புதன், பிப்ரவரி 27, 2013

ANTI-BULLYING DAY

இன்று பெஃப்ரவரி இருபத்தியேழு. உலக ANTI-BULLYING  தினம். காலையில் ஆங்கிலப் பத்திக்கையில் இதையொட்டி வந்த ஒரு கட்டுரையைப்படித்தவுடன், அடடா இப்படியெல்லாம் கொண்டாடுவதற்கு நாட்கள் இருக்கின்றனவே என்று அதிர்ந்த போதிலும், இது என் சிந்தனையை மேலும் தூண்டிய ஒரு விடயமே. காரணம் தற்கொலைகளுக்கும் மனவியாதிகளுக்கும் இந்த BULLYING கலாச்சாரம்தான் மூலக்காரணமாக இருந்து வந்துள்ளது என்பது அக்கட்டுரையின் இறுதியில் சொல்லப்பட்ட விவரம்.  

BULLY என்கிற இந்த ஆங்கில வார்த்தைக்கு தமிழில் சரியான சொல் கிடைக்கவில்லை. தமிழில் கிடைத்த அத்தனை சொற்களும் இந்த BULLY என்கிற ஆங்கில சொல்லிற்கு ஈடாக அமையவில்லை. கொடுமை படுத்துதல், அடிமைப் படுத்துதல், சினங்கொண்டு ஆங்காரமாகப் பேசுதல், கீழறுப்புசெய்தல் என்று தான் எழுதியிருந்தார்கள் அகராதியில். ஆங்கிலத்தில் அதனின் அர்த்தம் மனதளவில் சரியாகப் புரியப்பட்டதுபோல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது அரியணையிட்டு அமரவில்லை.

BULLY என்கிற ஆங்கில சொல்லிற்கு தமிழில் குறிப்பிட்ட இச்சொற்கள் சரியான மாற்றுச்சொல்லாக அமையுமா என்பதில்  சந்தேகம்  ஏற்பட்டிருப்பினும்  தமிழில் குறிப்பிட்ட அத்தனை சொற்களில் இருக்கும் அர்த்தங்களையும் இந்த BULLY என்கிற ஒற்றை ஆங்கில சொல் உள்வாங்கிக்கொண்டது.  

BULLY என்கிற இந்த வார்த்தையைக் கேட்டவுடனேயே எல்லோருக்கும் எதாவதொரு வகையில் மற்றவர்களால் தாம் கொடுமை படுத்தப்பட்ட, தமது கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, சிறுமை படுத்தப்பட்ட,  கேவலப்படுத்தப்பட்ட , தனிமை படுத்தப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, பறிக்கப்பட்ட என இன்னும் நிறைய பட்ட.. பட்ட.. என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த BULLYING பல நிலைகளில் நம்மைத் துன்புறுத்தியிருக்கலாம்.  குடும்பத்தில், பள்ளியில், பல்கலைக்கழகங்களில், வேலை இடத்தில், பொது வாழ்வில், அரசியலில்.. என..! 

குடும்பத்தில் ஏற்படுகிற புல்லியிங்’கால் அவ்வளவாக பாதிப்புகள் இருக்காது என்றே நம்பலாம். ஏனென்றால் அங்கே நடக்கும் BULLYING ற்கு, அப்பா காரணமென்றால், அம்மாவின் ஆதரவும், அம்மா காரணமென்றால் அப்பாவின் ஆதரவும், சகோதர சகோதரிகள் என்றால் அப்பா அம்மாவின் ஆதரவும் என புல்லிங் கலாச்சாரத்திற்கு ஒரு விடிவு உண்டு. பள்ளியிலும் பல்கலைக்கழகங்களிலும் இதற்கு விடிவு உண்டு என்றும் சொல்லலாம்; மாணவர்களில் சிலர் சக மாணவரிடம் இதை நிகழ்த்தும்போது ஆசிரியர்களும், ஆசிரியர்கள் சில மாணவனிடம் செய்யும்போது சக ஆசிரியர்களும் மாணவர்களும் உதவுகின்ற நிலை ஏற்பட்டு காப்பாற்றப்படலாம்!. புல்லிங் செய்து மரணம்வரை சென்றுள்ளதுவும் மறுக்கமுடியாது என்கிற போதிலும் நிலைமை கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்கும்.

