செவ்வாய், மே 29, 2012

மனச்சிதைவு

காலையிலே ஒரு அழைப்பு. `` அம்மா, நான் வசிக்கும் ஹோஸ்டலில், திருட்டுப்பசங்க நுழைந்து விட்டார்கள்’’ என் மகள்தான்.

எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல.. ஒரே படப்படப்பு. வேலையில் கவனமே செலுத்த முடியாத நிலையில் நான்.

உடனே என் கணவருக்கு தொலைப்பேசி அழைப்பு விடுத்தேன். விஷயத்தைச் சொன்னேன்..

``ஆமாம், எனக்கும் மெசெஜ் வந்தது, சின்ன பிள்ளைகளா அவர்கள், சமாளிப்பார்கள் விடு. அதான்.. ஒண்ணும் ஆகல இல்லே,  இறைவனுக்கு நன்றி சொல்..!’’ என்றார்.

``என்ன கொஞ்சம் கூட அக்கறையில்லாமல்..!? எனக்கு அடி வயிற்றையே கலக்குகிறது..!’’

``சரி சரி, நானும் ஒரு முக்கிய விஷயமா ஓடிக்கிட்டு இருக்கேன், இரவு பேசிக்கலாம்..!’’

 ``என்ன முக்கியம், இதை விட?”
எனக்கு படு பயங்கரக் கோபம் வந்தது. காரணம், அவளுக்கு அழைத்தால், போனை கட் செய்து, மெசெஜ் மட்டும் அனுப்புகிறாள். `im n police staton,cl u ltr' இப்படி அவசர அவசரமாக முடிக்காமல் ஒரு மெசெஜ்..! அவளிடமும் பேச முடியாமல், இவரும் சரியாக பதில் கொடுக்காமல்..எப்படி இருக்கும் என் நிலைமை.!? அழுகையே வந்தது. நெஞ்சு கூட வலி எடுத்தது.

``எங்க மாமா மகன், இருபத்தேழு வயதுதான், மாரடைப்பில் மரணம், நான் இன்னிக்கு வேலைக்குக்கூட போகாமல், அங்கே போயிகிட்டு இருக்கேன். இரவு பேசிக்கலாம், அதான் ஒண்ணும் ஆகலையே, ஏன் வீணாய்..!! போனை வை..!”

எப்படிங்க இந்த ஆண்கள் மட்டும் இப்படி.!? எதையும் அலட்டிக்கொள்ளாமல், எந்த பந்த பாச உணர்வுகளுக்கும் இடந்தராமல், எந்த சிந்தனையும் இல்லாமல், விளைவுகளைப்பற்றி யோசிக்காமல்,  தற்போதைய நிகழ்வுகளில் நுழைந்து விடமுடிகிறது!? நடந்தது நடந்து போச்சு, இப்போ என்ன செய்யலாம் என்கிற சிந்தனை ஏன் பெண்களுக்கு மட்டும் வரவே மாட்டேங்கிறது.! மனது படும் பாடு, இதயமே இரண்டாய்ப் பிளப்பதைப்போன்ற உணர்வில் அல்லல்படும் குணம், பெண்களின் இயல்பா, அல்லது எனக்கு மட்டும் இப்படியா.!?

மகள் அழைத்தாள், இந்த வாரம் பரீட்சை ஓடிக்கொண்டிருப்பதால், நள்ளிரவு இரண்டு மணிவரை படித்துக்கொண்டிருந்தார்களாம். அவள் வாடகை எடுத்துத் தங்கியிருக்கும் வீடு , ஐந்து அறைகள் கொண்ட ஒரு பெரிய இரண்டு மாடி வீடு. ஐந்து அறையிலும் மருத்துவத்துறை மாணவிகள் தங்கி படிக்கின்றார்கள். எல்லோரும் நல்ல குடும்பத்துப் பெண் பிள்ளைகள். அழகான பெண் பிள்ளைகளும் கூட.

