வியாழன், ஜூன் 07, 2012

‘கலியுக துர்கா சித்தர்’ முருகன்

முன்பெல்லாம், கணவர் மற்றும் அவரின் நண்பர்கள் சிலர் ஒன்றாகச் சேர்ந்து காடுகள், மலையேற்றம், குகை புகுதல், யாரும் செல்லாத இடங்கள், என ஒன்றாகச் சேர்ந்து சாகசப் பயணங்கள் மேற்கொள்வது வழக்கம். வருடத்திற்கு ஒருமுறையாவது, இதுபோன்ற பயணமொன்றை ஏற்பாடு செய்துவிடுவார்கள்.

அதற்காகவே, பிரத்தியேக காலணிகள், உடைகள், கேமரா, போன்றவைகளை வாங்கி வைத்துக்  கொள்வார்கள்.

ஒரு முறை நண்பர்களின் மனைவிகள் சிலர், அவர்களுடன் பயணிக்கவிருப்பதால், என்னையும் அழைத்தார் என் கணவர். இதுபோன்ற சாகச பயணங்கள் ஆபத்துகள் நிறைந்தவையாக இருப்பதால் எனக்கு நான் இதில் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை. இருப்பினும் சென்றுதான் பார்ப்போமே, என்கிற ஆவலில் ஒரு முறை அவர்களுடன் சென்றுவந்தேன். இந்தப் பயணத்தின் போதுதான், எனக்கு அறிமுகமானார் கலியுக துர்கா சித்தர் முருகன்.இவரைப் பற்றிய விவரங்கள் சில;

இவர், நமது வீடுகளில் புகுகின்ற சில தீய சக்திகளை விரட்டியடிக்கவும், அவைகளின் நடமாட்டங்களைத் துல்லியமாகக் கண்டு அறிவதிலும் வல்லவர். அனல் பறக்கும் தீச்சட்டியை கைகளில் நீண்ட நேரமாக ஏந்தி, பூஜைகளின் வழி தீய தேவதைகளை விரட்டியடிப்பதும், வீடு வளம் பெற, மக்கள் நலபெற பிரார்த்தனை செய்வதும், இவரின் தனிச்சிறப்பு. இவருக்கு கலியுக துர்கா சித்தர் என்கிற பட்டம், தமிழ்நாட்டில், படப்பை என்கிற கிராமத்தில் வசித்த துர்காசித்தர் வழங்கியது. அவரின் உயிர்ப் பிரியும் தருணத்தில், முருகன் என்கிற பெயர் கொண்ட இவர், அவரின் அருகிலேயே இருந்ததால், இவருக்கு தமது நாமத்தை (கலியுக துர்கா சித்தர்) பட்டமாக வழங்கிய பின், சமாதி நிலை அடைந்தாராம்.

(கூடுதல் தகவல் - இந்த இரண்டு சித்தர்களும் துர்க்கையம்மனை நேரில் தரிசித்தவர்களாம். அவரே கொடுத்த தகவல்)

நண்பர்களின் குழுவில் உள்ள ஒருவரின் வீட்டில் தீய சக்திகள் நுழைந்து அராஜகம் புரிந்ததால், அவைகளை விரட்ட துர்கா சித்தரை அழைத்தபோது, அவர் அவர்களுக்கு அறிமுகமாகி, பின் எங்களுக்கும் பழக்கமானார்.

இரண்டாயிரத்து ஆறாம் (2006) ஆண்டு, நாங்கள் சாகசப் பயணம் மேற்கொண்டிருந்த இடம், சுங்கை சிப்புட் சித்தர் குகை. உண்மையிலேயே சாகசங்கள் நிறைந்த பயணம்தான் அது. இப்பொழுது நினைத்தாலே, உரோமங்கள் சிலிர்க்கின்றன. அதைப்பற்றிய கட்டுரை ஒன்றை, அற்புதமான புகைப்படங்களோடு பத்திரிகைக்கு எழுதினேன்.(மக்கள் ஓசை) பலரின் கவனத்தையும் அது ஈர்த்தது.

