ஞாயிறு, மே 06, 2012

எல்லோருக்கும் மறுபக்கம் உண்டு.

`அம்மாவிற்கு காது மொட்டையாக இருக்கு, அம்மாவுடைய தோடுகளை எங்கே வைத்தாய்?’ அண்ணியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு என் ஞாபகத்திற்கு வரவே, தோடுகளை எங்கே வைத்த்துத்தொலைத்தேன் என்கிற சிந்தனையில் மீண்டும் அவைகளைத்தேட ஆரம்பித்தேன்.

அதிக வயதானவர்களுக்கு, வயது ஆக ஆக, தோடு போடுகிற காதுகளின் துளை தன்னாலேயே பெரிதாகிவிடுகிறது. இப்போது மாமியின் காதுகளில், கொஞ்சம் முயன்றால், கைக்குழந்தைகளின் கைகள் உள்ளே போகின்ற அளவிற்கு அங்கே தூளை மிகவும் பெரிதாக உள்ளது.

இப்போ உபயோகப் படுத்துகிற இந்த தங்கத்தோடுகள் கூட, பலவேளைகளின் இந்த பக்கமிருந்து அந்த பக்கமும், அந்த பக்கமிருந்து இந்த பக்கமும் விழுந்து விடும். கட்டிலில், சமையலறையில், குளியலறையில், பூஜையறையில் என பல முறை விழுந்து காணாமல் போயிருக்கிறது. இருப்பினும் கண்டு பிடித்து காப்பாற்றி வைத்திருக்கின்றார். இந்த முறை என்னிடம் வந்து, எங்கே போனதென்று தெரியவில்லை.

இவை என்னுடைய தோடுகள்தான். திருமணமான புதிதில், கணவருக்கு அதிக அன்பு என்மேல். (இப்போதும் உண்டு ஆனால்  நகை வாங்கிக்கொடுக்குமளவிற்கு இல்லை). அப்போது, என்ன கேட்டாலும் உடனே வாங்கிக்கொடுப்பார். ஒரு முறை ஷாப்பிங் செல்லுகையில், ஒரு நகைக்கடையில் தற்செயலாக நுழைந்து, கண்ணைப் பறித்து  தக தக வென ஜொலிக்கும்ஒரு தங்கத்தோட்டை விலை விசாரித்து, அதிக விலை என்பதால் அதை அப்படியே வைத்து விட்டு வந்து விட்டேன்.

ஒரு வருட திருமண ஆண்டு திரும்புகையில், எனக்குத்தெரியாமலேயே அத்தோடுகளை வாங்கிவந்து ஒரு சப்ரைஸ் கொடுத்தார். நான் ஏற்கனவே பார்த்து வைத்து விட்டு வந்த அதே பெரிய தோடுதான் அவை, இருப்பினும் என் காது துவாரத்தில் அவைகள் நுழையவில்லை.  அழுத்திப்போட்டுப் பார்க்கையில் இரத்தமே வந்து விட்டது.

முன்பெல்லாம் எதை வாங்கினாலும் மாமியாரிடம்/அம்மாவிடம் காட்டுவது எங்களின் வழக்கம். வீட்டின் பெரியவர்களுக்குத் தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது என்பது எங்களுக்குப் போடப்பட்ட அன்புக் கட்டளை. இன்னமும் அப்படித்தான். இருப்பினும் இந்தத் தோடுகளை அன்புப் பரிசாகக் கொடுக்க வேண்டுமென்கிற ஆர்வத்தில் யாருக்கும் தெரிவுபடுத்தாமல் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார்.

மேலும், தங்க ஆபரணங்கள் வாங்கவேண்டுமென்றால் மாமி அவர்கள் வாடிக்கையாக வாங்கும் ஒரு பத்தரிடம் தான் வாங்க வேண்டும். அது அவர்களின் வழக்கமும் கூட.  அவர் செய்க்கூலி அவ்வளவாக வாங்கமாட்டாராம்.!  நகைகளுக்கு விலை அதிகம் போட மாட்டாராம்.! தரமான தங்கத்தில் செய்து கொடுப்பார் என்கிற நம்பிக்கையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அப்பத்தரையே நம்பியிருந்தார்கள். 
இங்கே டவுனில் கிடைக்காததா!? இருப்பினும் இது அவர்களின் நம்பிக்கை.

