்பண்டங்கள்
ஒரு கவர்
ஒரு அட்டை
கண்களில் ஏக்கப்பார்வையைச் சுமத்த
ஒரு பெரியவர்

புகைப்பட்த்தில் தெரிகிறது
வாங்கிச் செல்லும் அவரின் காதில்
ஓதுகிறார் ஒருவர்
என்னவாக இருக்கும்!?

ஓ..விசுவாசம் தேவை என்கிறாரோ..!!!?

புதன், பிப்ரவரி 15, 2012

விளையாட்டு

குழந்தை பொம்மையின்
கூர்மையான பற்கள்
ரெண்டு கொம்புகளோடு
ஒரு சின்னம்

விளையாட வேண்டும்
அது ஒரு கடினமான
விளையாட்டு

எண்களை மட்டும் அடுக்கு
வரிசையாக
நேராக
மேலிருந்து கீழ்
பக்கவாட்டில் என..

பல வர்ண்ங்களில்
எண்கள்
பல வடிவங்களில்
எண்கள்
எண்களில் தான் எல்லாமும்

சரியானால்
மூளைக்கு நல்ல பயிற்சி
சிந்தனைக்கு சிறந்த
உரம்..

நாம் இன்னமும்
சீழ் வடியும் புண்களைத்தான்
வியாதி என்போம்..

ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

சனி, பிப்ரவரி 11, 2012

ஈர்ப்பு

உனது ரசனைகள்
அற்புதமேயானாலும்
அது என்னைக் கவரவில்லை
உன் கவனம் அதில் 
இருப்பதால்...

சக்கரையோடு

ஹார்லிஃக்ஸ் 
நெஸ்டம்
ஓட்ஸ்
கல்ஷியம் பால்
இஞ்சி தேன் கலவை
பார்லி பவுடர்
சாக்லட் பவுடர் (மிலோ)
ஜப்பான் டீ
எழுமிச்சைச் சாறு
எல்லாம் அப்படியே இருக்கும்
சக்கரையோடு காப்பி மட்டும் 
அடிக்கடி தீர்ந்துபோகும்.

காதல் கடிதங்கள்

புதிர்
நான் வாசித்த 
முதல் காதல் கடிதம்
உனதல்ல, அது எனக்கும் அல்ல

மர்மம்
எங்கு வைத்தாலும்
கண்டுப்பிடிக்கப்படுவது
காதல் கடிதங்களே...

பயம்
அப்பா பயம்
அம்மா பயம்
சித்தப்பா மாமா 
பயமில்லாமல்இருந்திருந்தால்
இன்று உன் கடிதங்கள்
அழகான கவிதைத் தொகுப்பாகியிருக்கும்

சுணக்கம்
முகவரி கேட்டு 
முடிவுறாத
நம் காதல் கடிதங்கள்

கலாச்சாரம்
நீ நேசித்து எழுதிய
முதல் காதல் கடிதம்
நான் வாசிக்காமலேயே....

பயிற்சி
நான் எழுதிய
முதல் காதல் கடிதம்
உனக்கு அல்ல, அது எனக்கு

உணர்தல்
தொலைத்து விட்டேன்
காதல் கடிதங்களை
ரகசியமாக வைத்திருக்கிறேன்
உன் நினவுகளை.

இல்லாமை
இங்கே கடிதங்கள்
உண்மைதான்
நீ என்பது
யார்?

வெள்ளி, பிப்ரவரி 10, 2012

அழணும்

எனக்குக் கொஞ்சம்
அழணும் போல் இருக்கு
உனது நகைச்சுவைகளுக்கு
சிரிக்க முடியாமல் போகும் போது.

வியாழன், பிப்ரவரி 09, 2012

கண்மை

இரண்டு கண்களில்
ஒரு கண் சிறுத்தும்
ஒரு கண் சராசரியான நிலையிலும்,
ஒரு கண் கிட்டப்பார்வையில் தெளிவாகவும்,
ஒரு கண் தூரப்பார்வையில் தெளிவாகவும்
காட்சிகளால் கண்கள் குளமாகின்றன
கண்ணீரோடு கண்மையும் கரைகிறது
காட்சிப்பிழையில் கவலையில்லை

ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

அபகரிப்பு


இஷ்டப்பட்ட
பெண்ணின் பெயரில்
கவிதைகள் குவிகின்றபோது

அதே பெயர் கொண்ட
பெண்ணின் மனம்
பறிபோவதேனோ..!!!

இனிய இலக்கிய பொழுது

எது இலக்கியம்? எல்லாமே இலக்கியம்தான். என்னை எதோ செய்த இலக்கியம். என்னை எதுவும் செய்யாத இலக்கியம். அவ்வளவே.

