ஞாயிறு, பிப்ரவரி 08, 2015

கலாச்சார காவலர்களே....

நம்மவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு, அதாவது விரைவாக உணர்ச்சிவசப்படுவது. எந்த ஒரு ஆய்வு மனப்பான்மையும் இல்லாமல், எல்லோரும் சொல்கிறார்கள் அது நிச்சயம் தப்பாகத்தான் இருக்கும். என்று ஒத்தூதிக்கொண்டு சரமாரியாக சர்ச்சையில் ஈடுபடுவது. சரி தப்பு என்று சொல்வதற்கு சில அறிவுப்பூர்வமான விவரங்களை பொதுவில் வைக்கத்திறன் இல்லாமல் கலாச்சாரம், பண்பாடு, சமயம், கண்ணியம் என கூப்பாடு போட்டுக்கொண்டு வன்முறையில் ஈடுபடத்துவங்கிவிடுகிறார்கள்.

அண்மையில் ஒரு வட்சாப் புகைப்படம் பரவலாக பலருக்குப் பகிரப்பட்டது. அத்தோடு சேர்த்து ஒரு அநாமதயப்போர்வழியின் குரலும் அப்புகைப்படத்தின் கீழ் பதிவு செய்து அனுப்பப்பட்டது. அக்குரல் ஒரு ஆணுக்குச்சொந்தமானது. அவர் என்ன சொல்கிறார் என்றால், இவள் ஒரு பெண்ணா? என்று ஆரம்பித்து பண்பாடு கலாச்சாரம் கோவில் என காரசாரமாக புலம்பியிருக்கின்றார். இறுதியில் `த்தூ’ என காறித்துப்பிவிட்டு அப்பெண்ணின் முதுகில் குத்தியிருக்கின்ற பச்சையை மேற்கோல் காட்டி அதையும் அசிங்கமாக விமர்சித்து தனிநபர் தாக்குதல் நடத்திவிட்டு,  `நான் தப்பாகச்சொல்லவில்லை.இப்படிக் கண்டித்தால்தான் அடுத்து கோவிலுக்கு வருகிற பெண்கள் கலாச்சார உடையுடன் அடக்க ஒடுக்கமாக வருவார்கள்,’ என்கிற மிரட்டல் எச்சரிக்கையோடு முடித்திருக்கின்றார்.

இது சட்டநடவடிக்கைக்கு உற்பட்ட ஒரு செய்கை என்பதை அறிந்துத்தான் செய்துள்ளாரா, அந்தப் `பண்பாட்டுக்’காவலர்.? இது ஒரு சைபர் கிரைம்.

ஒருவருக்குத்தெரியாமல் அவரை பின்பக்கமிருந்து புகைப்படம் எடுப்பது.
அவரைப்பற்றி அவதூறாகப் பேசி பதிவு செய்து பரவலாகப் பரப்பிவிடுவது.
அவர் எம்மதத்தைச்சேர்ந்தவர் என்பதை அறியாமல், அவர் நம் கலாச்சார பண்பாட்டுக்கூறுகளைக் கடைபிடிக்கவில்லை என்று கூப்பாடு போடுவது.. போன்றவற்றைக்குறிப்பிடலாம்

நாடுமுழுக்க அந்தப் புகைப்படம் எல்லோர் கைப்பேசியிலும் வந்து, அவனவன் இஷ்டத்திற்கு அப்பெண்ணின் புகைப்படத்தை எடிட் செய்து பெண்களை பொதுவில் கேவலப்படுத்திக்கொண்டிருப்பது இந்த சமூகத்தின் மீதும் ஆணாதிக்க அட்டூழியத்தின் மீதும் கூடுதல் வெறுப்புதான் மிஞ்சுகிறது.

அவனவன் வீட்டில் நடக்கின்ற அனைத்து ஒழுக்கக்கேடுகளையும் மூடுமந்திரம் செய்துவிட்டு, பொதுவில் பண்பாட்டுக்காவலர்கள் என்கிற முகத்திரையோடு உலாவருவது சுயமரியாதையாக்கப்பட்டுவிட்டது இங்கே.

ஒரு பெண்ணை அவளுக்குத்தெரியாமல் புகைப்படம் எடுப்பதே ஒழுக்கக்கேடான செய்கைதான் என்பதை உணராமல், கலாச்சாரம் பண்பாடு என்பனவற்றைப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கின்றது இவர்களுக்கெல்லாம்.? எவளோ ஒருவளைப் புகைப்படம் எடுத்து ஒட்டுமொத்த பெண்குலத்தையே கேவலப்படுத்துவது எந்த காலத்துத் தமிழ் கலாச்சாரம்.?

