ஞாயிறு, ஜூன் 24, 2012

ஆறுமணிக்கெல்லாம்

இன்று,

ஆறுமணிக்கு ஒரு நிகழ்விற்குப்போக வேண்டும். தம்பி வாங்கிய புதிய கடைக்கு இன்று ரிப்பன் வெட்டும் நாள்.

சரியாக ஆறுமணிக்கெல்லாம் வந்திடுங்கள், என எல்லோருக்கும் சொல்லியாச்சு.

சரி சும்மாவா போறது? மதிய உணவு முடிந்தவுடன் சில பலகாரங்கள் செய்யலாமே என, பருப்பு வடை மற்றும் பாசிப்பயிர் உருண்டை செய்து எடுத்துச்செல்லலாம் என, அவைகளைச் செய்ய ஆயத்தமானேன்.
கிட்டத்தட்ட ஐந்து மணியாகிவிட்டது எல்லாவற்றையும் செய்து முடித்து சுத்தம் செய்ய.!

விஷேசங்களுக்கு பலகாரங்கள் செய்து எடுத்துச் செல்வதைப் போன்ற ஒரு படபடப்பான வேலை வேறெதும் இல்லை.. அப்பப்பா, சுவையெல்லாம் சரியான இருக்கவேண்டும். நல்லா இருக்குமா இருக்காதா? எல்லோருக்கும் பிடிக்குமா? நேரமெடுத்துச் செய்கிறோமே, சாப்பிடாமல் வீணடித்தால்..! பேன்ற எண்ணங்கள் நம்மை அலைக்கழிக்கும். சில இடங்களில், சிறுபிள்ளைகள் முதற்கொண்டு, `அய்யே அண்டி, நல்லாவேயில்லை..’ என கிண்டல் செய்வார்கள்.

``ஆறுமணிக்கெல்லாம் அங்கே இருக்கணும், இன்னும் நீ என்ன செய்யற அடுப்படியில்?’’ கணவர்தான். ``டீ கலக்கி, எனக்கும் ரெண்டு வடை கொண்டு வா.’’ அவரேதான். அதையும் செய்தாகிவிட்டு, மகனை காலெஜில் கொண்டு விடணுமே, அவர்தான் அழைத்துச்செல்வார். அதோடு இன்னொரு முக்கியமான விஷேசத்தில் அவர் கலந்துகொள்ள வேண்டும். அவருக்கும் சட்டை அயர்ன் செய்யனும்.

நான் கிளம்புவதற்குள், மகனுக்கு, ஒருவார பயன்பாட்டிற்கு தேவையானதையெல்லாம் எடுத்து வைக்கவேண்டும். மிக விரைவாக துணிகளையெல்லாம் அயர்ன் செய்து, அவனுடைய பேக்கில் எடுத்து வைத்து விட்டு, புதிய துணிகளை ஊற வைத்திருந்தேன் அவைகளை கையில்தான் துவைக்க வேண்டும், மிஷினில் போடமுடியாது. அது ஞாபகத்திற்கு வரவே, அதையும் விருவிருவென செய்து, உலர போட்டேன்.

``இரவு உணவு என்ன?’’ என் மகன் தான்.

``மதியம் சமைத்தது இருக்கிறது, அதை சாப்பிட்டுக்கொள் ய்யா.``

``ஹூஹும் முடியாது, கோழி வறுவல் செய்துகொடுக்கிறேன் என்றீர்களே, என்னாச்சு?’’

``எனக்கு நேரமில்லை, நீ இருப்பதை சாப்பிடு, மூணு பேருக்கு, முப்பத்திரெண்டு தடவை சமைக்கணும்.’’

``செய்துக்கொடுங்கள், இல்லையேல், இன்று நான் பட்டினியாக காலெஜ் செல்கிறேன்.!’’

``இருப்பதைச் சாப்பிடு என்கிறேன், என்ன இப்படி புரிந்துகொள்ளாமல்? பார்க்கிறாய் தானே, அம்மா காலையிலிருந்து எங்கேயாவது உட்கார்ந்தேனா.!?’’

``ஏய்,மணியாச்சு,கிளம்பு நீ, நானும் போக முடியாது, நீயும் லேட்டா போனால், எதாவது நினைச்சுக்குவான் உன் தம்பி.’’ அவர்தான்.