இரவு இரண்டு மணிவரை, குரூப் ஸ்டடி செய்து விட்டு தூங்கச் சென்றிருக்கின்றார்கள். காலை மணி ஏழுக்கு எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்புற கேட்’டும், முன்புற க்ரீலும் பூட்டு உடைக்கப்பட்டு யாரோ நுழைந்திருப்பதைப்போன்ற தடையங்கள் தென்பட்டிருக்கின்றது. பதறிய அவர்கள், என்னென்ன பொருட்கள் காணாமல் போயிருக்கின்றதென்கிற பதற்றத்துடன், லேப் டாப், கைப்பேசி, கைக்கடிகாரம், சாமி மேடையில் கழற்றி வைத்த தங்க மோதிரம் போன்றவைகள் இருக்கின்றதா என்கிற சந்தேகத்தில், அவை வைக்கப்பட்ட இடத்தில் சோதனை செய்கையில், அவைகள் அப்படியே வைத்த இடத்தில் பத்திரமாக இருந்தன..!

இவ்வளவுதான் செய்தி...

அதற்குப்பிறகு எனக்குள் வந்த விணாக்களும் சந்தேகங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.!

ஏன் எதையும் எடுக்காமல் வந்து போக வேண்டும்?
பெண்கள் இருக்கும் வீட்டிற்குள் நுழைவதற்கு என்ன காரணம்?
பெண் பிள்ளைகளைத் தொந்தரவு செய்வதற்காகவா?
மதுபானம் குடிப்பவர்களா?
போதைப்பொருள் உட்கொள்பவர்களா?
கற்பழிக்கவந்திருப்பார்களோ!?
எதையும் எடுக்கவில்லையே..!?
அடைக்கலம் நாடி வந்த திருட்டுப்பசங்களா!?
வீடு மாறி எதும்?
கடத்தல் வேலை எதும்..!
எதையாவது பதுக்கி வைத்திருப்பார்களோ..!
கொலைகாரர்களா!?

தூங்கிக்கொண்டிருக்கும் பெண் பிள்ளைகளின் அறைகளின் கதவுகளைத் தட்டியிருந்தால், தோழிகள் யாரோதான் தட்டுகிறார்கள் என்று நினைத்து அவர்கள் கதவுகளைத் திறந்திருப்பார்களே..!, வெளியே அறிமுகமில்லாத எவனோ ஒருவன்  நின்றிருந்தால்!? கரப்பான்பூச்சிகளுக்குக்கூட பயப்படும் பெண் பிள்ளைகளாச்சே! என்ன செய்வார்கள்!? வந்தவர்கள்  அவர்களை எதாவது செய்திருந்தால், என்ன ஆவறது நிலைமை? அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் மலாய்க்காரர்களாச்சே, நம்மவர்கள் என்றால்,  அங்குள்ளவர்களிடம் சொல்லிவைக்கலாமே..! இப்போ யாரிடம் பேசுவது!?
எவ்வளவு தூரத்தில் இருக்கின்றார்கள் தெரியுமா? காரில், வேகமாகச் சென்றாலே குறைந்தது ஐந்து அல்லது ஆறு மணி நேரமாகுமே, எனக்கு இப்போதே அங்கு செல்லவேண்டும் போல் இருந்ததே.!

பக்கத்துத் தாமானில் கொலை குத்து, சண்டைச் சச்சரவு என்றாலே, அவ்வளவு பெரிய பெண், பயத்தில், அம்மா அப்பாவை தள்ளிவிட்டு, நள்ளிரவில் அறைக்குள் நுழைந்து, நடுவில் படுத்துக்கொள்பவளாச்சே, எப்படி இப்படிப்பட்ட தருணத்தில்!?

என்னால் யோசிக்கவே முடியவில்லை..தலை சுற்றுகிறது.
இதையெல்லாம் அவரிடம் சொன்னால், சரி ஏன் நடக்காததையெல்லாம் பைத்தியம் போல்  யோசித்து குழம்பிக்கிட்டுச் சாகற., போகலாம், வார இறுதியில். சும்மா இரு.. வீட்டிற்கு வந்து பேசலாம், என்று, பேசி முடிப்பதற்குள் தொலைப்பேசியைத் துண்டித்து விடுகிறார்.

எனக்கு பசி இல்லை. எதிலும் நாட்டமில்லை, வயிற்றைப்பிரட்டுகிறது, வாந்தி வருகிறது. நெஞ்சு லேசாக வலிக்கிறது.

அல்லல் பிறவி.. வேண்டாம் இனி எனக்கு.!