நாம் எம்மாதிரி ஆடர் கொடுக்கின்றோமோ அதுபோலவே செய்து கொடுப்பாராம், நம்முடைய நகைகளைக் கொடுத்தால், அதற்குத் தகுந்தாட்போல் தரமாக தங்கத்தில் மறுபொருள் செய்துகொடுப்பார். ஏமாற்றமாட்டார், மாதமாதம் பணம் இருக்கின்ற போது கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்,என்கிற கூடுதல் வசதியெல்லாம் அவரிடம் இருப்பதால் அவரை சுற்றி ஒரு கூட்டம் வட்டமடித்தவண்ணமாகவே இருக்கும்.  ஒரு காலத்தில் (50.60,70 களில்) இது போன்ற பத்தர்கள் பெருத்த லாபத்துடன் ஏழை மக்கள் வாழும் எஸ்டேட் பகுதிகளில் குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்து வந்துள்ளது நிஜம்.

மாதத்திற்கு ஒரு முறை வீட்டுவாசலில் ஆஜராகிவிடுவார். அவரைக் கேட்காமல் வெளியே எதாவது நகை நட்டுகள் செய்தால், அவருக்குக் கடுமையான கோபம் வரும். என்னிடம் ஒரு வார்த்தை கேட்காமல் செய்துவிட்டீர்களே. இதில் இது குறை, அது குறை, என, குறைபுராணம் பாடி, வெளியே வாங்கிய பொருளை தரமிழந்ததாகச்செய்து விடுவார். இவரை, அவர்கள் முழுமையாக நம்பினார்கள். வீட்டில் நடைபெற்ற அனைத்து வைபவங்களுக்கும், பலவிதமான நகைகள் அவரின் கைவண்ணமே.

ஆக, நாங்கள் இங்கே வாங்கிய தோடுகளில் மாமிக்கு அவ்வளவாக திருப்தியில்லை. என்ன அவசரம்? அம்மாவிடம் ஒரு வார்த்தைச் சொல்லியிருந்தால், இந்த விலைக்கு நல்ல ஒரு பொருளாகச் செய்திருப்பேனே.! மேலும் நகைகள் வாங்கும் போது இப்படி தகதகவென மின்னும் கற்கள் கொண்ட நகைகளை வாங்காதீர்கள், வாங்கும் போது மதிப்பு இருக்கும், பிறகு அதை மீண்டும் கொடுக்கும்போது (விற்கும்போது), கற்களைப் பொருட்படுத்த மாட்டார்கள். கற்களின் பாரத்தைக் குறைத்துவிட்டுத்தான் அதனின் மதிப்பை அளவிடுவார்கள், அப்போது, அது ஒண்ணுமில்லாமல் போய்விடும். என்றும் ஆலோசனை வழங்கினார். அதுமட்டுமல்லாமல், மகன் இதுவரை தனக்கு ஒரு குந்துமணி கூட வாங்கிக்கொடுக்காமல், தமது புதுமனைவிக்கு மட்டும் நகை வாங்கியிருக்கின்றானே என்கிற புகைச்சலும் அவரின் வார்த்தைகளிலிருந்து வெளிப்பட்டதை என்னால் உணர்ந்துக்கொள்ள முடிந்தது.

மேலும் அந்தத்தோடுகள் அன்று மாமியின் காதுகளில் மிகச் சுலபமாக நுழைந்துகொண்டது. எனக்கு ஏற்பட்ட அவஸ்தை அங்கே ஏற்படவில்லை. ``சரி, நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்..’’ என அவருக்கே கொடுத்து விட்டேன். கணவருக்கும் பெருமை, தன் மனவியின் தியாக(!) மனப்பான்மையை நினைத்து.!