இவனிடம் போராடாமல், நான் அவசர அவசரமாக குளித்து, கண்முன்னே இருந்த ஒரு சுடிதாரை அணிந்துகொண்டு, தலையில் நீர் வடிய, தயார் செய்து வைத்திருந்த பலகாரங்களை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக கிளம்பினேன்.

காரின் அருகில் சென்ற போது, ``என்னுடைய சாக்ஸ் எங்கே?’’ மேலிருந்து ஒரு குரல், சத்தமாக.. மகன்தான். பொறுக்காதுங்க, நான் எங்கேயாவது கிளம்பினால்..!

``கீழே கொடியில் இருக்கு, எடுத்துக்கோ.’’ என்று சொல்லி, காரில் அமர்ந்து, சரியாக ஆறுமணிக்கெல்லாம் கடை வாசலில்.

பூஜை நடத்துனர் இன்னும் வரவில்லை. அம்மா இன்னும் வரவில்லை, சாப்பாடு இன்னும் வரவில்லை, தண்ணீர் வாங்கச்சென்றவன் இன்னும் வரவில்லை.. என எட்டு மணிக்குத்தான் ஆரம்பித்தார்கள் நிகழ்வை.! கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சும்மானாலும் உட்கார்ந்திருந்தோம், சில வெட்டி கதைகளை பேசிக்கொண்டு. வீட்டிலேயே இருந்திருந்தால், இன்னேரம் எவ்வளவோ வேலைகளை செய்திருப்பேன். அப்படியே உடம்பில் கம்பளிப்பூச்சி ஓடுவதைப்போல் இருந்தது எனக்கு. ஞாயிறு என்றால் பகலில் கொஞ்ச நேரம் தூங்குவேன். அதையும் இவ்வாரம் தியாகம் செய்தாகிவிட்டது.!

இந்த மாதிரி ஆட்களோடு, இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு, இன்னும் சொச்ச வாழ்வை எப்படித்தான் ஓட்டுவது.? எனக்கே தெரியவில்லை!!!??

பெண் பிழைப்பு...!

வெள்ளி, ஜூன் 22, 2012

மாடலிங் துறை

எனக்கு எதிலாவது ஆர்வம், தேடல் இருந்தால், உடனே கூகுளுக்குச் சென்று அதையொட்டிய தகவல்களை ஏற்கனவே யாரோ ஒருவர் ஆய்வு செய்து திரட்டி வைத்திருப்பதைப் பார்த்து ஆறுதல் கொள்வதில் அவ்வளவாக இஷ்டமில்லை. எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்களை நேரிடையாகச் சந்தித்து, அதையொட்டி அவர்கள் என்ன சொல்கிறார்கள், என்ன நினைக்கின்றார்கள்  என்பதனைத்  தெரிந்து கொள்வதில்தான் அலாதி பிரியம். அதனால் தான் எங்கு சென்றாலும் யாராவது ஒருவரிடம் நான் எதையாவது பேசிக்கொண்டிருப்பேன். எல்லா இடங்களிலும் எனக்கு நண்பர்கள் மிக சுலபமாக கிடைத்து விடுவார்கள்.

ஆக, என் பதிவுகள் சில வேளைகளில் funny யாக இருக்கும். கண்டு கொள்ளாதீர்கள். தவறாக இருந்தால் திருத்தம் செய்யுங்கள் ஆனாலும் இது நிஜம்.

மாடலிங் துறையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என சில நண்பர்களிடம் விசாரித்தேன். நம்மவர்கள்தான் தெரியாதா!

*உடலைக்காட்டி சம்பாதிப்பது

*முட்டாள்கள் செய்யலாம்

*உடல் அழகை பேணிக்காப்பவர்கள், செய்யலாம்

*நமக்கு சரிப்பட்டு வராது - பாரம்பரியம் கலாச்சாரம்’னு ஒண்ணு இருக்கே.

*எனக்க்கு அந்த ஆசை இருந்தது, எங்கப்பா கொன்னுடுவேன்’னு  சொன்னாரு,  அதான் போகல.