அப்பெண்ணின் அண்ணனோ மாமனோ மச்சானோ அப்பாவோ அங்கிருந்து, நீ அப்புகைப்படத்தை எடுக்கின்றபோது அதை அவர்கள் பார்த்து பெரிய பிரச்சனையாகி, வாய்ச்சண்டையாகி, கைச்சண்டையாகி, குண்டர் சண்டையாகி, வெட்டுக்குத்துவரை சென்றிருந்தால், நம் சமூகத்திற்குக் கெட்ட பெயர்தானே.! கோவிலில் சண்டை போடுகிறார்கள் என கொட்டை எழுத்தில் பிற இனத்தவர்களின் பத்திரைகையின் முதல் பக்கச்செய்தியாக வருமே. அப்போது யார் மீது குற்றம் சொல்வது. ? தனிமனித சுதந்திரத்தில் அத்துமீறி மூக்கை நுழைத்த நீதானே அங்கே குற்றவாளி.! இது சமுதாயக் கேடு இல்லையா.?

இப்படிப்புகைப்படமெடுத்துப்போட்டால்தான் மக்கள் திருந்துவார்களாம்..! அப்படியென்றால் தினமும் நடக்கின்ற குண்டர் சண்டைகளை மிகக்கேவலமாகச் சித்தரித்து பத்திரிகையில் போட்டுவருகிறார்களே.! திருந்துகிறதா இந்தச்சமூகம்.? தைபூசத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்புகூட பார்க்கிங் பிரச்சனையில் ஒருவனின் கைகால்கள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டதே.. அப்புகைப்படமும் பொதுவில் பரப்பப்பட்டதே.. ! இந்த ஆண்வர்க்கத்தால்தான் கலாச்சாரம் பண்பாடு எல்லாம் பாழாகிறது என எந்தப்பெண்ணாவது கூப்பாடு போட்டு புகைப்படங்களை பரப்பி வந்தாளா?

எவ்வளவோ சொன்னார்கள்.. சுருட்டு பிடிக்காதீர்கள். பீர் அருந்தாதீர்கள். கத்திமேல் நிற்காதீர்கள் பேன்ஸி காவடிகளையெல்லாம் எடுக்காதீர்கள் என, யார் கேட்டார்கள். எங்கோ ஒரு மூலையில் தைபூசத்தின் போது இவையெல்லாம் நடந்து கொண்டுதானே இருந்தது. முற்றாக அழிந்துவிட்டதா? ஏன் அவைகளைக் கேவலமாகச் சித்தரித்து குரல் பதிவுகள் வரவில்லை. ? பிரச்சனை பெரிசாகும். குண்டர் சண்டைகள் வரும் என்கிற பயம்தானே.!. சமய ஆசான்களே இவைகளை பொதுவில் சொல்கிறபோது, கொஞ்சம் பவ்வியமாகத்தான் எடுத்தியம்புகிறார்கள். காரணம் நம்மவர்களின் நிலைமை அப்படி.

ஆனால் அதுவே பெண்களின் பிரச்சனைகள் என்றால் கூடுதல் இளக்காரம். குடும்ப மானம், கணவன், பிள்ளைகள் அண்ணன் அப்பா என எல்லோரையும் சந்திக்கு இழுத்து கேவலப்படுத்தலாம் இஷ்டம்போல். அது நமது கலாச்சாரம், அப்படித்தானே. !

ஒரு அனுபவம் சொல்கிறேன்..
சென்றவாரம் நானும் என் அக்காவும் காய்கறி சந்தைக்குச்சென்றோம். என் அக்கா மொட்டை போட்டு முடி இப்போதுதான் வளர்கிறது. அவர் நிறத்தில் கொஞ்சம் கருப்புதான். நான் மாநிறம்.

இருவரும் ஒரு மீன் கடைக்குச் சென்றோம். பேசிக்கொண்டே, மீன்களின் செவுள்களை திறந்து திறந்து புதிய மீன்களா என ஆராய்ந்துகொண்டிருந்தோம். அப்போது அந்த வியாபாரி (சீனப்பெண்), மலாய்மொழியில் சொன்னாள், அக்கா எல்லாம் புது மீன்தான்.. சந்தேகமே வேண்டாம். தாராளமாக வாங்கலாம்.... என்று சொல்லி முடிப்பதற்குள்.. ஆஆ.. சாரி. மலாய் தெரியுமா? என்று கேட்டாள். ஏன் அப்படிக்கேட்கிறாய்? என்றதிற்கு, நீக்ரோவோ என்று நினைத்தேன்.  என்றாள். . உடனே நான் என் அக்காவிடம் திரும்பி,  இனி நீ, கூந்தல் நீளமாக வளரும் வரை என் கூட வராதே. என்னையும் நீக்ரோவாக நினைக்கின்றார்கள், என்று நகைச்சுவையாக சொல்லிவிட்டு,  `நீக்ரோதான் டாப்ஸ் பட்டேலா பேடுகிறாளா? பொட்டு வைக்கிறாளா.? என்று சிரித்துக்கொண்டே கேட்டேன். அதற்கு அவள், அக்கா நீக்ரோ மட்டுமல்ல நாங்களும் இப்போதெல்லாம் சிலவேளைகளில் உங்களைப்போல்தான் உடுத்துவோம். புடவை கட்டுவோம். சுடிதார் போடுவோம். என்றாள். சந்தோசம்.