மாமி வைத்திருந்த தங்க நகைகளிலேயே, அவரை மிகவும் கவர்ந்த நகை இந்த கற்கள் பதித்த தோடுகள்தான். வெள்ளைக்கற்கள் தகதகக்க வென மின்ன, காதுகள் நிறைந்து பார்ப்பதற்கு மிக அழகாக, முகத்திற்கு ஒருவித வசீகரத்தைக் கொடுத்து, மாமியை மேலும் மங்களகரமாக்கியது.  போகுமிடமெல்லாம் எல்லோருக்கும் இந்த தோடுகளின் மீதே கண்கள். மஹாராணி மாதிரி இருக்கே, மகன் வாங்கிக்கொடுத்த தோடுகளைப் போட்டுக்கொண்டு, என, எல்லோரும் கண் வைப்பார்களாம்.! பூரிப்பில் சொல்லிச் சொல்லி மகிழ்வார் மாமி.

மகள்களுக்குக்கூட இந்த தோடுகளில் மீதுதான் கண். ``அம்மா இல்லேன்னா, இந்த தோடுகளை நான் எடுத்துக்கொள்வேன்..’’ என்று, என் முன்னே பேரம் பேசுவார்கள் விளையாட்டாக. நானும் ``நான் ஒருத்தி இருக்கும் வரை நடக்காது.’’ என வேண்டுமென்றே வம்பிற்கு நிற்பேன்.

இத்தோடுகள் வாங்கிய இருபது வருடங்களில், எத்தனையோ முறை அதனின் கற்கள் விழுந்து விழுந்து காணாமட் போனாலும், தமது வாடிக்கைப் பத்தரிடம் சொல்லி நல்ல தரமுள்ள கற்களைக்கொண்டு, அழகாக பதித்துக்கொள்வார். அத்தோட்டை விட்டு மாமி பிரிந்ததேயில்லை. எங்கு சென்றாலும் அதை அணிந்துகொண்டுதான் செல்வார். அவரிடம் பல தோடுகள் பல வடிவங்களில் இருப்பினும், இது அவருக்குப் பொக்கிஷம். தனது கடைக்குட்டியின் உழைப்பு, என் மகன் எனக்கு வாங்கிக்கொடுத்த அரிய சொத்து என அவ்வப்போது பீற்றிக்கொள்வார்.

கொஞ்ச காலமாக மாமி உடல் நலம் குன்றியிருப்பதால் (முதுமை தழுவிக்கொண்டது), அவரிடமுள்ள அனைத்து சொத்துகளையும் எல்லோருக்கும் பங்கிட்டு கொடுத்துவிட்டார். யார் யாருக்கு என்னென்ன பொருட்கள் கொடுக்க வேண்டுமென்று முடிவெடுத்து பிரிக்கப்பட்டு விட்டன. எல்லாம் விலை மதிக்கவே முடியாத பழைய காலத்து நகைகள். எதையும் அழித்துப் புதுப்பிக்காமல் அப்படியே, அந்தப் பழமை மாறாமல் பாதுகாத்து வைத்திருக்கின்றார். சரடு, நெற்றிச்சுட்டி, சங்கு தோடு, குமிழ் தோடு, நெளி மோதிரம், தாலிக்கொடி, ஜிமிக்கி, ரெண்டைச் சங்கிலி, பருப்புச் சரடு.. என இன்னும் அதிகமாக நகைகள், கொஞ்சம் சேமிப்புப்பணம், இப்போது இருக்கும் அந்த குட்டி பங்களா லாட் வீடு.

நகைகள் எல்லாவற்றையும் மகள்களுக்கும், வீடு மற்றும் பணத்தை மகன்களுக்கும் பங்கிட்டுக்கொடுத்து விட்டார் மாமி.  எனது அந்த தோடுகளைத் தவிர. யார் யாருக்கு என்னென்ன நகைகள் போனதென்பது பற்றி, மருமகள்கள் நாங்கள் மூன்று பேரும் மூச்சு விடவில்லை. தத்தம் கணவர்களின் ஏச்சுகளுக்கும் பேச்சுகளுக்கும் ஆளாகவேண்டிவரும் என்பதால், நாங்கள் மனதில் இருக்கும் ஆசைகளுக்குப் பூட்டுப்போட்டு கொண்டோம்.  இருப்பினும் எங்களுக்குள் பேசிக்கொள்வோம். அது யார்கிட்டே இருக்கும்? இது யார் வைத்திருப்பார் என.! பெண்களின் புத்தியாச்சே, விட்டுப் போகுமா..?!