*நல்ல பணம் சம்பாதிக்கலாம்

*நிறைய ரசிகர்களைப் பெறலாம்

*பிரபலமாகலாம்

*`என் மகளுக்கு ஆசை இருக்கு, என் மனைவி விடமாட்டாங்க. பெண்பிள்ளைகளை யாரும் கல்யாணம் கட்ட மாட்டார்கள் என்பாள்.’ இப்படி ஒருவர்.


இதையெல்லாம் தண்டி, ஒரே ஒரு சீனத்தோழி சொன்னாள்.

*``அது என்ன அவ்வளவு சுலபமான வேலையா.! அதனுள் எவ்வளவோ இருக்கின்றது கற்பதற்கு. எல்லோரும் சுலபமாகச் சொல்லலாம், அது, இது, அப்படி, இப்படின்னு ஆனால், அழகாக இருந்தால் மட்டும் நுழைந்து விட முடியுமா அந்தத் துறையில்? அதற்காகப் போடப்படும் உழைப்பு அவ்வளவு எளிதானதா? சின்ன குழந்தையிலிருந்து எவ்வளவு ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்து, தியாகங்கள் செய்யவேண்டும் தெரியுமா!? `` என்றாள்



உண்மைதான், அந்த வேலை ஒன்றும் அவ்வளவு சுலபமானதல்ல என்பதனை, இரண்டு நாள்களுக்கு முன் எங்களின் நிறுவனம்  புதிதாக வெளியிட்டுள்ள, Touch Screen Monitor ஒன்றினை விளம்பரம் செய்ய, நேராக அந்த மாடலிங் நிறுவனமே இங்கே வந்திருந்தது, அங்கே விளம்பரப் புகைபடங்களுக்கு மாடல்கள் போஸ் கொடுத்ததைப்பார்த்த பிறகுதான் தெரிந்துகொண்டேன், அந்தத் துறையின் இன்னல்களை.

காலையிலிருந்து மாலை வரை நடைப்பெற்றது விளம்பரப் புகைப்படங்கள் எடுக்கும் வேலைகள். மதிய உணவின் போது, உணவுகள் உள்ளேயே வழங்கப்பட்டதால், அந்த வேலைகளில் என் பங்குமிருப்பதால் எனக்கும் அன்று அங்கேயே உணவு வழங்கப்பட்டது. உணவை சுவைத்துக்கொண்டே அவர்களுடன் சில விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

அதாவது, புகைப்படம் எடுக்கத் தயாராகும் போது, அந்த அழகிகளின் கால்களிலும் க்ரீம் மற்றும் பவுடுண்டேஷன் போடப்பட்டது. தலை முதல் கால்கள் வரை ஒப்பனைகள் போடப்பட்டது. வரும்போது சாதரணமாக வந்தவர்கள், ஒப்பனைகளுக்குப்பிறகு ரதிகளானார்கள். ஒரு அறையையே அவர்களின் ஒப்பனைகளுக்காக ஒதுக்கித்தந்திருந்தார்கள் எங்களின்  நிறுவனத்தார்கள்.

அந்த அறையில், உடைகள் காலணிகள் என அடுக்கி வைத்திருந்தார்கள். அங்கே வந்து தான் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டார்கள். உடைகள் மிகவும் கச்சிதமான உடைகள்தான், ஆனால் காலணிகள் பல வர்ணத்தில் மிக உயரமானதாக இருந்தது.  அநேகமாக மாடலிங் துறைக்கு, ஆடைகளின் அளவிற்குத்  தகுந்தாட்போல் மாடல்கள் இருக்கவேண்டும் போலிருக்கிறது. அதனால்தான் எல்லா ஆடைகளும் எல்லோரும் போடும்படி இருந்தது. காலணிகளும் கூட.

அங்கே வந்தவர்களில், முகங்கள் மட்டும்தான் வேறு, மற்றபடி உடலமைப்பு, உயரமெல்லாம் ஒரே மாதிரி, ஒரே அளவுதான். (எந்த அளவுகோளின்படி தேர்ந்தெடுத்திருப்பார்களோ தெரியவில்லை!)

அதாவது மாடலிங் துறையில் ஈடுபடுபவர்களின் கால்கள் மிக அழகாக இருக்கவேண்டுமாம். உயரமாக இருந்து, அழகாக இருந்து, உடல் மெலிந்து, அழகான உடலமைப்பு இருந்தாலும் கால்கள் அழகாக இல்லையென்றால் மாடலிங் துறையிலிருந்து விலக்கப்படுவார்களாம்.