இதை நான் ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், மூவினம் கடந்து பல இனங்கள் வாழுகிற நம் நாட்டில் எல்லா ஆடைகளும் எல்லோருக்கும் சாத்தியம். மிகச் சுலபமாக நமது கலாச்சார ஆடைகள் எல்லா இடத்திலேயும் கிடைக்கின்ற பட்சத்தில் பலரும் அதை பரவலாக அணிந்து வருவது சகஜமாகிவிட்ட நிலையில், புடவை கட்டியிருப்பவர் எல்லாம் இந்துக்கள்தான் என முடிவெடுப்பது சரியா? கண்ணால் காண்பதெல்லாம் மெய்யா?

சரி இன்னொரு கேள்வி வரலாம். கோவிலில் அப்பெண் இருக்கின்றாள், உடை சரியில்லை. ? பத்துமலை தைபூசம் இப்போது உள்ளூரில் இருக்கின்ற உலகமக்களால் கொண்டாடப்படுகிற ஒரு பொது விழா. யார்வேண்டுமானாலும் அங்கே செல்லலாம். இம்முறை மலாக்காரர்களும் அதிகம் பேர், வரிசையில் நின்று உணவு வாங்கிச்சாப்பிட்டார்கள். (பார்ப்பதற்கு மலாய்க்காரர்கள் போலத்தான் இருந்தார்கள். ஆனால் முஸ்லீமா என எனக்குத்தெரியாது. மன்னிக்கவும்) ..

இந்துக்கள் மட்டும்தான் செல்லவேண்டும், மலையேறவேண்டும் என்கிற சட்டதிட்டமெல்லாம் அங்கே யாரும் இன்னும் கொண்டுவரவில்லை. அப்படி ஒரு சமய சட்டம் இந்துக்களிடையே இல்லை என்பதைச் சொல்லிக்கொள்வதில் இந்துவான எனக்குப்பெருமையே. !

ஆங்கிலேயப்பெண்மணிகள் புடவை கட்டியிருக்க நம்ம பெண்களுக்கு புடவை கட்ட கசக்குதா? ! இப்படி ஒரு குற்றச்சாட்டு. வெறும் அரைகால் பேண்ட், மொட்டைக்கை சட்டை போட்ட ஆங்கிலேயப்பெண்மணிகள் கேமராவை கழுத்தில் மாட்டிக்கொண்டு உலாவந்ததையும் நான் பார்த்தேனே. ரசித்தேனே... தவறில்லை உஷ்ணமான சிதோஷ்ணநிலையில் அவர்களின் ஆடைதேர்வு அப்படி.

கோவிலுக்கு வருபவர்கள் எப்படி வரவேண்டுமென்று பாடம் நடத்த நினைக்கின்ற பலர், கோவில் வளாகத்தில் நுழைந்த நொடியில் இறை சிந்தனையோடு மட்டுமே இருக்கவேண்டிய இடத்தில் கேமராவை வைத்துக்கொண்டு எவள் எம்மாதிரி ஆடை அணிந்திருக்கின்றாள் என்று வேவு பார்ப்பது மட்டும் பண்பாடா?

அவளின் ஆடை உடுத்தல் என்னை வழிபாடு செய்யவிடாமல் தடுக்கிறது என்றால், புகைப்படத்தில் இருக்கின்ற பெண் கோவிலில் நிற்கவில்லையே. வெளியே வேடிக்கைப்பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றாள். வேடிக்கைப்பார்க்கவந்த மற்ற இனத்துப்பெண்ணாக அவள் இருக்கலாமே.!?

முதுகு தெரிகிற ஒரு ரவிக்கையால் எங்கள் இனத்தின் கலாச்சாரம் பண்பாடு பாழ்படுகிறது என்றால், தமிழ் நாட்டில் உள்ள பல கோவில்களின் சிலைகளுக்கு ரவிக்கையும் இல்லை தாவணியும் இல்லை.