எல்லாவற்றையும் பங்கிட்டுக்கொடுத்து விட்டு, இந்தத் தோடுகளை அணிந்துகொண்டு தான் வந்தார் மருத்துவமனைக்கு. நோயின் கடுமையில் அவதியுற்றபோது, இனி நாம் எங்கே பிழைக்கப்போகின்றோம் என்கிற அவநம்பிக்கையில், விடைபெற்றுக்கொண்டு இங்கே வந்தார். நவீன மருத்துவம், மகன்களின் அன்பான அரவணைப்பு என நன்கு தேறிவிட்டார். இப்போது நலமாக இருப்பினும் பழையபடி இல்லை என்றே சொல்லவேண்டும்.

ஆக, இது என்னுடைய தோடு என்பதால், மருத்துவமனையில் இருந்து கழற்றிக் கொடுக்கும் போது, விஜியிடம் கொடு, என்று சொல்லி கொடுத்தனுப்பியிருந்தார். என் தோடுகள், என்னிடமே வந்து சேர்ந்தது.

அத்தோடு என் கையில் கிடைக்கும் போது, நான் வாசலில் வைக்கப்பட்டிருந்த என் செடிகளோடு உறவாடிக்கொண்டிருந்தேன். அவைகளை எங்கே வைத்தேன் என்பதனை மறந்தேபோனேன். அடிக்கடி தோடு பற்றிய அழைப்புகள் வந்து, அதை ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்ததால், மனச்சோர்வோடு அதை முழுமையாக தேடும் முயற்சியில் இறங்கினேன்.

எங்கே வைத்தேன்? தோடு கையில் கிடைத்த போது நான் எங்கே இருந்தேன்? என்ன செய்தேன்? அப்போது அவசரத்தின் எங்கு வைத்திருப்பேன்.? என அமைதியாக, எந்த ஒரு படபடப்பு சிந்தனையும் இல்லாமல், எண்ணங்களை அந்த நிகழ்வின் பால் ஓட விட்டு, யோசித்துப்பார்த்தேன். இடம் ஞாபகத்திற்கு வந்த போது, நேராக அவ்விடம் நோக்கிவிரைந்தேன். ஒரு வெள்ளை டிஷூ பேப்பரில் மடித்துக் கொடுக்கப்பட்ட அந்தத் தோடுகள், காலணிகள் வைக்கும் அலமாரியின் மேல் அப்படியே இருந்தது பத்திரமாக. நல்ல வேளை..

நீண்ட நாள்கள் கழித்து, என் தோடு என்னிடம் வந்த போது எனக்கு ஒரே ஆச்சிரியம்.! இதுதானா அந்தத் தோடு? இப்படியா இருக்கும்? சிறியதாக இருக்கின்றதே! நான் பெரிய தோடல்லவா வாங்கினேன். மகள்களிடம் கொடுத்து அவர்கள் அதை மாற்றிவிட்டார்களா!? ஏற்கனவே அவர்களெல்லாம் பொல்லாத நகை பேராசை உள்ளவர்கள் ஆயிற்றே, நம்முடையதை எடுத்துக்கொண்டு, அவர்களிடமுள்ள எதோ ஒரு சிறிய தோட்டை மாற்றி வைத்து விட்டார்களா? மாமி முதலில் உடல் நலமில்லாமல் இருந்த போது, எல்லாப் பொருட்களையும் அவர்களிடம் தானே கொடுத்துவைத்திருந்தார். திருட்டுவேலை ஏதும் நடந்திருக்கலாமோ..!? என் மனது அசிங்கமாக யோசிக்கத்துவங்கியது.

அதே தோடுதானா இது, என யாரிடம் கேட்பது? கதை கந்தலானால்.. கணவருக்குத்தெரிந்தால்!? தொலைந்தேன்.!!  அதனால் நானே சில ஆராய்ச்சிகளில் ஈடுபட்டேன். மாமியின் பழைய புகைப்படங்களை எடுத்தேன், அதில் அவர் போட்டிருக்கும் தோடும், என் கையில் உள்ள இந்த தோடும் ஒரே மாதிரியாக இருக்கின்றனவா என ஒப்பீடு செய்தேன். திருப்தியில்லை. பேரனின் திருமண சீடியை நைசாக வாங்கி, அதில் உள்ள மாமியின் படத்தை மட்டும் மியுட் செய்து, ஷ்ஷூம் பண்ணி தோடுகளை மட்டும் பார்த்தேன். திருப்தியில்லை.! நானே காதில் போட்டுப்பார்த்தேன், பெரிதாகவே இருந்தது இருப்பினும்  அவ்வளவாக திருப்தி ஏற்படவில்லை. உடனே எனக்கு ஒன்று ஞாபகத்திற்கு வரவே, அதையும் இறுதியாகச் செய்துபார்த்தேன்.