திங்கள், மே 28, 2012

காமசாத்திரம்

`` விஜி, எங்கே போனாய்?, நான் காலையிலிருந்து போன் செய்றேன்..’’

`` ஏன்?, என் வீடு இருப்பதோ காட்டுப்பகுதி, வீட்டுக்குள்ளே வந்திட்டா, சர்வீஸ் இருக்காது.. கால்ஸ் எல்லாம் வாயிஸ் மெயில்’க்கு போயிடும்.. ஏன் என்ன அவசரம்? குரலில் ஒரே படபடப்பு..!’’

``நான் ஒரு சிக்கலில் மாட்டியிருக்கேன், எல்லாம் உன்னாலேதான்.!”

``ஏய்..நாயே,..விஷயத்தைச் சொல்லு, பழி அப்பறம் போடலாம்’’

`` என் நிலைமைதான் உனக்குத்தெரியுமே..! அவனை டைவர்ஸ் பண்ணியதிலிருந்து எனக்குப் பிரச்சனை ஓயவே மாட்டேங்கிறது, எதாவது ஒரு வடிவத்தில் விஸ்வரூபம் எடுத்து என்னை அலைக்கழிச்சுக்கிட்டே இருக்கு. நான் என்ன செஞ்சாலும், புதுசா புருஷன் தேடறேன் என்கிற ரீதியில் என்னை டார்ச்சர் செய்ய ஆரம்பிச்சுடறாங்க.!’’

``அதுதான் தெரிஞ்ச கதையாச்சே.. நம் இனத்தில், கல்யாணம் கட்டி, பிரிஞ்சுப்போனாலே, எல்லோருக்கும் இளக்காரம் தானே., வாழாவெட்டின்னு வாய்கூசாம சொல்லுங்க!’’

``அவன் ஒரு பக்கட்டு, என்னைப் பாடாய்ப் படுத்தறான், ஆள் வச்சு, என்னைக் கண்காணிக்கிறான். நான் தான் தொல்லையே வேண்டாம்னு விட்டுட்டேன்’ல, போகவேண்டியதுதானே. நிம்மதியா விட மாடேங்கறான். அவனுக்குத்தான் ஏற்கனவே பொண்டாட்டிப்புள்ள எல்லாம் இருக்குதானே.!? போயித்தொலைஞ்சா நான் நிம்மதியா இருப்பேன் இல்லே.’’

`` என்னது, கண்காணிக்கிறானா? ஏய் பார்த்து புள்ள.. எதாவது செஞ்சிடப்போறான்.!’’

``ஹூக்கும்..கிழிப்பான்.. பயந்தாங்கோலி. நான் தான் ஒரு செவ்ட்டிக்கா’க போலிஸில் ரிப்போர்ட் எல்லாம் கொடுத்து விட்டேனே.. எனக்கு எதும் ஒண்ணுன்னா, அவனதான் முதலில் போலிஸில் பிடிப்படுவான். இதுக்காகவே, அவன் என்னைப் பாதுகாக்க வேண்டும்.!’’

``உன் அப்பா அம்மா கிட்ட எதுக்கும் சொல்லிவை, தனியா வேற தங்கியிருக்கே, எதுக்கும் கொஞ்ச நாளைக்கு அவங்களை உன்னோடு தங்க வச்சுக்கோ.. இல்லேன்னா, நீ போய் அவங்களோட தங்கிக்கோ. டேஞ்சர் புள்ள பார்த்து..’’

``அய்யோ பிரச்சனையே அதுதான், எங்க அம்மாவை என் வீட்டில் கொஞ்ச நாள் தங்கிக்கோ’ன்னு சொன்னேன், அவங்க வந்து தங்கிக்கிட்டாங்க, நான் இல்லாத சமயமா பார்த்து, இவன் வந்து, அதையும் இதையும் சொல்லி மனசை கலைச்சுட்டான்..பாவி, கையில கிடைச்சான் தொலைஞ்சான்.’’

`` அடேயப்பா, ரௌடி கணக்கா ஃபிலிம் காட்டற, நீ ஒண்ணும் பேசாதே, உங்க அப்பா கிட்ட சொல்லிவை!’’