அந்தப் பயண அனுபவங்களைப் பற்றி சற்று மேலோட்டமாகப் பார்ப்போமே -

வேன் பிடித்து அவ்விடத்திற்குச் சென்றோம். அந்த வேன்’ஐ, குகைக்கு அருகில் இருந்த தோட்டமொன்றில், பசுமாடுகள் மேய்த்துக்கொண்டிருந்த முதியவரிடம் பாதுகாக்குமாறு சொல்லி விட்டு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தோம். நல்ல பசுமையான நடைபாதை முடிந்து, செடிகொடிகள் உள்ள கரடுமுரடான பாதையில் நுழைந்தோம், அதன் பிறகு, சேறுசகதிகள் நிறைந்த பாதை.. முட்கள், விஷச்செடிகள், மேடு பள்ளம் என எங்களின் பயணம் கடினமானது.

எங்களின் முன்னே, தலைமை தாங்கி எங்களுக்கு வழிகாட்டியாய் இருந்தவர், சித்தர் முருகன் தான். ஓர் இடத்தில் பயணத்தை நிறுத்தி, கண்களை மூடி ஏதோ மந்திரங்களை முனக, பிறகு மீண்டும் பயணம் தொடர்ந்தது,

`ஏன் நின்றீர்கள் ஐயா, என்ன மந்திரம் சொன்னீர்கள், என்ன பிரச்சனை?’ (நான் தான், கேட்போம்ல). அதற்கு அவர், `உஸ்’, என்கிற வார்த்தையை மட்டும் சொல்லி, சிறிது தூரம் சென்று ஒரு மரத்தைக் காண்பித்து, `அங்கே பாருங்கள்’ என்றார். கருப்பு வர்ணத்தில் பளபள என மின்னும் பெரிய பாம்பு அங்கே, நாங்கள் தாண்டி வந்த மரத்தில்தான் அது நெளிந்துகொண்டு இருந்தது. அருகில் தான் நாங்களும்  நடந்து வந்துள்ளோம்.

``ஐயோ,ஆ பாம்பு’’ என்றோம். ``எதைப் பார்த்தாலும் அமைதியாக இருக்கவேண்டும், எதுவும் பேசக்கூடாது, கூச்சல் போடக்கூடாது, நான் அடிவைக்கும் இடத்தில், உங்களின் அடியை வையுங்கள், என் அடியை மட்டும் பாருங்கள், எந்த ஆபத்தும் வராது..’’ என்றார்.

பிறகு என்ன.! இஞ்சி தின்ன குரங்கு மாதிரி எல்லோர் முகமும் - பெண்கள் நாங்கள் நடுங்கித்தான் போனோம். சில இடங்களில் ஆண்களின் உதவி இல்லாமல் எங்களால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் திண்டாடினோம். சேறு சகதிகள் நிறைந்த இடங்களைக் கடக்கின்றபோது, அவரவர் மனைவிமார்களை அவரவர்கள் தூக்கிக் கொண்டார்கள்.

இது அந்தக் குகைக்குப் போகும் வழிதான். குகைக்குள் நுழைவதற்கு செங்குத்தான மலை ஒன்றில் ஏறவேண்டும், அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட மலை மேடு அது. நல்ல சீரமைப்பு செய்து கட்டப்பட்ட படிகளில் ஏறுவதற்குக்கூட சிரமப்படும் நாம் (பெண்கள்தான்), இது போன்ற மலைகளில் எப்படி ஏறியிருப்போமென்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். சுண்ணாம்புப் பாறை, ஆங்காங்கே நீர் வேறு வடிந்துகொண்டிருந்தது, வழிப்பாதைகள் வழுக்கும் நிலையில், பொத் பொத் தென்று விழுந்து, தலை மயிர் வரை சேறு.