அலங்கரிக்கப்பட்ட பெண்கள், தயார் நிலையில் அந்த Monitor ரின் அருகில் வந்து நிற்கும்போது, ஒரு முழுமையான அழகு அவர்களிடம் தென்பட்டது.

நான் விசாரித்த போது எனக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களில், எம்மாதிரியான கால்களைக்கொண்டவர்கள் இந்த மாடலிங் துறைக்கு வரத்தகுதியற்றவர்கள் என்பதனைச் சொல்லி, அதையும் நிவர்த்தி செய்யலாம், சிறுவயதிலிருந்து சில உடற் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால், என்பதனையும் சொன்னார்கள். (அதிகம் பேசவில்லை தான், இருப்பினும் அவர்களிடம் பேசியதிலிருந்து நான் உள்வாங்கியவை)

எம்மாதிரியான கால் வடிவங்களைக் கொண்டவர்கள் மாடலிங் துறையில் நுழைவது கஷடம் என்பதைப் பார்ப்போம்.

1. O Shape Legs

2. X Shape Legs

3. The leg with chubby ankles

4. Short legs

5. The leg with thick calves

6. The leg with cellulite

7. The leg with thick thighs




இவைகளை ஆரம்பத்திலேயே கண்டு கொண்டு, அதை நிவர்த்தி செய்ய சில வழிமுறைகளை பயிற்சிகளின் மூலம் விடாமல் கடைப்பிடித்து வந்தால், கால்கள் சரியான நிலைக்கு வரலாம், இந்த மாடலிங் துறையில் மின்னலாம்.

இவ்வளவு அழகாக இருப்பது, சில ஜடப்பொருள்களை விளம்பரம் செய்வதற்காகத்தான் என்பதுவே சுவாரஸ்யம் இங்கே.

very interesting field....

வியாழன், ஜூன் 21, 2012

நிழல்

மீனின் நிழல்
நீந்துகிறது

மானின் நிழல்
துள்ளுகிறது

நீரின் நிழல்
நகர்கின்றது

நெருப்பின் நிழல்
அசைகின்றது

எறும்பின் நிழல்
உழைக்கின்றது

நாயின் நிழலும்
வாலாட்டுகிறது

நம்முடையதுதான்
கவலையில் தேய்கிறது...

புதன், ஜூன் 20, 2012

விளையாடு

ஒரு துணியை எடு
இரண்டாக மடி
மனித உருவம் வரை
அதைக் கத்தரி
இரண்டு துண்டுகள் துணி கிடைக்கும்
சிறிய துவாரம் விட்டு
இரண்டையும் மனித உருவம் போல் தைத்துவிடு
தூவாரத்தினுள் பஞ்சுகளைப் புகுத்து
பிறகு அந்த துவாரத்தையும் தைத்துவிடு
இப்போ உன்னிடம் ஒரு பொம்மை
விளையாடு
என்னை விடு..

செவ்வாய், ஜூன் 19, 2012

மனநிலை குளறுபடி

நம் காதால் கேட்கின்ற, கண்ணால் காண்கின்ற சில விஷயங்களை, நாம் ஆராய்வோம் அல்லது யாரிடமாவது பகிர்வோம். இப்படி ஆராயும் போதும் பகிரும் போதும் அதையொட்டிய தகவல்கள் கூடுதலாகக் கிடைக்கபெறும்போது,  அது நமது விழிப்புணர்விற்கு உரமாக இருக்கலாம். அல்லது இதுபோன்ற தேடல்களால், நம் பகுத்தறிவிற்கும் தீனி கிடைக்கலாம்.

பொதுவாகச் சொன்னால், இந்த வழிமுறை என்பது மற்றவர்களின் குறைகளில் இருந்து நாம் பாடம் கற்பது போன்றதாகும். அதற்காக மற்றவார்களின் குறைகளையும் சதா ஆராய்வது நமக்கு இருக்கின்ற பெரிய குறையாகிவிடும், அதுவும் வில்லங்கம்தான்.