`` அப்பாவா, எப்போ பார்த்தாலும், `நீ தேடிக்கிட்ட வாழ்க்கை, எவ்வளவோ சொன்னோம், நம்ம ஜாதி சனத்திலே ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்கிறேன்’ன்னு, நீதான் கேட்கல’ன்னு சொற்பொழிவு ஆரம்பிச்சிடுவாரு..தேவையா!, அதான், நல்லதோ கெட்டதோ நானே சமாளிக்கபோறேன், யார் தொல்லையும் வேணான்னு, ஆஸ்த்ரேலியா போகப்போறேன்! ”

``ஊரை விட்டே ஓடு, உனக்கென்னம்மா கை நிறைய சம்பாதிக்கற.. ! அதுசரி.. எதுக்கு இப்போ என்னையைத்தேடினே.?’’

``பிரச்சனையே உன்னால்தான்..!’’

``அடிப்பாவி, நானா உன்னை டைவர்ஸ் பண்ணச்சொன்னேன்!? இதுக்குத்தான், பிரச்சனை உள்ள ஆளுங்கக்கிட்ட எல்லாம் நட்பு வச்சுக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க..”

``அய்யோ, நான் அத சொல்லல, நான் பெங்களூருக்கு போயிருந்தப்போ, உனக்கு ஒரு சாமான் வாங்கி வரச்சொன்னீயே, அது இன்னும் என் கிட்டத்தான் இருக்கு, ஞாபகம் இருக்கா!?”

``அட ஆமாம், அத ஏன் நீ இன்னும் கொடுக்காம இருக்கே.!?”

``ம்ம்ம்..நல்லா கேட்பம்மா..! நீ எடுத்திட்டு வராதே, நானே வந்து வாங்கிக்கிறேன்’னு நீதானே சொன்னே.!”

``சரி, இருக்கட்டுமே, அதோட விலை ஜாஸ்தி, இப்போ அவ்வளவு பணம் இல்லை, பணம் இருக்கும் போது எடுத்துக்கிறேன்னு சொன்னேன்.. அதோட நானும் மறந்துட்டேன், நீயும் ஞாபகப்படுத்தவேயில்லை.. ஏன் இப்போ அதனால என்ன பிரச்சனை?”

``அம்மா வந்து தங்கினாங்க இல்லே, நான் தனிமையில் என்னனன்னமோ செய்கிறேன், யார் யாரையோ கூட்டிக்கிட்டு வறேன், யார் யாரோ என்னன்னமோ வாங்கித்தராங்கன்னு, அவங்கக்கிட்ட போட்டுக்கொடுத்திட்டான் ராஸ்கல். அவங்களும், நான் இல்லாத சமயமா பார்த்து, என்னுடைய அலமாரியை முழுசா ஆராயிஞ்சு மெயிஞ்சுட்டாங்க. இந்த பொருள் மாட்டிக்கிச்சு..!”

``அட, அப்படி அதுல என்னதான் இருக்கு?”

``ஏம்ம்மா சொல்லமாட்டே.., அவங்க அந்த மாதிரி போஸ் எல்லாம் வாழ்க்கையிலே பார்த்திருக்கவே மாட்டாங்க தெரியுமா!?”

``அதுக்கு நாம என்ன பண்ண முடியும்!? அது நம்ம தப்பு இல்லையே. நம் காலகட்டமென்பது வேறு, அவங்க நிலைமை வேறு, யாரிடமும் பழகாமல், எதையும் கற்காமல் இருப்பவர்களுக்கு இது தப்பாகத்தானே படும்.!”

``தத்துவம்..ம்ம் மவளே, கையில கிடைச்சே, கொன்னுடுவேன்.!”

``சரி கதைய சொல்லு..!”

``அவங்க அதை எடுத்து, சீல் வைச்ச பிளாஸ்டிக்கைப் பிரித்து.., பாரு விஜி, சீல் வச்சதைக்கூட நான் இன்னும் பிரிக்கவில்லை, நானே அதுக்குள்ளே என்ன இருக்குன்னு பார்க்கவேயில்லை, அதிலிருந்து தெரியவேண்டாமா அது என்னுடையதல்ல’ன்னு (சோகமாக)! அதைப் பிரித்து பக்கம் பக்கமாஆ பார்த்திட்டு, அப்படியே அப்பாவிடம் கொண்டு போய் கொடுத்திட்டாங்க.!”