குகைக்குள்ளே இருக்கின்ற அந்த சுயம்பு லிங்கத்தைக் காண (அவர் அப்படித்தான் சொன்னார், அதற்கு வேறொரு விஞ்ஞானப் பெயரும் உண்டு) செல்லும் வழி இன்னும் கரடுமுரடானது. கொஞ்சம் இடறினால், பயங்கர பாதாளத்தில் விழவேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படலாம். விழுந்தால், பிணத்தை எடுத்துத் தருவதற்குக் கூட அரசாங்கத்தின் உதவி கிடைக்காது. காரணம், அரசாங்க அனுமதி பெறாமல், தடை செய்யப்பட்ட, ஆபத்துகள் நிறைந்த இடத்திற்குச் சாகசப் பயணம் மேற்கொண்டிருகின்றோம். இந்தத் தகவலை அறிந்தவுடன், பலருக்கு முகத்தில் இருள் படர்ந்தது. எனக்கும்தான்.!

நாங்கள் நடந்து வந்தது, மலையேறியது, போன்றதை விட, உள்ளே நுழைவது இன்னும் கொடுமையான அனுபவமாக இருந்தது. முட்டி போட்டுக்கொண்டும், பிட்டத்தால் நகர்ந்துகொண்டும், கூன் வளைந்து நடந்துகொண்டும்.., சித்தர் முருகன் முன்னே செல்ல நாங்கள் பின்னே மெதுவாகச் சென்று அந்த இலக்கை அடைந்தோம்.

உள்ளே நாங்கள் சந்தித்த அற்புதங்களை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.. எழில் கொஞ்சும் அழகிய நந்தவனம் அது.. நீர் வீழ்ச்சி போன்ற நீரூற்று, வித்தியாசமான செடிகொடிகள், தாவரங்கள். வித்தியாசமான பூச்சி வகைகள், பூ வகைகள், பறவைகள்,வவ்வாள், ஒருவித நறுமணம் வேறு நாசியைத் துளைத்தவண்ணமாக, மெல்லியதாய் ஒரு இசை காதுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. வெளியே இருந்து விழுகிற சூரிய ஒளிக்கீற்றுகள் உள்ளே படர்ந்து, அற்புத சூழலை உருவாக்கிக்கொண்டிருந்தது. பிரளயத்தின் போது, அதாவது எத்தனையோ லட்ச ஆண்டுகளுக்கு முன் கடல் நிலமாகவும், நிலம் கடலாகவும் மாறிய போது ஏற்பட்ட மாற்றங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தியது.

சிறிய சிறிய சுண்ணாம்புக் குன்றுகளுக்கிடையே சிப்பி, நத்தைகள் மணலோடு மணலாக சிதறிய கடற்கற்களுடன் கலந்து, கடற்கரையோற சூழலை ஞாபகத்திற்குக் கொண்டுவந்தது அக்கண்கொள்ளாக்காட்சி. அதாவது, ட்ஸ்கவரி சேனல் பார்க்கும் போது, கடலுக்கடியில் அற்புதங்களைக் கண்டெடுக்க பல மையில்களுக்கப்பால் உள்ளே பயணிக்கின்றபோது, அங்கே சில இயற்கைக் காட்சிகளைக் காண்போமே, அது இப்போது நம் கண்முன், அதுவும் உயரமான ஒரு மலையின் குகைக்குள் காணக்கிடைக்கிறது... எப்பேர்பட்ட அற்புதக் காட்சியாக இது இருக்குமென்று மனக்கண் முன்  நிறுத்திப்பாருங்கள்,  பூரித்துப்போவீர்கள்.உள்ளே தூய்மையான சேறு கிடைத்தது, அதை முகத்தில் அப்பிக்கொண்டால், அழகாக இருக்கலாம் என்றார் சித்தர், ஒரு நொடிக்குள் எல்லா பெண்களின் முகங்களிலும் சேறுகள் அப்பிக்கொள்ளப்பட்டது.

இவைகளையெல்லாம் தாண்டித்தான் அங்குள்ள அந்தச் சுயம்புலிங்கத்தை நெருங்கமுடிந்தது.