என்னைப்பொருத்தவரை எனக்கு எதேனும் வித்தியாசமான தகவல், இதுவரையில் நான் கேட்காத விவரங்களைக் கேட்க நேர்ந்தால், அதையொட்டிய ஆய்வில் இறங்கிவிடுவேன். அல்லது, அவர்களின் விவரங்களை வெளியிடாமல் (பெயர், ஊர், முகவரி ) பேஸ்புக், ப்ளாக், பத்திரிகை என எழுதி பொதுவில் வைப்பேன். எங்கேயாவது யாரவது ஒருவர் அதைப் படித்து விட்டு, தொலைபேசி வழியாகவோ, அல்லது எழுதியோ விளக்கங்கள் கொடுத்துவிடுவார்கள். எப்படியாகினும் தகவல் கிடைத்துவிடும். (சில கடுமையான விமர்சனங்களின் வழியும் இது நிகழும், நான் வாய் கூசாமல், பிறர் கதைகளைப் பேசுகிறேனென்றும் வசைபாடியுள்ளார்கள்.. யார் கதை? நான் யாரைப்பற்றிச் சொல்கிறேனென்று கண்டுபிடிக்க முடியுமா உங்களால்!?, நானே சொன்னால்தான் உண்டு- சொல்வேனா!!? )

இரண்டு நாள்களுக்கு முன், என் தோழி என்னைத்தேடி வந்திருந்தாள். அவள் எல்லா விவரங்களையும் என்னோடு பகிர்பவள். வீட்டில் நடக்கும் விஷயங்களிலிருந்து, மாமியார் கணவர் பிரச்சனைகளிலிருந்து, குழந்தைகள் கல்வி விவரங்கள், அலுவலக பிரச்சனை வரை தொடரும் எங்களின் உரை தினமும்.

அவளின் பிரச்சனைகள் பல, பல வேளைகளின் தேவையே இல்லாத அலட்டலாகவே இருக்கும். என்னைப்பொருத்தவரை, பட்டென்று எல்லோரையும் மிக விரைவாக பகைத்துக் கொள்ளும் சுபாவமுள்ள நான், இவளின் விஷயத்தில் மட்டும் பரிதாபமே மிஞ்சுகிறது. திட்டுவதற்குக்கூட மனம் வரவில்லை.

கிட்டத்தட்ட இருபது வருட கால தோழி அவள். இந்த இருபது வருடங்களிலும், நாள் தவறாமல் எனக்கு  தொலைபேசி அழைப்பு செய்துவிடுவாள். எல்லாவற்றையும் பகிர்வாள். இவளிடமிருந்து தப்பிக்கவே முடியாது என்கிற நிலை சிலவேளைகளில். என்னால் முடிந்த வரையில் அவளின் பிரச்சனைகளுக்குச் செவி சாய்ப்பேன். எம்மாதியான தீர்வுகளை வழங்கினாலும், அவளின் விஷயத்தில் மட்டும் அதே பிரச்சனை மீண்டும் மீண்டும் துளிர்விடும். எதோ ஒரு மனச்சிக்கல் இவளிடம் என்பதை மட்டும் புரிந்துகொண்ட நான், அவளின் நிலையைப் புரிந்து அனுசரித்து அதன் போல் நடந்துகொள்வேன், மனம்நோகாமல்.

மன்னிக்கவும், அவள் அறியாமையின் விளிம்பில் எதிர்நோக்கிய பல பிரசனைகளை நான் பட்டியலிடுகிறேன். இது காட்டிக்கொடுப்பதோ அல்லது கீழறுப்போ அல்ல. ஒரு பகிர்வு தான்.


  • கணவனோடு பிரச்சனை ஏற்பட்டபோது, நள்ளிரவில் என் வீடுதேடி என்னிடம் அடைக்கலம் கேட்டது.


  • முன்பு வேலை செய்த இடத்தில், கூடுதலாக வருமானம் வேண்டியபோது, `பிடிக்கவில்லை என்றால் வேலையில் இருந்து நின்றுகொள்.’ என்று முதலாளி சொன்ன மறுநொடி, வேலையை ராஜினாமா செய்து, அதிக மனவுளைச்சலில் உழன்ற நிகழ்வு. 