சுற்றி நடப்பதைச் சொல்லிக்கொண்டே இருங்கள்.. யார் என்ன சொன்னால் என்ன!
சுவரில் குழந்தைகள் கிறுக்குவதைப்போல், எதையாவது கிறுக்கிக்கொண்டே இருங்கள். இலக்கியமாகும் ஒரு நாள்.. இலக்கியம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று யாராலும் சொல்ல முடியாது.

பெண்கள் அதிகமாக எழுத வேண்டும் - அற்புதமான இலக்கியச் சூழல் உருவாகும்

எழுதுவதற்கு ஒன்றுமே வேண்டாம்.. பகிர ஒரு களம் கிடைத்தால் போதும்.

இலக்கியத்தைப் பல கூறுகளாகப்பிரிக்கலாம். அதில் பெண் எழுத்து இலக்கியத்திற்குச் சொத்து.

இலக்கியம் பொழுதுபோக்கு அல்ல, ஆனால் நீ நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் அது உன் பொழுதைப் போக்கும் இனிமையாக. நான் பொழுது போக்கிற்காக எழுதவில்லை என்றால், சூரியன் நின்று விடுமா என்ன.

'எங்கள் ஊர் இலக்கியவாதிகளில் சிலருக்கு, அவர்களின் கால்களைப் பார்த்தே பல நாள் ஆகியிருக்கும். செருப்பு கூட எந்த செருப்பு யாருடையது என்ன கலர் போன்றவற்றைக்கூட சரியாகச் சொல்ல முடியாத நிலையில் வானத்தைப் பார்த்து யோசித்துக்கொண்டே இருப்பார்கள்..அப்பேர்பட்ட இலக்கியவாதிகள். அப்படியெல்லாம் யோசிக்க வேண்டாம், சுற்றி நடப்பதை அப்படியே எழுதுங்கள். இலக்கியம் வந்துவிடும். 

இலக்கிய கூட்டங்களுக்கு இங்கே பெண்கள் இவ்வளவு பேர் கூடியிருப்பதைப்பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. 

ஆதவன் தீட்சண்யா

ஒரு இலக்கிய நிகழ்விற்குச்சென்று வந்தேன். அங்கு பகிரப்பட்ட விவரங்களில் நான் உள்வாங்கியது


வெள்ளி, பிப்ரவரி 03, 2012

வியாழன், பிப்ரவரி 02, 2012

பெருத்த மகளே

எஸ் ஆகி
எம் ஆகி
எல் ஆகி
எஃக்ஸ் எல்’லாகி
டபுல் எஃக்ஸ் எல்லாமுமாகி
குண்டாய்
தண்டமாய்
எல்லாம் விழுங்கி
வல்லரசுரராய்
பேயாய்
கனமாய்
செல்லா இயலாமையாய்
பெருத்த மகளே..

தைபூசம்

எங்கிருந்து வந்தன
இவ்வளவு மயிலிறகுகள்?
இறகுகள் செய்யும் தொழிற்சாலைகள்
உலகத்தில் எங்கோ ஒரு மூலையில்
இருக்கோ?

காவடி

மயில்கள்
வேட்டையாடப்படுகின்றன
மயில் மேல் வரும் முருகனுக்காக

புதன், பிப்ரவரி 01, 2012

ஜீரணம்

தாய் அருந்தியதை
அருந்தி வளர்ந்தோம்

பயிர்கள் பருகிய நீரை
பருகி வளர்ந்திருக்கின்றோம்

பலகாரங்கள் குடித்த எண்ணெய்யையும்
குடித்துக்கொண்டிருக்கிறோம்

தாவரங்கள் ஜீரணிக்காத விஷத்தை
ஜீரணித்துக்கொண்டிருக்கிறோம்

ஜீரணிக்காத மரணத்திற்காக..

யுக்தி

அலுவலகம் நுழையும்போதே
சோகமாக முகம்
யாரிடமும் பேசக்கூடாது
கொஞ்ச நேரங்கழித்து
குளிரில் நடுங்குவதைப்போல்
ஒரு ஸ்வெட்டர் போட்டுக்கொள்வது
பிறகு எல்லோருக்கும் விளங்குவதைப்போல் தும்மல் விடுவது
இடையிடையே இரும்மிக்கொள்வது
பேசமுடியாதபடி பேசுவது திணறித் திணறி
உத்தரவு வாங்கி கிளினிக் செல்வது
அழைப்பு நிச்சயம் வரும்
நான் எம்.சி என்று
நாளைக்கு பொதுவிடுமுறை.
போஸ் தான் சொன்னார்
இந்த யுக்தியை