கணவன் மனைவி என்கிற பந்தத்தில் உரிமை, அன்பு, சகிப்புத்தன்மை, கடமை, பொறுப்பு என்கிற பெயரில் எண்ணிலடங்கா கொடுமைகள் இந்த நவீன காலகட்ட்த்திலும் நிகழ்ந்தவண்ணமாகத்தான் இருக்கின்றது. அதையும் இந்த BULLYING கலாச்சாரத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

எத்தனையோ மனைவிமார்கள் விடுதலை கிடக்கப்பெறாமல் தற்கொலை செய்துகொள்வதும், வீட்டை விட்டு ஓடுவதும், பெற்ற குழந்தைகளைக் கொடுமை செய்வதும்..  எத்தனையோ கணவன்மார்கள், தொல்லையே வேண்டாமென்று வெளியூர் வேலைகளுக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு தனியாளாக குடும்பம் நடத்துவதும் துறவியாய்ப் போய்விடுவதும் என இன்னும் தொடர்ந்துகொண்டுத்தான் இருக்கிறது. சிலர் பிள்ளைகளுக்காக வாழ்கிறேன், குடும்ப கௌரவம் என ஒப்பிற்கு ஜடமாய் வாழ்ந்து மடிகிறார்கள். இதுவும் மறைமுக புல்லியிங் தான். சிலர், கணவரின் பெயரைக்கேட்டாலே வேர்த்துவிருவிருக்கின்றார்கள். சில கணவன் மார்கள் மனைவியின் குரலைக்கேட்டாலே நெஞ்சு வலிக்கிறது என்கிறார்கள்..! இதையும் ஒரு வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.. பாவம் அவர்; குடும்பத்திற்காக உழைக்கின்றார். பாவம் அவள்; நம்மை விட்டால் கதி இல்லை, என்று நாடளடைவில் சிந்தனையை மாற்றிக்கொண்டு, அன்பொழுக வாழலாம், பிரச்சனையில்லை.   

ஆனால் ஓர் இடம் இருக்கிறது, தப்பிக்கவே முடியாமல் தன்மானத்தை அடகு வைத்துவிட்டு, எதோ ஒன்றிற்காக நாய் போல் வால் ஆட்டிக்கொண்டு காலம் முழுக்க கழுதைபோல் கிடக்கும் அவல நிலை. அதுதான் வேலை இடம். பணம் கிடைக்கிறது, வேறு வேலை கிடைக்காது என்பதற்காக பலவிதமான கொடுமைகளை அனுபவித்துக்கொண்டும் சகிப்புத்தன்மை என்கிற பெயரில் பிணம்போல் வாழ்ந்துமடிபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.  

இந்த வேலையிடத்து BULLYING பற்றிக்கேட்கத்துவங்கினால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவங்கள் ஒரே மாதிரி நிகழ்ந்திருக்கும். யாருமே தப்பித்திருக்கமுடியாது. அவ்வளவும் கசப்பான சம்பவங்கள்.

திறமையுள்ள புதிய ஆட்கள் தமது வேலையைப் பிடுங்கிக்கொள்வார்களோ, சில இடங்களில் சீனியர் ஜூனியர் போராட்டம்.. சிலரின் நடவடிக்கைகள் முற்றாக்க் கவராத நிலை.. நான் பெரியவன் என்கிற இறுமாப்பு.. அடக்க நினைக்கும் மனநோயாளிகள்.., அடுத்து காத்திருக்கும் உயர் பதவியைப் பிடுங்க வந்தவள்/ன் என்கிற மனமுதிர்வற்ற நிலை.. உயர் பதவியில் இருப்பவரின் அன்பை பெறுவதற்குப் போராடும் நிலை.., தம்மிடமே எல்லோரும் ஆலோசனைகள் கேட்கவேண்டும் என்கிற உலகமாகா புத்திசாலித்தனம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

வீட்டில், பள்ளியில் கணவன் மனைவி உறவில் ஏற்படாத கசப்பான புல்லிங் கலாச்சாரம், வேலை இடத்தில் பலரை ஆட்டிவைக்கும் என்பதை யாரும் மறுக்கலாகாது. வேலை செய்பவர்களுக்கு இது தொடர்கதைதான்..

வாய் பேசா மௌனிகள் மாட்டிக்கொண்டால், வேலை இடத்தில் அவர்கள் படும் அவஸ்தை இருக்கே, அப்பப்பா சொல்லி மாளாது. இருவர் மூவரின் வேலையை ஒரே ஆள் செய்யவேண்டிய நிலை வரும்...  

சரி.. இப்போ கேள்வி இதுதான், இந்த புல்லிங் கலாச்சாரத்திலிருந்து எப்படி மீள்வது.? மீள்கிறேன் என்று அறிந்தும் அறியாமலும் நாம் யாரையாவது BULLY செய்துள்ளோமா? நாம் பலியாகியிருக்கின்றோம் என்றாலும் நம்மால் யாராவது பலியாகியுள்ளார்களா? அதை எப்படி நாம் நிவர்த்திசெய்துள்ளோம்..!!?

இதுவரையில் நம்மால் யாருக்கும் தீங்கில்லை, என்றால்.. நானும் நீங்களும் நண்பர்களே.

இன்று ANTI BULLYING தினம். இந்நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம். அடுத்தத் தலைமுறை நம் பிள்ளைகள்தான் பாட்டாளிகள்/தொழிலாளர்கள். இதற்குப் பலிகடா ஆவார்களோ.. !!