என்னுடைய பழைய ஜோடி தோடுகளை எடுத்து, இவைகளோடு ஒப்பிட்டுப்பார்த்தேன். பிறகுதான் திருப்தியே வந்தது. காரணம் இத்தோடுகள் வாங்கிய புதிதில் என்னுடைய பழைய தோட்டோடு இதை ஒப்பிட்டுப்பார்த்துள்ளேன். இது எவ்வளவு பெரியது அதை விட என்று.!? ஆக, அப்படி ஒரு ஒப்பீட்டை மறுபடியும் செய்துப்பார்த்த போதுதான் என மனம் ஆறுதல் அடைந்தது. அதே தோடுதான். நல்லவேளை யாரிடமும் கேட்கவில்லை, கேட்டிருந்தால் என் கதி? என்னுடைய மறுபக்கம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தேவையா இது.!?

தோடுகள் கிடைத்து விட்ட விவரத்தை, அண்ணியிடம் சொல்வதற்கு, அண்ணிக்கு அழைத்தேன்.

``தோடு பத்திரமாக இருக்கிறது அண்ணி, அதை அம்மா போடமுடியுமா என்பதுதான் சந்தேகம்.!? வேண்டுமென்றால் வயதானவர்கள் போடுவார்களே, காதிலேயே மாட்டியிருக்கும் தோடு, தமிழ்நாட்டில் கூட கிழவிகள் காதுகளின் துவாரம் நீண்டு இருக்கும் போது போட்டுக்கொள்வார்களே, காதுகளில் தொங்கிக்கொண்டு.. அது போல் வாங்கிப்போடலாமா?’’  என்று எனது எண்ணத்தைச் சொன்னேன்.

தொலைப்பேசி மாமியிடம் சென்றது.

``வேண்டாம்மா, அந்த தோடு, கிழவிகள் போடுவது. எனக்கு இது போதும். பின்னாடி ஒரு பெரிய பட்டன் வைத்துப்போட்டுக் கொண்டால், அப்படியே காதில் நிற்கும்..’’ என்றார்.


வெள்ளி, மே 04, 2012

நினைவுகள் களவாடிச்சென்றன

(மே மாத அதீதத்தில் வந்த எனது கவிதை)

பூமியை பிளக்கவிருக்கும்
விதை

தொட்டால் சிணுங்கும்
தொட்டாச்சிணுங்கி

வீட்டைச் சுற்றும்
சுட்டிப்பூனை

கொஞ்சி விளையாடும்
நாய்க்குட்டி

தண்ணீர் தொட்டியில்
வால் ஆட்டும்
மீன் குஞ்சு

காற்றில் அசைகின்ற
இலை

தென்றலில் தவழும்
பூக்களின் மணம்

ஓய்வில்லாமல்
பாடிக்கொண்டே இருக்கும்
குருவிகள்

வரிசையாகச் செல்லும்
எறும்புகள்

சிவப்பை உமிழும்
சூரியனின் மறைவு

சிறகடித்து
கூண்டில் புகுந்துக்கொள்ளும்
சிட்டுக்குருவிகள்

பனியை சுமந்து
தலை சாய்க்கும்
நுனிப்புல்

பச்சை இலைகளை
ரசித்து உண்ணும்
பச்சைப் புழுக்கள்

படரும் கொடி
மரத்திடம்
கையேந்தும் காட்சி

இலைகளுக்கு பின்னால்
வர்ணங்களை மாற்றி
அமைதியாகக் காத்திருக்கும்
பச்சோந்தி...