என் உயரத்திற்கு வளர்ந்திருந்த லிங்க வடிவிலான ஒரு குன்று அது. மேலிருந்து ஒரு  சொட்டு உருகி, கீழே விழுந்து கல்லாக மாறுவதற்கு கிட்டத்தட்ட நூற்று இருபது வருடங்கள் பிடிக்குமாம். இப்போது, என் உயரத்திற்கு (5.2") அது வளர்ந்துள்ளது என்றால், வருடங்களைக் கணக்கிடவே மூச்சு முட்டுகிறதுதானே.!

அங்கே இன்னொரு அதிசயம் என்னவென்றால், அந்த சுயம்பு லிங்கத்தில், மேலிருந்து சொட்டுகிற நீர், நேராக அதன் மத்தியில் விழுந்து தெறித்து, அபிஷேகம் செய்வதைபோன்றதொரு காட்சி ஆச்சிரியமே. வேறு எங்குமே நீர் சொட்டவில்லை, அந்தக் குன்றின் மேல் மட்டும் சொட்டு சொட்டாக நீர் வடிந்த வண்ணமாகவே இருந்தது. வடிகிற நீர் அதன் அடியினில் தேங்கி, நீல நிற குளமாக மாறியிருந்தது. கோவிலில் ஆகம முறைப்படி செதுக்கிச் செய்த மூலஸ்தானம் போல் இயற்கயிலே அற்புதமாக அமையப்பெற்ற ஓர் இடம் அது. (புகைப்படங்கள் கூடிய விரைவில் வரும், பகிர்கிறேன். தற்போது எல்லோரிடமும், ஃபையில் வடிவில், ஒரு டாக்குமெண்டரியாக மட்டுமே இருக்கின்றது. ஏற்கனவே, ஒரு சீடியில் சேகரித்து வைத்திருந்தோம், அதில் எதோ கோளாறாம்.. ) 


அங்கே சில மந்திரங்கள் சொல்லி பூஜைகள் செய்யப்பட்டப்பின், தியானம் பயின்றோம். ஓம் ஓம் என்கிற போது, எதிரொலிக்கும் அந்த சொல், இசையாக மீண்டும் நமக்குள் ஒலிக்கும் தருணம் அற்புத அனுபவம். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது, அனுபவிக்கவேண்டும்.அக்குகை அங்குள்ளதென்பதைக் கண்டு பிடித்தவரே சித்தர் முருகன்தானாம்.  தமது தியான அனுபவத்தின் வழி இக்குகையைக் கண்டெடுத்தாராம். இன்னும் அதிகமான புதைக்கப்பட்ட பொகிஷங்களை இவர் தமது தியானத்தின் மூலம் கண்டுகொண்டு, பிறகு தியானத்தில் காட்டிய பாதையிலேயே சென்று, சுயம்பு லிங்கமாக வளர்ந்திருக்கின்ற குன்றுகள், தெய்வத்தன்மை பொருந்திய குகைகள். இந்திய பாரம்பரியத்தைப் பறைசாற்றும் புதையுண்டுக்கிடக்கின்ற வசிப்பிடங்கள், கோவில்கள், மண்ணில் மறைந்து கிடக்கின்ற சோழர்காலத்து கோட்டைகள் , சிலைகள் என கண்டறிந்து, கரடு முரடு, கல் முள், மேடு பள்ளம், விஷப் பாம்பு தேள் போன்ற ஆபத்துகளை எல்லாம் கடந்து, கால்களில் செருப்புகள் கூட அணியாமல், தியானத்தின் மூலமாகக் கண்டது உண்மையா இல்லையா.? என்பதனை தாமே தனியாளாகச் சென்று  உறுதிப்படுத்திக்கொண்டு; புரிந்துணர்வு உள்ள அன்பர்களிடம் மட்டும்  அவ்வற்புதங்களைப் பகிர்ந்து, வருவதற்கு தயார் நிலையில் இருப்பவர்களை மட்டும் அழைத்துச் சென்று காண்பித்து வருகிறார்.

கலியுக துர்கா சித்தர் முருகன், இப்படிக் கண்டெடுத்த சில இடங்களுக்கு பெண்கள் அறவே செல்ல முடியாது. ஆபத்துகள் நிறைந்த சாகசப் பயணமாகவே அது இருக்கும்.

