வியாழன், மே 24, 2012

பிசுபிசுப்பு

குடித்து விட்டு
கீழே  வைத்த கோப்பையில்
மீதமுள்ள காப்பி
உமிழ் நீர் வழி
கீழே இறங்குவதற்குள்
அசிங்கத்தைத் துடைத்து விட
துடிக்கின்ற மனது போல்
உன்னுடனேயான எனது உரையாடல்..

புராணம்

எல்லோருக்கும் கருத்து இருக்கின்றது!
சுவாரஸ்யமாக
நம்பகத்தன்மையோடு
கதை சொல்லத்தெரிந்தவர்கள்,
முத்திரை பதித்துச்செல்கின்றனர்
இன்னமும்
அரசியலில்....!

புதன், மே 23, 2012

படித்த பகிர்வுகள்

எழுபத்தினான்கு வயது முதியோரை `புல்’ நாய் கடித்துக் குதறியது. முதியவர் மரணம். நாயிற்கு நிச்சயம் மரணதண்டனைதான் என பரவலாகப் பேசப்படுகிறது. அது குறித்த செய்திகள், இன்றும் பத்திரிகையில் இடம் பெற்றிருந்தன.

சம்பவம் நிகழ்ந்த மறுநாள், பத்திரிகைகளில், எந்தெந்த நாய்களை வீட்டில் வளர்க்கக்கூடாது என்கிற பரபரப்புச்செய்திகளுடன், வரிசையாகக் கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது வகை நாய்களின் புகைப்படங்களைப் பிரசுரித்து இனி அவைகளை வீட்டில் வளர்க்கக்கூடாது என்று தடை உத்தரவு போட்டிருக்கிறது முன்சிபல்.

அப்பட்டியலில் உள்ள ஒரு வகை நாய் என் தோழியின் வீட்டில் உள்ளது. லைசன்ஸ் கூட இல்லாமல், குட்டியிலிருந்து செல்ல நாயாக வளர்த்து வருகிறாள்.  இச்செய்தியினை பத்திரிகையின் வாயிலாகவும் தொலைக்காட்சியின் வாயிகாவும் கேள்விப்பட்டதிலிருந்து பதறிப் போயிருக்கின்றாள். தமது நாயை வீட்டில் பூப்பெய்த பெண்ணை  பூட்டி பாதுகாப்பதைப்போல் பூட்டி வைத்திருக்கின்றாள். வீட்டிற்குச் சென்றால், நாய் கட்டிலில் ஒய்யாரமாகத் தூங்கிக்கொண்டிருக்கிறது. எப்படித்தானோ கடவுளே....!!

%%%%%

தினமும் ஒரு கப் காப்பி அருந்திவந்தால், மனிதனின் ஆயுளை கொஞ்சம் நீட்டிக்கும் என்கிற ஆய்வு ஒன்றை மிக அண்மையில் படித்தேன்.

%%%%%%

ஜப்பானிய ஆண்களில் பலர் திருமணம் செய்யாமல் பிரமச்சாரிகளாகவே இருக்க விருப்பப்படுகிறார்களாம். காரணம், தாம்பத்தியத்தில் தம்மால் ஒரு பெண்ணை முழுமையாக திருப்தி படுத்த இயலாமல் போய்விடுமோ என்கிற பயமாம்..!

%%%%%

நியோர்க்கில் விநோதமான மோசடி ஒன்று நிகழ்ந்துள்ளது. இறந்துப்போன தமது தாயைப் போலவே உடை, சிகை அலங்காரம், உதட்டுச்சாயம், கூலிங் கிளாஸ், ஒஃக்சிஜென் மூலமாக மூச்சு விடுவதைப்பொன்ற பாவனையில் வேடமிட்டு வந்து ஒரு ரியல் எஸ்டேட் பணமோசடிக்காக கையொப்பம் இட்ட ஒருவரை அடையாளாங்கண்டு பிடித்துள்ளனர். குற்றம் உறுதியானால், பதிமூன்றிலிருந்து நாற்பது ஆண்டுகள் வரை சிறைவாசம் கன்ஃபர்ம். எப்படியெல்லாம்ம்???