வட்டமடிக்கும்
பட்டாம்பூச்சியின் தேடல்

கரு மேகத்து நிழல்
பூமியில் விழுகின்ற காட்சி

பக்கத்துவீட்டில்
சதா பேசிக்கொண்டே இருக்கும்
குழந்தை...

தரையை
வர்ணக் கம்பளமாக்கும்
மரித்து விழுகின்ற பூக்கள்

சருகுகளின்
ஓசை

இன்னும் இயற்கையில்
உள்ள அனைத்தையும்
ரசித்திருப்பேன்

உன் நினைவுகள் மட்டும்
என்னை சிதைக்காமல்
இருந்தால்


காடு

எல்லா செடிகளும் மரமாகும்
செடிகளை செடிகளாகவே
பார்த்துப் பழகிவிட்ட நாம்
அவைகளை கத்தரித்து கத்தரித்து
செடிகளாகவே வைத்திருக்கின்றோம்

புதன், மே 02, 2012

மல்டி லென்ஸ்

சில நாட்களாகவே தீராத தலைவலி. கண் பார்வை பிரச்சனையோடு, பழைய மூக்குக்கண்ணாடியும் கோளாறாகிப்போனதால் தொடர் சோர்வு தலைவலி என துன்புற்றேன். முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்ள கண் நிபுணர்களிடம் சென்றேன்.

``தலைவலிக்கு எனது மூக்குக்கண்ணாடிதான் பிரச்சனையானது. அதை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும். காரணம், ஒரே கண்ணாடியில் தூரம் மற்றும் கிட்டத்துப்பார்வைக்கான மூக்குக்கண்ணாடியை அணிவதென்பது எல்லோருக்கும் பொருந்தாத ஒன்று. மேலும் உனக்கு ஒரு கண் கிட்டப்பார்வையில் கோளாறு, ஒரு கண் தூரப்பார்வையில் கோளாறு. அப்படியிருக்கும்போது தூரம், கிட்டே என இரண்டுக்கும் உள்ள ஒரே மூக்குக்கண்ணாடியை அணிவது, பல பிரச்சனைகளைக் கொண்டுவரும். நீ கண்டிப்பாக தூரத்துப்பார்வைக்கு ஒரு கண்ணாடியையும், கிட்டப்பார்வைக்கு ஒரு கண்ணாடியையும் தனித்தனியாக அணிந்துகொள்வதுதான் சிறப்பு. மேலும் உன்னுடைய பழைய பவர் அதே நிலையில் இல்லை. அது இப்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாகி இருக்கின்றது, ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் மாற்றியாக வேண்டும்.’’ என்றார் கண் நிபுணர். தலைவலிக்கான காரணமும் தெரிந்துவிட்டது.

அவரின் அந்த முழு பரிசோதனைக்குப்பிறகு, அவர் கொடுத்த சீட்டை வாங்கிக்கொண்டு அங்கே மருத்துவமனையிலேயே இருக்கும் மூக்குக் கண்ணாடி தயாரிக்கும் கடையில் கண்ணாடி வாங்கச் செல்லவேண்டும்.

மூக்குக்கண்ணாடிகளை வெளியே செய்வதை விட, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு மருத்துவமனையிலேயே செய்துகொள்வதென்பது செலவு மிச்சம். நான் ஏற்கனவே ஆடர் செய்து வாங்கிய ஒரு கண்ணாடியின் விலை வெளியே ரிங்கிட் அறுநூறு, ஆனால் இங்கே அதில் பாதிதான் அதனின் விலை. அதுவும் multi code and multi focus lens தான்.

ஆடர் கொடுத்த கண்ணாடியை ஒரு வாரம் கழித்து வந்து எடுத்துக்கொள்ளச்சொன்னார்கள்.