பஹாங் மாநிலத்தில் உள்ள ஒரு குகைக்குச் சென்று வந்தார்கள். அதனின் புகைப்படங்களைப் பார்க்கின்ற வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. நீண்ட கயிற்றை, மேலே உள்ள ஒரு பெரிய மரத்தில் இறுக்கமாகக் கட்டி, அதைப் பிடித்துக்கொண்டு, ஒவ்வொருவராக கீழே இறங்க வேண்டும். இறங்கிய பின், ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்துள்ளார்கள்.  பயங்கர காடு. புகைப்படத்தில் பார்ப்பதற்கே திகிலாக இருந்தது. இவைகளோடு இன்னும் பல இடஙகள் அவரின் வழிகாட்டுதலோடு சென்று வந்துகொண்டிருக்கின்றார்கள்.அண்மையில் கலியுக துர்கா சித்தர் முருகன் அவர்களுக்கு, இந்தோனிசியாவில் `வாலி’ பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார்கள். அந்தப் பட்டம் கிடைப்பதற்கு, அவரின் அரிய சாதனை என்னவென்றால் - அங்கே உள்ள ஒரு மலைக்கு தியானம் செய்யச் சென்றுள்ளார் சித்தர். தியானம் செய்துகொண்டிருந்த போது, ஒரு அற்புதம் நிகழ்ந்ததாம்.! உடனே அங்குள்ளவர்களின் துணையோடு, சம்பந்தப்பட்ட அவ்விடத்தை நோக்கிச்சென்று, அங்கே பூமிக்கடியில் புதையுண்டுக்கிடந்த இரண்டு செம்புச்சிலைகளைக் கண்டெடுத்துள்ளார்கள். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மிகவும் பழமை வாய்ந்த சிலைகள் அவை. அவரிய பொக்கிஷங்கள் அங்கே இருப்பதை அவர் கண்டெடுத்ததால் இப்பட்டம் அவருக்கு வழங்கப்பட்டதாம்.

சிலைகளில் ஒன்று விநாயகர், மற்றொன்று விஷ்ணு/சிவன். அதில் விநாயகர் சிலையை இவரிடமே வழங்கி, மற்றொரு சிலையை அவர்களே பொக்கிஷமாக வைத்துக்கொண்டார்களாம்.


இதில் இன்னொரு அதிசயமும் நம் கண்களை அலக விரியவைக்கின்றது. கஸ்டம்ஸ் கெடுபிடிகள் இல்லாமல், கிட்டத்தட்ட பத்து கிலோ எடையுள்ள இச்சிலையை  எப்படி இங்கே கொண்டுவந்திருப்பார்? (கேட்டேன்)

கஸ்டம்ஸ் சோதனையின் போது, அச்சிலை, சி.சி டீவியின் பார்வையில் தென்படாமல் தம்மை மறைத்துக்கொண்டதாம். நிருவையின் போதும், கிலோ கணக்கில் குறைத்தே காட்டியதாம். (அதிசயம்தான், எல்லாம் இறை சித்தம்..)

இச்சிலை தற்போது சித்தர் முருகனின் பாதுகாப்பில்தான் உள்ளது. தரிசனம் கிடைத்தாலே, நினைத்தது நிறைவேறும் என்கிறார் சித்தர். அவரையும் இந்த சிலையையும் நேரில் சென்று காணவிரும்புவோருக்கு -முகவரி இதுதான்.

Sittar Sri Murugan
No.20, Jalan Kedidi 12
Taman Sepang Putera
Sungai Pelek
Sepang.

தொலைப்பேசி எண்.
014-6343808

நமசிவாய. வாழ்க வளமுடன் (அவர் அடிக்கடி உபயோகிக்கும் வார்தை இது)

அருவுருவ...

அருவமாய்
நீ என் முன்னே
வீற்றிருக்கும் போதுதான்
எனக்கு உருவமிருப்பதையே
நான் உணர்ந்துகொள்கிறேன்