%%%%%%

எங்க ஊரில் நடந்த தகராறு இது. அப்பா மகன் இருவருக்கும், தங்களின் வீட்டின் முன், தத்தம் கார்களை நிறுத்துவதற்கு இடப் பற்றாக்குறை ஏற்ப்பட்டதால், வாய்ச்சண்டை முற்றி கத்திக்குத்து வரை சென்று, மகன் மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உயிர் பிழைத்த மகன், முதுகில் குத்திய தன்தந்தையை தான்  மன்னிக்கப்போவதில்லை என்று சூழுரைத்துக் கொண்டிருக்கின்றார். தந்தை காவல்துறையில்...

%%%%%%

உலகத்திலேயே மிக கடினமான வேலை; ஒருவர் இறந்து விட்டார் என்று உறுதியாக உத்திரவாதம் வழங்குகிற வேலைதானாம்.! மருத்துவர்கள் லேசில் இதைச் சொல்லிவிட மாட்டார்களாம்.

%%%%%%

ஒரு மனிதனால் செய்ய முடியாத காரியம். தம்மைத் தாமே கழுத்தை நெறித்துக்கொண்டு, தற்கொலை செய்துக்கொள்வதாம். (எங்கோ படித்தேன் - தயவு செய்து முயலவேண்டாம்)...

%%%%%%

இன்று எங்களின் கம்பனிக்கு ஒருவர் வந்தார், நேர்முக தேர்விற்கு. பெயர் ஹேமாமாலினி. (ஆண்)

%%%%%

ரசித்த கார்ட்டூன் படம்

செவ்வாய், மே 22, 2012

இரவும் இரையும்

ஜன்னலின் அருகே
இராப்பிச்சை தொனியில்
மறைந்து எட்டிப் பார்க்கும்
ஒரு பூனை

சாமி படங்களுக்குப் பின்னால்
காதுகளை கூர்மையாக்கிக் கொண்டு
ஒளிந்திருக்கும் ஒரு எலி

கதவின் ஓரம்
பதுங்கிக் கண்காணிக்கும்
ஒரு தவளை

கட்டில் இடுக்குகளில்
ஓசை படாமல்
மீசையை ஆட்டிக்கொண்டிருக்கும்
ஒரு கரப்பான்பூச்சி

சுவர் கடிகாரத்தின் ஓரம்
சப்பைக்கட்டிக் கொண்டு
சகாக்களுக்கு சமிக்ஞை
கொடுக்கும் பல்லி..

யாருக்கு யார்
இரையோ..!?

ஆனால்,
இவைகளுக்கும் அவஸ்தைதான்
இரவில் நான் படுக்கச்செல்லாமல்
உலாத்திக் கொண்டிருந்தால்

திங்கள், மே 21, 2012

படித்ததில் பிடித்தது

சில படங்களை, சிலர் நன்றாக இருக்கிறது என்பார்கள். அவர்களின் பேச்சைக் கேட்டு விட்டு படம் பார்க்கச் சென்றால், படம் நன்றாகவே இருக்கும், ஏதோ ஒரு சில காட்சிகளில் மட்டும். படம் முழுக்க நன்றாக இருந்து, அது நம்மை முழுமையாகக் கவரும் என்றால் அது நடக்காத காரியமே.

சன் டீவில் `ஆஹா.. ஓஹோ’ என்று விளம்பரப்படுத்தும்  படங்களைப் பார்க்கவே இப்போதெல்லாம் பயமாக இருக்கின்றது. ஏற்கனவே அவர்கள் தடாலடியாக அறிவுப்புச்செய்து அறிமுகப்படுத்திய கமல் படமொன்று, `வேட்டையாடு விளையாடு’..   அருமை, அப்படி இப்படி, முதல் நிலை, பிரமாண்டம், அது இது, சிறப்பு, வசூல் சாதனை, வெற்றி, கமல் இதுவரையில் நடிக்காத பாத்திரம் ஆ வூ.. என்றார்கள்.  போய்ப் பார்த்தால், பாதியிலே தியேட்டர் விட்டு வெளியே வந்துவிடும் நிலை. படுபயங்கர போர் படம் அது.