  • ஷாப்பிங் சென்றால், தேவையா, தேவையில்லையா என்பதனை ஆராயாமல் கவர்கின்ற பொருட்கள் அனைத்தையும் வாங்கிவிட்டு, மறுநாள் அதை யாரிடமாவது விற்பதற்கு ஆள் தேடுவது.
  • குழந்தைகள் கல்வியில் தேர்ச்சி பெறவில்லையென்றால், மறுநாளே பல புத்தகங்களை வாங்கிக்கொடுப்பது, பலரிடம் ஆலோசனைகள் கேட்பது, டியூசன் ஆசிரியர்களைத் தேடுவது, பொறுப்புள்ள தாயாக உடனே மாறுவது.
  • யாராவது அவளை, பருமனாக இருக்கின்றாய் என்று சொல்லிவிட்டால், உடனே அன்று தொடங்கி மாலை வக்கிங், காலை ஜோக்கிங் என கிளம்பிவிடுவது.


  • உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு, சோறு சாப்பிடக்கூடாது, பொரித்த உணவுவகைகளைச் சாப்பிடக்கூடாது, இனிப்பு கூடாது, காரம் கூடாது, உப்பு கூடாது என்று யாராவது ஆலோசனைகள் வழங்கிவிட்டால், உடனே அவை எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு, வெறும் ஓட்ஸ் மட்டும் சாப்பிடத்துவங்கிவிடுவாள்.


  • எழுபத்தைத்து வயது மாமி, வீட்டு வேலையில் ஒத்தாசை  செய்யாமல்,  சீரியல் பார்க்கின்றார் என்பதற்காக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை,  பிள்ளைகளின் படிப்பைக் காரணம்  காட்டி  துண்டித்து விட்டிருக்கின்றாள்.


  • மெயிலில் சுவாரஸ்ய தகவல்கள் எதேனும் அனுப்பினால், எங்கேயாவது ஒரு மூலையில் இருந்து யாராவது பார்த்து விட்டால், வேலைக்கு ஆபத்து என நடுங்கத்துவங்குவாள்.


  • தன்னை ஒருவன் கண்காணித்துக்கொண்டே இருக்கிறான், அது காதலா?! என்கிற உறுத்தலோடு, படப்படப்படப்பாகி, அவனை அணுகி ஏமார்ந்து பின் அவனைத்தூற்றுவது. (இதுபோன்ற ஏமாளிகளை ஏமாற்றுகிறார்களே அவர்களை என்னவென்று சொல்வது.!?)


  • கணவனைக் காதலித்து, கடுமையான போராட்டத்திற்குப்பின் அவனைக் கரம்பிடித்து, தம்மை விட வயதில் குறைவான அவனை தம்மோடே தக்கவைத்துக் கொள்வதற்காகவேண்டி, அவனின் அனைத்து வேண்டுகோள்களையும் நிறைவேற்றுவது. (oral sex and also anal sex sometimes). அப்போதுதான் அவன் தன்னை விட்டு எவ்வகையிலும் பிரிய மாட்டான் என்கிற நம்பிக்கையில் . ! இந்த வழிமுறைகள்தான் கணவனை நம் கைக்குள் போடும் யுக்தி என்று நமக்கும் போதிப்பது..


  • சுயலாபம் கருதி, ஒரு செய்கையை நியாயப்படுத்துவது.


  • ஒருவரின் முன்னே சிரித்து மழுப்பி பின் அவரை பின்னால் தூற்றுவது.


  • ஒரு விஷயத்தை ஒருவரிடமே விசாரித்து தீர்வு காணாமல், பலரிடம் விசாரித்து, இவர்கள் இதற்குத் தீர்வு இப்படிச்சொன்னார்களே, அவர்கள் அதற்குத்தீர்வு அப்படிச் சொன்னாகளே... என குழம்பி இறுதியில் தம்மையே நொந்துகொண்டு புலம்புவது.


  • தமது வேலையைத் தற்காக்க முதலாளியிடம் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக யாரை வேண்டுமானாலும் அவரிடம் காட்டிக்கொடுப்பது, மாட்டிவிடுவது.


  • நல்ல பெயர் வாங்கப்போராடுவது. யாரிடமும் கோபத்தைக்காட்டாமல் இருப்பது. சிரித்து மழுப்புவது.