``அடக்கடவுளே, அப்பாவிடமா!? அவரு அதுக்கு மேலேயாச்சே..., பரவாயில்லை, அம்மாவிற்கு படிக்கத்தெரியாது, அப்பாவிற்கு தமிழ் படிக்கத்தெரியாது, தப்பித்தோம்!’’

``என்னது தமிலிலா?? நான் அந்த புக்’ஐ இங்கிலிஷில் அல்லவா வாங்கினேன், எவன் பெங்களூரில், தமிலில் விற்கிறான் இந்த புக்’ஐ!? மேலும், படித்தால்தான் இது புரியனுமா!! படம் படமா வேறு போட்டுக்காட்டியிருக்கானே., செத்தேன், ஏற்கனவே, என் நிலைமை வேறு இப்படி! எனக்கு இது தேவைதான்!”

``சரி, விடு.. படமெல்லாம் இருக்கும்’னு நான் என்னத்தைக்கண்டேன். எதோ ஒரு ஆர்வத்தில் சொன்னேன்.. சரி இப்போ நான் என்ன செய்ய!?”

``எங்க அம்மாவிற்கும் அப்பாவிற்கும் போன் போட்டு, நான் தான் அந்த புக்’ஐ வாங்கி வரச்சொன்னேன்னு, ஒரு வார்த்தை சொல்லிடு..”

``ஆ.......... அவர்களிடமா!? நானா!!? எனக்கு மயக்கமே வருதே, சரி முயற்சி செய்யறேன்.., இல்லேனா விடு, அவர்கள் இன்னேரம் ஆசைதீர...”

``ம்ம்ம்..ஆசை தீர..!!??”

`` தங்கச்சிப்பாப்பா வேண்டாமா உனக்கு?”

``அடிங்ங்ங்ங்க்.. என் நெலம புரியாமல், கிண்டலா உனக்கு..!!?”






``

வியாழன், மே 24, 2012

மதி

சகுனம் பார்ப்போர்
முகத்தில் விழிக்க
சகுனம் பார்க்கிறேன்.. நானும்

%%%

வியாழக்கிழமையை
வெள்ளியாக நினைத்ததால்
வெள்ளி எனக்கு
போனஸ் ஆனது.

%%%%

நானும் ஒருவகையில்
பைத்தியம் தான்
எதாவதொன்றில் பற்றுதல் வைத்துக்கொண்டே..
நல்ல வேளை
அது புடவை, நகை, புகை, மதுவில் இல்லை
உன்னிடமும் இல்லை

%%%%

முன்பு
நான் எழுதியதை
இப்போதைய நான்
அதை வாசிக்கும் போது
முன்பு இருந்த நான்
இப்போது அங்கே இல்லை

%%%%

அநாதை ஒருவள்
அன்னையைப் போற்றி
அன்னையர் தினக் கவிதை எழுதுகிறாள்
அனைத்துலக போட்டியில் வெல்ல..

%%%%%

பிசுபிசுப்பு

குடித்து விட்டு
கீழே  வைத்த கோப்பையில்
மீதமுள்ள காப்பி
உமிழ் நீர் வழி
கீழே இறங்குவதற்குள்
அசிங்கத்தைத் துடைத்து விட
துடிக்கின்ற மனது போல்
உன்னுடனேயான எனது உரையாடல்..

புராணம்

எல்லோருக்கும் கருத்து இருக்கின்றது!
சுவாரஸ்யமாக
நம்பகத்தன்மையோடு
கதை சொல்லத்தெரிந்தவர்கள்,
முத்திரை பதித்துச்செல்கின்றனர்
இன்னமும்
அரசியலில்....!

புதன், மே 23, 2012

படித்த பகிர்வுகள்

எழுபத்தினான்கு வயது முதியோரை `புல்’ நாய் கடித்துக் குதறியது. முதியவர் மரணம். நாயிற்கு நிச்சயம் மரணதண்டனைதான் என பரவலாகப் பேசப்படுகிறது. அது குறித்த செய்திகள், இன்றும் பத்திரிகையில் இடம் பெற்றிருந்தன.