அடுத்து, கந்தசாமிக்கும் அதே நிலைதான். அதன் பிறகு மங்காத்தா. ஏண்டா போனோம் என்றாகிவிட்டது. படம் சுவாரிஸ்யம்தான் ஓரிரு காட்சிகளில், மற்றவையெல்லாம் நம் பொறுமையைச் சோதிக்கின்ற படு டென்ஷன் காட்சிகள். நாற்காலியில் அமர்ந்து கொண்டு புழு மாதிரி நெளிந்து நரக வேதனையில் இருப்பதை உணரமுடியும்.

சிலர் தமிழ் படங்களை மட்டம் தட்டி, ஆங்கிலப் படங்களை உச்சத்தில் வைத்து புகழ்த்துத் தள்ளிக்கொண்டிருப்பார்கள். கதையைக் கேட்டால், போய்ப் பாருங்கள், அப்போதுதான் புரியுமென்பார்கள். நானும் சில படங்களைத்  தொலைக்காட்சியிலும், சில படங்களை தியேட்டரிலும் பார்த்து, நொந்துபோனேன் என்று சொல்லலாம்.  ஓரிரு திருப்புமுனைகளுக்காக, புரட்சிகளுக்காக, கொஞ்சுண்டு கதைக்கருவிற்காக, அங்கே நடக்கின்ற அத்தனை அட்டூழிய காமிக்ஸ் கூத்துகளையும் கொட்டாவி விட்டுக்கொண்டு ஜீரணிக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்போம்.

தமிழ் படங்களாவது பரவாயில்லைங்க,  அங்கும் இங்கும் நகர்ந்தாலும், கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிக்கொண்டிருந்தாலும், வெளியே சென்று தொலைபேசியில் பேசிவிட்டு வந்தாலும், கழிவறை  சென்று வந்தாலும், வந்தவுடன் படம் புரியும். அப்படியே `கட்ச் ஆப்’ பண்ணிக்கலாம்.  ஆனால்,  ஆங்கிலப் படங்கள் இருக்கே, கொஞ்சம் தவறவிட்டால், அம்பேல். படு பேஜாராகிவிடும். பிறகு ஒண்ணும் புரியாது.

ஆங்கிலப் படங்களைப்பார்க்கும்போது திரையறங்குகளில் மற்ற இனத்தவர்களுடன் பார்க்கவேண்டிய நிலை இங்கே.  முழுக்க வேறு இனத்தவர்கள் தான் ஆங்கிலப்படம் பார்க்கவருவார்கள். அவர்களுக்கு என்ன புரியுதோ, ஏது புரியுதோ.. தெரியாது.. அடிக்கடி கெக்கேபெக்கே என்று சிரிப்பார்கள். நமக்கு அது மொக்கை ஜோக்காக இருக்கும். இது ஒரு தர்மசங்கட சூழல்.

ஆயிரம்தான் சொல்லுங்க, நம்ம தமிழ் படம் மாதிரி வராதுங்க. அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை.  கிராமிய சூழல், புடவை தாவணி, கல்யாணம், குடும்பம், பெரியவர்களுக்கு மரியாதை, நல்ல வசன அமைப்பு, அழகாக காதல், கிழம் தட்டாத ஹீரோ, நாய் தூக்கிகொண்டு போகிற மாதிரியான, எலும்பும் தோலுமா இல்லாத ஒரு கதாநாயகி.. வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை வசனங்கள், ரம்மியமான இசை, வித்தியாசமான கதைப்போக்கு, கார்ட்டூன் கூத்துகள் இல்லாத எதார்த்தம்...! பில்டிங் பில்டிங்’ஆ தாவுகிற தலைவலி, பிஸ்டோல், பாம், மிஷின்கன் என கண்களை பிடுங்கிப்போடுகிற அளவிற்கு பயங்கச் சத்தம்.. என எதுவுமே இல்லாமல், மிக எதார்த்தமாக, நல்ல குடும்ப சூழலைச் சொல்லும் படங்கள் நம்ம படங்கள்....! எந்த ஊர் படம் என்றாலும் அது நம்ம ஊர் படம் போல வருமா!?