ஒருவாரம் கழித்து, இன்று, அக்கண்ணாடியை எடுக்கச்சென்றிருந்தேன். நிறையை பேர் காத்திருந்தார்கள். இரண்டு இரண்டு பேராக வரச்சொல்லி, அவர்களிடம் மூக்குக் கண்ணாடிகளைப்பற்றி விளக்கமளித்துக் கொண்டிருந்தார்கள், அக்கடையின் ஊழியர்கள். அவர்களும் மருத்துவமனை ஊழியர்களே. பயிற்சிப்பெற்ற தாதிகள்.(ஆண்கள்/பெண்கள்)

அவ்வரிசையில் நானும், என்னுடன் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவரும் உள்ளே சென்றோம். அவருக்கு ஒரு ஆள், எனக்கு ஒரு ஆள் என, கண்ணாடி ஃபிரெம்’களை தேர்ந்தெடுக்க உதவி செய்துகொண்டிருந்தார்கள் அங்குள்ள ஊழியர்கள். நேரமெடுத்து நம்மை கவனித்துக்கொண்டார்கள். ஜவுளிக் கடையில், புடவையை எடுத்துப்போடுவதைப்போல, கேட்கின்ற எல்லாக் கண்ணாடி ஃபிரெம்களையும் எடுத்துப் போட்டார்கள். நானும் ஒவ்வொன்றாக போட்டுப் போட்டு அழகு பார்த்து தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தேன்.  என்னுடன் உள்ள நுழைந்த அந்த அறுபது வயதுத்தக்க ஆடவரும் அதேபோல் தேர்ந்தெடுத்து அழகுபோட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார். நானாவது பரவாயில்லை, தேர்தெடுத்து விட்டேன், ஆனால் அவர் செய்த கூத்து இருக்கே, இன்னமும் எனக்கு சிரிப்புத்தான்.

பலவிதமான கண்ணாடிகளை, அவர் கொஞ்சம் மாடர்ன் டைப் ஆள் போலிருக்கு, சும்மா அப்படித்தான் போட்டுப்போட்டு அழகு பார்த்துக்கொண்டிருந்தார். மூக்கில் மாட்டினார், நீண்ட கண்ணாடியின் முன் நின்று அழகு பார்த்தார், தலையை சாய்த்துப்பார்த்தார், முகத்தை கீழ் நோக்கிப்பார்த்தார், கண்களை மேல் நோக்கிப் பார்த்தார், கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு பார்த்தார், ஒரு கையில் தலை முடியைக் கோதியவாறு பார்த்தார். சிரித்துப்பார்த்தார், திருப்தியில்லை போலும் மீண்டும் மாற்றி மாற்றி `அதை எடு, இதை எடு’ என, ஃபிரெம்களை போட்டிருக்கின்ற சட்டைக்கு தோதாகவும் தேடினார்.வயது அறுபது இருக்கும் ஆனால் சும்மா டாப்ப்பா ஜிம்முன்னு அழகாக இளமையாகவே இருந்தார்.

இறுதியாக ஃபிரெம்லெஸ் கண்ணாடி, மல்டி கோட், மல்டி ஃபோகஸ் மற்றும் மல்டி லென்ஸ். என தேர்ந்தெடுத்தார். . மல்டி லென்ஸ் என்றால், வெளிச்சத்தில் வெயிலில் செல்லும் போது, கண்ணாடி தன்னாலே கருப்பு, நீலம், சிவப்பு போன்ற வர்ணங்களில் கூளிங்க் கிளாஸாக மாறி கண்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்குகிற அதேவேளையில் ஒர் அழகான தோற்றத்தையும் தரவல்ல அற்புதமான மெஜிக் கண்ணாடி அது.

உள்ளபடியே சிறப்பான மூக்குக்கண்ணாடியின் ஃபிரெம்மை அவர் தேர்ந்தெடுத்திருந்தார். அதன் விலையைக் கேட்டவுடன், அவருக்கு மயக்கமே வந்து விட்டது.

`என்ன இவ்வளவு விலையா?, வெளியே இதனின் விலை அதிகம் என்பதால்தான் நான் இங்கே வந்தேன், இங்கேயும் இவ்வளவு விலையா?” விலையைக்கேட்டு விட்டு மிரண்டு போனார்.

மருத்துவமனை ஊழியர்கள், அவர் எடுத்துவைத்திருந்த அந்தக் கண்ணாடியின் தரம் பற்றி விளக்கிக்கொண்டிருந்தார்கள். ``வேறு வேண்டுமானால் தருகிறோம் சார், கொஞ்சம் மலிவாக, ஆனால் இது முடியாது. நீங்கள் தேர்ந்தெடுத்த ஃபிரெம்மே அதிக விலையுள்ளது. விலையைக் குறைக்க முடியாது, அதனின் விலையே அவ்வளவுதான். நாங்கள் ஏற்கனவே அரசாங்க உத்தரவின்படி மலிவு விலையில் தான் விற்பனை செய்துகொண்டிருக்கின்றோம்,  இதில் ஏமாற்று வேலையெல்லாம் கிடையாது சார்’’ என்றார்கள்.