சம்பவம் நிகழ்ந்த மறுநாள், பத்திரிகைகளில், எந்தெந்த நாய்களை வீட்டில் வளர்க்கக்கூடாது என்கிற பரபரப்புச்செய்திகளுடன், வரிசையாகக் கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது வகை நாய்களின் புகைப்படங்களைப் பிரசுரித்து இனி அவைகளை வீட்டில் வளர்க்கக்கூடாது என்று தடை உத்தரவு போட்டிருக்கிறது முன்சிபல்.

அப்பட்டியலில் உள்ள ஒரு வகை நாய் என் தோழியின் வீட்டில் உள்ளது. லைசன்ஸ் கூட இல்லாமல், குட்டியிலிருந்து செல்ல நாயாக வளர்த்து வருகிறாள்.  இச்செய்தியினை பத்திரிகையின் வாயிலாகவும் தொலைக்காட்சியின் வாயிகாவும் கேள்விப்பட்டதிலிருந்து பதறிப் போயிருக்கின்றாள். தமது நாயை வீட்டில் பூப்பெய்த பெண்ணை  பூட்டி பாதுகாப்பதைப்போல் பூட்டி வைத்திருக்கின்றாள். வீட்டிற்குச் சென்றால், நாய் கட்டிலில் ஒய்யாரமாகத் தூங்கிக்கொண்டிருக்கிறது. எப்படித்தானோ கடவுளே....!!

%%%%%

தினமும் ஒரு கப் காப்பி அருந்திவந்தால், மனிதனின் ஆயுளை கொஞ்சம் நீட்டிக்கும் என்கிற ஆய்வு ஒன்றை மிக அண்மையில் படித்தேன்.

%%%%%%

ஜப்பானிய ஆண்களில் பலர் திருமணம் செய்யாமல் பிரமச்சாரிகளாகவே இருக்க விருப்பப்படுகிறார்களாம். காரணம், தாம்பத்தியத்தில் தம்மால் ஒரு பெண்ணை முழுமையாக திருப்தி படுத்த இயலாமல் போய்விடுமோ என்கிற பயமாம்..!

%%%%%

நியோர்க்கில் விநோதமான மோசடி ஒன்று நிகழ்ந்துள்ளது. இறந்துப்போன தமது தாயைப் போலவே உடை, சிகை அலங்காரம், உதட்டுச்சாயம், கூலிங் கிளாஸ், ஒஃக்சிஜென் மூலமாக மூச்சு விடுவதைப்பொன்ற பாவனையில் வேடமிட்டு வந்து ஒரு ரியல் எஸ்டேட் பணமோசடிக்காக கையொப்பம் இட்ட ஒருவரை அடையாளாங்கண்டு பிடித்துள்ளனர். குற்றம் உறுதியானால், பதிமூன்றிலிருந்து நாற்பது ஆண்டுகள் வரை சிறைவாசம் கன்ஃபர்ம். எப்படியெல்லாம்ம்???

%%%%%%

எங்க ஊரில் நடந்த தகராறு இது. அப்பா மகன் இருவருக்கும், தங்களின் வீட்டின் முன், தத்தம் கார்களை நிறுத்துவதற்கு இடப் பற்றாக்குறை ஏற்ப்பட்டதால், வாய்ச்சண்டை முற்றி கத்திக்குத்து வரை சென்று, மகன் மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உயிர் பிழைத்த மகன், முதுகில் குத்திய தன்தந்தையை தான்  மன்னிக்கப்போவதில்லை என்று சூழுரைத்துக் கொண்டிருக்கின்றார். தந்தை காவல்துறையில்...

%%%%%%

உலகத்திலேயே மிக கடினமான வேலை; ஒருவர் இறந்து விட்டார் என்று உறுதியாக உத்திரவாதம் வழங்குகிற வேலைதானாம்.! மருத்துவர்கள் லேசில் இதைச் சொல்லிவிட மாட்டார்களாம்.

%%%%%%

ஒரு மனிதனால் செய்ய முடியாத காரியம். தம்மைத் தாமே கழுத்தை நெறித்துக்கொண்டு, தற்கொலை செய்துக்கொள்வதாம். (எங்கோ படித்தேன் - தயவு செய்து முயலவேண்டாம்)...

%%%%%%

இன்று எங்களின் கம்பனிக்கு ஒருவர் வந்தார், நேர்முக தேர்விற்கு. பெயர் ஹேமாமாலினி. (ஆண்)

%%%%%

ரசித்த கார்ட்டூன் படம்