இன்று, எஸ்.ரா எழுதிய CATERPILLAR என்கிற ஜப்பானிய திரைப்படத்தின் கதை விமர்சனத்தைப் படித்து விட்டு மெய்சிலிர்த்துப்போனேன். அற்புதமாகச் சொல்லியிருக்கின்றார். திரைப்படத்தைப் பார்த்தே ஆக வேண்டுமென்கிற உந்துதலைக்கொடுத்தது அவரின் அந்த விமர்சனம். முக்கியமான கருவை மட்டும் கோடிக்காட்டி, படத்தின் மூலக்கதையை மிக அழகாக, எளிய நடையில் தமது பாணியில் சொல்லியிருப்பதால், அது நம்மை வெகுவாகக் கவர்கிறது, கிட்டத்தட்ட இரண்டு மணி நேர திரைப்படத்தை, நாம் பத்து நிமிடத்தில், அவரின் விமர்சனத்தின் மூலமாக உள் வாங்கிக்கொண்டோம். அதுவே திரைப்படமென்றால்..!!? இது வேறு ஜப்பானிய மொழிப்படமா!  மொழி வேறு விளங்காதா,  சப் டைட்டிலை விழியை உருட்டிக் கொண்டு படித்தாக வேண்டுமே, அப்படியும் கதை புரிந்தால், சம்போ சிவசம்போ தான்.! (தமிழ் நாட்டில், ஆங்கிலப்படத்திற்கு தமிழில் சப் டைட்டல் இருக்குமாமே!? இங்கு இல்லை, மலாய் மொழியில்தான் போடுவார்கள்.. அந்த மொழி, ஒரு பரீட்ச்சை மொழி- படிக்கும் போது மெனக்கட்டு படித்ததோடு சரி..)

பலவிதமான வேற்று மொழிப்படங்களை, காட்சிகளின் அசைவுகள், முக பாவனைகள், உணர்வுகள், இசை சொல்லும் ரகசியங்கள், கொஞ்சம் புரிகிற விவரங்கள் என, திரைக்கதையை ஓரளவு புரிந்து வைத்துக்கொண்டு, நண்பர்களிடம் பில்டாப் செய்ததும் உண்டு..அது ஒரு காலம்.! இப்போ அது தேவையே இல்லை. எஸ்.ரா, சாரு போன்ற எழுத்தாளர்கள், தாங்கள் பார்த்த படித்த வேற்று மொழிப் படங்கள், இலக்கியங்கள் போன்றவற்றை, விமர்சனம் மூலமாக, யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்கின்ற அரிய பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.  நமகெல்லாம் அது சுலபமாகப் புரிந்தும் விடுகிறது.

எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் குறிப்பிட்ட CATERPILLAR  பட விமர்சனம் இதோ உங்களின் பார்வைக்கும். கண்டிப்பாக படித்துப்பாருங்கள். அருமையான விமர்சனம்.

http://www.sramakrishnan.com/?p=2955

வெள்ளி, மே 18, 2012

என்ன மண்ணாங்கட்டிப் பரிசு!


எனக்கு ஒரு பிரச்சனை. நான் செய்தது தவறா?

என் தோழி புத்தாண்டுப் பரிசாக எனக்கு ஒரு டிரஸ் வாங்கித்தந்தாள். நல்ல சாமியார் கலர் கணக்கா.

பெரும்பாலும் பரிசுப்பொருட்களால் எனக்கு தர்ம சங்கடமே. காரணம், ஒன்று - அது எனக்குப் பிடிக்காது. இரண்டு - என்னிடம் அப்பொருள் இருக்கும். மூன்று - நானும் எதையாவது வாங்கித்தர வேண்டுமே என்கிற குடைச்சல் ஆரம்பமாகும்.

நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன், எனக்கு எதுவும் வேண்டாம், உன் அன்பு மட்டும் போதுமென்று. சரி என்பாள் மீண்டும் எதையாவது வாங்கித் தந்து, எப்படி யிருக்கு? பிடிச்சிருக்கா? போட்டுப்பார்த்தாயா, என்பாள்!!....

அவள் புத்தாண்டுப்பரிசாக வாங்கிக்கொடுத்த அந்த டிரஸின் மேல் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை. காரணம் வர்ணம் மற்றும் எனக்கு அந்த உடை கொஞ்சம் பெரிதாக இருந்தது. போடாமல் அலமாரியை அலங்கரிப்பதால் யாருக்கு என்ன பயன். நான் கொஞ்சம் குண்டானால் போடலாம்தான். ஏற்கனவே இருக்கிற குண்டு போதாதா என்ன!

சென்ற வாரம், என் உறவுக்கார பெண் ஒருவள் வீட்டிற்கு வந்திருந்தாள். பிரயாணக் களைப்பில் அவளின் மகன், அவள் மடியிலே வாந்தி எடுத்ததால் உடையெல்லாம் நாறிப்போனது. மாற்று உடை எதும் இருந்தால் கொடு என்று என்னிடம் கேட்டாள். அவள் இருக்கும் உடல்வாகிற்கு என் தோழி எனக்குப் பரிசாகக் கொடுத்த அந்த உடை கனக்கச்சிதமாகப் பொருந்தவே, ` இந்த ஆடையை எனக்குக் கொடேன்’ என்று அவளும் உரிமையுடன் வாய் திறந்து கேட்க, நானும் சரி என்று கொடுக்கவும்..  அவள் அதை அணிந்துகொண்டு சென்றும் விட்டாள்.

இதுதான் வில்லங்கம்..

நேற்று என் தோழி (ஆடையைப் பரிசாகக் கொடுத்தவள்..) என்னை அழைத்து, `அந்த ஆடை சேரவில்லை என்றாயே, எடுத்து வரமுடியுமா.? நான் தையல்காரரிடம் கொடுத்து, கச்சிதமாக உனக்குச்சேரும்படி  அல்டர் செய்து தருகிறேன், என் செலவிலேயே என்றாள்.

நான் என்ன செய்ய?

இன்று அவளைச் சந்திக்கச்செல்லுகையில், நடந்த உண்மையைச் சொன்னேன்...

அடேயப்ப்பா, இப்படியா ஒரு பெண்ணிற்கு அசிங்கமாகக் கோபம் வரும்..! தாறுமாறாக என்னைத் திட்டித்தீர்த்துவிட்டாள். `அதன் விலை என்ன தெரியுமா? நான் என்ன இரவுச் சந்தைக் கடைகளில் பொருட்கள் வாங்குபவளா? பரிசுகளை பாதுகாகத்தெரியாதா உனக்கு? நீ தர்மம் செய்ய நினைத்தால், உன் பொருளைக் கொடுக்க வேண்டியது தானே..’ நாவடக்கமிட்டால் வார்த்தைகளைக் கொட்டித்தீர்த்தாள். கூனிக்குறுகினேன் நான்..!

இனி சேர்வதற்கு மனம் வருமா? உடைந்த மனதை ஒட்ட வைக்க முடியுமா? நட்பு எப்படியெல்லாம் விஸ்வரூபம் எடுத்து பிரிவைச் சந்திக்கின்றது பார்த்தீர்களா!? எனக்கு ஒருவரின் சுயரூபம் தெரிந்து விட்டால் மறுபடியும் சேர மனம் ஒப்பாது.

பிரியவும் முடியாது. சரியான அட்டை. இன்னமும் போன் ஓயவில்லை. மெசெஜ் அண்ட் மிஸ் கால்ஸ்..

எனக்கு மட்டும் ஏன் இப்படி?