சுற்றும் முற்றும் பார்த்தார், என்னைப்பார்த்து ஒரு அசட்டுச்சிரிப்பு சிரித்தார். நான் இன்னமும் அங்கேயேதான் அமர்ந்திருந்தேன், காரணம் என்னுடைய கண்ணாடியை ஃபிரெம்மிற்கு சரியான அளவில், வெட்டி நுழைக்க உள்ளே எடுத்துச்சென்று விட்டார்கள். கொஞ்ச நேரம் காத்திருக்கவேண்டிய தருணத்தில் இந்த காட்சிகள்.

இறுதியாக அவர் ஒரு வேண்டுகோள் வைத்தார்.. `` நான் ஏழை, எனக்கு வயது அறுபதிற்கு மேல், ரிட்டையர் ஆகிவிட்டேன், வருமானம் இல்லை, வயதானவர்களுக்கு பாதி கழிவு கொடுப்பார்களே, அது இந்த மூக்குக்கண்ணாடி விஷயத்தில் இல்லையா?” என்றார்.

கண்ணத்தில் கை வைத்து, தலையை ஒரு பக்கம் சாய்த்தவாறு, அப்பெண் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அதற்குள், என் கண்ணாடி தயாராகி வரவும், நான் வெளியே வந்து விட்டேன்.



பார்வை

என் பார்வையால்
உலகத்தைப் பார்க்க
என்னையே
பார்த்துக் கொண்டிருந்தவரை
நானும்
பார்த்தேன்
பார்க்காமல்

செவ்வாய், மே 01, 2012

தொழிலாளர் தின வாழ்த்துகள்


வளர்ந்து வரும் ஒரு வாசக எழுத்தாளரை, பள்ளியில் போதிக்கின்ற ஒரு ஆசிரியர் விமர்சிக்கின்றார் இப்படி!

உன் எழுத்தில் பிழை இருக்கு, உனக்கு இலக்கண அறிவு இல்லை. ஆராம்பப் பள்ளி மாணவன் எழுதுகிற தமிழின் நிலைமையை விட உனது தமிழ் மோசமானது, தமிழே சரியாக எழுதத் தெரியாத நிலையில், பேனா பிடிப்பதால், இந்த இலக்கிய சூழல் பாழாய்ப்போகும். அதை முதலில் வளர்த்துக்கொள், பிறகு எழுத்தாளராக வலம் வரலாம்.

பல மாணவர்களை வளர்த்து விடுகின்ற அரிய பணியைச் செய்து கொண்டிருக்கும் ஒரு ஆசிரியரின் பார்வையைப் பார்த்தீர்களா?  அவரிடம் பாடம் படிக்கும் குழந்தைகளின் நிலையை நினைத்துப்பார்த்தீர்களா?
மனநோயாளிகளின் உற்பத்தித் தொழிற்சாலை எது என்று புரிகிறாதா? அவர்களை உருவாக்குகின்ற அரிய பங்கு யாருடையது, பார்த்தீர்களா?

நன்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் அருகில் நின்றுக்கொண்டு, பல்லைக்காட்டி புகைப்படம் எடுத்து பத்திரிகையில் போட்டுக்கொள்கிறார்கள்.... இவர்களால் அம்மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்களாம்.!? அதுவும் மலேசிய சூழலில்.!?

நல்ல பெற்றோர்களுக்குப் பிறந்த பிள்ளைகளை பெற்றோர்கள்தான் கல்வி, ஒழுக்கம், கட்டுப்பாடு, சுயமரியாதை, தன்னம்பிக்கை, பணிவு  போன்றவற்றை ஊட்டி வளார்க்கிறார்கள், ஆசிரியர்கள் அல்ல.!  மார்த்தட்டிக்கொள்கிறார்கள் வெட்கமில்லாமல்.

திங்கள், ஏப்ரல் 30, 2012