  • செய்கிற எல்லாவற்றையும் சரியா தவறா என விசாரித்து விசாரித்து செயல்படுத்துவது. தவறு செய்ய பயப்படுவது.


  • தமக்கு என்னதான் வேண்டுமென்கிற தெளிவே இல்லாமல் எப்போதும் ஒருமாதிரியான போதை மனநிலையிலேயே இருப்பது.


  • புற அழகைக் கொண்டாடுவது, வெளித்தோற்றத்தை எள்ளி நகையாடுவது. அக அழகு என்பது எதுவென்ற தெளிவே இல்லாமல் இருப்பது.. (கடவுளே)


  • பிச்சைக்காரனுக்கு சோறு போட்டாலும் அதை டமார் அடிப்பது.


  • கஷ்டப்பட்டு தேடி வாங்கிய ஆடை அணிகலன்களை யாராவது ந்ன்றாக இல்லை என்று சொன்னால் உடனே அதை நிராகரிப்பது.


இப்படி இன்னும் அவளின் சில மனோபாவங்களை அடிக்கிக்கொண்டே போகலாம். இவ்வளவிற்கும் மேல் எனக்கு அவளிடம் பிடித்த ஒரே ஒரு விஷயம், அவளின் ஆங்கில ஞானம். மிக சரளமாக விளையாடும் ஆங்கிலம். நுணிநாக்கில் ஆங்கிலம் பேசுவாள். ஆங்கிலத்தில் எனக்குத் தெரியாத சில விஷயங்களை அவளிடம் கேட்டால் உடனே அதை விளக்கிச் சொல்லிவிடுவாள். என்னிடம் இல்லாத ஒன்று அவளிடம் இருப்பது அது ஒன்றுதான். அவர்களின் தாய் மொழியே ஆங்கிலம்தான்.. போர்த்துகிஸ் பரம்பரையில் வந்தவர்கள். இடையில்  தமிழர்கள் சிலர் நுழைந்து விட்டதால் மிக அழகான தமிழர்களாகிப்போனவர்கள். அப்பாவிப்பெண் அவள்.

சென்ற வாரம், பணிபுரியும்  இடத்தில் அவள் மயங்கி விழுந்துள்ளாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, பரிசோத்தித்து உள்ளனர். அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவளுக்கு எந்த நோயும் இல்லை. அவளின் வியாதி Panic Attack என்றும் அவள் நல்ல மனநல மருத்துவரைக் கண்டு கவுன்சிலிங் செய்துகொள்வதுதான் சிறப்பு என்று சொல்லி வீட்டிற்கு அனுப்பியுள்ளார்கள்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவள், மறுநாள் என்னை அழைத்து `நான் பைத்தியமா?’ என்கிற கேள்விகளோடு என்னை துளைக்க ஆரம்பித்துள்ளாள்.

நான் இப்போதுதான் எனது தேடலைத் துவக்கியுள்ளேன். Panic Attack என்கிற வியாதியின் கூருகளையும் அவைகளைக் களையும் வழிமுறைகளையும் என்கிற தலைப்பில் கூகுளில் சென்று ஆராயத்துவங்கியுள்ளேன்.

தெரிந்தால் பகிருங்கள்.. நம்மைச்சுற்றி இருக்கும் சில நண்பர்களுக்கு உதவலாம்.





திங்கள், ஜூன் 18, 2012

ஓசை


உன் 
ஊடலின்
விசும்பலும்
ஓசையாக
சத்தமில்லா என் உலகத்தில்



சத்தமில்லா
என் உலகத்தில்
உன் ஊடலின்
விசும்பலும் 
ஓசையாக


ஓசையுள்ள
என் உலகத்தில்
சத்தமில்லா உன் ஊடல்
விசும்பலாக

வெள்ளி, ஜூன் 15, 2012

குறைதான்

விட்டுப்போனாலும்
விலகிச்சென்றாலும்
விட்ட குறை தொட்ட குறை
விடுமா என்னை!?

விம்மி அழுதாலும்
விசும்பலோடு நின்றாலும்
விதியே வலிமையல்லவா
விடுமா என்னை!?

விருப்பமில்லை
வழக்கு இல்லை
விலகவில்லை
வலியே நீ மட்டும் ஏன்? போ..